Advertisement

கூடவே, மனதில் ‘நாளைக்கு நிறைஞ்ச முகூர்த்த நாளா இருக்கு, ஸ்டோர் வீட்டுக்கு போயி விளக்கேத்திட்டு வரலாமா?’, என்று கமலம்மா கேட்டது ஓடியது. அது விளக்கேற்றுவது மட்டுமல்ல குடிபோவது என்பது புரிந்து மெளனமாக இருந்தாள்.
வீட்டின் லேண்ட் லைனில் அழைப்பு வந்தது, சுசித்ரா எடுத்து, “ஹலோ”, என்றாள்.
“…”
“சொல்லுங்க மாமா”
“…”
“சரி மாமா, தோ இப்போவே போயி எடுத்து வைக்கறேன், மூர்த்திட்ட கொடுத்துடறேன்”, பேசியைத் தாங்கியில் வைத்து, “மாமாதான், மூர்த்தி வருவாராம், எதோ டாகுமெண்ட் வேணுமாம், எடுத்து கொடுக்க சொன்னாங்க”,
“ம்மா…”, ஆஷிஷ் அறையிலிருந்து பெருங்குரலெடுத்து அழைத்தான்.
“அடடா சின்னவன் எழுந்துட்டானே? அவனுக்கு சத்துமா கஞ்சி தரணும், விட்டா கத்தியே வீட்டை ரெண்டு பண்ணிடுவான்”, என்று பரபரக்க.. “நான்  பாத்துக்கறேன் விடுங்க”, என்று அறிவழகி சொன்னாள்.
“இல்ல அறிவு, அவன் தூங்கி எழுந்தா ரொம்ப அடம் பிடிப்பான், நீ வேணா ஒன்னு பண்ணேன், மாமா வீட்டுக்கு போயி ஹாலை ஒட்டி இடது பக்க ரூம்ல இருக்கற பீரோல ரெண்டாவது ஸெல்ப்-ல ஃபைல்லாம் இருக்கும். மூர்த்தி வருவாரு, என்ன கேக்கறாருன்னு பாத்து எடுத்து தரியா?” என்று கேட்டு மகனைப் பார்க்க சென்றவள் அங்கிருந்தே, “சாவி ஸ்டேன்ட்-ல தொங்கிட்டு இருக்கு பாரு. மூணு நீட்ட சாவி இருக்கிற கொத்து”, என்றாள்.
வீட்டில் மாமாவும் கண்ணனும் கடைகளுக்கு சென்றிருந்தனர். அத்தை ப்ரவீனா அறையில் அவளோடு உறக்கத்தில் இருந்தார். நேற்று வீட்டில் ஒத்தாசை செய்த, குப்புசாமி கடையில் வேலை பார்ப்பவராம், நேற்றைக்கு வீட்டில் சுப நிகழ்வு என்பதால் இங்கே கூட மாட வேலை செய்ய வந்திருந்தார்.
இப்போது வேறு யாரையும் அனுப்ப வழியில்லாததால், ‘சரி, அது ஒருகாலத்தில் என் வீடாகவும் இருந்ததல்லவா? ஒரு முறை சென்று பார்த்து இந்த வேலையையும் செய்தால் என்ன? என்ற எண்ணத்தோடு, சுசித்ரா சொன்ன சாவியை எடுத்துக் கொண்டு அறிவழகி கிளம்பி விட்டாள். வெளியே மாலை நான்கு மணி வெயில் சுள்ளென்று முகத்தில் அடித்தது. தெருவில் சொற்ப நடமாட்டம் இருந்தது.
வேக எட்டுக்கள் போட்டு முன்பு அவள் குடியிருந்த தெருவிற்கு வந்தாள். அதன் அடையாளமே மாறியிருந்தது. சாலை விஸ்தீரணமாகி பெரிய பெரிய அபார்ட்மெண்ட் குடியிருப்புகள் வந்திருந்தன, கூடவே நிறைய கடைகளும். ஆ வென்று பார்த்துக் கொண்டே சென்றாள். லாஸ் ஏஞ்சல்ஸின் உயர கட்டிடங்கள் கொடுக்காத ஆச்சர்யத்தை இவை கொடுத்தன. ஸ்டோர் இருந்த இடத்திற்கு வந்தவள் அங்கிருந்த மாற்றத்தை மெதுவாக உள்வாங்கினாள். பல குடும்பங்கள் குடியிருக்கும் ஸ்டோர் வீட்டுக் கட்டிடம் இல்லை, அது தனி ட்யூப்லக்ஸ் வில்லா டைப் வீடு. மெயின் கேட்டை திறக்காமல் அருகில் இருந்த சின்ன கேட்டை திறந்து உள்ளே சென்றாள்.
ம்ம். நல்ல நேர்த்தியான வடிவமைப்பு, நல்ல ரசனையும் கூட, உள்ளே சென்றவள் சுற்றி பார்த்தாள். பெரிய கூடம், சுசி சொன்ன அறை, அதில் பீரோ, அதனுள் சில கோப்புகள் இருந்தன. சரி மூர்த்தி வந்தால் என்ன வேண்டும் என தெரிந்து கொண்டு எடுத்துக் கொடுக்கலாம், என்று எண்ணியவள், கிச்சன் சென்றாள். அது கிட்டத்தட்ட பயன்படுத்தப் படாமல் இருந்தது. ஃபிரிட்ஜ்-ல் கொஞ்சம் பழங்கள், பாக்கெட் பால், ஜாம், சாஸ் தண்ணீர் பாட்டில்கள், பாதியாக வெட்டிய கேக் என்று இருந்தது. ஒரு பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தாள்.
“சுசி..”, நிசப்தமாக இருந்த வீட்டில் திடீரென அன்பரசனின் குரல் கேட்க, தூக்கி வாரி போட்டது. அன்பரசன் கதவு திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தான்.
“இல்ல, சுசி வரல”, என்று இவள் குரல் கொடுத்ததும், அவனது நடை சில நொடி தயங்கி பின் சீரானது. பின்னால் திரும்பி, “வாங்க மூர்த்தி, உக்காருங்க”, என்று மூர்த்தியை  அழைத்தான். அவர் கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர, கிச்சனை அடைந்து அறிவழகியிடம், “தண்ணீ கொடு”. என்றான்.
கையிலிருந்த பாட்டிலை அவனுக்கு கொடுத்தாள். “ரோம்ல பீரோல இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்ஸ்-ன்னு போட்டு ஒரு பாக்ஸ் பைல்’box file] இருக்கும் அத எடுத்திட்டு வா”, என்று விட்டு அலமாரியில் இருந்து கிளாஸை எடுத்து தண்ணீர் நிரப்பி மூர்த்திக்கு கொண்டு சென்றான்.
இவள் அவன் கேட்ட கோப்பை எடுத்துக் கொண்டு கூடத்தில், மூர்த்தியோடு அமர்ந்திருந்த அன்பரசனிடம் தர, அதை வாங்கி சரி பார்த்தவன், பின் மூர்த்தியிடம் ஃபைல்-லை கொடுத்து, “ரெண்டு காப்பி எடுத்து, பேங்க்-க்கு அனுப்பிடுங்க. சீக்கிரமா ஃபன்ட் ரிலீஸ் பண்ண சொல்லுங்க, ஓகே?”
“எஸ் சார், அப்ப கிளம்பறேன்”, எழுந்து அறிவழகியைப் பார்த்து, “தேங்க்ஸ் மேம்”, என்றார்.
எதற்கு என்று அவரைப் பார்க்க, “அன்னிக்கு சமயத்துல பணம் அனுப்பினீங்க, இல்லன்னா திண்டாடி போயிருப்பேன்”, என்றார்.
எப்படி இவருக்கு தெரியும் என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தாலும், சிறு முறுவலுடன் அவரது நன்றியை ஏற்று, கிளாஸை எடுத்துக் கொண்டு கிச்சன் நகர்ந்தாள்.
மூர்த்தி, “வர்றேன் மேம்”, என்று இவளிடமும் விடைபெற்று கிளம்ப, அறிவழகி கூடத்திற்கு வந்தாள். “அப்ப நானும் வீட்டுக்கு போறேன்”, என்று கிளம்ப நினைத்தவள், ஒரு உந்துதலில் அன்பரசனின் எதிரே இருந்த நாற்காலி அருகே நின்று, “அவருக்கு எப்படி நான் பணம் கொடுத்தது தெரியும்?”, என்று கேட்டாள்.
“மூர்த்தி அதை மாசாமாசம் திருப்பி தர்றேன்னு சொன்னார், அது நான் அனுப்பல, நீதான் அனுப்பின, அது சாரிட்டி-னு சொல்லிட்ட-ன்னு சொன்னேன், அப்படி தெரியும்”, என்றான்.
“ஆனா, அது உங்களுக்கு…”
“அத அவர்ட்ட வாங்கினா நீ சொன்னது சரின்னு ஆயிடும். கடமையை காசால நேர் பண்ணா மாதிரி.. அதனால வேண்டாம்னு விட்டுட்டேன். அதுவுமில்லாம அது ஒண்ணும் பெரிய அமவுண்ட் இல்ல”.
“ஸாரி, அன்னிக்கு உங்க கிட்ட கார் பார்க்கிங்-ல பேசினதுக்கு”, என்றாள் உணர்ந்து.
“மீ டூ . பட், லீவ் இட்”, என்றுரைத்து நாற்காலியில் இருந்து எழுந்து சென்று, அங்கிருந்த ஜன்னலுக்கு வெளியே பார்வையை மாற்றி, “அம்மா நாளைக்கு உன்னை இங்க அனுப்பறதா சொன்னாங்க, தெரியுமா?”, என்றான்.
“ம்ம் தெரியும், மதியம் சொன்னாங்க”, முணுமுணுத்தாள்.
“ஹும். அதுக்கு நீ என்ன சொன்ன?”, கேள்வி வர..
“என்ன சொல்லணும்?”
வெளியே பார்த்திருந்தவன், திரும்பி கூர்மையாக அவளைப் பார்க்க, அறிவழகி, “என்னிக்கு இருந்தாலும் இங்க வந்துதானே ஆகணும்?”, என்றாள்.
சற்று நேரம் அவளை பார்த்திருந்தவன், “கீழ இருக்கற இந்த ரூம் உனக்கு வசதியா இருக்குமா?”, என்று கேட்க..
“நான் உங்க வொய்ஃபா வர்றேன்”, என்றாள் ஒரு வித அழுத்தத்தோடு. அதில் நான் இங்கே உன்னில் பாதியாக வருகிறேன், உனது ரூம் மேட்டாக தங்க அல்ல என்ற அர்த்தம் பொதிந்திருந்தது.
“அப்பாக்காகதான? இல்ல அய்யோ பாவம்னு எனக்காகவா?”, மீண்டும் அன்பரசனின் பார்வை ஜன்னலுக்கு வெளியே.
கண்களை மூடிக் கொண்டாள், ‘நான் உணர்ந்ததை சொல்லப் போகிறேன், கேட்கும் இவனுக்கு புரிந்தால் நம்பினால் சரி, அஃதில்லையாயினும் கவலையில்லை, இனி இப்படியோரு கேள்வி வரக்கூடாது என்ற திடத்தோடு, நீண்ட பெருமூச்செடுத்து சொல்ல ஆரம்பித்தாள். “இல்ல. மாமாக்காகவோ, உங்களுக்காகவோ இங்க வரல, நிச்சயமா இல்ல”, என்றதும் அன்பரசன் அறிவழகியை திரும்பி பார்க்க,
“முதல்ல நான் கூட மாமா வருத்தப்படக் கூடாதுன்னுதான் இந்த முடிவு எடுத்தேன்னுதான் நினைச்சேன், ஆனா, ஒருவேளை இங்க வர்றது எனக்கு பிடிக்கலைன்னு நான் சொல்லி இருந்தா, மாமா கண்டிப்பா புரிஞ்சிட்டுருப்பார். இது எனக்கு நல்லாத் தெரியும்.”
“ஒருவேளை இறந்துபோன எங்கம்மாக்காகவா-ன்னு கேட்டா இல்ல, எங்கம்மாக்காக இந்த வாழ்க்கையை ஏத்துக்கறதா இருந்தா,  நான் வெளியே போயே இருக்கமாட்டேன்”
” உங்களுக்காக பரிதாபப்பட்டு இங்க வர்றேனா கேட்டீங்க இல்ல?, அந்த பொண்ணு ஸ்ரீஜா, மாமா உங்களை வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டாங்க-ன்னு சொன்னப்போதும் சரி, கண்ணன் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டதா சொன்னபோதும் சரி, எனக்கு உங்கமேல பரிதாபம் வரல, பொறாமை வந்துச்சு.”
” நான், இவ்வளவு அவமானப்பட்ட இடத்துல இருக்கறதா-ன்னு, இந்த ஊரை விட்டு, கோழை மாதிரி ஓடிப்போனேன். ஹைதராபாத்லயும் ஒரு பிரச்சனை வந்தது, அதுலேர்ந்தும் தப்பிச்சு ஓடிப் போனேனே தவிர, எதிர்த்து நின்னு பிரச்னைய பேஸ் பண்ணல, உங்க தைரியம் எனக்கு ஏன் வரலன்னு தோணுச்சு.””
” ஆனா, நீங்க.. எங்க அவமானபட்டீங்களோ அங்க நின்னு சாதிச்சிருக்கீங்க, இன்னிக்கும் உங்களைப் பத்தினை தப்பான அபிப்ராயங்கள் இருந்தாலும், அதெல்லாம் தள்ளி வச்சிட்டு நீங்க பாட்டுக்கு போயிட்டே இருக்கீங்க பாருங்க, அப்போ நானும் இதைத்தானே பண்ணிருக்கணும்னுதான் தோணுச்சு”, என்று மேலும் தொடர இருந்தவளை மறித்து,
“எங்கப்பா என்னதான் திட்டினாலும், அவரோட பாசம் எனக்கு தெரியும். எங்கம்மா எனக்காக என்னவேணா செய்வாங்க. இவங்க ரெண்டு பேரைத் தாண்டி நான் எங்கயும் போக முடியாது, அவங்க அன்புக்கு முன்னால இந்த ஊர் பேசற வெட்டிப் பேச்செல்லாம் ஒண்ணுமில்ல”, என்றான் அன்பரசன்.
“யெஸ். அதான்.. அந்த family bonding…”, “அண்ணா வீட்டை எடுத்துக்கோங்க, மாமிக்காக இத்தனை நாளா கடல் தாண்டி போக்கூடத்துங்கிற  கொள்கையை விட்டுக் கொடுத்து, சொந்தக்காரங்க என்ன சொன்னாலும் பரவால்லன்னு, தன் பையன் சுதர்ஷனுக்கு பிடித்தம்ங்கிற ஒரே காரணத்துக்காக வேற மதத்து பொண்ணை மனசார ஏத்துக்கிட்ட மாமா, அப்பாக்காக தன்னோட ஃபியூச்சரை , வீட்டை, தொழிலை டக்குன்னு இந்தியாக்கு மாத்திக்கிட்ட சுதாண்ணா, சுதாக்காக எந்த பேச்சும் கேக்க ரெடியா இருக்கற என் தரு, எல்லாரையும் தன்னோட மழலை பேச்சுல கட்டி வக்கிற அக்ஷிஸ்-ன்னு ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக்கொடுத்து போற அனுசரனை.”,
“இங்க, இந்த வீட்ல மாமாக்கு தெரியாம இதுவரைக்கும் எதுவுமே பண்ணாத அத்தை, உங்க மேல இருந்த பாசத்தால ப்ராபர்ட்டியையே விட்டுக் கொடுக்க தயாரா இருந்தாங்க, அப்படி பண்ணினா மாமா கோவப்படுவாருன்னு அவங்களுக்கு தெரியும். ஆனாலும் அவர் அவங்கள புரிஞ்சிப்பாருன்னு அதுக்கு துணிஞ்சாங்க”
“உங்கப்பாவும் அவங்கள விட்டுக் கொடுக்கல, அடுத்தவங்க முன்னாடி ஒரு வார்த்தை சொல்ல வேண்டிய கட்டாயம். ஆனாலும், ‘என் பொண்டாட்டி இப்படி செய்யமாட்டா, நீங்கதான் தூண்டி விட்டு தப்பு பண்ண வச்சிருக்கீங்க’ன்னு
ஸ்ரீஜா அம்மாட்ட தீர்மானமா சொன்னார், அத்தைய அவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்காரு. சுசித்ரா வெகுளியா இருந்தாலும், கண்ணன் அவளை friend மாதிரி நடத்தறாரு”.
“நம்ம சுத்தி இருக்கிற இவங்கெல்லாம் அவங்கவங்க வாழ்க்கையை வாழறாங்க”, தொடர்ந்து விரக்தியாக, “ஹும், ஆனா நாம? There is a hell of difference between living and surviving, ரெண்டு பேரும் உயிரோட நடமாடிட்டு இருக்கோம். ஆனா உயிர்ப்போட இருக்கோமா? “
“இத்தனை வருஷம் படிச்சேன், வேலை பாத்தேன், ஆனா எங்கேயுமே எப்போவுமே நான் அமைதியா இருந்ததில்லை, அந்த இடம், மொழி, மக்கள் ன்னு எதுவுமே என்னை அடராக்ட் பண்ணல. எதோ ஒரு வேகம், எதுக்குள்ளயாவது தலைய நுழைச்சு ஓடிட்டே இருப்பேன், என்னோட தகுதியை வளத்துக்கணும்னு எப்பவும் ஒரு பரபரப்பு, ஏன்னு இப்போ யோசிச்சா, ‘வேலைக்காரம்மா பொண்ணு’-ன்னு நீங்க சொன்ன அந்த உங்க பேச்சினாலன்னு தோணுது. அதை மாத்திக் காட்டணும்னு எனக்குள்ள வேகம்”
“பேங்க் வேலை மட்டும்தான் என்னோட எய்ம். அப்பறம் எஸ்ஏபி (SAP) படிச்சது, இன்டர்நேஷனல் பாங்கிங் படிச்சு, எல்ஏ-ல வேலை தேடிப்போய், ஷேர் இன்வெஸ்ட்மென்ட்ஸ், வீடு எல்லாம் சம்பாதிச்சேன். ஆனா ஒரு நிறைவான feel, peace வந்ததே இல்ல”.
“யூ.எஸ்.-ல நாம என்ன பேரை சொல்லி கூப்பிட சொல்றோமோ, அப்படித்தான் அவங்க நம்மள கூப்பிடுவாங்க, நான் என் பேரை மாத்தி கூப்பிடுங்கன்னு இதுவரைக்கும் யார்கிட்டயும் சொன்னதில்ல. ஆரம்பத்துல வேணா, அறிவழகி அன்பரசன்-ன்னு போட்டது கட்டாயத்துனால இருக்கலாம்.”, தலையை ஆள்காட்டி விரலால் தொட்டு, “போகப்போக மிஸ்ஸர்ஸ் அன்பரசன்-ன்னு இங்க ரிஜிஸ்டர் ஆயிடுச்சு”, என்றாள்.
“அதேபோல, என் வீட்ல யாரையும் தங்க நான் அனுமதிச்சதே இல்ல, அக்ஷி, தரு கூட என் வீட்டுக்கு வந்து போவாங்களே தவிர தங்கினதில்லை. ஆனா, நீங்க விதி விலக்கு”
தொண்டை கமற, செருமிக்கொண்டு “அன்னிக்கு.. கெட் அவுட்டுன்னு சொன்னேனே, அது அது அப்படி சொல்லலைன்னா, நான் உங்க அத்துமீறலை அங்கீகரிச்சிடுவேனோ-ங்கிற பயத்துல சொன்னது”.
“எனக்காக எதுவுமே பண்ணாத, நான் வேணான்னு எழுதிக் கொடுத்த உங்கள ஏத்துக்க தயாரா இருக்கேனேனு என்மேல கோவம், காயப்படுத்தினாத்தான் நீங்க போவீங்கன்னு தெரியும். அதான், கார் பார்க்கிங்-ல எடுத்தெறிஞ்சு பேசினேன்.”, என்றவளின் கண்களில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கி சமாளித்து, ” ஆனா, இன்னொரு பொண்ணுக்கு நீங்க சொந்தமாகப்போறீங்கன்னு தெரிஞ்ச உடனே, நீங்க எனக்கு எப்போவுமே இல்லங்கிற உண்மைய என்னால டைஜஸ்ட் பண்ணிக்கவே முடில” கண்களில் நீர் திரையிட்டதால் அது அறிவழகியின் பார்வையை மறைத்தது.
நான்கைந்து முறை கண்களை வேகமாக சிமிட்டி “எப்படியும் நீங்க ஓகே சொன்னதுக்கப்பறம்தானே நிச்சயம் பண்றாங்க? அப்போ என்னை குப்பையா  தூக்கிப் போட்டுடீங்கன்னுதான அர்த்தம்? அதான் என்னைக் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இங்க பத்திரம் சைன் பண்றதுக்கு வந்தேன்.”
“அந்த பொண்ணு பேசின போது, அன்புக்கு, இப்படி ஒரு பொண்ணா ன்னு தான் தோணுச்சே தவிர, உங்களுக்கு அவளை பிடிக்கும்னு நான் நினைக்கவே இல்ல. அது.. அது.. தோணவே இல்ல”, கண்களில் என்ன முயற்சி செய்தும் நீர் நிறைந்தது.
தொண்டையை செருமி திடப்படுத்திக் கொண்டு, தீர்மானமாக, “ஆனா இது என்னோட இடம், இனி யாருக்கும் விட்டுத்தர்றதா இல்ல, அதனால என்ன பிரச்சினை வந்தாலும் ஃபேஸ் பண்ண தயாரா இருக்கேன். எனக்கு இந்த லைஃப் வேணும்,  எனக்கு ஃபேமிலி வேணும். அக்ஷி ஆகாஷ் மாதிரி பசஙக வேணும். கூடவே அன்னிக்கு ஆபீஸிலேர்ந்து வர லேட் ஆனபோது பதறி அடிச்சு, தேடிட்டு வந்த உங்க அக்கறை எப்பவும் வேணும். இன்னும் பாசம், லவ், சப்போர்ட் எல்லாம். அதனாலதான் இங்க வரப்போறேன், எனக்காகத்தான் இந்த முடிவெடுத்திருக்கிறேன், ஆனா அந்த நான்ல நீங்களும் அடக்கம்”.
“உங்களுக்கு என்மேல அக்கறை இருக்கு. நீங்க
ஒத்துக்க மாட்டிங்க, ஆனாலும் சொல்றேன்,   நேத்து பெட்ரோல் பங்க் ஷாப்-ல என்னை தேடும்போது, ‘என்னோட வொய்ப் இங்க வந்தங்களா?’ன்னு அனிச்சையா கேட்டீங்க. அப்பறம், வீட்டுல அத்தை ஏண்டா வெளில ஸ்னாக்ஸ் வாங்கின-னு கேட்டபோது, வாங்கினது நான்ன்னாலும் என்னை பேச விடாம நீங்க பேசி முடிச்சிட்டீங்க”
“சோ அக்கறை இருக்கு, அன்பு,பாசம், லவ், சப்போர்ட் காலப்போக்குல வரும். என்ன ஒன்னு, அதுவரைக்கும் என்னோட ஈகோவை தள்ளி வச்சு, உங்க குதர்க்கப் பேச்சை அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்”
கண்களை இறுக்கி மூடி, “ஒரே ஒரு ரிக்வஸ்ட், என்னை அந்த ஸ்ரீஜாவோட கம்பேர் பண்ணாதீங்க,. அவ உங்க நெட் வொர்த் பாத்து கல்யாணம் செஞ்சுக்க நினைச்சா. நான் நீங்க வொர்த்-ன்னு தெரிஞ்சு வந்திருக்கேன். அவ ஏதாவது சலனப் படுத்தியிருந்தா மறக்க முயற்சி பண்ணுங்க. பண்ணணும்”, என்று முடித்தாள்.
அன்பரசன் பதில் கூறாமல் அமைதியாக நாற்காலியில் அமர்ந்தான். “இப்போ ஒரு பைல் எடுத்தல்ல? அந்த பீரோல கீழ் ரேக்-ல ஒரு கவர் இருக்கும், அதை எடுத்திட்டு வா”, என்றான்.
இத்தனை பேசினேன்? ஒன்றுமே கூறாமல் கவர் கொண்டு வர சொல்கிறானே?, என்ற வருத்தத்துடன், அறைக்கு  சென்று அவன் கேட்டதைக் கொண்டுவந்தாள்.
அன்பரசன், “உக்காரு”, என்றதும்..
அவன் எதிரே இருந்த நாற்காலியில்  அமர்ந்தாள். அன்பரசன் எழுந்து கையிலிருந்த கவரினைப் பிரித்து, உள்ளேயிருந்த பேப்பரை அறிவழகியின் அருகே வந்து கொடுத்து, “படி”, என்றான்.
அதை வாங்கி படித்தவள் குழப்பமும் அதிர்ச்சியாக அன்பரசனை நோக்கினாள்.
////
Final சீக்கிரமா [ரெண்டு நாள்ல] தர முயற்சிக்கிறேன் தோழமைகளே, உங்கள் ஆதரவுக்கு நன்றி.

Advertisement