Advertisement

ஜெய் ஸ்ரீராம் 
அன்பும் அறிவும் உடைத்தாயின்
அத்தியாயம் – 1
“இது உன் பையனா?”, என்று திடுமென எதிரில் நின்று கண்ணோடு கண் நோக்கிக் கேட்டவனைப் பார்த்ததும், அறிவழகிக்கு மனம் தடதடக்க ஆரம்பித்தது. கேட்ட அவன் குரலில் கட்டுப்படுத்த நினைத்தும் வெளிப்பட்ட, அப்பட்டமான குற்றம் சாட்டும் தொணி. அவள் கையைப் பிடித்து நின்றுகொண்டிருந்த நான்கு வயதே நிரம்பிய அக்ஷிதாவைப் பார்த்த அன்பரசனின் பார்வை ஆராய்ச்சிப் பார்வையாக மாறி இருந்தது.
“அப்பா மாதிரியோ?”, நிமிர்ந்து அவளைப் பார்த்து மீண்டும் கேட்டு,  அருகே இருந்த ரோலர் கோஸ்டருக்கு பார்வையைத் திருப்பிக்  கொண்டான்.
அவனது முதல் கேள்வியையே உள்வாங்காமல், திகைப்பா, பயமா இல்லை மகிழ்ச்சியா, சட்டென தடதடக்க ஆரம்பித்த  அவளது மனதின் உணர்வினை பகுக்க இயலாமல் கேள்வி கேட்டவனை கண்களில் நிறைத்து, விழியாகற்றாமல் பார்த்தாள்.
அரை நிமிடம் நீடித்ததோ என்னவோ, அவனது  அடுத்த கேள்வியில் ஸ்மரனை வரப்பெற, “வாட்?”, என்றாள், புரியாது.
“இல்ல.. உன் பையன் அப்பா மாதிரியா?, உன் ஜாடை இல்லையேன்னு கேட்டேன்”, என்றான் விளக்கமாக.
சட்டென முகம் கடுத்து, “பையனில்ல, பொண்ணு.., பேரு அக்ஷிதா… “, என்றவளை தொடரவொட்டாமல், அறிவழகியின் ஸ்டோலை இழுத்தவாறே, “மீ அக்ஷ் பியூட்டிமா”, என்றாள் குழந்தை. அவளது ப்ளே -ஸ்கூலில் அக்ஷியின் செல்லப் பெயர் அது.
“யா அக்ஷ், நைஸ் நேம்”, என்றான் பிள்ளையின் தலையாக கோதி.
“உன்னை தூக்கிக்கட்டுமா?”, என்று அன்பரசன் அக்ஷியைப் பார்த்து கேட்க.. அது முழித்தது.
“அவளுக்கு தமிழ் தெரியாது, குஜராத்தி ஹிந்தி, இங்கிலிஷ் தான் வரும்”
“விளங்கிடும், ஊருவிட்டு ஊரு போனா, தாய்மொழிய கூட கத்துக்க கொடுக்க மாட்டிங்களா?”, மீண்டும் நறுக் பேச்சு.
அன்பரசனின் பேச்சில், அறிவழகிக்கு சுறுசுறுவென கோபம் முகிழ்த்தது. போடா… உன்னோட எனக்கென்ன பேச்சு? நீ என்ன வேணா சொல்லிக்கோ, அத பத்தி எனக்கென்ன கவலை?
சவுத் இந்தியா வந்திருக்கக்கூடாது, அதுலயும் பிடிவாதமா வேண்டுதல்-ன்னு திருப்பதிக்கு.., ப்ரமோற்சவ நேரத்துல .. சனிக்கிழமைல வந்திருக்கக்கூடாது,  தரிசனத்துக்கு பத்து  மணி நேரம் ஆகும்னு கவுண்ட்டர்ல சொன்னானே அப்பயாவது யோசிச்சிருக்கனும். மண்டைல மேல்மாடி காலிதாண்டி உனக்கு, என்று தன்னைத்தானே நொந்துகொண்டிருந்தாள். பக்கத்திலே, அன்பரசன் குனிந்து குழந்தையிடம் ஆங்கிலத்திலே பேசி, உயர்த்திபிடித்துக்கொண்டால்.. வியர்க்காது என்றெல்லாம் கூறி அக்ஷியின் சம்மதத்துடன் அவளைத்  தூக்கியவாறு அருகில் நின்றதும், பேசிக்கொண்டிருப்பதும் தெரிந்தது.
“வேர் இஸ் யுவர் டாட்?”
“ஹி ஐஸ் இன் எல். ஏ”, என்று அழகாய் பதிலுரைத்தது.
“ஓஹ் …? “, சின்ன ஏமாற்றம் இருந்ததோ குரலில், லாஸ் ஏஞ்சலில் இருக்கும் இவள் கணவனைக் காண முடியாதென்பதாலா?, மனதோடு முகமும்  சுணங்கிற்று.
“மொத்தமா இந்தியாவையே தலைமுழுகிட்டு வெளிநாட்டுக்கே  போயாச்சா? “, திரும்பி அறிவழகியை கேட்க.., குழந்தையை உயர்த்தி தூக்கி வைத்திருந்ததால், நச்சென அவனது முழங்கை இவளது விலா எலும்பில் இடித்தது.
“ஸ்ஸ்…”, தேய்த்து விட்டவள்… “ஆமா, இப்போ அதுக்கென்ன?, சே.. இந்தவூர்ல நிம்மதியா சாமி கூட கும்பிட முடில”, பேசக்கூடாதென்று  நினைத்தாலும் வலி தானாக பேச வைத்தது.
அறிவழகி நிமிர்ந்து பார்ப்பதற்குள், அவளை ஆழமாக ஒரு முறை பார்த்தவன்… அதன் பிறகு அவளிடம் பேசவில்லை.
வரிசை ஒருவழியாக நகர்ந்து, ஒரு பெரிய கூடத்தை அடைந்தது. அங்கங்கே தரிசனத்திற்கு தோராயமாக எத்தனை நேரம் பிடிக்கும் என்ற விபரம் ஐந்து மொழிகளில் ஸ்க்ரோல் ஆகிக்கொண்டிருந்தது. யாருக்கும் தொந்தரவு கொடுக்காதவாறு இடம் பார்த்து அமர்ந்து, ஒரு கூட்டம் கோவிந்த நாம பஜனை செய்ய ஆரம்பிக்க…, அதில் அறிவழகியும் சேர்ந்து கொண்டாள். அக்ஷியும், “பியூட்டிமா”, என்று குரல் கொடுக்க…, அன்பழகனும் கூடவே போகவேண்டியாதாகியது.
சிறிது நேரம் பஜனையை வேடிக்கை  பார்த்த அக்ஷி, ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டுமென கூற.. அருகில் இருந்த தெலுங்கு வாலன்டியர் உடைந்த தமிழில் வழி சொன்னாலும், அறிவழகிக்கு புரியவில்லை. “நானும் கூட வர்றேன், போ”, என்று அவனும் கூடவே வந்து வழி காட்டினான். வேண்டாம் என்று தடுக்க முடியவில்லை, திருமலையின் வளைந்து வளைந்து செல்லும் பாதைகள் அப்படி.
வாசல் வரை வந்தவன், வெளியே நின்றுகொண்டு, “போங்க”, என்றான். நொடி நேரம் அவனது முகத்தைப் பார்த்து கையில் இருந்த ஹாண்ட் பேக்கை அவனிடம் கொடுத்து, “ப்ளீஸ்…”, என்று விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
கைப்பை, சற்று கனமாகவே இருந்தது, ஜிப் அரைகுறையாக போட்டு இருந்தது, உள்ளே சாப்பிடுவதற்கு சில பல நொறுக்குத்தீனிகள் இருப்பது தெரிந்தது.  அவளது இதமான உடல் சூடு பையில் மிச்சமிருந்தது. சின்ன பெருமூச்சோடு பையை இறுக்கிக் கொண்டான்.
இருவரும் வெளியே வரவும்…, அன்பரசன் அவனது பர்ஸை, அறிவிடம் கொடுத்து.., “ரஷ் அதிகமா இருக்கு, இங்கயே வெயிட் பண்ணுங்க, இப்ப வந்திர்றேன்”, என்று விட்டு வாஷ் ரூம் சென்றான்.
ஒரு கையில் அக்ஷியைப் பிடித்தபடி, மற்றொரு தோளில் கைப்பையும் இருக்க, பர்ஸை வாங்கியவள், கைப்பையில் அதை பத்திரப்படுத்தி, அதன் முழு ஜிப்பையும் இழுத்து மூடினாள். கூட்டம் காரணமாக, அக்ஷியை தூக்கி காத்திருந்து நிற்க..,அன்பு வந்துவிட்டான். அக்ஷியை அவனிடம் மாற்றிக்கொண்டு, இவளையும் கூடவே வருகிறாளா என்று பார்த்தபடி, அவர்கள் முன்பு காத்திருந்த கூடத்தை வந்தடைந்தனர்.
சிறிது நேரம் சென்றபின், வாலன்டியர்கள், தரிசனத்திற்காக காத்திருப்போர்களுக்கு உணவு வழங்க, அறிவழகி, இரண்டு தட்டுகளில் உணவு வாங்கி ஒன்றில் ஸ்பூன் போட்டு அக்ஷிக்கு கொடுத்தாள். சாம்பார் சாதம் இரண்டு வாய் சாப்பிட்டதும், முகமெல்லாம் சிவந்து விட்டது, “ஓஹ். பியூட்டிமா.. இட்ஸ் ஹாட்”, என்க.. தண்ணீர் குடித்தும் அக்ஷிக்கு காரம் அடங்காமல் “உஷ்.. உஷ்.. “, என்று தவிக்க…, வாலன்டியடிடம் சக்கரைப் பொங்கல் கேட்டு வாங்கி, அறிவழகியிடம் கொடுத்து  ஊட்டி விட வைத்தான்.
நல்ல வேளையாக, இன்னமும் இவர்களின் பொறுமையை சோதிக்காமல்… சற்று நேரத்தில்  வாயிற்கதவு திறந்து, தரிசனத்துக்கு செல்லுமாறு காத்திருந்த அனைவரிடமும் கூற… நிம்மதியாக அனைவரும் நகரத் தயாராகினர்.
இருவரும் ஒருவர்பின் ஒருவராய் வந்தாலும் அன்பரசன் அதன் பின்னர் அறிவழகியிடம் ஏதும் பேசவில்லை. அவளுமே முன்னாலிருந்த பெண்மணி, இவளுடன் சகஜமாக பேசியபடி இருந்ததாலும், அன்பு அக்ஷியிடம் பேசுவதிலும் ஒரு காதை வைத்திருந்தாள். இருவரும் பேசியதிலிந்து, அன்பரசனின் வீட்டில் இரு குழந்தைகள் இருப்பதை தெரிந்து கொண்டாள். மனம் ஏனோ வெறுமையாக உணர்ந்தது. பின், கவனத்தை முழுவதுமாக பெண்மணியின் பேச்சில் திருப்பிவிட்டாள்.
அக்ஷி, அன்புவை கேள்விகளால் துளைத்தவாறு பிஸியாக வைத்திருந்தாள். அவளது கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது, “பரவால்ல.. அவளைப்போல ரிஸர்வ்ட்-ஆ, உம்மணாமூஞ்சியா அக்ஷிய வளக்கல.”, என்றுதான் தோன்றியது. பாதி நேரம் அக்ஷி நடந்தும், மீதி நேரம் அன்பின் கைகளில் தூக்கியவாறும், ஒருவழியாக ஏழுமலையப்பனை நெருங்கி இருந்தனர்.
பிரமோற்சவ சமயத்தில் கூட்டத்திற்கு கேட்கவா வேண்டும்,.. ‘கோவிந்தா கோவிந்தா’, என்ற நாமம் விண்ணதிர ஒலிக்க.. அதற்கு இணையாக ‘ஜருகண்டி.. ‘ – யும் மூல மண்டபத்தில் ஒலித்தது.  [கொஞ்சம் பக்தர்கள் வழி விட்டா… பெருமாளே விடுவிடுன்னு ஓடிடுவார், பாவம் அவருந்தான் என்ன பண்ணுவார்? விடிகாலை மூணு மணிலேர்ந்து, உக்காரக்கூட நேரமில்லாம,  non-stop-ஆ கால் கடுக்க ஆசிர்வாதம் பண்ணிட்டே இருக்கார்]
இந்த கூப்பாடுகள், சக மனிதர்களின் இரைச்சல்கள், மனதின் ஆர்ப்பரிப்புகள் எல்லாம் எம்பெருமான் அருகே செல்லும் வரைதான். வைகுண்டவாசனின் தரிசனம் கிடைத்த அந்த நொடிகளில், ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அறிவழகியின் மனம் லயமாக, வேண்டியதை [தேவையானதை/தகுதியானதை] தந்திட வேங்கடநாதனிருக்க… வேண்டுதல் இல்லா நிலையில் கண்கள் பணிக்க கரம் குவித்து நின்றாள், பெண்.
அன்பரசன், அறிவழகி இருவரும், திருமலைநாதனை வணங்கி, அமைதியாக வெளியே வந்தனர். செல்போன் பாதுகாப்பு பெட்டக கவுண்டருக்கு சென்று அவரவர் அலைபேசியை பெற்றுக்கொண்டனர். அக்ஷிதா, அறிவழகியின் கைகளை பிடித்து நடந்து வந்தாள். “தேங்க்ஸ். வர்றேன்”, என்று அறிவழகி விடைபெற…,
“அக்ஷிய வச்சிக்கிட்டு தனியாவா போற?, ரொம்ப தூரம் போணுமா? நான் வேணா டிராப் பண்ணட்டா?”, இன்னும் கொஞ்ச நேரம் என்னோடு இரேன் பெண்ணே.., அன்பரசனின் மனது அடித்துக்கொண்டது.
“இல்ல, எல்லாருக்கும் கொடுக்க கொஞ்சம் லட்டு பிரசாதம் வாங்கணும், இவ தாத்தா பாட்டி ரெண்டு பெரும், படிக்கட்டு வழியா நடந்து வர்றாங்க. எங்களுக்காக ரூம் புக் பண்ணிருக்கோம். அவங்க தரிசனம் முடிச்சு நேரா ரூம்க்கு வந்துடுவாங்க”, என்றாள் அறிவழகி.
“எப்போ கிளம்பறீங்க?”, இவளை பற்றி தெரிந்தே ஆகவேண்டும் என்ற ஒரு உந்துதல் மேலிட, அவளது பிரயாணத்தை பற்றி கேட்க…
“நாளைக்கு  ஒருநாள் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்துட்டு, இங்க நாலு நாள் இருந்து சுத்திப் பாத்துட்டு ஊருக்கு கிளம்பிடுவோம்.”, பதிலளித்து முடித்தாள்.
“ஓ !!”, என்று பதிலை உள்வாங்கியவன், “இப்ப லட்டுக்கு கியூ ஜாஸ்தி இருக்குமே, எவ்வளவு வேணும்? bag ஏதாவது வச்சிருக்கியா?”
“ம்ம். பிக் ஷாப்பர் வச்சிருக்கேன், பரவால்ல.. நானே போய்கிறேன்”, அமைதியாக சொன்னாலும் ஒரு வித படபடப்பு தெரிந்தது குரலில்.
“கேன் யூ ஸ்டாண்ட் இன் அனதர் கியூ?”, என்று அன்பு அக்ஷியைப்  பார்த்து கேட்க.. [இன்னொரு வரிசையில் நிக்க முடியுமா?]
“ஓஹ் . நோ.. பட் வொய் ஷூட் வி?”, மீண்டும் வரிசையிலா என்று அக்ஷி அசதியாக கேக்க.. கேள்வியாக அழிவழகியை பார்த்தான். குழந்தையும்தான் என்ன செய்வாள்? காலை எட்டு மணியில் இருந்து அவள் கண்டது .. வரிசை வரிசை வரிசைதானே ?
அக்ஷியின் முக களைப்பைக் கண்டவள், பிகு செய்யாமல், “சரி.. நீங்களே போயி வாங்கிட்டு வாங்க, ஃப்ரி லட்டு தவிர  பத்து பன்னெண்டு லட்டாவது வேணும். நாங்க அந்த கடை கிட்ட நிக்கறோம் “, என்று பையையும் இரண்டாயிரம் ரூபாய் தாளையும் நீட்டினாள்.
ஏதும் பேசாமல் வாங்கி கொண்டவன், லட்டு வரிசைக்கு சென்றுவிட்டான். அவனது ஸ்பெஷல் என்ட்ரி டிக்கெட் காண்பித்து, அதற்குண்டான இலவச லட்டுக்களை வாங்கிக்கொண்டு, கூடவே, அறிவழகிக்கு தேவையானவைகளை வாங்கி கொண்டான். மீதி பணத்தை வாங்கி சட்டைப் பையில் போட்டு வரிசையை விட்டு நகர்ந்தான். சிறப்பு தரிசனத்திற்குத்தான் வந்திருந்தான், ஆனால் பொது வரிசையில் அறிவழிகியைப் பார்த்ததும், அவளைத் தொடர்ந்து, அதே வரிசையில் வந்து விட்டான்.
அந்த அரை மணிநேர காத்திருப்புக்குள், மணி இரவு ஏழு இருபதைக் காண்பிக்க, நன்றாக இருட்ட ஆரம்பித்திருந்தது. கடை அருகில் நின்ற அக்ஷி பசி என்று முனக ஆரம்பிக்க, பையில் இருந்த ஹெர்ஷீஸ், குக்கீஸ் காலியாகி இருந்தது. கடைசியாக இருந்த பாதம் பால் டப்பாவில் ஸ்ட்ரா போட்டுக் கொடுத்து, துடைத்துக் கொள்ள டிஷ்யூ இரண்டையும் சேர்த்து, ஆட்சியின் கைகைளில் கொடுத்தாள், அறிவழகி. அவளுக்குமே பசிக்க ஆரம்பித்திருந்தது.  இவன் லட்டு வாங்கி சீக்கிரம் வந்தால், நன்றாக இருக்கும் என்று அறிவழகிக்கு தோன்றியது. சாப்பிட்டு, அறைக்கு சென்று படுத்தால் தேவலாம் போலிருந்தது.
அவள் அப்படி நினைத்த மாத்திரத்தில் அன்பரசன் வந்து விட்டான். அறிவிடம் பையினைக் கொடுக்க… அவள் இடது தோளில்  ஏற்கனவே ஒரு கனமான கைப்பை, மறு கையை  அக்ஷி பிடித்துக் கொண்டு இருந்தாள். பையை இடது கையில் வாங்கியவளைப் பார்த்து, “எந்த ஹோட்டல் சொல்லு, நான் ட்ராப் பண்ணிடறேன், இத்தனை வெயிட்டை வச்சிக்கிட்டு அக்ஷியையும் உன்னால தனியா மேனேஜ் பண்ண முடியாது, வா”, என்று அறிவழகியிடம் சொல்லிவிட்டு, “ப்ரின்ஸஸ், ஷல் வி கோ டு யுவர் ரூம்?” என்று அக்ஷியைப் பார்த்து கேட்டான். .
“பட், ஐ ஃபீல் ஹங்கிரி, வி வேர் அபவுட் டு கோ டு ஹொட்டேல், ஷி டோல்ட ஸோ. இசண்ட் இட்?” [எனக்கு பசிக்குது, நீங்க வந்ததும் ஹோட்டல் போலாம்னு சொன்னாங்க …], என்றால் சின்னவள் ஏமாற்றத்துடன்.
“யா ஷூர். லெட்ஸ் கோ ன் கெட் சம் ஃபுட் ஃபார் யூ.”, [சரி வா சாப்பிட போகலாம்], என்று அக்ஷியைத் தூக்கிக்கொள்ள, அறிவழகிக்கு மறுக்க முடியாமல் போனது. .
குழந்தைகள் ருசித்து எதை எதை சாப்பிடுவார்கள் என்று அவனுக்கு தெரிந்து இருந்தது. அவன் ஆர்டர் செய்ததிலாகட்டும், கூட அக்ஷியிடம் அவளுக்கு சரியாக இறங்கி பேசியதாகட்டும், பார்க்க பார்க்க, பொறாமை துளிர்த்தது. இவன் மனைவி பிள்ளைகள் கொடுத்துவத்தவர்கள் என்றுதான் தோன்றியது.
சொன்னபடி உணவினை முடித்துவிட்டு அவர்கள் முன்பதிவு செய்திருந்த இடத்திற்கு சென்றான். அக்ஷி உறங்கிவிட.. அவளைத் தூக்கிக்கொண்டான். லிஃப்ட்-ல், இவர்கள் மட்டுமே இருக்க அன்பரசனின் அருகாமை, அறிவழகியை சற்று திணற வைத்தது. ஆனால், முகத்தை ஒருவித சலனமும் இல்லாமல் வைத்திருந்தாள்.
கார்டு போட்டு அறையைத் திறந்ததும், அக்ஷியை படுக்கையில் விட்டவன், அவனது அலைபேசி எண்ணை தெரிவித்து, அவளது அலைபேசியில் இருந்து மிஸ்ட் கால் செய்யச் சொல்லி, “ஏதானும் தேவைப்பட்டா போன் பண்ணு. நான் இன்னும் ஒரு வாரம் சித்தூர்ல தான் இருப்பேன்”, என்று விடைபெற நினைத்தான். திடீரென அவனுக்கு என்ன தோன்றியதோ? அறிவழகியை ஆழமாய் பார்த்தவன்… “நல்லா இருக்கியா?”, என்றான்
அவனது நேர்பார்வையை எதிர்கொண்டவளுக்கு, சட்டென
தொண்டை அடைத்தது. முயன்று தன்னை சமன் செய்து, “யெஸ், நல்ல வேலை, கைநிறைய சம்பளம், ரொம்ப நல்லா இருக்கேன்”, என்று அவனது முகம் பார்த்தபடி சொன்னாள். அவன் தலையசைக்க.., “ஏதும் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன், அவசியம்னா கண்டிப்பா  போன் பண்றேன்”, என்று அறிவழகி கூற.., படுக்கையில் உறங்கிய குழந்தை அருகே வந்து குனிந்து மென்மையாக நெற்றியில் முத்தமிட்டு, “அக்ஷி போட்டோஸ் இருந்தா வாட்ஸாப் பண்ணு, ஐ வில் மிஸ் ஹர்” என்று சொல்லி, அறிவழகியைப் பார்த்து, “டேக் கேர், கிளம்பறேன்”, கதவைத் திறக்க குமிழ்மீது கைவைத்தவனுக்கு, “தேங்க்ஸ்.”, என்ற அறிவழகியின் குரல் கேட்டது.
“ம்ம்”, என்று விட்டு விடுவிடுவென வெளியேறிவிட்டான். லிப்ட்டில் இறங்கும்போது, இந்த வார்த்தையை சொல்றதுக்கு இவளுக்கு இத்தனை வருஷம் தேவைப்பட்டிருக்கு, என்ற நினைப்பு மனதில் ஓடியது.
அறையை விட்டு சென்ற அவனது முதுகையே வெறித்துக்கொண்டு நின்றிருந்த அறிவழகி, “ம்ஹூம். முதல்ல குச்சி மாதிரி இருப்பான்… இப்போ ஹைட்டுக்கு ஏத்த வெயிட் போட்டு நல்லாவே இருக்கான்.”, வாய்விட்டு சொன்னபடி கட்டிலில் அமர்ந்தாள். மனக்கண்ணில், பைக்கில் சாய்ந்து கொண்டு… டீக்கடை வாசலில், நண்பர்களுடன் மத்தாப்புச் சிரிப்புடன் அரட்டை அடித்த அன்பழகன் வந்து நின்றான். கூடவே அந்நாளின் நினைவலைகளும்.

Advertisement