Advertisement

                                                                 5
     ப்ரியாவின் பதிலில் தங்கமலர் மனம் அதிர அவளைப் பார்க்க, “வேற என் தங்கம்மாவுக்கு ஈடா இந்த உலகத்துல யாருமே எனக்கு இருக்க முடியாது!” என்று ப்ரியா அவரைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்த அவளின் அன்பு அவரையும் ஆனந்தக் கண்ணீரைச் சிந்த வைத்தது.
      “ம்மா! என்ன இது நீங்க அக்காவுக்கு ஆறுதல் சொல்வீங்கன்னு பார்த்தா, கூட சேர்ந்து அழறீங்க?!” என்று மித்ரன் கடிய,
     “போடா! இது ஆனந்தக் கண்ணீராக்கும்!” என்றவர், தன் மகளின் கண்களைத் துடைத்துவிட்டு நல்ல நாள் அதுவுமா அழக்கூடாதுடா செல்லம்! கண்ணைத் துடைச்சுக்கோ.” என்று சொல்லி பிரியாவின் கண்ணீரைத் துடைத்துவிட,
     “சாரிம்மா உங்களையும் அழ வச்சுட்டேன்” என்று அவள் அவர் கண்களையும் துடைத்துவிட,
     “என்ன இங்க பழைய படமெல்லாம் ஓடுது!” என்றபடியே வந்தாள் கீர்த்தி.
     “அய்யயோ இவ வந்துட்டாம்மா! ஏதாவது பாட்டு பாடுறதுக்குள்ள வெளில ஓடிப் போய்டுவோம்” என்று மித்ரன் வெளியே செல்லப் பார்க்க,
     “அண்ணா யூ டூ ப்ருட்டஸ்!” என்று பல்லைக் கடித்தபடி அவனைத் துரத்திக் கொண்டு ஓட, ப்ரியா, தங்கமலர் இருவரும் சிரித்தபடியே வெளியே வர, அவர்களின் கலகலப்பைப் பார்த்த பின்தான் நகுலன் மனத்தில் நிம்மதியும் ரஞ்சனியின் மனதில் மகிழ்வும் வந்தது.
     கீர்த்தியிடமிருந்து தப்பிய மித்ரன் ஓடிய ஓட்டத்தில் ரஞ்சனி எதிரே இருப்பதைக் கவனியாது இடித்துவிடும் தூரத்தில் சென்று சட்டென்று சுதாரித்து நிற்க, ரஞ்சனி அவன் எங்கே மோதி விடுவானோ என்ற எண்ணத்தில் முகம் மூடி, கன்னம் சிவந்து நிற்க, அவன் மோதவில்லை என்றதும், அவள் மெல்ல கைகளை விலக்கினாள்.
     “ஹஹா அண்ணிக்கு செம பல்பு!” என்ற கீர்த்தி,
     “என்ன அண்ணா நீ, அண்ணி மேல மோதியிருந்தா அப்படி இப்படின்னு ஒரு ரொமான்ஸ் சீன் க்ரியேட் ஆகியிருக்கும்! ஒரு கெமிஸ்ட்ரியும் வொர்க் அவுட் ஆகி இருக்கும்ல!” என,
      “அடி வாங்குவ!” என்று கைநீட்டி மிரட்டியவன்,
     “ரொம்ப பேசுறாம்மா இவ! ப்ரியா அக்கா கல்யாணம் முடிஞ்சதும் இவளையும் சீக்கிரம் மாமியார் வீட்டுக்கு அனுப்பிடணும்!” என்றான் அம்மாவிடம்.
     “அனுப்புவ அனுப்புவ! எல்லோரையும் துரத்தி விட்டுட்டு நீயும் உன் உன் ஆளும் மட்டும் ஜாலியா இருக்கலாம்னு பார்க்கறியா! நெவர்! உன் பையன் பிறந்து அவன் வளர்ந்து ஸ்கூல் சேர்ந்ததுக்கு அப்புறம் தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்ற கீர்த்தி,
     “அப்போதான் உங்க லைப் எல்லாம் பார்த்து ஒரு அனுபவம் கிடைக்கும்” என்று பெரிய மனுஷி போல் பேச,
     “அவ தெளிவா இருக்காடா மித்து!” என்றாள் ப்ரியா சிரித்தபடி.
     “ஆமாம் அக்கா!” என்றவன், நகுலன் ப்ரியாவையே கவனித்துக் கொண்டிருப்பதைப் புரிந்து,
     “என்ன மாமா அக்காகிட்ட தனியா ஏதாச்சும் பேசணுமா?” என,
     “ம்!” என தலையசைத்தனர் இருவருமே.
     “பார்ற இந்த ப்ரியா பொண்ணை!” என்று கீர்த்தி தன் அக்கா ப்ரியாவின் முகத்தை நிமிர்த்த, அதில் அவள் எதிர்பார்த்த எந்தவித வெட்க உணர்வும் பிரதிபலிக்கவில்லை!
     “ம்! பேசுங்க பேசுங்க” என்று இருவரையும் மண்டபத்தின் பின்புறம்  இருந்த தோட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்,
     சில நொடிகள் அமைதியாகவே நகர, இருவருமே, “நான் வந்து” என்று ஒரே சமயத்தில் ஆரம்பிக்க,
     “சாரி! முதல்ல நீங்களே சொல்லுங்க!” என்றாள் ப்ரியா.
     “இல்லை ப்ரியா நீ என்ன பேசணும்னு நினைச்ச? அதை சொல்லு!” என்று நகுலன் கேட்க,
     “நான் அது வந்து உங்க வீட்ல, எனக்கு நூத்தி ஐம்பது பவுன் நகை போடணும்னு கேட்டிருக்” என்று பிரியா முடிப்பதற்குள்,
     “என்ன நூத்திஐம்பது பவுனா?!” என்று அதிர்ந்தான் நகுலன்.
     அவன் அதிர்விலேயே அவனுக்கு இந்த விஷயம் தெரியாது என்பது ப்ரியாவிற்குப் புரிந்து விட,
     “ஓ! உங்களுக்குத் தெரியாதா?!” என்றாள்.
     “சத்தியமா தெரியாது ப்ரியா! தெரிஞ்சிருந்தா?” என்று நிறுத்தியவன்,
     “சரி அதை விடு. அதுக்காகவா நீ இன்னிக்கு முழுக்க உம்முன்னு இருந்த? நான் அம்மாகிட்ட பேசறேன். அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை” என, ப்ரியாவின் முகம் மலரென மலர்ந்தது.
      “அன்னிக்கு உங்க அம்மா, ஐ மீன் பெரியம்மா, எங்க பொண்ணுக்கு நாங்க என்ன செய்யணும்னுனாலும் கேளுங்கன்னு சொன்னாங்களே! அதனால என் அம்மா இப்படி கேட்டிட்டிருப்பாங்க. நான் பேசுறேன் அவங்ககிட்ட” என,
     “ம்! அவங்க எனக்காக எவ்ளோ வேணாலும் செய்வாங்கதான்! ஆனா, என் அப்பா எனக்காக எதுவுமே செய்யாம, அவங்களே எனக்காக எல்லாம் செய்யிறது எனக்கு கஷ்டமா இருக்கு! நான் என்ன சொல்ல வரேன்னா,” என்றவளிடம் குறுக்கிட்டவன்,
     “என்னால புரிஞ்சிக்க முடியுது ப்ரியா” என்றான்.
     “தேங்க்ஸ்!” அவள் சின்னதாய் புன்னகைக்க,
     “ஹப்பா இந்தப் புன்னகையைப் பார்க்க இவ்ளோ நேரம் ஆச்சு!’ என்று நகுலன் சிரிக்க,
     “இந்தப் புன்னகை என்ன விலை! என் இதயம் சொன்ன விலை!” என்று இவர்கள் பேசுவதை எட்டிப் பார்த்து கீர்த்திப் பாட,
      “இவளை!” என்று ப்ரியா துரத்திக் கொண்டு ஓட, நகுலன், தான் பயந்தது போல் ஏதுமில்லை, இந்த நகை பிரச்சினைதான் ப்ரியா முகவாட்டத்துடன் இருக்கக் காரணம் என்று புரிந்து கொண்டதால், மனம் சற்று நிம்மதி அடைந்தான்.
     ஆனால் நிச்சயம் முடிந்து நாட்கள் செல்லச் செல்ல வந்து போன உறவினர்கள் முதல் முக்கியமாக சாருவின் கணவன் சரத் வரை, மீண்டும் மீண்டும் இந்த திருமணச் செலவையும், நகையையும் பற்றி அவளிடம் நேருக்கு நேரே கேட்கக் கேட்க, நகுலனும் ஏதும் சொல்லாமலேயே இருக்க, அவள் மனம் வெகுவாய் சோர்ந்து போனது.
     ‘அவர் அவங்க அம்மாகிட்ட பேசி இருப்பாரா?! ஏன் இன்னும் எதுவுமே சொல்லலை?! பேசாம நாமலே போன் பண்ணி அவர்கிட்ட கேட்டுடலாமா?!’ என்று ஏதேதோ சிந்தித்தபடியே அவள் தங்களது மருத்துவமனை காரிடாரில் நடந்து வந்து படிகளில் இறங்கப் போக, சட்டென யாரோ பின்னிருந்து தள்ளிவிட்டதைப் போல் உணர்ந்தவள், என்ன ஏது என்று யூகித்து சுதாரிக்கும் முன்பே படிகளில் உருள ஆரம்பித்தாள்.
     “ஐயோ மேம்!” என்று பதட்டத்துடன் கத்தியவாறே படிகளில் இறங்கிய பிரேம் பரிதவிப்புடன் அவளை நெருங்கித் தூக்கிக் கொண்டு அவசரசிகிச்சைப் பிரிவுக்கு ஓட,
     “ஐயோ மேம்! மேம்க்கு என்ன ஆச்சு?!” என்றபடி அங்கிருந்த மற்ற மருத்துவ ஊழியர்களும் அதிவேகமாய் செயல்பட்டு, ப்ரியாவிற்கு சிகிச்சை மேற்கொள்ள, சில நொடிகளில், மருத்துவமனையிலேயே வேறு இடத்தில் வேலையில் இருந்த அண்ணன், தம்பி இருவரும் சகோதரியின் நிலை அறிந்து ஓடி வந்தனர்.
     “என்ன?! எப்படி இப்படி ஆச்சு?! அவ கீழ உருண்டு இவ்ளோ அடி படுற வரைக்கும் யாருமே அவளைத் தடுத்து காப்பாத்தலையா?” என்று மித்ரன் கோபமாய்க் கத்த, எல்லோரும் மிரட்சியாய் பார்த்திருந்தனர் பதில் கூற இயலாது.
     “கூல் டவுன் மித்ரா! இப்போதைக்கு அவ ட்ரீட்மென்ட் தான் முக்கியம்! அப்புறம் இதெல்லாம் விசாரிச்சுக்கலாம்!” என்ற கிருஷ்ணா, அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்த இடங்களில் தையல் போட, கால் பாதம் வேறு நன்றாய் வீங்க ஆரம்பித்திருந்தது அதற்குள்.
     “ஒ நோ! பாதம் வேற இவ்ளோ வீங்குது! பிராக்செர் ஆகி இருக்கும் போலவே!” என்ற மித்ரன்,
     “எக்ஸ்ரே டிவைஸ் இங்க கொண்டு வர சொல்லுங்க” என்று பணித்தான் உழியன் ஒருவனிடம்.
     இங்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த நேரத்திற்குள் வீட்டினர் அனைவரும் விவரம் அறிந்து பதறி அடித்துக் கொண்டு அங்கு வந்திருந்தனர்.
     நல்லவேளையாக தலையில் ஏதும் பலத்த காயங்கள் இல்லாமல் போனதில் கொஞ்சமே நிம்மதி அடைந்தாலும்,
     “சிடி ஸ்கேன் ஒன்னு எடுத்துப் பார்த்துடலாம் அண்ணா!” என்ற மித்ராவைப் பார்த்து,
     “ம்” என்ற கிருஷ்ணா,
     “பிரியும்மா! இப்போ வலி பரவாயில்லையா?” என்று கேட்க,
     “ம் ம் அண்ணா!” என்றவள்,
     “எப்படி விழுந்தேன்னே தெரியலைண்ணா! ஆனா யாரோ!” என்று அவள் ஏதோ சிந்தித்தவாறே சொல்ல வர,
      “மேம்! ரொம்ப ஸ்ட்ரையின் பண்ணிக்காதீங்க! முதல்ல நல்ல ரெஸ்ட் தேவை உங்களுக்கு!” என்றான் பிரேம்.
      “ம் பிரியு! நீ எதையும் யோசிக்காம தூங்கு!” என்ற கிருஷ்ணாவும்,
      “ம்மா. எல்லோரும் இங்கயே இருந்தா அவ சரியா தூங்க மாட்டா! நீங்க மட்டும் கூட இருங்க. மத்தவங்க வெளில வெயிட் பண்ணுங்க” என,
     “போ அண்ணா. நான் அக்கா கூடதான் இருப்பேன்” என்றாள் கீர்த்தி.
     “முக்கியமா நீதான் இங்க இருந்து வெளில போகணும்” என்ற கிருஷ்ணன் அவளைக் கையோடு வெளியே அழைத்துச் செல்ல,
     “அவ கூட இருக்கட்டும் அண்ணா” என்றாள் ப்ரியா.
     “இல்ல ப்ரியும்மா. அவ இங்க இருந்தா தொணதொணன்னு பேசிட்டே இருப்பா. உனக்குத் தூக்கம் வராது! நீ ரெஸ்ட் எடு முதல்ல.” என்று சொல்லிவிட்டு,
     “பிரேம் உனக்கு வேற கேசஸ் பார்க்க வேண்டியது இருக்குல்ல. நீயும் கிளம்புங்க!” என்று அவனையும் பணிக்க, அவன் மனமின்றி ப்ரியாவை அக்கறையோடு பார்த்து,
     “டேக் கேர் மேம்! டோன்ட் ஸ்ட்ரெஸ் யுவர்செல்ப்!”
என்றுவிட்டு நகர,
     ‘இவன் எதுக்கு இப்படி சொல்லிட்டு போறான்’ என்று யோசிக்கும் நிலையில் மற்றவர்கள் இல்லையென்றாலும், ப்ரியா,
     ‘ஏன் ஏன் இப்படி சொல்லிட்டுப் போறான்! நான் ஸ்ட்ரெஸ்ல இருக்கேன்னு இவனுக்கு எப்படித் தெரிஞ்சுது?!’ என்று அவன் செல்வதையே பார்த்திருக்க, கதவருகே சென்று திரும்பி அவளைப் பார்த்தவன், அவன் எதிர்பார்த்தது போலவே அவள் தன்னையே பார்த்திருப்பது கண்டு, அவள் மட்டும் அறியுமாறு, இமையசைத்து அவளுக்கு ஆறுதல் உரைக்க, அவள் சட்டென கண்களை திருப்பிக் கொண்டாள்.
     ‘என்ன என்ன இவன்! இவன் ஏன் இப்படி நடந்துக்கறான்! இவனுக்கு என்ன தெரியும்!’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க,
     “ப்ரியும்மா! என்ன ஏதோ யோசிச்சிட்டே இருக்க?! கண்ணை மூடித் தூங்கு கொஞ்ச நேரம்” என்றார் தங்கமலர் அவள் தலையை வருடியபடி.
     “ம் ம்மா!” என்று மெல்ல கண்களை மூடியவளுக்கு அவன் தன்னைக் கையில் ஏந்திக் கொண்டு பதறிக் கத்தியதே நினைவலைகளில் ஓடி ஏதோ செய்தது.
     ‘ஏன் அவன் கண்கள்ல அவ்வளவு தவிப்பு! அது அது நிச்சயமா எல்லோருக்கும் பொதுவானது இல்லை!’ என்று எண்ணியவளுக்குள் அவன் அவளிடம் எப்போதும் நடந்து கொள்ளும் விதங்கள் மனதில் வந்து போக, அவன் அவன் என்னை லவ் பண்றானா?!’ என்ற கேள்வி எழ,
     ‘யெஸ்!’ என்றது அவன் தற்போது அவள் அறையில் இருந்து செல்லும் போது அவளிடம் தன் இமையசைவின் மூலம் அவளுக்கு உணர்த்திவிட்டுச் சென்ற ஏதோ ஒன்று!
     ‘இல்லை! இது இது எப்படி!’ என்று யோசிக்க யோசிக்க, அவளுக்கு மேலும் தலையை வலிப்பது போல் இருந்தது.
     “ஸ்!” என்று அவள் வலியில் முனக,
     “ப்ரியும்மா! என்னடா?! ரொம்ப வலிக்குதா?!” என்று தங்கமலர் கண்கள் கலங்க கேட்க,
     “ம்மா! எதுக்கு அழறீங்க! ரொம்பல்லாம் வலிக்கல! லேசா சுருக்குன்னு சின்ன வலி! தூங்கி எழுந்த சரியா போயிடும்! அழக்கூடாது சரியா?!” என்றாள் தன் வலி மறைத்து.
     “ம் தூங்குடாம்மா” என்று தங்கமலர் அவள் தலை வருடி மெல்ல தட்டிக்கொடுக்க, தாயின் அன்பிலும் வருடலிலும் சோர்விலும் தானாய் கண்கள் செருகியது மற்ற நினைவுகளைப் பின்னுத் தள்ளி.
     வேறு மருத்துவமனை ஒன்றில் முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ராஜசேகரை அழைத்திருந்ததால் அவர் அங்கு  சென்றிருந்தார். அதனால் அந்த மருத்துவமனைக்கு அழைத்து விவரம் சொல்லி அறுவை சிகிச்சை முடிந்ததும் அவருக்கு விவரம் சொல்லச் சொல்லி இருந்தான் மித்ரன்.
     விவரம் அறிந்ததும் மகளைப் பார்க்க விரைந்து வந்த ராஜசேகர், “என்னம்மா இது கவனமா இருக்கக் கூடாதா?! இப்படி அடிபட்டிருக்கே!” என்று வருந்தியபடி மகளின் கைகளைப் பற்றிக் கொள்ள,
     “நான் கவனமாதான் ப்பா வந்தேன்! ஆனா யாரோ!” என்று சொல்ல வந்தவள்,
    ‘ச்சே! நம்ம ஹாஸ்ப்பிட்டல்ல போய் யார் என்ன அப்படிப் பண்ண போறாங்க! ஏதோ ஸ்ட்ரெஸ்ல கவனிக்காம படியில் கால் வச்சு நானேதான் தவறி விழுந்திருப்பேன்! தேவையில்லாம யோசிச்சு அதை இவங்களுக்கும் சொல்லி டென்ஷன் படுத்த வேண்டாம்!’ என்று எண்ணி அமைதியாகி விட்டாள்.
     “என்னம்மா யாரோ!” என்று ராஜசேகர் கேட்க,
     “அது ஒண்ணுமில்லப்பா. சரி நீங்க ஏன் அப்போவே வரலை!” என்று பேச்சை மாற்ற,
     “சர்ஜெரிக்கு போயிருந்தேன்ல டா மறந்துட்டியா?!” என்றார்.
     “ஹான் ப்பா. சாரி” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நகுலனும் அவன் அன்னையும் உள்ளே வர,
     “வாங்க சம்மந்தியம்மா” என்றார் தங்கமலர்.
     “ம்!” என்றவர்,
     “ஏம்மா பார்த்து நடக்க மாட்டியா?! கல்யாண நேரத்துல இப்படிக் காலை உடச்சு வச்சுகிட்டா நல்லாவா இருக்கு?” என்று சாவித்திரி குறைபட,
     “ம்மா!” என்று குரல் கொடுத்து அவரை அடக்கிய நகுலன்,
     “இப்போ எப்படி இருக்கு ப்ரியா?!” என்றான் அக்கறையாய் அவள் அருகே வந்து நின்று.
     “ம்! பரவாயில்ல!” என்றதோடு அவள் அமைதியாகி விட,
     “கொஞ்சம் வேலை விஷயமா பெங்களூர் போயிருந்தேன்! இன்னிக்கு மார்னிங் தான் வந்தேன்! வந்ததும் இப்படி ஒரு நியூஸ்” என்று அவன் மனம் வருந்தச் சொல்ல,
      ‘நியுஸ்!’ என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்தபடி அவனைப் பார்த்தவள்,
      ‘நான் அடிப்பட்டு கிடக்கிறது இவருக்கு ஜஸ்ட் நியுஸ்தான் போல!’ என்று வருந்தினாள் மனதிற்குள்ளேயே.
     நொடியில் பிரேம் அவளுக்காய் துடித்த துடிப்பும் நகுலன் இப்போது பெரிதாய் எந்தத் தவிப்பும், பதட்டமும் இன்றி அவளை விசாரித்துக் கொண்டிருக்கும் விதத்தையும் ஏனோ மனம் இந்நொடி ஒப்பிட்டுப் பார்த்தது.
    

Advertisement