Advertisement

“இருக்குங்க இருக்கு. நீங்க கேட்டதுக்கு மேல நான் அவகிட்ட பேசிட்டேன். ஒரே வார்த்தைல ‘என்னால கேவலப்பட முடியாது’ங்கறா, பிடிவாதம்தான், ரொம்ப பிடிவாதக்காரிதான், ஆனா, அதுக்காக அவள விட்டுத் தர முடியாதுங்க”, என்று குரல் கமற எஸ்தர் கூற..
அவரை இழுத்து அருகில் அமர வைத்து, “தரு, நான் எப்படா அவளை விட்டுத்தா -ன்னு சொன்னேன்? கொஞ்சம் பிடிவாதத்தையும் ஈகோவையும் குறைச்சுகிட்டா, நல்ல வாழ்க்கை அமைச்சுக்கலாம்னுதான சொன்னேன்?”, கையைப் பிடித்து கேட்க… தரு பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.
“எப்போ பிளைட்-ன்னு அறிவு கிட்ட கேட்டு வை, பசங்க எங்க?”
“மேல அத்தை கூட இருக்காங்க, சின்னவ தூங்கறான்னு நினைக்கறேன்”
“ம்ம். இப்போ நல்லா தூங்கி நைட் பூரா முழிச்சிட்டு இருப்பா, போ போயி ஒரு நல்ல காஃபி போட்டு கொண்டா, அக்ஷிய கீழ அனுப்ப சொல்லு”
தரு கிட்சனுக்கு வர, அவள் கையில் காஃபி கோப்பையை குடுத்து, “இது உனக்கு,  முதல்ல நீ குடிச்சிட்டு அப்பறம் அண்ணனுக்கு தருவியாம்”, என்றாள் அறிவழகி.
“எப்டிறீ?”
“அதான் இத்தனை நாளா கூடவே இருக்கேனே? சுதா கோபம் எனக்கு பழகிடுச்சு”
“அவர் சொல்றது சரிதானேடி?”
“அம்மா தாயே,”, தன்னை நோக்கி கைகாட்டி,” ஒரு நாளைக்கு ஒருதரோட அர்ச்சனை போதும், நான் மேலே மாடிக்கு போறேன்.. ஆங்.. இன்டர்காம்-ல அக்ஷிய கீழ வர சொல்லிட்டேன். நீ வேற மறுபடியும் சொல்லாத.”, சொல்லியவாறே அறிவழகி படியேற ஆரம்பித்தாள்.
“டின்னர் முடிச்சுட்டு போயேன்”
“இப்ப பசி இல்ல இன்னும் ஒரு மணி நேரமாகும்”, என்று விட்டு அறிவழகி மாடிக்கு செல்ல..
தரு இரவு உணவை தயார் செய்யவென கிச்சன் நுழைந்தாள். அங்கே சப்பாத்திக்கு மாவு பிசைந்து தயாராக வைத்து, குருமாவையும் கூட்டி வைத்து, வெண்டைக்காயையும் நறுக்கி தயாராக வைத்திருந்தாள் அறிவழகி. இனி வதக்கி தாளிக்க வேண்டிய வேலையை மட்டும் தருவிற்கு விட்டு சென்றிருந்தாள்.
மாடிக்கு சென்ற அறிவழகி சென்னையில் பதிவுத்துறைக்கு தேவையான அனைத்தையும் மெதுவாக ஒன்றொன்றாக எடுத்து வைத்தாள். கீழே தோழிக்காக முகத்தில் காட்டிய தெளிவு இப்போது இல்லை. மனம் முழுவதும் அன்பரசனுக்கு திருமணம், என்று கமலம்மா சொன்ன தகவலே சுழன்றது. . ம்ம்.. இன்னமும் கொஞ்ச நாளில் நான் வெறும் அறிவழகி மட்டும்தான், அன்பரசனை உரிமையோடு கொண்டாட முடியாது.
நல்லது, இனியாவது அவன் மகிழ்ச்சியோடு இருக்கட்டும். என்று எண்ணியவாறே, சோஃபாவில் அன்பரசன் எப்படி படுத்துக் கொள்வானோ அதே போல படுத்துக் கொண்டாள். அந்த சோஃபா, அன்பரசன் இவளது வீட்டில் உபயோகித்தது, அதை மட்டும் விற்காமல் எடுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.
பேசாமல் சென்னை போனதும் அன்பரசனிடம் சென்று, எனக்கு வாழ்க்கை கொடு என்று கேட்டு விடலாமா?, என்று தோன்ற  “எதுக்கு? இத்தன நாள் இல்லாம கெடுத்த, இப்போ இருந்து கெடுக்க போறியா? அவனுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சுன்னா, பொண்ணு பாத்து, அவனுக்கு பிடிச்சு ஓகே சொல்லி முடிவாயிருக்குன்னு தான அர்த்தம்? வாய மூடிட்டு அவங்க என்ன சொல்றாங்களோ அத செஞ்சிட்டு கிளம்பி வா”, மனம் கட்டளையிட்டது.
“கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை என்று மட்டும் நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இங்கு சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
++++++++++++++
காலையில் விசாகபட்டினத்தில் இருந்து கிளம்பி சென்னைக்கு ஒன்பது மணியளவில் வந்து விட்டார்கள். பத்தரை மணிக்கு பதிவுத்துறை அலுவலகத்துக்கு வரச் சொல்லி தகவல் வந்திருக்க, இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்வது? விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டியதுதான் என்று நினைத்து இருக்கையைப் பார்த்து அமர, ப்ரவீணாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ, ப்ரவீனா..”
“ஹாய் அழகி வந்தாச்சா?”
“யா, ஜஸ்ட் இப்போதான்”
“லக்கேஜ் எதுவுமில்லல்ல? அப்போ அப்படியே வெளில வந்துடுங்க, எக்சிட் (Exit) கிட்ட ட்ரைவர் வெயிட் பண்றாங்க”
“ஏய்… இதெல்லாம் எதுக்கு? ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ்க்கு போகத் தெரியாதா என்ன?”, என்று கேட்டாள். ஆனாலும், அறிவழகி சுதர்ஷன் இருவரும், விமான நிலையம் விட்டு வெளியேறி, ப்ரவீனா ஏற்பாடு செய்திருந்த காரில் ஏறி சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர்.
சொன்ன நேரத்தை விட முன்னதாகவே அந்த அலுவலகத்தை அடைந்திருந்தனர். அருகில் இருந்த வழக்கறிஞர் [அவர்தான், இந்த பதிவிற்கான பத்திரங்கள் எல்லாம் தயார் செய்கிறாராம்] அலுவலகத்தில் அமர்ந்திருக்குமாறு ப்ரவீனா பேசியில் கூற, இருவரும் அங்கே சென்றனர். சுதர்ஷனுக்கு போன் வர, வெளியே சென்று பேசி வருவதாக கூறி சென்றான்.
அறிவழகி, அந்த பெரிய குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து எதிரே இருப்பவர்களை அளவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு நான்கைந்து பேர் இருந்தனர். இருவர் அவ்வலுவலகத்தில் பணி புரிபவர் போலும், கைகளில் காகித கத்தைகள் மற்றும் கோப்புக்களோடு அங்குமிங்கும் நடந்து, தட்டச்சரிடம் மாற்றங்கள் செய்யச் சொல்லி பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர்.
அனைவரின் முகத்திலும் முக கவசம் இருந்தது. கைககளில் கையுறை அணிந்திருந்தனர். கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்திருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் கவனமாக இருந்தனர். அரசும் சில பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
எதிரே ஆண் பெண் இருவர் அமர்ந்திருந்தனர், முக சாயல் இருவருக்கும் ஒரே போல் இருக்க, அண்ணன் தங்கையாய் இருக்கும் என்று அறிவழகி யூகித்தாள். அந்தப் பெண் அழகாயிருந்தாள், அதை மற்றவர்கள் நிச்சயமாக பாராட்ட வேண்டும், திரும்பி ஒருமுறையேனும் அவளை பார்க்கவேண்டும் என்றே உடையணிந்திருந்தாள்.
போட் நெக் வைத்த, உள்ளே அணிந்துள்ள ஸ்லிப் தெரியும் வண்ணம் சல்லடையாக, தொளதொளப்பாக ஒரு பின்னலாடை டி ஷர்ட், முட்டியில் அதற்கு கீழே அங்கங்கே கிழித்து விடப்பட்ட ஜீன்ஸ், அதற்கு மேட்சிங்-காக அவளது மாஸ்க் & கையுறை. மாஸ்க் கழுத்தில் இருந்தது. போட்டிருந்த லிப்ஸ்டிக் கலைந்து விடும் என்று கழுத்துக்கு தள்ளி இருப்பாள் போலும். வெளிநாடுகளில் கண்ணை உறுத்தாத நளினமான ஒப்பனைகளை பார்த்த அறிவழகிக்கு  இங்கே சென்னையில் இவளது அலங்காரம் சற்று அதிகப்படியாக தோன்றியது.
உடன் இருந்த அவளது அண்ணன் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஐந்து நிமிடத்திற்கொருமுறை மணி பார்த்தான். “ஹலோ, கிளம்பிடீங்களா?”, “பை பாஸ் வந்துடீங்களா?”, “சிக்னல்-ல திரும்பின உடனே சொல்லுங்க”, என்று பத்து நிமிடத்துக்கு ஒருமுறை யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். நிச்சயமாக மறுமுனையில் இருப்பவன், ஒருவேளை காரை நடத்திக் கொண்டிருந்தால், நேரே வந்து திட்டுவான். மனிதன் ரோடை பார்ப்பானா? அல்லது இவனோடு கதையளப்பானா?, என்று அறிவழகிக்குத் தோன்றியது.
சரி யாரோ என்னமும் செய்தால் நமக்கென்ன, அன்பரசன் இங்கே வருவானா? அவனைப் பார்க்க முடியுமா? நீண்ட பெருமூச்சு விட்டாள். அவனுக்கு முடிவாகி இருந்த பெண் மும்பையில் கட்டுமான நிறுவன அதிபரின் மகளாம். ப்ரவீனா நேற்று பேசும்போது, பேச்சு வாக்கில் சொன்னது.
தீடீரென, குஜராத்தியில் யாரோ பேசுவது கேட்க, எதிரே இருந்த அந்த கிழிந்த ஜீன்ஸ் போட்டிருந்த பெண் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட பத்து நினைந்து நிமிடங்கள் நீடித்த அந்த பேச்சை முதலில் சுரத்தின்றி கேட்ட அறிவழகி, அன்பரசன் என்ற பெயர் அடிபட்டதும் உன்னிப்பாக கேட்க தொடங்கினாள். கையில் ஒரு புத்தகம் இருக்க, அதை படிப்பது போல புலன்கள் அனைத்தையும் அந்த பெண்ணின் உரையாடலில் கொடுத்திருந்தாள்.
சுதர்ஷன் அலைபேசி பேச்சை முடித்து அலுவலகத்திற்குள் வர, அவன் வரும்முன் நேரே அவனை அடைந்து “அண்ணா, நாம போகலாம் வாங்க, வெளிய கொஞ்சம் வேலை இருக்கு”, என்று கூறி சுதர்ஷனையும் கூட்டிக் கொண்டு வெளியேறினாள்.
அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அறிவழகியை சுதர்ஷன் என்ன விஷயமென்று கேட்க, “சில டீடெயில்ஸ் தெரிஞ்சிக்கணும், யாரை கேக்கறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”, என்றவள், அலைபேசியை எடுத்து ஒரு போன் செய்தாள்.
சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, சுதர்ஷனை பார்த்து, “அண்ணா ஒரு இடத்துக்கு போகணும், டாக்சி இல்ல ஆட்டோ பாருங்க, போலாம்”, என்றாள். அறிவழகியின் முகம் தீவிர சிந்தனையைக் காட்ட.. சுதர்ஷன் ஏதும் கூறாமல் அவள் சொன்னபடி செய்தான்.
அவள் சொன்ன இடத்தை அடைந்ததும் சுதர்ஷன் ஆச்சர்யப்பட, இருவரும் உள்ளே சென்றனர்.
+++++++++++
மறுநாள், காலை முகூர்த்த நேரம் நெருங்கி இருக்க, விநாயகத்தின் இல்லதிற்கு மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டும் [விழாக்களுக்கு 20 பேர் மட்டுமே அனுமதி அல்லவா?] ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.
அந்த ஜீன்ஸ் பெண் இன்று பட்டாடை உடுத்தி, நேர்த்தியான அலங்காரத்துடன், அவளது அண்ணன் மற்றும் ஒரு நடுத்தர வயது பெண்மணி அநேகமாக இருவரது அன்னையாக இருக்கும், மூவரும் அவர்கள் வந்த காரில் இருந்து இறங்கி விழா இல்லத்துக்கு வந்தனர்.
உள்ளே வந்த அவர்களை “வாங்க வாங்க.. “என்று எதிர்க்கொன்டு அழைத்தது, அறிவழகி.
இவளை எங்கோ பார்த்தாற்போல் இருக்கிறதே என்ற எண்ணத்துடன், “நீங்க….?”, என்று அந்த பெண் இழுக்க…
“நான் மிஸ்ஸர்ஸ். அறிவழகி அன்பரசன், ப்ரவீணாக்கு அண்ணி”, என்று மலர சிரித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, அப்பெண்ணின் முகம் வெளிறியது.
வேலை விஷயமாக நாக்பூர் சென்றிருந்த அன்பரசன் தங்கையின் வளைகாப்பிற்காக, அடித்து பிடித்து ஒருவழியாக நேரத்திற்கு வந்து  விடுவிடுவென வாசல் தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தவனுக்கும் அறிவழகியின் “மிஸ்ஸர்ஸ். அறிவழகி அன்பரசன்”, என்ற குரல் கேட்க,  வேகமாக உள்ளே நுழைந்தவன், அங்கே அறிவழகியைப் பார்த்ததும் முகம் கருக்க நின்றான்.
±++++++++++++++++
சீக்கரம் முடிக்கனும்னு தான் பாக்கறேன், ஆனா எதாவது வேலை நடுல வந்து பிரேக் ஆகுது. sorry.

Advertisement