Advertisement

அத்தியாயம் 18
இறை தரிசனம் முடித்து கோவிலை விட்டு வெளியேறி அனைவரும் காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினார்கள். இப்பொழுதும் ஆகாஷே அன்பரசனின் அருகே அமர்ந்தான். சிறிது நேரத்தில் சுசித்ராவிடமிருந்து  போன் வந்தது. “மாமா, ஆஷி தூங்கிட்டானா? பசங்க தொந்தரவு பண்றாங்களா?”, என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை. ஜாலியா பாட்டுப் பாடிட்டு வந்தாங்க”
“புடவை குடுத்துட்டீங்களா?”
“ம்ம். கொடுத்தாச்சு. இப்போ வீட்டுக்கு கிளம்பப் போறோம்.”
“மாமா, அறிவு கிட்ட போன் குடுங்க”, என்றாள் சுசித்ரா. பின்னால் திரும்பி அறிவழகியாய் ஒரு முறை பார்த்து விட்டு,
சுசித்ராவிடம், “ப்ளுடூத்திலதான் பேசறேன், நீ பேசினா கேக்கும் சொல்லு”, என்று அன்பரசன் சொன்னதும்,
“சொல்லுங்க சுசித்ரா”, என்றாள் அறிவழகி பின்னாலிருந்து.
“பசங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு பின்னால சீட் கீழ வச்சிருக்கேன், அப்டியே கொஞ்சம் கொடுத்துருமா, ரோடை வேடிக்கை பாத்திட்டே சாப்பிட்டுடுவாங்க, பெரியவனுக்கு போர்க் போட்டு கைல குடுத்தா அவனே சாப்டுடுவான், சின்னத்துக்கு மட்டும் ஊட்டணும் , லேட்டானா சாப்பிடாம தூங்கிடுவான். பாதி ராத்திரில எழுந்து ரொம்ப அழுவான்”
“அவ்ளோதான? நான் குடுத்தட்றேன்”
“ஆகாஷ் சாப்பிட்டதும் தூங்கி வழிவான், சீட் பெல்ட் போட்டுடு”
“ம்ம். ஓகே”
“சின்னவனுக்கு பாத்ரூம் வருதான்னு கேட்டாதான் சொல்லுவான், இல்லனா அப்டியே போயிடுவான், கொஞ்சம் பாத்துக்கோ”, என்று தயவாக கேட்டதும்,
நாலு வயது ஆகாஷ், “ஹா ஹா ஹா, ஆஷி.. அம்மா உன்னை ஷேம் ஷேம் பண்றாங்க”,என்று சொல்ல,
அறிவழகியின் அருகே அமர்ந்திருந்த இரண்டரை வயது ஆஷிஷ், வெட்கத்தோடு சின்ன சிரிப்புடன், குனிந்து கார் சீட்டில் தலையை புதைத்துக் கொண்டான். அவன் செய்கையில் சிரிப்பு வர, சிறு முறுவலுடன், அவன் தலையை கோதி, “நான் பாத்துக்கறேன் சுசி”, என்றாள்.
ஓட்டுநர் இருக்கையில் இருந்த அன்பரசன், இலகுவாக வீட்டினருடன் சேர்ந்து விட்ட அறிவழகியின் இயல்பை நினைத்து, பல்லைக் கடித்தவன், “அவ்ளோதானா? இன்னும் ஏதாவது இருக்கா?”, என்று சுசித்ராவிடம் கேட்க,
“மாமா, இங்க கொத்தமல்லி கட்டு இருவது ரூபா சொல்றான், வர்ற வழில சீப்பா கிடைச்சா வாங்கிட்டு வாங்க”, என்றதுதான் தாமதம், அறிவழகி வாயை மூடிக் கொண்டு சத்தமின்றி சிரித்தாள்.
முன்புறம் இருந்த கண்ணாடி வழியே அவன் முகத்தை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள்? அன்பரசன் பல் கடித்து வார்த்தைகள் துப்பியதையும், சுசித்ரா பேசியதைக் கேட்டதும் வந்த அவனது முக பாவனையையும் கண்ட அறிவழகிக்கு சிரிப்பை தவிர்க்க முடியவில்லை.
அலைபேசியை துண்டித்து, திரும்பி அவளை பார்த்து அன்பரசன் முறைக்க, சாதாரணமாக முகத்தை வைத்து, ஆஷிஷை மடியில் போட்டுக் கொண்டு அவனுடன் பேச ஆரம்பித்தாள். “குட்டிக்கு பசிக்குதா? சாப்பிடறியா?”என்று கேட்டதும், குழந்தை மண்டையை வேண்டாம் இடவலமாக உருட்டியது.
அரைமணி நேர பயணத்தின் பிறகு ஆகாஷ், “சித்தி, எனக்கு பசிக்குது”, என்றதும், “நானு சாப்பிடும்”, என்றான் சின்னவன்.
பின் இருக்கையின் (அது ஏழு இருக்கைகளை கொண்ட கார்) கீழே சுசி வைத்திருந்த கேரியர் இருந்தது. கூடவே தண்ணீர் பாட்டில்களும். இருவருக்கும் குட்டி குட்டி இட்லிகளை சாம்பாரில் ஊறவைத்து ஒரு டப்பாவை ஆகாஷுக்கும் இன்னொன்றை ஆஷிஷுக்குமாக எடுத்துக் குடுத்தாள். பெரியவனுக்கு முள் கரண்டி கொடுத்ததும் தானாக சாப்பிட ஆரம்பித்தான். ஆஷிஷிம் ஊட்டியவுடன் சமத்தாக சாப்பிட்டுவிட்டான். சமயோசிதமாக உறிஞ்சிக் குடிக்கும் சிறிய தண்ணீர் பாட்டில்களை சுசித்ரா வைத்திருந்ததால், காரில் பயணித்தவாறே உணவு கொடுப்பது அறிவழகிக்கு சுலபமாக இருந்தது.
ஆகாஷ் மீண்டும் அவனது ரைம்ஸ்-களை ஆரம்பிக்க, அறிவழகியின் மடியில் படுத்தபடி ஆஷிஷும் அவனது மழழை மொழியில் அண்ணனுடன் சேர்ந்து கூட பாடினான். சிறிது நேரத்தில் எரிபொருள் நிரப்பவென பெட்ரோல் பங்கில் அன்பரசன் காரை நிறுத்தினான்.
பெட்ரோல் நிரப்பிவிட்டு, பின் பக்க கார் கதவைத் திறந்து, அறிவழகியின் மடியில் படுத்திருந்த ஆஷிஷை “வாடா, சூசு போயிட்டு வரலாம்”, என்று அன்பரசன் கூப்பிட, குழந்தைக்கோ கண்கள் பாதி தூக்கத்தில் சொருகியது. இத்தனைக்கும் வண்டி நிற்கும் வரை பாடியபடிதான் இருந்தான்.
“போ சித்தா”, என்றுவிட்டு அவன் அசையக்கூட இல்லை. “டேய் வாடான்னா..”, என்றவாறு உள்ளே நுழைந்து அவனை அள்ளிக் கொண்டான். கூடவே, “ரெஸ்ட் ரூம் போகணும்னா போயிட்டு வா. லேடிஸ்-க்கு அந்த பக்கம் இருக்கு”, என்றான் மரத்த குரலில்.
‘அப்பாடா ஒரு வழியா பேசிட்டான்’, என்று நினைத்து, “ம்ம்” சொல்லி கீழே அறிவழகியும் இறங்கி அவன் சொன்ன வழியே செல்ல, பிள்ளைகள் இருவரையும் கூட்டிக்கொண்டு அன்பரசன் சென்றுவிட்டான்.
அறிவழகி சீக்கிரமே திரும்ப, காரை அன்பரசன் செல்லும் போது பூட்டியது நினைவு வந்தது. அவன் வரும்வரை, பெட்ரோல் பங்கிற்குள்ளேயே இருந்த கடைக்குள் ஏதாவது வாங்கலாமென சென்றாள். அது ஒரு துரித உணவகத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தது.
அவளது கையில் அலைபேசி இருப்பதால் போன்பே-யில் (phone pay) பணம் குடுத்து விடலாம் என்ற நினைத்தும், வீட்டிலிருந்து கிளம்பி வெகு நேரமானதால் வயிறு சிறுதீனி கேட்டதாலும், வெஜ் சாண்டவிச் தயார் செய்து தருமாறு கேட்டாள். அப்படியே கடை பொருட்களை நோட்டம் விட்டபடி கண்ணாடி தடுப்பு வழியாக அன்பரசன் வந்து விட்டானா என்று பார்த்தாள்.
கடையின் ஒரு அலமாரியில் கீழ் தடுப்பில் பிள்ளைகளுக்கு பிடித்த சிறிய சாக்லேட் பார்கள், சிப்ஸ் வகைகள் இருக்க, வாங்கலாம் என்ற எண்ணத்துடன் குனிந்து அவற்றின் தயாரிப்பு தேதியினை சரிபார்த்தாள். அதற்குள் அன்பரசன் வந்திருக்க, அங்கே அறிவழகியை காணாமல் சுற்றும் முற்றும் பார்த்து, தடுப்பு வழியே கடைக்குள்ளும் நோட்டம் விட்டான்.
அறிவழகி  அலமாரியின் பின்புறம் குனிந்துவாறு இருந்ததால், அவனுக்கு தெரியவில்லை. இவளைக் காணாததால், ஆகாஷ் ஆஷிஷ் இருவரையும் காருக்குள் அமர வைத்து விட்டு, பெண்களுக்கான ரெஸ்ட் ரூம் பாதை வரை சென்று தேடினான். அங்கேயும் இல்லை என்பதால் துணுக்குற்றவன் பங்கில் எரிபொருள் நிரப்பும் ஆட்களை விசாரித்தான். அவர்கள் நாங்கள் கவனிக்கவில்லை என்றுவிட்டனர்.
நன்றாக இருள் கவிந்த இரவு, அக்கம் பக்கம் எவ்வித மனித நடமாட்டமோ, வீடுகளோ இல்லாத நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்த பிரதான சாலையது.  என்ன செய்வதென்று புரியாது சில நொடி நின்றான். ஒருமுறை அருகிருந்த கடைக்குள்  கேட்டு பார்ப்போம் என்று முடிவெடுத்து உள்ளே சென்று, “என் வைஃப் இங்க வந்தாங்களா?”என்று கடை சிப்பந்தியிடம் சிறிய பதட்டத்துடன் கேட்க, ஒரு ஆளுயர அலமாரியின் பின்னால் நின்றிருந்த அறிவழகி, அவன் குரல் கேட்டு சட்டென வெளியே வந்து, “இங்கதான் இருக்கேன்”, என்றாள்.
அன்பரசன் அவளைப் பார்த்த பார்வையில் அறிவழகியின் மனது தந்தியடித்தது. அத்தனை உஷ்ணம்! அதற்குள் ஸாண்ட்விச் தயாராகி வந்துவிட, அறிவழகி பணம் குடுப்பதற்கு போன் பே உபயோகிப்பதாக சொல்ல, அந்த கடை சிப்பந்தி, தாற்காலிகமாக அப்படி பணம் செலுத்தும் வசதி இல்லை என்று மறுத்தார். ‘அடேய். இவர் ஏற்கனவே துர்வாசரா நிக்கிறாரு, இதுல நீ வேறே ஏழரைய கூட்டறியே?’, என்று அவள் டென்ஷனாக,, அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்த அன்பரசன், அவனது சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்து கடை சிப்பந்தியிடம் கொடுத்தான்.
பார்சல் அறிவழகியின் கைக்கு வந்ததும், அன்பரசன் மீதி பணத்தை கவுண்டரில் வாங்குவதற்கு முன்பாக, காரை அடைந்திருந்தாள். காரிலோ, நடு இருக்கையில் ஆகாஷும் கடைசி பின்புற இருக்கையில் ஆஷிஷும், ஏ ஸி காற்றில் சுகமான தூக்கத்தில் இருந்தனர்.
பின்னோடே வந்த அன்பரசன், அவள் தயங்கி நிற்பதைப் பார்த்து, “வீட்டுக்குத்தானா? இல்ல அப்டியே வேற எங்கயாவது போற ஐடியாவா?”, என்று கேட்டு விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். அவனது இடக்கு பேச்சில் மனம் சுணங்க, படக்கென முன்புற கார் கதவைத் திறந்து அவனுக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்து வேகமாக அறைந்து சாத்தினாாள்.
“உன் பழக்கமாச்சே, அதான் கேட்டேன்”, உன் கோபத்துக்கெல்லாம் அசருபவன் நானல்ல, என்பதுபோல திரும்பிக் கூட பார்க்காமல் பேசினான்.
“எப்பிடி? நீங்க யார்கிட்டயும் சொல்லாம தன்னால முடிவெடுத்து லெட்டர் அனுப்பினீங்களே அந்த மாதிரியா?”, இவளென்ன சளைத்தவளா?
ஸ்டியரிங்கில் இருந்த அன்பரசனின் கை இறுகியது. “அத பத்தி ஏற்கனவே பேசி முடிச்சிட்டோம்ன்னு நினைக்கறேன்”, என்றவன், திரும்பி அறிவழகியைப் பார்த்து,
“இப்போ எதுக்கு இங்க வந்திருக்க?”, என்று கேட்டான். கேட்டவனின் முகம் தீவிரமாக இருந்தது.
இந்த கேள்வி இவனிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்ததுதானே? ஓரளவு தயாராகத்தான் இருந்தாள்.  “அது.., முந்தா நாள் அத்தை போன் பண்ணி இருந்தாங்க, உங்களுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிருக்கிறதாவும், நான் வந்து ரிலீஸ் டீட் குடுத்தாத்தான் நிச்சயம் ஆகும்னும் சொன்னாங்க”
“ம்ஹ்ம்”, பார்வை சாலையில் இருக்க, காதுகளை மட்டும் இவளின் பேச்சில் கொடுத்திருந்தான்.
“வந்து.. அதுக்காக நேத்து ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்தேன்”, அமைதியாக சொன்னாள். அவனது தாடை இறுகுவது தெரிந்தது.

Advertisement