Advertisement

ரெக்லைனரில் படுத்திருந்த அறிவழகி, டேபிளில் இருந்த அன்பரசனின் பேசியிலிருந்து பார்வையை திருப்பி, மணி பார்த்தாள். அதிகாலை நான்கு இருபது என்று சுவர்கடிகாரம் காட்டியது. அது இந்தியாவில் நன்பகல் நேரம், அழைப்பை அசட்டை செய்து திரும்பி படுத்து விட்டாள்.
ஜெட் லாக்-கிலும், நேற்றைய மனக் குழப்பத்திலும் உறங்கியும் உறங்காமல் படுக்கை அறையில் இருந்த அன்பரசன்,  அவனது பேசியின் அழைப்பொலி கேட்டு எழந்து விட்டான். அவனருகில் பேசி இல்லாததும், இரவு சார்ஜ் செய்ய மேஜையில் வைத்ததும் கவனத்தில் வந்தது.
அவன் அறைக்கதவு திறந்து வெளியே வர, அதன் அரவத்தில், அறிவழகி உறங்குவதுபோல் கண்களை மூடிக் கொண்டாள். விடிவிளக்கு எரிந்துகொண்டிருக்க, அந்த வெளிச்சத்தில், மெதுவாக ஓசை எழுப்பாமல் வந்த அன்பு, மேஜையில் இருந்து பேசியை எடுத்து, இவளை ஒரு பார்வை பார்த்தான். அவள் பாசாங்கு செய்கிறாள் என்பது தெரிந்து, நிற்காமல் உள் அறைக்கு திரும்பினான். பேசியின் மிஸ்ட் கால் பார்த்து, ஊருக்கு அழைத்தான்.
தொடர்பு ஏற்பட, “சொல்லு சுசி”, என்று ஆரம்பித்தான். வீட்டிலிருந்து சுசித்ரா பேசினாள். இந்தியாவில் சுய ஊரடங்கு [அப்போ ] ஒரு நாளைக்கு அமல் படுத்தப்படும் தகவலைத் தெரிவித்து, அன்பரசனை ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறினாள். பின்னர் பிள்ளைகளிடம் போனைக் கொடுத்தாள். அங்கே அவர்கள் அடித்த லூட்டியை ஒருவன் மாற்றி ஒருவன் போனைப் பிடுங்காத குறையாக ஆகாஷ் ஆஷிஷ் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு விளக்க, அதிலும் சின்னவன் ஆஷிஷின் மழலை கேட்டு வாய்விட்டு சிரித்தான் அன்பரசன்.
அவன் பேச்சு மற்றும் சிரிப்பு சத்தம் கேட்ட அறிவழகிக்கு பொசு பொசுவென வந்தது. மணி ஐந்தாகிவிட, இதற்கு மேல் தூக்கம் வரும் போல் தெரியவில்லை. எழுந்து அமர்ந்தவள், பாத்ரூம் போக வேண்டுமே, ரூமில் அவன் இருக்கிறானே, தேவையில்லாத இம்சையை வீட்டுக்கு கூட்டி வந்திருக்கிறேனோ? என  ஒரு எண்ணம் வர, “ஹ்ம். இதுவும் நல்லதுதான், சில பிரச்னைகளை முற்றாக தீர்த்துக் கொள்ளலாம்,” என்று நடந்துகொண்டே தனக்குத் தானாக சொல்லி, படுக்கை அறைக் கதவை இரு முறை தட்டினாள்.
பெர்முடாசும் கட் பனியனுமாக இருந்த அன்பரசன் பாதி சாத்தியிருந்த கதவை விரியத்  திறந்தான். இடது கையில் போன் வைத்துவாறு மறுமுனை பேசுவதை கேட்டு, புன் முறுவலுடன்  ‘ம்’ கொட்டிக் கொண்டு இருந்தான்.இவள் நிற்பதை பார்த்து, “ஒரு நிமிஷம் இருடா”, என்று விட்டு காதிலிருந்து போனை எடுத்து, இவளைக் கடந்து கூடத்திற்கு சென்று, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான். அறிவழகிக்கு, அவனது ‘டா’ வில், காரணமின்றி எரிச்சல் வந்தது. ‘எவனோ எவளோடயோ பேசினா உனக்கென்ன?’, என்று அவளையே அதட்டிக்கொண்டாலும், அவள் மனதில் மூண்ட எரிச்சல் அடங்கவில்லை.
காலைக் கடன்களை முடித்து, அவள் வெளியே வரும்வரையும் அவன் பேசியபடிதான் இருந்தான். ஹாலில் இருந்த இருவர் அமரும் சோஃபாவின் [2 seat sofa] ஹாண்ட் ரெஸ்டில் தலை வைத்து படுத்தபடி, பேச்சில் மும்மரமாக இருந்தான். அவனது வீட்டில் ஆகட்டும், வெளியூரில் தங்கும் ஹோட்டலில் ஆகட்டும், அப்படி படுப்பது அன்பரசனது வழக்கம். சோஃபாவின் நீளம் அவன் உயரத்திற்கு காணாததால், கால் மடக்கி படுத்திருந்தான். இந்தியாவிலிருந்து பேசும் குட்டிகள், ஆகாஷ் மற்றும் ஆஷிஷின் உலகத்தில் இருந்தான்.
கிட்சன் சென்று, ப்ளாக் டீ போட்டு, கப்பில் ஊற்றி எடுத்து வந்த அறிவழகி, இதைக் கண்டதும் முகம் கடுத்தாள். அவளுக்கு சோஃபாவில் கால் வைப்பது பிடிக்காது, தவிரவும், அந்த சோஃபா பால் வெண்மை நிறம் கொண்டது, சிறிது அழுக்கானாலும் பளிச்சென தெரியும். அதைவிட அவளுக்கு தன் பொருட்களை மற்றவர் பயன்படுத்துவது அறவே பிடிக்காது. அதனாலேயே வீட்டை யாரிடமும் ஷேர் செய்துகொள்ளவில்லை, அவளது வீடு இருக்கும் இர்வைன் பகுதியில் இந்திய மாணவர்கள் அதிகம். இருப்பினும், யாருக்கும் பகிர்ந்து வாடகைக்கு விடாமல் தனித்திருப்பதையே விரும்புபவள்.
அப்படிப்பட்டவள், இவன் இப்படி மிக சாவதானமாக படுத்திருப்பதை பார்த்து ஏதும் செய்ய இயலாமல், படுக்கை அறைக்கு சென்றாள். அங்கோ, அவன் உபயோகப்படுத்திய படுக்கை !! நொந்துதான் போனாள், அழகி. தேநீர் கோப்பையை அங்கிருந்த கணினி மேஜை மேல் வைத்து, முக்காலியில் அமர்ந்து குடித்தாள். பின், அந்த படுக்கை மீதிருந்த விரிப்புகளை பார்க்கும் போது, அவன் வீட்டில் இவள் இருந்த நாட்கள் நினைவில் வந்தது.
கல்லூரித் தேர்வு முடிந்து ஆண்டு விடுமுறை விட்டதும், விநாயகம்  ஹாஸ்டலுக்கு வந்து அறிவழகியை வீட்டிற்கு கூட்டிச் சென்றார். அப்போது அன்பரசனது அறையைத்தான் அவள் உபயோகப்படுத்த நேர்ந்தது.  ஆனால், இவளோ அவன் கட்டிலைக்கூட உபயோகிக்காமல் கீழே பாய் விரித்துத் தான் படுத்துக் கொள்வாள். துணிமணிகளை, முடிந்தவரை அவளது பெட்டியிலேயே  வைத்துக் கொண்டு, தீராத பட்சத்தில் அவனது பீரோவில் ஒரு அடுக்கு மட்டும் ஒதுக்கி, தனியாக வைத்துக் கொண்டாள். ஏதோ ஒருவித காழ்ப்புணர்வு அவளுக்கு அன்பரசனின் மேல்  இருந்தது. அவனது கழுத்துவரை நீண்டிருந்த கலர் சாயம் பூசிய முடியும், ஒற்றைக் காது தோடும், குடிப் பழக்கமும் காரணமோ என்னவோ?
சரி அது அத்தனை வருடங்களுக்கு முன்பு என்று வைத்துக்கொண்டாலும், இப்போது நாகரீகமாக இருந்தபோதும், தனதுடமைகளை அவன் உபயோகிப்பதை ஏற்றுக்கொள்வதென்பது ஒருவித அசௌகரியமாகத்தான் இருந்தது, அவன் பெயரை பின்பாதியாக இன்றளவும் வைத்துள்ள அறிவழகிக்கு. ஹ்ம்.. தலையை ஆட்டி, அவளது மடிக்கணினியோடு அமர்ந்து கொண்டாள்.
ஹாலில் அன்பரசன் அவனது வீட்டாருடன் பேசி முடிக்க, கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகியது. அதன் பின் பேசியை கையில் வைத்தபடியே உறங்கியும் விட்டான். கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் கழித்து, மின்னஞ்சல்  வந்ததற்கான அதிர்வு வர, அப்போதுதான் மீண்டும் விழித்தான்.  அதில், அன்பரசன் அந்த நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் அழைப்பின் பேரில் வந்திருப்பதாக, இவனது ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து அத்தாட்சிக் கடிதம் வந்திருந்தது. கூடவே, பதினான்கு நாட்கள் கண்டிப்பாக தனித்திருக்க வேண்டும் என்ற அந்நாட்டின் நிபந்தனையை கைக்கொள்ளுமாறும், அதனுடன் கோப்பாக வந்திருந்த ஒப்பந்தத்தை பிரதி எடுத்து, கையெழுத்திட்டு ஸ்கேன் செய்து ஸ்விஸ் நிறுவனதிற்கு அனுப்புமாறு கேட்டிருந்தது.
தற்போது அன்பரசன் மேற்பார்வையிட வேண்டிய இயந்திரத்தின் பாகங்கள், செயல்பாடுகள், அவற்றை பழுது நீக்கும் வேலைகள் முதலியவற்றை அமெரிக்க பணியாளர்களுடன் தினமும் இரண்டு மணி நேரம் பேஸ்டைமில் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொண்டது. அனைத்தையும் பார்வையிட்டவனுக்கு, பதினான்கு நாட்களா? சும்மா இருப்பதா? என மலைப்பாக இருந்தது.
அப்போதே மணி எட்டாகி இருந்தது.  அவன் குளியல் அறைக்கு வரவேண்டி இருந்ததால், திறந்திருந்த அறையின் வாயில் வரை வந்து உள்ளே வர தயங்கி நிற்க, சின்ன தலையசைவோடு, அறிவழகி கணினியையும் எடுத்துக் கொண்டு அவ்வறையை விட்டு வெளியேறினாள். கட்டிலில் அமராமல், சாய்மானம் இல்லாத ஸ்டூல் போன்ற முக்காலியில் அறிவழகி அமர்ந்திருந்ததை பார்த்து புருவம் சுருக்கினான். சிறிது நேரம் இதில் அமர்ந்தாலே முதுகு வலிக்கும். தான் படுத்திருந்த மெத்தையை தவிர்த்திருக்கிறாள், பிடித்தமின்மையா அல்லது கொரோனா தவிர்ப்பு முன்னெச்சரிக்கையா? புரியவில்லை, ஆனாலும் இப்போதைக்கு இங்கிருப்பதைத் தவிர வேறு வழியில்லை, சமாளித்துத் தான் ஆகவேண்டும்.
வேறு வேறு ஊர்களில் பல வகையான ஹோட்டல்களில் தங்கி இவனுக்கு பழக்கமானதால், இங்கு வேறு இடம் என்ற எவ்வித தயக்கமுமில்லாமல் இருக்க முடிந்தது, ஆனால், அறிவழகியை பற்றி யோசிக்கும் போதும் மட்டும், இவளை பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமே, ஏன் இன்னமும்  திருமணம் செய்யாமல்.. இப்படி இங்கே தனியாக இருக்கிறாள்? ஒருவேளை சட்ட சிக்கல் காரணமோ? என்று கேட்டுவிட மண்டை குடைந்தது, ஆனால் அது அவளிடம் சட்டென்று கேட்க தயக்கமும் இருந்தது.
ஒப்பந்தம் போடும் நிறுவனத்திடம் கேட்டு, க்வாரன்டைன் காலம் முடிந்ததும் தங்குவதற்கு வேறு இடம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். செல்லும் முன் இவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், என்பதும் அவன் மனதில் இருந்தது.
குளித்து முடித்து,  தயாராகி ஹாலுக்கு வந்தான். காலையில் இருந்து எதுவும் சாப்பிடாதது பசித்தது. ஹோட்டலாக இருந்தால், காலையிலேயே உணவு தேநீர் இவைகளை அறைக்கு வரவழைத்து இருப்பான். இங்கே அறிவழகியிடம் கேட்கவா முடியும்? அவளோ கணிணியில் தலை புதைத்திருந்தாள். வெளியே ஆர்டர் செய்ய முடிவெடுத்து ஆன்லைனில் உணவகம் தேடினான். இவன் சோஃபாவில் அமர்வதை பார்த்து நிமிர்ந்து, “குட் மார்னிங்” என்றாள். அவனைப் பார்க்கும்போதே குளித்து திருத்தமாக இருப்பது புரிந்தது.
“குட் மார்னிங்”
“ப்ளாக் டீ குடிப்பீங்களா?”
“யா”, அப்பாடா இப்போதாவது கேட்டாளே.அவனது mind voice.
அறிவழகி கிச்சனுக்கு நகர, அவன் பேசியில் உணவினை தேடத் துவங்கினான். பத்து நிமிடம் கழித்து, பிரட் டோஸ்ட், பச்சைக் காய்கறிகள் இனிப்பு & கார சாஸ், கூடவே டீ-யையும் எடுத்து வந்து, இரண்டு நாற்காலிகள் கொண்ட டைனிங் டேபிளில் வைத்தாள்.  இதெல்லாம் தேவையில்லையே , என்பது போல அன்பரசன் புருவம் உயர்த்தி மறுப்பு சொல்ல நினைக்க,
“என்னோட பிரேக் பாஸ்ட் டைம் இது, சோ …”, உனக்காக தனியே எதுவும் செய்யவில்லை, என்ற குறிப்பு அதிலிருந்தது.
“தேங்க்ஸ்”, சொல்லி ஒரு பீங்கான் தட்டை எடுத்து மீண்டும் சோபாவிற்கு  சென்று அமர்ந்து சாப்பிட்டபடி, “நீ என்ன பண்ற, ஐ மீன் என்ன ஜாப்? “, எனக் கேட்டான்.
“எஸ்.ஏ.பி.  அனலிட்டிகல் பேங்கிங், என்னோட ப்ரஃபஷன்,  XXXXX பேங்க் ஹெட் ஆபிஸ்-ல ஒர்க் பண்றேன்”, ரொட்டியில் காய்கறிகளை அடைத்து சாஸ் ஊற்றி, சாப்பிட ஆரம்பித்தாள்.
“ம்ம். ஆபிஸ் போணுமா?”
“இல்ல, தருக்கு டெலிவரி டைம். அதனால, லீவ் போட்டிருக்கேன்”
“ம்ம்”
“இப்போ, இந்த பான்டமிக் நேரத்துல லீவ் குடுக்குறாங்களா என்ன? பேங்கிங்-ல வேலை நிறைய இருக்குமே?”,
“நான் மூணு மாசத்துக்கு முன்னாலே அப்ளை பண்ணிட்டேன், இப்பவும் ரொம்ப தேவைன்னா கூப்பிட சொல்லி இருக்கேன்.”
“ம்ம்”
அறிவழகியின் அலைபேசியில் சுதா அழைத்திருந்தான்.
“ஹலோ”
“அறிவு, தருக்கு லைட்டா பெயின் வருதுன்னு சொல்றா, நான் அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன். நீ இங்க வந்து அக்ஷிய, அப்பாம்மாவை பாத்துக்க முடியுமா?”, பேச்சில் பதட்டம் இருந்தது.
கையிலிருந்த பாதி ரொட்டியை அப்படியே கீழே வைத்து, “ஓஹ். நான் இப்ப வரேன்.. நீங்க டென்ஷனாகாம இருங்க.” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
“எனி ப்ராப்ளம்?”, அன்பரசன்.
“ம்ம். தருக்கு லேபர் பெயின், சுதா அவளை கூட்டிட்டு ஹாஸ்பிடல் போறாங்க, நான் இப்ப அங்க போறேன்”, எழுந்து, சிறிது யோசித்து “ம்ம். உங்களுக்கு ஃபுட், ஆன்லைன்-ல  கிடைக்கும், வீட்லயும் தேவையான சாமானெல்லாம் இருக்கு. விருப்பம் இருந்தா சமைச்சு சாப்பிடுங்க, எது வேணும்னாலும் கால் பண்ணுங்க”,
“ஓகே, நான் பாத்துக்கறேன்”,
“டூப்ளிகேட் சாவி கப்போர்ட்-ல இருக்கு,  நடக்கற தூரத்துல ஸ்டோர்ஸ் சூப்பர் மார்க்கெட் இருக்கு, ஆனா, ரொம்ப முக்கியம்னா மட்டும் போங்க. ஒரு வாரமாவது ஆகும்ன்னு நினைக்கிறேன். நான் இல்லன்னா சுதா அப்பப்ப வந்து பாக்கறோம்”, என்றவள் மளமளவென கிளம்ப ஆயத்தமானாள்.
ஐந்து நிமிடத்தில் அறையிலிருந்து வெளியே கிளம்ப ஜீன்ஸ் லாங் ஷர்ட் சகிதம் தயாராகி வந்தவள், கிச்சனை சுற்றி ஏதேனும் திறந்திருக்கிறதா, அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்தாள். அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தது.
கைப்பை சிறிது கனமாக இருந்தது, அதில் பர்சை தேடிப் திணித்துக் கொண்டவள்,  கார் சாவி இருக்கும் அலமாரியை நோக்கி போக…
“இன்னும் நீ சாப்பிடல”, என்றான்.
டைனிங்-கில் இருந்த பிரெட்-டை பார்த்து, “ஓஹ்.. யா”, இரண்டு நிமிடத்தில் வாயில் திணித்து, கிளம்பினாள். வீட்டை விட்டு வெளியேறி காரில் அமர்ந்ததும், அன்பரசனிடமிருந்து தப்பித்த  ஒரு வித விடுதலை உணர்வு தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
அன்பரசனுக்கு இது புதுவிதமான அனுபவம். தனிமை அவனுக்கு பழகிய விஷயம்தான். ஆனால், முன்பின் தெரியாத நாட்டில், பெயரளவில் மனைவியாய் இருப்பவள் வீட்டில் வெளி உலகை பார்க்காமல் இருக்க வேண்டும். ஹும். ஆழ மூச்சிழுத்துவிட்டு, இன்னமும் பதிமூன்று நாட்கள், சிறையிருக்க வேண்டும் என்று தோன்றியது.
அறிவழகி சுதர்ஷனின் வீட்டிற்கு கால்மணி நேரத்தில் சென்றுவிட்டாள்.  அங்கே தரு சுதா இருவரும் காரில் ஏறுவதற்கு தயாராக வாசலில் இருக்க, “இன்னும் ஏன் ஹாஸ்பிடல் போகல?”, என்று தருவைப் பார்த்தபடி சுதாவைக் கேட்டாள்.
“அம்மா ஒரு கஷாயம் வச்சு குடுக்க சொன்னாங்க, குடுத்தேன். குடிச்சுட்டு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்து கிளம்ப சொன்னாங்க. இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்-ஆ இருக்குன்னு சொல்றா, தோ கிளம்பிட்டோம்.”
“ஓ.. ஒன்னும் பிரச்சனை இல்லையே? தரு, நானும் வரட்டா?”, சற்று கவலையாக கேட்டாள்.
“இல்லடி, நீ இங்க அத்த மாமாவை பாத்துக்கோ,  இந்தியாலேர்ந்து ட்ராவல் பண்ணி வந்தாங்கல்ல ? எங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு அவங்க தனியா ஒரு ரூம்ல இருக்காங்க, quarantine-ன்னு சொன்னதும் அக்ஷி புரிஞ்சிகிட்டா, நிறைய பாட்டு, விடுகதைன்னு அவங்களோட செம பிஸியா இருக்கா, சாப்பாடு மட்டும் பாத்துக்கோ. போதும்.”,

Advertisement