Advertisement

“என்ன சோஷியல் சர்வீஸ் எல்லாம் முடிஞ்சுதா மேடம்கு!” என்றான் தன் அறைக்குள் நுழைந்த  அக்காவிடம்.
     “ஓ யெஸ்” என்றவள்,
     “என் பேஷண்ட்ஸ் லிஸ்ட் எங்க?” என்று தேட,
     “எல்லாம் அட்டென்ட் பண்ணியாச்சு” என்றவனைப் பார்த்து,
     “யாரோ ஒரு பேஷன்ட் கூட அட்டென்ட் பண்ண மாட்டேன்னு சொன்னாரு” என்றாள் சிரித்தபடி.
     “இப்போவும் நான் அட்டென்ட் பண்ணலைதான்!” என,
     “அப்போ!” என்று அவள் ஆச்சர்யமாய் கேட்க,
     “ப்ரேம் அட்டென்ட் பண்ணான்” என,
     “ஓ!” என்பதோடு முடித்துக் கொண்டாள் அவள்.
     “சரி! சீக்கிரம் உன் வேலைகளை முடிச்சிட்டு வா! அம்மா இன்னிக்கு லஞ்ச்கு வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்க நியாபகம் இருக்கா?” என,
     “மறக்க முடியுமா என் அம்மா அப்பாவோட கல்யாண நாள் ஆச்சே!” என்று சிரித்தவள்,
     “அக்காவும் இன்னிக்கு வரேன்னு சொல்லி இருக்காள்ல?” என,
     “இந்நேரம் வந்திருப்பா அத்தானோட” என்றபடி தனது பெரிய அக்காவின் கைபேசி எண்ணுக்கு அழைத்து ஸ்பீக்கரை ஆன் செய்தான்.
     அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்படவும், “சாரு வீட்டுக்கு வந்துட்டியா?!” என்று அவன் குதூகலமாய் கேட்க,
     “டேய் என் பொண்டாட்டிய பேர் சொல்லிக் கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்றது?!” என்று மிரட்டினான் சாருவின் கணவன் சரத்.
     “குடுங்க இப்படி! வந்ததும் வராததுமா என் தம்பியை மிரட்ட ஆரம்பிச்சுட்டார்” என்று போனை அவன் கையில் இருந்து பிடுங்காத குறையாத வாங்கிய சாரு,
     “மித்து நீங்க ரெண்டு பேரும் இன்னும் கிளம்பலையா அக்காவே வந்துட்டேன்.” என,
     “இன்னும் ஒன் ஹார்ல அங்க இருப்போம்” என்று ப்ரியா குரல் கொடுக்க,
     “ஹேய் ப்ரியுமா. நீயும் அவன் ரூம்ல தான் இருக்கியா? கிளம்புங்க கிளம்புங்க சீக்கிரம்” என்று மிரட்டினாள் சாரு.
     “இதோ வந்துட்டே இருக்கோம் க்கா” என்று போனை வைத்தவள்,
     “கொஞ்சம் வெயிட் பண்ணுடா என் வேலைகளை முடிச்சிட்டு வந்துடறேன்” என்றுவிட்டு வெளியேற,
     “மேம் வந்துட்டீங்களா?!” என்று புன்னகையோடு அவளை வரவேற்றான் பிரேம்.
     “ம்!” என்று சிறு தலையசைப்பில் பதில் சொன்னவள்,
     “இன்னிக்கு நீங்களே என் வேலைகளை முடிச்சிட்டீங்க போல!” என,
     “இட்ஸ் மை ப்ளெஷர் மேம்” என்றான் பிரேம்.
     ‘வர வர இவன் ரொம்ப நெருங்க முயற்சி பண்றான் என் மனசை!’ என்று எண்ணிக் கொண்டே அவனை ஓரக் கண்ணால் பார்த்தவள்,
    ‘நோ ப்ரியுமா! நம்ம குடும்பம் பத்தித் தெரியும்ல!’ என்று தனக்குத் தானே கடிவாளம் இட்டுக் கொண்டு, தன் வேலையில் கவனம் செலுத்தலானாள்.
                                 ********
     “ஹே காயு என்னடி வாங்கிட்டு வந்த அக்காக்கு!” என்று மைத்து காயத்திரி வீட்டினுள் நுழையும்போதே கேட்க,
     “என் செல்ல அக்காக்கு பிடிச்ச அயிட்டம்தான்” என்றவள், வாங்கி வந்திருந்த ஜிலேபியை அக்காவின் கையில் கொடுத்துவிட்டு, முகம் கைகால் கழுவச் செல்ல,
     “ம் சூப்பரா இருக்குடி காயு! எங்க கணேஷ் அண்ணா கடையில வாங்கினியா?!” என,
     “ஆமாம் க்கா! ரொம்ப நாளா அவர் கடை போடவே இல்லைல! இன்னிக்கு போடவும் வாங்கிட்டு வந்துட்டேன்.” என்றவளுக்கும் ஒரு ஜிலேபியை எடுத்து ஊட்டினாள் மைத்து.
     “காப்பி குடிக்கிறியா?! போடவாக்கா?!” என்று காயத்திரி கேட்க,
     “எனக்கு பசிக்குதுடி! நான் இன்னும் காலையில இருந்து சோறே சாப்பிடலை!” என்று ப்ரியா முகம் வாடச் சொல்ல,
    “என்னக்கா மணி அஞ்சாகப் போகுது! வைஷு வந்திருந்தா அவளைப் போட்டுத் தரச் சொல்லி இருக்கலாம்ல! இந்த அம்மாக்கு எத்தனை முறைதான் சொல்லுறது சாப்பாட்டை அவ பக்கத்துல எடுத்து வச்சுட்டுப் போன்னு. வரட்டும் இன்னிக்கு” என்று திட்டியபடியே சென்று தமக்கைக்காக சாதம் போட்டு சாம்பார் ஊற்றி எடுத்து வந்தவள், அக்காவிடம் நீட்ட,
     “போ காயு! தெனம் இந்த பருப்பு சாப்புட்டு சாப்புட்டு நாக்கே செத்துப் போச்சு! இதுக்கு நான் பட்டினியா கெடக்கலாம் போல” என்று சொன்னவளால் பசியையும் தாங்க முடியவில்லை.
    “கவலைப் படாதக்கா இந்த ஞாயிற்றுக்கிழமை நானே ஸ்பெஷலா என் அக்காக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு தரேன்! இப்போ நீ  சமத்தா இதைச் சாப்பிடுவியாம்” என,
     வாரத்தில் நான்கு நாள் தன் தாய் வைக்கும் வெறும் சாம்பாரைப் பார்த்தவளுக்கு, வேண்டா வெறுப்பாய் இருந்தாலும், பசி உயிர் போனதில், பாவமாய் தட்டைக் கையில் வாங்க,
     “கொஞ்சம் இரு!” என்ற காயு, தானே அக்காவிற்கு தன் கையால் பிசைந்து உருண்டை உருட்டிக் கொடுக்க,
     “அதென்னமோ தெரியலை காயும்மா! நீ ஊட்டிவிடும் போது பருப்பு சாதம் கூட எப்படியோ தொண்டையில இறங்கிடுது!” என்று மைத்து சிரிக்க,
     “அப்போ அம்மாவை தினமும் பருப்பு சாதமே வைக்கச் சொல்லவா?!” என்று காயு முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கேட்க,
     “ஐயோ தெய்வமே!!!!” என்று அலறினாள் மைத்ரேயி…
                                            ******* 
     “அம்மா இந்தப் பொண்ணு நல்லா இருக்கா. இவளையே பேசி முடிச்சிடலாம்மா!” என்று இறுதியாய் சாரு தன் தம்பிக்கான பெண்ணைத் தேர்ந்தெடுத்து முடிக்க,
     “ஆரம்பிச்சுட்டீங்களா! உங்களுக்கு எத்தனை முறை சொல்றது? முதல்ல இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் முடிங்கன்னு!” என்று ப்ரியாவை அவன் கைக்காட்ட,
     “டேய் மறுபடியும் என்னைக் கோர்த்துவிட்டுட்டியா?!” என்று தம்பியை முறைத்தவள்,
     “நாங்க என்னப்பா பண்றது?! அவங்க அம்மா அப்பா எந்த முடிவும் சொல்லவே மாட்டேங்கறாங்களே!” என்று அவனின் அம்மா தங்கமலர் குறைபட,
     “என்னதான் பிரச்சனையாம் அவங்களுக்கு?! பொண்ணைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறை இல்லை!” என்று சலித்துக் கொண்டவன்,
     “ப்ரியா என் போன்ல சார்ஜ் இல்லை. உன் போன்ல லைன் போட்டுக் கொடு அவங்களுக்கு!” என்றான் சங்கமித்ரன்.
     “ம்! நீயே பேசுடா! அப்போவாச்சும் உன் சித்தப்பாக்கும் சித்திக்கும் புரியுதான்னு பார்ப்போம்!” என்றார் மலர்.
     “ஹெலோ சித்தப்பா எப்படி இருக்கீங்க? சித்தி இருக்காங்களா பக்கத்துல?” என்று பேசியபடியே மித்ரன் எழுந்து வெளியே லானுக்கு செல்ல,
     “சித்தி உன் தம்பியோட வெளிய போயிருக்காப்பா. நீ எப்படி இருக்க?! வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?!” என்றார் மனோகர்.
     “வீட்ல எல்லோரும் நல்லா இருக்கோம்! உங்க பொண்ணும் இங்கதான் இருக்கா நியாபகம் இருக்குங்களா?!” என்றான் அவன் சற்றே கோபம் கொண்டு.
     “ம்! ப்ரியா எப்படி இருக்காப்பா?!” என்றார் அப்போதே மகளை நினைவிற்குக் கொண்டு வந்து.
     “ம்! நான் சொன்னதும்தான் உங்க மக நியாபகமே உங்களுக்கு வருதா சித்தப்பா!” என்று கேட்டவன்,
     “உங்க மகளுக்கு கல்யாணம் பண்ற எண்ணம் இருக்கா இல்லையா?!” என்றான் நக்கலாய்.
     “என்னப்பா இப்படிக் கேட்டுட்ட? நல்ல வரன் இருந்தா பாரேன் ப்பா!” என்றவர்,
     “இல்ல இல்ல!” என சட்டென மறுத்து,
     “எதுக்கும் சித்திக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு சொல்லவா ப்பா?” என,
     “உங்களுக்கு என்னதான் பிரச்சனை சித்தப்பா அவளும் நீங்க பெத்த பொண்ணுதானே! எதுக்கு அவ கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுட்டே போறீங்க!” என்று கத்த,
     “அது அது வந்து ப்பா! அப்படி எல்லாம் எதுவும் இல்லை! நான் சித்திக்கிட்ட கேட்டு சொல்லவா?!” என்று அவர் மீண்டும் சித்தியை இழுக்க,
     “சரி நான் போனை வைக்கிறேன்” என்று லைனைத் துண்டித்தவன், மீண்டும் அனைவரும் அமர்ந்திருந்த கூடத்திற்கு வந்தபோது வாட்டம் கொண்ட தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டு,
     “அக்காக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லிட்டாங்க! முதல்ல அவளுக்குப் பார்த்து பேசி முடிங்க! அப்புறம் நான் கண்டிப்பா நீங்க பார்க்குற பொண்ணைக் கல்யாணம் செய்துக்கறேன்” என்றான் தனக்கானவள் இன்றே அவன் வாழ்வில் அடியெடுத்து வைத்து விட்டாள் என்பதை அறியாமல்!
     நலம் நலம்தானா முல்லை மலரே,
     சுகம் சுகம்தானா முத்துச் சுடரே!
     இளையகன்னியின் இடை மெலிந்ததோ
     எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ?
     வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
     வாடைக்காற்றிலே வாடி நின்றதோ! என்று அவ்வப்போது அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த இனிமையான பாடலுக்கு நேர்மறையாக,
                             ******
     “போடா போடா புண்ணாக்கு,
     போடாத தப்புக் கணக்கு
     போடா போடா புண்ணாக்கு,
     போடாத தப்புக் கணக்கு!
     தலைக்கிறுக்கு உனக்கு இருக்கு,
     இப்போ எண்ணாத மனக்கணக்கு!” என்று பாடலை தனது குட்டி தோழிகளுடன் சேர்ந்து கோரசாக பாடி, சாரி சாரி கத்திக் கொண்டிருந்தாள் அவள்! 
                                    -தொடரும்…
                                    
    
          
      
         
    
     
    
      
      

Advertisement