Advertisement

அத்தியாயம் 17 2
ப்ரவீனாவின் வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. ஸ்ரீஜா குடும்பத்தின் சச்சரவு கொஞ்ச நேரத்தில் ப்ரவீணா கணவன் மற்றும் மாமனார் மாமியார் வருகையில் சரியாகிவிட, விழா பரபரப்பு, அதன் உற்சாகம் அனைவரையும் தொற்றியது. வந்திருந்த சொந்தங்களில் அநேகருக்கு அறிவழகியைப் பற்றி தெரியுமாதலால் எதுவும் சொல்லவில்லை, தவிரவும், காலையில் அனைவரும் கூடத்தில் குழுமி இருந்தபோது எஸ்தரின் போன் வர, சுதர்ஷனை எங்கேயென்று கேட்டாள். அவனோ, சில கட்டுமான நிறுவனங்களின் அலுவகத்திற்கு சென்றிருந்தான். அக்ஷிதா வீடியோ காலில் வந்து அக்ஷயா-வையும் அவளையும் சேர்த்து மாறி மாறி காண்பித்து அறிவழகியோடு அரட்டையில் ஈடுபட்டாள்.
அவளின் சேட்டையை வீட்டில் உள்ள அனைவரும் பார்த்து ரசித்தனர். கடைசியாக மாமி திரையில் வந்து, “”என்னோட இடுப்பு வலிக்கு போடற பெல்ட் எங்கம்மா வச்ச? உன் ரூமிலேயும் தேடிட்டேன், காணோமே?” என்று கேட்டார்.
அறிவழகி நாக்கை கடித்தபடி, “அதை அப்போவே உங்க கட்டிலுக்கு கீழ இருக்கிற கப்போர்ட-ல வச்சிட்டேனே, சொல்ல மறந்துட்டேனு நினைக்கறேன்”, என்றாள்.
இந்த உரையாடலால், மற்றவர்க்ளுக்கு மட்டுமல்ல வீட்டுப் பெண்களுக்கும்  லேசுபாசாக, அறிவழகியைப் பற்றி தோன்றிய சந்தேகம் கூட வந்த சுவடு தெரியாமல் ஓடிப்போனது. ப்ரவீனாவை ஓரளவிற்கு தெரியுமென்பதால் அவளுடன் பேசிய எஸ்தர், தொடர்ந்து கமலம்மாவுடனும் பேசி நலம் விசாரிக்க, அவர் மனம் குளிர்ந்தார்.
“நீ நல்லா இருக்கறத பாக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எஸ்தர், இந்த கொரோனா களேபரமெல்லாம் முடிஞ்சதும், நீ உன் குடும்பத்தோட கண்டிப்பா சென்னை வரணும்”, என்று கட்டளையாகவே சொன்னார்.
அவளும் பதிலுக்கு, “நிச்சயமா அம்மா, அறிவழகிய பாக்கறதுக்காகவாவது அடிக்கடி வருவேன்மா”, என்று சொல்ல, அங்கே ஒரு புது உறவு பாலம் தொடங்கியது. அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி ததும்பியது.
சுதர்சன் மதிய உணவிற்கு வந்துவிட, அன்பரசன் சுதர்ஷன் இருவரும் அப்போதுதான் அறிமுகமானவர்கள் போல பேசிக்கொண்டனர். [அன்பரசனின் அமெரிக்க அறிமுகங்கள், அங்கு நடந்தவைகள் குறித்து வீட்டினருக்கு தெரியாதே?’) இருவரும் சேர்ந்தே சாப்பிட்டு சிறுது நேர ஆசுவாசத்திற்கு பிறகு, இன்னமும் இரண்டு நிறுவன தலைவர்களிடம் அன்பரசன் சுதர்ஷனைப் பற்றி கூற, அவர்கள் நேரில் வந்து கலந்துரையாடுமாறு சுதர்ஷனிடம் விண்ணப்பிக்க, அவன் வெளியே கிளம்பும் படி ஆயிற்று.
விநாயகம், அன்பரசனுடன் பேசவென மாடிக்கு சென்றார், அங்கே மூங்கிலால் வேயப்பட்ட இரட்டை சோஃபாவில் அவனின் வழமையாக, படுத்துபடி அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன், தந்தையைப் பார்த்ததும் எழுந்து நின்றான். “உக்காரு, உக்காரு”, என்று எதிரில் இருந்த மற்றொரு மூங்கில் கூடை நாற்காலியில் அமர்ந்தார்.
மகன் கேள்வியாக பார்ப்பதை அறிந்து, “தூங்கிட்டிருந்தியா?”, என்றார்.
“இல்ல சும்மாதான் போன் பாத்திட்டிருந்தேன்”
“இன்னிக்கு பேருக்கு நிச்சயம் பண்றதா முடிவு பண்ணியிருந்தோம் ஞாபகம் இருக்கா?”
“ம்ம்”
“அத பத்தி ஒண்ணுமே கேக்கல?”
“நீங்க காலைல அவங்களோட சத்தம் போட்டுட்டு இருந்தீங்க, அப்பவே புரிஞ்சிகிட்டேன்”
“அறிவழகி வந்திருக்கு, பாத்தியா?”
“ஹ்ம்ம். பாத்தேன்”
“என்ன பண்ணலாம்னு சொல்லு “
“இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்குப்பா? அவளா போனா, அவளே வந்திருக்கா”, என்றான் வெறுமையாக.
“டேய். இப்போ நம்ம வீட்டு பொண்ணா வந்திருக்கா, இனி இங்கதான் இருக்கபோறேன்னு முடிவெடுத்து வந்திருக்கா, நீ என்ன சொல்ற?”
சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, “நான் ஒரு தடவ பேசிட்டு சொல்றேன்பா”
ஒருவேளை அறிவழகியை சந்தேகப்படுகிறானோ என்ற எண்ணம் வர, “அது குணத்துல எதுவும் பழுதில்லடா, எஸ்தர்கூட இருக்கா, அவங்க குடும்பத்துல ஒருத்தியாதான் அவளை பாக்கறாங்க. காலைல அந்த வீட்லேர்ந்து போன்ல பேசினது பாத்தல்ல?”, என்றார் அவசரமாக.
“ம்ப்ச். பா, தப்பால்லாம் நினைக்கலப்பா”
“வேற என்னடா?”
“அப்பா நேத்திக்கு ஒரு பொண்ணு போட்டோ காமிச்சு இவதான் நீ கட்டிக்க போறவ-ன்னு சொன்னீங்க, இன்னிக்கு என்னடான்னா முதல்ல கட்டினவளே வந்துட்டாங்கிறீங்க? மனசு என்ன செல்போனா? டக் டக் னு ஸிம் கார்டு மாத்திப் போட்டு வேலை பாக்கறதுக்கு? கொஞ்சம் டைம் கொடுங்கப்பா”
“சரிடா,  அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவெடுக்கற வரைக்கும் கொஞ்ச நாள் அறிவழகி நம்ம வீட்ல இருக்கட்டுமா?”
“ம்ம்”, என்றான் அரைமனதுடன்.
மதியம் மூணரை மணி சுமாருக்கு அனைவர்க்கும் காபி பலகாரங்கள் கொடுத்த பின், சுற்றத்தினர் கிளம்பத் தயாராக, விநாயகம் தம்பதியினர் இருவரும் குடும்பத்தினருக்கு, சொந்தங்களுக்கு எடுத்த புத்தாடைகளை தாம்பூலத்தோடு வைத்துக் கொடுக்க ஆரம்பித்தனர்.
முதலில் ஆகாஷ் ஆஷிஷ்,  ப்ரவீனா பிரசாத், ப்ரவீனாவின் மாமனார் மாமியார், சுசித்ரா கண்ணன் என ஜோடிகளை ஒன்றாக அமரவைத்து புத்தாடை அளித்தனர். அடுத்து அறிவழகி அன்பரசன் ஜோடி இரண்டும் கிழக்கும் மேற்குமாய் போக்கு காட்டியவர்களை கூப்பிட்டு அமரவைத்து புத்தாடைகள் கொடுக்க, அறிவழகிக்கு அது முதன்முதலாக புகுந்த வீட்டின் அங்கீகாரம். அமைதியாக பெற்றுக்கொண்டு இருவர் காலிலும் விழுந்து நமஸ்கரித்தாள்.
“மச்சான்,நீங்களும் விழுங்க”, என்று சுதர்ஷன் கூற, “அடேய்…”, என்று மனதுக்குள் கறுவி வேறு வழியின்றி, அறிவழகியுடன் சேர்ந்து அன்னை தந்தையை வணங்கினான்.
“நல்லா ஊர் மெச்சறா மாதிரி அமோகமா இருப்பீங்க”, என்று அவர்கள் வாழ்த்த அறிவழகிக்கு இப்படி திருமணம் நடந்தபோதே வணங்கியிருக்க வேண்டுமோ, அப்போது இந்த குழப்பங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்காதோ? என்று தோன்றியது. ஆனால் அன்று அம்மா இருந்த நிலைமை?
கமலம்மா, “சுசி கண்ணனோட போயி அம்மனுக்கு புடவை சாத்திட்டு வந்திடறயாடீ?”, என்று சுசித்ராவை கேட்டதில் அறிவழகியின் யோசனை தடைபட்டது.
“இல்ல சித்தி, நான் கடைக்கு போகணும், லெதர் பாகெல்லாம் பூஞ்சையாயிருச்சு, கம்பெனிகாரனை கூப்பிட்டிருக்கேன் சாயங்காலம் வர்றேன்னு சொல்லியிருக்கான்”, என்றான் கண்ணன்.
“அன்பு நீ கோவிலுக்கு போயி புடவை கொடுத்துட்டு வர்றியாப்பா?”
“மா, கோவிலே மூடிக்கிடக்கு, இப்போ எங்க போறது?”
“டேய், கோவில் திறந்துதான் இருக்கு, நம்மளத்தான் கும்பல் கும்பலா போகவேணாம்னு அரசாங்கத்துல சொல்லிருக்காங்க, அங்க எப்பவும் நமக்கு நாள் குறிச்சு தர்ற பூசாரி இருக்கார், அங்க போயி ஒரு போனை போட்டா வந்து புடவைய வாங்கிட்டு போயிடுவார், வீட்ல எந்த பங்க்ஷன் நடந்தாலும் அம்மனுக்கு புடவை சாத்தறது நம்ம வழக்கம்டா”
“சரி சரி, கொடுங்க போயிட்டு வர்றேன்”, என்றதுதான் தாமதம், “ஹே, சித்தா நானும் நானும்”, என்று வாண்டுகள் ஆகாஷ் ஆஷிஷ் இரண்டும் குதிக்க.., “கூட்டிட்டு போங்க மாமா, நான் கொஞ்ச நேரம் இதுங்க இம்சையில்லாம ரெஸ்ட் எடுக்கறேன்”, என்றாள் சுசித்ரா.
“நீதானா?, அரை மணி நேரத்துக்குள்ள அவனுக்கு அஞ்சு போன் போடுவ, உன்னைப்பத்தி தெரியாதா?”, என்று கண்ணன் மனைவியை வார..
“அண்ணா, சின்னவனை கூட்டிட்டு போற, அவன் கரெக்ட்டா கார் கிளம்புனதும் ஏ ஸி காத்துக்கு தூங்கி வழிவான், பாத்துக்க”, என்றாள் ப்ரவீனா.
“முத முறையா புடவை சாத்த போற, அப்படியே அறிவழகியையும் கூட்டிட்டு போ, குழந்தைங்கள அவ பாத்துப்பா”, என்றார் விநாயகம்.
அன்பரசன் மறுக்க நினைக்க, அதற்குள் அவர் ஆகாஷை தயார் செய்ய போய்விட்டார். (யாருகிட்ட?)
வேறு வழியின்றி, அறிவழகி, ஆகாஷ் ஆஷிஷ் மூவருடனும் அன்பரசன் கோவிலுக்கு கிளம்பினான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம், வழி நெடுகிலும் பிள்ளைகள் பாடிக்கொண்டும், அரட்டை அடித்தும் வர நேரம் போனதே தெரியவில்லை. அறிவழகி பின்னால் ஆஷிஷோடு அமர்ந்து கொள்ள, முன்னால் அன்பரசன் அருகே இருந்த இருக்கையை ஆகாஷ் ஆக்ரமித்தான்.
ஒரு வழியாக கோவிலும் வந்துவிட, காரை அன்பரசன் கோவில் வாசலுக்கு அருகிலேயே நிறுத்தினான். அன்பரசன் அலைபேசியை எடுத்து பூசாரிக்கு அழைக்க எண்களை போட்டான். சில நிமிடங்களில் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க அர்ச்சகர் இவனருகே வந்து, “விநாயகம் மாமா பையன் தானே நீங்க? அம்மா போன் பண்ணினாங்க, பெரியவா ரெண்டு பேர் தான இருக்கேள்? உள்ள வந்து அம்பாள பாத்துட்டே போலாம் வாங்கோ”, என்றார் அவர்.
அப்போதுதான் எந்த கோவிலுக்கு வந்திருக்கிறோம் என்று அறிவழகி கார் கண்ணாடியை இறக்கி எட்டிப் பார்த்தாள். அது காஞ்சி காமாட்சியம்மன் கோவில். நிமிர்ந்து சில நொடிகள் கோபுரம் பார்த்தவள் ஆஷிஷையும் கூட்டிக்கொண்டு இறங்கி, “வர்றோம் மாமா”, என்றுவிட்டு கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
புடவை கொடுத்து விட்டு உடனே வீட்டுக்கு போகலாம் என்று எண்ணிய அன்பரசன், அறிவழகி செல்வதால் இவனும் பின் தொடர வேண்டியதாயிற்று.
பத்து நிமிடங்களில், அம்மனுக்கு இவர்கள் சாத்திய புடவை கட்டப்பட்டு தீபாராதனை காட்டினார், அர்ச்சகர்.
காமாட்சியம்மனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த அறிவழகிக்கு, “என்னடி பொண்ணே, உன்ன காப்பாத்த, நான் என் வீட்டுக்காரரை விட்டு வரவேணாம்னு சொன்ன, இப்போ நீயே உன் வீட்டுக்காரரோட வந்து என்னை பாக்க வச்சிட்டேன் பாத்தியா?”, என்று கேட்டு உலகன்னை சிரிப்பது போலிருந்தது. கண்களில் நீர் திரையிட அகமும் முகமும் மலர்ந்து முறுவலித்தாள் அறிவழகி.

Advertisement