கல்யாணத்துக்கு மூன்னு மாசம் தான் இருக்கு. ஊர்ல மண்டபத்துக்கு அப்பா யார் கல்யாணம்னு சொல்லாம தேதி மட்டும் பதிஞ்சு வச்சிருக்கார். ஒரு மாசம் இருக்கும் போது பத்திரிகை வைக்கத் தொடங்கினா போதும். நம்ம பக்கம் முஹுர்த்தபட்டு, நிச்சயபட்டு வாங்கணும்.
தாலி உருக்க ஒருநாள் பார்க்கணும் என சரளா வேலைகளை அடுக்கியபடி இருந்தவர், “உனக்குக் கல்யாணத்துக்கு அலங்காரம் பண்ண ஆளுக்கும் சொல்லி வைக்கணும் இல்ல டா…” எனச் சம்யுக்தாவைப் பார்த்துக் கேட்க…
“வேண்டாம் அத்தை அம்மாவே பண்ணிடுவாங்க.” என்றாள்.
“கல்யாணத்துக்குப் பண்ற அளவுக்குத் தெரியுமா?” எனச் சரளா சந்தேகமாகக் கேட்க…
“அம்மா பண்ணிடுவாங்க அத்தை. தலையலங்காரம் கூட அவங்களே பண்ணிடுவாங்க. நீங்க பார்க்கத்தானே போறீங்க.” என்றாள் சம்யுக்தா. சரளாவுக்கு இன்னும் முழுத் திருப்தி இல்லை. அதை உணர்ந்த ஆரியன், “அம்மா அத்தையே நல்லா பண்ணுவாங்க கவலைப்படதீங்க. இந்த வேலைன்னு இல்லை… அவங்க சமையல் கூடச் செம்மயா இருக்கும்.” என்றதும்,
“டேய் அண்ணனா, அதுக்குதான் உன் மாமியார் கிட்ட அவங்களையே சமைக்கச் சொன்னியா…” என்றதற்கு,
சம்யுக்தா அவளின் அம்மாவின் திறமைகளை அடுக்கியபடி வந்தாள். சரளாவுக்குச் சந்திராவைத் தெரியும். அவரைத் திருமணம் செய்து அண்ணனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை இருந்தது. இப்போது இந்துஜாவைப் பற்றித் தெரிந்ததும், அண்ணா இன்னொரு வகையில் நன்றாக வாழ்ந்திருக்கிறார் என்று தோன்றியது.
“சம்யு இன்னைக்கு என்ன அப்படி டென்ஷன் ஆன. உனக்கு ஆரியனை அந்த அளவுக்குப் பிடிக்குமா? எப்படி சம்யு இப்படி?” என அவினாஷ் சம்யுக்தாவை கேலி செய்ய… சம்யுக்தா முகம் சிவக்காமல் இருக்கப் பாடுபட…ஆரியன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
கார் நகரத்தை விட்டு வெளியே சாலையில் வேகம் எடுக்க… ஆரியன் சாலையின் முன் சிறு கூட்டம் இருப்பதைப் பார்த்து காரின் வேகத்தைக் குறைத்தான்.
எதோ விபத்து என்று புரிந்து, சம்யுக்தா அந்தப் பக்கம் பார்ப்பதைத் தவிர்க்க…. அதற்குள் அவினாஷ் தலையை நீட்டி வெளியே பார்த்தவன், “மாமா கார் போல இருக்கு.” என்றதும், காரை நிறுத்தி விட்டு எல்லோரும் இறங்கி ஓடினர்.
கூட்டத்தை விலக்கி பார்க்க…. கார் பின்பக்கம் முழுவதும் நசுங்கி இருக்க… காரில் இருந்தவர்களை வெளியே எடுக்க அங்கிருந்தவர்கள் முயன்று கொண்டிருந்தனர்.
சம்யுக்தா அம்மா அப்பா என்று அலறிய அலறலில்… முதலில் ஆரியனுக்கு ஒன்றுமே ஓடவில்லை.
தான் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும், ஆபத்து என்று உணர்ந்தவன், “அழுது என் வேலையைக் கெடுக்காத. அந்தப் பக்கம் போய் அழு.” எனக் கத்தினான். அதிர்ச்சியில் சம்யுக்தா அழுவதை நிறுத்தி விட்டாள். அவள் செய்வதற்கும் அங்கு ஒன்றும் இல்லை. ஒன்றுமே செய்ய முடியாமல் நிற்பதும் எப்படி இருக்கும்? சரளா அவளைத் தள்ளி அழைத்துச் சென்றார்.
கதவை திறக்க முயன்று கொண்டே ஆம்புலன்ஸ்க்கு சொல்லுங்க என்றான் ஆரியன். யாரோ ஏற்கனவே சொல்லி இருக்கு, இல்லை என இரண்டுமே சொல்ல… அவினாஷ் ஆம்புலன்ஸுக்கு போன் செய்ய… ஆரியன் அங்கிருந்த ஆட்களோடு சேர்ந்து முன்பக்க கதவை உடைத்து, அவன் மாமாவை முதலில் வெளியே எடுக்க… சீட் பெல்ட் போட்டிருந்ததால்… அவருக்கு அடி குறைவு தான். ஆனால் தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது. அவருக்கு நினைவும் இருக்க… தங்கள் காரில் அவரையும் அவரோடு அவினாஷயும், தன் அப்பாவையும் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல சொல்லி அனுப்பி வைத்தான். எதாவது உள் காயம் இருந்தால்… சக்ரவர்த்தியும் அப்போது அதிர்ச்சியில் இருந்ததால்… எதுவும் பேசவில்லை.
இந்துஜாவை வெளியில் எடுப்பதற்குள் தான் போதும் போதுமென்றாகி விட்டது. அவர் பக்க கதவை திறக்க முடியவில்லை. ஓட்டுனர் இருக்கை வழியாகச் சென்று ஆரியன் அவரை வெளியில் எடுத்தான். அவர் கால் வேறு எதிலோ மாட்டிக் கொண்டது. மிகவும் கஷ்ட்டப்பட்டு எடுத்தனர். சீட் பெல்ட்டும் போடாமல் இருந்திருப்பார் போல… காயங்கள் அதிகம். அவருக்கு நினைவும் இல்லை.
அவரை வெளியே எடுத்ததும் நாடி துடிப்பை பார்க்க… அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எதற்கும் அவருக்கு முதலுவதி செய்தான். அதற்குள் அம்புலன்ஸ் வந்துவிட… அவரை ஏற்றி உடன் சம்யுக்தாவையும் சரளாவையும் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.
ஆம்புலன்ஸிலும் அவருக்கு முதலுதவி செய்து கொண்டுதான் சென்றனர். அவருக்கு நினைவு இல்லாமல் இருந்தது தான், ஆரியனுக்குக் கவலையாகி இருந்தது. சம்யுக்தா அவள் அம்மாவை அழைத்தபடி வந்தாள். அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
பத்து நிமிடத்தில் மருத்துவமனை வந்துவிட்டனர். நேராக அவசர சிகிச்சை பிரிவுக்குத்தான் ஆம்புலன்ஸ் சென்றது. அதனால் உடனே சிகிச்சை தொடங்கியது.
ஆரியன் அவினாஷுக்கு அழைக்க… அவன் வேறு ஒரு மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். அதுவும் இங்கிருந்து பக்கம் தான். மாமாவுக்குச் சிகிச்சை நடக்கிறது. ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றான். அது எதோ சற்று ஆறுதலாக இருந்தது.
அவன் அத்தையைப் பற்றி விசாரிக்க.. “தெரியலை… அவங்களுக்கு நினைவே இல்லை. அதுதான் கவலையா இருக்கு.” என்றான்.
மருத்துவர்கள் போராடித்தான் இந்துஜாவை மீட்டுக் கொண்டு வந்தனர். அவருக்கு மற்ற சிகிச்சைகள் தொடங்கியது.
மருத்துவர் ஒருவர் வெளியே வந்து, “நீங்க அங்கயே முதலுதவி செஞ்சு கொண்டு வந்ததுனால தான். ரொம்பவும் லேட் ஆகியிருந்தா… எதுவும் பண்ணி இருக்க முடியாது.” என்றவர்,
“இப்பவும் ஆபாத்தான கட்டத்தைத் தாண்டிட்டாங்கன்னு சொல்லலை. இப்பவும் அவங்களுக்கு நினைவு வரலை தான். ஆனா நீங்க வந்ததுக்கு இப்போ பரவாயில்லை.” என, ஆரியன் அவருக்கு நன்றி சொன்னவன்,
அவளது அம்மாவை பார்க்கும் வரை சம்யுக்தாவுக்கு முழு நம்பிக்கை வராது. ஆனால் இப்போது சின்ன நம்பிக்கை வந்திருக்க… அவள் முன்பு போலக் கதறி அழவில்லை.
அவினாஷ் ஆரியனை அழைத்தவன், “மாமா அத்தை பேரை சொல்லி ரொம்பப் புலம்புறார். அவரைப் பிடிச்சு வைக்க முடியலை.” என்றான்.
“நீ அவருக்கு மேல் சிகிச்சை முடிஞ்சதும், இங்கேயே கூட்டிட்டு வந்திடு. இங்கேயே சேர்த்து பார்த்துக்குவோம்.” என்றான் ஆரியன்.
சரளா கூடச் சக்ரவர்த்தி அவர்களை மெதுவாகத்தானே வர சொன்னார், இப்போதே போக வேண்டுமா என்று கேட்க… ஆரியன் தான், “நம்ம மாமா வீடு தானே மா… அங்க போய் எல்லோருமா பேசிட்டு இருக்கலாம்.” என்றிருந்தான். பின்னாடியே வந்தது நல்லதாகப் போய்விட்டது என இப்போது நினைத்தார்.
இன்னும் நேரம் தாழ்த்தி இருந்தால்…. என்ன வேண்டுமானாலும் ஆகி இருக்கலாம். ஆரியனும் அவினாஷும் இருந்ததினால் தான், உடனே மருத்துவமனை கொண்டு வந்து அடுத்தடுத்து வேலைகள் உடனே நடந்தது.
ஆம்புலன்ஸில் சக்ரவர்த்தியையும் இந்த மருத்துவமனைக்கே கொண்டு வந்தனர். சக்ரவர்த்திக்குத் தலையில் காயத்திற்குத் தையல் போட்டு கட்டுப் போட்டிருந்தனர். அதோடு கையிலும் கால் முட்டியிலும் அடிபட்டிருந்தது.
அவர் இந்துஜாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல… “அவங்களுக்கு ட்ரீட்மென்ட் போய்ட்டு இருக்கு. இப்போ உடனே பார்க்க முடியாது.” என்றான் ஆரியன்.
“நீ என்கிட்ட இருந்து எதாவது மறைக்கிறியா… நான் அவளைப் பார்த்தா தான் நம்புவேன்.” என்றார் சக்ரவர்த்தி. அதற்குள் சம்யுக்தா ஓடி வந்து, “அப்பா அம்மாவுக்கு வந்ததுக்கு இப்போ பரவாயில்லைன்னு டாக்டர் சொன்னாங்கப்பா.” என்றதும்தான் சக்ரவர்த்தி அமைதியானார்.
அவரையும் அங்கேயே சேர்த்தனர். ஆரியன் அவருக்கு முழுப் பரிசோதனையும் செய்து விடும்படி சொன்னான். உடன் சம்யுக்தா இருந்து பார்த்துகொள்ள… சக்ரவர்த்தி மகள் முன்பு தனது கவலையைக் காட்ட முடியாமல் அமைதியாகி போனார். மகள் தனக்காகத்தான் தைரியமாக இருப்பது போலக் காட்டிக் கொள்கிறாள் என அவருக்குத் தெரியவில்லை.
இரவு ஒன்பது மணிப்போலப் பக்கத்து வீட்டு பெண்மணி வாணி, “சம்யுக்தா, அம்மா கோவில்ல இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கரங்களும் வருவாங்க சொன்னாங்களே. ஆனா யாரையும் காணோம். அம்மா போனுக்குப் போட்டா போகவில்லை.” என்றதும், சம்யுக்தா அழுதபடி நடந்ததைச் சொல்ல…
“ஐயோ நான் உடனே வரேன்.” என்றார். அவரிடமும் ஒரு சாவி இருக்கும். சம்யுக்தா அவர் வரும் போது தனக்கு உடைகள் எடுத்து வர சொன்னாள். அவள் இன்னும் பட்டுப் புடவையிலேயே இருந்தாள். அவர் சரி என்று வைத்தார்.
வாணி அடுத்து ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டார். எதற்கும் இருக்கட்டும் என்று வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்திருந்தார். அவரிடம் இருந்து உடைகளை வாங்கிச் சம்யுக்தா மாற்றிக் கொண்டாள். அவரும் மேலும் ஒரு மணி நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு, அவர்களை உண்ண சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
விபத்து என்பதால் மருத்துவமனையில் இருந்து தகவல் கொடுத்திருக்க… காவல் துறையினர் வந்து விசாரிக்க… சடகோப்பன் அங்கே தான் விசாரித்த வரை சொன்னார். “ஒரு டெம்போ லாரி இடிச்சிட்டு நிற்காம போயிடுச்சுன்னு, அங்க இருக்கிறவங்க சொன்னங்க.” என்றார்.
இவர்களும் விபத்து என்றுதான் நம்பிக் கொண்டு இருந்தனர். அப்போது இருந்த நிலையில் அவர்களுக்கு வேறு மாதிரி யோசிக்கத் தோன்றவில்லை. ஆனால் அப்போது வந்த ஆரியன், “எங்க மாமாவுக்கு ரெண்டு பொண்டாட்டி சார். எங்க மாமா கொஞ்ச நாளாவே முதல் மனைவியோட பிறந்த வீட்டு ஆளுங்க எதுவும் பண்ணிடுவாங்களோன்னு சந்தேகப்பட்டார். எனக்கும் முழுசா தெரியாது. எதுக்கும் விசாரியுங்க.” என்றான்.
இது சொன்னால் போதாதா போலீசாருக்கு. அதுவும் தமிழகப் போலீசார் துப்புத் துலக்குவதில் மிகவும் கெட்டிக்காரர்கள்.
சடகோப்பன் விபத்து நடந்ததை ஊருக்கு அழைத்துத் தனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி… பக்குவமாக அங்கே வீட்டில் தகவல் சொல்ல சொல்லி இருந்தார்.
விஷயம் தெரிந்ததும் ஞானம் சரளாவை அழைக்க… “அம்மா அண்ணனுக்கு ஒன்னும் இல்லை. அண்ணிதான் தெரியலை.” என்றார் கவலையாக.