Advertisement

                                 3
     “இன்னிக்கு மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குங்க! இத்தனை நாள் ப்ரியாக்கு முடியாம மித்ரனுக்கு முடிக்குறதுல விருப்பமே இல்லாமதான் பொண்ணு தேடிட்டு இருந்தேன். இன்னிக்கு அந்த மனக்குறை நீங்கிடுச்சு! அதுவும் இன்னிக்கே நல்ல வரன் ஒன்னு அமைஞ்சு, அது பிடிச்சுப் போய் விசாரிக்கவும் சொல்லிட்டோம். அவங்க குடும்பமும் நல்ல மாதிரி இருந்துட்டா பேசி முடிச்சிடலாம்!” என்று தங்கமலர் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் சொல்லிக் கொண்டிருக்க, ராஜசேகர் ஏதோ யோசனையிலேயே இருந்தார்.
     “என்னங்க நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்ன ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க?!” என்று தங்கமலர் அவர் தோளைத் தொட்டு அழைக்க,
     “ம்! கேட்டுட்டு தான் இருக்கேன். ஆனா அவன் இந்த முடிவை வத்சலா கிட்ட கேட்டுதான் எடுத்தானா இல்லை” என்று அவர் நிறுத்த,
     “ப்ச்! அவகிட்ட கேட்டுதான் அவர் முடிவெடுக்கணுமா?!” என்றார் தங்கமலர் கோபத்துடன்.
     “என்ன இருந்தாலும், அவ முடிவும் இதில் முக்கியம் இல்லையா?!” என ராஜசேகர் தயங்க,
     “என்ன அவ முடிவு! என் பொண்ணுக்கு அவ என்ன முடிவு எடுக்க?!  இத்தனை நாள் உங்க தம்பி பிடிகொடுக்காததுனால நானும் பேசாம இருந்தேன். ஏதோ இன்னிக்காச்சும் அவருக்கு நல்ல முடிவு எடுக்கத் தோணுச்சேன்னு நான் சந்தோஷமா இருந்தா, நீங்க மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறீங்க?” என்று அவர் உரிமையுடன் கோபம் கொள்ள,
     “என்னதான் அவ நம்ம வீட்ல வளர்ந்தாலும், அவளுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள்ல நம்மால தனிச்சு நின்னு எந்த முடிவும் எடுக்க முடியாது இல்லம்மா!” என்று ராஜசேகர் மனதில் உள்ளதைக் கொட்ட, 
     “அதெல்லாம் முடியும் நீங்க பேசாம ஆகுற வேலையைப் பாருங்க!” என்று முடித்தவர்,
     “நாளைக்கு தரகரை அனுப்பி விசாரிக்க சொல்லிட்டு எல்லாம் பேசி முடிச்சிட்டு உங்க தம்பிக்கு சொல்லுங்க போதும். இப்போவே எதையும் பேச வேணாம். முடிவான பிறகு அவ வாயை எப்படி அடைக்கணும்னு எனக்குத் தெரியும்” என்றும் சொல்லிவிட்டார் வத்சலாவின் குணம் நன்கு அறிந்தவர் ஆதலால்.
     “ம்!” என்ற ராஜசேகருக்கும் மனைவி என்ன யோசித்திருப்பாள் என்பது புரிய இப்படிப்பட்ட மனைவியைக் கொடுத்த பிரபஞ்சித்திற்கு மனதார நன்றியை சொல்லிக் கொண்டு சிரித்தார் மென்மையாய். 
     ‘மணியும் இருந்திருந்தா இப்போ எங்க குடும்பம் இன்னும் எவ்வளவோ சந்தோஷமா இருந்திருக்கும். எந்த மனக்குறையுமே இல்லாம!’ என்றும் அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை!
      ராஜசேகர், மனோகர் இருவரும் உடன்பிறந்தவர்கள், அதனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அலாதி பிரியம் வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் இருவரின் மனைவிகளான தங்கமலரும், மணிமேகலையும் உடன்பிறவாமலே சகோதரர் இருவரின் அன்பையும் மிஞ்சும் அளவிற்கு அவ்வளவு ஒற்றுமையாய் இருந்தனர். ஆனால் இப்படிப்பட்ட அதிசயங்கள் நிலைப்பதில்லையே! ப்ரியா பிறந்து ஐந்து வருடத்தில் மணிமேகலை மின்சார விபத்தில் இறந்து போக, ப்ரியாவை தங்கமலர் தாய் இல்லாத குறை தெரியாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் மனைவி இறந்ததை தாங்க முடியாத மனோகர் மனமாற்றமும் இடமாற்றமும் வேண்டி சிங்கப்பூருக்கு வேலை மாற்றம் வாங்கிக் கொண்டு கிளம்பிவிட, ப்ரியாவிற்கு, தாய், தந்தை இருவருமே பெரியப்பா, பெரியம்மாவாக ஆகிப் போனார்கள்.
     வேலைக்குச் சென்ற இடத்தில தமிழ் குடும்பம் ஒன்றின் பழக்கம் ஏற்பட, அப்போது விழுந்தவர்தான் வத்சலாவிடம். இப்போதும் மனைவி சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
     ஆனால் ப்ரியாதான் தனக்குள்ளேயே சில விஷயங்களைப் போட்டு மறுகிக் கொண்டு தன்னை வருத்திக் கொள்வாள் அவ்வப்போது.  ப்ரியாவிற்கு அன்பிலும் சரி, தேவையிலும் சரி எவ்வித குறைவும் தங்கமலரும், ராஜசேகரும் வைக்கவில்லை என்றாலும், தாய், தந்தையிடம் உரிமையுடன் கேட்பது போல் கேட்டுப் பெறத் தயக்கமாகிப் போனது குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு. அதுவே இன்று வரை தொடர்ந்ததை அவ்வீட்டில் உள்ள யாரும் அறியவும் இல்லை!
                                ******
     மறுநாள் மாலை, “டேய் ஜீவா மாமா வீட்ல இருந்து போன்மேல போன். எப்போ நிச்சயம் வைக்கலாம்னு. நீ என்னடா சொல்ற?! இந்த மாசம் வச்சுக்கலாமா?!” என்று சாந்தி கேட்க,
     “ம்மா! அக்கா இருக்கும் போது?!” என்று அவன் தயங்க,
     “என்னடா பண்ற சொல்ற? அவளுக்கு அப்படி ஒரு குடுப்பினை இல்லையே?! அவளுக்குக் கல்யாணம் ஆகும்னா நீ சொல்ற மாதிரி அவளுக்கு அமைஞ்சதும் உனக்கு முடிக்கலாம்னு பார்க்கலாம். ஆனா?!” என்று நிறுத்த,
     “ம்மா! எத்தனை முறை சொல்லி இருக்கேன் இப்படிப் பேசாதன்னு அதுவும் அவ முன்னாடியே பேசுற உனக்குக் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?!” என்று காயத்ரி கத்த,
     “உண்மைய சொன்னா உனக்கேனடி இவ்ளோ கோவம் வருது! நீதான் பையித்திக்காரி மாதிரி அக்காக்கு கல்யாணம் நடக்கனும்னு காத்துக்கிட்டு இருக்க?! உன்னை மாதிரியே ஊர்ல இருக்க பொண்ணுங்க எல்லோரும் காத்துகிட்டு இருப்பாங்களா?! என் தம்பி பொண்ணு தங்கம்டி! உங்க பிடிவாதத்துக்காக அவளை விட்டுக் கொடுக்க நான் தயாராயில்ல! நீங்க எல்லோரும் ஒத்துகிட்டாலும் இல்லைனாலும் இந்த மாசம் நிச்சயத்துக்கு நாள் குறிக்கத் தான் போறேன்.” என்றவர், தன் தம்பிக்கு போன் செய்ய எழுந்து செல்ல, காயத்திரி மைத்ரேயியிடம் சென்று,
     “அக்கா நீ இதை எல்லாம் பெருசா எடுத்துக்காத! அவங்க கிடக்காங்க! நீ வேணா பாரு! எல்லோரும் ஆச்சர்யப்படுற அளவுக்கு உன் வாழ்க்கை மாறப்போகுது! அப்போ இப்படிப் பேசுற வாயெல்லாம் தன்னால மூடிக்கும்!” என்று தாயை முறைத்தபடி சொல்ல,
     “ம்!” என்று விரக்தியுடன் சிரித்த மைத்து,
     “பரவால்ல காயு! அம்மா உண்மையதானே சொல்லுது! ஆனா என் வாழ்க்கையைப் பத்தி யோசிக்கலைன்னா பரவால்ல! உனக்கு ஒரு நல்ல வரன் பார்க்கலாம்ல!” என்ற மைத்து,
     “அம்மா! நீ தம்பிக்கு பேசி முடி. நான் வேணாங்கல! ஆனா காயுக்கு முதல்ல முடிக்கலாம்ல!” என நேரடியாக தாயிடமே கேட்டுவிட,
     “ஆமாம்டி! பணம் கொட்டி வச்சிருக்கேன் பாரு! அவளுக்குக் கல்யாணம் முடிக்க! நான் என்னமோ என் பொண்ணுங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்குற மாதிரியே பேசுறீங்க?!” என்று சாந்தி ஆரம்பிக்க,
     “அக்கா ஏன்?!” என்றாள் காயத்ரி.
     “ப்ச்! நீ சும்மா இரு!” என்று அவளை அடக்கியவள்,
     “உன் பிள்ளை மாசம் இருபதாயிரம் சம்பாதிக்கறான்ல! ஆனா வீட்டுக்கு எவ்ளோ குடுக்கறான்! ஆனா காயு வாங்குற மொத்த சம்பளத்தையும் உன்கிட்ட தானே குடுக்குறா? என்ன பண்ண அவ சம்பளத்தை எல்லாம்?!” என்று மைத்து கேட்க,
     “ம்! அவ சம்பளத்தை எல்லாம் எனக்கு நகையும் நட்டுமா செய்து போட்டுகிட்டேன் பாரு!” என்று தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த வெறும் தாலிக் கயிற்றைக் எடுத்துக் காண்பித்தவர்,
     “இந்த வீட்டை கட்டி இருக்கோமே! அந்தக் கடனை எல்லாம் யார் அடைக்கிறது?!” என்றார் கோபமாய்.
     “அதை உன் பிள்ளைகிட்ட கேளு” என்று மைத்து சொல்ல,
     “நான் என்ன கேட்காமயா இருக்கேன். அவன் சீட்டுக்கு பணம் கட்டிட்டு, அவன் செலவும் போக மிச்சப் படுத்தி வீட்டுக்கு கொடுக்குறான்” என,
     “சீட்டு எடுத்து என்ன உனக்கா கொடுக்கப் போறான்?!” என்றாள் வெடுக்கென்று.
     “வேற, கடனை அடைக்கத்தான் கொடுப்பான் என் பிள்ளை!” என்று சாந்தி சொல்ல,
     “அடைப்பான் அடைப்பான் பார்க்கத்தானே போறேன்” என்றவள்,
     “எது எப்படி இருந்தாலும், காயுக்கும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பி” என்றாள் உரிமையாய்.
     “இதோ பாருடி! உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு. காயு சின்னவதானே அவளுக்கு இன்னும் வயசு இருக்கு. இந்த சட்டம் போடுற வேலையெல்லாம் என்கிட்டே வச்சுக்காத” என்று மிரட்டிக் கொண்டிருக்க,
     “என்னதான் பிரச்சனை உங்களுக்கு?! ஒருநாளாச்சும் வீட்டுக்கு வரும்போது சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கீங்களா? எப்போ பாரு சத்தம் போட்டுக்கிட்டு?!” என்று கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார் முருகேசன்.
     “ஹான் உங்க பொண்ணு பேசுனதுதான் வாசவரை கேட்டிருக்குமே பிறகென்ன?!” என்று சாந்தி பதில் கூற,
     “ஆமா கேட்டுது. அவ சொன்னதுல என்ன தப்பிருக்கு?!” என்றார்.
     “அப்படியா ராசா! குடுங்க ஒரு அஞ்சு லட்சம். சரி வேணாம் சிம்ப்ளா செய்யணும்னா கூட ஒரு ரெண்டு லட்சம் கொண்டு வந்து கொடுங்க. தாராளமா கல்யாணம் முடிச்சிடலாம்!” என்று சாந்தி நக்கலாய்ச் சொல்ல, முருகேசனால் எதுவும் பேச முடியவில்லை!
     போன வருடம்தான் வீடு கட்டி இருந்தனர். அதற்கான கடனே மாதம் இருபதாயிரம் கட்ட வேண்டி இருக்க, அவரும்தான் என்ன செய்வார். சாதாரண தொழிலாளி. சாந்தியும் தையல் கடை வைத்து நடத்துவதால்தான் கடன் கட்டியது போக குடும்பமே ஓடுகிறது. ஆனால் என்னதான் பணநெருக்கடி என்றாலும், பிள்ளைகள் மூவரையும் நன்கு படிக்க வைத்து இருந்தனர். பெரியவள், எம்எஸ்சி கணினி முடித்திருந்தாள் என்றால், சின்னவள், பிகாம் படிக்கும் போதே சிஏ படித்துத் தேறி பெரிய நிறுவனம் ஒன்றில் உதவி ஆடிட்டராக பணி புரிந்து கொண்டிருந்தாள். ஜீவாவும் எஞ்சினியரிங் முடித்து நல்ல வேலையில் இருந்தான். குடும்பத்திலேயே உழைக்க முடியாத நிலையில் இருந்தது மைத்ரேயி மட்டும்தான் அதுவும் அவளது உடல்நிலை காரணமாக. அப்படி இருந்தும் சாந்தியால் செலவைக் கட்டுப் படுத்த முடியவில்லை வீடு கட்டி இருந்ததால்.
     அப்பா பதில் பேச முடியாதபடி நிற்பதைப் பார்த்த மைத்ரேயி தந்தை மீது இருந்த பாசத்தில்,
     “நீ அப்பா வாயை வேணா அடிச்சிடலாம்! ஆனாலும் நீ செய்யுற சாப்பாட்டு இவ்ளோ செலவு ஆகிறது அதிகம் தான்! உழைக்குற மனுஷனுக்கு ஒரு காய்கறி கூட சரியா செய்து கொடுக்கிறது இல்லை. இருந்தும் சாம்பாதிக்கிற பணமெல்லாம் எங்க போகுதுன்னு தெரியலை!” என்று கோபத்தில் கேட்டுவிட,
     “பார்த்தீங்களா பார்த்தீங்களா உங்க பொண்ணு எப்படி பேசுறான்னு! நான் என்ன பணத்தை எல்லாம் கொண்டுபோய் தெருவிலயா கொட்டுறேன். கடன் அடைக்கவே எல்லாம் சரியா போகுது. அது போக இப்போதானே வீட்டுக்கு ஒரு ஒரு பொருளா வாங்கிப் போடுறோம். காலத்துக்கும் இந்த குடும்பத்துக்கு உழைசுக் கொட்டினாலும் எனக்கு கெட்ட பேருதான் கிடைக்குது” என்று சாந்தி மீண்டும் புலம்ப ஆரம்பித்துவிட,
     “போதும் நிறுத்தும்மா! பொருளும், வீடும்தான் ரொம்ப முக்கியம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுறதை விட!” என்று சலிப்புடன் சொன்னவள்,
     “இங்க பாரு காயு! இந்த மாசத்துல இருந்து சல்லிக் காசு கூட அம்மாகிட்ட கொடுக்காத உன் சம்பளத்துல இருந்து. நீயும் சீட்டு போடு. சேர்த்து வை. அப்புறம் யாரு காசும் இல்லாம நீயே உன் செலவுல ஜாம்ஜாம்னு கல்யாணம் செய்துகிட்டு போகலாம்!” என்று முடித்துவிட,
     “பார்த்தியா காயும்மா! உன் அக்கா எப்படிப் பேசுறா?! உங்க ரெண்டு பேர் மேலயும் என்னவோ எனக்கு அக்கறையே இல்லாத மாதிரி?!” என்று சாந்தி கண்ணைக் கசக்க, காயத்ரி,
     “ம்மா! அழாதம்மா!” என்று கண்களைத் துடைக்க,
     “போதும்மா! இப்படி அழுது அழுது எங்க மனசை மாத்திடாத! உனக்கு அக்கறை இல்லைன்னு நான் சொல்லலை! ஆனா உனக்கு உன் பிள்ளைக்கு அப்புறம்தான் நாங்க. அதனால தயவு செய்து நீ பேசாம இருந்தா மட்டும் போதும்.” என்ற மைத்திரேயி,
     “காயு, நீ உன் சம்பளப் பணத்துல பாதியை எடுத்து இந்த மாசம் சீட்டு போடுற!” என்றாள் தீர்மானமாய்.
                              ******
      மறுநாள் மாலை, “பிரியும்மா மாப்பிள்ளை வீட்ல பேசிட்டோம். உங்க ரெண்டு பேர் போட்டோவையும் பார்த்துட்டு அவங்களுக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு! அடுத்த வாரம் வீட்டுக்கு வரோம்னு சொல்லி இருக்காங்க! உனக்கு சம்மதமா?” என்று கேட்க,    
     “உங்க விருப்பம் ம்மா!” என்றாள் ப்ரியா.
     “டேய் உனக்கும் சேர்த்துதானே சொல்றேன். நீ என்ன வாயே திறக்கலை?!” என்று மலர் கேட்க,
     “அதான் முடிவு பண்ணிட்டீங்களே அப்புறம் என்ன?!” என்றவன், எழுந்து உள்ளே சென்றுவிட,
     “இவன் என்ன இப்படி இருக்கான்? சிடுசிடுன்னு! வர பொண்ணுதான் பாவம்!” என்று மலர் கவலை கொள்ள,
     “அதெல்லாம் சும்மா நம்ம முன்னாடி ஆக்டிங் மா! ஜாலியா பேசுற பசங்களைக் கூட நம்பிடலாம்! ஆனா இந்த மாதிரி சிடுமூஞ்சி பசங்களை நம்பவே கூடாது! அப்படியே பொண்டாட்டி பக்கம் கவுந்திடுவாங்க!” என்று கீர்த்தி வயதிற்கு மீறி பேச,
     “இவளை!” என்று அவள் காதைத் திருகியவர்,
     “வாய் ரொம்ப நீளமாகிடுச்சு உனக்கு! உங்க அண்ணன் மட்டும் இதைக் கேட்கணும்!” என்று மிரட்ட,
     “உண்மைய சொன்னா உலகம் என்னிக்கு நம்பியிருக்கு!” என்றவள்,
     “நீ வேணா பாரு! அண்ணா அவர் பொண்டாட்டிக்காக நம்ம எல்லோரையும் கூட” என்று சொல்ல வந்தவள் வாய் மீது நிஜமாகவே பட்டென ஒன்று வைத்தவர்,
     “சும்மா பேச்சுக்குக் கூட அப்படிச் சொல்லாத! ஏற்கனவே ஒருத்தரை அவர் பொண்டாட்டிக்காகவே நேந்து விட்டது பத்தாதா! என் பிள்ளை என்னிக்கும் அப்படி ஒரு தப்பை செய்யவே மாட்டான்” என்று தங்கமலர் ஸ்திரமாய்ச் சொல்ல,
     “ஆமாம் ம்மா. கண்டிப்பா நம்ம மித்து அப்படி இருக்கவே மாட்டான்” என்றாள் ப்ரியாவும் உறுதியாய்.
     “வெவ்வே!” என்று இருவருக்கும் ஒழுங்கு காண்பித்து விட்டு ஓடியவள்,
     “ஆனா அம்மா இந்தப் பிரியா அக்காவ மட்டும் நம்பாத இவ அப்படியே பல்டி அடிச்சிடுவா!” என்று இப்போது ப்ரியாவை வம்பிற்கு இழுக்க,
     “இவளை!” என்று ப்ரியா கீர்த்தியை அடிக்க எழுந்துவர, கீர்த்தி ஒரே ஓட்டமாய் ஓட ஆரம்பித்தாள்.
     ப்ரியாவும் விடாமல் அவளைத் துரத்திக் கொண்டு ஓட, “ஏய் பார்த்து விழுந்துடப் போறீங்க!” என்று தங்கமலர் கத்த, கீர்த்தி சில நொடிகளில் ப்ரியாவின் கைகளில் சிக்கி இருந்தாள்.
     “ம் ம்! விடுக்கா! நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்!” என்று கீர்த்தி கெஞ்ச, அவளின் கன்னத்தை நன்கு பிடித்துக் கிள்ளிய ப்ரியா,
     “இன்னொரு முறை என்னையும் என் தம்பியையும் பத்தி இப்படி பேசுவ?!” என்று மிரட்ட,
     “இல்ல இல்ல பேச மாட்டேன் பேச மாட்டேன்!” என்று வலியில் கீர்த்தி சட்டென ஒப்புக் கொள்ள,
     “ம்மா! இவகிட்ட சொல்லுங்க. எதெதில் விளையாடணுமோ அதில்தான் விளையாடனும்னு!” என்று நிஜமாகவே ப்ரியா கோபம் கொண்டு சொல்ல,
     “எதுக்கு பிரியும்மா நீ இவ பேச்சுக்காகவெல்லாம் டென்ஷன் ஆகுற! என் பசங்க எப்போவம் அப்படி செய்ய மாட்டாங்க! என் வளர்ப்பு என்னிக்கும் தப்பா போகாது!” என்றார் தன் மீதும் தன் பிள்ளைகள் மீதும் முழு நம்பிக்கை கொண்டவராய்.
     “ஆமாமா! என் அண்ணனும், அக்காவும் கோல்ட் ப்ளவரோட வளர்ப்பாச்சே கோல்டாதான் இருக்கும்!” என்று ஒப்புக் கொண்ட கீர்த்தி,
     “இப்போவாச்சும் கன்னத்தை விடுங்க க்கா!” என்று கெஞ்ச,
     “இன்னொரு முறை அப்படி எல்லாம் விளையாட்டுக்குக் கூட பேசக் கூடாது!” என்று மிரட்டிவிட்டே அவள் பிடியை விட்டாள் ப்ரியா.
      நாட்கள் வேகமாய் ஓட, இரண்டு வீட்டினருக்கும் பிடித்துப் போய் எல்லா சம்பிரதாயங்களும் நிறைவேறி, அவர்களின் நிச்சய நாளும் வந்து சேர்ந்தது. எல்லோரும் இருவரின் நிச்சய விழாவை எண்ணி மகிழ்வான மனநிலையில் இருக்க, அவன் ஒருவன் மட்டும்,
     ‘ச்சே இப்படி ஆகிடுச்சே! இப்போ என்ன செய்யிறது?!’ என்று தவித்துக் கொண்டிருந்தான்.
     “இல்லை என்ன நடந்தாலும், நான் நினைச்சதை நிறைவேத்தியே தீருவேன்!” என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டு நிச்சயம் நடக்கும் மண்டபத்திற்குள் நுழைந்தான் போலியான சிரிப்பை வரவழைத்துக் கொண்டு.
                                        -தொடரும்…     
         
 
       
    
    

Advertisement