Advertisement

                                1
     “அன்புள்ள மான்விழியே..,
     ஆசையில் ஓர் கடிதம்..,
     நான் எழுதுவதென்னவென்றால்..,
     உயிர்க்காதலில் ஓர் கவிதை.  
     அன்புள்ள மன்னவனே…,
     ஆசையில் ஓர் கடிதம்..,
     அதைக் கைகளில் எழுதவில்லை,
     இருகண்களில் எழுதிவந்தேன்…,” பாடல் முடியவும் அவனது மருத்துவமனை வந்து சேரவும் சரியாக இருந்தது.
     செவிகளில் தேனாய் பழைய பாடல்களை இனிக்க இனிக்க கேட்பவன் வாழ்வையும் இனிப்பாக்க அவளின் மான்விழி எங்கே பிறந்திருக்கிறாளோ! என்று அவனது அம்மா, அக்கா அண்ணி என்று அனைவரும் அவனுக்குப் பெண் பார்க்கும் படலத்தில் தீவீரமாய் இறங்கி இருக்க, அவனோ, கடமையே முக்கியம் என, தங்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.
     அவன் வருகையைக் கண்டதும் வரவேற்புப் பெண் அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாய் எழுந்து நின்று,
     “குட் மார்னிங் சார்!” என,
     “கேரி ஆன்” என்று கண்களால் அவள் பணியைத் தொடரும்படி உத்தரவிட்டுவிட்டு, தன் அறைக்குள் நுழைந்தான் சங்கமித்ரன்.
     “அண்ணா இன்னும் வரலையா? அப்போவே கிளம்பிட்டாரே” என்றபடியே தன் அறைக்குள் சென்று அமர்ந்தவனை,
     “சார் அப்போவே வந்துட்டார் சார். ரவுண்டஸ்கு கிளம்பிட்டார்” என்றான் அவர்களின் உதவியாளன் பிரேம்.
     “ஓ! தட்ஸ் ஓகே!” என்றவன், இன்னிக்கு எத்தனை கேசஸ்கு பிசியோ ஸ்டார்ட் பண்ணனும்? எத்தனை பேர் டிஸ்சார்ஜ்? லிஸ்ட் ரெடியா?” என,
     “எஸ் சார்” என்று அவன் கேட்ட லிஸ்ட்டை முன்பே எடுத்து வைத்திருந்த பிரேம், அதை சங்கமித்ரனிடம் கொடுத்தபடியே,
     “சார்! ப்ரியா மேம் இன்னும் வரலையே?! அவங்க இன்னிக்கு லீவா?” என்றான்  தயக்கத்துடன்.
     “என்ன பிரேம்! மேம் வராம வேலை ஓடலையோ?!” என்று அவன் கேட்ட பதிலைக் கொடுக்காமல், சங்கமித்ரன் அவனை மிரட்டுவது போல் கேட்க,
     “நோ நோ சார்! அப்படி எல்லாம் இல்லை! எப்பவும் உங்க கூடவே வந்துடுவாங்களே! இன்னிக்கு வரலையேன்னு கேட்டேன்” என்று அவன் மென்று விழுங்க,
     “ம்! உங்க மேடம் சமூக சேவைக்கு போயிருக்காங்க! இனி லேட்டாதான் வருவாங்க!” என்று நக்கலாய்ச் சொன்னவன்,
     “ஓகே ஷால் வி மூவ்” என்று லிஸ்டைக் கையில் எடுத்துக் கொண்டு எழ,
     “எஸ் சார்” என்று பின்தொடர்ந்தான் பிரேம்.
     தான் பயிற்சி அளிக்க வேண்டிய நோயாளிகளுடைய பட்டியலை எடுத்துக் கொண்டு முதலில் ஒரு அறைக்குச் சென்றவன்,
     “என்ன பாட்டி, வீட்டுக்குப் போறதுனால முகத்துல எவ்ளோ சந்தோஷம்.” என்றபடியே உள்ளே சென்று அந்தப் பாட்டியின் கால்களுக்கு செய்ய வேண்டிய பயிற்சியை செய்யத் துவங்க,
     “ஆமாம் தம்பி. இங்க வந்து ஒரு மாசம் ஆச்சு. என் பொண்ணும், பேரப் பசங்களும் இல்லாம இங்க இருக்க வெட்டு வெட்டுன்னு இருக்கு! வீட்டுக்கு போனாதான் நல்லா இருக்கும்!” என,
     “ம்! ஆனா வீட்டுக்குப் போன பிறகும் நான் சொன்ன பயிற்சிகளை தினமும் சரியா பண்ணனும். அப்போதான் சீக்கிரமே எழுந்து தனியா நடக்க முடியும்” என்றான் மித்திரன் கண்டிப்புடன்.
     “கண்டிப்பா பண்றேன் தம்பி. இல்லன்னா என் வீட்டுகாரர் திரும்ப இங்க கூட்டிட்டு வந்து விட்டுவேன்னு பயமுறுத்துறார்.” என்றவரைப் பார்த்து சிரித்த மித்ரன்,
     “குட் குட்! ஆனா திரும்ப இங்க வரமாதிரி நீங்க வச்சுக்கக் கூடாது” என்றவன்,
     “வீட்டுல பேரப் பிள்ளைகளோட சந்தோஷமா இருக்கனும்” என்றுவிட்டு, அடுத்த நோயாளியைப் பார்க்கச் சென்றான்.
                          *********
     “யம்மா! பசிக்குதும்மா! இன்னும் பல்லு கூட வெலக்கல நானு! சீக்கிரம் வாம்மா!” என்று காலை ஒன்பது மணிக்கே கண்விழித்த மைத்ரேயி, தாயை அழைக்க,
    “ரா மூச்சூடும் போனை நொண்டிக் கெடந்துட்டு, காலை ஒன்பது மணிக்கு எழுந்ததும் இல்லாம என்னக் கூச்சல் போடுது பாரு இந்த கத்திரிக்கா!” என்று சாந்தியும் கத்த,
     “ஆரம்பிச்சுடுச்சுய்யா மார்னிங் அலாரம்!” என்று கவுண்டர் கொடுத்தவள்,
     “எந்திரிக்க அடிக்கும் அலாரம் கடிகாரம்
     எப்பவுமே அடிக்கும் அலாரம் அம்மாகாரம்!” என்ற மீம்சோடு முகநூலில் அம்மா காலையில் லட்சார்ச்சனை ஆரம்பிப்பதைப் போல் படம் தேடி எடுத்து ஒரு போஸ்டைப் போட்டுவிட்டு வந்தவள், 
     “யம்மா! இப்போ நீ வரப் போறியா இல்லையா?!” என்று காட்டுக் கத்தலாய்க் கத்த.
     “இதோ இரேன்டி! சோறுதான பொங்கிட்டு இருக்கேன்! வடிச்சிட்டு வரதுக்குள்ள இப்படி கத்துற,” என்று குரல் கொடுக்க,
    “ம்க்கும்! நீ வைக்குறதுக்கு பேரு சோறா வைக்கப்போரான்னு திங்குறவங்கத்தே..ன் பேரு வைக்கோணும்!” என்று முணுமுணுத்தவள், சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவளாய்,
     “ஐய்யய்யோ யம்மா! இன்னிக்கு ஜென்சிம்மா சொல்லிவிட்ட அந்த பிசியோதெரபிஸ்ட் வரேன்னு சொல்லி இருந்தாங்க! சீக்கிரம் சீக்கிரம் ஓடியா! அவங்க வரதுக்குள்ள பல்லாச்சும் வெலக்கிக்கிறேன்!” என்று அவள் ஹை டெசிபல் சவுண்டில் கத்த,
     “என்னத்துக்குடி இப்படி வால் வால்னு கத்திக் கூச்சல் போடுற! வாரேன் இரு” என்றவர், மகளுக்கு பல் விளக்க, பாத்திரத்தையும், ப்ரெஷ் தண்ணீர் என அனைத்தையும் கொண்டு சென்று கொடுக்க, மகாராணி பெட்டில் இருந்தவாறே, பல் தேய்த்துக் கொடுக்க,
     அவளைச் சுத்தம் செய்து முகம் கழுவிவிட்டு அவர் விலகிய சமயம்,
     “நான் உள்ள வரலாமா?!” என்றபடி வந்தாள் ப்ரியா.
     “வாங்க வாங்க! நீங்கதான் ப்ரியா சிஸ்சா! நான்தான் மைத்து! மைத்ரேயி!” என்றவள்,
     “இன்னிக்கே எக்சர்சைஸ் பண்ணனுமா?!” என்றாள் சோகமாய்.
     “கண்டிப்பா!” என்று சிரித்த ப்ரியா, தனது கைப்பையைக் கழட்டி அருகே இருந்த மேஜை மீது வைத்துவிட்டு,
     “எதுவும் சாப்பிடலை இல்ல?” என்றாள்.
     “ம்ஹும் இல்லை!” என மைத்து தலையசைக்க, அவளின், தாய்,
     “வாங்க வாங்க மேடம். நீங்கதான் இவளுக்கு எக்சர்சைஸ் சொல்லிக் கொடுக்க வந்த டாக்டரா?! இந்தப் பிள்ளை தினமும் உடற்பயிற்சி செய்யிறதே இல்லை! நல்லா எடுத்து சொல்லுங்க. எப்படியாச்சும் இந்தப் பிள்ளை பழைய மாதிரி ஆகிடனும்” என,
     “கண்டிப்பா ம்மா” என்ற ப்ரியா,
     “ஆரம்பிக்கலாமா” என்று சொல்லி, மைத்ரேயியின், கை விரல்களில் இருந்து பயிற்சியை ஆரம்பிக்க,
     ‘நல்லா மாட்டிவிட்டுட்டாங்க இந்த ஜென்சிம்மா! இனி ஏமாத்தவே முடியாது போலேயே!’ என்று மனதுள் புலம்பியபடியே ப்ரியா சொன்னபடி செய்தாள் தன் வலிகளைப் பொறுத்துக் கொண்டு.
     “ஆமாம்! நான் உங்களை டாக்டர்ன்னு கூப்பிடவா?! இல்லை அக்கான்னு கூப்பிடவா?” என்று மைத்திரேயி கேட்க,
     “உனக்கு எப்படித் தோணுதோ அப்படிக் கூப்பிடு” என்ற ப்ரியா, அவளை எழுந்து நிற்கச் சொல்ல,
     “எழும்பணுமா?! அப்பா வேற வீட்ல இல்லையே! கீழ விழுந்துட்டா!” என்றாள் கண்கள் நிறைய பயத்துடன்.
     “விழாம பிடிச்சுப்பேன்! தைரியமா எழுந்து நில்லு.” என்ற ப்ரியா,
     “அம்மா கொஞ்சம் பக்கத்துல வந்து நில்லுங்க! ஜஸ்ட் சப்போர்ட்டுக்கு தான்!” என்று மைத்ரேயியின் தாயையும் அழைக்க, மைத்து சற்று தைரியத்துடன் எழுந்து நிற்க முயற்சி செய்தாள்.
     ஆனால் பல மாதங்களாய் எழுந்து தனியாக நிற்காது போனதால் கால்கள் வலுவிழந்து கிடக்க, அவள் நிற்க முடியாது தடுமாறி விழப் போக, ப்ரியாவும், சாந்தியும் அவளைத் தாங்கி அமர வைத்தனர் பக்குவமாய்.
     “பாருங்க க்கா என்னால நிக்கவே முடியலை!” என்று ப்ரியா சோகமாய் சொல்ல,
     “அது உன் தப்புதானே! இத்தனை மாசம் ஏன் முயற்சி பண்ணாம விட்ட?! சரி பரவாயில்லை! ஆரம்பத்துல ஒரு ரெண்டு நாள் கஷ்டமா இருக்கும். அப்புறம் பாலன்ஸ் பண்ண முடியும்” என்ற ப்ரியா,
     “சரி உட்கார்ந்தபடியே காலுக்கு சில பயிற்சிகள் சொல்லித் தரேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பண்ணனும் சரியா” என,
     “ம்!” என்று தலையசைத்தாள் மைத்து நல்ல பிள்ளையாய்.
     ஆனால் ப்ரியா எதிரே செய்ததோடு சரி, அவள் கிளம்பிய பின், “ஐயோ எம்மா இந்த ஜென்சிம்மா இப்படிக் கோர்த்து விட்டுட்டாங்களே! வலி உசிரு போகுதே! அம்மா தைலம் எடேன்!” என்று கத்த ஆரம்பித்துவிட்டாள் தாயிடம்.
     “ஏன்டி இப்படிப் பண்ணுற! காலத்துக்கும் இப்படியே நான் உனக்கு சேவை செய்துகிட்டு இருக்க முடியுமா?! நீயும் முயற்சி பண்ணாதானே சரியாகும்!” என்று சாந்தி குறைபட,
     “போ உன்னால முடியாட்டி போ! நீதான வேலை வேலைன்னு ஓடி என்னை இப்படி மொத்தமா படுக்க வச்சுட்ட! இப்போ என்னவோ நானே இப்படி பண்ணிக்கிட்ட மாதிரி பேசுற! உன்னால செய்ய முடியாட்டி போ! நான் இப்படியே கெடந்துக்கறேன்” என்று கத்திய மைத்ரேயி, தன் அருகே இருந்த பொருட்களை எல்லாம் விசிறி அடித்தாள் கோபத்தில்.
     “வந்தேன்னு வையி! நாலு போடுவேன். உன்கூட போராடுறதைவிட கடைக்கு போயி நாலு துணி தச்சா வருமானமாச்சும் வரும்” என்று கத்திய சாந்தி, தனது தையல் கடைக்குச் சென்றவிட, மைத்து திறந்து கிடந்த, வாசற் கதவையே மூச்சுவாங்க வெறிக்கலானாள் ஏதேதோ எண்ணங்களைச் சுமந்தபடி.
     ஆனால் எல்லாம் சில நிமிடங்கள்தான்! சிறிது நேரத்தில் கைபேசியைக் கையில் எடுத்தவள்,
    முகநூலில் இருந்த தன் தோழி ஒருத்தியை டேக் செய்து, “வெளுத்து வாங்குது வெயிலு நீ எங்கடி போன என் குயிலு” என்று போஸ்ட் போட, அதற்கு பதிலாய் அவள் நண்பர்கள் வந்து கமென்ட் செய்ய என்று அவளின் பொழுது முகநூலில் அரட்டையோடு ஓடத் துவங்கியது.

Advertisement