Advertisement

அத்தியாயம் 14 1
அலைபேசியில் நேரம் பார்த்து இந்தியாவில் காலை ஐந்து மணி சுமார் இருக்கும் என நினைத்தவள், திரை பார்க்க அது மூர்த்தி ஆபிஸ் என்று உமிழ்ந்தது.  பார்த்தவள் எடுக்காமல் விட்டு விட்டாள், ஆமாம் யாரென்று அவளை அறிமுகப்படுத்திக் கொள்வாள்?, ‘வீட்டுக்கு உன்னைப் பற்றி எதுவும் கூறாமல் வந்தேன்’, என்று அவன் கூறியது வேறு ஞாபகம் வந்து கடுப்பைக் கிளப்பியது, அதுவே அடித்து ஓயட்டும் என்று விட்டு விட்டாள். அடுத்த பத்தே நிமிடத்தில், தினகர் ஆபிஸ் என்று ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.  அதன் பின் விடாமல் தொடர்ச்சியாக தினகரிடமிருந்து அழைப்புகள்.
முதலில் அறிவழகிக்கு தொல்லையாக இருந்த அழைப்புகள் நேரம் செல்லச் செல்ல, இந்த அதிகாலை நேரத்தில் ஏன் அழைக்கிறார்கள்? ஏதேனும் அவசரமோ, யாருக்காவது உடல் நிலை சரியில்லையோ என்று பதட்டப்பட வைத்தது.
இப்போது அன்பரசன் எங்கே இருப்பான்? மதியம் இரண்டரை மணி சுமாருக்கு வெளியே சென்றவனை எங்கேயென்று தேடுவது? என ஒரு எண்ணம் வர, சர்ரென கோபம் தலைக்கேறியது. ஏன் நான் ஏன் தேடவேண்டும்? எவனோ எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? ஊரில் உள்ள எவனாவது உடமைகளை கவனமின்றி தொலைத்தால், அவனைத் தேடி கொண்டுபோய் கொடுப்பதுதான் என் வேலையா? தேவையென்றால் அவனே வரட்டும், என்று போனை சைலென்டில் போட்டு மேஜையில் வைத்து விட்டு அப்படியே கணினியில் தலையை நுழைத்துக் கொண்டாள்.
அது மண்டையைக் குடையும் பிரச்சனையில் இருந்து, மனதைத் திசை திருப்ப அறிவழகி கையாளும் யுக்தி. உடலும் மூளையும் சோர்வடையும்வரை அடுக்கடுக்கான வேலைகளை செய்வது, முதலில் மனம் சுணங்கினாலும், தொடர்ந்து வேலைகளை செய்ய, சற்று நேரத்தில், மலையெனத் தோன்றிய பிரச்சனையை எப்படி அணுகுவதென்ற ஒரு தெளிவு கிடைக்கும். ஆனால் இன்று எத்தனை முயன்றும் மனம் கணினியில் ஒன்றவில்லை. சொல்லொணா உணர்வுகள் அவளை அலைக்கழிக்க திரையைப் பார்த்தவாறே, அரை மணி நேரம் இணையத்தில் இலக்கின்றி கடத்தினாள்.
ஒருவேளை பேசியின் எண் நினைவில்லாமல், அன்பரசன் அவனது அலுவலகத்து ஆட்களை போன் செய்து தகவல் சொல்லுமாறு  பணித்திருந்தால் ? என்ற யோசனை வந்தது. அவ்வாறழைத்தால், விட்டது தொல்லை என்று ஒரேயடியாக கொடுத்து விட்டு நிம்மதியாய் இருக்கலாம் என நினைத்து  படுக்கையில் இருந்து எழுந்து மேஜையில் இருந்த அன்பரசன் பேசியை  எடுத்து பார்த்தாள். இதை இங்கே வைத்து அரைமணி நேரம் இருக்குமா? அதற்குள் இத்தனை அழைப்புகள், வாட்ஸாப் தகவல்கள்? புருவம் முடிச்சிட, மெசேஜ்களை பார்வையிட்டாள். அனைத்து தகவல்களும் தினகரிடமிருந்து வந்திருந்தது.
முதல் தகவலே, மூர்த்தியின் தாயார் நள்ளிரவில்  இறந்து விட்டதாகவும், மூர்த்தியிடம் மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்தவே அவர் கையிருப்பு முழுவதும் செலவாகிவிடும் என்றும், தாயாரின் இறுதி சடங்கிற்கு ஐம்பதாயிரமாவது உடனடியாக தேவைப்படும், ஊரடங்கினால் அலுவலகமோ, அன்பரசனது வீட்டிற்கோ செல்ல இயலாத நிலையில் இருப்பதாக தினகர் அடுத்தடுத்த தகவல்களில் தெரிவித்து இருக்க, குழப்பம் மேலிட அப்படியே அமர்ந்து விட்டாள்.
இப்போது என்ன செய்வது?  சில நிமிடங்கள் யோசித்தவள், மூர்த்தி தினகர் இருவருடனும் அன்பரசன் அடிக்கடி பேசி இருப்பது நிழலாட, சரி அன்பரசனை தேடுவதை சிறிது நேரம் கழித்து யோசிக்கலாம். ஐம்பதாயிரம் தன்னால் அனுப்ப இயலும் தொகைதான், யாராயிருந்தால் என்ன? இறந்தோருக்கு உரிய மரியாதையை செலுத்த தன்னாலானதை உடனடியாக செய்து விடுவோம், என்று முடிவெடுத்தாள்.
முதல் காரணம், அங்கே இந்தியாவில் காலை நேரம், இரவு இறந்திருக்கிறார் என்றால், எப்படியிருந்தாலும் காலையில் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அதற்கு முன்னும் பின்னும் செலவுகள் ஏராளமாய் நிற்கும். ஆனால் எப்படி தொகையை அனுப்புவது?
சிறிது யோசித்தவள், அன்பரசன் சைட்டில் இருந்தால் பேசியை சைலென்டில் போட்டுவிடுவான் [அன்பரசன் சித்தூரில் வேலையாக சைட்டில் இருந்தபோது இவளது அழைப்பை ஏற்காமல், இரவு தானே போன் செய்தான்?] என்பது நினைவுக்கு வர, “இப்போது சைட்டில் இருப்பதால் பேச முடியாதென்றும், உடனடியாக இணையவழி பணப் பரிமாற்றம் செய்ய, மூர்த்தியின் வங்கி கணக்கு எண்ணை அனுப்புமாறும் தகவல் தெரிவித்து, சிறிது நேரத்தில் தானே தொடர்பு கொள்வதாகவும், அன்பரசனின் பேசியில் இருந்து மெஸேஜ் அனுப்பிவைத்தாள்.
சில நொடிகளில், கேட்ட கணக்கு எண் வர, விடுவிடுவென தன் கணக்கில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாயை மாற்றிவிட்டாள். பணம் அனுப்பிய விபரத்தை மெசேஜாக தட்டிவிட, அடுத்த பத்து நிமிடத்தில் மூர்த்தியே நன்றி தெரிவித்து தகவல் அனுப்பினார். அரை மணி நேரத்தில் அழைப்பதாக தகவல் வர, இப்போது தாயார் தவறியதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு இரங்கல் செய்தி அனுப்பி, போன் சார்ஜ் குறைவாக இருப்பதால், சார்ஜ் போட்டு தானே கூப்பிடுவதாகவும் தகவல் அனுப்பி வைத்தாள்.
இவன் எங்கே போயிருப்பான்? கட்டாயமாக சுதாவின் வீட்டு விலாசமோ, வழியோ தெரிய வாய்ப்பில்லை, இருமுறை மட்டுமே அங்கு சென்றிருக்கிறான். அதிலும் முதன்முறை, விமான நிலையத்தில் இருந்து நேரே அவனை இவள்தான் அங்கே கூட்டிச் சென்றது. இரண்டாவதாக சுதா கூட்டி போனான். தவிர, எல்.ஏ. கவுண்டி-யின் தெரு பெயர்கள் ஒன்றிற்கு இரண்டு முறை சொன்னால் ஒழிய புரியாது. கையில் பணமின்றி, வாடகை வாகனம் கூட சாமான்யத்தில் கிடைக்காத ஊரடங்கு நேரம்..ம்ம். சுதர்ஷனிடம் கேட்கலாமா என்று நினைத்து உடனே அழித்தாள். என்னாயிற்று என்று கேட்டால் என்னவென சொல்லுவாள்?
சரி காலை வரை பாப்போம், இவன் வரவில்லையெனில் சுதாவிடம் ‘ஒரு சிறிய மனஸ்தாபம், சென்று விட்டான்’ என்று சொல்வோம், என்ற முடிவுடன் படுத்து விட்டாள். படுத்தாளே தவிர தூக்கம் ?
மறுநாள் காலை சுதர்ஷன் வீட்டிற்கு சென்று அன்பரசன் விஷயம் கூறி, அவனது பர்ஸ்-ம் பேசியையும் கொடுத்து விட்டு அலுவலகம் செல்ல முடிவெடுத்தவள், விடிகாலையிலேயே ஆயத்தமாகினாள். [அங்கே அக்ஷி, தரு மாமா மாமி அனைவருடன் பேசி புறப்பட எப்படியும் ஒரு மணிநேரம் எடுக்கும், இப்போதே கிளம்பினால்தான்  நேரத்திற்கு அலுவகம் செல்ல சரியாக இருக்கும்] வீட்டிலிருந்து கீழே வந்து கார் எடுக்கச் சென்றவளுக்கு, கார் பார்க்கிங்கில் அவளது காரின் அடியில் இரு ஷூ கால்கள் நிழலாக தெரியவும் சற்று திடுக்கிட்டாள்.
அறிவழகி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்துமிடம் எப்போதும் வெளிச்சம் குறைவாகவே இருக்கும். இது விடிந்தும் விடியாத நேரம். இவள் குடியிருப்புக்கென ஒதுக்கி இருந்த கார் நிறுத்துமிடம் சுவரை ஒட்டி அமைந்திருக்கும். அருகே சென்று பார்த்தால் தவிர அந்த இடைவெளியில் யார் இருந்தாலும் தெரியாது. மெல்ல சப்தமிடாமல் நடந்து செல்கையில், ‘ஒருவேளை அவனாய் இருக்குமோ..? சரி யாராயிருந்தாலும் எதிர்கொள்வோம்’, என்றெண்ணி கைப்பையில் இருக்கும் பெப்பர் ஸ்பிரே-யை எடுத்துக் கொண்டு, மெதுவே காரை நெருங்க, அங்கே தலையைக் கவிழ்த்து, ஜெர்கினோடு படுத்திருந்தது அன்பரசனேதான்.
கார் அருகே அந்த இடைவெளியில் அவனது பெட்டியை இருக்கையாக்கி அமர்ந்து,  கார் கதவில் கையினை முட்டுக் கொடுத்து அதில் தலை சாய்த்திருந்தான். அவனது ஒரு பக்கத்து back bag வாரினை காலினுள் நுழைத்து காபந்து செய்து கார் அடியில் தள்ளியிருந்தான். அல்லது தூக்க கலக்கத்தில் பை கீழே தள்ளியிருப்பானோ என்னவோ?, அருகே ஒரு pizza டப்பா இருந்தது.
அன்பரசன்தான் என்று தெரிந்ததும் அறிவழகிக்கு இருவேறு உணர்ச்சிகள் ஒருசேர வந்தது, இங்கேதான் இருக்கின்றான் என்பதில் சின்ன நிம்மதி, இன்னமும் இங்கே இருக்கிறானே? என்ற கோபம். ஓசையெழுப்பாமல் ஸ்ப்ரே-யை கைப்பையில் வைத்து, சற்றே தூரம் வந்த வழியே சென்று திரும்பி, கண்ணில் கூலர்ஸ் மாட்டியவாறே, காரின் ரிமோட் பட்டனை அழுத்தினாள். கீக் கீக் என்று இருமுறை சப்தம் வர, அன்பரசன் பரபரவென விழித்தெழுந்தான். குனிந்தபடியே, பெட்டியில் ஜெர்கினை வைத்து [திணித்து ?], தோள்பட்டையில் back bag-ன் ஒரு பக்கத்து வாரை மாட்டி, பீஸ்சா கவரை கையில் பிடித்து, சூட்கேஸை மற்றொரு கையில் எடுத்துக் கொண்டு காத்திருந்தான்.
அறிவழகி இவனை எதிர்பாராதிருந்தால், அவன் என்ன செய்கிறான் என்பது தெரியாது, ஆனால் இப்போது அவனது அசைவுகளை வைத்து என்ன செய்கிறான் என்பதை ஒருவாறு அவளால் கணிக்க முடிந்தது. இவள் அருகே சென்றதும், அறிவழகியைப் பார்த்த அன்பரசனுக்கு நேற்றைய நினைவு வந்து ஒருவிதமான அசாதாரணமான அமைதியோடு முகம் கன்ற பேச முடியாமல் நின்றான்.
எந்த ஒரு வன்முறைக்கு பிறகும், எதிரிகளாய் நின்ற இரு பிரிவும் சந்திக்கும் போது வரும் இப்டியொரு சங்கடம்.  அந்நிகழ்வைத் தவிர்த்திருக்கலாமே என்ற எண்ணம் நியாயமானவர்களுக்கு தோன்றுவது இயல்பு, அன்பரசனுக்கு தோன்றியது.
அன்பரசனை பார்த்ததும்  அறிவழகி பேசாமல் நிற்க, “மொபைலும் பர்ஸும்..”, என்று அவன் இழுக்க..
கைப்பையில் இருந்து இரண்டையும் எடுத்து கார் பேனட்டின் மீது வைத்தாள். பார்வை அழுத்தமாக இருக்க, கண்கள் அவனை குறிப்பெடுத்தது. கூலர்ஸ் போட்டிருந்ததால், அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. முகம் முழுவதும் அழுக்கும் தூசியுமாக இருந்தான், தலை முடி தூசு ஒட்டி செம்பட்டையாக இருந்தது, கண்களை சுற்றி கரு வளையம், விழிகள் ரத்த சிகப்பாக இருந்தது. சட்டை மிகவும் கசங்கலாக இருந்தது. கைகள்… அந்த விரல்கள், அறிவழகி கண்களை மூடி சில நொடிகள் இருந்தவள், மெல்ல கண்ணாடியை கழட்டினாள்.
பேசியை காரரில் இருந்து அன்பரசன் கையில் எடுத்ததும் மூர்த்தியின் அழைப்பு வர, “ஹலோ மூர்த்தி சொல்லுங்க”, என்றான். மூர்த்தி,  பணம் அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்க, “ஓஹ்.”, என்று கேள்வியாக அறிவழகியைப் பார்க்கவும், ஆம் என்பதுபோல தலையை அசைத்தாள். தொடர்ந்து பேசியில் மூர்த்தியிடம், “அதனாலென்ன பரவால்ல”, என்றான் .
“…..”
“அதெல்லாம் பின்னால பாத்துக்கலாம் மூர்த்தி”
“…..”
“ஆபிஸ் தினகரை பார்த்துக்க சொல்லுங்க அண்ட் மூர்த்தி Sorry for your loss”, என்று விட்டு தொடர்பை துண்டித்தான்.
எதிரே நிற்கும் அறிவழகியைப் மெச்சுதலோடு பார்த்து, “தேங்க்ஸ். உன்னோட அக்கவுண்ட் நம்பர் சொல்லு டிரான்ஸபெர் பண்ணிடறேன், இல்ல ஜி பே பண்ணிடட்டுமா?”, என்றான்.
“வேண்டாம்”, விட்டேத்தியாக அழகியின் பதில்.
அவளின் பேச்சில் துணுக்குற்று,   “ஏன்?”, என்று கேட்க..
“ம்ப்ச். தேவையில்ல”, அறிவழகியின் குரலில் பிடிவாதமிருந்தது.
“நீ இப்போ மூர்த்திக்கு கொடுத்ததை சம்பளத்துல மாசா மாசம் பிடிச்சுடுவாங்க”, இவள் எதோ தானம் என நினைத்து பணத்தை வாங்க மறுக்கிறாளோ? என்று எண்ணி அவளுக்கு விளக்கினான், பதில் இல்லாமல் போகவே, “நான் சுதாட்ட கேட்டுக்கறேன்”, என்று அன்பரசன் பேசியில் சுதர்ஷனைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க…
“எப்படியும் அந்த காசு உங்களுக்கு வந்துடுமில்லையா? நீங்க என் அம்மாக்கு பண்ணினதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு, ஓகே வா?.”, என்று அறிவழகி வேகமாக பதிலளிக்க, முதலில் புரியாமல் பார்த்தவன், அவளது அம்மாவின் இறுதி சடங்கிற்கு செலவு செய்ததை நேர் செயகிறாள் என்று தெரிந்ததும், ஸ்தம்பித்தான்.
சில நொடிகள் பேச வார்த்தையில்லாது திகைத்துத்தான் போனான். ‘எதற்கு எதை ஈடு வைக்கிறாள்? அன்று இவள் பணத்தை எதிர்பார்த்தா அப்பா செய்தார்? அது மனிதாபிமானமல்லவா? கடமை என்றல்லவா செய்தார், என்னையும் செய்யவைத்தார்?  எல்லாவற்றையும் சரிகட்டிவிட முடியுமா இவளால்?’
தலையை ஆட்டி.. கண்களில் வேதனையுடன், “உன்னை ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன், படிச்சு.. வேலைக்கு போய்.. வெளிநாட்டுக்கு வந்து.. மனசு விசாலமா இருக்கும்னு நினச்சேன். சே. சே. எல்லாத்துக்கும் பணத்தை ஈடு கட்டுவியா நீ?” முகத்தில் அதிருப்தியுடன் அன்பரசன் கேட்க.
“யெஸ். நீங்க அன்னிக்கி பண்ணினத்துக்கு என்னால இப்போ குடுக்க முடிஞ்சது, கொடுத்துட்டேன்”, அதே திமிர்தனமான பதில்.
“நீ படிச்சது? உன் ஹாஸ்டல் பீஸ்? ட்ரெஸ்,? புக்ஸ்?”, அவள் பணம் பற்றி பேசியதால் அன்பரசன் இதை கேட்க வேண்டி வந்தது. அவனோ, விநாயகமோ ஏன் கமலம்மா கூட இதுவரை இவளது செலவுகள் குறித்து பேசியதில்லை. இப்போது அறிவழகி பேச வைத்துவிட்டாள்.
“அதுக்காகத்தான் எங்கம்மாவோட இன்சூரன்ஸ் பணத்தை நான் எடுக்கவேயில்லை, அது நம்ம ஜாயிண்ட் அக்கவுண்ட்-ல தான இருக்கு?. நீங்க யூஸ் பண்ணிக்கோங்க”, பதில் பட்பட்- டென வந்தது. அதிலேயே, இவள் இதைக்குறித்து ஏற்கனவே யோசித்திருக்கிறாள் என்பது புரிந்தது. அந்த புரிதல் கோபம் கொடுத்தது.
அன்பரசனின் முகம் மிகக் கடுமையாக, “அன்னிக்கு உன்னை நான் நாடோடின்னு சொன்னேன், இல்ல நீ அன்பு, பாசம் , கடமை, நன்றி ன்னு எந்த உணர்ச்சியும் இல்லாத ஜடம்” அவளை விரலால் சுட்டிக் காண்பித்து பேசினான். தொடர்ந்து …
“நான் இங்க கிளம்பும்போது, எங்கப்பா எனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றதா சொன்னார், சரி.. இங்க வந்து உன்னை பாத்து பேசி,  உனக்கு ஓகேன்னா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு ஆசப்பட்டேன். ஆனா…”, பெருமூச்சுவிட்டு, “இனிமே நீயா வந்தாக்கூட நோ. “
“தயவு செஞ்சு யாரையும் கல்யாணம் பண்ணிக்காத, இதுக்கு காசு நீட்ற நீ…  இன்னும் எதெதுக்கெல்லாம் பணத்தை வச்சு நேர் பண்ணுவியோ? இனி உன் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன்”, என்று ஆவேசமாக கூறி விடுவிடுவென நடந்து போய்விட்டான். அவன் போன திசையையே சிறிது நேரம் நின்று பார்த்த அறிவழகி, கண்களில் நீர் திரையிட, அவளது வீட்டுக்கே மீண்டும் சென்றாள்.

Advertisement