Advertisement

அத்தியாயம் 19 [pre -final]
காரில் ஏறிய அன்பரசன் சில நொடிகள் பொறுத்திருந்தான். அறிவழகி அசைவில்லாமல் நின்றிருக்க, காரின் ஒலிப்பானை அழுத்தினான். அறிவழகி அவ்வொலியில் விதிர்த்து, திரும்பி அன்பரசனைப் பார்த்தாள், அதில் உலகமே அந்நியப்பட்டுப்போன ஒரு பாவனை.
அமைதியாக காரில் அமர்ந்தவளுக்கு பேச ஏதுமில்லை. ‘என்னை போ வென்று சொல்லிவிட்டானே? அப்போது நான் அவனுக்கு தேவையில்லாதவளா? இப்போது சில மாதங்களுக்கு முன் தானே மனைவியாக வருமாறு கேட்டதும், என்னோடு இழைந்ததும்?, அது காட்சி பிழையா? வெற்றுச் சலனமா? பருவச் சபலமா?’, என்று மனம் அரட்ட கண்களை மூடிக்கொண்டு சீட்டின் பின்புறம் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
கார் ஒட்டியபடியே அன்பரசன் இரண்டு மூன்று முறை அவளை திரும்பி பார்த்ததோ அவளது வியர்த்து இருந்த முகத்தை பார்த்து ஏசியின் குளிரை அதிகப்படுத்தி காற்றை அவள் பக்கம் திருப்பியதோ அவளுக்கு தெரியாது. சிறிது நேர பயணத்தில் அவர்கள் வீடு இருக்கும் சாலை வந்துவிட, ஆகாஷ் ஆஷிஷ் மட்டுமல்ல, அறிவழகியும் நல்ல உறக்கத்தில் இருந்தாள். உறக்கத்திலும் முகம் சுணங்கி, புருவ முடிச்சுடன், கண்களை இறுக்க மூடி, மனதில் எதையெதையோ போட்டு குழப்பிக்கொண்டிருந்தது பிரதிபலித்தது.
சில நொடிகள் அறிவழகியின் முகத்தைப் பார்த்தவன், அவளது உறக்கத்தை கலைக்க விரும்பாமல் மீண்டும் பிரதான சாலை நோக்கி வாகனத்தைத் திருப்பி மெதுவாக அந்த பகுதியை சுற்றி வலம் வர ஆரம்பித்தான். அரை மணி நேரத்தில், ப்ரவீனாவின் அழைப்பு வர, ப்ளூ டூத் இணைப்பில் இருந்ததால், ரிங் டோன் கார் ஸ்பீக்கரில் அலறியது.
அந்த சத்தத்தில், அறிவழகி உலுக்கி எழுந்தாள். “ஷ்.ஷு.., ஒண்ணுமில்ல போன்”, என்று அன்பரசன் அவளிடம் கூறி, அழைப்பை இணைத்தான்.
“சொல்லு ப்ரீ”,
“அண்ணா, எங்க இருக்க? நேரமாச்சேன்னு சுசி கவலைப்படுது”
“இதோ வீடு பக்கத்துல வந்துட்டேன், இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்”
“ம்ம். சரி வச்சிட்டா”, கொட்டாவி விட்டு பதில் சொன்னால் ப்ரவீனா.
“தூக்கம் வந்தா தூங்கறதுதானே?, எதுக்கு நீ முழிச்சிட்டு இருக்க?”
“அதுவா, இவங்க சாயங்காலம் வெளிய போயிட்டு இப்போதான் வந்தாங்க, சாப்பாடு போட்டேன், கண்ணண்ணாவும், வந்துடுச்சு. சுசி கிச்சன் க்ளீன் பண்ணிட்டே பசங்கள இன்னும் காணோமேன்னு புலம்பிட்டு இருந்தா, பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் வீட்டுக்கும் வாசலுக்கும் லொண்டா அடிச்சிட்டு இருக்கா, அதான் போன் பண்ணினேன்.”
‘ம்ம். பசங்க தூங்கிட்டாங்க. நீ போய் படு போ”
“படுத்துட்டுதான் இருக்கேன், தூங்கபோறேன். குட் நைட்”, என்று சொல்லி அலைபேசியை ப்ரவீனா வைத்து விட்டாள்.
தூக்கத்திலிருந்து விழித்த அறிவழகி, அவர்கள் பேசுவதை கேட்டபடி அமைதியாக வந்தாள். பத்து பதினைந்து நிமிடத்தில் வீடு வந்து விட்டார்கள், இவனது கார் வருவதற்கு முன்பாகவே, சுசித்ரா வீட்டு வாசலில் காத்திருந்தாள். கார் நிறுத்திய சத்தம் கேட்டு, கண்ணனும் வந்துவிட்டான். அன்பரசன் அவர்களைப் பார்த்ததும் கார் கண்ணாடியை இறக்கினான்.
“ஏன் இவ்ளோ நேரம்?, தூங்கிட்டாங்களா?”, என்ற சுசித்ரா மெயின் கேட்டைத் திறந்தாள். அன்பரசன் காரை நிறுத்தியதும், ஆகாஷை கண்ணன் தூக்கிக்கொள்ள, சின்னவனை சுசி எடுத்துக் கொண்டாள். அவன் சிணுங்க, “அம்மாடா கண்ணு, வா உள்ள படுத்துக்கலாம்”, என்று முதுகில் தட்டிக்கொடுத்து, “”அறிவு அந்த bag-ஐ எடுத்துட்டு வந்துடு”, அறிவழகியிடம் சொல்லி உள்ளே செல்ல, அறிவழகியும் உணவு வைத்திருந்த பையை எடுத்துக்  கொண்டு சுசித்ராவை பின் தொடர்ந்து வீட்டிற்கு சென்றாள்.
கண்ணன், “என்னடா தொந்தரவு பண்ணினாங்களா?”, அன்பரசனைப் பார்த்து கேட்க,
“ம்ப்ச், போடா ஏதோ அவங்க புதுசா என்கூட வர்றமாதிரி?”, வண்டியை ஸ்மார்ட் கீ கொண்டு பூட்டி, ஹாலில் இருந்த கீ ஹோல்டரில் மாட்டி அவனது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டான்.
அதைப் பார்த்த கண்ணன், “இப்ப எங்கடா?”, எனக் கேட்க.
“வீட்டுக்கு போறேன்”, என்றான் அன்பரசன்.
ஆகாஷை தோளில் சுமந்திருந்த கண்ணன், திரும்பி அன்பரசனை அழுத்தமாக பார்த்து, “சொல்லிட்டு போ”, என்றான் மொட்டையாக.
அதற்குள் பெண்கள் இருவரும் வெளியே கூடத்திற்கு வர, கண்ணன் பிள்ளையை படுக்க வைக்க படுக்கை அறை சென்றான்.
“மாமா, அறிவு சாப்பிட வாங்க, பெரிய மாமா, ப்ரவீனா, மாப்பிள, அத்த, கண்ணமாமா, என்னையும் சேர்த்து எல்லாரும் சாப்டாச்சு. நீங்கதான் பாக்கி. சீக்கிரம் வாங்க, உங்களுக்கு போட்டுட்டு நான் படுத்துக்கறேன்”.
“அம்மா அப்பா எங்க..?”, அன்பரசன் எங்கேயென்று கேட்டான்.
“காலைல சீக்கிரமா எழுந்தாங்கல்ல? வேலையும் ஜாஸ்தி, அதான் தூங்க போயிட்டாங்க. மாமாவும் அத்தையும் இவ்ளோ நேரம் ஹால்ல தான் படுத்திட்டு இருந்தாங்க, நான்தான் நீங்க வந்தா பாத்துக்கறேன்னு சொல்லி, உள்ள படுக்க சொன்னேன். என்ன இவ்ளோ நேரம்?”
அன்பரசன், “ம்ம். நீ கேட்ட கொத்தமல்லி கட்டை தேடிட்டு இருந்தோமா? அவன் நாப்பது ரூவா சொன்னானா? பேரம் பேசினதுல லேட்டாயிடுச்சு.”என்றான் நக்கலாக.
அவனது எகத்தாளம் புரியாமல், “ஐயோ ராமா? நாப்பது ரூபாயா? அதுக்கு இங்கயே வாங்கிடலாமே?””, என்ற சுசித்ரா, தொடர்ந்து, “வாங்கினீங்களா என்ன?”, என்றாள்.
சிரிப்பை அடக்கியபடி, “முப்பது ரூபாய்க்குன்னா தர்றேன்னு சொன்னான், வேணான்னு வந்துட்டேன்”, அன்பரசன் கூறினான்.
“நல்ல வேளை, நான் இங்க ஒரு கட்டு வாங்கி ஸ்டாக்-ல வச்சிட்டேன், சரி சரி கைகால் அலம்பிட்டு சாப்பிட வாங்க”, என்றால் சுசித்ரா. அதற்குள் கமலம்மா, அரவம் கேட்டு எழுந்து கூடத்திற்கு வந்தார்.
கண்ணைத் கசக்கியவாறே,  “ஏன்டா இவ்வளோ நேரம்? அம்மனுக்கு புடவை குடுத்திடீங்களா?”, கரகர குரலில் கேட்டார்.
“ம்ம்”, அன்பரசன்.
“இந்தாங்க அத்த, பிரசாதம்”, அறிவழகி, குங்கும பிரசாதத்தை நீட்டினாள். கமலம்மா சிறிது எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டார். பின் அறிவழகி சுசித்திராவிற்கு தர, அவளும் குங்குமம் இட்டுக் கொண்டாள்.
“குழந்தைங்க சாப்டாங்களா அறிவு?”
“ம், சாப்டாங்கத்த”
“நீங்க சாப்பிட வேண்டியதுதானே?”
“மா, வர்ற வழில சாண்ட்விச் சாப்பிட்டேன், பசியில்லை”, அன்பரசன்.ய்ர
“ஏண்டா கண்டதையும் சாப்பிடறீங்க? எங்க எப்போ வியாதி வரும்னே தெரில, இப்போ போயி கடைல வாங்கி சாப்பிடுவியா?”
“இல்லத்த, “, அறிவழகி ஆரம்பிப்பதற்க்குள்,
“மா பசிச்சுது, வாங்கினேன், சாப்பிட்டேன்”, அன்பரசன் இடையிட்டான்.
“உடம்புக்கு இழுத்து விட்டுக்காம இருந்தா சரிதான்”, என்றவர், அறிவழகியிடம், “நாளைக்கு சத்ய நாராயண பூஜை பண்ணனும், சீக்கிரம் படு”, என்று விட்டு “டே சுதர்ஷன் வந்தாரு, ஸ்டோர் வீட்டுக்கு போ சொன்னியாமே? டூப்ளிகேட் சாவி குடுத்தேன். நாளைக்கு வரும்போது வச்சிட்டு போ. கொஞ்சம் சாமான்ல்லாம் வாங்கி வைக்கணும்”
‘ஆமா, இதான் இப்போ ரொம்ப முக்கியம்’, மனசுக்குள் கடுத்தவன், “ம்ம். சரி நீங்க போயி படுங்க போங்க.”, என்றான்.
“ரெண்டு வாய் சாப்ட்டு படுறா, அந்த பொண்ணு சாப்பிடணுமில்ல?, தனியா உக்கார சங்கோஜமா இருக்கும். கூட உக்காரு”
“யம்மா.. போய் படும்மா, சும்மா படுத்திட்டு இருக்க?” என்று அன்பரசன் ஒரு குரல் கொடுக்க, இதற்குமேல் பேசினால், சத்தம் போடுவான் என்பது தெரியுமாதலால். படுக்கப் போய் விட்டார்.
சுசிதரா இருவரையும் மாற்றி மாற்றி பார்க்க, “என்ன உனக்கும் தனியா சொல்லனுமா?”, அவளுக்கும் சேர்த்து அன்பரசனிடமிருந்து பாட்டு விழுந்தது.
“நீங்க போங்க, நாங்க போட்டு சாப்டுக்கறோம்”, என்று அவளை ஆற்றுப்படுத்தும் விதமாக அறிவழகி சொல்ல, சுசித்ரா இருவரையும், ‘சுமூகமா இருக்காங்களா?”, என்ற ஆராய்ச்சிப் பார்வை ஒன்றை பார்த்து, இருவரின் முகமும் எதையும் பிரதிபலிக்காததால், ஒருவித குழப்பத்துடனே படுக்க சென்றாள்.
அவன் இந்த வீட்டில் இருக்கும்போது உபயோகித்த அறையில்தானே இவள் இருப்பது? அன்பரசனை பாராமல் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள சென்று ஐந்து நிமிடங்களில் உடை மாற்றி வெளியே வந்தாள். அதற்குள் ன்ன்அன்பரசனும் கைகால் சுத்தம் செய்து வந்திருக்க, மேஜை மீது தட்டம் எடுத்து வைத்து அவனருகே நின்றாள்.
அங்கே லாஸ் ஏஞ்சல்ஸில் இருவரும் இருந்தபோது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். இந்த வீட்டிலோ அனைத்தயும் பரிமாறிய பிறகே பெண்கள் சாப்பிட உக்காருவது வழமை. இப்போது இருவரும் சாப்பிடுவதா? அல்லது அவனுக்கு போட்டு பின் தான் அமர்வதா? அறிவழகி குழப்பத்தோடு நிற்க, “உக்காரு, எங்க வீட்டுக்காக எதையும் மாத்தவேணாம்”, என்று அவளது தட்டிலும் பரிமாறினான்.
அவளுக்கு எங்கே பசித்தது.? அன்பரசன் சாதாரணமாக பேசுவது போல இருந்தாலும் உள்ளே பொடிவைத்து பேசுகிறானோ? என்ற சந்தேகம் மனதை அரிர்த்துக் கொண்டே இருந்தது, தவிர சிறுதீனி சாப்பிட்டது வேறு. இரண்டும் பசியை மந்திக்க வைத்தது. ஆனாலும், அவன் வைத்த இரண்டு சப்பாத்தியை கடனே என்று சாப்பிட ஆரம்பித்தாள். இல்லையென்றால் அதற்கும் ஏதேனும் சொல்லுவானோ என்ற பயம்.
அவள் கடைசி விள்ளல் விழுங்கும்போது, “சீக்கிரமே உன்னை ஸ்டோர் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க, அதுக்குள்ள என்னன்னு முடிவு பண்ணிக்கோ”. என்றான். கேட்ட அறிவழகிக்கு புரை ஏறியது.
“இல்லன்னாலும் ஒன்னும் பெரிசா ஆயிடாது, ஜஸ்ட் ரூம் மேட் டா இருக்கறது நமக்கு பழக்கம்தான்”, தண்ணீரை அவள் பக்கம் நகர்த்திவிட்டு, கை கழுவ சென்றான். அவன் சொன்ன ‘ரூம் மேட்’-ல் அத்தனை அழுத்தம்.
“ஆங். நாளைக்கு சுதா ஊருக்கு போறான் தெரியுமில்ல, எட்டு மணிக்கு ஃபிளைட், டிக்கட் புக் பண்றதுன்னா மூணு மணி நேரத்துக்கு முன்னால சொல்லணும்”, கைகளை துண்டால் துடைத்தபடி சொன்னான்..
இவன் என்னை மறுபடியும் போ என்று சொல்கிறானா? என்பது போல அன்பரசனைப் பார்க்க, “ஒருவேளை போகணும்னு தோணினா..”, என்று இழுக்க,
அவனது குதர்க்கமான பேச்சில் அறிவழகியின் பொறுமை காற்றில் பறந்தது, “தோணாது, அப்படியே தோணினாலும் நான் மாமாகிட்ட ஏன் போறேன் யாரு போக சொன்னா-ன்னு சொல்லிட்டு போவேன்”, என்றாள்  பட்டென.
சிரிப்புபோல ஏதோ ஒன்று அவன் முகத்தில் வந்து போனது, தோளைக் குலுக்கி “பை” என்று கிளம்பி விட்டான்.
மேஜையை சுத்தம் செய்து கிச்சனில் அத்தனையும் ஒதுங்க வைத்தாள். சுசித்ரா வீட்டை நன்றாக பராமரிப்பது தெரிந்தது. பத்து நிமிடங்களில் வேலை முடித்து, அறைக்கு சென்றவள், யோசனையாக கட்டிலில் அமர்ந்தாள்.
‘என்ன வேண்டும் இவனுக்கு? ஏன் குதர்க்கமாகவே பேசுகிறான்? அந்த பெண்ணை திருமணம் செய்ய விடாமல் குறுக்கே வந்து விட்டேன் என்ற கோபமா? ஆனால், அவள் ஒன்றும் அத்தனை அழகி இல்லையே? அன்பரசன் அழகைப் பார்த்து வயப்படுபவனா? விநாயகம் மாமாவின் பையன் அப்படி இருக்க வாய்ப்பில்லைதான். அந்த பெண்ணின் அழகு வெறும் ஒப்பனை, அதையும் விட குணம்?,..”, சே..மற்றவரைப் பற்றி என்ன யோசனை?’, அவளுக்கு அவளே கடிவாளமிட்டு, அவன் கேட்ட ‘ஏன் இங்க வந்தாய்?’ என்பதில் மனதை படர விட்டாள்.
அவான் கேட்டான் என்பதற்க்காக அல்ல, அவளுக்கே தெரிய வேண்டி இருந்தது. விநாயகத்தின் நேர்மையா? அன்பரசன் பெற்ற அவமானங்களா? இல்லை ஆண்டாண்டு காலமாக குடும்பங்களைப்  பிணைத்திருக்கும் மஞ்சள் கயிறு மாஜிக்-கா? சிறிது நேரம் யோசித்தவளுக்கு விடை தெரிந்தாற்போல் இருக்க, குறுநகையோடு அமைதியாக எண்ணங்களற்று கிடந்தாள். அப்படியே உறங்கியம் போனாள்.
காலையில் சுசித்ராவின் குரலில்தான் விழித்தாள். வீட்டை ஒழுங்கு செய்வது, பூஜை, சமையலில் பங்கெடுப்பது, ஆகாஷ் ஆஷிஷுடன் விளையாடுவது என அவளது பொழுது நகர்ந்தது. சுதர்ஷன், அன்பரசன் இருவரும் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு காலையிலேயே சென்றுவிட்டனர்.
மதிய உணவு முடித்து, பாத்திரங்களை ஒழித்துப் போட்டுக் கொண்டிருந்த சுசித்ரா, “உன்கிட்ட ஒன்னு சொல்லணும் அறிவு, இந்த வீட்ட கட்டும்போது எங்கப்பாதான் கூடவே நின்னு காட்டினார். அப்போ லீவுக்கு இங்க வருவேனா, இது உன் வீடு அடிக்கடி அப்பா சொல்லுவாங்க அது பதிஞ்சு போச்சு. எனக்காகத்தான் பின்னால தோட்டம் போடறதுக்கு இடம் விட்டாங்க. அந்த மகிழ மரம் நான் அப்போ வச்சது, பின்னால இருக்கற வாழை தோட்டத்தோட முத வாழைக்கன்னு எங்க வீட்டுது, நாந்தான் இங்க கொண்டாந்து வச்சேன், இப்போ வரைக்கும் அடிவாழை வந்துட்டு இருக்கு.”
“திடீர்னு நீ வந்த உடனே, இதுக்கு நான் உரிமை கொண்டாட முடியாதில்லயா-ன்னு உன்ன பாக்கும் போதெல்லாம் கோவம் கோவமா வரும், அத்த கிட்ட கண்ணா பின்னானு திட்டியிருக்கேன், அத்த கூட சொல்லுவாங்க, ‘வீட்டுக்கு வந்த பொண்ணு வயிறெரிஞ்சா நாம நல்லா இருக்க மாட்டோம்டீ-ன்னு’, எனக்கு அன்பு மாமாவை பிடிக்கும்தான், ஆனா அத விட இந்த வீடு, அத்த மாமா, ப்ரவீனா எல்லாரையும் பிடிக்கும்”.
“நீ போனதுக்கப்பறம் அத்தை, அன்பு மாமாக்கு என்னைக் கேட்டாங்க. அப்பா சரி சொல்லிட்டாங்க, ஆனா அம்மா கண்டிப்பா கூடாதுன்னு ரொம்ப பிரச்சனை பண்ணிட்டாங்க. அதுக்கும் காரணம், அன்பு மாமாதான். ஏன்னா..”, என்று ஆரம்பிக்க,
“ஏற்கனவே நடந்தது பத்தி இப்ப என்ன சுசி?”
“அப்படியில்ல, நீ மாமாவை எதுவும் நினைக்ககூடாதில்ல?”
“சரி, உங்கம்மா சத்தம் போட்டதுக்கு காரணம் அவருக்கு தெரியுமில்ல? “
“ம்ம் தெரியும், அவர்தான்..”சுசித்ரா இழுக்க…
வாயில் ஆள்காட்டி விரலை வைத்து தலையை இடவலமாக அசைத்து, “நோ. இனிமே அவர் விஷயம் எதுவா இருந்தாலும் அவர்தான் எனக்கு சொல்லணும். அவர்ட்டயே நான் கேட்டு  தெரிஞ்சிக்கறேன்”, என்றவள், ஆதூரமாய் புன்னகைத்து, “எனக்கு உன்மேல கோவமில்ல உங்க அன்பு மாமாவை நான் தப்பால்லாம் நினைக்கமாட்டேன் போதுமா?”
“ஆனா, நீங்க ரெண்டு பெரும் கிழக்கும் மேற்குமா இல்ல இருக்கீங்க?”, கவலையாக சுசித்ரா சொல்ல,
“சொல்லாம போனேனில்ல? அந்த வருத்தமிருக்குமில்லையா? சீக்கிரமே சரி ஆயிடுவோம்”, அவளுக்கு கூறுவதுபோல தனக்குதானே தைரியம் கொடுத்துக் கொண்டாள்.

Advertisement