Advertisement

“வந்து இன்னொரு விஷயம்… கமலா அத்தை அவங்க ப்ராப்பர்டியை மருமகளுக்கு எழுதி வைக்கப் போறாங்களா என்ன?”
“என்னது? அப்படிலாம் ஏதுமில்லையே? உனக்கு யார் சொன்னா அப்படி எந்த ஏற்பாடும் நான் பண்ணலையே?”, என்று கண்ணன் பதிலளித்தான்.
“இல்ல, இங்க அந்த அரேன்ஞ்மென்ட் பண்ணிருக்காங்க, அத்தை அநேகமா மதியம் வருவாங்கன்னு நினைக்கறேன்”
“சே சே, சித்தப்பாக்கு தெரியாம…?”, கண்ணன் குழப்ப குரலில் யோசனையானான்.
“நான் மாமாகூட கொஞ்சம் பேசணுமே, அவர் எங்க இருப்பார்-ன்னு சொல்ல முடியுமா?”
“அந்த மெயின் ரோடு சூப்பர் மார்க்கெட் தெரியுமில்ல அங்கதான் போயிருக்கார். நானும் இன்னும் அரை மணி நேரத்துல அங்க வருவேன். நா இப்போ ரெஜிஸ்டர் ஆபிஸ்ல பேசிட்டு வர்றேன்”, என்று விட்டு தொடர்பை துண்டித்தான் கண்ணன்.
அறிவழகி சுதர்ஷனோடு நேராக விநாயகம் இருக்கும் சூப்பர் மார்க்கெட்க்கு சென்றாள். இவளை பார்த்ததும் விநாயகம் என்ன மாதிரி உணர்ந்தார் என்று  தெரியவில்லை. முதலில் இவர்கள் இருவரையும் கடையின் வாசலில் பார்த்ததும், அடையாளம் தெரியாமல், “ஷாப் இன்னும் ஓபன் ஆகலைங்க, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு…”, என்று சொன்னவர் இவள் முகத்தைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விழித்தார். வாய் தானாக, “அறிவழகி”, என்றது.
“நாந்தான் மாமா”, என்று அறிவழகி கூற.. அதற்குள் சுதாரித்திருந்தார் விநாயகம்.
“வாம்மா, தம்பி வாங்க வாங்க, நீங்கதான் அறிவழகி வீட்டுக்காரரா?”, அகமும் முகமும் மலர இருவரையும்  உபசரித்தார்.
“ஐயோ, இல்ல மாமா, இது எஸ்தர் வீட்டுக்காரர்”,
“ஐயோ, நான் இவ அண்ணன்”, என்று சுதர்ஷன், அறிவழகி இருவருமே பதறிப்போய்  ஒரே நேரத்தில் சொன்னார்கள்..
“அடடா, தப்பா எடுத்துக்காதீங்க, ரெண்டு பெரும் சேர்ந்து வந்த உடனே அப்படித்தான் இருக்கும்னு நினைச்சிட்டேன், ஒரு நிமிஷம்…”,
“முத்துவேலா,  இங்க ரெண்டு சேர் போடுப்பா”, என்று பணியாளரை பணித்துவிட்டு,
“சொல்லும்மா,நல்லாயிருக்கியா? வெளிநாட்ல இருக்கறதா கேள்விப்பட்டேன், குழந்தையை கூட்டிட்டு வரலையா?”, என்று வாஞ்சையுடன் கேட்டார் அவர். அறிவழகி திருமணமானவள் என்று அவர் நினைத்திருந்ததால், அன்பரசனின் பெயரைக்கூட கூறாமல் அவை நாகரீகம் காத்தார் விநாயகம். அதற்குள் நாற்காலிகள் போடப்பட, “உக்காருங்க”, என்றார்.
அறிவழகி மவுனமாக அமர, சுதர்ஷன், “அங்கிள், அறிவழகி உங்க கூட பேசணும்னு வந்திருக்கா, அப்பறம்  அவ இன்னமும் உங்க மருமகளாத்தான் இருக்கா”, என்றான் அவனது உடைந்த தழிழில்.
சட்டென புருவம் முடிச்சிட, “என்னம்மா? ஏன்? ஆனா அன்னிக்கு அன்பரசன் உன்னை திருப்பதில உன்ன குழந்தையோட பாத்ததா..”
“அது என் பொண்ணு அங்கிள்”, என்றான் சுதர்ஷன்.
“ஓஹ்.. “, என்றவரின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள், நாளை மகனுக்கு நிச்சய தாம்பூலம், இன்று இந்தப் பெண் வந்து நிற்கிறாள்? இவளுக்கு வேறு திருமணமும் ஆகவில்லை என்கிறாள். இப்போது எப்படி..? அடுத்து என்ன செய்வது? என்று குழப்பம் மேலோங்க…”சொல்லுங்க, என்ன விஷயமா வந்துருக்கீங்க?”, என்று கேட்டார்.
இது அறிவழகி பேசவேண்டிய நேரம் என்று சுதர்ஷன் அமைதி காத்தான். சிறு தயக்கத்துடன் அவள் பேச ஆரம்பித்தபோதும்,  கண்ணனும் கமலம்மாவும் நேற்று அலைபேசியில் தன்னை தொடர்பு கொண்டதை, விடுவிப்பு பத்திரம் பதியவென சென்னை வந்தது வரையே அவளது தயக்கம் இருந்தது. பின் மடை திறந்த வெள்ளமென அந்த அலுவலகத்தில் அப்பெண் பேசியது, சொத்து கைமாறுவதை, அதிலும் விநாயகத்திற்கு தெரியாமல் இவை நடக்கப் போவதாக அப்பெண் கூறியது வரை மடமடவென கொட்டி முடித்தாள்.
ஆயினும், ஸ்ரீஜாவின் ஆடம்பர வாழ்க்கைக்கான திட்டமிடல்கள் குறித்தும் , ஏற்கனவே அவளுக்கு காதல் இருந்தது குறித்தும், அறிவழகி விநாயகத்திடம்   கூறவில்லை, அது அவருக்கு தேவையில்லாத விஷயம் என அதை ஒதுக்கி விட்டாள், தவிர, இப்போது விநாயகத்திடம் கூறிய தகவல்கள் அவரும் அவரது குடும்பத்தாரும் நேரடியாக சம்பந்தப்படும் நிகழ்வுகள். இதை விடுத்து அப்பெண்னைப் பற்றி வேறு பேசினால் அது புறம் பேசுவது போல ஆகும் என்பதால் அதை தவிர்த்தாள். அவரவர்க்கு அவரவர் வாழ்க்கையை வாழும் சுதந்திரம் உண்டல்லவா? அறிவழகிக்கு தவறெனப்பட்டது ஸ்ரீஜாவிற்கு சரி எனப்படலாமே? எனவே விநாயகத்திற்கு தேவையானதை மட்டும் தெரிவித்தாள்.
அறிவழகி கூறிய அனைத்தையும் நிதானமாக கேட்டு கொண்டிருந்த விநாயகம், பின் மிகுந்த யோசனையுடன், “ரிலீஸ் டீட் கேட்டாங்க, ஆனா ‘அறிவழகிக்கு கல்யாணமானதால அவ வந்து உரிமை கேட்க மாட்டா’-ன்னு நான் அவங்கப்பாகிட்ட தெளிவா சொல்லிட்டேன். அப்படி இருந்தும்..?”என்று நிறுத்தியவர், “ம்ம்.. ஆனா கமலா தானா திடீர்னு முடிவு பண்ணி அந்த பொண்ணு பேர்ல சொத்தை மாத்தறதுங்கிறது? அவளுக்கு அவ்வளவு விவரம் பத்தாது, இது யாரோ சொல்லி கொடுத்து பண்றா-ன்னு தான் தோணுது”, என்று பொதுவாக கூறியவர், அறிவழகியைக் கூர்மையாக பார்த்து, “நீ என்ன முடிவோட என்னை பாக்க வந்திருக்க அறிவழகி?” என்று கேட்டார். அதில் இந்த பிரச்சனைகள் சரி ஒரு புறம் இருக்கட்டும் நீ என்ன முடிவோடு வந்திருக்கிறாய் என்ற கேள்வி தொக்கி நின்றது.
அவள் மெளனமாக இருக்க, “நீ என்ன யோசிக்கறன்னு தெரிஞ்சாத்தான் நான் அடுத்து என்ன பண்றதுன்னு முடிவெடுக்க முடியும், தயங்காம சொல்லுமா”, என்றார்.
மீண்டும் அவள் அமைதி காக்க..
நீளமாக பெருமூச்செடுத்து, “உங்கம்மா சாகும்போது அவங்களுக்கு உன் வாழக்கையைப் பத்தின ஒரு  நம்பிக்கையை கொடுத்தேன். ஆனா, அதை அன்பரசன், நீ ரெண்டு பேரும் அவசரப்பட்டு.. சரி அதை விடு, எதுவும் வேணாம்னு எழுதிக் கொடுக்கத்தான் நீ வந்திருக்கறதா சொன்ன, அப்போ என் மருமகளா இருக்க உனக்கு விருப்பமில்லைன்னு தெரியுது”, என்றவர்.. முகம் கசங்க  எங்கோ வெறித்தவாறு,
“அன்னிக்கு நான்தான் அவசரப்பட்டுட்டேன்னு எனக்கு இப்போ தோணுது, எனக்கு வேற வழி தெரியல, உன் கூட யாராவது துணைக்கு நின்னிருந்தாங்கன்னா, அன்பரசனை உள்ள தூக்கி போடுங்கன்னு நானே போலீஸ்ல சொல்லி இருப்பேன், தப்போ சரியோ ஊர்ல ஒரு சொல்லு உன்னைப் பத்தி வந்திடுச்சு, அப்படியே விட்டுட்டா உன் வாழ்க்கை சரியா வராதுன்னு நினச்சு, உங்கம்மாவுக்கும் நிம்மதியான முடிவா இருக்கும்னு, உங்க விருப்பமில்லாம நான் பண்ணின காரியம் சரியில்லன்னு தோணுது”, விநாயகம் அவரது வருத்தத்தை தெரிவித்தார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அறிவழகிக்கு விநாயகம் குறித்து இருந்த அனைத்து காழ்புணர்ச்சிகளும் அடியோடு போனது, அவரும் தன் மகனென்றும் பாராமல் போலீசுக்கு போவதைக் குறித்து யோசித்துள்ளார். தன்னைப் பற்றின அக்கறையுடன் செய்த ஏற்பாடுதான் அன்று அம்மாவின் முன்னிலையில் நடந்த தனது திருமணம், என்று உணர்ந்தாள். அதன் பின்னர் இன்றுவரை அவரின் நடவடிக்கைகள் அனைத்துமே பந்த பாசம் பாராமல் தராசைப் போன்றே நின்றுள்ளார், என்பதும் புரிய, அறிவழகிக்கு விநாயகம் மேல் இருந்த மரியாதை பன்மடங்கானது.
மனதில் நிம்மதி படர, இனி இவரிடத்தில் மனம் விட்டு பேசியாக வேண்டும், எனக்காக இத்தனை மெனெக்கெட்டவருக்கு கண்டிப்பாக என்னாலான உதவியை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தாள். யாருடனும் மனம் திறக்காமல் இருந்தவள் முதன் முதலாக அவளின் எண்ணங்களை் வெளியிட்டாள்.
“அது.., எனக்கு சின்னப்போலேர்ந்து குடிக்கறவங்கள பிடிக்காது, அவங்களுக்கு சப்போர்ட் பண்றவங்களையும் பிடிக்காது, ஏன்னா எங்கப்பா குடிச்சு குடிச்சுதான் செத்தார், அதனாலதானோ என்னமோ எனக்கு உங்க வீட்டோட சேர முடியல, உங்க மேலயும் கோபம் இருந்தது”
“அவன் குடிகாரனில்லம்மா, வயசுக் கோளாறு, சேர்க்கை எல்லாம் சேர்ந்துச்சு. ஆனா அதுக்கப்பறம் மொத்தமா எல்லாத்தையும் தலை முழுகிட்டான், என் பையங்கிறதுக்காக நான் சொல்லல”, விநாயகம் இழுக்க…
“ம்ம்”, அறிவழகிக்கு விநாயகம் பேசுவதன் பொருள் புரிந்தது.
“சரி, இப்போ நீ என்ன பண்றதா இருக்க?”
கோர்த்திருந்த இரு கை விரல்களை பார்த்தபடி, “நீங்க எங்கம்மாக்கு குடுத்த நம்பிக்கையை காப்பாத்தலாம்னு இருக்கேன் மாமா, உங்க சம்மதத்தோட..”, என்றாள் பிசிறில்லாது.
கூர்மையாக அறிவழகியைப் பார்த்த விநாயகத்தின் மனம் நிறைந்துபோக, சற்றே நா தழுதழுக்க, “சந்தோஷம்மா, ரொம்ப சந்தோஷம். இறந்து போன ஆத்மாக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டோமோன்னு ரொம்ப நாளா உறுத்திக்கிட்டே இருந்தது”, என்று உணர்ச்சி வசப்பட்டவர்…
“ஆனா இதுக்கு என் சம்மதம் மட்டும் போதாதுமா, முக்கியமா என் பையன் என்ன நினைக்கிறானோ தெரியலையே?”
“அத நான் பாத்துக்கறேன் மாமா”, நம்பிக்கையோடு சொன்ன அறிவழகியை சிறு முறுவலுடன் பார்த்தார்.
“வீட்ல வெளிய யாரும் எதாவது பேசினா?”
“வீட்ல பேசினா எடுத்து சொல்லுவேன், கேட்டா சரி இல்லன்னா, பேசினா பேசட்டும்னு விட்டுடுவேன். மத்தவங்க பேசறதை பத்தி எனக்கென்ன மாமா? நாம சரின்னு நமக்கு தெரிஞ்சா போதும் மாமா, எல்லார்கிட்டேயும் நம்மள நிரூபிக்க முடியாதில்லையா?”, அவரது முறுவலைப் பிரதிபலித்தாள் பெண், கூடவே அவளது அம்மாவின் வார்த்தைகளையும்.
அறிவழகியின் இந்த துணிவான பேச்சைக் கேட்டு விநாயகம் சுதர்ஷன் இருவர் மனமும் லேசானது போல இருந்தது. இனி நல்லவையே நடக்கும் என்ற நேர்மறை எண்ணம் வந்தது.
அதற்குள் கண்ணனும் சூப்பர் மார்க்கெட் வந்துசேர, பதிவு அலுவலகத்தில் சொத்து மாற்ற ஏற்பாடு நடந்தது உண்மையென்று தெரிவித்தான், கூடவே, ரிலீஸ் டீட்-க்காக அறிவழகியோடு பேசியது தான்தான் என்றும் அது சித்தி கமலம்மா கேட்டதால் செய்ததாகவும் தெரிவித்தான்.
இரண்டு மூன்று நாட்களாக கடைகளில் இருந்த பொருட்களை சுத்தம் செய்வதில் முனைப்பானதால், விநாயகத்திடம் பேச நேரம் கிடைக்கவில்லை என்றும் கமலம்மா விநாயகத்தை கேட்டே எந்த முடிவினையும் எடுப்பார் ஆதலால், தனியே இவரிடம் இந்த பதிவினைக் குறித்து சொல்லத் தோன்றவில்லை என்று கூறி, விநாயகத்திடம் மன்னிப்பும் கேட்டான் கண்ணன். “டேய்.. போடா போடா போயி வேலைய பார்றா”, என்று அதையும் இலகுவாகவே எடுத்துக் கொண்டார் விநாயகம்.
பின் கண்ணன் வேலையை பாதியில் விட்டு விட்டு வந்ததாக சொல்லி, இந்த கடையின் மேற்பார்வையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி, அனைவரையும் வீட்டிற்கு கிளம்ப சொன்னான்.
சுதர்ஷன்,அறிவழகி இருவரையும் வீட்டிற்கு கூட்டி சென்ற விநாயகம் நடந்த எல்லாவற்றையும் எடுத்துக்கூறி கமலம்மாவைக் கண்டித்தார். பின்னர் ப்ரவீனா, சுசித்ரா, கமலம்மா மூவரிடமும் அறிவழகி விழா முடியும்வரை இங்கு இருப்பதாக முடிவெடுத்திருப்பதாகவும், மேற்கொண்டு அன்பரசனோடு கலந்து பேசி இருவரும் அவர்கள் வாழ்க்கையை தீர்மானிப்பார்கள் என்றும் சொன்னார்.
முதலில் இது சரியாக வருமா? ஊரார் என்ன பேசுவார்கள் என்று யோசித்த பெண்களை, “உங்களுக்கு சரியான்னு சொல்லுங்க, ஊரைப் பத்தி அப்பறமா பாத்துக்கலாம்”, என்று விநாயகம் ஒரே போடாக போட, “எனக்கு என்ன பிரச்சனைங்க? என் புள்ளை குடும்பம் காட்சின்னு சந்தோஷமா இருந்தா போதும் அதுக்குதான அவங்க என்ன சொன்னாலும் சரி-ன்னு சொன்னேன்”, என்று கமலம்மா முன்மொழிய, ஏற்கனவே ஸ்ரீஜாவின் அலம்பல்களிலும் அலங்காரத்திலும் ஒவ்வாமையுடனிருந்த பிரவீனாவும் சுசித்ராவும் அதை வழிமொழிந்தனர். தெரியாத பிசாசு வரப்போகிறதே என்று இருந்தவர்களுக்கு பிரிந்த தேவதை வந்தால் அது வரம் தானே?
அனைவரும் சரியென்றால் போதுமா? அன்பரசனின் எண்ணம் எதுவோ?

Advertisement