Advertisement

அத்தியாயம் 17
அனைவரும் சரியென்றால் போதுமா? அன்பரசனின் எண்ணம் என்னவோ?
அவனது துளைத்தெடுக்கும் பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றுகிறதே தவிர அவன் மனவோட்டம் என்ன என்று அறிவழகியால் கிஞ்சித்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தயாராகி வருகிறேன் எனறு மாடிக்கு சென்றவன் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவான், இந்த ஸ்ரீஜா பிரச்சனையை வேறு இருக்கிறது, என்ன செய்யப் போகிறானோ? என்ற பதைப்பு ஆழ்மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது. ஒரு பெருமூச்சோடு, ட்ரேயில் காலி டம்ளர்களை அடுக்கியவள் அடுக்களைக்கு நகரத் துவங்கினாள்.
அன்பு மாடிக்கு செல்லும்வரை காத்திருந்த விநாயகம் ஸ்ரீஜாவிடம் சென்று, ‘உங்களோட கொஞ்சம் பேசணும், உங்க அண்ணனையும் கூப்பிடும்மா’, என்று சொல்லி கூடத்தை ஒட்டியிருந்த அறைக்கு சென்று காத்திருந்தார்.
ஸ்ரீஜாவின் அண்ணன் இவர்கள் இருவரையும் இறக்கிவிட்டு, அலைபேசியில் அழைப்பு வந்ததால், வெளியே நின்று யாருடனோ பேசியதால் சற்றே பின்தங்கினான். அவன் இப்போது வீட்டுக்குள் வர, அவனிடம் விபரம் கூறி விநாயம் இருந்த அறைக்கு ஒரு வித குழப்பத்துடன் மூவரும் சென்றனர். பின்னே விடுவிப்பு பத்திரம் கொடுக்கிறேன் என்ற அறிவழகி இவர்கள் வீட்டில் இருக்கிறாள், நேற்று அலைபேசியில் விபரம் கேட்டதற்கு நாளை (இன்று) வீட்டில் பேசிக்கொள்ளலாம் என்று பதில் வந்தது. சொத்து பெயர் மாற்றமாவது செய்துவிடலாம் என்றதற்கும் நாள் நன்றாக இல்லை என்று பூசி மெழுகினர். இப்போது பார்த்தால் ஸ்ரீஜாவின் திருமணமே கேள்விக்குறியாகும் நிலை. விநாயகதிற்க்கு தெரியாமல்தான் நேற்றைய ஏற்பாடுகள் செய்தது, இப்போது அவரே விசாரணைக்கு அழைக்கிறார் என்றால்? சரி என்னவென்று பார்க்கலாம் என்ற முடிவுடன்தான் உள்ளே சென்றனர்.
மூவரும் அறைக்கு வந்ததும் இருக்கையில் அமர சொல்லி, “அம்மா தப்பா எடுத்துக்காதீங்க, நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க. நீங்க உங்க பொண்ணு பேர்ல சொத்து எழுதி வைக்க சொன்னீங்களா? அதுக்காக நேத்திக்கு நீங்க ரிஜிஸ்டர் ஆபிஸ் வந்தீங்களா?”, என்று சுத்தி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.
“அது அது வந்து.. ஆமாங்க, ஒரு செக்யூரிட்டி இருக்கணும்ங்கிறதுக்காக…”, ஸ்ரீஜாவின் அம்மா மென்று முழுங்கினார்.
“என்ன செக்யூரிட்டி? எது செக்யூரிட்டி? சொத்தா? அதை நம்பியா எங்க கூட சம்பந்தம் பண்றீங்க?, அதுவா உங்க பொண்ண பாதுகாக்க போகுது?”, விநாயகத்தின் குரல் சிறிது உயர, அது  ஹாலில் உள்ள அனைவர்க்கும் கேட்டது.
“இல்ல, உங்க பையன் புத்தி சுவாதீனமில்லாம இருந்ததா….”, என்று அந்த அம்மா தயங்கி தயங்கி கூறினாலும் ஒன்றும் மெதுவாக வரவில்லை வார்த்தைகள், அனைவர்க்கும் கேட்கும்படிதான் இருந்தது. அதிலும் கூடத்தில் இருந்த அறிவழகிக்கு நன்றாகவே கேட்டது. அவ்வார்த்தைகள் முக கடுப்பைத் தந்தது.
அறிவழகிக்கே அப்படியென்றால், விநாயகத்திற்கு கேட்பானேன்? “ஓஹோ.. புத்தி சுவாதீனமில்லாம…. ?”, கோபத்தில் அவரது தாடைகள் இறுக, கண்களை மூடி ஆழ மூச்சிழுத்தார்.  பிள்ளை பாசத்தில் தவறான  வார்த்தைகளை விட்டுவிடக்கூடாதே என்று நிதானித்தார். அவரது மூடியிருந்த இமைகள் திறக்க,  அதில் அதுவரை அவர்களை பார்த்த பார்வை மாறியிருந்தது.
தகுதியில்லாதவர்களுடன் பேசும் த்வனியுடன், “நீங்க அதைக் காரணமா  சொல்லி கல்யாணம் வேண்டாம்ன்னு நிறுத்தியிருந்தீங்கன்னா அது ஒரு விதத்துல சரி.  அத விட்டுட்டு என் பொண்டாட்டி பேர்ல இருக்கற சொத்தை உங்க மகளுக்கு எழுதி தர சொல்லி கேட்டுருக்கீங்க. ஒருவேளை அவன் பைத்தியமா இருந்தாலும் நீங்க உங்க பொண்ணை குடுக்க தயார். அப்படித்தான?”
“சே சே. பைத்தியம்ன்னு சொல்லல, ஆனா, கொஞ்ச நாள் சைக்கிரியாடிஸ்ட் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டாதா சொன்னாங்க. இதே காரணத்தை வச்சு உங்க நெருங்கின சொந்தகாரங்க வீட்ல பொண்ணு தரமாட்டோம்னு சண்டை போட்டாங்களாம்”, என்று அவர் தன் வாதத்தை வைத்தார்.
அறிவழகிக்கு ‘அப்போது சுசித்ராவுடனான திருமணம் நின்றது இதனால்தானா?’, என்ற எண்ணம் தோன்றியது, அப்படியானால் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு வரவில்லையானால் அன்பரசன் சுசித்ரா இணைந்திருப்பார்களோ? என்றும் அவளது  சிந்தனை ஓடியது. நிமிர்ந்து சுசித்ராவைப் பார்க்க அவளும் அறிவழகியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களின் பாவனை இறைஞ்சுதலா? கலவரமா? என்று தெரியவில்லை.
ஆயினும் அவர்களின் உரையாடலில் கவனம் வைத்தாள், அவள் மட்டுமல்ல வீட்டில் இருந்த அனைவருமே, சுசித்ரா உட்பட, வேலையாக இருப்பது போல இருந்தாலும் அவர்களின் முழு கவனமும் விநாயகத்தின் பேச்சிலேதான் இருந்தது.  விழாக்களுக்கான கட்டுப்பாடுகள் இருந்ததால், நெருங்கின சொந்தங்கள் மட்டுமே இருந்தனர். அனைவரும் வீட்டு நிலவரம் தெரிந்தவர்களே என்பதால் அமைதியாக அவர்களின் பேச்சை கேட்டனர்.
“அம்மா, நாங்க எதையும் மூடி மறைக்கல, நீங்களா வந்தீங்க, சம்பந்தம் பேசலாமானீங்க, போட்டோ குடுத்தீங்க, நாங்க, எங்க பையனோட முத கல்யாணம் எப்படி, எந்த மாதிரியான சந்தர்ப்பத்துல நடந்தது, அதுக்கப்பறம் என்ன ஆச்சுன்னு.. எல்லாத்தையும் தெளிவா சொல்லித்தான் நிச்சயம் வரைக்கும் வந்தோம், இப்போ என்னடான்னா பைத்தியம், சொத்து குடுன்னு கேக்கறீங்க?”, என்றவர் தொடர்ந்து,
“உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வந்தா அது பேர்ல ஆயிரம் சொத்து வாங்குவோம், தேவைன்னா விக்கவும் செய்வோம், அது எங்க இஷ்டம். ஆனா காபந்து-க்காக சொத்துன்னா.. பின்னால உங்களுக்கு வேற எதோ ஐடியா இருக்குமோன்னு தோணுது.”, குற்றச்சாட்டாக முடித்தார்.
“ஆமாங்க, ஒரு பாதுகாப்புக்காகத்தான் நாங்க கேட்டோம், நீங்களே யோசிச்சு பாருங்க. ஒரு நாள், ஒரே ஒரு நாள் மட்டும்தான் உங்க பையன் அந்த பொண்ணு கூட இருந்ததா சொன்னீங்க, அதுக்கே அந்த பொண்ணு அரண்டு போயி ஹாஸ்டல் போச்சு. வேலை தேடிகிட்டு அப்படியே சொல்லாம கொள்ளாம போயிடுச்சு. அப்போ உங்க பையன்தான காரணமா இருக்க முடியும்?”, என்று ஸ்ரீஜாவின் அம்மா சத்தம் போட்டார்.
அத்தனையும் வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த அறிவழகி முகம் வெளிர நின்றாள். அய்யோ நான் சென்றதற்கு இப்படி ஒரு காரணம் கற்பித்து கொள்ள முடியுமா? அவன் என்னோடு இருந்தது எனக்குத் தெரிவது இருக்கட்டும் அவனுக்கே தெரியாதே? இதற்காகத்தானா நேற்று அந்த ஸ்ரீஜா அலைபேசியில் அப்படி பேசினாள்? அப்போது புரியவில்லை ஆனால் இப்போது அவளது பேச்சை அசைபோட எல்லாம் தெளிவாக புரிய, அம்மாடி… என்று திகைத்து, ஏதும் செய்யத் தோன்றாமல் சிலையாக சமைந்து நின்றாள்.
விநாயகம் மிக கடினமாக அமூவரையும் பார்த்து, “நீங்க வெளியே போலாம். இனி ஒரு வார்த்த பேசனீங்க, நல்லாருக்காது சொல்லிட்டேன்”, என்றதும்,
“அதெப்பிடி நீங்க வெளில போன்னு சொல்லுவீங்க? கமலத்தைய கூப்பிடுங்க, எல்லாத்துக்கும் சரின்னுட்டு இப்போ மரியாதை இல்லாம ..?”, ஸ்ரீஜாவின் அண்ணன் அவரிடம் இரைந்தான்.
“கமலா…”, கர்ஜனையாக விநாயகத்தின் குரல் வர….
ஹாலில் நின்று கொண்டிருந்த கமலம்மா-விற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘இன்றில்லாவிட்டாலும் என் சொத்து என் மகன் மருமகளுக்குத்தானே என்றல்லவா எழுதி வைக்க முடிவு செய்தேன்? எப்படியாவது மகனுக்கு திருமணம் முடிந்து குடும்பமாக ஆனால் போதும் என்றல்லவா இதற்கு சம்மதித்தேன்? இவர்கள் இப்படி வம்பு செய்யும் மனிதர்கள் என்பது தெரியாதே?’ என்றெல்லாம் எண்ணியவர், அவர்கள் பேசிக்கொண்டிருந்த அறைக்கு நடுங்கியபடியே உள்ளே சென்றார். ஸ்ரீஜா,  அவள் அம்மா, அண்ணன் யாரையும் அவர் பார்க்கவில்லை. என்ன சொல்லப் போகிறாரோ ? என்று கணவனின் முகம் பார்த்து நின்றார். நேற்றே கடிந்து சொல்லி இருந்தார், ‘என்னாலானதை செய்வேன், ஆனால் மீறிப்போனால் நீ ஆரம்பித்த குழப்பத்தை நீதான் முடிக்க வேண்டும்’., என்று.
“வீட்டு ஆளுங்களுக்கு தெரியாம ஏதாவது பண்ண நினைச்சா இப்படித்தான் நடுவீட்ல நிக்கவச்சு நாலு பேரு கேள்வி கேக்கறா மாதிரி வரும்.”, விநாயகம் உறுமலாக மனைவியிடம் சொன்னார்.
“ஏம்மா, நீங்கதானே பத்தரம் ரெடி பண்ணுங்க, அந்த பொண்ணை வர வைக்கிறேன், நானும் வந்து எழுதி தர்றேன்னு பேசினீங்க?”, என்று ஸ்ரீஜாவின் அம்மா கோபம் கொப்பளிக்க கேட்டார்.
“நாங்க நேத்து அந்த ஆபிஸ்க்கு நீங்க சொன்ன நேரத்துக்கு வந்து, வக்கீலையும் வரச்சொல்லி காத்திட்டு இருந்தா, அறிவழகி வரவேயில்லை, என்ன விஷயம்னு உங்க கிட்ட போன்ல கேட்டதுக்கு இன்னிக்கு நேர்ல வாங்க பேசிக்கலாம்னு சொல்லி முடிச்சிடீங்க. இப்போ என்னடான்னா இவர் ஏகத்துக்கும் எகிர்றாரு”,என்றான் ஸ்ரீஜாவின் அண்ணன்.
விநாயகம் இறுக்கமாக இருந்தார், மனைவியிடம் ஒருவன் கேள்வி கேட்பது, அதுவும் தன் முன்னாலேயே கேட்பது அவருக்கு தலையிறக்கமே. ஆனாலும் ‘இது அவளே இழுத்து விட்டுக் கொண்டது’, என்று வாளாயிருந்தார்.
கமலம்மா, “தம்பி, எங்க வீட்ல இவங்களுக்கு தெரியாம எந்த முடிவும் எடுத்தது கிடையாது, இவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னுதான் உங்க கிட்ட முதல்ல சொன்னேன். நீங்கதான் அவருக்கு தெரியாம பதிவு பண்ணலாம்னு எல்லா ஏற்பாடும் பண்ணுனீங்க. நானும் எம் புள்ளைக்கு இப்படியாவது கல்யாணம் ஆகட்டுமேன்னு சரின்னு சொன்னேன். ஆனா, இப்படியெல்லாம் நீங்க அவனை பத்தி நினைப்பீங்கன்னு நான் யோசிக்கல.  தயவு செஞ்சு பிரச்சனையை பெரிசு பண்ணாம கிளம்பிடுங்க.”, என்று கைகூப்பினார்.
விநாயகம் மனைவியைப் பார்த்து, பற்களைக் கடித்தவாறு, “கைய கீழ இறக்குடி, யாரு எப்படின்னு ஒரு மண்ணும் தெரியாது, போ போயி வேலைய பாரு” , என்று வார்த்தைகளை துப்பினார். மனைவி தனக்கு தெரியாமல் செய்யத்துணிந்த வினையின் எதிர்வினை இது என்பது புரிந்தாலும், முன்றாம் மனிதர் முன் விசாரிக்க வேண்டிய கட்டாயத்தினை கொண்டு வந்து விட்டாளே என்ற ஆதங்கமும் அதிகம் இருந்தது.
கூடவே, தன் மனைவி அன்பரசனின் திருமண விஷயத்துக்காக தன்னுடன் போட்ட சண்டைகள், அநேக தெய்வங்களுக்கு அவர் செய்த நேர்த்திக்கடன்கள், வைத்துள்ள வேண்டுதல்கள் நினைவுக்கு வர, கமலம்மா மேல் உள்ள கோபம் மட்டுப்பட்டது.
“நான் கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன்னு கமலாக்கு தெரியும். அப்படியும் நீங்கதான் பத்திர ஏற்பாடெல்லாம் பண்ணி இருக்கீங்க. புருஷனுக்கு தெரியாம பொண்டாட்டி சொத்தை எழுதி வாங்க துணியறீங்கன்னா நீங்க எந்த மாதிரி ஆளுங்கன்னு தெரியுது.”
“ஓ. இப்போத்தான் அந்த அறிவழகியே வந்துட்டாங்கிறதால இப்படி பேசறீங்களோ?”, ஸ்ரீஜாவின் அண்ணன் மிரட்டலாக கைநீட்டிப் பேச..
திறந்திருந்த அறையில் இருந்துதானே அவர்கள் பேசுகிறார்கள்? ஸ்ரீஜாவின் அண்ணன் கைநீட்டிப் பேசியதை பார்த்த சுசித்ராவிற்கு சப்த நாடியும் ஒடுங்கியது. விநாயகத்தின் முன் இதுவரை யாரும் கை உயர்த்தி பேசியதில்லை, அவர் அவ்விதம் நடந்து கொள்ள மாட்டார் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஊரில் அவருக்கு இருக்கும் மரியாதை அப்படி. அன்பரசனோ, கண்ணனோ வருவதற்குள் இவர்கள் போகாவிட்டால் இங்கே கைகலப்பு நிச்சயம் என்பது அவளுக்கு தெரிந்தது.
விநாயகம் கோபத்தில் எழுந்தே விட்டார், “ஏய்.. கைய கீழ போடு. முதல்ல என் மருமகளைப் பத்தி பேச உனக்கு அருகதையில்லை, ஒரு போன் பண்ணி கையெழுத்து போட வா ன்னு சொன்ன உடனே, மறுத்து பேசாம வந்து நின்னிருக்கா, அவங்கம்மா இன்ஷுரன்ஸ்  பணம் இன்னமும் எங்ககிட்டதான் இருக்கு. இதுவரைக்கும் ஒரு வார்த்த அதபத்தி கேட்டதில்லை, அவ வாழ்க்கையே என் பையனால கேலிப்பேச்சா போச்சு. ஆனாலும், எந்த ஒரு கல்மிஷமும் இல்லாம தானா உழைச்சு மேல வந்த பொண்ணு.”
“அவளுக்கு சேர வேண்டியதையே கேட்காத பொண்ணு அது. நிச்சயம் ஆகறத்துக்கு முன்னாடியே இடத்தை கொண்டா, வீட்டைக் கொண்டான்னு கேக்கற ஆளுங்க  நீங்க.  உங்க கூட ஒப்புமை பண்ணினா அந்த பொண்ணுக்குத்தான் கேவலம். “
“ஓ, அப்போ எங்களைக் கூப்பிட்டு வைச்சு மூக்கறுக்கணும்னு  தெளிவாத்தான் இருகந்திருக்கீங்க. உங்க பேர்ல மான நஷ்ட வழக்கு போடறோம், சந்தி சிரிக்க வைக்கிறோம் பாருங்க”
“ஆஹா, அப்படியே தாராளமா பண்ணுங்க, அதுக்கு முன்னால உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசிட்டு செய்ங்க. அந்த மனுஷன் முகத்துக்காகத்தான் உங்கள சும்மா விடறேன்,”என்று அவர்களை பார்த்து, மறைமுகமாக வெளியேறு என்று பொருள்படும்படி வணக்கம் சொல்லி, வெளியே பார்த்தபடி, ” அம்மாடி, விருந்துக்கு வந்தவங்க கிளம்பறாங்க பாரு. யாரையும் வெறுங்கையோட அனுப்பறது நமக்கு பழக்கமில்ல, இனிப்பும் தாம்பூலமும் கொடுத்து அனுப்புங்க”, என்று குரல் கொடுத்தார்.
“என்னப்பா என்ன பிரச்சனை? மாடி வரைக்கும் சத்தம் கேக்குது?”, மேல்ச்சட்டை போடாமல் பனியனும் வேஷ்டியுமாக தலையில் ஈரம் சொட்டச்  சொட்ட வந்த அன்பரசன், அறையிலிருந்து வெளியேறும் மூவரையும் பார்த்துபடி கேட்க,
“அது ஒண்ணுமில்ல அன்பு, இதுக்கும் உனக்கும் சம்பந்தமில்ல, தள்ளி நில்லு, அவங்க வெளிய கிளம்பறாங்க”, என்று விநாயகம் உரைத்தார்.
அன்பரசனைப் பார்த்ததும் அவனிடம் முறையிடலாமா என்ற யோசனை ஸ்ரீஜாவிற்கு வந்தது.
அதற்குள் விநாயகம்,  “அன்பு, நீ போய் தலைய துவட்டி ரெடியாகி வா”, என்க..
ஒரு நொடி தயங்கியது போலத் தெரிய, “போன்னு சொல்றேனில்ல..”, மகனைப் பார்த்து விநாயகம் உறும.. அன்பரசன் இவர்களை ஆராய்ச்சியாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே மாடிக்கு சென்றான்.
அங்கிருந்த ஸ்ரீஜா, அவள் அம்மா, அண்ணன் மூவருக்கும் எதுவும் பேச இயலாத நிலை.  விநாயகம் மற்றும் அன்பரசனின் சொத்து விபரங்களை, அவனது நிறுவன மூலதனம், லாப நட்ட கணக்கினை முனைப்புடன் தேடி தெரிந்து கொண்டதும், பத்திரங்களை [அறிவழகியின் விடுவிப்பு பாத்திரம், கமலம்மாவின் சொத்தினை ஸ்ரீஜாவின் பெயருக்கு மாற்றும் பாத்திரம்] சரி பார்க்க, பதிவுத்துறை அலுவலகத்திற்கு சென்றதும் அவற்றிற்காக செலவு செய்ததும் வீண் என்று தோன்றியது.
நிச்சயம் ஆகவில்லை என்பதால் எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டி மான நஷ்ட வழக்கு தொடுக்க முடியாது என்பது தெரியுமாதலால் , இவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்றே என்ற கோபத்துடன் கிளம்ப ஆயத்தமானார்கள்.
அடுத்த சில நொடிகளில் அவர்கள் வாசல் நோக்கி நகர,  அறிவழகி சிறு முறுவலுடன் ஸ்ரீஜாவின் அருகில் சென்று, “தமே சுந்தர் ச்சோ பனா தமாரு மேக்அப் பாரே ச்சே”, (நீங்க அழகா இருக்கீங்க ஆனா உங்க மேக் அப் அதிகமா இருக்கு) என்றுவிட்டு ஒரு ஸ்வீட் பாக்ஸ்-ஸுடன் தாம்பூல பையையும் அவளிடம் கொடுத்தாள்.
சட்டென நிமிர்ந்து அறிவழகியைப் பார்த்த ஸ்ரீஜா திகைப்பூண்டை மிதித்தார்ப்போல் அதிர்வுடன் விழித்தாள். நேற்று பதிவுத்துறை அலுவலகத்தில் நான் அண்ணியிடம் பேசும்போது எதிரே அமர்ந்திருந்த ஹாஃப் வொயிட், மெஜந்தா எம்ப்ராயடரி போட்ட சுடிதார் பெண் இவள்தானோ? என்ற சந்தேகம் வந்தது. ஆனால், அது இவள் என்றால், இப்போது விநாயகம் சொன்ன குற்றச்சாட்டினைத் தவிர, இன்னமும் நான் பேசியது அனைத்தையும் கேட்டிருக்கிறாளா? என்ற யோசனை மேலோங்க மனம் படபடத்தது.
அவளைச்சொல்லி குற்றமில்லை. சாதாரண தென்னிந்திய பெண்ணாக மிக இயல்பாக, எதிரே அமர்ந்திருந்த அறிவழகிக்கு குஜராத்தி தெரிந்திருக்கும் என்று ஸ்ரீஜா நினைக்க நியாயமில்லை.  எளிமையாய் இருப்பது அடக்கமுடைமை என்பதும் இவளைப் போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சொத்து கேட்டதற்கே இவர் இவ்வளவு பேசுகிறார்? மீதியும் தெரிந்தால்.. என்ன பேசுவாரோ? இனி இந்த குடும்பத்திற்கும் நமக்கும் சம்பந்தம் என்ன? இந்த கிழவரிடம் இன்னமும் பேச்சு கேட்கவேண்டிய அவசியம் என்ன? என்ற எண்ணத்தோடு விடுவிடுவென அவளது அன்னை, அண்ணன் இருவரையும் தொடர்ந்து இவளும் வெளியேறினாள்.
++++++++++++++++++++

Advertisement