Advertisement

                                                                  2
     “ஹேப்பி அனிவேர்சரி…!!” என்று பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் கத்த, தங்கமலர், ராஜசேகர் இருவரும் வெட்டி முடித்த கேக்கை எடுத்து ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள,
     “வாரேவா!” என்றபடி விசில் பறந்தது அவர்கள் வீட்டுச் சின்ன வாண்டு கீர்த்தியிடமிருந்து.
     அவள் அடித்த விசிலில் குடும்பம் மொத்தமும் அவளை அதிர்ச்சியாய் பார்க்க,
     “அடி! விசிலா அடிக்குற?!” என்று சாரு அவளை மிரட்டியபடி அவள் காதைத் திருக,
     “அக்கா! அக்கா விடுக்கா!” என்று கத்தியபடியே அவள் தன் அண்ணன் மித்ரனிடம் ஓட,
     “விடுக்கா சின்னப் பிள்ளைதானே. இதெல்லாம் இந்த வயசுல பண்ணாம எப்போ பண்ணுவா!” என்றான்.
     “தட்ஸ் மை மித்துண்ணா!” என்று அவனைக் கட்டிக் கொள்ள,
     “அடி! அது என்ன மித்துன்னு பேரையும் சேர்த்து சொல்லுறது. அண்ணான்னு மட்டும் கூப்பிடுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்” என்று தங்கமலர் இப்போது மிரட்ட,
    “ஓ காட்! மீ! எனக்கு ஒரு அண்ணன் இருந்தா அப்படி கூப்பிட்டிருப்பேன்! அண்ணான்னு கூப்பிட்டா ரெண்டு அண்ணாவும் ஓடி வராங்க! அதான் மித்து, கிருஷ்ணான்னு பேர் சேர்த்து கூப்பிடுறேன்!” என்று சின்னவள் விளக்கம் கொடுக்க,
     “பெரியண்ணா, சின்னண்ணான்னு கூப்பிடு” என்று ப்ரியா எடுத்துக் கொடுக்க,
     “பெரியண்ணா! பெரியண்ணா! பெரியண்ணா!”
என்று அவள் விஜயகாந்த் படத்தில் வருவது போல் கூப்பிட,
     “ஏன் க்கா! ஏன் இந்த கொலைவெறி உனக்கு!” என்று மித்திரன் கேட்க, அதில் ப்ரியா வாய்விட்டுச் சிரிக்க,
     “அம்மா தாயே! நீ பேர் சொல்லியே கூட கூப்பிடு. ஆனா இந்த மாடுலேஷன்ல மட்டும் என் புருஷனைக் கூப்பிட்டுடாத!” என்ற அவர்களின் அண்ணி ராதா கேட்டுக் கொள்ள,
     “டன் அண்ணி!” என்றவள்,
     “ஹெலோ மிசர்ஸ் கோல்ட்பிளவர்! கேக்கை நீங்களும் உங்க ஹப்பியும் மட்டுமே சாப்ட்டுடலாம்னு பார்க்குறீங்களா! நீங்க பெத்த தங்கங்களுக்கும் கொஞ்சம் கொடுங்க!” என்றாள் தாயிடம் ஓடி.
     “இவளை!” என்று தங்கமலர் அடிக்க கையோங்க,
     “திஸ் இஸ் நாட் ஃபேர் கோல்ட்ப்ளவர்!” என்று அவள் கெட்டியாய் தந்தையைப் பின்னிருந்துக் கட்டிக் கொள்ள,
விடும்மா குழந்தைதானே!” என்று ராஜசேகர் மகளுக்கு பரிந்து பேச தங்கமலரால் அடிக்க முடியாமல் போனது.
     “அத்தை போதும் விளையாட்டு! முதல்ல கேக்!” என்று அண்ணன் பிள்ளைகள் கத்த,
     “ம் ம்! சித்தி” என்று கோரஸ் பாடினர் அவள் அக்காவின் பிள்ளைகளும்.
     பிள்ளைகள் ஆசைக்கிணங்க தங்கமலர் அனைவருக்கும் கேக்கை பங்கிட்டுக் கொடுக்க, ப்ரியா மட்டும் ஏதோ நினைவுகளில் மூழ்கி விட்டிருந்தாள்.
     “என்ன க்கா! ஏன் இப்படித் தனியா வந்து ஏதோ யோசிக்குற!” என்று சங்கமித்ரன் ப்ரியாவின் அருகே வந்து அமர,
     “ஒன்னும் இல்ல மித்து” என்றாள் மறுப்பாய்.
     “மணிம்மா நியாபகம் வந்துடுச்சா!” என்றான் அவள் மனம் உணர்ந்து.
     “ம்! இன்னிக்கு அம்மா, அப்பாக்கும் கல்யாண நாள்ல! அம்மா உயிரோடு இருந்திருந்தா அவங்களும் இங்க இப்படி எல்லாரோடவும் எவ்ளோ சந்தோஷமா இருந்திருப்பாங்க!” என்றாள் ஏக்கமாய்.
     அவனுக்கு என்ன சொல்லி அவளைச் சமாதானப் படுத்த என்று தெரியவில்லை!
     “ம்!” என்று தலையசைத்தவன்,
     “மணிம்மாவ ரொம்ப மிஸ் பண்றல்லக்கா நீ!” என்றான் வருத்தமாய்.
     “ஹே அப்படி எல்லாம் இல்லைடா! என் பெரியம்மாவும், பெரியப்பாவும் என்னை மணிம்மாவ விட தங்கமா பார்த்துக்கும் போது நான் அவங்களை எப்படி மிஸ் பண்ணுவேன் சொல்லு!” என்று அவள் சிரிக்க,
     “ம்! தட்ஸ் மை பிரியு!” என்றவன் தன் உடன் பிறவா விட்டாலும் அவள் மீது உயிரையே வைத்திருக்கும் தன் அக்காவை கைப்பிடித்து அழைத்துச் சென்றான் அம்மாவிடம்.
     “ஏய் ப்ரியும்மா! என்ன அங்க போய் உட்கார்ந்துட்ட! வா வந்து கேக் சாப்பிடு!” என்ற தங்கமலர், மற்றவர்களுக்கெல்லாம் கேக்கை கையில் கொடுத்தாலும் ப்ரியாவிற்கு மட்டும் தானே ஊட்டிவிட,
     “டூ பேட் ம்மீ! எனக்கு மட்டும் ஊட்டியே விடலை!” என்று கோபித்துக் கொண்டு சென்றாள் சின்னவள் கீர்த்தி.
     “ஏய் வாலு! நில்லு!” என்று அவள் கைபிடித்து நிறுத்திய ப்ரியா,
     “ம்மா! அவளுக்கும் ஊட்டுங்க” என,
     “ஏன் விசில் அடிக்கத் தெரிஞ்சவளுக்கு சாப்பிட மட்டும் தெரியாத!” என்று பிகு செய்ய,
     “ச்சே! அவமானம்! வெட்கம்! வேதனை! கீர்த்தி வேதனை! இதற்கு மேலும் இப்படிப்பட்ட கேக் உனக்கு வேண்டுமா கீர்த்தி? வேண்டுமா?!” என்று பழைய கால நடிகையைப் போல் மாடுலேஷன் செய்து நடித்துக் கொண்டிருந்தவள் மூக்கின் அருகே,
     “அத்தை… சித்தி…. தங்கச்சி…!” என்று ஒட்டு மொத்த பிள்ளைகளும் ப்ரியாவும் சேர்ந்து வந்து கேக்கை நீட்ட,
      அவள் நாவின் சுவை அரும்புகள் தன் ரோஷம் மீறி மலர, வெட்கம் வேதனை அவமானம் இதையெல்லாம் அடுத்த நொடியே தொலைத்தவள், அத்தனை பேர் நீட்டிய கேக்கையும் ஒட்டுமொத்தமாய் வாங்கிக் கொண்டாள் கீர்த்தி.
     “இவளும் இவ ரோஷமும்!” என்று சிரித்த தங்கமலர் பேரப்பிள்ளைகள் அவள் நடிப்பில் இருந்து தப்பிக்க, தங்கள் கேக்கை அநியாயமாய் பறிகொடுத்துவிட்டு பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து,
     “நீங்க வாங்கடா செல்லங்களா. பாட்டி உங்களுக்கு வேற கேக் கொடுக்கறேன்” என, அனைவரும்
     “ஹே!!” என்று கத்திக் கொண்டு அவரிடம் ஓடினர்.
     “இவளைக் கட்டிக்கப் போறவன் ரொம்பப் பாவம்டி சாரு” என்று அவள் கணவன் சரத் சொல்ல,
     “ஏன் என் தங்கச்சிக்கு என்ன குறைச்சல்!” என்று சாரு முறைக்க,
     “குறைச்சலே இல்லை. வாய் காது வரைக்கும் நீண்டிருக்கு!” என்றான் கிண்டலாய்.
     “இதை மட்டும் அவ கேட்டா!” என்ற சாரு,
     “கீர்த்தி மாமா உன்னைப்பத்தி ஏதோ சொல்றாரு” என்று குரல் கொடுக்க,
     “வாட் மாமா இதோ வரேன்!” என்று கீர்த்தி அருகே வரப் பார்க்க,
     “அய்யோ அம்மா ஒண்ணுமில்லை! நான் சாருவைப் பத்தி சொன்னேன். அவ தப்பா உன்னைன்னு நினைச்சுட்டா! நீ அங்கேயே இரு!” என்று சமாளித்துவிட்டு,
     “என் சாரு உனக்கு இவ்ளோ நல்லெண்ணம்!” என்று மனைவியை முறைக்க,
     “இந்த பயம் இருந்தா சரி” என்றுவிட்டு லாப்டாப்பை எடுத்துக் கொண்டு அன்று மதியம் முதல் தான் அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்திருந்த வரங்களின் பட்டியலை ப்ரியாவிடம் காண்பிக்க அவள் அருகே சென்று அமர்ந்தாள்.
     “ப்ரியு பேபி! இங்க பாரு! அக்கா உனக்காக தேடித்  தேடி ரொம்ப செலக்டிவா சில வரன் பார்த்து வச்சிருக்கேன். அதுல உனக்கு யாரைப் பிடிச்சிருக்குன்னு பார்த்து சொல்லு!” என்று ஒவ்வொரு வரனாய் காண்பிக்கத் துவங்க,
     அருகே இருந்து பார்த்துக் கொண்டிருந்த மித்ரனுக்கு, அதில் ஒரு வரனின் புகைப் படம் மனதை நிறைக்க,
     “அக்கா இவர் ரொம்ப நல்லா இருக்கார்ல, இவர் ப்ரோபைலை ஓபன் பண்ணு!” என, சாரு ஓபன் செய்ததில், அவரும் ஒரு டாக்டர் என்பதும் அவருடன் சேர்ந்து அவர் தங்கைக்கும் மாப்பிள்ளை பார்ப்பதும் குறிப்பிடடு இருக்க,
     “ஹே! இவர் தங்கைக்கும் வரன் பார்க்கிறாங்க போல” என்ற சாரு அவள் தங்கையின் பெயரைக் க்ளிக் செய்ய,
     “வாவ்! சோ பியுட்டிபுல்!” என்று கத்தினாள் ப்ரியா.
     “ஆமா ரொம்ப அழகா இருக்கால்ல! நம்ம மித்துக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா!” என்ற சாரு,
     “ம்மா, அண்ணி, கீர்த்தி, எல்லோரும் இங்க வாங்களேன்” என்று கூப்பிட,
     “அக்கா நான் உன்னை அக்காக்கு தானே மாப்பிள்ளை பார்க்க சொன்னேன்! நீ என்ன எனக்கும் சேர்த்து பார்க்குற!” என்று மித்ரன் முறைக்க,
     “டேய் நானா பார்த்தேன். அதுவா அமையுது! நீதான மாப்பிள்ளையை செலக்ட் பண்ண” என்றவள்,
     “ஆமாதானே ப்ரியா!” என்று தங்கையைத் துணைக்கு அழைக்க,
     “ஆமா ஆமா!” என்றவளிடம்,
     “ப்ரியு! முதல்ல உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா பாரு! முதல்ல உனக்கு எல்லாம் ஓகே ஆகட்டும்! மத்தது அப்புறம்” என,
     ப்ரியா யோசிக்க, “சொல்லு ப்ரியும்மா. உனக்கு பையனை பிடிச்சிருக்கா!” என்றாள் சாருவும்.
     “ம்!” என்று அவள் யோசிக்க, அனைவரும் அவள் முகத்தையே பார்க்க,
     “இப்படி குறுகுறுன்னு அவளையே பார்த்தா அக்கா எப்படி ஒகே சொல்லுவா?!” என்ற கீர்த்தி,
     “சொல்லு சொல்லுக்கா எனக்கு மட்டும்” என்று அவளைக் கட்டிக் கொண்டு கெஞ்ச,
     ப்ரியா, மெலிதாய் சிரித்தபடி, “உங்க எல்லோருக்கும் ஓகேன்னா எனக்கும்!” என்று தலைகுனிய,
     “ஹே!” என்று கத்தியபடி முத்தமழை பொழிந்தாள் கீர்த்தி.
     சகோதரிகளின் மகிழ்வு அவன் மனதையும் நிறைக்க, ‘உன் வாழ்க்கை நல்லபடியா அமையனும் ப்ரியும்மா! அதுதான் எங்க எல்லோருக்கும் வேணும்!’ என்று மித்ரன் மனதில் எண்ணிக் கொண்டிருக்க, அவன் மனநிலையை மொத்தமாய் மாற்றும் விதமாய்,
     “அவளைப் பெத்தவரு அட்லீஸ்ட் அவ கல்யாணத்துக்காச்சும் பொறுப்பெடுத்துப்பாரா? இல்லை, அதையும் உங்க தலையிலேயே கட்டிடுவாரா!” என்றான் சாருவின் கணவன் சரத்.   
     அவன் வார்த்தைகள் அவள் சந்தோஷத்தை மொத்தமாய் உறிஞ்சுவிட, ப்ரியாவிற்கு சட்டென கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
     அதைக் கண்ட அனைவரும் சரத்தைக் கோபத்துடன் பார்க்க,
     “மைன்ட் யுவர் வர்ட்ஸ் மாமா! அவ எங்க வீட்டுப் பொண்ணு. நீங்க ஒன்னும் உங்க வீட்ல இருந்து எதையும் கொண்டு வந்து அவளுக்காக கொடுக்கலை! நாங்க எங்க மொத்த சொத்தையும் கூட அவ பேர்ல எழுதி வைப்போம். அது எங்க விருப்பம்! இன்னொரு முறை இப்படித் தப்பித் தவறியும் பேசிடாதீங்க! அப்புறம் சாருக்காக கூட பார்க்க மாட்டேன்” என்றவன் அங்கிருந்து கோபமாய் எழுந்து சென்றுவிட, சிறிது நேரத்திற்கு முன் எல்லோரிடமும் இருந்த மனநிலை மாறி அனைவரும் மௌனத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
     “ஒ நோ!” என்று முதலில் சமாளித்த கீர்த்தி,
     “ஹே வாட் இஸ் திஸ் ப்ரியா! பாரு எல்லோரும் எப்படி ஆகிட்டாங்க! யார் என்ன சொன்னா உனக்கென்ன! நீ நம்ம வீட்டுப் பொண்ணுன்னு நீ கெத்தா சொல்ல வேண்டாமா! இதுக்காக போய்க் கண்கலங்கிட்டு!” என்றவள், அவள் கண்ணீரைத் துடைத்து,
     “உன் கண்ணில் நீர் வழிந்தால் கண்ணம்மா உதிரம் கொட்டுதடி!” என்று பாடத் துவங்க,
     “தெய்வமே! நான் அழலை அழவே இல்லை பாரு!” என்று சட்டெனத் தன் கண்களைத் துடைத்துக் கொண்ட ப்ரியா,
     “தயவு செய்து உன் பாட்டை மட்டும் தொடர்ந்துடாதா!” என்று கீர்த்தியின் வாயைப் பொத்த,
     “என் கண்ணில் பாவையன்றோ!” என்று அவள் அப்போதும் விடாமல் தொடர,
     “தங்கமே!” என்று அவள் கன்னத்தை இறுகப் பிடித்து முத்தமிட்ட ப்ரியா,
     “போதும் போதும்!” என,
     “அப்போ இனி அழக் கூடாது!” என்று கீர்த்தி மிரட்ட,
     “சத்தியமா நோ!” என்று வாக்குக் கொடுத்தாள் ப்ரியா.
     சிறிது நேரத்தில் மீண்டும் அனைவரும் சகஜ நிலைக்குத் திரும்ப, “வா வா! நம்ம கோவக்கார தம்பியைப் போய் சமாதானப் படுத்தி சாப்பிட இழுத்துட்டு வரலாம்.” என்று ப்ரியாவை இழுத்துக் கொண்டு அவன் அறைக்குச் சென்றாள் கீர்த்தி.
                                *****  
     “டேய் ஜீவா! இது டூ மச். டு டூ மச்!” என்று மைத்திரேயி ஒற்றை விரல் நீட்டி மிரட்டிக் கொண்டிருக்க,
     “இல்ல மைத்து! டூ மச்லாம் இல்லை! ஒரு பொட்டலம். ஒரே ஒரு பொட்டலம்தான்.” என்றவன் தான் வாங்கி வந்த சிக்கன் ப்ரைட்ர ரைசை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்க,
     “உனக்கு இன்னிக்கு ரா முச்சூடும் வயத்தால போகலை! என் பேரு மைத்ரேயி இல்லை!” என்று அவள் சாபம்விட,
     “அடிப்பாவி! அக்காவா நீ! உன்னை விட்டுட்டு சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்ட குத்தத்துக்கு இப்படி ஒரு சாபமா! நீதானடி நேத்து அவ்ளோ தீவிரமா டையட் இருக்கப் போறேன்னு சொன்ன! இப்போ உன்னை விட்டு பிரைட் ரைஸ் சாப்பிடுறேன்னு இப்படி சபிக்கிறியே!” என்று புலம்பியவன், எழுந்து சமயலறைக்குச் சென்று, தங்கள் வீட்டின் வெளியே இருந்த ஜன்னல் வழியே வரும்போதே சமையலறைக்குள் மறைத்து வைத்து விட்டு வந்திருந்த மற்ற பொட்டலங்களை, எடுத்து வர,
     “ஐய்! அக்காக்கும் சேர்த்துதான் வாங்கிட்டு வந்தியா! ஓடு ஓடு அக்காக்கும் ஒரு தட்டு கொண்டு வா!” என்று மைத்து விரட்ட,
     “போ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாபம் விட்ட இல்லை! அதனால உனக்கு வாங்கிட்டு வந்ததையும் சேர்த்து நானே சாப்பிடப் போறேன்!” என்றவன்,
     மற்ற பொட்டலங்களையும் பிரிக்கத் துவங்க, “டேய் வேணாம் உனக்கு ரொம்ப வயறு வலிக்கும்! மரியாதையா கொண்டு வந்து கொடுத்துடு!” என்று மைத்து மீண்டும் மிரட்டவும், கடையில் இருந்து சாந்தியும், காயத்திரியும் வீடு திரும்பவும் சரியாக இருந்தது.
     “டேய் என்னடா பண்ற?! இத்தனைப் பொட்டலத்தை நீ ஒருத்தனே பிரிச்சு வச்சு மொக்கிட்டு இருக்க?!” என்று காயத்ரி கேட்க,
     “ஆமா நான் மட்டும்தான் சாப்ப்பிடப் போறேன்.” என்று அவன் எல்லாவற்றிலும் இருந்து ஒரு வாய் எடுத்து உண்ண,
     “ஏய்! ஆம்பிளைப்புள்ள  சாப்பிடுறதைக் கண்ணு போடாதீங்க! நீ உன் ரூம்ல போய் உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதானேடா ராஜா!” என்று சாந்தி ஐடியா கொடுக்க,
     “நீ என்ன ஐஸ் வச்சாலும்லும் உன் புள்ளை உனக்கும் தரமாட்டான்!” என்றாள் மைத்து.
     “பரவால்ல போடி என் புள்ளை சாப்பிட்டா போதும்!” என்றவர்,
     “நீ உள்ள எடுத்துட்டு போய் சாப்பிடு ராஜா” என,
     “நீ விடு மைத்து. நான் நாளைக்கு அம்மாவை வீட்லயே உனக்கு பிரியாணி செய்து தர சொல்றேன்” என்றாள் காயு.
     “ஏதே! அந்த தக்காளி சோறுல தப்பித் தவறி ஒரு கோழி தற்கொலை பண்ணிகிட்ட மாதிரி இருக்குமே அதையா?!” என்று மைத்து நக்கலடிக்க,
     “பாத்தியா பாத்தியா வாயை! உட்கார்ந்த இடத்துலயே எல்லாம் கிடைக்குதுல்ல! இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ! நல்ல தின்னு தின்னு பன்னிக்குட்டி மாதிரி வீங்கிப் போயிருக்காளே! நான் போட்ட சோறுலதானே! இதுங்களுக்காக உழைச்சு உழைச்சே என் காலம் முச்சூடும் போச்சு! அதுவும் இவளுக்காக நான் எவ்ளோ கஷ்டப் படுறேன்! அந்தப் பாசம் கொஞ்சமாச்சும் இருக்கா பாரு. எல்லாம் என் தலையெழுத்து.” என்று சாந்தி புலம்ப ஆரம்பித்துவிட,
     “ஏன் க்கா?!” என்று மைத்துவிடம் குறைபட்ட காயு,
     “அம்மா! ப்ளீஸ்! அவ பேச்சையெல்லாம் பெருசா எடுத்துகிட்டு! அவ சும்மா விளையாட்டுக்கு உன்னை வெறுப்பேத்துறாம்மா! நீ வைக்குற பிரியாணில நம்ம தெருவே மணக்கும் தெரியுமா!” என்று காயு பொய்யை வாரி இறைக்க,
     “ஆண்டவரே! இந்த சாந்தி நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ஐயா! காப்பாற்றும்!” என்று மைத்து சத்தம் அதிகம் இன்றி முணுமுணுக்க,
     “போடி பொய் சொல்லாத!” என்று சிரித்த சாந்தி,
     “நான் செய்யுற பிரியாணி அவ சொல்லுற மாதிரி அவ்ளோ மோசமா எல்லாம் இருக்காது! என் பிரியாணில கோழியெல்லாம் தன்னால தற்கொலை பண்ணிக்காது! கடைக்காரனே கொன்னுதான் வெட்டித் தருவான்! அதைதான் நான் பிரியாணில போடுவேன்” என்று சொல்ல,
      “ஹே!” என்று அதிக சத்தம் வராமல் பல்லைக் கடித்தபடி தலையில் அடித்துக் கொண்ட மைத்து,
     “யம்மா இங்க வாயேன்! கொஞ்சம் கிட்ட வாயேன்!” என்றாள் பொறுக்க முடியாமல்.
     “வர முடியாது போடி!” என்று சாந்தி பிகு செய்ய,
     “இங்க வா உனக்கு ஒன்னு தாரேன்!” என்று மீண்டும் அழைக்க,
     “என்ன?!” என்று சந்தேகமாய் அவர் அருகே செல்ல,
     “உன் கையைக் கொஞ்சம் காட்டேன்!” என்று அவர் கைகளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டவள்,
     “இந்தக் கையைக் காலா நினைச்சுக் கேட்டுக்கறேன். இந்த மாதிரி அறிய வகைக் கண்டுபிடிப்பெல்லாம் எங்க இருந்து கத்துக்குற? சொல்லு சொல்லு நானும் கத்துக்கறேன்!” என்று கெஞ்சுவது போல் அவரை மொக்கை செய்ய,
     “இன்னிக்கு இவளுக்கு சோறே போடாதடி காயு!” என்றுவிட்டு சாந்தி கடுப்புடன் அவள் கையைத் தட்டிவிட்டு நகர,
     “ஹஹா! சோறும் கட்டா! தவளைத் தன்வாயால் கெடும்! டும் டும்!!” என்று ஜீவா ஒழுங்கு காண்பித்துவிட்டுச் செல்ல,
     “போங்கடா நீங்களும் உங்க சோறும்! எனக்கு வர புருஷன் எனக்கு எப்படி பொங்கிப் போடுவான் தெரியுமா?!” என்று மைத்து கற்பனைக்குச் செல்ல,
     “அதுக்கு நீ செப் தாமு அங்கிளைத்தான் கட்டிக்கணும்!” என்று ஜீவா அவள் தலையில் நங்கென்று கொட்டிவிட்டு அவள் கற்பனையைக் கலைத்துவிட்டுச் செல்ல,
      “அப்பா!!!” என்று பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பித்தாள் அனைவரையும் அவள் தந்தையிடம் கோர்த்துவிடும் முயற்சியில்…
                                      -தொடரும்…
    
    
 

Advertisement