Advertisement

டீயை குடித்துக் கொண்டே, “லாக் டவுன் போய்ட்டு இருக்கு, பாசிட்டிவ் கேஸசும் அதிகமாயிட்டே இருக்கு. இன்னுமொரு எக்ஸ்டென்சன் பண்ணுவாங்கனு தோணுது. ஹ்ம்ம். லோயர் & மிடில் கிளாஸ் எப்படி சமாளிக்க போகுதுன்னு தெரில. எங்க தமிழ்நாட்ல அம்மா மெஸ் இருக்கு, சோ சாப்பாட்டுக்கு பிரச்னையில்லாம எதோ போகுது, மத்த ஸ்டேட் மக்கள நினைச்சா… “
“ம்ம். கஷ்டம்தான்”
“பட் இதிலேயும் சந்தோஷமான விஷயங்கள் நடக்குது. டாஸ்மாக் மூடி இருக்கு. லக்ஸரி விஷயங்கள் எதுவுமே இல்ல. சிக்கனம் எல்லாரும் கடைபிடிக்கறாங்க. பொல்யூஷன் இல்ல. கால்ல சக்கரம் கட்டி ஓடினவங்க எல்லாம் குடும்பத்தோட நேரம் செலவளிக்கறாங்க”, என சொல்லிக்கொண்டே சென்றவன், குறுநகை பூத்து, “ரொம்ப சீக்கிரமே மக்கள் தொகை-ல சீனாவை மிஞ்சிடுவோம்”, என்க..
அவனது பேச்சை புரிந்து சுதர்ஷனும் சிரித்து, “ஆஹாங், இது சந்தோஷமான விஷயமா?”, என்றான்.
“இல்லையா பின்ன? அதனாலதான் மக்கட்செல்வம் ன்னு சொல்றாங்க”, என்று அன்பு சிரிக்க.. அறிவழகி அவளது புன்சிரிப்பை மறைக்க முயன்றாலும், இதழ்கடையில் அவள் சிரிப்பது தெரிந்தது.
“ம்ம். சரிதான். இன்டஸ்ரிஸ்..?”
“ஹும். கைகாசைப் போட்டுத்தான் இப்போ சம்பளம் கொடுத்துட்டு இருக்காங்க. பிசினஸ் ரன் பண்ண ஆரம்பிச்சா, கொஞ்சமாவது முதல் தேவைப்படும், சேவிங்ஸ் இருக்கற ஆளுங்க, தூக்கிவிட ஆளுங்க இருக்கறவன் நடத்த ஆரம்பிச்சிடுவான். மத்த சின்ன, நடுத்தர கம்பெனில்லாம் படுத்துடும். அரசாங்கம்தான் ஏதாவது பண்ணனும்”
“ஓகே, உங்க கம்பெனி நிலவரம் என்ன?”
“அதிகபட்சமா இன்னமும் ரெண்டு மாசம் சமாளிக்கலாம், சேல்ஸ் இல்லன்னா தொடர்ந்து சம்பளம் தர முடியாதில்ல?”, என்றான் யோசனையாக.
“ம்ம். கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாயிடும்”
கண்மூடித் திறந்து தலையசைத்தபடி, “சரியாகணும். சீக்கிரமே.”, என்றான் அறிவழகியைப் பார்த்து அன்பரசன்.
அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து சுதர்ஷன், “ஓகேமா நான் கிளம்பறேன், அக்ஷிக்கிட்ட சீக்கிரம் வர்றேன்னு சொல்லிட்டு வந்தேன், அன்பு வர்றேன், டேக் கேர்”, இருவரிடமும் பொதுவில் கூறிவிட்டு கிளம்பிவிட.. மீண்டும் அவ்வீட்டில் இருவர் மட்டுமே.
“லன்ச்?”, அறிவழகி கேட்க…
“ம்ப்சு, பசிக்கல”, என்று விட்டு பின் மூச்சை உள்ளிழுத்து மெதுவாக, “ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் பார்த்திருக்கேன், நாளைக்கு அங்க போகலாம்னு இருக்கேன்”, என்று அவர்களிடையே காலையில் துவங்கிய உரையாடலை மீண்டும் ஆரம்பித்து வைத்தான் அன்பரசன்.
“ம்ம்”, மனதில் சின்ன அதிர்வு ஏற்பட்டாலும் அதை வெளிக்காண்பிக்காது முகத்தை நிச்சலனமாக வைத்திருந்தாள்.
“இன்னும் ரெண்டு மூணு மாசம் இங்க தான் இருப்பேன், இப்போ இங்க நிலைமை சரியில்ல இல்லையா அதனால, இந்தியாலேர்ந்து என் கம்பெனி ஆளுங்க யாரையும் இங்க அனுப்பறதா இல்ல. சோ நானே இவங்களுக்கு ட்ரைனிங் குடுத்துட்டு கிளம்பலாம்னு இருக்கேன்”, அவளின் முகம் பார்த்தே தான் பேசினான். ஆனால் அறிவழகி நிமிர்ந்து பார்த்தால் அல்லவா, அவளைப் படிக்க?
“ம்ம்”, என்று கேண்டி கிரஷ் விளையாட்டில் மும்மரமாக இருப்பதுபோல் நடித்தாள்.
தயங்கியபடி, “உன் முடிவுல ஏதாவது மாற்றம் இருக்கா?”, என்று அன்பு கேட்க..
அவள் முகம் கடினமாக, “நோ”, சட்டென வந்தது வார்த்தை.
“யோசிக்காம, நோ ன்னா என்ன அர்த்தம்?”
“மாற்றம் வேஸ்ட்ன்னு அர்த்தம், எக்ஸாம்ல பெயில் ஆவோம்னு தெரிஞ்சா எக்ஸாமே எழுதக்கூடாது, இது என் பாலிசி”
“அப்படி எதுல தோத்துப் போயிடுவோம்-ன்னு நீ நினைக்கற?”
“வேறெதுல லைஃப்ல தான், நான் உங்ககூட சேர்ந்தேன்னா ரொம்ப மோசமான புருஷன் பொண்டாட்டியா இருப்போம். பெரியவங்க குழந்தைங்க இருக்காங்கன்னு பாக்காம, தொட்டதுக்கெல்லாம் சண்டை போட்டு, கேவலமா worst couple-ன்னு பேர் வாங்கி பின்னால பிரியறதை விட, இப்போவே  பை சொல்லிக்கறது பெஸ்ட்”, அதே இறுக்கத்தோடு அறிவழகி பேசி முடிக்க…
“ஊர்ல உலகத்துல சண்டை போடற புருஷன் பொண்டாட்டியே இல்லையா? எல்லாருமா பிரிஞ்சிடறாங்க?”, புருவம் நெறித்து அன்பரசன் கேட்டான்.
தலையை இடவலமாய் அசைத்து, “இல்ல, எல்லாரும் பிரியறதில்ல, ஏன்னா அங்க ஒருத்தருக்கு மத்தவங்களுக்கான தேவை இருக்கு”, ஆள்காட்டி விரலை உயர்த்தி அவனை சுட்டி, “ஆனா நீங்க.. நான் தேவையில்லைன்னு எழுதிக் கொடுத்தீங்க”,
வார்த்தைகள் வாளாய் அறுத்தது. அழுத்தங்கள் தாங்கி படிப்பும் உத்தியோகமுமாய் தன்னைத் தானே செதுக்கி பட்டை தீட்டிக் கொண்டவளல்லவா?
அவால் பேச்சின் உஷ்ணம் தாங்காமல், இருக்கையில் இருந்து எழுந்து நின்று, “காட். டாமிட். நீ கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சு…”, வேக மூச்சுக்களை விட்டு பொரிந்தவன்… “உனக்கென்ன வேணும்? ஆமா எனக்கு நீ தேவைதான்னு நான் கெஞ்சணுமா?”, அறிவழகியை நோக்கி கைநீட்டி, “நீ என் பொண்டாட்டிடீ, இத்தனை நாளா உங்கூட தனியா இருந்தும் இன்னமும் தள்ளி நிக்கறேன்னா, நீ…, நீ கஷ்டப்படக்கூடாதுங்கிற ஒரே காரணம்தான். அங்க சென்னைல நீ நம்ம வீட்ல இருந்த போது கூட, நான் அங்க வராததுக்கு காரணம் நீதான். தலையெழுத்தேன்னு நம்ம வாழ்க்கை ஆரம்பிக்ககூடாதுன்னு நான் நினைச்சேன். நம்ம வீட்ல சகஜமாயிடுவேன்னு நினைச்சு நான் கோயம்புத்தூர்ல இருந்தேன் பாரு. என்னை சொல்லனும்.”
“தாலி கட்டின கையோட கைல ஒன்னு வயித்துல ஒன்னுன்னு குடுத்திருந்தா.. இப்படி பேசிட்டு நிக்க மாட்ட. அவ்ளோ ஏன்? இப்போகூட உனக்கு மேரேஜ் ஆகலைன்னு சொன்னா, உடனே எங்கப்பா வந்து உன்னை கூட்டிட்டு போயிடுவார். நீ கட்டாயத்தினால வரக்கூடாதுன்னு, யாருக்கும் தெரியாம நான் வந்து உங்கூட பேசிட்டு இருக்கேன் பாரு.. “, தடித்த வார்த்தைகள் வர, கோப மூச்சுக்கள் விட்ட அன்பரசன் கண் மூடி இடது கையால் பிடரியை அளைந்தான்.
“உங்கப்பா வந்திருந்தா என்கிட்ட அசிங்கப்பட்டு போயிருப்பா…”, என்று அவள் முடிக்கும்முன்…
“யேய்…..”, என்று பற்களிடையே கர்ஜித்தவன், பாய்ந்து அவனது இடதுகையால், தோளோடு சேரும் அறிவழகியின் கைப்பகுதியை பிடித்திழுத்து நிற்க வைத்து, வலது கையால் அவள் கழுத்தை நெரித்து அறிவழகியை சுவற்றோடு தள்ளி நிறுத்தி இருந்தான். “நான் தப்பு பண்ணினேன், என்னை என்னவேனா சொல்லு, எங்கப்பாவை ஒரு வார்த்த பேசின….”, வெப்பமான அவனது மூச்சுகாற்று,  விழிகள் குத்தி அதிர்ந்து நின்றிருந்த அறிவழகியின் நாசியை தொட்டது. ஒருவித பயத்தோடு அவள் எச்சில் கூட்டி விழுங்க, தொண்டை அசைவு உணர்ந்து கழுத்தைப் பிடித்திருந்த அவன் கையை தளர்த்தினான்.
இன்னமும் அவனை பார்க்கும் அவளது பார்வையில் மருட்சி இருக்க, “sorry, I didn’t mean to hurt you”, என்று மெதுவாக சொல்லியவன்.. அவளது அருகாமையை, கழுத்தின் வெம்மையை, கொடுங்கையின் மென்மையை வெகுவாக உணர்ந்தான். அவள் எதிர்பாரா தருணத்தில், உணர்ச்சிகளின் பிடியில் சிக்குண்ட அன்பரசன் அனல் மூச்சுடன் அவளை சுவற்றோடு நெருக்கி படர்ந்து அணைத்தவன், அவள் உதட்டின் மீது ஆள்காட்டி விரலை வைத்து, “நான் நல்லவனா இருக்கணும்னு நினைக்கறேன், ப்ளீஸ். இப்டி பேசாத”, என்று காதோடு கிசுகிசுத்தான் கரகரப்பாக.
“யூ ஸ்கவுன்ட்ரல்…”, என்று இரு கைகளால் அன்பரசனை அவனை நெட்டித் தள்ளிய அறிவழகி, “கெட் அவுட், கெட் அவுட் ஆஃப் மை ஹவுஸ், வெளில போ”என்று கண்ணை மூடிக்கொண்டு கைவிரல்களை முஷ்டியாய் மடக்கி, தொடர்ந்து அடித்தொண்டையில் இருந்து கத்தினாள்.
அறிவழகி தள்ளியதிலேயே தன்னிலைக்கு வந்த அன்பரசன், அவள் கூச்சலைக் கேட்டு, “ஓஹ். ஷிட்.”, தலையில் அடித்துக் கொண்டவன், தொடர்ந்து “ஸாரி, ஸாரி, ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் கத்தாத, நான் போறேன் இப்பவே போறேன் “, என்றுவிட்டு அறைக்கு சென்று,  கைக்கு கிடைத்த ஆடைகளை அவனது பெட்டியில் திணித்து விடுவிடுவென வெளியேறினான்.
அறிவழகி எத்தனை மணி நேரம் ப்ரமை பிடித்ததுபோல் அமர்ந்திருந்தாளோ, அவளுக்கே தெரியாது. மெள்ள அலைபேசி இசைக்க, ஸ்மரனை பெற்றவள், பேசியைத் தேடி எடுத்தாள். தரு அழைப்பில் இருந்தாள். தொடர்பு ஏற்படுத்தி, “சொல்லு தரு?”
“சாப்பாடு எப்படி இருந்தது? ரெண்டு பேருக்கும் சரியா இருந்ததா?”, என்று எஸ்தர் கேட்க.. அப்போதுதான் மத்திய உணவு பற்றிய நினைவே வந்தது அறிவழகிக்கு. மணி இரவு ஏழரைக்கு மேல் காண்பிக்க…, “அச்சோ அவனும் ஒன்னும் சாப்பிடலையே”, என்ற எண்ணம் அவளையுமறியாமல் வந்தது.
“ஆங். சாப்பிட்டேன் நல்லா இருந்தது, தலை வலிக்குதுடீ, அப்பறமா பேசறேன்”, என்று தருவிடம் கூறி கட் செய்தாள்.
பசிக்க வேறு செய்ததால், கை கால் முகம் கழுவி, சாப்பிட ஆரம்பித்தாள். உணவு சற்றே ஆறிப்போய் இருக்க, அன்பு இருந்தா சூடு பண்ணி இருப்பான் என்று யோசனை ஓட… ஒருவாறு கொறித்து முடித்தாள். பின் மனம் எதிலும் ஈடுபடாமல் வெறுமையாய் இருக்க, தொலைக்காட்சியில் எதையோ ஓடவிட்டு திரையை வெறித்திருந்தாள்.
மீண்டும் அலைபேசி ஒலிக்க.. அது இவளுடைய ரிங்டோன் இல்லை என்பதை உணர்ந்து, ஒலி வந்த இடம் நோக்கி செல்ல, படுக்கையறையில் தலையணையின் கீழ் அன்பரசனின் அலைபேசி இருந்தது. கூடவே அன்று ஒருநாள் திருப்பதியில் அவளது கைப்பையில் வைத்திருந்த அவனது பர்ஸும்.

Advertisement