Advertisement

அத்தியாயம் 11 1
அறிவழகிக்கு அலுவலகத்தில் நுழையும்போதே, மார்டினஸ்-ன் ஞாபகம் வந்தது. ‘ஐயோ, வீட்ல இருக்கிற இம்சை போதாதுன்னு இவன் வேற குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேப்பானே?’,  என்று பெருமூச்சு விட்டாள். டிமோத்தி மார்டினஸ், உடன் பணி புரிபவன், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், இவளை டேட்டிங்-க்கிற்கு அழைக்க, தான் திருமணமானவள் தவிரவும் தனக்கு அதில் விருப்பமில்லை என்று நாசூக்காக கூறி அவனது அழைப்பை மறுத்திருக்கிறாள்.
வெகு நாட்களுக்கு பிறகு இவள் தனியாக ஃபிளாட்-ல் வசிப்பதைத் தெரிந்து கொண்டு, அறிவழகிக்கு பிடிக்காத திருமணத்தை ரத்து செய்து, தனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு இரண்டு மூன்று முறை கூறியிருக்கிறான். இயல்பில் நல்லவன், எல்லை தாண்டிய வார்த்தைகளோ பார்வையோ அவனிடம் கிடையாது. கூடவே திறமையானவன், அலுவலக நிமித்தம் என்ன சந்தேகங்கள் எழுந்தாலும் மார்டினஸை அணுகலாம்.
அவனை சமாளிக்க, ‘ஒவ்வொரு வருட விடுமுறையின் போதும் நான் எனது வீட்டிற்கு செல்கிறேன்” என்று சமாளித்திருக்கிறாள். இப்போது அன்பரசன் புயலென வந்து சென்றதை என்னவென்று சொல்வது? ஹூம், என்ற நினைத்தவாறு கேபின் உள்ளே செல்ல, ஐந்து நிமிட இடைவெளியில்  டொக் டொக் சப்தம் கேட்டது.
‘யெஸ், கமின் ப்ளீஸ்.’
“ஹாய்”, அவனேதான். [think of the devil]. உள்ளே வந்தவன், இவளது சலனமுற்ற முகம் கண்டு, “ஏதாவது பிரச்சனையா?”, என்றான்.
‘டேய், போடா போடா, நாங்க சுனாமிலயே ஸ்விம்மிங் பன்றவங்க’, அழகாய் குறுநகை செய்து, “இல்லையே, எல்லாம் சரியா இருக்கு.”, என்றாள்.
“ஓஹ்”, என்று சில நொடி தாமதித்து, “யாரது உன்ன தேடி வந்தது?”
“என் ஹஸ்பென்ட்  “, என்றாள்.
சின்னதாக புருவம் சுருக்கி, “ஐ ஸீ, எப்ப வந்தார்?”, மார்டினசின் கேள்வியில் எச்சரிக்கை உணர்வு இருந்தது
“இருபது நாள் ஆச்சு, குவாரன்டைன் முடிச்சு தான் வெளில வர்றார்”
“ம்ம்.. எதோ டென்ஷனா இருந்தா மாதிரி…”, உங்களிருவருக்கும் பிணக்கா? என்பதை சுற்றிவளைத்துக் கேட்டான்.
“அதுவா, லேட்டாகும்னு அவருக்கு இன்போர்ம் பண்ணல, அதான் கொஞ்சம் கோபமா போறார்”.
“ஓஹ்.. அவ்வளவுதானா?”
ஆமென்று கண்மூடி தலையசைத்து, திடமான குரலில், “யா.., என் போன் டெட், சோ கால் பண்ண மறந்துட்டேன். அதான். அவர்க்கு என்மேல ரொம்ப அக்கறை”, ‘க்கும்.. இந்தனை வருஷம் உயிரோட இருக்காளா இல்லையான்னு கூட தேடாத அக்கறை’, என்று இகழ்ச்சியாக கூறியது அறிவழகியின் மனக் குரல். உடனே ‘அடியே, எந்த ஒரு தடயமும் இல்லாம ஓடி வந்துட்டு, தேடலைன்னா என்ன அர்த்தம்?’, இடித்தும் உரைத்தது. தன் நெஞ்சே தன்னைச் சுடும், ஆயினும் மார்டினஸின் பார்வைக்கு முறுவலுடன்தான் இருந்தாள்.
இந்த பதிலில், மார்டினஸின் முகம் சுண்டுவது தெரிந்தது. நண்பா, வேறெங்கேனும் தேடு,  நல்ல பெண் கிடைப்பாள். என்று மனதார வாழ்த்திவிட்டு கணினியை ஷட்டௌன் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினாள்.
மறுநாள் புனித வெள்ளி என்பதால், கலிபோர்னியாவில் பொது விடுமுறை. இன்றைய அதிகப்படியான வேலை பளுவால், பொது மக்களுடன் நேரடி வங்கி சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், மற்றும் அதன் தொடர்புடையவர்கள் மட்டும்  வார இறுதியான சனியன்று வந்தால் போதும், மற்றவர்கள் வீட்டிலிருந்து வேலையை செய்யுமாறு பணிக்கப்பட்டனர்.
வழியில் மார்டினஸ் “”catch u later, Have a nice Weekend”, என்று அவன் அர்த்தத்துடன் சிரிக்க…”ம்ம்”, தலையசைத்து ஈ என்று பற்களை காண்பித்து சிரித்தாள். ‘அடேய், நானே கடுப்புல இருக்கேன், ஓடிப்போயிடு’, வெட்கம் போல ஒரு பாவனையை முகத்தில் கஷ்டப்பட்டு கொண்டு வந்து முறுவலுடன், காரில் ஏறினாள்.
வண்டியை நகர்த்தியதும், தானாக முகம் இறுகியது. என்ன கேட்டான்? ஏன் தன்  பெயரை பின்னால் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்றுதானே?
அந்த டீச்சர் பாட்டி, LIC முகவர் என்பதால் மணியம்மையின் பெயரில் காப்பீடு செய்திருந்தார். அவர் பேத்தியின் தவறை மறைத்த பாவத்தை, LIC அலுவலகத்தில் பேசி மணியம்மையின் காப்பீட்டு தொகையை உடனடியாக காசோலையாக விடுவித்து ஓரளவு ஈடுகட்டினார். காசோலை அறிவழகியின் பெயரில் இருக்க, அப்பொழுது இவளுக்கு வங்கி கணக்கு ஏதுமில்லாததால், விநாயகம் அவருக்கு வெகு பழக்கமான வங்கியில், கணவன் மனைவி இருவரின் பெயரிலும் கூட்டுக் கணக்கு ஆரம்பித்தார். ஆனால், டெபிட் கார்ட்-டினை அறிவழகியிடம் ஒப்படைத்து, “இது எப்பயாவது தேவைன்னா வச்சிக்கம்மா, உன் செலவுக்கு நான் தனியா தர்றேன்”, என்று விட்டார். வங்கி பாஸ் புக்கில் இவளது பெயர் திருமதி.அறிவழகி அன்பரசன். வரி பிடித்தம் செய்யாமல் இருக்கவேண்டுமென வங்கி PAN நம்பரைக் கேட்டதால், தொடர்ச்சியாக வருமான வரித்துறையிலும் இவ்வாறே பதியப்பட்டது.
அன்பரசன் வெளிநாடு செல்ல கோவையில் ஆயத்தமாகிறான் என்பதை அறிந்து, அவனுக்கு கடவுசீட்டு எடுக்கும்போதே அறிவழகிக்கும் எடுத்தார். பள்ளி கல்லூரி  சான்றிதழைத் தவிர, மற்ற அனைத்திலும் பெயரில் பின்பாதியாய் இவனும் இருக்கிறான்.
அன்பரசன் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்டில் ஆராய்ச்சிப்பார்வை பார்த்த என்றே, அறிவழகி இப்படி ஏதாவது ஒரு பேச்சு அவனிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்திருந்தாள். என்ன ஒன்று, நிதானமாக, இந்தியா கிளம்புவதற்கு முன், இருவருக்கும் பிடித்தம் இல்லை மனமொத்து மணமுறிவு [divorce by Mutual Consent] கேட்டு பெட்டிஷனில் கையெழுத்து வாங்குவான் என்று யூகித்திருந்தாள்.
இல்லாவிட்டால் என்னதான் வேலை விஷயமாக அவன் எல். ஏ. வந்தாலும், மெனக்கெட்டு மாமா மாமியுடன் வர வேண்டிய அவசியம் என்ன? என்றெல்லாம் யோசித்து கொண்டு அவளது குடியிருப்பை அடைந்த அறிவழகி, “வருகிறேன் என் கணவனே, நீ எங்கே கையெழுத்து கேட்டாலும் இடுகிறேன் ஆனால் கேள்வி கேட்காதே உனக்கு அந்த உரிமை இல்லை அதை நான் உனக்கு தரவும் மாட்டேன்”, காரிலிருந்து இறங்கியவள் முகம் கடுகடுவென இருக்க மின்தூக்கி நோக்கிச் சென்றாள் பெண்.
அவளது சாவியை கொண்டு வீட்டைத் திறக்க முதலில் கண்ணில் பட்டது அங்கொன்றும் இங்கொன்றுமாக தாறுமாறாக கிடந்த அன்பரசனின் ஷூக்கள். பின் சோபாவில் கசங்கி இருந்த ரோட்ஸ்டர் ஹூடி (ஜெர்கின்), இவள் படுக்கும் ரெக்லைனரில் தொங்கிக்கொண்டிருந்த அவனது டி-ஷர்ட். கோபம் தலைக்கேற நேரே படுக்கையறை சென்றாள். அவனோ படுக்கையில் ஆனந்த உறக்கத்தில் இருந்தான்.
(கோவமா இருக்குற பொண்டாட்டிங்களே சமாளிக்க உலகளாவிய வழி ரெண்டுதான். ஒன்னு அவங்க கோபம் அடங்குற வரைக்கும் கண்ணுல படாம வெளியில போயிடணும், இல்லன்னா கவுந்து அடிச்சு படுத்து தூங்கணும். கொரோனாவால 1st வாய்ப்பில்லை.. சோ…)
ம்ப்ச்.. இவனோட…. பல்லைக் கடித்தபடி ‘நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டு சண்டை போடலாம்னு பார்த்தா இவன் இப்படி தூங்குறான். சரி காலையில பார்ப்போம்’, கறுவிக்கொண்டு அவளது மாற்று உடைகளை கையிலெடுத்து சப்தமில்லாமல் கதவடைத்து கூடத்திற்கு சென்றாள்.
கிச்சன் சென்று உடைமாற்றிவிட்டு அவளது படுக்கையில் கிடந்த அன்பரசனின் உடுத்திய துணிகளை தூக்கி சோஃபாவில் போட்டுவிட்டு படுத்துவிட்டாள். படுக்கும்போது கிட்டத்தட்ட மணி ஒன்று நாற்பது. அன்று முழுவதும் அலுவலக வேலை அதிகமென்பதால், இவனால் வீண் டென்ஷனும் ஏற்பட்டதால், படுத்ததும் கண்கள் உறக்கத்தை தழுவியது.
“டொக். டொக். டொக். அறிவழகீ.. அழகீ… டொக் டொக் டொக்..” கிணற்றிலிருந்து கேட்பதுபோல தொடர்ச்சியாக அன்பரசனின் குரல் கேட்டதால், தூக்கம் இன்னமும் வேண்டும் என்று அடம் பிடித்த கண்களை மெல்ல திறந்தாள். “டொக் டொக் அறிவு….பியூட்டீ……”, இப்போது சப்தம்  தெளிவாக கேட்டது. சட்டென காதுவரை மூடியிருந்த க்வில்ட்-டை நீங்கியதும், அன்பரசனின் குரல் நன்றாகவே கேட்டது. ‘அவன் ரூம்லேர்ந்து சே…சே என் பெட்ரூம்லேர்ந்து ஏன் கீச்சுக் குரல்ல கத்தறான்?’, மனஓட்டதோடு, கடகடவென அவளது சாவியைக் கொண்டு கதவைத் திறந்தாள்.
“ஓஹ் மை… “, “எவ்ளோ நேரமா கத்தறேன்…?”, அயர்ந்து போய்  கட்டிலில் வியர்த்து விறுவிறுக்க அமர்ந்தபடி கேட்டான்.
“என்னாச்சு?”
“சாவி இல்ல..”, சிறு பிள்ளைபோல சோர்வாக சொன்னான்.மணி பத்துக்கும் மேல் இருக்கும் என்று காலை வெயில் சொன்னது.
” எங்க போச்சு ?”
“நேத்து பெட் ரூமைத் திறந்ததுக்கப்பறம் மெயின் டோரை லாக் பண்றதுக்கு போனேன். கீயை ஹால்ல வச்சிட்டேன் போல.”, குழந்தை போல சொன்னான்.
“ஒரு கால் பண்ணிருக்கலாமில்ல?”
திரும்பி அவளை பார்த்து, “உன் போன் சுவிட்ச் ஆஃப்”, குறை கூறும் த்வனியில் கூறியவன், “நீ வர்றத்துக்கு இன்னும் ஐஞ்சு நிமிஷம் ஆயிருந்தா சுதாவைத்தான் கூப்பிடலாம்னு இருந்தேன், ரொம்ப கத்தி கூப்பிட்டா பக்கத்துல இருக்கிறவங்க நியூசென்ஸ்-ன்னு நினைச்சிட்டா..”, கைகளால் தலையை முட்டுக் கொடுத்து தொண்டையை செருமி செருமி பேசுபவனை பார்க்க, ஒரு திரைப்படத்தில் போலீசிடம் இரவு முழுவதும் மிமிக்ரி செய்து களைத்த சந்தானம் போல் இருந்தான்.
வந்த சிரிப்பை அவனுக்கு தெரியாமல் மறைக்க,  கிட்சன் பக்கமாக திரும்பி நடந்தாள். “ப்ளீஸ் ஒரு காஃபி கிடைக்குமா?”, என்று அறையிலிருந்து குரல் வர, சத்தமின்றி குலுங்கி சிரித்தாள்.
காஃபி தயாரித்து எடுத்துக் போவதற்குள் ஹாலுக்கு வந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடந்த துணிகளை துவைபாணில் போட்டான். ஷூக்கள் அதனறைக்கு சென்றுவிட்டன. பின் வழக்கம்போல சோஃபாவை குத்தகைக்கு எடுத்துக் கொண்டான்.
பானத்தை கொடுத்துவிட்டு அவளது வேலைகளை செய்ய அறைக்குப் போக, அன்பரசன் காலை உணவிற்கு தோசை மாவை எடுத்து அடுப்பருகே வைத்து, சட்னி தயார் செய்து விட்டான். பசி வயிற்றைக் கிள்ளத் துவங்க, தோசைகளை வார்த்து ஹாட் பாக்ஸ்-ல் வைத்து டைனிங் வந்து அமர்த்தான். அதற்குள் அறிவழகியும் வந்துவிட, “தோசை சட்னி ரெடி”, என தெரிவித்தான்.
சற்றே இலகுவான மனநிலைக்கு இருவரும் வந்திருக்க, இதுவே அவளுடன் பேச ஏதுவான நேரம் என்று முடிவெடுத்து,  “நேத்து உங்க ஆபிஸ்ல கொஞ்சம் பேசிட்டேன். மே பி தெரியாத ஊர், கொரோனா பிரச்சனை, அன்டைம் எல்லாம் சேர்த்து டென்ஷானாகிடுச்சு.”
“……”, சாப்பிட்டபடி அவன் பேசுவதை கேட்டாள்.
“ஒன்னு கேக்கலாமா? வேற எந்த தப்பான எண்ணத்திலயும் இல்ல. நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?,உன் ஆபிஸ்ல கூட யாரோ ஒருத்தன் உன் பின்னாடி சுத்தறான்னு …”
“சுதா சொன்னாரா?”, மூக்கு விடைக்க கேட்டாள்.
“ஸீ.. அவர் சொன்னார்-ன்னு இதை கேக்கல, மார்டினஸ் விஷயம் தெரிலன்னா கூட, நான் உன்கிட்ட இதை கேட்டிருப்பேன்”
“எதுக்கு? என்மேல என்ன திடீர்-ன்னு அக்கறை?”, மேலேறிய புருவம் நெறிந்து, தலை சாய்த்து அலட்ச்சியபாவத்துடன் அறிவழகி கேட்டாள்.
“அக்கறை எப்பவுமே இருக்கு. நீயாதான் ட்ரேஸ் இல்லாம காணாம போன. எங்கப்பா உன்னைத் தேட அவரால எவ்வளவு முடியுமோ அத்தனை ட்ரை பண்ணினார். உன் பேங்க்-ல கேட்டதுக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்ல. அம்மாவும் நமக்கு நடந்த  கல்யாணம் உனக்கு பிடிக்காத மாதிரி நம்ம வீட்டோட ஒட்டாமாத்தான் நீ இருந்த-ன்னு  சொன்னாங்க. உங்க மாமா போன் நம்பர் அப்பாட்ட இல்ல.  சரி, பெங்களூர் போயி அப்பா அவர் சொன்ன இடத்துல தேடினார். கான்ட்ராக்ட் முடிச்சு போயிட்டாங்கன்னு சொன்னாங்க. சரி, எந்த தொடர்பும் இருக்கக்கூடாதுன்னு நீ போயிட்டன்னு தான் முடிவுக்கு வரவேண்டியதா போச்சு.”, அன்பரசன் பேசப் பேச தீர்க்கமாக அவனையே பார்த்தவள் மனம் உலைக்களம் போல கொதித்தது.
அங்கே ஹைதிராபாத்தில் வேலையை விட்டு ஓடும்படி செய்தது இதோ இந்த அன்பரசன்தான். இவன் தொலைபேசி அழைப்புக்கள்.. அதிலும், துணை மேலாளரின் இருக்கைக்கு அருகே இருந்த பேசியில் பேச வேண்டிய கட்டாயம். கூடவே திருமணமாகியும் விடுதியில் தங்கி வேலை பார்ப்பது, கணவனை தவிர்ப்பது போன்ற இருவரின் தொலைபேசி உரையாடல்கள் அத்தனையும் அவனுக்கு [asst. mngr.] தெரியவர, அவன்,  அறிவழகியைப் பார்க்கும் பார்வை மாறியது.
கூடவே, விடுதியில் இவளோடு தங்கி இருந்த, அதே வங்கியில் பணிபுரியும் ஒரு பெண், அறிவழகிக்கு பதிவுத் தபாலில் வந்த விடுதலைப்பத்திரம் குறித்து வங்கியில் ஒலிபரப்ப, அறிவழகிக்கு இருந்த கொஞ்ச நிம்மதியும் போனது.
உடல் உபாதை காரணமாக [ஹாஸ்டலின் ஆந்திர உணவு இவளுக்கு சேரவில்லை] விடுப்பில் இருந்தவளைப் பார்க்கவென வந்த துணை மேலாளர், ‘உனக்கு தனியாக வீடு பார்க்கிறேன், அடிக்கடி வந்து போகிறேன். கூடவே, என் பதவி உயர்வுக்கு மேலதிகாரிகளை நீ கொஞ்சம் சந்தோஷப்படுத்தினால் போதும்’, என்று அவனது கேவலமான திட்டத்தினை அறிவழகியிடம் பகிர்ந்தான்.
கேட்ட அறிவழகிக்கோ அசூயை வந்து குமட்டியது. ஹாஸ்டலில் கேட்டதால் அதிரடியாக ஏதும் செய்ய முடியாத நிலை. அக்கயவனுக்கு ஆம் இல்லை என்று எதுவும் சொல்லாமல், மறுநாளே ராஜினாமாவை தபாலில் அனுப்பி, தரு-விற்கு போஸ்டிங் ஆகியிருந்த வடோதரா சென்றுவிட்டாள். இவனென்னமோ அறிவழகியின் மீதுதான்  தவறு என்று பேசிகொண்டிறுக்கிறான்.
“ம்ம். சரி. இப்போ என்ன சொல்ல வரீங்க, நான் ஓடிப்போனதுதான் தப்புன்னு. அதானா? ஆமா. ஒத்துக்கறேன். அதுக்கென்ன இப்போ?”, புலியை ஒத்த கூர் பார்வையுடன் அன்பரசனைப் பார்த்து கேட்டாள்.
“வெல், தெரிஞ்சோ தெரியாமையோ உன்னோட பிரச்சனைகளுக்கு நான் காரணமாயிட்டேன். நான் பண்ணின தப்பை சரிபண்ண முடிஞ்சா…”
“என்ன பண்றதா உத்தேசம்?”
“நமக்கு லீகலா விவாகரத்து ஆகலைன்னு நீ உன் வாழ்க்கையை ஆரம்பிக்காமா இருந்தா அதை சரி பண்ணலாம்னு.. “
“தட்ஸ் இட்.. பூனைக்குட்டி வெளில வந்துடுச்சி. இப்படி நேரடியா கேட்க வேண்டியதுதானா?  சிம்பிளா டிவோர்ஸ் வேணும்-ன்னு சொன்னா முடிஞ்சி போச்சு. அதைவிட்டுட்டு அக்கறை, உன் வாழ்க்கைன்னு.. எதுக்கு இந்த தேவையில்லாத பேச்செல்லாம்?”, அறிவழகியின் பேசிய விதத்தில் மிகைப்படுத்தப்பட்ட எள்ளல் தெறித்தது.
அவள் பேச்சின் சாரம் புரியாமல், ” எது தேவையில்லாத பேச்சு?”
“பேசறதுக்கு யாரு ட்ரைனிங் ? உங்க வொய்ப்-பா? இல்ல அவங்கம்மாவா? இல்ல ஒண்ணுமே தெரியாத மாதிரி இருப்பாங்களே உங்கம்மாவா?”
“அறிவழகி…. “, அன்பரசனுக்கு கோபம் வர ஆரம்பித்தது. ஆனால் இவன் அதட்டலைக் கேட்கும் நிலையில் அவள் இல்லை.
“நான் உங்க வீட்ல இருக்கும்போதே, இரண்டாம்தாரம்-னு  சட்ட சிக்கல் வருமோன்னு கவலையா இருக்குன்னு பேசினாங்க முத்து-ம்மா”வேகமாக பேசிக்கொண்டே சென்றவள், தலையில் தட்டிக்கொண்டு, “சட். இப்போ நான்தான் தேவையில்லாம பேசிட்டு இருக்கேன். பெட்டிஷன் 13பி எடுத்துட்டு வந்திருக்கீங்கதான? குடுங்க சைன் பண்றேன், அதை வாங்கிட்டு நீங்க கிளம்பலாம்”,
அன்பரசன் அமைதியாக அறிவழகியை பார்த்தான், அவனுக்கு பெட்டிஷன் 13பி என்னவென புரியவில்லை, “என்ன 13பி ?”
“divorce by mutual consent -க்கு உண்டான பெட்டிஷன். உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லாதீங்க, சப்போஸ் உங்களுக்கு தெரிலன்னா பரவால்ல, சுசிகிட்ட கேளுங்க, உங்க லக்கேஜ்ல சூட்கேஸ்ல எங்கயாவது வச்சிருப்பா.”
“அறிவழகி, நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு”
“ஓகே. நான் என்கிட்டே நீங்க கொடுத்த ரெஜிஸ்டரேஷன் டாகுமெண்ட், நீங்க சைன் பண்ணின பேப்பர்லாம் எடுத்துட்டு வர்றேன்”, தொடர்ந்து அவள் பேசிக்கொண்டே போக.
அன்பரசன் உணவு மேஜையிலிருந்த கண்ணாடி ஜாரை தட்டி “”ஸ்டாப் இட் ஐ ஸே.”, என்று கத்த விட ஜிலீர் என்ற சப்தத்துடன் அது விழுந்தது.
அந்த சத்தத்தில் அதிர்ந்து அறிவழகி பேச்சை நிறுத்தினாள்.
அன்பரசன் கையிலிருந்த அலைபேசியில் இந்தியாவிற்கு ஸ்கைப் இல் அழைக்க, “ஹலோ மாமா, சொல்லுங்க”, என்றாள் சுசித்ரா. இங்குள்ள கோபத்தைக் குறைத்து, சகஜமாக “எங்கம்மா உங்க வீட்டுக்காரன்?, கேட்டு விட்டு இவன் பக்கத்து வீடியோவை அணைத்து விட்டு, அறிவழகியின் அருகே வந்து, பேசியின் திரை அவளுக்கு தெரியும் படி நின்றான்.
சுசி, “தோ வீடு துடைச்சிட்டு இருக்கார் பாருங்க”, என்று சிரித்தவாறு கூறி திரையை அவளது கணவன் வேலை செய்வது தெரியுமாறு திருப்பினாள்.
அதில், “ஹாய் அன்பு, இதைக் கேட்க யாருமே இல்லையா? இவ என்னை வேலையா வாங்கி தள்ளறாடா, அதைக்கூட பொறுத்துக்குவேன், ஆனா, மூணு வேளையும்  இவ சமைச்சதே சாப்பிடற கொடுமை இருக்கே?…. அது குவாரன்டைன்-ன விட கொடுமையா இருக்கு”, என்று கலகலத்தவன் கண்ணன்.
பார்த்த அறிவழகி விழிவிரித்து ஒரு நொடி திகைக்க… , அவள் பார்வையில் இருந்து திரையைத் திருப்பி கண்ணன் உடனான பேச்சைத் தொடர்ந்தான் அன்பரசன்.
அன்பரசன் பேச்சை முடிப்பதற்குள் அறிவழகி தெளிந்திருந்தாள்.
“சோ..?”, என்று கேள்வியாய் அன்பரசனைப் பார்த்து கேட்டாள்.

Advertisement