நாள் முழுக்க விவரம் அறிந்து உறவினர் ஒவ்வொருவராய் ப்ரியாவை வந்துப் பார்த்துச் சென்றபடியே இருக்க, ஒரு சிலர், இப்பவாச்சும் உங்க அப்பா உன்னைப் பார்க்க வருவாரா இல்லை இதுக்கும் இவங்கதான் பார்த்துக்கணுமா ப்ரியா?!” என்று நேரடியாகவே கேட்க, தங்கமலர் பொரிந்து தள்ளிவிட்டார்.
“ஏன் என் பொண்ணை நாங்கதான் பார்த்துக்குவோம்! மத்தவங்க என்ன வந்து அவளைப் பார்த்துக்கறது! பிள்ளையைப் பார்க்க பாசத்தோட வந்தீங்கன்னு பார்த்தா, தேவையில்லாம பேசிக்கிட்டு” என்று முகத்தில் அடித்தார் போல் பதிலடி கொடுத்து அனுப்பி வைத்தார்.
இப்படியே இரவு வந்துவிட, மற்றவர்களை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு தங்கமலர் உடன் இருக்க, மித்ரன் தானும் தனக்கென இருந்த மருத்துவமனை அறையிலேயே தங்கிக் கொண்டான் வீட்டிற்குச் செல்ல மனமின்றி.
புது இடம் ஆதலால் தங்கமலருக்கு தூக்கம் வராது போக, “நான் கீழ போய் காபி வாங்கிட்டு வரவா ப்ரியும்மா! தலைய வலிக்குற மாதிரி இருக்கு” என்றார் மகளிடம்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லடா! இதோ நிமிஷத்துல போயிட்டு வந்துடறேன்” என்று பிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
தங்கமலர் வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டிருந்த பிரேம், சட்டென ஓய்வெடுக்கும் அறையில் இருந்து வெளியேறி அவள் அறைக்குச் செல்ல,
யாரோ வந்த அரவம் உணர்ந்து கண்திறந்தாள் ப்ரியா.
அந்நேரத்தில் அவன் மருத்துவமனையில் இருப்பது கண்டு அவள் ஆச்சர்யமாய் விழிகள் விரித்து,
“நீங்க நீங்க எப்படி இந்நேரத்துல இங்க?!” என்றாள்.
“வீட்டுக்குப் போக மனசே வரலை மேம்! டியுட்டி ஸ்டாப்ஸ் ஓய்வெடுக்கும் அறையில் தங்கிக்கிட்டேன்!” என்றவன், அவளை நெருங்கி,
“இப்போ வலி குறைஞ்சிருக்குங்களா?!” என்றான் அவள் தலைக்கட்டை மெல்ல வருடி.
“ம்! ம்!” என்றவள்,
“அ அம்மா வந்துடுவாங்க!” என்றாள் பதட்டமாய்.
“அம்மாவைப் போல நானும் உங்களைப் பார்த்துக்குவேன்! ஆனா அதுக்கு உரிமைதான் கிடைக்கலை!” என்று அவன் மெல்ல முணுமுணுக்க,
“ம் என்ன சொன்னீங்க?!” என்றாள் அவன் சொன்னது கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் காதில் விழ.
“ஒண்ணுமில்ல மேம்! நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் கிளம்பறேன்” என்றவன்,
“காலையில் வந்து பார்க்கறேன்” என்று கிளம்பிவிட்டான் அவள் மனதில் மீண்டும் மீண்டும் அவனைப் பற்றிய எண்ணங்களை விதைத்து விட்டு.
******
மறுநாள் காலை, “அக்கா இன்னிக்கு வீட்டுக்கு வரலையா?!” என்று மையு அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்க,
‘அச்சோ! மையுவ எப்படி மறந்தோம்!’ என்று நொந்து கொண்டவள்,
‘ஹாஸ்பிட்டல் பெஷன்ட்சை பார்க்கிறதுக்காச்சும் ஒருத்தர்க்கு ரெண்டு பேர் இருந்தோம்! அதுவும் இல்லாம பிரேமும் இங்க இருக்க பெஷன்ட்சை கவனிச்சுப்பார்! ஆனா மையு! அவளே இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவவ் ஆகுறா! மறுபடியும் பயிற்சி நின்னு போனா அவ உடல்நிலை இன்னும் மோசமாகிடுமே!’ என்று எண்ணிக்’ கலங்கியவள்,
தனக்கு சிற்றுண்டி ஊட்டிக் கொண்டிருந்த மித்ரனை, “தம்பி!” என்று கெஞ்சலுடன் அழைக்க,
“என்ன டோனே சரியில்ல! ஏதாச்சும் வேலை ஆகணுமா?” என்றான் அவள் குணம் அறிந்து.
“ம் இதெல்லாம் கரெக்டா புரிஞ்சிக்குவியேடா தம்பி!” என்று தம்பியை மெச்சிக் கொண்டவள்,
“அது வந்து அந்தப் பொண்ணு, அதான் நான் தினமும் காலையில போய் பயிற்சி கொடுத்துட்டு வருவேனே!” என்று அவள் சொல்ல,
“ஆமாம் அதுக்கென்ன?!” என்றான் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தும்.
“அவ ரொம்பப் பாவம்டா! இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தேறி வரா! இந்த நேரத்துல மறுபடியும் பயிற்சியை விட்டா, அவ தேறி வரது ரொம்பக் கஷ்டம்டா!” என,
“ப்ச்! வேற யாரையும் அரேஞ் பண்ற அளவுக்கு அவங்களுக்கு வசதி இல்ல மித்து!” என்ற ப்ரியா,
“ப்ளீஸ்! எனக்காக நான் குணமாகுற வரைக்கும் அவளை கொஞ்சம் கவனிச்சுக்கரியா ப்ளீஸ்!” என்று அவள் ஏகத்திற்கும் ப்ளீஸ் போட,
“நோ நெவர்! நீ போய் சேவை செய்தது பத்தாம என்னையும் போக சொல்லுற!” என்று அவன் கடிய,
“ப்ச்! ம்மா இவன்கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுங்கம்மா! பாவம் ம்மா அந்தப் பொண்ணு! ரொம்ப நல்லப் பொண்ணு தெரியுமா! அவங்க வீட்லயும் யாருக்கும் அவளுக்கு பயிற்சி கொடுக்குற அளவுக்கு நேரம் இல்லை! அதோட பொறுமையும் இல்லை!” என தாயை துணைக்கு அழைக்க,
“ஏன்டா அவதான் இவ்ளோ சொல்றால்ல! ஒரு உதவிதானே! செய்தா என்ன மித்து?!” என்று தாயும் பரிந்து வர,
“ப்ளீஸ்டா மித்து ப்ளீஸ் ப்ளீஸ்!” என்று கெஞ்ச,
“ம்!” என்று மனதே இன்றி தலையசைத்தான் அக்காவிற்காக.
******
ஒருவழியாய் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்தவன், அந்த வீட்டின் முன் காரை நிறுத்த இடமில்லாமல், சற்று தள்ளி, ரோட்டின் ஓரம் தனது காரை நிறுத்திவிட்டு செல்ல, வாயிலை நெருங்கக் கூட இல்லை,
“அங்கேயே நில்லுங்க” என்றாள் அவள்.
அந்தக் குரலில் அவன் சட்டென ப்ரேக் அடித்தது போல் நின்று குரல் வந்த இடத்தைப் பார்க்க, அவன் காட்சியில் பதிந்தது அவளின் மான்போன்ற மருண்ட அழகிய கவர்ந்திருக்கும் விழிகளைத்தான்.
ஆனால் அடுத்த நொடியே அவள் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு, “யார் நீங்க?! எதுக்கு வந்திருக்கீங்க?! அம்மா ஊருக்குப் போயிருக்காங்க! எதுவா இருந்தாலும் அவங்க இருக்கும் போது வாங்க!” என்று படபடவென மொழிய,
‘யாரைப் பார்த்து கத்தியை நீட்டுறா?!’ சுறுசுறுவென கோபம் எழுந்தாலும், அவள் தனியாக இருப்பதால் பயந்து இப்படி செய்கிறாள் என்று புரிந்து சற்றே அமைதியைக் கடைபிடித்து,
“பொய் சொல்லாதீங்க! அவங்க ஏன் உங்களை அனுப்பனும்?! அவங்கதானே வருவாங்க” என்று அவள் நம்பாமல் கேட்க, இவனுக்கு சுள்ளெனக் கோபம் எழுந்தது.
‘போனாப் போகுதுன்னு ட்ரீட்மென்ட் கொடுக்க வந்தா பேச்சைப் பாரு இவளுக்கு!’ என்று எண்ணியவன், சட்டெனத் திரும்பிப் போக எத்தனித்து, காலையில் அக்கா அவ்வளவு கெஞ்சியது நினைவிற்கு வரவும், மீண்டும் திரும்பி,
அவள் செய்கையில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்த தனது தம்பியைப் பார்த்து, “சாரி சாரிடா!” எனக் கண்ணாலேயே மன்னிப்புக் கேட்ட தமக்கை,
“ம்! என் தம்பிதான்! பயப்படாம சொன்னதைச் செய் மைத்து! வச்சிடட்டுமா” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து தம்பியிடம் இருந்து அப்போதைக்கு தப்பித்து விட்டாள் ப்ரியா.
இவனுக்கு ஒருபக்கம் கோபம் எழுந்தாலும், வீட்டில் யாரும் இன்றி தனித்து இருப்பதனாலேயே அவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்றும் புரிந்தது.
“உ உள்ள வாங்க!” என்றவளை முறைத்தபடியே உள்ளே சென்றவன்,
“எழுந்து காலைக் கீழ தொங்க போட்ட மாதிரி உட்காருங்க!” என்றான்.
“ம்?!” என்று அவள் பேந்தப் பேந்த விழிக்க,
“காது கேட்கலையா?!” பொறுமை பறந்துவிடுமோ என்ற ரீதியில், அவன் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,
“எ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்!” என்று தயங்கியபடி சொல்ல,
“ம்!” என்று அவன் கை கொடுக்க, அதை மெல்ல பற்றியவள் கை லேசாய் நடுங்கியது.
சில்லென கைதொட்ட பனித்துளி போல் இருந்த அவள் விரல்களின் சில்லிப்பும், மென்மையும் அவனை ஏதோ செய்ய, இதுவரை இருந்த கோபம் குறைந்து,
‘பாவம் ரொம்ப பயந்து போயிருக்கா!’ என்று உணர்ந்து,
“பயப்படாதீங்க! நான் எதுவும் செய்ய மாட்டேன்!” என்றான்.
“ஹான்!” என்று அவள் விழிக்க,
“நீங்க பயப்படற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்!” என அவன் சொல்ல அவள் அசடு வழிந்தாள். ஆனால் அதெல்லாம் சில நொடிகள்தான். அவன் அவள் கைகளைப் பிடித்து பயிற்சியை செய்ய ஆரம்பித்த நொடி வலி பின்னி எடுக்க,
‘ஹா அய்யோ! டேய்! டேய்! நீ பிசியோதெரபிஸ்டா! இல்லை குத்துசண்டைக்காரனா?! கை ரெண்டும் உருளை கட்டை மாதிரி கின்னுன்னு இருக்கு?! நான் என்ன உன்னை மாதிரி கல்லாட்டமா இருக்கேன்! பச்ச மண்ணுடா பச்சை மண்ணுடா இந்தக் குழந்தை! அவளை இப்படிக் கொடுமை பண்ணுறியே! பார்த்து மெதுவா மெதுவா பண்ணுடா! ஐயோ! வலி உசிரு போவுதே!’ என்று கத்தினாள், கதறினாள். ஆனால் சத்தம் வெளியில் கேட்டால்தானே! அலறியது எல்லாம் மனதிற்குள் மட்டும்தான்! அவன் முகபாவத்தை பார்க்கும் போதே தெரிந்து விட்டது! இவனைக் கிஞ்சித்தும் ஏமாற்ற முடியாது என்று! இத்தனை நாள் அவள் வீட்டில் உள்ளவர்களையும் ப்ரியாவையும் ஏமாற்றியதற்கெல்லாம் சேர்த்து வைத்து, இவனிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்க கண்ணில் பெருக்கெடுக்கத் துடித்த நீரைக் கட்டுப் படுத்திக் கொண்டு அவனுக்கு கட்டுப்பட்டுப் பயிற்சியை செய்யலானாள் இத்தனை காலமாய் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டு இருந்தவள்…