Advertisement

    “சமையல் ரொம்ப நல்லா இருக்கு! நான் இப்படி எல்லாம் சாப்பிட்டதே இல்லை தெரியுமா?! எங்க அம்மா சமைக்கிற சாம்பார் சோறு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு! அதுலயும் எங்க அம்மா பிரியாணின்னு ஒன்னு செய்வாங்களே! அது தக்காளி சாதத்துல தப்பித் தவறி ஏதோ ஒரு கோழி தெரியாம விழுந்து தற்கொலை செய்துகிட்ட மாதிரியே இருக்கும்!” என்று மையு தான் எப்போதும் தன் தாயிடம் அடிக்கும் டயலாக்கை ஒரு ப்ளோவில் சொல்லிவிட அனைவரும் கலீரென்றுச் சிரித்து விட்டனர். 

     அவர்கள் சிரிப்பதைப் பார்த்ததும்தான், தான் உளறியது புரிய,

     “ஈஈ! சாரி! எங்க அம்மாவை நானே டேமேஜ் பண்ணிட்டேன்!” என்று அசடு வழிந்தவள்,

      “இருந்தாலும் மையு உண்மையைத்தான் சொல்லுவா!” என்று பெருமையாய் சொல்லிவிட்டு,

     “இந்த பிரியாணி செய்தது யாரா இருந்தாலும் அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் உம்மா!” என, தங்கமலர் அவளைப் பார்த்து செல்லமாய் முறைத்தார்.

     “ஓ! அப்போ நீங்கதான் செய்தீங்களா அத்தை?!” என,

     “அண்ணி! நான் வந்துட்டேன்!” என்றபடியே கீர்த்தி ஓடி வந்து மானுவைக் கட்டிக் கொள்ள,

     “ஏய் இப்போதான் உன்னைப் பத்தி சொல்லிட்டு இருந்தேன் கீர்த்தி! வா வந்து உட்காரு. சாப்பிடலாம்” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து தன் அருகே இருந்த நாற்காலியில் உட்கார வைத்தாள்.

     “கையைக் கழுவிட்டு வந்து உட்கார் கீர்த்தி” என்று தங்கமலர் சொல்ல,

     “ப்ச் விடுங்க அத்தை. ஆடு மாடு எல்லாம் பல்லே தேய்க்கிறது இல்லை!” என்ற மையு,

     “நீ சாப்பிடு கீர்த்திம்மா” என,

     “அண்ணி! அப்போ நான் என்ன ஆடு மாடா?!” என்று கீர்த்தி சிணுங்க,

     “ச்சே ச்சே! உன்னைப் போய் அப்படிச் சொல்லுவேணாடா! நீ என் செல்ல நாத்தனார் ஆச்சே! நீ அதுக்கும் மேல!” என்று வார,

      “ம்! அண்ணி!!” என்று செல்லக் கோபம் கொண்ட கீர்த்தனாவிடம்,

     “சும்மா சும்மாடா! நீ வந்து உட்கார் நானே உனக்கு ஊட்டி விடுறேன்” என்று மையு, கீர்த்திக்கு ஊட்டிவிட, அதைப் பார்த்திருந்த மலருக்கு,

     ‘வந்த ஒரே நாள்ல எவ்ளோ உரிமையா பாசமா பழகுறா இந்தப் பிள்ளை?! இந்தக் குறை மட்டும் இல்லைன்னா எங்க எல்லார் மனசும் இந்நேரம் எவ்ளோ சந்தோசமா இருந்திருக்கும்?!’ என்றபடியே மருமகளைப் பார்த்திருக்க,

     “ம்மா! என்னம்மா ஏதோ யோசனையிலேயே இருக்கீங்க! சாப்பிடுங்க!” என்றான் மித்ரன்.

     இவ்வளவு கலாட்டா நடந்தும், ப்ரியாவும், ப்ரேமும், கொஞ்சமும் அதில் ஒட்டாமல் ஏதோ பெயருக்கெனக் கொறித்துவிட்டு எழுந்து சென்றுவிட,

     ‘ம்ஹும்! ப்ரியாக்கா கிட்ட பேசியே ஆகணும்!’ என்று எண்ணிக் கொண்ட மையு, சாப்பிட்டு முடித்த பின் ப்ரியாவின் அறை நோக்கித் தன் நாற்காலியைச் செலுத்த,

     “எங்க போற மானும்மா?!” என்றான் மித்ரன்.

     “ப்ரியா அக்கா கிட்ட பேசிட்டு வரேங்க நீங்க போங்க” என்றவளிடம்,

     “அவ முகமே சரியில்லை! கொஞ்சம் அவளை ஃப்ரியா விடு!” என்றான்.

      “அதனாலதாங்க நான் பேசணும்னு நினைக்கிறேன்” என்று அவள் சொல்ல,

      “அதுக்கு நம்ம ரூமுக்கு வர சொன்னா அக்காவே வரப் போறா. நீ எதுக்குப் போற?” என்றான் மீண்டும்.

     “இல்லை நீங்க போங்க. நான் போய்ப் பேசிட்டு வந்துடறேன்.” என்றவள், மெல்ல தன் நாற்காலியை உருட்டிக் கொண்டு அவள் அறை முன் சென்று நிற்க, அங்கு ப்ரியா கட்டிலில் அமர்ந்து ஏதோ யோசனையில் மூழ்கி இருக்க, ப்ரேம் அவளையே கலக்கத்துடன் பார்த்தபடி அமர்ந்திருப்பது தெரிந்தது.

     “ப்ரியாக்கா!” என்று குரல் கொடுத்தவள்,

     “நான் உள்ள வரலாமா?” என்று அனுமதி கேட்க, அவளைப் பாரத்ததும் சட்டென எழுந்து வந்த ப்ரியா,

      “என்ன மையு?! இப்படி எல்லாம் கேட்டுகிட்டு? வா உள்ள வா” என்று எழுந்து வந்து அவளை அழைத்துச் சென்றாள்.

     உள்ளே வந்ததும், “நீங்க உட்காருங்கக்கா” என்ற மையு, அவளிடம் எதுவும் கேட்காது ப்ரேமைப் பார்த்து,

     “அக்காவை என்ன சொன்னீங்க பிரேம் அண்ணா?!” என்றாள் அழுத்தமான குரலில் நேரடியாகவே.

     அரைமணி நேரம் சாப்பாட்டு அறையில் தங்களைப்  பார்த்ததற்கே மையு தங்களின் பிரச்சனையைக் கண்டு கொண்டாளே, என்று ப்ரியாவிற்கு ஆச்சர்யமும், ப்ரேமிற்கு அதிர்ச்சியும் ஒருசேர எழுந்தது.

     ‘அய்யோ என்ன என்ன சொல்றது?!’ என்று பிரேம் புரியாமல் விழிக்க, விஷயம் வெளியே தெரிந்தால், மித்ரன் நிச்சயம் ப்ரேம் மீது கைவைக்கவும் தயங்கமாட்டான், திரும்பவும் எல்லோரும் ரொம்ப வருத்தபடுவாங்க என்று உணர்ந்த ப்ரியா,

      “ஒண்ணுமில்லை மையு! சின்ன சண்டை ரெண்டு பேருக்கும்! அவர் இன்னிக்கே வீட்டுக்குப் போகணும்னு கூப்பிட, நான் ஒரு வாரம் இருந்துட்டு வரேன்னு சொல்ல, கொஞ்சம் வருத்தம். அவ்ளோதான். வேற ஒண்ணுமில்லை!” என்று பிரியா சட்டெனச் சமாளிக்க, அதுவரை பேயறைந்ததைப் போல் இருந்த ப்ரேமின் முகம் இப்போது சற்றுத் தெளிவானது.

     ‘ஹப்பா புண்ணியவதி போட்டுக் கொடுக்கலை! இல்லை இவ தம்பிக்கு விஷயம் போய் அவன் எனக்கு சங்கு ஊதி இருப்பான்!’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான் பிரேம்.

     இருவரின் பாவனையையும் கண்டு இருவருமே எதையோ மறைக்கிறார்கள் என்று புரிந்த போதும், மையு அதற்கு மேல் எதுவும் கேட்டுத் தொல்லைப் பண்ணக் கூடாது என்று முடிவெடுத்து,

     “ஓ! இதெல்லாம் ஒரு விஷயமா அக்கா! இதுக்குப் போய் முகத்தை தூக்கி வைச்சுட்டு இருக்கீங்க?!” என்று சகஜமாய் பேசியவள், பிரேமிடம் திரும்பி,

     “ஆனா அண்ணா நீங்க செய்ததும் ரொம்ப தப்பு” என,

     “எ என்ன நா நான் என்ன தப்பு செஞ்சேன்” என்று பிரேம் திணற, அவளுக்கு நிச்சயமாய்த் தெரிந்து விட்டது விஷயம் பெரிது என்று.

     “அட அம்மா வீட்டுக்கு வந்த பொண்ணை ஒரே நாள்ல மாமியார் வீ’ட்டுக்கு வான்னு கூப்பிட்டா அது தப்பில்லையா?” என்று சிரித்தபடிக் கேட்டவள்,

     “ஆனா அண்ணா ஒன்னு மட்டும் நியாபகம் வச்சுக்கோங்க! என் ப்ரியா அக்கா கொஞ்சம் முகம் வாடினாக் கூட என்னாலயும் தாங்க முடியாது, என் வீட்டுக்காரராலயும் தாங்க முடியாது! அதனால பார்த்துக் கொஞ்சம் கவனமா நடந்துக்கோங்க” என்று மறைமுகமாய் எச்சரிக்க,

     ‘என்னடா எனக்கு வந்த சோதனை?!’ என்பது போல் பார்த்தவன்,

     “ந நான் என்னமா பண்ணப் போறேன் உங்க அக்காவை?! அவ என் வாழ்க்கையில வந்த தேவதைம்மா” என்று ஐஸ் வைப்பது போல் சொன்ன  ப்ரேமை, ப்ரியா கடுமையாய் முறைக்க,

     “அதான் தேவதையை ஏமாத்தி கூட்டிட்டுப் போய்க் கல்யாணம் பண்ணீங்களோ?!” என்றாள் மையு ஏற்கனவே அவன் மீது இருந்த கடுப்பில்.

     அவள் கேள்வியில் விழி பிதுங்க விழித்த பிரேம், “அ அது வந்தும்மா!” என்று தந்தியடிக்க,

     “என்ன வந்து போயின்னு தந்தியடிச்சுக்கிட்டு?!” என்று காட்டமாய்ச் சொன்னவள்,

     “கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க செய்த துரோகத்தையே எங்களால ஏத்துக்க முடியலை! கல்யாணத்துக்கு அப்புறமாச்சும் எங்க அக்காவை நல்லா பார்த்துக்கறீங்கன்னு நம்பிட்டு இருக்கோம்! இப்பவும் பழைய மாதிரி ஏதாச்சும் அக்காவைக் கஷ்டப் படுத்தினீங்கன்னு தெரிஞ்சுது,” என்று மிரட்டலாய் நிறுத்தியவள்,

     “நான் வந்து பேசமாட்டேன்! அவர்தான் பேசுவார்!” என்று எச்சரிக்கையாய் சொல்லிவிட்டு, ப்ரியாவிடம் திரும்பினாள்.

     “அக்கா நீங்களும் இனியாவது எதுவா இருந்தாலும் யாராவது ஒருத்தர் கிட்டயாவது மனசு விட்டுப் பேசுங்கக்கா! அப்படியும் இல்லைனா, அட்லீஸ்ட், நிதானமா யோசிச்சு நம்மைக் கஷ்டப் படுத்தினவங்களுக்கு பதிலடி கொடுக்குற மாதிரி, ஒரு நல்ல முடிவா எடுங்க! அப்போதான் உங்களுக்கு நல்ல தீர்வும் கிடைக்கும்! நிம்மதியும் கிடைக்கும்” என்றாள் வருத்தமும், அக்கறையுமாய்.

     அவள் அவ்வளவு சொல்லியும் ப்ரியாவால் இந்த விஷயத்தை அவளிடம் முன்பு சொன்னது போல் எல்லாவற்றையும் ப்ரேமைப் பற்றிச் சொல்ல முடியவில்லை! ஆனால் மையு அவளிடம் வந்து பேசியதில் நேற்று முதல் ஏமாற்றமடைந்திருந்த மனது இப்போது சற்றே தெளிவைடைந்து தைரியமும் பெற்றது.

     சில நிமிடம் அமைதி காத்தவள், மையுவின் கைகளைப் பற்றி, “நிச்சயமா மையு! இனி எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அதை தைரியமா ஏமாறாம நானே ஹாண்டில் பண்ணுவேன்!” என்று ப்ரேமை முறைத்தபடி சொல்ல, ப்ரேமிற்கு வயிற்றைக் கலக்கியது.

     “ம்! தட்ஸ் குட் அக்கா!” என்றவள்,

     “சரிக்கா நான் கிளம்பறேன்” என்று சொல்லிக் கிளம்ப,

     “இரு மையு. நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவளை,

     “வேணாக்கா! ஜாலியா இருக்கு நான் தனியாவே போயிக்குவேன்” என்று சொல்லி மையு தானே சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு நகர, ப்ரியா, தன்னைப் பற்றிய கவலையும், மையுவைப் பற்றிய கவலையும் அகன்றவளாய், நம்பிக்கையுடன் புன்னகைத்தாள்…

     சிரித்த முகமாய் தங்கள் அறைக்குள் நுழைந்த மையுவைப் பார்த்த மித்ரன்,

     “என்ன பஞ்சாயத்து நல்லப் படியா முடிஞ்சுது போல. மேடம் முகத்துல ஒரே சிரிப்பு!” என்று கேட்க,

      “ஆமாம் ஆமாம்! நாட்டமைக்காரம்மா தீர்ப்பு சொல்லிட்டு வரேன்! நீங்க என்ன மரியாதை இல்லாம உட்கார்ந்துகிட்டே கேள்வி கேட்டுகிட்டு?!” என்றாள் அவள் அதிகாரமாய்.

     “பார்றா அதிகாரத்தை! உங்க அதிகாரம் நாட்டமைக் கிட்ட எல்லாம் செல்லாது நாட்டமைக்காரம்மா என்றவன், அவளைக் கையோடு தூக்கிக் கொண்டு கதவை மூட,

     “என்ன என்ன பண்றீங்க நாட்டாமை?!” என்றாள் பயந்தவள் போல் நடித்து.

     “என்ன பண்ணப் போறேன்னு உங்களுக்குத் தெரியவே தெரியாதா நாட்டமைக் காரம்மா?!” என்றவன், அவளைக் கட்டிலில் கிடத்திவிட்டு அவளை நெருங்க,

     “ப்ச்! பேட் நாட்டாமை நீங்க!” என்று மையு முக்கைச் சுருக்கி ஒழுங்கு காண்பிக்க,

     “ஆமாம்! ரொம்ப ரொம்ப பேட் நாட்டாமை!” என்றவன், அவளின் நயனங்களில் முத்தம் பதித்து மீண்டு,

     “இப்போ என் மானும்மா நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. சோ நான் வெளியே போயி வேலையை முடிச்சிட்டு சாயந்திரம் வந்துடுவேணாம்” என்று அவன் விலக,

      “ம்! வெளியவா?! என்னைத் தனியா விட்டுட்டா?!” என்று அவள் முகம் வாட,

      “அப்புறம் வேலை வெட்டிக்குப்  போக வேணாமா?!” என்றான் கேள்வியாய்.

      “போகணும் தான். ஆனா இன்னிக்கேவா?!” என்று அவள் சிணுங்க அவனின் கைப்பேசி அலறியது..

ப்ச் இது வேற!” என்று அவள் கைப்பேசி யின் மீது கோபம் காண்பிக்க,

     “ப்ச் பேசாம இரு மானும்மா!” என்றவன் அழைப்பை ஏற்று, “எஸ் டெல் மீ. ஈவினிங் கிடைச்சிடும்தானே என,

      “சார் இப்போவே கிடைச்சிடும் சார் நீங்க வந்தா” என்று மறுமுனையில் இருந்தவன் சொல்ல,

ஓ ரியலி! தாங்க் யூ வெரி மச். வில் பீ தேர் இன் ப்வூ மினிட்ஸ்…” என்று மலர்ந்த முகத்தோடு சொல்லியவன், மனைவியை நெருங்கி மீண்டும் அழுத்தமாய் ஆசை முத்தம் ஒன்றை பதித்து விட்டு,

ஹாப் அன் ஆர்ல வந்துடறேன் மானும்மா” என்று பரபரப்பாய் கிளம்ப,

ப்ச் என்ன இந்த மனுஷன் இப்படி பறக்குறார்?!” என்று யோசித்தவளுக்கு அவன் இப்படி பறப்பதே அவளுக்காகத்தான் என்று தெரியும் போது?!

                                  -மான்விழி மயங்குவாள்…  

    

    

          

 

 

    

 

     

       

     

   

      

     

 

Advertisement