Advertisement

ஜெய் ஸ்ரீராம்
அத்தியாயம் – 2
“ம்மா, நா காலேஜ் போய்ட்டு வரேன், உனக்கும் தோசை டப்பால வெச்சிருக்கேன், சாப்பிட்டு போ இல்லன்னா பைல போட்டு எடுத்துக்க. அவங்க வீட்ல நிறைய பதார்த்தம் செய்ய வேண்டி இருந்தது, விசேஷ வீடு…  வேல நிறைய கிடந்ததுன்னு சாக்கு சொல்லி.. பட்டினி கிடக்காத..”,  அம்மாவிடம் பேசியபடியே வாசலில் கிடந்த செருப்பை போட்டுக்கொண்டு இருக்கும் அறிவழகி, கல்லூரியில் பி.காம். இரண்டாம் வருடம் படிக்கும் மாணவி.
“க்கும். சமைக்க போற வீட்ல.. ஊருக்கு முன்னால நா சாப்டா என்ன நினைப்பாங்க? லேட்டா சாப்பிட்றது எனக்கு பழகிடுச்சுமா.”,என்று சொல்லியபடி கைவேலையை முடிந்து நிமிர்ந்தவர்… அறிவழகி வாசலில் நின்று பேசுவதை பார்த்து, முகம் மாறினார்.
“ரோட்ல நின்னு பேசாத அறிவு..”, என்று கண்டிப்புடன் கூறி, “கைல காசு வச்சிருக்கியா?”, அக்கறையாக கேட்கும் இந்த பெண்மணி.. மணியம்மை, அறிவழகியின் அன்னை, ஏழு வருடங்களுக்கு முன் கணவன் முத்துவேலை, பறி கொடுத்தவர்.
“குடி குடியை கெடுக்கும்”, உலகமே அறியும். ஆனால் நம் நாட்டிலோ , “குடி அரசை நடத்தும்”. !! அவ்வாறு அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருக்குவதற்காக.. டாஸ்மாக்கிலேயே பழியாய்க் கிடந்து உயிர்நீத்த.. ஆயிரக்கணக்கான தியாகச் செம்மல்களில் ஒருவன் இந்த முத்துவேல்.
மணியம்மை.. இரண்டு வீட்டில் சமையல் மற்றும் மேல் வேலை செய்து, தன் ஒற்றை மகளை கண்ணாய் வளர்த்து வருகிறார். வரவும் செலவும் சரியாய் இருக்க… சேமிப்பென்று எதுவுமில்லை. வீண் ஆடம்பரத்தில் தாய், மகள் இருவருக்கும் நாட்டமில்லையாதலால் கடனென்றும் எதுவுமில்லை. அரசு கொடுத்த  இலவச தொலைக்காட்சி ஒன்று மட்டுமே, இருவரின் பொழுது போக்கு. வீட்டில் இருந்த நோக்கியா அலைபேசி கூட, மணியம்மை வேலை பார்க்கும் வீட்டில், தகவல் பரிமாற்றத்திற்கென அவர்கள் கொடுத்தது. சுருங்கக் கூறின் இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழத் தெரிந்த பெண்கள்.
இவர் சொன்னதுபோல, தெருவில் நின்று பேசும் பெண்ணில்லை, அறிவழகி. இருக்கும் இடம் தெரியாது இருப்பவள். அவளது குறிக்கோள், வங்கி தேர்வெழுதி வேலைக்கு சேரவேண்டும், அம்மாவை வீட்டில் வைத்து ராணிபோல் பார்த்துக் கொள்ளவேண்டும், அவ்வளவே. அதற்கெனவே கணிதம், கணக்குப்பதிவியல், ஆங்கிலம் இந்த மூன்றிலும் மிகுந்த கவனமெடுத்து படிப்பாள். போட்டித் தேர்விற்கென இப்பொழுதே தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளாள்.
அரசாங்கம் கொடுக்கும் இலவச கணினி, அறிவழகிக்கு நல்வாய்ப்பாய், அவள் பதினொன்றாம் வகுப்பில் பயிலும்போதே  கிடைக்க, சில கணினி நிரல்மொழிகளை [programming languages] , ஆசிரியர்களிடமிருந்தும், நூலக புத்தகங்கள் வாயிலாகவும் கற்று அவளது அறிவை வளர்த்தாள். தேர்வுகளில் தவறுவதென்பது, [அரியர்ஸ்] அவளறியாதது.
தினமும் மாலை நேரத்தில், மணியம்மை.. பக்கத்து வீட்டு, எஸ்தரின் அம்மா கேத்தரின் நடத்தும் தையல் கடையில், ஹெம்மிங், எம்ப்ராயடரி, புடவை ஃபால்ஸ் வைப்பது, போன்ற வேலைகள் செய்வார். பண்டிகை காலங்களில் துணிகள் அதிகம் இருந்தால்.. வீட்டிற்கே கொண்டு வந்து இரவோடிரவாக.. மகளின் துணையுடன் வேலைகளை முடித்து விடுவார். அதற்குண்டான பணத்தையும் அவளிடம் கொடுத்து வைப்பார்.
சில நாட்களில் கேத்தரினும், மணியம்மையும்  கடையிலேயே தங்கும்படி ஆகும், அப்போதெல்லாம் எஸ்தர் இவள் வீட்டுக்கோ, அல்லது அறிவழகி அங்கோ சென்று, ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர்.
இவர்கள் வசிக்கும் தெரு, மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியின் முடிவில் இருந்தது. எட்டு குடும்பங்கள் வசிக்கும் இவர்கள் குடியிருப்பு…, கழிவறையுடன் கூடிய ஒற்றைப் படுக்கையறை, ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக்கூடிய ஒரு சமையலறை, என்ற ஒரே மாதிரி புறாக்கூடு வீடுகள். கிட்டத்தட்ட குடிசை மாற்று வீடுகள் போன்ற அமைப்பைக் கொண்ட இரண்டு அடுக்கு கட்டிடம்.
ஒரு வீட்டில் சற்று சத்தமாக பேசினால், மூன்றாவது வீட்டில் கேட்கும். அத்தனை நெருக்கம்.  அந்த தெரு முழுதுமே சராசரி மக்கள் குடியிருப்புக்களே. அடுத்த பக்கவாட்டுத் தெருவில் இருந்து பெரிய வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், சிறிய வணிக வளாகங்கள் அமைந்த பகுதி. எப்போதும் சலசலப்பிற்கு பஞ்சமில்லாத சுற்றுவட்டாரம்.
மனிதநேயம் இன்றளவும் உயிர்ப்புடன் வாழும்,  மத்திய தரத்திற்கும்.. கீழ்த்தட்டிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் மக்கள் வசிக்கும் சென்னை பகுதி அது.
அறிவழகி அவள் தோழி எஸ்தரோடு, சந்தடியான அந்தத் தெருவில் நடந்து கொண்டு இருக்கிறாள்.  இவர்கள் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் பேருந்து நிறுத்தம், இருபது நிமிட பயண தூரத்தில் அவர்கள் பயிலும் கல்லூரி.
அறிவழகி, எஸ்தர் இருவருக்கும் தந்தை கிடையாது என்பதும், படிப்பை முடித்ததும் நிலையான வேலை ஒன்றில் அமர்ந்து அன்னையை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கமும் ஒன்றாக இருக்க.. இவர்கள் இருவரின் நட்பு பலப்பட்டது. தவிர, படிப்பது ஒரே கல்லூரி, வசிப்பிடமும் அருகருகே என்றிருப்பதுவும், இவ்விருவரின் பிணைப்பிற்கு காரணம்.
நடந்துகொண்டே, “என்னடி அந்த வட்டி பொம்பள, நம்ம வீட்டு முன்னால நடு ரோட்ல நின்னு கத்திட்டு போவுது?”, என்று அறிவழகி கேட்டதும்..
“அதுவா, நம்ம மேல்வீட்டு சுகந்திக்கா வீட்டுகாரரு, கைமாத்தா அம்பதாயிரம் ரூபா அதுகிட்ட வாங்கினாராம், மூணு மாசமாச்சு. வட்டியும் வரல, அசலும் வரல-ன்னு கண்டபடி பேசிட்டாங்க”, என்றாள் எஸ்தர்.
“ஹூம். அவங்க தான் காறாரான ஆளுன்னு தெரியுமில்ல?, ஐயோ, அதுவும் அது பேசற பேச்சுக்கு, தண்டவாளத்துல தலையை கொடுத்துடலாமான்னு தோணும், அவங்ககிட்ட  போயி மாட்டிக்கிட்டாங்களே? “, என்று பரிதாபமாக பேசியபடி பார்வையை ஓட்டியவள், சட்டென்று குரலைத் தழைத்து , “ஏய்.. டக்குனு பாக்காத, டீக்கடைல அந்த ஹவுஸ் ஓனர் பையன் கும்பல் இருக்குடீ”, என்றாள்.
எஸ்தர் மெதுவாக வேறு எங்கெங்கோ பார்த்து, பின் அவர்களை நோட்டமிட்டாள். அவர்களது பேருந்து நிறுத்தத்தின் அருகே ஒரு தேநீர்க்கடை, அங்கே ஒரு வெட்டி கும்பல் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தது, அவற்றில் நடு நாயகமாக, கையில் வெண்குழல்வர்த்தி இருக்க… வாயில் வழியும் புகையோடு… அன்பரசன்.  அவனைச் சுற்றி நான்கைந்து வெட்டிகள், இவனுடன் கல்லூரி பயிலும் ஒருவனும் கூட இருந்தான்.
வெட்டிகளுள் ஒன்று, அறிவழகியும், எஸ்தரும்  நடந்து வருவதைப்பார்த்து.. , “மச்சி.. பிகர்ங்க செம்ம….”, என்க …
“தினந்தான் பாக்கற… அதுங்க  காதுல கேக்கற மாதிரிதான பேசற?, எங்கனாச்சும் நிமிந்து பாக்குதா பாரு?, ஸ்பீக்கரு இல்லாத அட்டு பீஸ்ங்கடா “, என்றான் சுந்தர்..  அன்புவின் கல்லூரித் தோழன்.
“அட .. நான் பேசினாத்தாங் கேக்காது, இவன பேச சொல்லு , டக்குன்னு மடியும், இவங்க வீட்லதான வாடகைக்கு இருக்காங்க.”
” டேய்…. கம்முன்னு இரு. நானே இன்னிக்கி  எக்ஸாமுக்கு எப்டி எழுத-ன்னு திங்கிங்-ல இருக்கேன், நடுல நீ அந்த ஊமை கொட்டாங்களை பத்தி பேசினு இருக்க…”, சொன்னவன், பொறியியல் [B.E] நான்காம் வருடத்தில் இருக்கிறான்.
“அட நம்மளத்தான் மதிக்கல, உன்னையாச்சும் பாக்குமோன்னுதான்…”, நண்பனொருவன் இழுக்க…
“ன்னாடா நெக்கலா?, வூட்டு வேலசெய்யற பொண்ணு எனக்கா “
“இல்ல மச்சீ, அது அம்மாதான் வூட்டு வேல செய்யுது, குட்டி ரெண்டும் படிக்கிது, கூட எதோ கம்ப்யூட்டர் கத்துகிதாமா..   ஹூம், நம்ம ஏரியா-ல இப்டி பொண்ணுங்க , சும்மா டைம் பாஸுக்கானும்  ட்ரை பண்ணலாமேன்னு”, என்று மேலும் இழுக்க…
“அடிங்.. பேமானி. பேச்ச பாரு… “, கேட்ட நண்பனின் தோளில் அடித்தான், பலமாக இல்லை  என்றாலும் அதில் கண்டனம் இருந்தது..
“அத்த வுட்றா… இன்னிக்கு என்ன பிளானு?, யாரு இனவிஜிலெட்டர்? “, என்று தேர்வை சமாளிப்பது குறித்து பேச்சைத் திருப்ப, இருவர் விவாதம் தொடர்ந்தது.
இருபதடி தூரத்தில் இருந்து அவர்கள் பேசுவது, அறிவழகிக்கும், எஸ்தருக்கும்…  சுற்றி நிற்கும் ஜன சந்தடியில் பாதி கேட்டு.. கேட்காமல் இருந்தது. ஏதோ அவர்களைப் பற்றியும் பேசுகிறார்கள் என்பது மட்டும் தெரியும்.
தவிர.. அங்கிருப்பவர்களில் ஒருவன், அவன் பெயர் தெரியாது, அவர்கள் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரன் என்பதும் தெரியும். அவன் ஒரே ஒருமுறை, (அன்பரசனின் அம்மா ஊரில் இல்லாதபோது) வாடகை வசூல் செய்ய வந்திருக்க.. அப்போது பெண்கள் இருவரும் அவனைப் பார்த்திருக்கிறார்கள்.
சாதாரணமாகவே ஆண் பிள்ளைகளுடன் பேச மாட்டார்கள், இதிலே இவன் (இவர்களைவிட) பணக்கார வர்க்கம் வேறு. அந்த பக்கமே திரும்பாமல், பேருந்து வருகிறதா என கவனிக்கத் துவங்கினர்.
“ஆம்பள இல்லாத வூடுடி, எதுனா தப்பு தண்டான்னு பேச்சு வந்துச்சு , கொளித்திகிட்டு செத்துடுவேன்”, அறிவழகிக்கு எந்த ஆண்மகனைக் கண்டாலும், அம்மாவின் இந்த பேச்சு அசரீரியாய் ஒலிக்கும்.
சிறிது நேரத்தில் அன்பரசனும் அவனது நண்பர்கள் கிளம்ப, அதற்குள் பேருந்தும் வந்து விட.. நெரிசல் அதிகம் இருந்தாலும்… அறிவழகியும் அவளது தோழியும் அதிலே தொற்றிக் கொண்டு கல்லூரிக்கு பயணப் பட்டனர்.
“பியூட்டிம்மா…”, என்ற முனகல் அக்ஷியிடமிருந்து வர… , பழைய நினைவுகளில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தவள்.. “எஸ் டா.. இங்கதான் இருக்கேன்”, குரல் கொடுத்து அவள் அருகே படுத்துவாறு தட்டிக் கொடுத்தாள். சன்னமாய் அவளது அலைபேசி சப்திக்க, எடுத்து பேசினாள். எதிர்முனையில் அக்ஷியின் பாட்டி எதோ கேட்க… , “மா.. ஓகே. ஓகே. நான் அக்ஷியோட ஹொட்டேல் ரூம்-லதான் இருக்கேன், நீங்க சாப்பிட்டு வந்துடுங்க” , என்று பொருள் படும்படி அரைகுறை தெலுங்கில் கூறினாள்.
அடுத்த அரைமணி நேரத்தில், அவர்களும் வந்து சேர.., இவள் தங்கியிருந்த அடுத்த அறையின் கதவைத் திறந்து அவர்கள் படுக்க வசதி செய்து கொடுத்தபின்.. தூக்கம் கண்களை சுழட்ட.., நேரே அவளது அறைக்கு வந்து அக்ஷியை கட்டிக்கொண்டு படுத்த நொடியில் உறங்கினாள்.
+++++++++++++
காரை எடுத்துக் கொண்டு சித்தூருக்கு பயணித்துக் கொண்டிருக்கும், அன்பரசனுக்கும், கவலையற்று  துள்ளித் திரிந்த அந்த நாட்கள் ஞாபகம் வந்தது.
இவன், பிரபல கதாநாயகனின் தீவிர ரசிகன், அவர் திரைப்படம் வெளியானால்…, திரையரங்கின் வெளியே சொந்த செலவில் போஸ்டர், ப்ளெக்ஸ் பேனர் வைத்து, டிக்கெட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்தாவது நண்பர்களுடன் முதல் நாள், முதல் காட்சி பார்த்து, அத்திரையரங்கை அலற வைப்பான்.
அக்கதாநாயகனது அடுத்த திரைப்படம் வரும்வரை அன்புவின் தலைமுடி, கைகாப்பு, கழுத்தணி,  ஆடை அனைத்திலும் அவன் கண்ட திரைப்படத்தின் பாதிப்பு இருக்கும்.  கண்டதே காட்சி கொண்டதே கோலம் ரகம். இவனின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் தந்தை விநாயகத்தை,  தாய் கமலாம்மா அடக்கி விடுவார். யார் பேச்சையும் கேட்காத, சுய சித்தம் இல்லாத, நண்பர்கள் & பொழுதுபோக்குகளில் அதீத ஆர்வமுடைய இளைஞன்.
ஆனால்… அன்புவின் வீட்டருகே இருக்கும்  இவனது சுற்றுவட்டாரத்தில்  இவன் காண்பிக்கும் முகம் வேறு, கல்லூரியில் இவனது அடையாளம் வேறு. கல்லூரியில் எந்த வம்பு தும்பும் வைத்துக் கொள்ள மாட்டான். அதே போல் எந்த வாகனத்தில், பழுது  இருந்தாலும் அதை நொடியில் புரிந்து, எஞ்சின் வரை பிரித்து, பழுது நீக்கும் சாமர்த்தியம் இவனிடம் இருந்தது. இவனது நண்பனொருவன், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் பழுது நீக்கும் சிறிய ஷெட் வைத்து நடத்துகிறான், விடுமுறை நாட்களில் அன்பரசன் ஜாகை அங்கேதான். அதனாலேயே என்னவோ, பொறியியலில்  உற்பத்தி மற்றும் தயாரிப்பு பிரிவினை தேர்ந்தெடுத்தான்.
கல்லூரி பாடங்கள் இவனது மனதில் பதிந்தபோதும், எழுதுவதில் எப்போதும் கோட்டைவிடுவான். ஆனாலும் தனிவகுப்புகளில் பயின்று, மனனம் செய்தாவது, சராசரிக்கும் மேல் மதிப்பெண் பெற்றுவிடுவான்.  இல்லையென்றால் விநாயகம், இவனது தந்தை… அவர் நடத்துகின்ற பல்பொருள் அங்காடி [அட மளிகைக்கடையதான், அவரு அப்படி சொல்வாருங்க], மூட்டை தூக்கவோ, பாக்கெட்களை  அடுக்கவோ,  கூட்டிப் போய் விடுவார் என்ற பயம்.  தந்தையின், “படிப்பு வரலைன்னா  கடைக்கு வந்துடு”, என்ற மிரட்டலும், மதிப்பெண் எடுத்தால் தாராளமாக செலவுக்கு அம்மா பணம் தருவார் என்ற காரணமும்  இருந்ததால் சுமாராகவாவது படித்து விடுவான்.
இந்த செமஸ்டரில் நல்ல மதிப்பெண் பெற்றால், ஆப்பிள் ஐபோன் நிச்சயம் என்று அம்மா வாக்குறுதி தந்துள்ளார். சுற்று வட்டாரத்தில் பெருமையாக காண்பிக்க, கல்லூரி நண்பர்களிடம் அலட்ட.. என, வித விதமாய் காரணங்கள், மதிப்பெண் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயம்.
இன்றைய தேர்வுக்கான பாடங்களை மனப்பாடம் செய்திருக்கிறான், கூடவே, தேர்வு மேற்பார்வையாளர் சற்று கண்டும் காணாமல்  இருந்தால், நன்கு படிப்பவனைப் பார்த்து காப்பியடிக்க வசதியாக இருக்குமே என்ற [நல்ல??] எண்ணம்.

Advertisement