Advertisement

அத்தியாயம் 12
அன்பரசன் “சோ, நாம …”, பேசிக்கொண்டே எழ நினைத்தவனால் முடியவில்லை. அவனது கண்ணிமைகள் பாரமாக இருக்க, முயன்று கண்களை திறந்தான். எதிரே இருந்த அறிவழகி எங்கே? இதென்ன? நான் படுத்துக்கொண்டு இருக்கிறேன்? டைனிங் டேபிளில் சாப்பிட்டபடி அல்லவா பேசினோம் இருவரும்? இல்லை, இது படுக்கையறை. சே, கனவு. இத்தனை நேரம் அவளுடன் பேசியது எல்லாம் கனவிலா?
அன்பரசனுக்கு மிகவும் அயற்சியாக இருந்தது. விண் விண் என தலை வலிக்க, கட்டிலின் முனையைப் பிடித்து எழுந்து நிற்க முயற்சித்தான். நின்று ஒரு அடி எடுத்து வைக்க, கால்கள் நடுங்க ஆரம்பித்தது. என்ன ஆயிற்று எனக்கு? ஏன் இப்படி ஓர் கனவு? வங்கியில் அறிவழகியோடு பேசி, வீட்டிற்கு வரும்வழியில்  அவளைப்பற்றி சுதர்ஷன் சொன்னதை அசை போட்டுக்கொண்டே படுத்ததன் விளைவா?.
“அவ  சம்பளத்துல பாதிக்கு மேல் அந்த வீட்டுத் தவணையா  கட்றா, வீடு தேவையில்லை எங்களோட வந்து இரு-ன்னா மாட்டேன்-ன்னு தனியா இருக்கா, அக்ஷியைத் தவிர யாரோடயும் ஏன் தருவோடு கூட அதிகமா பேசறது இல்லை, சிரிப்புன்னா கிலோ என்னன்னு கேக்கற அளவுக்கு சிரிக்கறதையே மறந்துட்டா. செய்யற எல்லாத்துலேயும்  ஒரு தீவிரம், பிடிவாதம். ஹைதராபாத்லேர்ந்து பரோடா வந்த கொஞ்ச நாள்லயே விவகாரத்துக்குண்டான எல்லா விஷயங்களையும் நெட்-ல தேடி தெரிஞ்சிகிட்டா”
“உங்க பக்கம் இருந்தும் ஏதும் தகவல் இல்ல,  அவளுக்கு வேலை கிடைச்சதும்,  சரி செட்டிலாயிட்ட, இப்பவாவது கல்யாணம் பண்ணிக்க-ன்னு சொன்னா, தீர்க்கமா ஒரு பார்வை பார்த்துட்டு போயிடறா. மார்டினஸ் பத்தி நாங்களா கேள்விப்பட்டு, அவன் ஃபேமிலி பேக் கிரௌண்ட் நல்லாயிருந்ததால அவனை கட்டிக்கோ-ன்னு சொல்லி ஏன் மிரட்டி கூட பாத்துட்டேன். ஒரே வார்த்தைல, “உங்களுக்கு மறந்துடுச்சு போல, எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சு” சொல்லி முடிச்சிட்டா. அவ மனசுல என்ன வச்சிருக்கான்னு தெரில. அவ வயசுக்குண்டான எந்த ஆசாபாசமும் இல்லாம இருக்கா. அவளை எப்படி மாத்தறதுன்னு புரியாமல், தருவும் நானும், மண்டைய உடைச்சிக்கிட்டதுதான் மிச்சம்”
“உனக்கு ஏன் இதெல்லாம் சொல்றேன்னா, நீயும் இன்னமும் தனியாத்தான் இருக்க. அவகூட பேசி உங்க ரிலேஷன்ஷிப் சரி பண்ணிக்க ட்ரை பண்ணு. தப்பா எடுத்துக்காத, சப்போஸ் நீங்க சேர வாய்பில்லன்னு தோணுச்சுன்னா, வேற மேரேஜ்க்காவது அவளை ஒத்துக்க வை”, என்ற சுதாவின் குரல் இன்னமும் அன்பரசனின் காதுகளில் ஒலித்தது.
அன்பரசனுக்கு இரண்டு எட்டில் முக்காலி இருக்க, நடந்து சென்றவன் தடுமாறினான். முக்காலியைப் பிடித்தவாறு கதவைத் திறக்க முயல, கை நடுங்கியதால் சாவி தவறியது. கீழே குனிந்தால், தலை சுற்றி விழுவது நிச்சயம் என்பது புரிய, அறிவழகி வந்திருப்பாளா என்ற யோசனையுடன் கதவைத் தட்டினான்.
ஹாலில் விடுமுறையாதலால் நேரமாவது தெரிந்தும் சோம்பி படுத்திருந்த அறிவழகிக்கு இந்த ஓசை கேட்டதும், புருவம் சுருக்கி திரும்பி அறைக்கதவைப் பார்க்க, அதற்குள் “அறிவழகி”, என்று ஈனஸ்வரத்தில் அன்பரசனின் அழைப்பும் காதில் விழ, விருட்டென சென்று படுக்கையறைக் கதவைத் திறந்தாள். கண்கள் ஜிவுஜிவுத்துக் கிடக்க, முக்காலியை தாங்கினாற்போல் பிடித்து எதிரே முகம் வெளிற நின்றவனின் உடம்பில் அணல் அடித்தது.
“என்ன பண்ணுது?”
“ஃபீவரிஷ்-ஆ இருக்கு, கிட்டினெஸ்” அதற்கு மேல் சொல்ல முடியவில்லை. கையில் பிடிமானத்திற்கு இருந்த முக்காலியில் அமர்ந்துவிட்டான்.
பார்த்ததுமே தெரிந்தது, அவன் அலண்டு கிடக்கிறான் என்று, “ஓஹ்.”, நொடிகளில் சுதாரித்து, “பெட்- ல படுங்க”, என்று அவனை எழச் சொல்லி, மீண்டும் படுக்கையில் படுக்க சொன்னாள். அவன் எழுவதற்கு மீண்டும் தடுமாற, கைபிடித்து கட்டிலில் அமர வைத்தாள்.
அறையின் அலமாரியில் இருந்து தெர்மாமீட்டரை எடுத்து, அன்பரசனிடம், “வாயத் திறங்க, டெம்பரேச்சர் செக் பண்றேன்”
“நோ, நோ, ஃபஸ்ட் ப்ரஷ் பண்ணிடறேன்”, என்று படுக்கையில் உட்கார்ந்திருந்தவன் மீண்டும் எழ முயற்சித்தான்.
“ஃபீவர் அதிகமா இருக்கு, ஸ்ட்ரைன் பண்ணாதீங்க”, என அறிவழகி கூறவும்,
“வாயெல்லாம் கசப்பா இருக்கு, மௌத் வாஷ் மட்டும் பண்ணிக்கறேன்”, என்று சொன்னதும்,
“ம்ம், சரி வாங்க”, என்று அவன் கையை பிடிக்க அறிவழகி முயல, “ல்ல. பரவால்ல, உனக்கு ஏன் சிரமம்? நான் பாத்துக்கறேன்”, என்று அவனாகவே [சற்று தடுமாறினாலும்] எழுந்து சென்றான். ஐந்து நிமிடத்தில் அவன் வெளியே வர, அதுவரை அங்கேயே காத்திருந்தவள், அவனது உடல் வெப்பத்தை சோதித்தாள். தெர்மாமீட்டர் நூற்றி நான்கு காண்பித்தது.
“ஃபீவர் எவ்ளோ இருக்கு?”, அன்பரசன்.
யோசனையாக, “ம்ம். ஒன் நாட் போர் காமிக்கிது, உடம்பு வலி இருக்கா?” விசாரித்தாள்.
“ஆமா, ஜாயிண்ட் பெயின் இருக்கு”, என்றான்.
“நைட் என்ன சாப்டீங்க?”
“ம்ம். ஞாபகம் இல்ல”, என்று முணுமுணுத்து கண்களை மூடிக்கொண்டான்.
“சரி நீங்க படுத்துகோங்க” அவனை அப்படியே விட்டு, ரெஸ்ட் ரூம் சென்று தன்னை சுத்தம் செய்து வந்த அறிவழகி, கிட்சன் ஓவனில், உணவு அப்படியே இருந்ததைப் பார்த்து, அவன் இரவு சாப்பிடவில்லை என்பதை புரிந்து கொண்டாள். இரவு அவனுக்கு வீண் அலைச்சல், தேவையில்லாத டென்சன் அதுதான் காய்ச்சலுக்கு காரணமோ?, என யோசித்தவள், ‘ஹும். இவனுக்கு ஒரு போனை பண்ணிருக்கலாம்’ என்று தோன்றியது. ‘பேங்க் டேட்டா எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கணும்னு தோணிச்சே தவிர, இவன் ஞாபகமே வரலையே? என்ன பண்ண?’, தன்னை நொந்தவாறே, நொய்க்கஞ்சி தயாரித்தாள்.
தனக்கு காஃபி தயாரித்து குடித்தவள், கஞ்சியை ஆறவிட்டு, மிதமான சூடு வந்ததும், அன்பரசனுக்கு எடுத்துக் கொண்டு போனாள். அசதியாக உறங்குவதுபோல கண்களை மூடிக்கொண்டிருந்தான். உள்ளே சென்று, “உங்களுக்கு காஞ்சி ரெடி பண்ணிருக்கேன், கொஞ்சம் எழுந்து குடிச்சிட்டு, பாராசிட்டமால் போட்டுக்கோங்க”, என்றாள்.
அவளது குரலில் கண்விழித்தவன், “அங்க சிஸ்டம் டேபிள்ள வச்சிடு. நானே குடிச்சுக்கறேன், மாத்திரையையும் அதுலயே வச்சிடு”, எனவும்,
அவள் புருவன் சுருக்கி இவனைப் பார்க்க..
“வந்து.. ஃபீவர்  இருக்கு, உன் சேஃப்டி-காகத்தான்”, என்று மெதுவாக கூறினான்.
“ம்ம். ஆனா, உங்க சிம்டம்ஸ் பாத்தா ஃப்ளு மாதிரி இருக்கு, இது ஃப்ளு வர்ற சீசனும் கூட. எதுக்கும் மூணு நாள் மாத்திரை சாப்பிடுங்க “, என்று கூறி, உணவினை டேபிளில் வைத்து சென்றாள்.
அன்பரசனுக்கு நாரத்தையுடன் கஞ்சி அமிர்தமாக உள்ளே செல்ல செல்ல, சட சடவென வியர்த்தது. முழுதும் குடித்ததும் சற்று தெம்பு வந்தாற்போல் இருக்க, அவனைருந்திய இரண்டு பாத்திரத்தை வாஷ் பேசினிலேயே டூத்த்சம் செய்து,  சிறிது நேரம் கழித்து மாத்திரையையும் விழுங்கினான்.
பகல் பனிரெண்டு மணியளவில் அவனது அலைபேசி அடிக்க, பேசியின் சப்தம் கேட்டு அறையை  எட்டிப் பார்த்த அறிவழகி, அவன் அமைதியாக உறங்குவதையம் அருகிலேயே, பேசி அடித்துக் கொண்டே இருப்பதையும் பார்த்தவள், உள்ளே வந்து பேசியை சைலென்டில் போட்டாள். இந்த முறை அழைத்திருந்தது, ப்ரவீணா. அவளும் அவளது கணவனும் இருக்கும் புகைப்படத்தை செல் திரை காண்பித்தது. முன்பு பார்த்ததைவிட நல்ல செழுமையாக மாறியிருந்தாள். முகத்தில் இருந்த குழந்தைத்தனம் போய், பொறுப்பான பெண்ணாய் போட்டோ காண்பித்தது.
அன்பரசனின் பேசியிலிருந்து ப்ரவீனாவின் எண்ணை தனக்கு மெசேஜாக அனுப்ப நினைத்து, தனது எண்ணை உள்ளிட்டதும், அது wife என்ற தொடர்பை காண்பிக்க, ஒரு நொடி திரையை வெறித்து, தகவலை அழித்துவிட்டாள். ஹும். முன்னாடி EX போட மறந்துட்டான் போல, என்று நினைத்து  பின், பேசியை அவனருகிலேயே வைத்து விட்டு, அவளது வேலையை கவனிக்க சென்றாள்.
மதியம் இரண்டு மணி சுமாருக்கு எழுந்த அன்பரசன், ஜுரம் ஏதுமின்றி நன்றாக இருந்தான். பெட்டியிலிருந்து இரண்டு கையுறைகளை எடுத்து அணிந்து, கூடவே முக கவசமும் போட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
கணினியிலிருந்து தலை தூக்கிப் பார்த்த அறிவழகி, இவனது முன்னெச்சரிக்கைகளை மெச்சி, “லன்ச் ஹாட்பாக்-ல இருக்கு”, தகவலாக சொன்னாள்.
‘உடம்பு பரவால்லையா? எப்படி இருக்கு?’ பொதுவான விசாரிப்புகளாவது அவளிடமிருந்து வரும் என எதிர்பார்த்த அன்பரசன், இப்படி இயந்திரத்தனமான வார்த்தைகள் வர, சுணங்கினான்.
“மிளகு ரசமும், பருப்பு கூட்டும் பக்கத்திலேயே இருக்கு”, அவனது முகபாவனை மாறியதால் சொன்னாளோ? அல்லது இயல்பாக சொன்னாளோ? ஆனால் சாப்பிடு என்ற வலியுறுத்தல் இருந்தது அதில்.
“நீ சாப்டியா?”
அதுவரை அவளது வேலையில் மும்மரமாக இருந்தவள் நிமிர்ந்து, “ம்ம்” தலையசைத்து மீண்டும் வேலையில் கவனமானாள். ஆனால், மனமோ அம்மாவிற்கு பிறகு தன்னைப் பார்த்து உணவு குறித்து அக்கறையாக கேட்டது இவன்தான், என்று கூறியது. தரு அவளருந்தும் போதே இவளுக்கும் பரிமாறிவிடுவாள். எனவே அவள் தனியாக கேட்பதென்பது கிடையாது. இவனது வீட்டில் இருந்தவரை, ப்ரவீணா இவளோடு உண்பது வழமை. அவன் கேட்டதில், அவளது மனம் சற்று அசைந்தது உண்மை. சென்னையை பற்றி நினைக்கும்போதே ஹாஸ்டல்… அந்த நாட்கள் நிழலாட.. கண்மூடி ‘அதை நினையாதிருப்பது நலம்’, என முடிவெடுத்து, பார்த்துக் கொண்டிருந்த பங்கு வர்த்தக தரவுகளில் கவனத்தை திருப்பினாள்.
அன்பரசனுக்கு பசி மிகுந்திருந்தால், வட்டிலில் போட்டு அவனறைக்கு சென்று உண்டு முடித்தான். பின், சற்று நேரம் அறைக்குள் நடந்தவன், பேசியை எடுத்து மிஸ்ட் கால் பார்த்து பிரவீனாவை அழைத்தான். பரஸ்பர நல விசாரிப்புகள், அந்த நாட்டில் நடப்புகள் அலசி, கமலாம்மாவும் அங்கேதானே இருக்கிறார்? அவருடனும் பேசி, இவனது பயணத்திட்டம் நீட்டிப்பு செய்ததால் சென்னை செல்ல தாமதமாகும் என்று தெரிவித்தவன், மறந்தும் அறிவழகி பற்றி ஏதும் சொல்லவில்லை.
அறிவழகியிடம் பேசி தெளிவான பிறகு, அப்பாவுக்கு சொல்வதென முடிவெடுத்திருந்தான். ஏற்கனவே அக்ஷியுடன் பார்த்ததை வைத்து இவளுக்கு திருமணமாகிவிட்டதென அவசரப்பட்டு முடிவெடுத்து சொல்லிவிட்டான், மீண்டும் ஒரு தவறுக்கு வாய்ப்பு தர விருப்பமின்றி மனைவி பற்றி மறைத்து விட்டான். ஆனால், கடைசியாக பேசிய தங்கை, ‘அண்ணா, அப்பா அறிவு பத்தி சொன்னாங்க, நான் அதுகிட்ட பேசணும், முடிஞ்சா நம்பர் வாங்கித்தான்னா’ என்றபோது ‘சரிம்மா பாக்கறேன்’ என்று வைத்து விட்டான்.
பின் அவனது சென்னை அலுவலக நிர்வாகம், சம்பள பட்டுவாடா, சரக்குகளின் நிலவரம், வரவேண்டிய நிலுவைத்தொகை என்று அடுத்தடுத்த அழைப்புகளில் அவனது கவனம் செல்ல, இரவு உணவும் மதியம் போலவே இருவரும் எடுத்து, அன்றைய நாள் முடிந்தது.
அடுத்த நாள் காலை உணவு முடித்ததும் அன்பரசனுக்கு ப்ரவீனா ஒரு வீடியோ பதிவினை அனுப்பி இருந்தாள். அதை பார்த்த்தும் அவள், அறிவழகியுடன் பேச வேண்டுமென சொன்னது நினைவு வர, “ப்ரவீனா உன்கிட்ட பேசணும்னு நேத்து நம்பர் கேட்டா.. குடுக்கட்டா?”, அறிவழகியிடம் கேட்டான்.
“ஓ, அவ நம்பர் எனக்கு தாங்க, அப்பறமா நானே பேசறேன், எப்டி இருக்கா?”
“ம்ம்.. நல்லா இருக்கா, நிறைய விடியோ இருக்கு பாக்கறியா?”, என்று புகைப்பட கேலரியை திறந்து சில பல வீடியோக்களை அவளது பேசிக்கு அனுப்பி வைத்தான் மனதில் சின்னதாக ஒரு உதறல்.
ப்ரவீனா வீட்டில் கணவன், மாமனார் மாமியாரோடு எடுத்தது, அடுத்தடுத்து இருவர் மட்டுமாக இருந்த பதிவு என்று பார்த்தவள், அடுத்த ஒளிக்காட்சியில் கண்ணன், சுசித்ரா, ப்ரவீனா மற்றும் இரு குழந்தைகளோடு படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அதில் கண்ணனும் சுசியும் அருகருகே அமர்ந்திருக்க, ஒரு குழந்தையை இருவரும் சேர்ந்தாற்போல் பிடித்திருந்தனர். இருவரின் உரிமையான நெருக்கமும், பேச்சுச்சுக்களிலும், அவர்கள் கணவன் மனைவி என்பது தெரிந்தது. பார்த்த அறிவழகியின் மனம் படபடக்க ஆரம்பித்தது.
அவளுக்கு நேர் எதிரே, சிறிது தூரத்தில் டைனிங் ச்சேர்-ல் அமர்ந்திருந்த அன்பரசனுக்கு பிள்ளைகளின் குரலிலேயே அவள் என்ன வீடியோ பார்க்கிறாள் என்பது தெரிந்தது. “அது கண்ணன் ஃபேமிலியோட ப்ரவீனாவும் ஊட்டி போட்டிங் போனபோது எடுத்தது, பெரியவன் ஆகாஷ், சின்னவன் ஆஷிஷ்”, என்று சொன்னான்.
திரையையே பார்த்துக் கொண்டிருந்த அறிவழகிக்கு ‘ஏன்? சிறு வயதில் இருந்து அன்பரசனுக்கு என பேசி வைத்தவளாயிற்றே சுசித்தரா? சொத்தெல்லாம் கூட அன்பரசனுக்காக அவர்கள் வீட்டில் வாங்கி வைத்தனரே?’, என்றெல்லாம் ஞாபகம் வர,  “சுசிய உங்களுக்குன்னுதான பேசியிருந்தாங்க?”, சற்று அதிர்ச்சியை வெளிக்காட்டியது அறிவழகியின் குரல்.
“ம்ம்.”
“அப்போ ஏன்?”, குழப்ப ரேகைகள் முகத்தில்.
“எனக்குத்தான் கல்யாணமாயிடுச்சில்ல?”
“நாந்தான் வேணான்னு வந்துட்டேனே?”
“அப்போ நீ போனதுக்கு அவதான் காரணமா?”, கேள்வி கூர்மையாக வந்தது
“சே. சே. அப்டில்லாம் இல்ல”, வேகமாக மறுத்தாள், அந்த பெண் கொஞ்ச வாய்துடுக்கு, அடுத்தவர் மனவேதனை குறித்த கவலையின்றி பேசுவாள்  அவ்வளவுதானே தவிர கெட்டவளில்லை. தன் கைப்பொருள் கைவிட்டு போகிறதே என்ற ஆதங்கத்தில் சில வார்த்தைகள் வந்ததேயன்றி, சூது வாது தெரியாதவள்.
“அப்போ? வேறென்ன ரீஸன்?”
முகம் கடினமாக, “அது என்னோட தனிப்பட்ட விஷயம்”, என்றாள்.

Advertisement