Advertisement

அத்தியாயம் 13
வாசலில் காலிங் பெல் கேட்டு, கதவருகே சென்று ஸ்பை ஹோல் வழியாக, வந்திருந்தது யார் என பார்த்தாள். சுதர்ஷன் நின்றிருந்தான். கதவை திறந்து நொடி, “பியூட்டிமா”, என்று சுதர்ஷனின் கையிலிருந்த பேசியின்  பேஸ்டைம் [facetime] வீடியோ காலில் அக்ஷி சிரித்தாள்.
அறிவழகி “ஹே.. அக்ஷி…” என்று சிரித்து சுதாவின் மொபைலை வாங்கிக்கொண்டு பேசி, “வா அண்ணா”, என்று சுதாவிடம் அனிச்சையாக சொல்லி அக்ஷியுடனான பேச்சை தொடர்ந்தாள். ஏதேனும் குழப்பத்தில் இருந்தால் ஒழிய, அண்ணா என்ற விளிப்பு அவளிடமிருந்து வராது. எப்போதும் சுதா தான். அதுவும் சுதர்ஷனாக கட்டாயப்படுத்தி, அப்படித்தான் கூப்பிடவேண்டும் என்று அறிவழகிக்கு பழக்கப்படுத்தி இருந்தான்.
அலைபேசியில் அக்ஷி பேசி, பின் தரு கையில் போன் மாறி தோழிகள் இருவரும் பேசத்துவங்க, சுதா கூடத்தில் அமர்ந்து சுற்றிலும் பார்த்தான். செயல்பாட்டில் இருந்த அவளது கணினி, அறிவழகி வேலை செய்து கொண்டிருப்பதைக் கூறியது. அவள் பேசியின் தொடர்பை துண்டித்ததும், “எங்க உங்க வீட்டுக்காரர்?”, என்றான்.
சுதாவை முறைத்தவாறே, “என்னோட கெஸ்..ஸ்ட் உள்ள தூங்கிட்டு இருக்கார்”, என்றாள். சொன்ன கெஸ்ட்-டில் வெகு அழுத்தம்.
வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கி, “ஓகே தூங்கட்டும், அப்பறம் போய் பாக்கறேன், அம்மா அவனுக்காக கஷாயம் போட்டு கொடுத்திருக்காங்க, தரு உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துருக்கா. ஜஸ்ட் அவன்ல வச்சு சூடு பண்ணி சாப்பிட சொன்னா.”
“ம்ம். சரி, தரு சொன்னா. டீ?”,
ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சற்றே நெருக்கமாய் காண்பித்து “ஹாஃப் கப்”, என்றுவிட்டு கையுறைகளை நீக்கி, சானிடைசர் மூலம் கையை சுத்தம் செய்த பின் கொண்டு வந்திருந்த உணவினை அதற்குண்டான மேஜையில் வைத்தான்.
அதற்குள் தேநீர் தயாரிக்க, அறிவழகி உள்ளே சென்றுவிட, படுக்கை அறையை மெல்ல திறந்து எட்டிப்பார்த்தான். அன்பரசன் உறக்கத்தில் இருக்க, சப்தம் எழாமல் கதவை மெல்ல சார்த்தினான். பின் இருக்கையில் அமர, தேநீர் வந்தது.
ஒரு கோப்பையை எடுத்து தேநீரை சுவைத்தபடி, “அன்பு, மெடிசின் தீர போகுதுன்னு சொன்னார், அதுவும் வாங்கிட்டு வந்திருக்கேன்”
“ம்ம்.”, அறிவழகியும் அருகிருந்த சோஃபாவில் அமர்ந்து, அவளுக்கான தேநீர் கப் எடுத்துக் கொண்டாள்.
“வேலை முடிஞ்சதா?”
“ம். பிரான்ச் ஹெட் கான் கால்-ல பேசினார்,  முடிஞ்சுது. இப்போ ஷேர்ஸ் தான் பாத்துட்டு இருந்தேன், நீங்க சொன்ன ஏழு கம்பெனில, நாலு பத்தி நல்லா அலசி பாத்துட்டேன். இப்போதைக்கு கைல இருக்கறதுல 30% மட்டும் இந்த கம்பெனிகள்ல போடுவோம். எதெதுல எவ்வளவு போடணும், என்ன ரேட்க்குள்ள இருந்தா போடலாம்னு மெயில் பண்ணி இருக்கேன். மீதி ரிசர்வ் தொட வேண்டாம். அப்படியே இருக்கட்டும்.”, இருவரும் சேமிப்பின் ஒரு பகுதியை பங்கு சந்தையில்  முதலீடுகள் செய்பவர்களாதலால் அது பற்றி பேச்சு சென்றது.
தொடர்ந்து பேசிய அறிவழகி, “இந்த லாக் டவுன் இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரில, இம்மிகிரேஷன் வேற நிறுத்த போறாங்களாம். நிறைய பேரை வேலைலேர்ந்து தூக்கிட்டாங்க. அநேகமா நிறைய பேர் அவங்கவங்க சொந்த ஊருக்கு பொட்டி கட்ட வேண்டி இருக்கும்னு நினைக்கறேன்.”, என்றதும்..
சுதர்ஷன், “நல்ல வேளை நானே சொல்லணும்னு இருந்தேன்”, கடைசி மிடறு தேநீரை விழுங்கி, “அப்பா நம்மள வைசாக் கூட்டிட்டு போகணும்ங்கிறதுல தீவிரமா இருக்கார். இப்பவே அக்ஷிகிட்ட, ‘இங்க இருக்கிற லாங் பீச் மாதிரியே அங்கேயும் இருக்கு, வயல், பெரிய ஸ்கூல், குட்டி சைக்கிள் இருக்கு’ ன்னு வைசாக் லைஃப்-க்கு அவளை தயார் பண்றார்”, கோப்பையை மேஜையில் வைத்தான்.
“அக்ஷி அங்க இப்போதான போயிட்டு வந்தா. அவளுக்கு இந்தியா செட் ஆயிடும்”, என்றாள் அறிவழகி.
“ம்ம். நீ பண்ற ஆர்கிடெக்சரும், ஷேர் பிஸினஸும் அங்க வந்து பண்ணு-ன்னு எங்கிட்ட தகராறு. என்ன நடக்குதுன்னு தெரியாம, கண் காணாத தேசத்துல நீ இருக்கணுமா-ன்னு புலம்பறார்”, சுதர்ஷன் யோசினையாக கூற..
“மாமா வரும்போதே அந்த ஐடியா-ல தான் வந்தார். பட் நேரடியா சொல்லல”
“ஹம். அப்பா தருவ சேர்த்துக்க மாட்டேன்னு சொன்னதால தான் பரோடா-லேர்ந்து உங்களை, நான் இருந்த எல்.ஏ கூட்டிட்டு வந்தேன். இப்போ அவரே வர சொல்லும்போது… போகலாம்னுதான் தோணுது.  என்ன இங்க இருக்கற வீடு, என்னோட ஆபிஸ், எல்லா ஃபர்னிச்சர்ஸ்ம் வித்துட்டு போகணும். இப்போ சேல்ஸ்-ன்னு போட்டா அடிமாட்டு விலைக்கு தான் போகும்”
“ம்ம். தரு என்ன சொல்றா?”
“அவளுக்கு புது இடம், புது மக்கள் இல்லையா அதனால கொஞ்சம் டென்சன், நான் கூடவே தான இருப்பேன், சோ ஓகே ன்னு சொன்னா. அப்பறம் உன்கிட்ட பேசணும்னு சொன்னா”
“மாமா வந்தா, உங்களை பேக் அப் பண்ணிடுவாருனு தோணுச்சு, “, என்று நிறுத்தியவள், “”வெல், அதுவும் நல்லதுதான்”, என்றாள்.
அவளது ‘உங்களை’ என்ற வார்த்தை சுதர்ஷனை உறுத்த, கூர்ந்து அறிவழகியைப் பார்த்த சுதர்ஷன், “அன்பரசன் விஷயமா தரு உன்கிட்ட பேசணும்னு சொன்னா..”, என்றான்.
புருவம் முடிச்சிட, “ஓ”, என சில நொடி யோசித்தவள், “என்னை பத்தி கவலைப்பட வேணான்னு தருகிட்ட சொல்லுங்க, எனக்கு இங்க பழகிடிச்சு, நான் இங்க தனியா இருந்துப்பேன்”, என்று அமைதியாக சொன்னாள்.
சட்டென கோபம் துளிர்க்க, “ஓஹோ. ஏன் இதை அவகிட்ட நீயே சொல்லேன். இதோ இப்போவே கால் பண்ணி தரேன் பேசு”, என்றான் குத்தலாக.
“ச்சு. சுதா நீங்க வேற ஏன் உயிரை எடுக்கறீங்க?”, அலுப்பாக சொல்ல…
“பின்ன நீ பேசினது கரெக்ட்டா?, உன்ன பத்தி நாங்க கவலைப்படாம வேற யார் படப்போறா? யாரைக்கேட்டு நீ தனியா இருக்கறதா முடிவு பண்ண? உனக்கென்ன செலக்டிவ் அம்னிஷியாவா? நான் ப்ரபோஸ் பண்ணும்போது தரு போட்ட கண்டிஷன் மறந்துபோச்சோ? நான் எங்க இருக்கேனா அங்க அறிவும் இருப்பா, அதுக்கு சம்மதம்னா நாம கல்யாணம் பத்தி யோசிக்கலாம்னு சொன்னா. இன்னிக்கு வரைக்கும் அவ நாம-ன்னு சொன்னா, அது உன்னையும் சேர்த்துதான். நீ என்னடான்னா வெட்டி பேசற?”, எனப் பொரிந்தவன்,
“உனக்கு எப்படியோ தெரியாது, ஆனா நான் உன்னை என் தங்கச்சியாதான் நினைக்கறேன். நாங்களே இங்க இல்லன்னா உனக்கெதுக்கு அமெரிக்கா? தனியா இங்க இருந்து என்ன சாதிக்கப்போற?”, என்று அறிவழகியை நோக்கி கையை ஆட்டி கேள்வி கேட்டு, “கிளம்பறோம்னு சொன்னா, அதுல நீயும் அடக்கம். புரிஞ்சுதா?”, என்றான் தீர்மானமாக.
“சுதா, தருவும் நீங்களும் என்னை ஏத்துக்கலாம், ஆனா, உங்க வீட்ல.. உங்க ஆளுங்க..”, அறிவழகி தயங்க..
“ஏன்? இப்போ நீ என்ன எங்க கூடவா இருக்க? சொல்ல சொல்ல கேக்காம, பிடிவாதமா இந்த வீடு எடுத்து தனியாதான இருக்க? கேட்டா ப்ரைவஸி-ன்னு ஒரு சொத்தை காரணம் சொன்ன. சரி பரவாயில்ல,  கண் பார்வைலதான இருக்கன்னு விட்டு வச்சிருக்கோம்”,  வேகமாக பேசிய சுதர்ஷன், “உனக்கு எல்.ஏ பிடிச்சிருக்கா? இங்க இருக்கணுமா? நீ மார்டினஸை கல்யாணம் பண்ணிக்கோ, விட்டுட்டு போறோம்..”
சுதா பேசியதில் முகம் சுளித்து, “சுதா, ஸ்டாப்., நான் வைசாக் வரணும் அவ்ளோதான?, வர்றேன். வேற எதையும் பேசவேணாம். ப்ளீஸ்”
“பேசுவேன், கண்டிப்பா பேசுவேன், எத்தனை நாளைக்கு இப்படி தனியா இருக்கறதா உத்தேசம்?”
“….”
“யு ஸீ, இப்போ உனக்கு தனியா இருக்கறது நல்லா இருக்கலாம், ஆனா வயசாகும் போது கஷ்டம்மா. சொன்னா கேளு. அன்பு நல்லவனா தெரியறான், பழசெல்லாம் மறந்துட்டு..”
“அந்த பேச்சை எடுக்காதீங்க, அவர் ஒன்னும் எனக்காக இங்க வரல, அவருக்கு இங்க வேலை இருந்தது, அதை சாக்கா வச்சு இங்க வந்தார். இங்க வேலை இல்லன்னு வைங்க, அவர்க்கு என்னைப் பத்தின ஞாபகம் கூட வந்திருக்காது”
“இல்ல, எப்போ உனக்கு மேரேஜ் ஆகலைன்னு தெரிஞ்சதோ, அப்போவே அவன் இங்க வர்றதா தான் இருந்தான், வேலை தானா அமைஞ்சது”
“சும்மா நேத்தி வந்த அவருக்காக சப்பை கட்டு கட்டாதீங்க சுதா, வந்தா வா போனா போ ன்னு லெட்டர் போட்ட ஆள்கூடல்லாம் லைஃப்?. எனக்கு இவர் மேல கூட கோபமில்ல, ஊரே மதிக்கற அந்த விநாயகம் சார், பையன் கிட்ட இருந்து அப்படி ஒரு லெட்டர் எழுதி வாங்கி, அதை சர்டிபிகேட்டோட அனுப்பினார் பாருங்க, அப்ப ஊர் மெப்புக்கு கல்யாணம் பண்ணி வச்சாரா?. இதே அவங்க பாத்து பண்ணின பொண்ணா இருந்தா, போன்னு விட்ருப்பாரா?”, படபடத்தவள், கையிலிருந்த கடைசி மிடறு தேநீரைக் குடித்து சற்று ஆசுவாசமாகி..
“அந்த பேச்சை விடுங்க. என்ன இப்போ? நான் இந்தியா வரணும், வர்றேன், இங்க நான் வேலை பாக்கற பேங்க்-ல டூ வீக்ஸ் நோட்டீஸ் தரணும். வைசாக் வந்து ஏதாவது வேலை தேடிக்கறேன். கையிருக்கு கரணம் போட, வாயிருக்கு வழிதேட. நீங்க டிக்கெட் புக் பண்ணிட்டு தேதி மட்டும் சொல்லுங்க, நான் தயாரா இருப்பேன்”
கவலையாக அறிவழகியை பார்த்து ‘இவ மாறவே மாட்டேங்கறாளே’, என்ற சிந்தனையுடன், “ஏர் சர்வீஸ் நார்மலாகட்டும். அதுக்குள்ளே இங்க செட்டில் பண்ண வேண்டியதெல்லாம் பண்ணிடலாம்”, என்றான்.
அறைக்கதவு திறக்கும் ஓசை கேட்க, இருவரும் பேச்சை நிறுத்தினர். அன்பரசன் வெளியே வர, கூடத்தில் சுதர்ஷனைப் பார்த்ததும், கையசைத்து, “ஹாய் சுதா”, என்றான்.
அமர்ந்திருந்த இருவரின் உரையாடலும் ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றி என்பது அவர்களின் முகத்தின் தீவிரத்தில் தெரிந்தது. மேஜையில் இருந்த தேநீர் கோப்பைகளைப் பார்த்ததும், அவனுக்கும் தேநீர் தேவைபோல் இருக்க, அதை தயாரிக்க அன்பரசன் கிட்சன் நோக்கி நகர,
“டீ பிளாஸ்க்-ல இருக்கு.”, என்றாள் அறிவழகி அனிச்சையாக.
அறிவழகி அன்பரசனுடன் பேசுவதை முதன்முறையாக பார்த்த சுதர்ஷனுக்கு, இருவருக்குள்ளும் புரிதல் இழையோடுவது தெரிந்தது. ஆனால்… பிடித்தம் ? அன்பரசன் சோர்வாக அல்லது வருத்தமாக இருப்பதுபோலும், அறிவழகி கோபமான மனநிலையில் இருப்பதாகவும் அவனுக்கு பட்டது.
அன்பு உள் சென்றதும், “என்ன உன் கெஸ்ட் கிட்சன் வரைக்கும் போறாரு?”, என்று கிண்டலாக, சன்னமான குரலில் சுதர்ஷன் சொல்ல.. அறிவழகி அவனை முறைத்தாள்.
அன்பரசன் தேநீர் கோப்பையோடு வந்ததும், “என்ன நம்ம இந்தியா நிலைமை எப்படியிருக்கு?”, சுதர்ஷன் கேட்க, அறிவழகி இருவரின் பேச்சில் நாட்டமில்லாதது போல குனிந்து அலைபேசியை தடவிக்கொண்டு இருந்தாள்.

Advertisement