Advertisement

அத்தியாயம் 15
“அவதான் சொல்றான்னா உனக்கெங்க போச்சு அறிவு?, யார் சொன்னாலும் போய் கையெழுத்து போட போவாளா?”, அடிக் குரலில் சுதர்ஷன் தருவுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தான். சரியாக சொல்வதென்றால், மனைவியை திட்டிக் கொண்டிருந்தான்.
“இல்லங்க, கண்ணன் தெரிஞ்சவர்தான், கூடவே கமலம்மாவும் போன்ல பேசினாங்க”
“எப்படி இவளை காண்டாக்ட் பண்ணுனாங்க? இவ நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும்?..”
“அது.. பிரவீனாக்கு அறிவழகி நம்பரை அன்பு கொடுத்திருக்காங்க போல.. இப்போ இல்ல.. அங்க யூ.எஸ். ல, இருக்கும் போதே குடுத்ததா சொன்னா. ஒருவேளை அதுல..?”, தரு சற்று யோசித்து சுதாவிடம் பேசினாள்.
“ம்ப்ச். புத்தியோட பேசு தரூ..  யூ.எஸ் நம்பர் இப்ப அவகிட்ட இல்ல, நம்ம எல்லாரோட ஸிம்மும் மாத்தியாச்சு”,
“ஆமால்ல. எப்படி பேசினாங்கன்னு தெரிலயே?”, தரு முழித்தாள். அவள் முழிப்பதைப் பார்த்து, ‘இவ வளரவே மாட்டா’என நினைத்து இடவலமாக தலையை அசைத்தவாறே, “எங்க அறிவழகி?”, என சுதர்ஷன் கேட்க..
“உங்க பைக் சத்தம் கேட்ருக்கும், இப்போ வந்துடுவா”, கணவனின் கோபம் நியாயமானது என்பது தெரிந்ததால், நிதானமாக பதில் சொன்னாள்.
இவர்கள் அனைவரும் இப்போது வசிப்பது இந்தியாவில். அனைவரும் அமெரிக்காவில் இருந்து வந்து இருபது நாட்கள் முடிந்திருந்தது.
++++++++++++++++++++++
லாஸ் ஏஞ்சல்ஸ்-ல்  அன்பரசன் அறிவழகியை கடிந்து பேசி சென்று, இரு வாரங்கள் கழிந்திருந்தது.
அறிவழகி, ஒரு தவம் செய்வதுபோல, எதிலும் பற்றில்லாமல் வாழ்க்கையை அதன் போக்கோடு செல்ல ஆரம்பித்தாள். அன்பரசன் சுதாவோடு பேசியதாக அறிந்தாள். சுதாவும் தருவும் அறிவழகியிடம், இருவருக்கும் என்ன பிணக்கு என்று  துருவித் துருவி கேள்வி கேட்க, “எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வரலன்னா விட்டுடுங்களேன், இப்போ என்ன கல்யாணம் பண்ணினவங்க எல்லாரும் சேந்துதான் இருக்காங்களா? உங்களுக்கு கஷ்டம்னா சொல்லிடுங்க, நான் இங்கயே இருக்கேன்”, என்று ஒரே பேச்சில் முடித்துவிட்டாள். இந்த பேச்சுவார்த்தைகள் சுதர்ஷன் வீட்டில் நடக்க, மாமா மாமிக்கும் அறிவழகி அன்பரசன் விஷயம் தெரியவந்தது. அறிவழகியின் மேல் அக்கறை வந்தது ஆனால், வெளிப்படுத்தினாலோ, அறிவுரை சொன்னாலோ பரிதாபம் என்று தவறான புரிதல் வரும் என்பதால், ஏதும் கூறாமல் இருந்தனர்.
சில நாட்களுக்கு பிறகு, இந்தியா செல்ல விரும்புகிறவர்கள் இணையத்தில் விண்ணப்பிக்குமாறு இந்திய தூதரகத்தால் அறிவுறுத்தப்பட, இரண்டு அக்ஷிக்களும் அமெரிக்க பிரஜை ஆதலால் இருவரையும் தாயநாடு கூட்டிவர மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளுக்காக சுதர்ஷன் அலைய, அறிவழகி வேலையை ராஜினாமா செய்தாள்.
வீடு மற்றும் அறைகலன்கள், பொருட்கள் விற்பனை, சுதர்ஷனின் அலுவலக கணக்குகளை முடிப்பது, தனது வங்கியில் இருந்து வரவேண்டிய தொகையை சரிபார்த்து , முடிந்தவரை அத்தனையும் பணமாக்குவது என்று சுற்றினாள்.
மற்ற நேரத்தில் தரு மற்றும் தனது வீட்டில் அத்தியாவசியமான பொருட்களை பேக்கிங் செய்வது,  உருப்படியாக இருந்த மற்றவற்றை தெரிந்தவர்களுக்கு கொடுப்பது என்று பரபரப்பாக இருந்தாள். வேலை செய்தால், மனதின் உளைச்சல் வெளியே தெரியாதே?
சுதர்ஷனின் வீட்டை அவனது வாடிக்கையாளர் ஒருவர் நியாயமான விலைக்கு கேட்க, இந்தியா செல்லும்வரை சுதர்ஷன் குடும்பத்தோடு அதே வீட்டில் தங்கி இருப்பதாக ஒப்பந்தம் செய்து, தொகை கைமாறியதும் பதிவும்  செய்து கொடுத்துவிட்டான்.
ஆனால் அறிவழகியின் வீட்டிற்கு இவர்கள் எதிர்பார்க்கும் விலை படியாததால், அதை விற்காமல், வடஇந்திய குடும்பம் ஒன்றுக்கு வாடகைக்கு விட்டு வரவேண்டியதாகியது. அவர்களும், ஒருவேளை அவர்களது வேலை பறிபோனால், இந்தியா வந்து விடும் எண்ணத்தில் இருப்பதாகவும், அவ்வாறு நேர்ந்தால் வீட்டை காலி செய்து விடுவோம் என்று கூறியே வாடகைக்கு வந்திருந்தனர்.
சுதர்ஷன் அறிவழகியிடம், வீட்டைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம், இல்லையெனில் நண்பரை பார்த்துக் கொள்ள சொல்லலாம், தவிரவும் அங்குள்ள பங்கு வர்த்தகத்தை / சிற்சில விடுபட்டுள்ள பண விவகாரங்களை கவனிக்க கலிபோர்னியா வந்தால், தங்குவதற்கு எதுவாக இருக்கும் என்று கூறி, இதற்காக பிரயாணத்தை தள்ளிப்போட முடியாது என்று வலியுறுத்த, அவனை மறுக்கமுடியாமல் அறிவழகி கிளம்ப வேண்டியதாயிற்று. என்ன ஒரு ஆறுதல், வாடகை வருமானம் கணிசமாக வரும் என்பதே.
அந்த நேரத்தில் இந்தியாவிலும் ஊரடங்கு சற்றே தளர்த்தப்பட்டிருந்தது. மனித உயிர்களை விட பொருளாதாரம் முக்கியமான இடத்தை ஆக்ரமித்து அரசாங்கங்களை வழி நடத்த ஆரம்பித்த பின் வைரஸாவது? ஊரடங்காவது?.. எல்லாம் பணத்திற்கு பின்தான். இனி நம் உயிர் நம் கையில் [அரசாங்கம் ‘வாங்க பழகலாம்’ என்று கை கழுவி விட்டது, நாம் மறக்காமல் கை கழுவினால், அடுத்த தேர்தலில் ஓட்டு போடலாம், இல்லாவிட்டால் வேறு யாரவது நம் பெயரில் கள்ள ஓட்டு போடுவார்கள் :> :>]
விமானங்களும் வந்தே பாரத் திட்டத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்பதாக அறிவிக்க,  முதல் ஆளாய் சுதர்ஷன் விண்ணப்பித்து விட்டான். சின்னஞ்சிறு பிள்ளைகளும், வயதானவர்களும் இருந்ததால் முன்னுரிமை கிடைக்க… இதோ அனைவரும் இந்தியா வந்து இருபது நாட்களாகிவிட்டது.
அறிவழகி தனியே வசிப்பதென முடிவெடுத்து அடுக்குமாடி குடியிருப்பைத் தேட துவங்க, அதெல்லாம் கூடாது, தனியாக இருப்பது பாதுகாப்பில்லை என்று மாமா மாமி இருவரும் கண்டித்தனர். சுதாவிற்கு தங்கை என்றால் நீ எங்கள் மகள், அதனால் ஒன்றாக  வீட்டிலேயேதான் இருக்க வேண்டும், அப்படியும் தனியாக இருக்க இஷ்டப்பட்டால் மேலே இரண்டாம் தளத்தை உபயோகித்துக் கொள்ளுமாறு வலியுறுத்த, வேறு வழியின்றி அறிவழகியின் வாசம் சுதர்ஷனின் வீடு என்பதாயிற்று.
விசாகப்பட்டினம் வந்து அனைவரின் தனிமைப்படுத்துதல் முடிந்து, சுதர்ஷன் அலுவலகம் வைக்க இடம் தேடிக் கொண்டிருந்தான். அறிவழகி வீட்டிலிருந்தபடியே பங்கு வர்த்தகம் பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஊரடங்கு முற்றிலும் ஓய்ந்த பின்னர் மெதுவாக வேலை தேடலாம் என்று தள்ளிப் போட்டிருந்தாள்.
அப்படியொரு நாளின் மாலையில்தான் கண்ணன் [அன்பரசனின் பெரியப்பா மகன்] அறிவழகியைத் தொடர்பு கொண்டு, அவளிடமிருந்து சில கையெழுத்துக்கள் தேவைப்படுகிறது என்றும் அதற்காக சென்னை வருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தான்.
கமலம்மாவும் தன மகனின் எதிர்காலம் அறிவழகி வருவதில்தான் உள்ளது என்பதுபோல பேசியதால், வருகிறேன் என்று அவர்களுக்கு சொல்லி அழைப்பை துண்டித்தாள் அறிவழகி. அந்த விபரத்தை தருவிடம் தெரிவித்து, பயணசீட்டு முன்பதிவு செய்யப் போவதாக, மாடிக்கு சென்றிருந்தாள்.
அலுவலகத்திற்காக இடம் தேடி அலைந்து இரவு ஏழு மணி சுமாருக்கு வீட்டிற்கு வந்த சுதர்ஷனிடம், தரு மேற்கண்ட தகவல்களை சொல்ல, தன்னைக் கேட்காமல் எப்படி அறிவழகி சென்னை செல்வதாக முடிவெடுக்கலாம் என்று  மனைவியை கடிந்து கொண்டிருந்தான் சுதர்ஷன்.
“என்ன தருவோட சண்டை?, குரல் மாடி வரைக்கும் கேக்குது?”, கேட்டது நம் நாயகியேதான்.
“என்ன விஷயம்? சென்னைக்கு போறியாம்?”
“ஆமா, போறியா இல்ல போறோம். உங்களுக்கும் சேர்த்து இப்போதான் டிக்கெட் புக் பண்ணினேன்”
“அவங்க எப்படி உன்னை காண்டாக்ட் பண்ணினாங்க?”
“ப்ரவீனா என்னோட fb friend. மெசன்ஜர்-ல வந்து நம்பர் கேட்டா. கொடுத்தேன்.”
“நான் எப்போ சென்னை வர்றேன்னு சொன்னேன்? நீ என்னை எப்போ கேட்ட?”, சுதர்ஷன், தனியாக அறிவழகி போகவில்லை என்பதிலும், துணையாக தன்னையும் கூட்டிச் செல்ல முடிவெடுத்ததையும் எண்ணி கோபம் குறைந்து சற்று இலகுவானான்.
“பின்ன, தனியாவா போ முடியும்? அண்ணன்னு சொல்லி கூடவே வச்சிருக்கீங்க இல்ல?, அறிவழகியும் கிணடலாகவே பேச..
“விளையாடத அறிவு, என்ன விஷயம்னு சொல்லு”
“ஒரு ரிலீஸ் டீட் வேணுமாம், அதுக்குத்தான் கூப்பிடறாங்க.”
அவள் கூறுவது புரியாமல் கேள்வியாக சுதர்ஷன் பார்க்க…
“அதாவது அவங்க சொத்து மேல, நான் மருமகள்ன்னு எந்த உரிமையும் கேக்கமாட்டேன்னு ஒரு விடுவிப்பு பத்திரம் பதிவு பண்ணணுமாம். சரி வர்றேன்னு சொல்லிட்டேன்”, சாதாரணமாக தகவல் போல சொன்னாள்.
அவளை அழுத்தமாக பார்த்த சுதா, “போயே ஆகணுமா?”, என்றான்.
“ம்ம்”, என்று அறிவழகி தலையசைக்க..
“ஒரு தடவை அன்பு கூட பேசிப்பாரேன், அவன்கிட்டயும் அதான் சொல்றேன், ஒரே ஒருதடவை உங்க ஈகோவை தள்ளி வச்சிட்டு வாழறதுக்கு உருப்படியா யோசிங்கடான்னு.. சே..”, ஜன்னலை வெறித்தபடி,  கவலையாக கூறினான் சுதர்ஷன்.
“அவருக்கு கல்யாணம் பேசியிருக்காங்க, நாளான்னிக்கு அன்பரசனோட சிஸ்டர் ப்ரவீனா வளைகாப்பு முடிச்சிட்டு, அப்படியே வீட்டோட ஒப்புத் தாம்பூலம் மாத்திக்கறாங்களாம்”, அறிவழகி மரத்துப் போன குரலில் தகவலாகக் கூறினாள்.
சுதர்ஷன் நிமிர்ந்து அவளை பார்த்துவிட்டு, “இதை யாரு சொன்னா?”
“அவங்கம்மா..”,என்று விட்டு, “பொண்ணு வீட்ல இந்த டீட் முடிஞ்சாத்தான் நிச்சயத்துக்கு ஒத்துப்பாங்களாம்”, என்று கூறினாள்.
“ச்சே. என்னவோ பண்ணித் தொலைங்க”, என்று கூறி கோபமாக எழுந்து உள்ளே அறைக்குச் சென்று விட்டான்.
பின்னோடே சென்ற தருவிடம், “இவதான் ஈகோயிஸ்ட் ன்னு பாத்தா.. அன்பு இவளுக்கு ரெண்டு பங்கு இருக்கான், யூ எஸ் ல சேர்ந்து இருக்கும்போது பேசி அவங்க லைஃபை சரி பண்ணிப்பாங்கன்னு பாத்தா.. ரெண்டு அரைவேக்காடுகளும் ஆபிஸ் வேலைய வீட்ல பாத்திருக்காங்க. திடீர்னு ஒருநாள், வேற இடத்துக்கு போயிட்டேன், சீக்கிரமா ட்ரைனிங் கொடுத்துட்டு கிளம்பிடுவேன்-ன்னு அன்பு போன்ல சொல்றான், அதையும் இவ சொல்லல. உனக்காவது சொன்னாளா-ன்ணு கேட்டா.. ம் ன்னு மென்னு முழுங்கற”, வேறு யாரிடம் காய முடியும்? மனைவிதான் கிடைத்தாள், பொரிந்தான்.
” அவனுக்கு பத்தே நாள்ல டவுனி-ல [L.A  (downey)], தங்க வீடு ஏற்பாடு பண்ணிட்டாங்க, நான்தான் போகாதன்னு சொல்லி இவ பழக்க வழக்கமெல்லாம் எதெதுன்னு சொல்லிக்கொடுத்து… எல்லாம் வேஸ்ட். அந்த மார்டடினஸ் என்னடான்னா, ஆபிஸ்க்கு வந்து சண்டை போட்டாரே?  அவர்கூடத்தான் அறிவழகி இந்தியா போகப் போறாங்களான்னு என்கிட்டே கேக்கறான்? அன்பு ஆபிஸ் போயி சண்டை போட்டத பத்தி உன்கிட்ட சொன்னாளா? அவனும் இதை பத்தி மூச்சு விடல. ரெண்டு பேரும் பயங்கர அழுத்தம்.”
“ம்ம்ம்”
“உனக்கு ம்ம் கொட்றதத்தவிர வேற எதுவும் தெரியாதா?  உன் friend தான அவ? அவளை எதுவும் கேக்க மாட்டியா?”
தரு அமைதியாக நிற்க.. “வாய திறந்து பதில் சொல்லு? உனக்கு அவமேல அக்கறை இருக்கா இல்லையா?”, என்று இரைந்தான்.

Advertisement