Advertisement

“இன்னமும் மிஸ்ஸர்ஸ். அன்பரசனா இருக்கறதுகூட உன்னோட தனிப்பட்ட விஷயம்தானா?”, கேள்வி எறிந்தான்.
“ஆமா, ஆசைப்பட்டு இல்ல, மாத்த முடியாதுங்கிற கட்டாயத்தினால கூட அப்படி இருக்கலாமில்லயா?”
“அப்டின்னா?”
கண்மூடி பெருமூச்சோடு, “ஹும். என்னோட பாஸ்போர்ட் உள்பட எல்லா ஐ டி லையும் நான் மிஸ்ஸர்ஸ் அன்பரசனாத்தான் இருக்கேன், மாத்தணும்னா ப்ரூஃப் வேணும், எங்கிட்ட அது இல்ல.”
“ஓஹ்”, என்று நிதானித்து, “கட்டாயத்துனால இல்லாம, நிஜம்ங்கிறதால மிஸ்ஸர்ஸ் அன்பரசனா இருக்க முடியாதா?”,இதயத்தில் லப் டப் தாறுமாறாய் துடிக்க, அறிவழகியை வேண்டுதலான பார்வையோடு அன்பரசன் கேட்க…
மூச்சை ஆழமாக உள்ளிழுத்து “முடியாது”, சொன்னவள் முகம் இறுகியிருந்தது. இருவருக்குமே அவர்களின் உரையாடலின் தாக்கத்தில் அந்த ஹாலே, வெப்பமானாற்போல் ஒரு உணர்வு தோன்றியது.
“ஏன்?”, பதில் தந்தே தீர வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது அவனது பேச்சில்.
“நான் இன்னமும் வீட்டுவேலை பாத்த மணியம்மையோட பொண்ணுதான். ஃபாரின்-ல வேலை பாக்கறதால எதுவும் மாறிடல”, கடினமான குரலுடன் வந்தது பதில்.
“ஓகே பட்..?”
“உங்க ஸ்டேட்ஸ்க்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொன்னது மறந்துடீங்கன்னு நினைக்கறேன்”
“கமான்.. அது பசங்க கூட பேசின ஒரு ஒரு சாதாரணமான விளையாட்டு பேச்சு.”
“அது என்னவோ தெரியாது. லீவ் இட். ஆனா வாழ்க்கையை பிச்சையா வாங்கிக்கற அளவுக்கு நான் தாழ்ந்துடல”
“அறிவழகி,  இப்பவும் புரியல”
“என் பொண்டாட்டியா இருக்கறதும் இல்லாததும் உன் விருப்பம்தான்- ங்கிறா மாதிரி விடுதலை பத்திரம் எழுதி, நம்ம மேரேஜ் சர்டிபிகேட்டும் எனக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் அனுப்பினது உங்களுக்கு மறந்து போச்சுன்னு நினைக்கிறேன்” உள்ளே உலைக்களம் கொதித்தாலும் சீராக மூச்சு விடும் குக்கரைப் போல, அறிவழகியின் கோபம் கூர்மையான வார்த்தைகளாக ஆனாலும் நேர்த்தியாக வந்தது.
“அது.. உனக்கு பிடித்தமில்லையோன்னு.. வீட்ல யாரோடையும் நீ ஒட்டலைன்னு சொன்னாங்க. எப்பவும் தனியா உம்முனு வேண்டா வெறுப்பா ரொம்ப ரிசர்வ்ட்-டா இருக்கறதா எங்கிட்ட சொன்னாங்க. ரெண்டு மூணு தடவ நான் பேங்க்-க்கு கால் பண்ணும்போதும், எப்படா பேசி முடிப்பான்-கிறா மாதிரிதான் நீ பேசின. வேலை கிடைச்சு ஹைதிராபாத் போன, ஆனா உன்னோட கான்டாக்ட்  நம்பரை யாருக்கும் தரல. அப்போ நான் என்ன நினைப்பேன்? பிடிக்கலைன்னு தான?, அப்போ கூட உனக்கு நான் ஆப்ஷன்தான் கொடுத்தேன்”
“எஸ். ஆப்ஷன்தான் கொடுத்தீங்க, ஆப்ஷனா ஒரு வாழ்க்கை எனக்கு வேணாம்-னுதான் சொல்லாம  வந்துட்டேன்.”,
“அப்போ, நான் லெட்டர் போட்டதுதான் ப்ராப்ளமா?”
“இல்ல, நாம சேர்ந்ததே ஒரு விபத்து, நம்மளோடது காதல் கல்யாணமோ, பெரியவங்க பாத்து பண்ணின கல்யாணமோ இல்ல, அது பரிதாபப்பட்டு நடந்த கல்யாணம். அது தேவையா தேவையில்லையான்னு என்னை முடிவெடுக்க சொன்னீங்க, ஐயோ பாவம்னு ஒரு மேரேஜ் எனக்கு தேவையில்லைன்னு தோணினதால விலகிட்டேன்”, இயம்பியவளின் முகம் பாறையாய் இறுகிக் கிடந்தது. இன்னுமொரு காரணம் கூட உண்டு, அதை அறிவழகி இவனுக்கு சொல்வதாக இல்லை..
அன்பரசனுக்கு அவளது பேச்சு புரியாமல் புருவம் முடிச்சிட, “பரிதாபப்பட்டு? ” என்று கேட்க வர, அதற்குள் அறிவழகியின் அலுவலகத்தில் இருந்து அவளது மேலதிகாரி அலைபேசி அழைப்பு விடுக்க, “எக்ஸ் க்யூஸ் மீ”, என்று கூறிவிட, இருவரின் பேச்சு தடைபட்டது. அலுவலில் மணிகள் நொடிகளாக கரைய, அறிவழகி அதனுள் மூழ்கிபோனாள்.
அவளது வேலை முடிந்து விடும் என்று சிறிது நேரம் காத்திருந்த அன்பரசன், அது முடியாததால் எழுந்து அறைக்கு சென்று படுத்து விட்டான்.  அறிவழகியின் பேச்சினால் குழப்பத்தோடு இருந்தவன், உட்க்கொண்ட மாத்திரையின் வீர்யத்தினால் அவனையுமறியாது உறங்கிப் போனான்.
ஹாலில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்த மேலதிகாரி & சக அலுவலர்களுடனான கான்ஃபிரன்ஸ் பேச்சினை முடித்து அறிவழகி திரும்பி பார்க்க, அங்கே அன்பரசன் இல்லை. ‘நிஜம்-கிறதால பொண்டாட்டியா இருக்க கூடாதா’, என்ற அவன் கேள்வி மனதில் தோன்றியது.
ஹூம். எது நிஜம்?
இலக்கில்லா வெறித்த பார்வையோடு, சென்னை நாட்களுக்கு அவள் மனம் பயணமானது.
ஹாஸ்டலில் சேரும் முன்னர், கமலாம்மா கேத்தரின் வீட்டுக்கு வந்து, கல்லூரி செல்வதற்கு இலகுவாக இருக்கும் என்று தெரிவித்து, அவள் அணிந்திருந்த கனமான தாலிக்கொடியை மாற்றி, சற்று மெலிதான சரடு சங்கிலியை தாலியுடன் கோர்த்து அறிவழகிக்கு போட்டுவிட்டார். நான்கைந்து புதிய சுடிதார்கள், இரவு உடைகள், ஹாஸ்டலில் தங்க தேவையான அத்தியாவசியமான பொருட்கள் என அனைத்தையும் எடுத்துவந்தார்.
“எதுக்கும்மா, இதெல்லாம், நாங்க பாத்துக்க மாட்டமா?”, என்று கேத்தரின் கேட்க.
“இதுலென்னங்க இருக்கு? இது ஒரு செலவா?, இந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு எங்க வீட்டுக்காரர் முடிவு பண்ணி புள்ளைக்கு கட்டி வச்சிட்டார். இனிமே எதுனாலும் நாங்கதான் பாக்கணும்”, என்றார். அவர் பேசியது கடமை உணர்ச்சியாக இருந்ததே ஒழிய, மருமகளுக்கு செய்வதைப்போல இல்லை, அவர் மீதும் தவறு சொல்ல முடியாது, சுசி-யைத்தானே இதுநாள்வரை அவர் மருமகளாக எண்ணி இருந்தது? இது எதிர்பாரா திடீர் உறவுதானே? மெல்ல மெல்ல தான் சரியாகும்.
விடுதியில் சேர்ந்த அன்று, அங்கிருந்த உடன் பயில்வோர் சிலரின்  ஏளனப் பார்வை சற்று புரிந்தாற்ப் போல் இருக்க, அதற்காக மனம் குன்றியவள், அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டாள். கல்லூரியில் இவள் விஷயம் ஏற்கனவே தெரிந்து அது விடுதி வரையுமே வந்திருந்தது.  உடன் இருந்த மாணவி, வட இந்தியாவைச் சேர்ந்தவளாகையால் அதிகம் பேச வாய்ப்பில்லாமல் போனது. அவளுக்குள் நத்தையாக சுருண்டு கொண்டாள்.
மறுநாள் கல்லூரிக்கு கிளம்பி ஹாஸ்டல் அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு அறிவழகி வர, [அங்கிருந்து இரண்டே நிறுத்தங்களில் அவளது கல்லூரி]  அங்கே பிரச்சனை  இவளின் கல்லூரி மாணவர்கள் மற்றும் அன்புவின் டீக்கடை நண்பர்கள் வடிவில் வந்தது. பேருந்து பயணத்தின் போதும், கல்லூரி வரையிலும் தொடர்ந்து வந்தவர்கள் முதல் நாள் ஜாடை மாடையாக பேச, அறிவழகி எதிர்க்காததால் நாளைடைவில் நேரிடையாகவே கிண்டல் செய்தனர்.
சில மாதங்களில் “ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்ப?”, என்று எல்லை மீற ஆரம்பித்தது. தன் தோழியிடம் இதைப்பற்றி அறிவழகி வருத்தத்துடன் கூற, “ஏண்டீ வாய்மூடிட்டு கேட்டுட்டு வர்ற? , திருப்பி பேசறதுதான? முடிலைனா உங்க மாமாகிட்ட சொல்லு, இல்லனா விநாயகம் சார் கிட்டயாவது சொல்லலாம்ல?”, என்று எஸ்தர் அறிவுறுத்த, அதை அவள் செயல் படுத்த முயலவில்லை. தருவிடம், அவள் அம்மாவிடம் கூட சொல்ல வேண்டாமென்றும் விட்டாள் காரணம், முதலாவதாக அவளது ஒரே ஆதாரமான படிப்பு தடைபடும், இரண்டாவதாக முன்பின் தெரியாத ஒரு வீட்டில், அவளை விரும்பாத உறவுடன் இருக்க நேரிடும்.
அவள் அமைதியை குலைக்கும் வண்ணம்,  இரண்டாம் ஆண்டு இறுதித்தேர்வு ஆரம்பிப்பதற்கு முதல் நாள், ஒருவன் “நான் அன்பரசனை விட பணக்காரன், எனக்காக இன்னிக்கு ஒரு நாள் உன் ரூம் கதவை தாப்பா போடாம வைம்மா”, என்று அவள் தோள் தொட்டு சொல்ல, இத்தனை நாள் பொறுத்த அறிவழகி வெகுண்டாள்.
பேருந்தின் இருக்கையில் அமர்ந்து இருந்தவள் நிதானமாக எழுந்து திரும்பி, அவ்வாறு கேட்டவனை ஓங்கி ஒரு அறை விட்டாள். பல்லைக் கடித்து, “இனிமே ஏதாவது பேசினீங்க…. “, அவனையும் அவனை சுற்றி இருந்த சிலரையும் பார்த்து ஆள்காட்டி விரலால் பத்திரம் காண்பித்தாள். நடத்துனரிடம், பேருந்தை நிறுத்தத் சொல்லி இறங்கி விடுவிடுவென ஹாஸ்டலுக்கு நடந்தே சென்றடைந்தாள்.
அவனை அடித்த வலது கை எரிந்தது. பாறையாய் இறுகிய முகத்துடன் ஹாஸ்டல் அறைக்கு வந்த அறிவழகி, எதிரே இருந்த அம்மாவின் படத்தை பார்த்ததும் உடைந்தாள். “அம்மா, என்ன ஏம்மா தனியா விட்டுட்டு போய்ட்ட?”, என்று அழ ஆரம்பித்தாள். தேற்றுவாரின்றி அழுது சோர்ந்தவள், கேவலோடு படுக்கையில் தன்னையுமறியாமல் தூங்கிப் போனாள்.
தூக்கத்தில் அவள் காதுகளில் மணியம்மை சொன்ன, “நாம சரின்னு நமக்கு தெரிஞ்சா போதும், ஊருக்கு நிரூபிக்கணும்னு அவசியமில்லை”, அசரீரி போல ஒலிக்க, புத்தி ஒரு நிலைக்கு வந்தது. அமர்ந்து அவளைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
இத்தனையும் எதனால்? அன்று அவள் வீட்டு நாதங்கி சரியாய் பொருந்தி இருந்தால், அம்மா மட்டும் கேத்தி ஆன்டி கடையில் தங்காமல் இருந்திருந்தால், அன்பரசன் குடிக்காமல் இருந்திருந்தால், அவன் நண்பரகள் அவனையும் கூட்டிக் கொண்டு மாடிக்கு சென்றிருந்தால், அவன் அவள் குடியிருப்புக்கு வராமல் அவன் வீட்டிற்கு போயிருந்தால்.. என இத்தனை இருந்தால்-களில் ஏதாவது ஒன்று நடந்திருக்குமானால், இப்படிப்பட்ட கீழ்தரமான பேச்சுக்களையோ அதன் பின் நடந்தவைகளையோ தவிர்த்திருக்கலாம். ஆனால், நடந்ததோ வேறு.
தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தவன் அவன், ஆனால் அவமானம் மட்டும் அவளுடையதாகியது. நடந்ததில் அவள் பங்கு ஏதேனும் உண்டா என்று யோசித்துப் பார்த்ததில் இல்லை என்பதை அவள் மனம் அறுதியிட்டுக் கூறியது.
இப்படியொரு சூழலில், ஒருவேளை விநாயகம் அவள் அப்பாவாக இருந்து, அன்பரசன் ஏழையாய் இருந்து இவ்வாறு நடந்திருந்தால்? இவளைத் தூற்றிய அதே  வட்டி பெண்மணி, ஊரையே கூட்டி, அன்பரசனை அடித்து துவைக்க வைத்திருப்பாள்.  அன்பரசனை, ‘திருட வந்திருப்பான், நல்ல பெண் மீது பழிச்சொல் போட வந்திருப்பான்,’ என்றல்லவா அவள் நாக்கு சொல்லி இருக்கும்?.
விநாயகமே, அறிவழகி தன் பெண்ணாக இருந்தால், என்னதான் இறக்கும் நிலையில் ஒருவர் இருந்தாலும், கேவலம் ஒரு குடிகாரனுக்கு தன் பெண்ணைக் கட்டி வைப்பாரா என்ன? மாட்டார், ஒருவேளை அசம்பாவிதம் நடந்திருந்தால் கூட, போலீசுக்கு போவாரே அன்றி தவறிழைத்தவனை மன்னித்து ஏற்பாரா என்ன?
இதே சூழலில், ஒருவேளை அன்பரசன் மட்டுமல்லாமல் அவன் சகாக்களும் இவள் வீட்டில் உறங்கியிருந்தால், அப்போதும் இதே முடிவினை விநாயகம் எடுத்திருப்பாரா என்ன?
இந்த திருமணம் பரிதாபத்தினால் மட்டுமல்ல, மகனின் குற்ற உணர்ச்சியை துடைக்கும் ப்ராயச்சித்தமாகவும் ஆக்கி கொண்டார் விநாயகம், என்ற முடிவுக்கு வந்தாள் அறிவழகி.
ஏழையாயிருந்தால், அதிலும் துணைக்கு ஆள் பலம் இல்லாதிருந்தால் இந்த ஊர் எதுவும் பேசும், எதுவும் செய்யும்.    
வேண்டாம், இந்த ஊர், இந்த இடம் எதுவும் வேண்டாம், தன் மீது கல்லெறிந்தவர்கள் எட்டாத உயரத்திற்கு போக வேண்டுமென முடிவெடுத்தாள். வங்கி வேலையொன்றையே குறிக்கோளாக்கி முழுமூச்சாய் முயற்சித்தாள், வெற்றி பெற்றாள். அவ்வங்கியின் துணை மேலாளர் மீண்டும் ஒரு கல்லெறிய, யாராலும் தொட முடியாத, தொடர்பே கொள்ள முடியாத உயரம் தொட்டாள்.  
அவமானங்கள் மனிதனை கால் இடறி புதைகுழியில் விழத்தட்டும். இழிபேச்சுக்கள் விழுந்த மனிதனின் மேல் மண் கொட்டி அவனை மேலே எழும்ப விடாமல் உயிரோடு பூமியில் புதைக்கும். சுற்றி உள்ளோரின் கீழ்ப்பார்வைகள், ஜாடை பேச்சுக்கள் அம்மண்ணில் புதைந்தவனின் மேல் நின்று அழுத்தும். மேலெழவேண்டுமென அசையா மன உறுதியுள்ளவன், அத்தனை அழுத்தங்களையும் தாங்கி நிற்பான். நின்றவன் அரிதிலும் அரிதான வைரமாவான். அறிவழகி அனைத்தையும் தாங்கி உள்ளே இறுகி கடினமாகி நின்றாள்.
வைரம் அறுக்கும்.

Advertisement