Advertisement

                                                                 4
     நிச்சய விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு மைத்திரேயி,
     “உன் உதடுகள் சிந்தும் புன்னகையில்,
     வானிலவும் தோற்குமடி ப்ரிய நிலவே!
     உன் அன்பின் உள்ளம்
     அகண்ட ஆகாயத்தையும் விஞ்சும் அழகடி!
     நின் நேசம் பேசும் மொழிகள்
     மழலையின் தித்திக்கும் தேன்தமிழடி!
     நின் எல்லா செயலிலும் உள்ளங்களை கொள்ளை கொள்ளும்
     ப்ரிய நிலவே,
     உன்னைக் கொள்ளை கொள்ளப் போகும்
     மன்னவன் அருகிருக்க, இதழ் நீங்கா புன்னகையுடன்,
     மனம் கொஞ்சும் பூரிப்புடன்,
     உன் காதல் கள்வனோடு காலமெல்லாம் வாழ்வாயாக!
                                     -உன் அன்புத் தங்கை மைத்ரேயி.
     என்ற வாழ்த்துச் செய்தியை அச்சடித்து வாட்சப் செயலி மூலம் சில நாட்களிலேயே தன் மனதிற்கு மிக நெருக்கமாகிவிட்ட ப்ரியாவிற்கு அனுப்பி வைத்தாள்.
     ஆம்! கடந்த சில வாரங்களிலேயே ப்ரியாவின் அன்பில் தன் வாழ்வின் துன்பமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கக் கற்றுக் கொண்டிருந்த மைத்ரேயி, ப்ரியாவிற்கு நிச்சயம் என்று தெரிந்ததும் மிகவும் உற்சாமாக மாறி இருந்தாள். அதிலும், திருமணத்திற்குப்  பின்னும் ப்ரியா தொடர்ந்து அவளுக்கு பயிற்சி அளிக்க வருவேன் என்று வாக்களித்திருந்தது அவள் மனதை திக்கு முக்காடச் செய்திருந்தது.
     ப்ரியா மைத்ரேயியின் வாழ்வில் வந்த பிறகு அவளது வாழ்வில் சூழ்ந்திருந்த கருப்பு நிமிடங்கள் கொஞ்சமேனும் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டன. எப்போதும் அவள் கண்களுக்குத் தெரியும் அந்த நான்குச் சுவர்களிலிருந்தும் வீட்டினுள் கிடக்கும் உயிரற்ற பொருட்களிடமிருந்தும் அவளுக்கு ஒரு மணி நேரமாவது தன்னிடம் மனம்விட்டுப் பேசவும், பகிரவும் ஒரு நல்ல நட்பு கிடைத்திருந்தது.
     ப்ரியா வசதியான வீட்டுப் பெண்தான் என்றாலும், அவள் என்றுமே வசதி பார்த்துப் பழகியதில்லை! அதிலும் மைத்ரேயியின் குறும்புத்தனமும், தினம் தினம் அவள் உடற்பயிற்சி செய்யும் போது தன்னிடம் ஏமாற்றித் தப்பிக்கும் அவள் கையாளும் சமாளிப்புகளும் ப்ரியாவை அவள் பால் மிகவும் ஈர்த்திருந்தது. அதிலும் தினம் தினம் அவள் படும் வேதனைகளை அவளிடம் பகிர்ந்ததிலிருந்து அவளை உடன்பிறவா சகோதரியாகவே நினைக்கத் தொடங்கி இருந்தாள் ப்ரியா. எத்தனையோ நோயாளிகளை அவள் தினமும் கவனித்து வருகிறாள் தான். ஆனால் குழந்தைகளிடம் இருக்கும் குறும்பும், சமாளிப்பும் மைத்ரேயியிடமும் சற்று அதிகமாகவே நிறைந்திருக்க, சில நேரத்தில் அவள் கண்டிக்க நினைத்தாலும் அவளால் முடியாது போனது. ஆனாலும் அவள் குணமாக வேண்டுமே என்று கொஞ்சமாய் உருட்டி மிரட்டி அவளை தினமும் உடற்பயிற்சி செய்ய வைப்பாள். அவள் எடுத்துக் கொண்ட முயற்சியில் கொஞ்சமாய் மைத்துவின் உடலில் மாற்றம் தெரிந்தாலும் முன்னேற்றம் பெரிதாய் இல்லை. காரணம் அவள் ப்ரியா இருக்கும் போது மட்டுமே உடற்பயிற்சி செய்வதுதான். மற்ற நேரங்களில் எப்போதும் முடங்கியேதான் கிடந்தாள் வீட்டில் இருக்கும் யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல்.
      மைத்ரேயி செய்தி அனுப்பி முடித்தவுடன் ஜென்சியிடமிருந்து வீடியோ கால் வர, அவள் அதை அட்டென்ட் செய்தவுடன், அவள் முகத்தில் இருந்த மகிழ்வைக் கண்டு,
     “என்ன இன்னிக்கு மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?!” என்றார் ஜென்சி.
     “ஆமா! இப்போதான் ப்ரியா அக்காக்கு மெசஜ் அனுப்பினேன். இன்னிக்கு அவங்க எங்கேஜ்மென்ட்ல!” என்று மைத்து சிரிக்க,
     “ஓ! மேடம் அவ்வளவு க்ளோஸ் ஆகிட்டீங்களோ உங்க பிசியோதேரபிஸ்ட் கிட்ட?!” என்றார் ஜென்சி.
     “ஆமாம் ஜென்சிம்மா. அவங்க ரொம்ப ஸ்வீட் தெரியுமா? உங்களை மாதிரியே!” என்று மைத்து ஐஸ் வைக்க,
     “போதும் போதும்டி!” என்றவர்,
     “நல்லவேளை இப்படி ஒரு நல்ல பிசியோதெரபிஸ்ட் கிடைக்குனும்னுதான் இவ்ளோ நாள் தள்ளிப் போச்சோ என்னவோ! ஆனா நீ எக்செர்சைஸ் ஒழுங்கா செய்யிறதே இல்லையாமே! எனக்கு நியுஸ் வந்தது” என்று அவர் முறைக்க,
      “அப்படியெல்லாம் இல்ல ஜென்சிம்மா! நான் நல்லாதான் பண்றேன்” என்றாள் மைத்து.
     “நம்பிட்டேன் நம்பிட்டேன்! எது எப்படியோ! இன்னும் ரெண்டு மாசத்துல நீ தனியா எந்திரிச்சு நடக்கணும்!” என,
     “ஹான்!” என்று வாய் பிளந்தாள் மைத்து.
     “என்ன ஹென்! ஒழுங்கு மரியாதையா எழுந்து நடக்குற வழியப் பாரு! இல்ல கொம்பை எடுத்துகிட்டு நேர்லயே வந்துடுவேன் ஊருக்கு!” என்றார் ஜென்சி.
     “போங்க ஜென்சிம்மா! நீங்க செஞ்சு பார்த்தாதான் தெரியும் உங்களுக்கு! எப்படி வலிக்குது தெரியுமா உடம்பெல்லாம்!” என்று அவள் பாவமாய் சொல்ல, ஜென்சி மனதிற்குள் வேதனை அடைந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாது,
     “இத்தனை வருஷமா நடக்காம படுத்துக் கிடந்தா வலிக்காம இதமாவா இருக்கும்?!” என்றார் மிரட்டும் விதமாய்.
     “போங்க ஜென்சிம்மா இப்படி திட்டிக்கிட்டே இருக்கத்தான் வீடியோ கால் பண்ணீங்களா?!” என்று இவள் சிணுங்க,
      “வேற! உனக்காக யார் யார்கிட்ட எல்லாமோ பேசி, தேடிக் கண்டுபிடிச்சு ஒரு நல்ல பிசியோதெரபிஸ்ட்டை கண்டுபிடிச்சு அனுப்பி இருக்கோம். அவங்களையும் நீ ஏமாத்திட்டு இருக்க?!” என்று கோபமாய்ச் சொன்னவர்,
     “நீ இப்படியே இருந்தா அந்தப் பிள்ளைய நிறுத்திட்டு ஸ்ட்ரிக்டா இருக்க வேற ஒருத்தரை தான் அனுப்ப சொல்லணும்” என,
      “இல்ல இல்ல! இனி நான் ஏமாத்தாம செய்யிறேன்.” என்றாள் மைத்து பட்டென.
      “ம்! அவ்ளோ பாசம் அவங்க மேல!” என்றவர்,
      “சரி ஒழுங்கா நேரா நேரத்துக்கு சாப்பிட்டு எக்செர்சைஸ் பண்ணு! நான் இன்னொரு நாள் கூப்பிடுறேன்” என்று விட்டு போனை வைத்தார் ஜென்சி.
      “இந்த ஜென்சிம்மா இருக்காங்களே! ராணி மங்கம்மா!” என்று பல்லைக் கடித்தபடி போனை வைத்தாலும்,
     “என் மேல எவ்ளோ பாசமிருந்தா, நேர்ல கூட பார்த்திராத ஒருத்திக்காக, அவங்க இவ்ளோ பிரயத்தனப்பட்டு யார் யார்கிட்ட எல்லாமோ பேசி எனக்காக ஒரு நல்ல பிசியோதெரபிஸ்ட்டைத் தேடி அரேஞ் பண்ணி இருப்பாங்க!” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டவள்,
     “லவ் யு ஜென்சிம்மா!” என்று வாட்சப்பில் செய்தி அனுப்ப,
     “லவ் யு டூ பேபி! ஆனா எக்செர்சைஸ் ஒழுங்கா பண்ணாதான்!” என்று பதில் அனுப்பினார் அவரும்.
     “ம்!” என்று மூக்கையும் உதடுகளையும் சுருக்கி அழகு காண்பித்தவள், அதை அப்படியே புகைப்படமாய் எடுத்து அவருக்கு அனுப்ப, அவர் அடிக்கும் பொம்மை ஒன்றை அனுப்பினார் பதிலுக்கு. இவளும் அழுது கொண்டிருக்கும் பொம்மை ஒன்றை அனுப்ப, அவர்களது செல்லச் சண்டைகள் அங்கு வாட்சப்பில் தொடர்ந்து கொண்டிருந்த நேரம், அங்கு மைத்துவின் வருங்காலக் கதாநாயகன் தனக்கு மனைவியாய் வரப் போகும் அவள் வருகையை சிறு ஆவலுடன் எதிர்பார்த்து அமர்ந்திருந்தான் மண்டபத்தின் மேடையில்.
     சிறிது நேரத்தில் ப்ரியாவும், ரஞ்சனியும் மேடைக்கு அழைத்து வரப் பட, இரு மணமகன்களின் கண்களும் தங்களுக்குரியவர்களை படமெடுத்துக் கொண்டன.
     ரஞ்சனியும் சிறு புன்னகையுடன் ஓரக்கண்ணில் அவனைப் பார்த்தபடியே அவன் அருகில் வந்து அமர,
     “லுக்கிங் கியூட்” என்றான் மித்ரன்.
     “யு டூ!” என்றவள் நாணத்தோடு தலை குனிய, அங்கு ப்ரியாவின் அருகே அமர்ந்திருந்த நகுலனும் அவளை ஓரக்கண்ணில் ரசித்துக் கொண்டிருந்தான் அவ்வப்போது. ஆனால் ப்ரியாவிற்கோ தயக்கம் மட்டுமன்றி, தனது தந்தை நிச்சயதார்த்த விழாவிற்கு வரவில்லையே என்ற கவலையும், மணி அவர்களுடன் இல்லாது போன ஏக்கமும் ஒன்றாய் சேர்ந்து வாட்டி எடுக்க, பெரிதாய் எந்த ஈடுபாடும் இன்றி அமர்ந்திருந்தாள் அவனருகே.
     அவள் நிலையை யூகித்த நகுலன், “என்ன ஆச்சு ப்ரியா?! எனி ப்ராப்ளம்” என்று அவளிடம் நேரடியாகவே கேட்டுவிட,
     “இல்லை ஒண்ணுமில்லை!” என்றாள் மனதில் இருக்கும் கவலையை சட்டென மறைத்து புன்னகை வரவழைத்துக் கொண்டு.
     “ம்!” என்றவன், பெரியவர்கள் சொன்ன சம்பிரதாயங்களை செய்யத் துவங்க, அவளும், அவனுடன் இணைந்து கொண்டாள்.
     இதையெல்லாம் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து பார்த்திருந்த அவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
     ‘இல்லை ப்ரியா. இந்த நிச்சயம் நடந்து முடிஞ்சாலும் நீ எனக்குதான் எனக்கு மட்டும்தான்!’ என்று சொல்லிக் கொண்டான் தீர்க்கமாய்.
     நிச்சய விழா நல்லபடியாய் நடந்து முடிய, வந்திருந்த நெருங்கிய உறவினர்கள் தவிர மற்ற அனைவரும் மண்டபத்திலிருந்து கிளம்பி விட்டிருந்தனர்.
     மணமகன்களும், மணமகள்களும் அவர்கள் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் மட்டுமே உணவருந்திக் கொண்டிருக்க, அதில் பெயருக்கு கொறித்துவிட்டு முதலில் எழுந்து கைழுவச் சென்ற ப்ரியாவிற்கு அவர்களின் பேச்சு காதில் விழுந்தது.
     உறவினர் ஒருவர், “மனோகர் பலே ஆள்தான்! அண்ணன் பையன் கல்யாணச் செலவோடவே தன் பெண்ணோட செலவையும் கோர்த்து விட்டுட்டார்” என,
     “அட கல்யாணச் செலவை மட்டுமா கோர்த்து விட்டார். சீர் கூட அவங்களே தான் செய்யுறாங்க போல! சாரு வீட்டுக்காரன் புலம்பிட்டு இருந்தான். அதுவும் நூத்திஐம்பது பவுன் போடணும்னு பையனோட அம்மா சொல்லி இருக்காங்க போல. இந்த தங்கமலரும், ராஜசேகரும் எல்லாத்துக்கும் தலையாட்டி இருக்காங்கன்னு ஒரே புலம்பிட்டு இருந்தான் என்கிட்ட” என்றார் மற்றொருவர்.
     “அவங்களுக்கு என்னப்பா நல்ல வசதி! இருநூறு பவுன் கூட போடுவாங்க! ஆனாலும் இந்த மனோகர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை! பெத்த பொண்ணை யார் தலையிலையோ கட்டிட்டு, நிம்மதியா ரெண்டாவது பொண்டாட்டியோடக் கூத்தடிச்சிட்டு இருக்கான் இந்த வயசிலையும். நிச்சயத்துக்கு கூட வந்தானா பார்த்தியா?!” என்று அவர் சொல்ல,
     “ஆமா ஆமா! இந்த காலத்துல யார் ஏமாந்தாலும் அவங்க தலையில மிளகா அரைச்சிடுவாங்க” என்றவர், ஒருபடி மேல போய் ப்ரியாவைப் பற்றியும்,
      “அப்பா தான் கில்லாடின்னா, பொண்ணு பலே கில்லாடியா இருப்பா போல! பெரியம்மா பெரியப்பா பணத்துலயே படிச்சு முன்னேறினதும் இல்லாம, பெத்தவனுக்கு பத்து பைசா செலவு வைக்காம எவ்ளோ நேக்கா நடந்துக்குது பாரு! இந்த ராஜசேகர் தான் காலத்துக்கும் தம்பி, தம்பி பொண்ணுன்னு ஏமாந்துகிட்டு இருக்கான்னா, தங்கமலர் அவனுக்கும் மேல!” என, ப்ரியாவிற்கு கண்ணீர் கண்களை நிறைத்துக் கொண்டது.
     பெரியப்பா பெரியம்மா தான் தன் கல்யாணச் செலவை செய்வார்கள் என்று அவள் ஓரளவு யூகித்திருந்தாள் தான், ஆனால் நூற்றி ஐம்பது பவுன் என்பது அவளுக்குப் புதிது.
     ‘எதுக்கு இந்தப் பெரியம்மா அப்படிப்பட்ட சம்மந்தத்தை முடிக்கணும்?!’ என்று நினைத்தவளுக்கு அதற்குமேல் அங்கு எல்லோர் முன்னிலையிலும் இருக்கப் பிடிக்காது போக,
     “எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு! நான் ரூமுக்குப் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்” என்று அனைவருக்கும் பொதுவாய் சொல்லிவிட்டு யாருடைய அனுமதியும் எதிர்பார்க்காமல் கீழே இருந்த மணமகள் அறைக்குச் சென்றுவிட, நகுலனின் அம்மா,
     “என்னங்க உங்க பொண்ணு இப்படி பட்டுன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டா? கொஞ்சம் கூட இங்கிதம் இல்லை! மாமியார் ஆச்சே அவங்ககிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுட்டுப் போவோம்னு கூட இல்லை. என் பையன் கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகலை!” என்று அவர் தங்கமலரிடம் முகம் சுளிக்க,
     “அச்சோ! அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லைங்க! இன்னிக்கு முழுதும் அலைச்சல் இல்லையா, அந்த டையர்ட்ல தலைவலி வந்திருக்கும்! அவ கொஞ்சம் வலின்னாலும் தாங்க மாட்டா! அதான் ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கறேன்னு சொல்லிட்டுப் போனா!” என்று சமாளிக்க,
     “இல்லைங்க. நானும் வந்ததுல இருந்து கவனிச்சிட்டு தான் இருக்கேன். உங்க பொண்ணு முகமே சரியில்லை! ஒருவேளை வேற யாரையாச்சும் உங்க பொண்ணு லவ் பண்ண, நீங்க அவ விருப்பம் இல்லாம இந்த சீமந்தம் பேசிட்டீங்களோ?!” என்றார் சந்தேகமாய்.
     இந்த வார்த்தைகள் மித்ரன் காதுகளில் விழுந்துவிட, சட்டென்று பாதிச் சாப்பாட்டில் எழுந்தவன்,
     “இங்க பாருங்க! கவனமா பேசுங்க! எங்க வீட்டுப் பொண்ணைப் பத்தி இப்படி எல்லாம் பேச உங்களுக்கு என்ன தைரியம்?!” என்று முறைக்க,
     “டேய் மித்ரா!” என்று அவர் கையைப் பிடித்து அடக்கினார் தங்கமலர்.
     அதற்குள் நகுலனும், “ம்மா! எதுக்கும்மா வேண்டாத வார்த்தையெல்லாம் பேசுற?! அவ பார்க்கவே ரொம்ப டயர்டா தெரியுறா! அதனால்தான் ரெஸ்ட் எடுக்க ரூமுக்குப் போயிருப்பா! அதுக்குப் போய் கண்டதை எல்லாம் பேசிட்டு இருக்க?!” என்று தாயை அதட்டியவன்,
     “சாரி சாரி மாப்ளை. நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க!” என்றான்.
     “இல்லை!” என்று மறுத்தவன் பாதிச் சாப்பாட்டில் எழுந்ததோடு கைகழுவச் சென்றுவிட, ரஞ்சனிக்கு ஏதோ போல் ஆனது. அவனே பாதியில் எழுந்துவிட, தனக்கும் மேற்கொண்டு உணவில் கவனம் செல்ல மறுக்க, தானும் எழுந்து சென்று கைகளைக் கழுவிக் கொண்டு கீழே சென்றாள்.
     “மன்னச்சிடுங்க சம்மந்தி அவன் பேசினதை தப்பா எடுத்துக்காதீங்க! அவனுக்கு அவன் அக்கான்னா உயிரு! அவளைப் பத்தி யாரும் ஒரு வார்த்தைக் கூட பேசிடக் கூடாது.” என்று மறைமுகமாய் அவனை வைத்துச் சொல்வது போல் இனி என் மகளைப்பற்றித் தவறாக ஒரு வார்த்தை பேசக் கூடாது!” என்ற ரீதியில் சொல்லிவிட்டுச் சென்ற தங்கமலர்,
     ‘இந்தப் பொண்ணு ஏன் இப்படிப் பண்ணா?! இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்தா?!’ என்று யோசித்தபடியே மகளின் அறை நோக்கி நடந்தார்.
     அவர் அங்கு செல்வதற்குள் மித்ரன் அவள் அறைக்குச் சென்று அவளருகே அமர்ந்து,
     “என்னக்கா பிரச்சனை?! ஏன் ஒரு மாதிரியே இருக்க காலையிலிருந்து?!” என்று கேட்டுக் கொண்டிருந்தான் பரிவாய்.
     “ஒண்ணுமில்லை மித்து” என்று அவள் ஏதும் சொல்லாது மறுக்க,
     “சித்தப்பாவ நினைச்சுதானே!” என்று அவன் அவளின் உண்மையான வருத்தத்தைக் கண்டுபிடித்துக் கேட்க,
     “ம்!” என்று தலையசைத்தவள், மன வேதனை தாளாது, அவன் தோள் மீது சாய்ந்து கண்ணீர் சிந்த,
     “ச்சு! அக்கா என்ன இது?! நல்ல நாள் அதுவுமா கண்கலங்கிட்டு?!” என்று அவளை நிமர்த்தி கண்களைத் துடைத்தவன்,
     “நீ இப்படி அழுதா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க?! முதல்ல அழறதை நிறுத்து!” என்றான் கண்டிப்பும் அன்புமாய்.
     “இல்லை இல்லை மித்து! ஐ மிஸ் தெம்டா!” என்று அவள் மீண்டும் விசும்ப,
     “அப்போ நாங்க உன்னைப் பெத்தவங்களைப் போல உன்னை கவனிச்சுக்கலை?!” என்றபடி உள்ளே வந்தார் தங்கமலர்.
     “அச்சோ அப்படி இல்லைம்மா!” என்று ப்ரியா பதற,
     “அப்போ எதுக்குடி காலையில இருந்து மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு இருக்க?! நாங்க என்னதான் செய்தாலும் உனக்கு அவங்க இல்லாததுதான் குறை! செய்யிறவங்களைப் பத்திக் கவலை இல்லை!” என்று தங்கமலர் கடிய,
     “ம்மா! அப்படி இல்லைம்மா!” என்று அவரருகே எழுந்து வந்து அவரை கட்டிக் கொண்டவள்,
     “எத்தனை பேர் இருந்தாலும் என் தங்கமலர் அம்மாவுக்கு ஈடாகுமா?! ஆனாலும் மணிம்மாவும் அப்பாவும் இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்ல!” என்றாள் மனதை ஒளியாது.
     “நல்லா இருக்கும்தான்! ஆனா என்ன செய்யிறது! அவதான் நம்ம விட்டுப் போயிட்டான்னா உங்க அப்பாவும், அந்த வத்சலாவும், அவ பையனுமே கதின்னு கிடக்குறார்!” என்றவர்,
     “ஆனா நாங்க என்ன பார்த்துகிட்டாலும் உன் அப்பா, அம்மா இடத்தை எங்களால நிரப்ப முடியலை இல்லைடா பிரியு?!” என்று அவர் மனம் வருந்தக் கேட்க, கண்கள் கலங்க அவரைப் பார்த்தவள்,
      “ஆமாம் ம்மா! நிச்சயமா அவங்க இடத்துல உங்க ரெண்டு பேரையும் என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை!” என்றாள் அவரை நேருக்கு நேர் பார்த்து.
                                -தொடரும்…
                     
     
    
    

Advertisement