Advertisement

                              31

     “என்னங்க எங்க போனீங்க? அவ்ளோ அவசரமா என்னைப் படுக்க வைச்சுட்டு?!” என்று மையு தங்கள் அறைக்குள் நுழைந்தவனைப் பார்த்துக் கேட்க,

     “ஒரு முக்கியமான கால்டா. அதான் அட்டென்ட் பண்ணிட்டு வந்தேன்” என,

     “அதை இங்கயே பேசி இருக்கலாமேங்க” என்று அவள் கேட்க,

     “நீ கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுப்பேன்னுதான்டா வெளியே போய் பேசினேன்” என்றவன்,

     “சரி சாப்பிடப் போலாமா மானும்மா? லஞ்ச ரெடி ஆகி இருக்கும்” என்றான்.

     “ம்!” என்றவள், அவன் உதவியுடன் வீல் சேரில் ஏறி அமர்ந்து, தானே அதனைத் தள்ளிக் கொண்டு செல்லப் பழக, பல வருடங்களுக்குப் பின் யார் உதவியுமில்லாமல் தானே இயங்குவது அவளுக்குப் பெரும் சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்தது.

     வீல் சேரை இயக்கியவள், அது நகர்ந்ததும்,

     “ஐ! நல்லா இருக்குங்க! ந நானே தனியா மூவ் பண்றேன்” என்று சொல்லி, ஆசையோடு அங்கும் இங்கும் தங்கள் அறையிலேயே சுற்றிச் சுற்றி வர, அவனுக்கும் அவளின் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

     ‘என் மானும்மா வீல் சேர் கூட வாங்க முடியாம இத்தனைக் காலமா இருந்த இடத்துலேயே இருந்து எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா?!’ என்று நினைத்துக் கலங்கியவன்,

     ‘இனி உனக்குச் சின்னதா கூட எந்த ஏமாற்றத்தையும் வரவிடமாட்டேன் மானும்மா. இனி நீ வாழப் போற ஒவ்வொரு நொடியும் உன்னை நீ நினைச்சதை விட சந்தோஷமா உணர வைப்பேன்டா!’ என்று உறுதி எடுத்துக் கொண்டான் மனதோடு.

     “அப்பாவும், அம்மாவும் இப்படி நானே தனியா இயங்குறதைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவாங்கங்க!” என்றாள் மையு ஆர்வமாய்.

     “ம்” என்று தலையசைத்தவன்,

     “சாப்பிடப் போலாம்டா! எல்லாரும் காத்துட்டு இருப்பாங்க!” என்றதும்,

     “அச்சோ! சாரி அதை மறந்துட்டேன் பாருங்க” என்றவள்,

     “வாங்க போகலாம்” என்று தனது வீல் சேரை, நகர்த்திக் கொண்டு முன்னே செல்ல, அவன் சிரித்தபடி பின் தொடர்ந்தான்.

     மையு அவன் உதவி இல்லாமல் தானே வீல் சேரை இயக்கியபடி வருவதைப் பார்த்தத் தங்கமலர், அவளின் உற்சாகம் நிறைந்தோடும் முகத்தைக் கண்டு, மகனைப் பெருமையாய் நோக்கினார்.

     மனைவியின் சந்தோஷத்தையே ரசித்தபடி வந்தவன், மலர் தங்களைப் பார்த்திருப்பதை கவனிக்கவில்லை என்றாலும், மையு தனது அத்தையை கவனித்து விட்டாள்.

     அவரது முகத்தில் தெரிந்த பெருமிதத்தைக் கண்டு, சாப்பாடு மேஜை அருகே சென்றதும்,

     “உங்க பையன்  கிட்ட சரியா பேச மட்டும் மாட்டீங்க! ஆனா தூரமா நின்னு ரசிக்க மட்டும் செய்வீங்க இல்ல அத்தை!” என்று வந்ததும் வராததுமாக மையு மலரிடம் வம்பிழுக்க, அவன் மெல்லச் சிரித்தான்.

     அவன் சிரிப்பதைப் பார்த்து மலர், “நான் ஒண்ணும் யாரையும் பார்க்கலை!” என்று பட்டெனச் சொல்லிவிட்டு,

     “சாரு! எல்லோரும் வந்துட்டாங்க! வந்து பரிமாறு” என்றார்.

     அப்போதே, சரத், பிரேம் இருவரும் தங்கள் அறையில் இருந்து வெளியே வர,

     ‘நாங்கலாம் இப்போதான் வரோம்! புள்ளையும் மருமகளும் வந்ததும் எல்லோரும் வந்துட்டாங்கன்னு சொல்றதைப் பாரு!’ என்று எண்ணியபடியே சரத் அங்கு வந்து அமர்ந்தாலும், பிரேமின் முகம் ஏதோ போல் இருந்ததையும் கவனிக்கத் தவறவில்லை!

     ‘என்ன?! இந்த ஒட்டடைக்குச்சி பிரேம் மூஞ்சி ஏதோ பேயறஞ்ச மாதிரி இருக்கு! காலையில சாப்பிட வரும்போதும் இப்படிதான் இருந்தான்! இப்பவும் இப்படி இருக்கான்னா பெருசா ஏதோ சம்பவம் நடந்திருக்கு! கண்டு புடிக்கிறேன்!’ என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தவனை கவனித்த மையு,

     “என்ன சுரத் அண்ணா! சாப்பிட வந்த இடத்துல சாப்பிடாம யார் என்ன செய்யிறாங்கன்னு நோட்டம் விட்டுட்டு இருக்கீங்க?! உங்க பிரச்சனையை முதல்ல கவனிங்க! ஐ மீன் உங்க வயித்தை முதல்ல சமாதானப் படுத்துங்க!” என்று மையு அவனிடமும் வம்பிழுக்க,

     “என் பேர் சுரத் இல்ல சரத்.” என்றான் கடுப்புடன்.

     “ஓ! ஒகே சுரத் அண்ணா. முதல்ல சாப்பிடுங்க” என்றாள் மீண்டும்.

     “சுரத் இல்லை சரத்!” என்று அவன் மீண்டும் பல்லைக் கடித்துக் கொண்டு கூற,

     “ப்ச் இப்போ என்ன அண்ணா? உங்க பேச்சுல தான் சுரத்தே இல்லை! அட்லீஸ்ட் உங்க பேருலயாச்சும் இருக்கட்டுமே! எனக்கும் ச வராது!” என்று நன்றாகவே ச வை உச்சரித்தவள்,

     “அதனால நான் சுரத்னே கூப்பிடுறேனே! அப்படிக் கூப்பிடுறதுனால நீங்க என்ன ஒரு அடி குறைஞ்சிடப் போறீங்களா என்ன?!” என்று விடாமல் கடுப்படிக்க,

     வீட்டில் இருந்த மற்றவர்களுக்குமே, அவளின் பேச்சும், அவனின் சிடுசிடுப்பும் சிரிப்பை வரவழைத்தது. ஆனால் ப்ரேமும், ப்ரியாவும் மட்டும் ஏதோ போல் இருந்ததை மித்ரன் கவனிக்க, அவனின் முகம் கண்ட மையுவும், என்ன என்பது போல் பார்க்க, ப்ரியா சகஜமாய் இல்லை என்பதைக் கண்டு கொண்டாள். அதோடு அவள் கணவனும், இத்தனை நாள் சிரிப்பும் பேச்சுமாய் இருந்தது போய் இன்று உம்மென்று அமர்ந்திருப்பது அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொன்னது.

     “என்ன பிரேம் அண்ணா? நீங்களும் சாப்பிடாம தட்டையே பார்த்துட்டு இருக்கீங்க?!” என்றாள் மையு அவனிடமும் பேச்சுக் கொடுத்து.

      “ஹா ஒண்ணுமில்லை மா. இதோ சாப்பிடுறேன்” என்றவனை ப்ரியா முறைக்க, அவனுக்கு சாப்பாடு உள்ளிறங்குவேனா என்று ஆனது.

     ‘என்னவோ இருக்கு!’ என்று எண்ணிக் கொண்டவள்,

     “ப்ரியாக்கா, நீங்களும் அண்ணா பக்கத்துல வந்து உட்காருங்க. அங்க எதுக்கு நின்னுகிட்டு?! வயத்துல பிள்ளையை வச்சுக்கிட்டு நீங்கதான் முதல்ல சாப்பிடணும்” என்றவள்,

     “என்ன அண்ணா நீங்க?! அக்காவை அழைச்சிட்டு வந்து உட்கார வைங்க!” என்றாள் ப்ரேமைப் பார்த்து.

     ‘இந்தப் பொண்ணு கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டா போல! எல்லாரையும் வம்பிழுத்துகிட்டு!” என்று எண்ணிக் கொண்டே ராதா பரிமாற,

     “என்ன அக்கா அப்படிப் பார்க்குறீங்க?! வந்த ஒருநாள்ல என்னமா பேசுது இந்தப் பொண்ணுன்னு பார்க்குறீங்களா? போகப் போகப் பாருங்க” என்று ராதாவையும் விட்டு வைக்கவில்லை மையு.

     “அம்மாடி நான் எதுவும் நினைக்கலைம்மா” என்று அவர் சமையல் அறைக்கு ஓடி விட,

     “மானு சும்மா சாப்பிட மாட்டியா?! எதுக்கு எல்லோரையும் வம்பிழுத்துட்டு இருக்க?!” என்று மெல்லக் கடிந்தான் மித்ரன்.

     “என்னங்க நீங்க? நான் ஆசையா எல்லோர் கிட்டயும் பேசினா நீங்க வம்பிழுக்குறன்னு சொல்றீங்க?! பாருங்க அத்தை உங்க பையன் பேசுறதை!” என்று மையு தங்கமலரிடம் முறையிட, அவர் லேசாய்ப் புன்னகைத்துவிட்டு அமைதியாகி விட்டார்.

     “அத்தை எப்போவும், பண்டேரிபாய் ஆன்ட்டி மாதிரி கியுட் அண்ட் சார்ட் ஸ்மைல்!” என்றவள்,

     “பெரிய மாமாவும், சின்ன மாமாவும் கூட சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டுப் போயிருக்கலாம்! இன்னிக்கு விருந்து சாப்பாடு எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்கீங்கல்ல, ஒண்ணா எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டிருந்தா இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்!” என்றாள் கொஞ்சம் வருத்தமாய்.

     “அம்மா கூப்பிட்டாங்கம்மா! ஆனா சர்ஜரி இருக்காம்! வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு லஞ்ச கட்டிக் கொடுத்து அனுப்பிட்டோம்” என்றாள் சாரு.

     “ஓ! சரிங்க அண்ணி!” என்றவள்,

     “ஆமாம் பிள்ளைங்களை எங்க காணோம்” என்றாள் அப்போதும் வாயை மூடாமல்.

     “ஸ்கூல்க்கு போய்ட்டாங்க ம்மா!” என்று சாருவும் பொறுமையாய் பதில் கொடுக்க,

     “போங்க அண்ணி. நேத்துதான எங்களுக்குக் கல்யாணம் ஆச்சு?! இன்னும் ஒரு நாலு நாளாச்சும் லீவ் போட்டிருக்கலாம்ல! எங்க வீட்ல எல்லாம் ஒரு வாரமாச்சும் லீவ் போட்டுடுவோம் நாங்க! இங்க என்னன்னா கீர்த்தி பசங்கன்னு எல்லோரும் அடுத்த நாளே காலேஜ் ஸ்கூல்னு போயாச்சு” என்ற மையுவிடம்,

    “அதெல்லாம் அப்போம்மா! இப்போ எல்லாம் நாலு நாள் லீவ் போட்டா பேரண்ட்சை கூப்பிட்டு அதுக்கு வேற பஞ்சாயத்து வச்சிடுவாங்க!” என்று சொல்ல,

     “வர வர ரொம்ப மோசமா போயிட்டுருக்கு நாடு! எல்லாம்” என்று ஏதோ சொல்ல வந்தவளை முடிக்க விடாமல், மையுவின் வாயில் பிரியாணியைக் அள்ளித் திணித்த மித்ரன்,

     “பேசாம வாயை மூடிட்டு சாப்பிடு மானும்மா” என,

     “பேசாம சாப்பிடலாம்! ஆனா வாயை மூடிக்கிட்டு எப்படிச் சாப்பிடுறதாம்?!” என்று அவள் வாயில் பிரியாணியை வைத்துக் கொண்டே பேச, அங்கிருந்த மற்றவர்கள் சிரித்து விட, சரத் உச்சக்கட்ட கடுப்பில்,

     ‘யம்மா இவ வாயிக்கு ரேடியோவே பராவால்ல போல! சீக்கிரம் இங்கிருந்து கிளம்பித் தொலையணும்!’ என்று எண்ணி விருந்தை விரும்பிச் சாப்பிட முடியாமல், போதுமென்று முடித்துக் கொண்டு எழுந்து ஓட, மனதிற்குள் சிரித்துக் கொண்ட மையு,

     ‘போங்க போங்க அண்ணா! கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் ஒரு வழிக்குக் கொண்டு வரேன்’ என்று நினைத்துக் கொண்டாள்…

     “ஆனாலும் பிடிச்சாலும் பிடிச்சான், பேசி பேசியே கொல்லுற ஒருத்தியைப் பிடிச்சிருக்கான்! இவன் கையால பேசியே மனுஷனைக் கொல்லுவான்னா இவ வாயால பேசியே கொல்லுறா!” என்று புலம்பியபடி கைகளைக் கழுவிக் கொண்டிருந்தவன் அருகே வந்த சாரு,

     “என்னங்க சரியாவே சாப்பிடலை?! வயறு சரியில்லையா என்ன” என்று அக்கறையாய் கேட்க,

     “ம்க்கும்! அதை நாளைக்கு மறுநாள் வந்துக் கேளு!” என்று சிடுசிடுப்பாய்ச் சொன்னவன், வேகமாய்த் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டான்.

     மையு எப்போதும் நன்றாகவே விரும்பிச் சாப்பிடும் ரகம், அதனால், புது இடம் என்று எல்லாம் பார்க்கவில்லை! அவள் வயறு முட்ட நன்கு உண்டாள்.

     அவள் ரசித்து உண்பதைப் பார்த்து மித்ரனுமே மிகுந்த சந்தோஷமாய் உணர்ந்தான்.

Advertisement