Advertisement

அத்தியாயம் 14 2
வீட்டுக்கு சென்ற அறிவழகி நேராக சமையலறைக்குள் சென்று ஒரு அலமாரியை திறந்தாள். ஒற்றை ஊதுபத்தி ஸ்டாண்ட், சிறியதாக இரண்டு வெள்ளி விளக்குகள், காஞ்சி பெரியவர் வணங்கியபடி இருக்கும் காமாட்சியம்மன் படம் அலமாரியின் நடுவே இருந்தது. கூடவே எண்ணெய், திரிநூல்கண்டு, சந்தனப்பொடி, குங்குமம், திருநீறு டப்பாக்கள் இருந்தது.
அதீத கடவுள் நம்பிக்கையும், சடங்குகளும் அவளுக்கு தெரியாது. வாரத்தில் வெள்ளி செவ்வாய் விளக்கேற்றுவாள், அமைதியாக அம்மன் படத்தின் முன் உக்கார்ந்து கண்ணை மூடிக்கொள்ள, தானாகவே அம்மாவின் குரலில், காமாட்சியம்மனின் விருத்தம் கேட்கும். தினமும் அவர் சொல்வதைக் கேட்டு கேட்டு இவளுக்கே மனப்பாடமாக தெரியும், ஆனாலும் வாய் விட்டு சொல்ல பழகவில்லை.
இன்றும்  அந்த சக்தியின் முன் அமர்ந்து, அமைதியாக கண்களை மூடிக்கொண்டாள். கண்ணீர் கன்னத்தில் உருண்டோடியது. மனம் இறையுடன் பேசியது.
ஒரு வருடம் இருக்குமா அது நடந்து?
ஒருநாள், வங்கியில் வேலை முடித்து கீழே இறங்க அறிவழகி மின்தூக்கியில் ஏறியபோது, ஆஜானுபாகுவாக அதில் ஒருவன் மட்டுமே இருந்தான். அந்த கட்டடம் முழுவதுமே ஏகப்பட்ட நிறுவனங்கள், எந்த தளத்தில் இருந்து வந்தவனோ அவன் இவளுக்கு தெரியாது. உள்ளுணர்வு அவனது பார்வையே சரியில்லை என எச்சரிக்க.. அறிவழகியின் கை தானாக கைப்பைக்கு சென்றது.
இவள் யூகித்தபடி, திடுமென இவளை நெருங்கி “யூ ஏசியன் சிக்ஸ் ஆர் வெரி செக்ஸி”, என்ற சொற்களுடன் இவள் உடலை மொத்தமாய் உரசியவாறு அணைத்து மேலும் முன்னேற நினைக்க, அவன் கால்களுக்கு இடையே அவளது முழங்காலால் முழு வேகத்துடன் ஓங்கி ஒரு உதை விட்டாள். அவன் சுருண்டு இவளை விட்டு ஒரு அடி நகர்ந்தான்.
அந்த இடைவெளியில் பையில் இருந்த பெப்பர் ஸ்பிரேயை எடுத்திருந்தாள். மீண்டும் தப்பான நோக்கில் முன்னேறினால், அவன் முகம் முழுவதும் பெப்பர் ஸ்ப்ரேயை பீய்ச்ச தயாராக நிற்க, நிமிர்ந்து அவன் இவள் கையிலிருந்த தெளிப்பானைப்  பார்த்ததும், “நோ நோ டோன்ட்”, என்றான். அதற்குள் மூன்றாவது தளம் வந்துவிட்டது. அங்கே இருவர் மின்தூக்கியில் ஏற, சற்று ஆசுவாசமானவள், கீழே வரும் வரை தெளிப்பானை கையிலேயே வைத்திருந்தாள். தரைத்தளம் அடைந்ததும், கூட்டத்தைக் கடந்து செக்யூரிட்டியை நோக்கி அறிவழகி நகர, சட்டென அவள் முன் வந்தவன் வழியை மறித்தாற்போல் நின்று, “தயவுசெய்து மன்னித்துவிடு”, என்றான். அறிவழகி அவனை முறைக்க, “ப்ளீஸ் எனக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள், நீ புகாரளித்தால் என் வேலை போய்விடும்”, என்று கெஞ்சினான்.
இவள் அவனை அலட்சியப்படுத்தி தொடர்ந்து நடக்க, அலைபேசியின் திரையில் இருந்த இவனது குடும்ப புகைப்படத்தை காண்பித்து, “ப்ளீஸ்.. ப்ளஸ். இதை ஒருமுறை பார்த்த பின் போலீசுக்கு போ”, என இறைஞ்சினான்.
அதற்குள் பாதுகாவலர்கள் அறை வந்துவிட, அறிவழகியை பின் தொடர்ந்து வந்தவன் ‘இனி தப்பிக்க முடியாது, நடந்தது மின்தூக்கியின் கமெராவில் பதிவாகி இருக்கும், சோஷியல் செக்யூரிட்டி நம்பரை வைத்து  எப்படியும் என்னைப் பிடித்து விடுவார்கள், எப்படி மனைவி மக்கள் முகத்தில் விழிப்பது?’, என்ற அவமானத்துடன்  தலைகுனிந்து நின்றான்.
அங்கே பாதுகாவலரிடம், “பத்து நிமிடம் முன்பு நான் வந்த ஏழாம் நம்பர் மின்தூக்கியின் சிசிடிவி பதிவுகள் உடனே வேண்டும்”, என்று அறிவழகி கேட்க, அங்கு வங்கியின் ஊழியர் என்ற முறையில் நன்கு பரிச்சயமானவள் ஆதலால், பதிவு உடனடியாக அறிவழகியின் அலைபேசிக்கு அனுப்பப் பட்டது. அப்பதிவினை அனுப்பிய பாதுகாவலர் அறிவழகியிடம், “புகாரளிக்கிறீர்களா?”, என்று கேட்டார்.
“இல்லை, ஆனால் இதன் ஒரு காப்பி எப்போதும் உங்கள் மெமரியில் இருக்கட்டும்”, என்று கூறி இவனிடம் திரும்பி, “இந்த மன்னிப்பு உன் பிள்ளைகளுக்காக”, என்று விட்டு, அலைபேசியை காண்பித்து, ‘இது என் பாதுகாப்பிற்காக”, என்று சொல்லி வீடு வந்தாள்.
அது.. அந்நிகழ்வு,  ஒரு விபத்தாக அறிவழகியின் மனதில் பதிந்ததே தவிர, அவன் முகம், எப்படி இருப்பான், அத்தனை அருகே வந்து பேசியவன் குரல், அவன் தொடுகை எதுவும் அவளுக்கு தெரியாது. அலைபேசிக்கு வந்த அந்த பதிவினை ஒருமுறை கூட இவள் பார்த்ததில்லை. பார்க்கத் தோன்றியதுமில்லை.
ஆனால், அன்பரசனின் அத்துமீறல், கண் மூடினால், படமாக ஓடியது. அவனது அரை மயக்க கண்கள், ஹஸ்கியான குரலில் பேசியது, அவனது வாசம், அவளை பிடித்த கைகளின் திண்மை, விரல்களில் அவன் கடத்திய உணர்வு, அனைத்திற்கும் மேல் அவன் அருகாமை நினைவில் வந்து அறிவழகியைத் திணறடித்தது.
நல்லவேளையாக இவளது திணறல் அன்பரசனுக்கு தெரியவில்லை, அது அவனுக்கு தெரியும்முன் அறிவழகி சத்தம் போட்டிருந்தாள். அறிவழகி வெளியே போ என்று சொன்னது அவளது உணர்வுகளை, கிளர்ச்சியினை, அவள் உடம்பே அவளுக்கு இழைக்கும் த்ரோகத்தினை வெளியேறுமாறு கத்தினாள். நேற்றைய இவளது வெறுமைக்கு காரணம் அப்போது புரியவில்லை, அறிவழகிக்கு இன்று புரிந்தது.
கீழே காரில் கை வைத்து தலை கவிழ்ந்த நிலையிலும் அது அன்பரசன் என்று அருகே சென்றதும் தானாக தெரிந்தது. அவன் வாசம் அறிவழகிக்கு தெரிந்திருந்தது. அவனது கைகளை விரல்களை பார்க்கும்போது, இந்த விரல்கள் அவளைத் தொட்டுத் தடவியது, தோளை இறுக்கிப் பிடித்ததுபோல் ஒரு உணர்வு வந்தது.
நேற்று இவன் இன்னும் கொஞ்சம் முன்னேறி இருக்கலாமே என்று மனம் வெட்கமே இல்லாமல் ஒரு நொடி நினைக்க…, தீச்சுட்டாற்போல் ஆனாள் பெண். நேற்று காலையில் அன்பரசனின் உறவே வேண்டாம் என்று தீர்மானமாக சொல்லிவிட்டு, மதியம் அவன் கைகளில் குழைந்திருந்தால் என்னவாயிருக்கும்? அவன் நல்லவனாகவே இருக்கட்டும், நிச்சயம் மனைவியாக அங்கீகரித்து இருப்பான். மீண்டும் அதே ஊர், அதே தெரு, அதே பகடி பேசிய மக்கள். அதே அமில வார்த்தைகள், இத்தனை வருடங்களில் அவர்கள் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கிய, என் போராட்டம், வெற்றி அனைத்துமே வீண்’
‘அன்பரசன் கணவனாக நான் மனைவியாக, நினைக்க நன்றாகத்தான் இருக்கிறது, இருவருக்கும் என்றாவது பிணக்கு வரும், வராதிருக்க வள்ளுவன் வாசுகியா என்ன? சாமானியர்கள் தானே?’
“வேணாம் வேணாம்-னு சொல்லிட்டு இழைஞ்சவதானேடி நீ?, எனக்கு முன்னாடி எத்தனை பேரோ?”, என்று ஒரு கணமேனும் நினைத்து/சொல்லி விட்டால் என்ன ஆகும்? அதைவிட தலையிறக்கம் வேறேதும் இருக்கிறதா?’
‘அன்பரசன் கூறுவது அல்லது ஊரார் நினைப்பது  ஒருபக்கம் இருக்கட்டும், எனக்குள் நானே குமைந்து போவேனே?  உடல் தேவைக்காக அவனை அழைத்தேன் என்று அன்று ஊரார் பேசியது உண்மையாக்கி விட்டேனே என்ற யோசனை வருமே? வந்தால், மொத்தமாக வாழ்க்கையில் அல்லவா தோற்றுப் போவேன்?’.
‘வேண்டாம். எதுவுமே வேண்டாம், கட்டுப்பாடுகள் இல்லாதவள் அல்ல நான். இவனை பார்க்கும்வரை நான் பெண்ணென்பதும், எனக்கொரு துணை தேவை என்பதும் யோசித்ததுகூட இல்லை.
அன்பரசனைக் காயப்படுத்தி விரட்டிவிட்டால் போதும். பின் எப்போதும் போல எனக்கு நானே துணை.’ என்று முடிவெடுத்துதான் அப்படி அன்பரசனிடம் பேசினாள். அவன் மூர்த்தியிடம் பேசி முடிப்பதற்குள் இத்தனை மனப் போராட்டங்களும் இவளுக்குள் நடந்து முடிந்திருந்தது. இதோ, போய் விட்டான், இனி எப்போதும் போல நான்,நான்,நான் மட்டுமே. இறந்து போனால்,  தருவும் சுதாவும் பார்த்துக் கொள்வார்கள்’
தெய்வத்தின் முன் அமர்ந்திருந்ததில், பாரம் சற்று குறைந்தாற்போல் இருந்தது. மெல்ல கண்களைத் திறந்து காமாட்சி அம்மனைப் பார்த்து, விளக்கை ஏற்றி வைத்தாள். விருத்தத்தை மனதுக்குள் ஓட விட்டாள். அம்மாவின் குரல் காதுகளில் கேட்க, கூடவே பாட்டின் அர்த்தம் முழுமையாக தெரியுமாதலால், மனதும் தானாக அதில் லயமானது. எப்போதும் பாட்டு முடியும்வரை அதனுடன் ஒன்றி இருக்கும் அறிவழகி, கடைசி பாரா-வில் வரும்,
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா,
[அத்தன் இட பாகம் அதை விட்டு வந்தே என் 
அரும் குறைகளை தீரும் அம்மா.] 
என்ற பதங்கள் வந்ததும், பாட்டை நிறுத்தி அன்னைக் காமாட்சியை பார்த்து, ‘வேணாம்மா, நீ உன் ஹஸ்பென்டை விட்டுட்டு வந்து என்னைக் காப்பாத்த வேணாம். தனியா இருக்கறது என்னோட விதி. இந்த கஷ்டம் என்னோட போகட்டும்  உனக்கது வேணாம். நீயாவது புருஷனோட ஹாப்பியா இரு”, என்று அவள் கூற… கண்களில் தேங்கியிருந்த கண்ணீர்த் துளி கரையைக் கடந்து கன்னம் வழிந்து தரையைத் தொட்டது.
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அடங்கும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
அவள் கொண்ட நெருப்பு அணைகின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு.
இறை பொறுப்பை ஏற்குமா?

Advertisement