ஆரியன் அவன் பெற்றோரை மதுரையில் இருக்கும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல சொன்னான். எல்லோரும் இங்க இருந்து என்ன பண்ணப் போறோம் என்றவன், அவினாஷை சென்று அவர்களை விட்டுவிட்டு வர சொல்ல… சடகோப்பன் தாங்கள் ஆட்டோ பிடித்துச் சென்று விடுவதாகச் சொன்னார். அவினாஷிடம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டு வரும்படி சொன்னான்.

சம்யுக்தா அவளின் நகைகளை அவரிடம் கொடுக்க… “நீயும் வரியா?” எனச் சரளா கேட்க… அம்மாவின் நிலைமை தெரியாமல் எப்படி வருவாள். அதுவரை சம்யுக்தாவுக்குக்காக அடக்கி வைத்திருந்த கண்ணீரை அதற்கு மேல் முடியாமல் சரளா கொட்டி விட்டார்.

“இன்னைக்குத்தான் எங்க அண்ணன் எதோ ஒரு வகையில சந்தோஷமா இருக்காருன்னு நினைச்சேன். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே…” என அவர் ஒரே அழுகை. அவரைத் தேற்றி அங்கிருந்து மகன்கள் கிளப்பினர்.

இரவு பத்து மணிக்கு சக்ரவர்த்திக்கு எல்லாப் பரிசோதனைகளும் முடிந்து, மற்றது எல்லாம் நார்மலாக இருக்க… மனைவியைப் பற்றிக் கவலையில் அவருக்குப் பிரஷர் மட்டும் அதிகமாகி இருக்க… அவருக்கு அதற்கு மருந்து கொடுத்து, அவர் அலட்டிக் கொள்ளாமல் இருக்க… உறக்கத்திற்கும் மருந்து கொடுத்திருந்தனர்.

அம்மாவுக்கு எதாவது என்றால்….முதலில் அப்பா தாங்குவாரா என்ற கவலை சம்யுக்தாவுக்கு இருக்க…. அவள் கண்ணீரோடு அவர் அறையில் உட்கார்ந்து இருந்தாள். அவினாஷ் அவளுடன் இருந்தான்.

இன்னும் இந்துஜாவுக்கு நினைவு திரும்பவில்லை. நினைவு திரும்பியதும் தான் அடுத்தது முடிவு செய்ய வேண்டும் என்றார் மருத்துவர்.

அவினாஷுக்குச் சுத்தமாக உடலில் சக்தி இல்லை. “அண்ணா சாப்பிடலமா?” என ஆரியனிடம் வந்து கேட்டான்.

“பக்கத்து வீட்டுக்காரங்க எதோ சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாங்க. நீயும் சாப்பிட்டு சம்யுக்தாவையும் சாப்பிட வை… நான் பிறகு சாப்பிடுறேன்.” என்றான்.

சக்ரவர்த்தி இருந்த அறையில்… கைகழுவி விட்டு வந்து அவினாஷ், உணவுப் பாத்திரத்தை திறந்து பார்க்க… இட்லியும் கார சட்னியும் இருந்தது. எடுத்துக் கொண்டு சம்யுக்தாவின் அருகே சென்று உட்கார்ந்தவன், “நீயும் சாப்பிடு…” என, அவள் மறுக்க… அவினாஷ் எதோ பேசியபடி தானும் உண்டு சம்யுக்தாவுக்கும் ஊட்டி விட்டான்.

அப்போது அங்கே வந்த ஆரியன் அவர்களை நிறைவுடன் பார்த்து விட்டுச் சென்றான். அவனுக்கு இப்படியெல்லாம் கனிவாகப் பேசி சம்யுக்தாவை உண்ண வைத்திருக்க எல்லாம் கண்டிப்பாகத் தெரியாது.

அவன் இந்துஜா இருந்த அவசர சிகிச்சை பிரிவிக்கு வெளியில் இருக்க… அவனிடம் வந்த அவினாஷ், “நான் இங்க இருக்கேன். நீ போய்ச் சாப்பிடு.” என… “சம்யுக்தா ஒழுங்க சாப்பிட்டாளா?” என்றதற்கு, “இரண்டு இட்லி சாப்பிட்டா…” என்றான்.

ஆரியன் சென்று இன்னொரு பாத்திரத்தில் இருந்த இட்லியை உண்டு விட்டு வந்தான்.

நள்ளிரவுக்கு மேல் சக்ரவர்த்தியின் முதல் மனைவியின் குடும்பம் வந்தது. ஸ்ரீகாந்த் தனது அம்மாவையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

மருத்துவமனைக்கு வந்ததும் ஆரியனுக்கு அழைத்து எங்கே வர வேண்டும் என்று கேட்க… அவன் சக்ரவர்த்தி இருந்த அறைக்கு வர சொன்னவன், அவனும் அங்கே சென்றான்.

இவர்கள் சென்று பார்த்தபோது சக்ரவர்த்தி உறங்கிக் கொண்டு இருந்தார். ஸ்ரீநிதி தந்தையை அந்த நிலையில் பார்த்ததும் அழத்தான் செய்தாள்.

சிறிது நேரம் கணவரை பார்த்துக் கொண்டிருந்த சந்திரா, பிறகே அருகில் இருந்த சம்யுக்தாவை கவனித்து விட்டு, “உன்னால உன் அம்மாவால தான் என் புருஷனுக்கு இந்த நிலைமை. கூடவே இருந்து கொல்ல பார்க்கிறீங்க.” எனப் பேசிக் கொண்டே செல்ல…

“அத்தை இந்த நேரத்துல கூட இப்படித்தான் பேசுவீங்களா? நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க. “ என்றான் ஆரியன் பொறுமை இழந்து.

“நீ என்ன நாட்டாமை பண்றது? நான் உங்க மாமாவை பெரிய ஆஸ்பத்திரியில சேர்த்துப் பார்த்துக்கிறேன். எனக்குத் தெரியும் என் புருஷனை எப்படிப் பார்க்கணும்னு.” என்றவர், “ஸ்ரீகாந்த, அப்பாவை கூட்டிட்டு வேற ஆஸ்பத்திரிக்கு போவோம்.” என்றதும்,

“மாமா வந்தா கூட்டிட்டு போங்க.” என்றான் ஆரியன் பட்டென்று.

“அவங்க அம்மா நிலைமை இன்னும் என்னனென்ன தெரியலை… இப்ப கூட மனிதாபிமானம் இல்லாம இப்படித்தான் பேசுவீங்களா? முதல்ல இங்க இருந்து போங்க.” என்றான் கோபமாக.

“மாமாவுக்கு இன்னும் முழுசா குணம் ஆகலை. அவர் எழுந்து நீங்க பேசுறதை கேட்டா.. என்ன வேணா ஆகும். தயவு செய்து இங்க இருந்து கிளம்புங்க.”

“ஸ்ரீகாந்த், மதுரை வீட்ல தான் அப்பா அம்மா இருக்காங்க. நீ இவங்களை அங்க கூட்டிட்டு போ… நாளைக்குக் காலையில மாமா எழுந்ததும், என்ன பண்றதுன்னு பார்க்கலாம்.”

ஆரியன் சொன்னதைக் கேட்டு ஸ்ரீகாந்த, அம்மாவையும் தங்கையும் அழைத்துக் கொண்டு சென்றான். சந்திரா திட்டிக் கொண்டே தான் சென்றார்.

ஸ்ரீகாந்த அவர்களை ஆரியன் வீட்டில் விட்டுவிட்டு உடனே திரும்ப மருத்துவமனைக்கு வந்திருந்தான். உண்மையிலேயே அவனுக்குத் தந்தை மீது அக்கறை இருந்தால்… அவன் வருவான் என ஆரியன் நினைத்திருந்தான். அது போல வந்துவிட்டான். அவனை அவன் தந்தையின் அருகே உட்கார சொல்லிவிட்டு, இவர்கள் எல்லாம் இந்துஜாவின் அறை முன்பு உட்கார்ந்திருந்தனர்.

விடியற்காலையில் ஒருமுறை இந்துஜாவின் பல்ஸ் குறைந்து, அவர் உடல்நிலை பின்னடைவை சந்திக்க… மருத்துவர் கொஞ்சம் கஷ்ட்டம் தான் என்றார். சம்யுக்தா முழுவதும் உடைந்து போனாள். ஆரியன் அவினாஷ் இருவராலும் அவளைத் தேற்ற முடியாமல் போனது. முதலில் அவர்களுக்கே பெரிய அதிர்ச்சி தான்.

அருமையான பெண்மணி இந்துஜா. பெண்களுக்கு எவ்வளவு இருந்தாலும் திருப்தியே வராது. ஆனால் இந்துஜா இருப்பதை வைத்துச் சந்தோஷமாக, நிறைவாக வாழ்த் தெரிந்தவர். மிகவும் இனிமையாகப் பழகக் கூடியவர். அதை மகளுக்கும் கற்றுத் தந்திருந்தார். அப்படிப்பட்ட பெண்மணியை இழப்பது தங்களுக்கே மிகவும் துன்பம் என்றால்… சம்யுக்தாவுக்கு எப்படி இருக்கும். அதை அவர்களால் உணர முடிந்தது.

மருத்துவர்கள் செவிலியர்கள் அங்கே இங்கே அவசரமாகச் செல்வதைப் பார்த்து, ஸ்ரீகாந்தும் இங்கே வந்துவிட்டான். பிறகு தான் அவனுக்கு விவரம் தெரியும். சம்யுக்தா அழுவதைப் பார்த்து அவனுக்கே வருத்தமாக இருக்க…. “உங்க அம்மாவுக்குச் சரி ஆகிடும்.” என்றான்.

மருத்துவர்களின் வெகு நேர போராட்டத்திற்குப் பிறகு… இந்துஜா பிழைத்துக் கொண்டார். பிறகுதான் சம்யுக்தாவின் கண்ணீர் நின்றது. ஆரியனும் அவினாஷும் அவளைத் தேற்றுவதிலேயே களைத்துப் போனார்கள். ஸ்ரீகாந்த் என்ன நினைத்தானோ, வெளியே சென்று அவர்களுக்குக் குடிக்கக் குளிர்பானம் வாங்கி வந்து கொடுத்தான்.

சரளா இரவெல்லாம் எங்கே தூங்கினார். அதோடு சந்திரா வந்ததும் ஒரே புலம்பல் தான். விடியற்காலையில் எழுந்து குளித்ததும், கணவருடன் மருத்துவமனைக்குக் கிளம்பி விட்டார். சந்திராவையும் ஸ்ரீநிதியையும் பிறகு ஸ்ரீகாந்த வந்து அழைத்துச் செல்வான் என்று சொல்லி வந்துவிட்டார்.

காலை ஒன்பது மணி போல இந்துஜாவுக்கு நினைவு திரும்ப… அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டார் என்றார் மருத்துவர். ஆனால் காலில் தான் நிறைய இடங்களில் எலும்பு முறிவு என்பதால்…. அதற்கு உரிய சிகிச்சையைச் செய்ய வேண்டும் என்றார்.

மனைவிக்கு ஆபத்து இல்லையென்றதும் தான், சக்ரவர்த்தி அலட்டல் இல்லாமல் இருந்தார்.

அதன் பிறகே அவினாஷ் சென்று உணவு வாங்கி வர… வாணி நேற்று போல இன்றும் உணவு கொண்டு வந்திருக்க… அதன் பிறகே எல்லோரும் உண்டனர். சக்ரவர்த்திக்கு பக்கத்து வீட்டு பெண்மணி கொண்டு வந்த வீட்டு உணவை கொடுத்தனர்.

ஸ்ரீகாந்த காலையில் அம்மாவையும் தங்கையையும் அழைத்து வர வீட்டுக்குச் சென்றிருந்தான்.

“அப்பா அத்தைகிட்ட நான் பேசினா… வீணா சண்டை வரும். நீங்களே பேசிக்கோங்க.” என்று விட்டான் ஆரியன்.

சக்ரவர்த்தி இந்துஜாவை பார்க்க வேண்டும் என்றார். அதே போல இந்துஜாவும் கணவரை கேட்டிருக்க…. இருவரையும் ஒருமுறை பார்க்க வைத்தால் நல்லது என ஆரியன் மருத்துவரை கேட்டுக்கொள்ள… சக்ரவர்த்தியும் சம்யுக்தாவும் மட்டும் இரண்டு நிமிடங்கள் உள்ளே சென்று வர அனுமதித்தார்.

இந்துஜாவை உண்மையில் அப்படிப் பார்க்கவே முடியவில்லை. அவரைச் சுற்றி அத்தனை உபகரணங்கள். அவையே சொன்னது, அவர் எந்த நிலையில் இருந்தார் என்பதை. அங்கங்கே கட்டு போட்டிருந்தனர். சக்ரவர்த்திக்கு மனைவியைப் பார்த்ததும் இன்னும் கலக்கம் தான்.

சம்யுக்தா அம்மா என்று அழைக்க… கண்களைத் திறந்து பார்த்த இந்துஜாவுக்குக் கணவரைப் பார்த்ததும் தான் உயிரே வந்தது.

“அம்மா, நீங்க இல்லாம நான் நம்ம வீட்டுக்கு போக மாட்டேன். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை… சீக்கிரம் வீட்டுக்கு வாங்க மா…” எனச் சம்யுக்தா சொல்ல… ஐயோ என்றானது இந்துஜாவுக்கு.

அதைக் கேட்டபடி உள்ளே வந்த ஆரியன், “அவங்க நல்லா ஆகிட்டு வருவாங்க.” என்றவன், “அத்தை, இப்போ உங்களுக்குப் பயப்படும்படி ஒன்னும் இல்லை. இன்னும் ரெண்டு நாள்ல உங்களை ரூமுக்கு மாத்திடுவாங்க. அதனால டென்ஷன் இல்லாம இருங்க. மாமாவை நாங்க பார்த்துக்கிறோம்.” என்றதும், இந்துஜா அந்த நிலையிலும் புன்னகைக்க முயன்றார்.

சக்ரவர்த்தியையும், சம்யுக்தாவையும் வெளியே அழைத்துக் கொண்டு வந்த ஆரியன், சக்ரவர்த்தி அறைக்குள் சென்றதும், “இனிமே நீ உங்க அம்மாவை பார்க்கப் போன கொன்னுடுவேன். அவங்களை டென்ஷன் பண்றியா நீ.” என்று கேட்க…

“எங்க அம்மா நான் அப்படித்தான் சொல்வேன்.” என்றாள் சம்யுக்தா கண்ணீரை அடக்கியபடி.

“அறிவில்லை உனக்கு, அவங்க எதுவும் செய்ய முடியாத நிலைமையில இருக்காங்கன்னு உனக்குத் தெரியாது. அவங்களுக்கு எவ்வளவு கஷ்ட்டமா இருக்கும்.”

“எங்க அம்மா எனக்காக வருவாங்க.” என்றாள் சம்யுக்தா. அது என்னவோ உண்மைதான்.

அவர்கள் இருவரும் சண்டை போடுவதைப் பார்த்த சரளா, “இப்பத்தான் ரெண்டு பேரும் நல்லா ஆகிட்டாங்களே…. நானும் அப்பாவும் இங்க இருக்கோம். நீங்க எல்லாம் வீட்டுக்கு போயிட்டு குளிச்சிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு வாங்க. அப்புறம் நானும் அப்பாவும் வீட்டுக்கு போறோம்.” என்றார்.

சக்ரவர்த்தியின் நண்பர்களும் விஷயம் தெரிந்து வந்து விட… “நான் கோவில்ல இருந்தே போயிட்டேன். எனக்குக் காலையில சக்ரவர்த்திச் சொல்லித்தான் தெரியும்.” என்ற ஜெயகுமார், தான் இனி பார்த்துக் கொள்வதாகச் சொன்னார்.

சக்ரவர்த்தியிடம் சொல்லிக் கொண்டு ஆரியன் தம்பி மற்றும் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். எதிரே ஸ்ரீகாந்த தன் அம்மா தங்கையுடன் வந்தான். அவனிடம் இருந்து வீட்டு சாவியை மட்டும் வாங்கிக் கொண்ட ஆரியன், வேறு எதுவும் பேசவில்லை.

சந்திரா பேச வந்ததை எல்லாம் சக்ரவர்த்திக் கேட்கும் நிலையில் இல்லை. “இப்போ நான் நல்லா  இருக்கேன்.” என்றவர், மகனிடம் அம்மாவையும் தங்கையையும் கார் பிடித்து ஊருக்கு அனுப்ப சொன்னவர், மகனை மட்டும் இருக்கச் சொன்னார். சந்திரா வேறு வழி இல்லாமல் கிளம்பி சென்றார்.

சக்ரவர்த்தியின் நண்பர்கள் துணை இருந்ததால்… சரளாவும் நிம்மதியாக இருந்தார். வாணியும் உடன் இருந்தார்.

மகளுக்காக எழுந்து வந்து விட வேண்டும் என்ற வைராக்கியம் இந்துஜாவுக்கு வந்திருக்க.. அதன் பிறகு அவர் உடல்நிலை பின்னடையவும் இல்லை.