Advertisement

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ சேஃபா சீக்கிரமா குட்டி பாப்பாவோட வீட்டுக்கு வர பாரு.”
“நீ வேணா பாரேன், நிச்சயமா ரெண்டே நாள்ல வந்துடுவேன்”, சிரித்தபடி காரில் ஏறும் தோழியைப் பார்த்தாள். போனமுறை அக்ஷி பிறப்பதற்கு டெலிவரிக்கு செல்லும் முன் எத்தனை அழுகை?. ம்ம். பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பலம் அல்லது பெரியவர்களின் ஆசி, அவர்களை பதட்டமின்றி கிளம்ப வைத்தது. மாமா மாமி தருவை ஏற்றுக் கொண்டு ஒரு குடும்பமாக ஆகி விட்டார்கள் என்பது மனதுக்கு ஒரு நிறைவைத் தர சந்தோஷமாக அக்ஷியைப் பார்க்க புல்வெளி சூழ்ந்த அந்த நடைபாதையைக் கடந்து வீட்டுக்குள்ளே போனாள்.
தருவிற்கு அன்று இரவே பிரசவமாகிவிட, உறுதியளித்தபடி, இரண்டே நாளில் வீட்டுக்கு அழகான பெண் மகவை கூட்டிக் கொண்டு வீடு வந்துவிட்டாள். சின்ன குட்டி அப்படியே சுதர்ஷனை உரித்து வைத்தாற்போல் இருக்க, அக்ஷிக்கு கேட்பானேன்? ஆனாலும், மாமாவும் மாமியும் இன்னமும் குழந்தையை கிட்டே சென்று பார்க்கவில்லை. ஒரே அறையில் தான் அடைந்து கிடந்தார்கள், ‘இன்னமும் சில நாட்கள்தானே, பொறுத்திருப்போம், இங்கே மகன், மருமகள், பேத்திகள் குரலை கேட்பதே எங்களுக்கு பேருவப்பாக இருக்கிறது’ என்றுவிட்டார்கள்.
குழந்தைக்கு பெயர் பெரியவர்கள் முடிவெடுக்கட்டும்  என்று தருவும் சுதாவும் சொல்லிவிட, ‘எப்போதும் குறைவிலாதிருக்கட்டும்’ என்று பொருள் தரும்  “அக்ஷயா”, என்று பெயரிட்டார்கள். அக்ஷிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ‘நானும் அக்ஷ்  என் தங்கச்சியும் அக்ஷ்’ என்று குதித்தாள்.
இடைப்பட்ட நாட்களில் சுதாவும் அன்பரசனும் போனில் பேசி பேசி நட்பாகிவிட்டனர்.  சில தேவைகளை அவன் கேட்க, சுதா நேரில் சென்று அவற்றைத் தர என இன்னமும் நெருக்கமாகி விட்டனர். அன்பரசன் நேரடியாக சுதாவிடம் பேசிக்கொண்டதால், இவளுக்கு அழைப்பு விடுத்து தொந்தரவு ஏதும் தரவில்லை.  இவளது கணினியை சுதா இரண்டொரு நாளில் அவளது வீட்டிலிருந்து கொண்டு வந்துவிட, அறிவழகி பணியை தொடர ஏதுவாக இருந்தது.
நாட்கள் வேகமாக நகர, அறிவழகி வேலை செய்யும் வங்கியில் ஒரு தொழில் நுட்ப சிக்கல் ஏற்பட, அறிவழகி தொடர்ச்சியாக அலுவலகம் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சுதாவின் வீட்டிலும் பெரியவர்கள் எந்த நோய் தொற்று உபாதையும் இன்றி இருந்ததால், இவள் இருக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போக, வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தாள். அன்பரசன் என்ன கோலத்தில் வீட்டை வைத்திருக்கிறானோ என்ற எண்ணமும் ஓரத்தில் இருந்தது.
சுதா சொல்லியதில் இருந்து, வீடு சுத்தமாக இருப்பதாகவும், அன்பரசனுக்கு இன்டஸ்டரி பகுதியின் அருகே பிளாட் ஏற்பாடு செய்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் சென்று விடுவான் என்றும் தெரிய வந்தது.
அன்று தருவின் வீட்டிலிருந்து கிளம்பி நேரே அலுவலகம் சென்று, வேலை முடித்து,  கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு, அவளது வீடு திரும்பினாள். அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தாள், அன்பரசன் வந்து கதவு திறந்து “வா” என்று முகம் மலர்ந்து அழைக்க, வீடு அவளுடையதா அவனுடையதா என்ற சந்தேகம் வந்தது.
வீட்டை வெகு நேர்த்தியாக வைத்திருந்தான். உள்ளே வந்ததும் “காஃபி?” என்று கேட்டான்.
குடித்தால் நன்றாக இருக்கும்போல்தான் இருந்தது, ஆனால் இவனென்ன எனக்கு உபசாரம் செய்வது, என்ற நினைவில் “நோ தேங்க்ஸ்”, சொன்னாள்.
“உனக்காக போடல, எனக்கு வேணும் சோ.. “, இயல்பாக இவளது பேச்சை இவளுக்கே திருப்பி சமையலறை சென்றான்.
பைகளை உள் அறையின் அலமாரியில் இவள் வைக்கப் போனாள். அங்கே ஒரு ட்ராயிங் ஸ்டேன்ட் இருந்தது, பாதி வரைந்த நிலையில் இரு படம்,  கீழே தரையில் பல வகை வண்ண வண்ணக் கலவைகள், தூரிகைகள் இருந்தன. ஒரு அட்டைப் பெட்டி நிறைய, சார்ட் காகிதங்கள். அதில் இவனது கைவண்ணத்தில் நிறைய பெயின்ட்டிங்குகள் என சமூக தனித்திருத்தலை உருப்படியாக கழித்த சுவடு தெரிந்தது.
கைப்பையை அலமாரியில் வைத்து விட்டு தன்னைச் சுத்தம் செய்து கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
டைனிங் டேபிளில் காஃபி இருந்தது, அமைதியாக அமர்ந்து குடித்தாள்.
“எஸ்தர் எப்படி இருக்காங்க?”, என்று அன்பரசன் கேட்க..
“ம்ம். நல்லா இருக்கா”
“தருதான் எஸ்தர்ன்னு நீ சொல்லவேயில்லை”
கேள்வியாய் அவனைப் பார்த்து, “நான் சின்னப்போலேர்ந்து அவளை தருன்னு தான் கூப்பிடுவேன்.சரி அதனால என்ன இப்போ?”
“சுதா கேட்டான், ஏண்டா இதுகூட உனக்கு தெரியாதான்னு?”
“அவருக்கு வேற வேலையில்ல”
“அது மட்டுமில்ல, இன்னமும் நிறைய சொன்னான்”
சுதா என்ன உளறி வைத்திருக்கிறான் என்று தெரியவில்லையே? மனசுக்குள் அவனை வைதபடி, “ஓ. ஓகே, பட் நான் ரொம்ப டையர்டு, டின்னர் முடிச்சிட்டு தூங்கலாம்னு இருக்கேன்.”, காபி கோப்பையுடன் கிச்சன் செல்ல எத்தனிக்க, “டின்னர் ரெடி பண்ணிட்டேன், ஜஸ்ட் சூடு பண்ணினா போதும்”
இதென்னாடா இவன் ஓவரா போறான், சரியில்லையே? “தேங்க்ஸ். ஆனா, எனக்கு நானே பாத்துக்கறேன்”, கடுகடுத்தாள்.
கிட்சன் சென்று பார்க்க கிட்டத்தட்ட அனைத்தும் மாறி இருந்தது. ஒரு பொருளும் அதனுடைய இடத்தில் இல்லை. கிச்சடி  செய்ய நினைத்து, ரவையைத் தேட அது வேறொரு டப்பாவில் இருந்தது. பாசிப்பருப்பு காணவே காணோம்.  ஒருத்தன வீட்டுக்குள்ள விட்டுட்டு? பல்லைக் கடித்தாள்.  எத்தனை டப்பாவைத்தான் திறந்து திறந்து பார்ப்பது? தலை வலிக்க, “இங்க பாசிப்பருப்பு வச்சிருந்தேன், எங்க வச்சிருக்கீங்க?”, கேட்டே விட்டாள்.
உள்ளே வந்த அன்பரசன்  கீழே இருந்த அலமாரியில் இருந்து அதை எடுத்துக் கொடுத்தான். பல பொருட்கள் இடம் மாறி / டப்பா மாறி இருக்க, “நாளைக்கு எல்லாத்திலேயும் பேர் எழுதி ஒட்டிடறேன்”, என்றான் மன்னிப்பு கேட்பது போல.
அறிவழகிக்கு பசிக்க வேறு செய்தது, வறுத்த ரவையை சிறிது ஆறவிட்டு, டப்பாவில் அடைத்து, “சாப்பிட என்ன இருக்கு?”, கேட்டாள்.
“சப்பாத்தி குருமா செஞ்சேன்”
“சாப்பிடலாமா?”
“ஓ யெஸ்”,  அவளுக்கு தெரியாமல்  நமட்டுச் சிரிப்பு, சிரித்துக் கொண்டான்.
முதன் முறையாக இருவரும் ஒருங்கே அமர்ந்து இரவு உணவை முடித்து, அவரவர் படுக்கைக்கு செல்ல, “தேங்க்  யூ மச்சி”, என்று சுதாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் அன்பரசன்.
மறுநாள் காலை அறிவழகி இருவருக்கும் உணவு தயார் செய்து விட, மளமளவென வேலைக்கு கிளம்ப, வாகனப் பிரச்சனை வந்தது. இருவருடையதும் அந்நாட்டின் அத்தியாவசிய தேவைகள் பிரிவில் வருவதால், இவர்களுக்கு ஊரடங்கு இல்லாமல் ஓட வேண்டி இருந்தது.
அன்பரசன் வாடகை வாகனத்தில் சென்று வர, அறிவழகி அவளது காரில் சென்றாள். காலையில் மனைவி சமைக்க, இரவு அந்த வேலையை தனதாக்கிக் கொண்டான், கணவன். ஓரளவு சுமூகமான ரூம்-மேட் நட்பு இருவரிடத்தும் வந்திருந்தது.
ஒரு நாள் அறிவழகி அலுவலகத்தில் இருந்து வருவதற்கு இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட, முதலில் அலைபேசிக்கு அழைத்தான், அது ஸ்விச் ஆஃப் ஆகி இருந்தது. பின் சுதாவிற்கு அழைத்து கேட்க, வங்கி எண்ணுக்கு தொடர்பு கொள்ள சொன்னான்.  அங்கிருந்த காவலாளியோ, வங்கியில் யாருமில்லை என்று தெரிவித்தான். மறுமுறை தொடர்பு கொள்ள அது அவுட் ஆஃப் ஆர்டர் என்றது.
“எங்கே போயிருப்பாள்?, விபத்து நேரிட்டிருக்குமோ? ரேஸிஸம் காரணமாக யாரேனும் ஏதாவது செய்திருப்பார்களோ?, இரவு நெடு நேரம் ஆகிவிட்டது சுதாவை இனி தொந்தரவு செய்ய முடியாது? என்று வித விதமாக கவலை வந்தது. வீட்டில் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கால் தேய்ந்து போனது. ஒரு கட்டத்தில், டாக்ஸி பிடித்து நேரே, அவளது அலுவலகம் செல்ல முடிவெடுத்து கிளம்பி விட்டான்.
வழியில் மறித்த போலீசிடம், வங்கியில் வேலை செய்யும் மனைவியைத் தேடி போவதாக சொல்லி, பதினைந்து நிமிடங்களில் அங்கே சென்று விட்டான். உள்ளே, மொத்த கட்டிடமும் இருளடைந்திருக்க, பெரிய சோடியம் விளக்கு கொண்டு தரைக்கடியில் இருந்த தடிமனான ஒயர்களை சிலர் சீர் செய்வது தெரிந்தது.
“யார் இந்த நேரத்தில் டாக்சியில் வருவது என்று பார்க்க, அன்பரசன் அவர்கள் அருகே சென்று அறிவழகி குறித்தது கேட்டான். வங்கி அமைந்திருந்த தளத்தை அவர்கள் கூறினர். கூடவே, மின்தூக்கி வேலை செய்யாது என்றும் தெரிவித்தனர். நல்லவேளையாக ஒன்பதாவது தளத்தில் வங்கி இருக்க, விடுவிடுவென படியேறி சென்றான். அங்கே அலுவலகத்தில் இன்வெர்ட்டரின் உதவியோடு ஏழுட்டு பேர் தீவிரமாக கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
வேர்க்க விறுவிறுக்க இவன் சென்றதும், முதலில் இருந்தவர் நிமிர்ந்து கேள்வியாக அன்பரசனைப் பார்க்க, “அறிவழகி இஸ் தேர்?”, என்றான்.
“யெஸ் “, என்று ஒரு கேபினை கை காண்பித்தார். நேரே உள்ளே சென்று கதவைத் திறக்க, அங்கிருந்த அறிவழகி அவன் வியர்வை பெருகும் உடையும், கலைந்த தலையையும்  பார்த்து திகைக்க, “என்னாச்சு?”, என்று எழுந்து நின்றாள் அவளையுமறியாது.
திறந்த கதவை பட்டென மூடி வங்கியை விட்டு வேகமாக வெளியேறினான். அறிவழகியும், அவனைப் பிடிப்பதற்கு கிட்டத்தட்ட ஓடினாள் என்று சொல்லலாம். படிக்கட்டின் வளைவில் திரும்பும்போது அறிவழகி அவனை எட்டி பிடிக்க, சட்டென கையை தட்டிவிட்டான். அதற்குள் அவள் அவன் முன்பாக சென்று மீண்டும் அவன் கையை பிடித்தாள்.
“என்ன விஷயம் சொல்லுங்க?”
“லேட்டாகும்னு ஒரு போன் பண்ண முடியாதா உனக்கு?”, பற்களுக்கிடையே வந்த வார்த்தைகளில் கிட்டத்தட்ட நெருப்பை உமிழ்ந்தான்.
“இவ்வளவு நேரமாகும்னு தெரியாது ….”
“உன் பேங்க் நமபரை சுதாகிட்ட கேட்டு, இங்க போன் பண்ணினேன், யாருமே இல்லன்னு ஒரு வீணா போனவன் சொன்னான்”
“ஆமா, நாங்க எல்லாரும் கிளம்பி கீழ போயிட்டோம் அப்பத்தான் ஷார்ட் சர்க்யூட் ஆச்சு. எங்க சிஸ்டம்-லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணத்தான் மறுபடியும் மேல வந்தோம், அதுக்குள்ளே எல்லா வொயரிங்கும் கொலாப்ஸ் ஆயிடுச்சு”
“உன் கூட இருந்த யாரும் அவங்கவங்க வீட்டுக்கு சொல்லலையா?”
“இல்ல நான் அத கவனிக்கல”
“அப்படி இல்ல, இவனுக்கென்ன போன் பண்றதுன்னு தோணிருக்கும்.”, விடாது கருப்பு போல அவன்.
அதுவரை தப்பு செய்து விட்டோமோ என்று தழைந்து பேசிய அறிவழகி, முகத்தை இறுக்கமாக வைத்து,  “லேட்டாகும்னு இதுவரைக்கும் யாருக்கும் போன் பண்ணினதே கிடையாது, என்னை யாரும் தேடினதும் கிடையாது, மோரோவர் உங்களுக்கு சொல்லணும்னு அவசியமும் கிடையாது” கடினமாக உரைத்தாள்.
“குடும்பத்தோட இருந்திருந்தா இதெல்லாம் தெரியும், நீ நாடோடி மாதிரி இருக்கறவதான?”
“மிஸ்டர், அதிகமா பேசறீங்க. நீங்க எங்கூட தங்கி இருக்கிற ரூம் மேட் அவ்வளவுதான்”
“போடி… ரூம் மேட்-டாம், அப்போ ஏன் பேருக்கு பின்னால என்பேரை நீளமா போட்டுக்கற?”, இவள் பிடித்திருந்த கையை உதறி, கீழே இறங்கி போய் விட்டான்.
சில நொடிகள் ப்ரமை பிடித்தவள் போல நின்றவள், பாதியில் விட்ட வேலை நினைவில் வர, திரும்பி அலுவலகம் சென்றாள்.
////////////////////////////////////

Advertisement