Advertisement

அத்தியாயம் 16
அன்பரசனின் பாறை போல இறுகிப் போன முகத்தைப் பார்த்த அறிவழகிக்கு முதுகுத் தண்டு ஜில்லிட்டது. கூடவே அவனின் ஏளனம் போல வந்து போன ஒரு அடங்கிய சிரிப்பு, ஏனென்று புரியாவிட்டாலும் அறிவழகியின் இதயத் துடிப்பை பல மடங்கு அதிகரிக்க செய்தது.
அடுத்து அன்பரசனின் பார்வை, அறிவழகிக்கு அருகே திகைப்புடன் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த, அவனுக்கு நிச்சயம் செய்ய இருந்த பெண்ணிடமும் அவளது அம்மாவிடமும் சென்று.. பின் இவளிடம் திரும்ப, அறிவழகிக்கு சடசடவென வியர்த்தது. ஆனால், இதெற்கெல்லாம் பயந்தால் என்னாவது? அனைத்திற்கும் துணிந்துதானே இங்கே அவன் வீட்டிற்கு வந்தோம்? என்று தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டாள். மாமா அத்தை மற்றும் வீட்டினரை சமாளித்ததுபோல, கணவனை சமாளிப்பது அத்தனை சுலபமாக இருக்கப் போவதில்லை என்பது அவனது முக பாவத்தில் இருந்து தெரிந்து கொண்டாள்.
எதுவாக இருந்தாலும் இவர்களின் முன்னிலையில் இவன் தன்னிடம் எந்த விசாரணையும் வைக்கக் கூடாது என்ற படபடப்பு ஒருபுறம் இருக்க, அவ்விரு பெண்களைப் பார்த்து, “உக்காருங்க, உங்களுக்கு ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்’ என்று சொல்லி அவர்கள் அமர்வதற்கு இடத்தைக் காண்பித்து, இயல்பாக அங்கிருந்து நகர்வது போல உள்ளே சென்றாள்.
அதற்குள் அன்பரசனின் வருகையை அறிந்த  விநாயகம், சமையல்காரர்களிடம் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை வேகமாக முடித்து, மகனிடம் வந்தார். “வா, வா, இப்பத்தான் வந்தியா? குளிச்சிட்டியா? மாடிக்கு போ, அங்க உனக்கு எல்லாம் தயாரா இருக்கு”, என்று அன்பரசனிடம் சொல்லிவிட்டு, சுசித்ராவிடம் “சுசீ கண்ணன் எங்கே?, சமையல்காரங்க சாதம் வடிக்க புதுக்கோணி கேக்கறாங்க பாக்கச் சொல்லு, அறிவு, வந்தவங்களுக்கு காஃபி டிபன் கொடு”, என்று சுவாதீனமாக வீட்டு மனிதர்களோடு சேர்த்து அறிவழகியைப் பேசி அவளது இருப்பை அங்கீகரித்தார்.
அவர் பேசியதைக் கேட்ட அன்பரசனுக்குத்தான் புசுபுசுவென வந்தது. அதற்குள் அறிவழகி ஜூஸும் காஃபியும் ட்ரேயில் வைத்து எடுத்துக் கொண்டு வந்து, ஸ்ரீஜா [அந்த பெண்ணின் பெயர்] மற்றும் அவளது அம்மாவிற்கு நீட்ட, அவர்கள் தெளிவில்லாத முகத்துடன் பானங்களை எடுத்துக் கொண்டனர். அந்த பெரிய பெண்மணி, “கமலம்மா இல்லையா?”, என்று சற்றே அதிகாரமாக கேட்டார்.
“அத்த உள்ள வேலையா இருக்காங்க. இன்னும் பத்து நிமிஷத்துல வருவாங்க”, சிறு புன்முறுவலுடன் அறிவழகி அவருக்கு பதிலளித்து திரும்பினாள்.
விமானத்தில் வந்ததால், காலையிலேயே அகமும் புறமும் சுத்தமாக்கி  வந்திருந்தான், அன்பரசன். எனவே உள்ளே செல்லும் வேலையின்றி, கூடத்தின் வாசலையொட்டி  சுவற்றோரம் இருந்த சோஃபாவில் சாய்ந்தவாறு ஒற்றை காலில் நின்றபடி இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.  அன்பரசனுக்கு, டிரே-யில் இருந்த காஃபியை நீட்ட, அவனோ அடிக்குரலில், “இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”, என்றான் அடுத்தவர்க்கு கேட்காத வண்ணம்.
ஆனால், வந்ததிலிருந்து மகன் மேல் கண்ணாக இருந்த விநாயகம் அதை கவனித்து, “அன்பு இன்னும் நீ மாடிக்கு போகல?”, என்றார். அதில் நீ இங்கிருந்து நகர வேண்டும் என்கிற உத்தரவு இருந்தது.
கால்களை மாற்றி நேராக நின்று, காஃபியை கையில் எடுத்துக் கொண்டு, “என் பெட்டி..”, என்று இழுத்தான்.
“பொட்டில்லாம் குப்புசாமி மாடிக்கு எடுத்திட்டு போயிட்டான் பாரு, ப்ரவீணா நிறைய நேரம் ஒரே இடத்துல உக்கார முடியாது, வேலை இருக்கு சீக்கிரம் ரெடியாகி வா”, மகனை விரட்டினார். குரலில் கோபம் இருந்ததோ?
அன்பரசன் பானத்தை குடித்து மாடிக்கு செல்லும் வரை யாரும் அறியாவண்ணம் , குளிர்பான டம்ளர்களுக்காக காத்திருப்பவள் போல, கையில் காலி ட்ரேயுடன் அவனைத்தான் கவனித்திருந்தாள் அறிவழகி. மனக்காயங்களை கொஞ்சமும் காட்டாத அவனின் கடின முகம், எளிதில் உணர்ச்சிகளைக் காட்டாத கண்கள் என்று இருந்தவனைப் பார்த்து வருத்தம் வந்தது. நேற்றுவரை நானாக இந்த வீட்டிற்கு வருவேன் என்று நினைத்தாவது பார்த்திருப்பேனா?
அந்த பெண் பேசியதை கேட்டதால் வந்த மனமாற்றம் இது, ஒருவகையில் அவளுக்கு நன்றிதான் சொல்லவேண்டும் ஆனால், அவள் பேசியது? மனம் நேற்றைய நினைவைத் திரும்பிப் பார்த்தது.
யாரோ யாருடனோ பேசுவதை கேட்பது அநாகரீகம் என்று மனதிற்கு கடிவாளமிட்டு அந்த அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள். அப்பெண்ணின் பேச்சு குஜராத்தியில் இருக்க, இரண்டு மீட்டர் இடைவெளியில் எதிரில் அமர்ந்திருப்பவள் பேசுவது கேட்கத்தான் செய்தது.
முதலில் பேச்சின் சாராம்சத்தை அசிரத்தையாக கவனித்தவள், ‘பேரைப் பாரு, அன்பரசன் விநாயகம்ன்னு நீட்டி முழக்கி இருக்கு, கல்யாணம் மட்டும் ஆகட்டும், அழகா அர்ஸ் விநாயக் ன்னு மாத்திக்க வைக்கிறேன்’, என்றதும்தான்  அன்பரசனைப் பற்றித்தான் இந்த பெண் பேசுகிறாள் என்பது புரிந்தது அறிவழகிக்கு. எனவே, முழு கவனமும் அப்பெண்ணின் பேச்சில் திரும்பியது.
தொடர்ந்து அந்த பெண், “மாமனார் மாமியார் தொல்லை இல்ல, நாத்தனாரும் வெளிநாட்ல இருக்கா, எனக்கென்ன குறைச்சல்? சனி ஞாயிறு ஆச்சுன்னா பெங்களூரு, மைசூர் டூர், வருஷா வருஷம் உலகம் பூரா சார்ட் போட்டு  கூட்டிட்டு போக சொல்லுவேன், இல்லன்னா நேரா பாம்பே வந்துடுவேன். கல்யாணம் ஆனாலும் பார்ட்டி, டிஸ்கொதே -ன்னு நாம எப்பவும் போல லைஃபை என்ஜாய் பண்ணலாம்.”
‘ஓ!!, இவளுக்கு பார்ட்டி பப் செல்ல கைநிறைய காசு தர, வார/வருட இறுதியில் ஊர் சுற்றிக் காண்பிக்கவென  ஒரு திருமணம்.? என்னே ஒரு கொள்கை? லாஸ் ஏஞ்சல்ஸில் பொது முடக்கத்தில் இருந்த போதும், அவன் கவனம் முழுவதும் அவனது நிறுவனத்தின் மீதும் தொழிலின் மீதும் தானே இருந்தது. கூடவே இருந்து பார்த்தவளாயிற்றே? விட்டில் பூச்சியாய்த் திரிய துடிக்கும் இவளோடு அவனுக்கு வாழ்க்கை எனில் ? ‘, இது அறிவழகியின் மனஓட்டம்.
எதிர்முனை என்ன கூறியதோ, “அதுவா ஸ்விஸ்லேர்ந்து வந்த அர்ஸ்-ஸை அவங்கப்பா வீட்ட விட்டே வெளிய துரத்திட்டாராம், அந்த முத பொண்டாட்டி மேட்டர் ன்னு நினைக்கறேன், அது என்ன வேணா இருக்கட்டும், என்னை பொறுத்தவரைக்கும் நை நை ங்கிற கிழடுகட்டைகளோட தொல்லை இல்ல, என்ன ஒண்ணு, பக்கத்துலயே இருக்காங்க, சும்மா சும்மா  என் விஷயத்துல மூக்கை நுழைச்சாங்கன்னா ஒரேடியா வெட்டி விட்ற வேண்டியதுதான்”, என்றாள்.
இதைக்கேட்டதும், அறிவழகியின் இதயத்துடிப்பு அவள் காதுகளுக்கே கேட்கும்படி அத்தனை வேகமாக அடித்துக் கொண்டது.  அன்பரசனை வீட்டை விட்டு விநாயகம் துரத்தினாரா? அதுவும் ஸ்விஸ்-ல் இருந்து வந்த உடனேயா? அப்படியானால் இத்தனை நாள் அவனும் தனியாகத்தான் இருக்கிறானா? ஏன் என்ன விஷயம்? நானா? முத பொண்டாட்டி காரணம் என்றால் அது நான்தானே? அய்யோ இன்னமும் என்னென்ன வரப்போகிறதோ தெரியவில்லையே?, என்று ஒருவித அச்சத்துடன் கையிலிருந்த புத்தகத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“……”
“அந்த கவலையே உனக்கு வேணாம் அண்ணி, யாரும் அர்ஸ்க்கு சப்போர்ட் வர மாட்டாங்க, ஏற்கனவே இது அரை லூஸுன்னு பேர் வாங்கியிருக்கு, ஹா ஹா, அவங்க நெருங்கின சொந்தக்காரங்களே இவருக்கு பொண்ணு குடுக்க தயாரா இல்லன்னா பாத்துக்கோயேன், பத்தும் பத்தாதுக்கு பொண்டாட்டி வேற ஓடிப்போயிட்டா. நல்ல பசையுள்ள இடம், நான் உள்ள வந்தா நாமெல்லாம் வந்தா மாதிரி, இனிமே நம்ம ராஜ்ஜியந்தான்”, என்று அப்பெண் சிரித்தபடி சொல்ல… அறிவழகிக்கு மயக்கம் வராத குறைதான்.
சிரிக்கும் விஷயமா இது?அன்பரசன் உனக்கு அரைலூஸா? ஊரே சொல்கிறதா? இன்னுமா? அப்படியே ஊர் சொன்னாலும், மணந்து கொள்ளப்போகும் இந்த பெண் சொல்லலாமா?
“இன்னிக்கு அர்ஸ் அம்மா வந்து அவங்க பேர்ல இருக்கறதெல்லாம் என் பேருக்கு மாத்தறாங்க, முதல்ல, அர்ஸ் அப்பா மாட்டேன்னு சொல்லுங்கன்னு முரண்டு பிடிச்சாங்க, கல்யாணமே நிக்கும்னு ஒரு மிரட்டுதான். விநாயகத்துக்கு தெரியாம எழுதி தர்றதா சொல்லி நம்ம வழிக்கு வந்துட்டாங்க. இன்னொன்னு தெரியுமா? அந்த பொண்ணை எங்க எப்படி பிடிச்சாங்களோ அவளும் வந்து ரிலீஸ் டீட் தர்றேன்னு சொல்லிட்டாளாம்”, பூரிப்பான சிரிப்போடு அப்பெண் அவள் அன்னியோடு பேசினாள்.
அதிர்ச்சிகள் ரயில் பெட்டியாய் தொடந்து வர அறிவழகி சிந்திக்கவும் மறந்தாள். மனம் பதைக்க அவள் பேசுவதை கேட்பதை மட்டும் செய்தாள்.
“எனக்குன்னு பாத்திருக்கீங்களே அர்ஸ், அவன்கிட்ட  ரெண்டாவது தடவ பேசும்போது ஒரு சந்தேகம்ன்னு கேட்டேன், உடனே நான் சர்டிபிகேட் தர்றேன் நீயே செக் பண்ணிக்கோ ன்னு சொல்றான், லூஸு, லூஸு நானே செக் பண்ணிக்கனும்னா சர்டிபிகேட் எதுக்கு? மொத்தத்துல ஒரு பணம் காய்ச்சி மரம் கூட செட்டில் ஆகப்போறேன், எல்லாத்துக்கும் உனக்குத்தான் அண்ணி தேங்க்ஸ் சொல்லணும், மும்பைல நான் காதலிச்ச அந்த அன்னக்காவடிய வெட்டி விடுன்னு சரியான நேரத்துல சொல்லி, எனக்கு புளியம்கொம்பா ஒருத்தன பிடிச்ச குடுத்துருக்க, சரி சரி அண்ணன் வர்றான், வக்கீல் வந்துட்டாருனு நினைக்கிறன், பத்திரமெல்லாம் சரி பாத்துட்டு அப்பறமா கால் பண்றேன் . பை”, என்று அப்பெண் அலைபேசியை துண்டித்தாள்.
அறிவழகி அடுத்தவர் கவனத்தை ஈர்க்காமல், மெல்ல கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள். அவளுக்கு சில விபரங்கள் தெரியவேண்டி இருந்தது. யாரை கேட்பது என்று யோசித்தவள், கண்ணன் நினைவு வர, நேற்று அவன் தானே இவளைத் தொடர்பு கொண்டான்? அவன் நம்பரும் இருக்கிறதே? ஸுதர்சன் கேள்வியாய் பார்க்க, அவனிடம் எதுவும் சொல்லாமல் ஒரு போன் செயகிறேன் என்று மட்டும் தகவல் அளித்தாள்.
அலைபேசியில் கண்ணனைத் தொடர்பு கொண்டு சம்பிரதாய சொல்லாடகள் முடித்து, “கண்ணன், தப்பா எடுத்துக்கலன்னா ஒரு சின்ன கேள்வி , விநாயகம் மாமா ஏன் அன்பரசனை வீட்டை விட்டு அனுப்பினார்?” என்று கேட்டாள்.
“அதுவா? உனக்கு விடுதலை பத்திரம் கொடுத்து உன்னை ஓடி ஒளிய வச்சான் இல்ல? அந்த கோபத்துல சித்தப்பா அவனை வீட்டில காலடி எடுத்து வைக்காதேன்னு சொல்லிட்டார். அவன் ஸ்விஸ்லேர்ந்து வந்தும் இவர் கோபம் அடங்கல, அவனை வீட்ல சேர்க்கவும் இல்ல, ஆமா, இதை ஏன் இப்போ கேக்கற? அங்க ஆபிஸ்ல தான இருக்க? வக்கீல் வந்துட்டாங்களா?”, என்று தொடர் கேள்விகளைக் கண்ணன் கேட்க… அதெல்லாம் காதில் ஏறினால்தானே இவளுக்கு?
“அப்போ அன்பு எனக்கு பத்திரம் கொடுத்தது, மாமாக்கு தெரியாதா?”
“இல்ல அறிவழகி, அவருக்கு தெரியாது, அதுலதான் சித்தப்பா ரொம்ப வெறுத்து போயிட்டாரு, அன்பு நீ போயி கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சுத்தான் வெளிநாட்லேர்ந்து வந்தான். அப்பவும் அவர் சமாதானமாகலை. நான் கொடுத்த வார்த்தையை காப்பாத்தாதவன் என் புள்ளையே இல்ல-ன்னு வெளியே போக சொல்லிட்டார். அன்பரசன் ரொம்ப கஷ்டப்பட்டான். நீங்க குடியிருந்தீஙக இல்ல? கமலம்மாக்கு சொந்தமான ஸ்டோர்ஸ்? அங்கதான் ஒரு போர்ஷன்ல தனியா இருந்தான், தானா சம்பாதிச்சு, சின்னதா கம்பெனின்னு ஆரம்பிச்சு, கூடவே வேலையும் பாத்துகிட்டு..  ஹும்.. ஆரம்பத்துல அவனை யாரும் போயி பாக்க கூட கூடாதுன்னு சொன்னாரு சித்தப்பா. இப்போ ஒரு வருஷமாத்தான் வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்கான்”.
என்ன பேசுவது? என்னை விநாயகத்திற்கு எத்தனை நாளாய் தெரியும்? கிட்டத்தட்ட ஒரு மூன்றாம் மனுஷி, எனக்காக தன ஒற்றை பிள்ளையைத்  தள்ளி வைத்துள்ளார், இவரைத்தான் நான், ‘தன் பெண்ணாக இருந்தால் இப்படி விடுதலைப் பத்திரம் அனுப்புவாரா?’, என்று கோபப்பட்டேன்.  கேள்விப்பட்ட விஷயத்தின் கணம் தாளாமல் தொண்டை அடைக்க.. அந்த அழுத்தத்தை அப்படியே விழுங்கினாள்.  காரணம் கண்ணனிடம் இன்னொரு விஷயத்தையும் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது..

Advertisement