ஸ்ரீநிதிக்கு வெளிநாடு உள்நாடு இரண்டில் இருந்துமே வரன்கள் வந்தருக்க… இங்கேயே என்றால்… சந்திரா மகளுக்கு எதாவது சொல்லிக் கொடுத்து அவளையும் கெடுத்து கொண்டிருப்பார் என்று நினைத்து சக்ரவர்த்தி வெளிநாட்டு சம்பந்ததிற்கே ஒத்துக் கொண்டிருந்தார்.
இப்போது எழுபது சவரனும், வீட்டுக்கு தேவையான சீர் வரிசை சாமான்கள் அனைத்தும் கொடுத்து திருமணத்தையும் நடத்தி வைப்பதாகவும், பின்னர் ஸ்ரீநிதி பேரில் இன்னும் முப்பது சவரன் நகைகளுக்கு உரிய மதிப்பில் இடம் கொடுப்பதாகவும் சக்ரவர்த்திச் சொல்லி இருந்தார். அதற்கு மேலும் சொத்துக் கொடுப்பதை பற்றி இப்போதே சொல்ல வேண்டியது அவசியம் இல்லை என்று நினைத்தார்.
ஸ்ரீநிதி திருமணத்தை மதுரையில் பெரிய மண்டபத்தில் வைக்க வேண்டும் என்றாள்…. அதற்கும் சக்ரவர்த்தி ஒத்துக் கொண்டார்.
சத்திரா நகை போதாது இன்னும் போட வேண்டும் என்றார்.
“அதுதான் சொத்து வேற கொடுக்கிறேனே… அதோட நீ வீட்டுச் செலவு பணத்தில வாங்கின நகை எல்லாம் என் பணம் தானே… அதை நாளைக்கு நீ எப்படியும் உன் பொண்ணுக்கு தானே கொடுப்ப… அதுவும் என் கணக்கு தான்.” என முடித்து விட்டார்.
இந்த மகளுக்கு எழுபது சவரன் என்றால்… அதையே அந்த மகளுக்கும் போடுவார் தானே… அவள் மட்டும் இல்லையென்றால்… மொத்தமும் தன் மகளுக்கே வந்திருக்குமே எனச் சந்திராவுக்கு ரொம்பவும் தோன்ற ஆரம்பித்திருந்தது. அதைத் தன் சகோதரர்களிடம் சொல்லி புலம்பவும் செய்தார்.
இவளுங்களை முதல்ல விரட்டி விடணும் என்றார்.
சும்மா போ என்றால் போய் விடுவார்களா என தனசேகர் நினைத்துக் கொண்டார்.
சந்திராவின் நினைப்பெல்லாம் எப்படியாவது இந்துஜாவையும், சம்யுக்தாவையும் விரட்டி அடிக்க வேண்டும் என்பதே… பொன் முட்டையிடம் வாத்தாகக் கணவர் இருந்து சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். அதைத் தானும் தன் பிள்ளைகள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருந்தது. ஆனால் தனசேகரின் திட்டமே வேறு… சக்ரவர்த்தி இருந்தால்… எப்படி இவர்களால் சொத்தை அடிக்க முடியும்.
சக்ரவர்த்திக்கு எதாவது என்றால்… இந்துஜாவையும், சம்யுக்தாவையும் விரட்டுவது எளிது. தங்கையும் அவள் பிள்ளைகளையும் எளிதில் ஏமாற்றிப் பாதிக்குப் பாதிச் சொத்துக்களை ஆட்டையைப் போட்டு விடலாம் என்பது அவரது எண்ணம். அவர் முத்துக்குமாரையும் கூட்டு சேர்க்கவே முயன்றார். ஆனால் அவன், “சந்திரா அக்கா வந்து என் வீட்ல உட்கார்ந்துக்காம இருந்தாலே போதும். எனக்கு அவங்க சொத்தெல்லாம் வேண்டாம்.” என்று சொல்லி விட்டான்.
இப்போது தனசேகர் தனியே திட்டமிடும்படி ஆனது.
ஆரியன் கேட்டதைப் பற்றிச் சொல்லி விடுவோமா எனச் சம்யுக்தா நினைத்து தன் அப்பாவிடம் செல்பவள், ஆனால் சொல்லாமலே திரும்பி வருவாள்.
ஒருநாள் சக்ரவர்த்திச் சம்யுக்தாவுக்கும் மாப்பிள்ளை தயார். ஆனால் ஸ்ரீநிதியின் திருமணம் முடியட்டும் என்றார். அவர் மாப்பிள்ளை யாரென்று சொல்லவே இல்லை. அன்றிலிருந்து சம்யுக்தாவுக்கு இன்னும் தவிப்பு அதிகமானது. அப்பா வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டார். இப்போது போய் எப்படிச் சொல்வது எனத் தவிப்பிலேயே இருந்தாள்.
அதோடு சக்ரவர்த்தி வேறு இப்போது சில நாட்களாக மகிழ்ச்சியாக இருக்க… அவளுக்குத் தந்தையின் மகிழ்ச்சியைக் கெடுக்கவும் மனம் இல்லை. இவன் தன்னைக் கேட்டதற்குப் பதில் அப்பாவிடமே பேசி இருக்கலாமே என ஆரியன் மீது வேறு கோபமாக வந்தது.
சம்யுக்தா அவினாஷை பார்க்க வேண்டும் எனச் சொல்லி இருக்க… அவன் இவள் கண்ணில் படாமல் இருந்தான். பார்த்தால் கண்டிப்பாக அவளிடம் உளறி விடுவோம் என்று தெரியும், பிறகு ஆரியனுக்குக் கோபம் வரும், அதனால் அண்ணனே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விட்டான்.
ஸ்ரீநிதிக்கு அவர்கள் ஊரில் மண்டபத்தில் வைத்து, திருமண நிச்சயம் நடந்தது. வெளிநாட்டில் இருந்ததால் மாப்பிள்ளை வரவில்லை… திருமணதிற்குத் தான் வருவதாக இருந்தது. திருமணம் நான்கு மாதங்கள் சென்று வைத்திருந்தனர்.
மாப்பிள்ளை வீட்டினருக்கு சக்ரவர்த்திக்கு இன்னொரு குடும்பம் இருப்பது தெரியும். அவர்கள் சக்ரவர்த்தியைப் பற்றிக் கேள்விபட்டவரை நல்லவிதமாகவே இருக்க… அவர் பெண்ணை எடுக்கச் சம்மதித்து இருந்தனர்.
ஆரியன் சக்ரவர்த்தியுடன் நின்று நிச்சய வேலை அனைத்தும் பார்த்துக் கொண்டான்.
நிச்சய்திற்கு வந்திருந்த தனசேகர் ஆரியனைப் பார்த்து விட்டு நல்லவேளை இவனை மாப்பிள்ளையா கொண்டு வரலை என நினைத்துக் கொண்டார். அன்னைக்கே எப்படிப் பேசினான். இவன் மட்டும் மாப்பிள்ளையா வந்திருந்தா அவ்வளவு தான் என நினைத்துக் கொண்டார்.
அவன்தான் சக்ரவர்த்தியின் செல்ல மகளைத் திருமணம் செய்யப் போகிறான் என அவருக்குத் தெரியவில்லை. உரிமை இல்லாத போதே அவ்வளவு பேசினான். இப்போது உரிமையும் வந்துவிட்டால் எப்படிப் பேசுவான். அவன்தான் தங்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டப் போவது என்று தெரியாமல் தனசேகர் மகிழ்ச்சியாக இருந்தார்.
சரளாவின் குடும்பம் கடைசி வரை இருந்தது. அவினாஷ் மட்டும் வரவில்லை. திருமணதிற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டான்.
ஸ்ரீநிதி இறுதியாகக் குடும்பப்படம் எடுக்கும் போது ஆரியனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் முகத்தில் சிறிதாவது ஏமாற்றமோ… தன்னை இழந்து விட்ட வருத்தமோ தெரிகிறதா என்று பார்க்க… அப்படி எதுவும் தெரியவில்லை. ஆரியன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.
சக்ரவர்த்தியும் சரளாவும் இன்னும் தங்கள் அம்மாவிடமே ஆரியன் சம்யுக்தா திருமணம் பற்றிச் சொல்லவில்லை. வயதானவர் என்பதால் யோசிக்காமல் பேசி விடுவார் ஞானம்.
சரளா குழம்பு வைக்கும் போது, அம்மா அப்பாவுக்கும் சேர்த்து வைத்து யாரிடமாவது கொடுத்து விடுவார். வாரத்தில் ஒருநாள் மாவு அரைத்து கொடுத்து விடுவார். மற்ற வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதோடு சக்ரவர்வர்த்தியும் ஊரில் இருக்கும் போது, தினமுமே பெற்றோரை வந்து பார்த்து தேவையானது எல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவார். அதனால் ஞானமும் அவர் கணவரும் அதிகச் சிரமப்படாமல் இருந்தனர்.
சம்யுக்தா தனக்குப் பார்த்த மாப்பிள்ளை யார் என்று தெரிந்து கொள்வதில் எல்லாம் அக்கறை காட்டவில்லை. இந்துஜாவுக்குக் கணவர் ஒன்றும் அப்படி யாரையும் குறையாகப் பார்த்திருக்க மாட்டார் என்று நம்பிக்கை. அதோடு நானே நேரம் வரும் போது சொல்கிறேன் என சக்ரவர்த்திச் சொல்லி இருக்க… அதனால் இந்துஜாவும் மேலும் அதைப் பற்றிக் கேட்கவில்லை.
ஸ்ரீநிதியின் திருமணம் மதுரையில் என்பதால்… ஆரியனும் சக்ரவர்த்தியும் சேர்ந்து சென்று சில வேலைகளை முடித்தனர். ஸ்ரீநிதியின் திருமணதிற்கு இரண்டு மாதங்கள் தான் இருந்தது.
ஆரியன் இவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான். அவன் எப்போதும் போலவே இருக்க… சம்யுக்தாவுக்குதான் குழப்பம் எல்லாம். இவன் தன்னிடம் எதையும் சொல்லாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. மனம் அலைபாயமளாவது இருந்திருக்கும்.
அவன் சாதாரணமாக இருக்க… தான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் எனத் தன்னையே கடிந்து கொண்டவள், இன்னுமே தனக்குள் இறுகிப் போனாள்.
அவளைப் பார்த்ததும் ஆரியனுக்கே கஷ்ட்டமாகத்தான் இருந்தது. அன்னைக்குப் பெரிய இவளாட்டம் பேசினா…. இப்போ இப்படி இருக்காளே…. சொல்லி விடலாமா என்று கூட நினைத்தான்.
அவனும் சம்யுக்தாவும் மட்டும் ஹாலில் இருக்கும் போது, “என்ன மாப்பிள்ளை எல்லாம் பார்த்தாச்சு போலருக்கு.” என அவன் கேட்க….
“ம்ம்… எனக்குத் தெரியாது. என்கிட்டே யாரும் சொல்லலை.” என்றாள் கடுப்பாக. ஆரியன் சிரித்துக் கொண்டான்.
அப்போது சக்ரவர்த்தி வர… “மாமா சம்யுக்தா இன்னும் மாபிள்ளையைப் பார்க்கலையா? அடுத்த வாரம் மீனாட்சி அம்மன் கோவில்ல வச்சு அவங்களை வந்து பொண்ணு பார்த்திட்டுப் போகச் சொல்வோம்.” என்றதும்,
“அப்படியா சொல்ற… சரி.” என்றார் சக்ரவர்த்தி.
எப்படி இழுத்து விடுறான் பாரு என நினைத்தவள் அவனைப் பார்த்து முறைக்க, “அத்தை, அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நீங்களும் மாமாவும் சம்யுக்தாவோட கோவிலுக்கு வந்திடுங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களையும் அங்க வந்து பார்க்க சொல்லிடலாம்.” என…
“ஆமாம் கோவில்ல வச்சுப் பார்க்கிறது தான் நல்லது.” என்றார் இந்துஜாவும்.
அவன் செய்யும் ஏற்பாடுகளை எல்லாம் பார்த்து, இவன் உண்மையிலேயே தன்னிடம் திருமணதிற்குக் கேட்டானா…. இல்லையென்றால் சும்மா தான் என்ன சொல்கிறோம் எனத் தெரிந்துகொள்ள அப்படிக் கேட்டானா என்ற குழப்பம் சம்யுக்தாவுக்கே வந்துவிட்டிருந்தது.
ஒருவேளை யோசிக்காமல் தன்னிடம் அப்படிக் கேட்டுவிட்டு, பிறகு அவனே வேண்டாம் என நினைத்து விட்டானோ என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.
ஆரியன் கிளம்பும் போது, சம்யுக்தா வெளியே வரை வந்தவள், “அடுத்த வாரம் நீங்க கோவிலுக்கு வராதீங்க. என்னைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க.” என்றாள்.
அவன் முன்னிலையில், வேறு யாரோ வந்து தன்னைப் பெண் பார்ப்பது பிடிக்காமல் தானே சொல்கிறாள் என நினைத்தவனுக்கு மனதிற்குள் சாரல் அடிக்க…
“உனக்கும் பாதிப்பு இருக்கு தான… இப்பவும் ஒன்னும் இல்லை. அன்னைக்கு நான் சொன்னதுக்கு ஓகே சொல்லு. நான் மாமாகிட்ட பேசுறேன்.” என்றான்.
“எனக்கு என்ன கிடைச்சிருக்கோ அதை வச்சு இத்தனை நாள் நான் சந்தோஷமா தான் இருந்தேன். இப்பவும் அப்படியே இருந்திட்டு போறேன். எங்க அப்பாவை எல்லாம் என்னால கஷ்ட்டபடுத்த முடியாது. நீங்க விலகி இருங்க போதும்.” எனப் பொரிந்தவள், உள்ளே சென்று விட…
அப்போ இன்னும் ஒரு வாரம் இப்படியே அவஸ்தைப்படு என நினைத்தவன், கிளம்பி சென்று விட்டான்.
இந்துஜா அடுத்த வாரம் வரும் பெண் பார்க்கும் நிகழ்வுக்குத் திட்டமிட ஆரம்பித்தார்.
“நீ கல்யாணத்துக்கும் சேர்த்து கூடவே எடு.” என்ற சக்ரவர்த்தி,
“பெண் பார்க்க வர்றது ஒரு சம்ப்ரதாயத்துக்குத் தான். அவங்களுக்கு ஏற்கனவே நம்ம சம்யுக்தாவை பிடிச்சிருக்கு. அதனால கோவில்ல வச்சுப் பெண் பார்த்திட்டு, நாம அங்கேயே உறுதி செஞ்சிட்டு, அவங்களை இங்க வீட்டுக்கு கூடிட்டு வரலாம். அதனால நைட் சாப்பாடு ரெடி பண்ணனும்.” என்ற கணவரை ஆச்சர்யமாகப் பார்த்த இந்துஜா, “மாப்பிள்ளை வீடு ரொம்பத் தெரிஞ்சவங்களா?” என்று கேட்க…
“ஆமாம்.” என்றார்.
“உங்க மேல இருந்த நம்பிக்கையில… நான் மாப்பிள்ளை யாருன்னு கூடக் கேட்கலை. ஆனா ஒருவேளை எனக்கோ சம்யுக்தாவுக்கோ பிடிக்கலைனா… நீங்க எங்க விருப்பத்துக்கும் மதிப்புக் கொடுக்கணும். நீங்க நல்ல இடம் தான் பார்த்திருப்பீங்க. ஆனா உங்க கண்ணுல படாததும் இருக்கலாம்.” என இந்துஜா சொன்னதற்கு,
தனக்கு யாரை தெரியும் என யோசித்த இந்துஜாவுக்கு ஆரியனும் அவினாஷுமே நினைவுக்கு வந்தனர். சரி நேரிலேயே பார்ப்போம் என விட்டு விட்டார்.
சம்யுக்தாவுக்குக் கல்லூரி இருக்க… அதனால் தன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் தோழியை அழைத்துக் கொண்டு சென்று இந்துஜா மகளுக்குச் சில பட்டுப் புடவைகளும், வெளியே அணிந்து செல்லும் வகையில் விலை அதிகமான டிசைனர் புடவைகள் சிலவும் வாங்கி வந்தார். அதற்கே காலையில் சென்றவர், கடைக்கடையாக ஏறி இறங்கி பார்த்து வாங்கிக் கொண்டு மாலைதான் வீடு திரும்பினார்.
“காலையிலிருந்து சாயங்கலாம் வரை இவ்வளவு தான் வாங்கினியா?” என்ற கணவரிடம்,
“ஒரே நேரத்தில வாங்கினா… நல்லா இருக்கா இல்லையான்னு தெரியாமலே… அலுப்புல கண்ணுல பட்டதைத் தூக்கிட்டு வந்திடுவோம். அதனால அப்போ அப்போ கொஞ்சமா வாங்குவோம். இன்னும் ஒரு பத்து பட்டு சேலை மட்டும் எடுப்போம் போதும். பிறகு தீபாவளி பொங்கல்ன்னு வாங்கித்தானே கொடுக்கப் போறோம். உடுமாத்துக்குச் சுடிதார் ஒரு பத்து எடுப்போம். அதே போல வெளிய கட்டிட்டு போற சாதா சேலை ஒரு பத்து போதும்.” என்றார்.
மகளுக்கு என்று சந்திரா இழுத்து வைக்கும் செலவுகளையும்…. அதே இந்துஜா திட்டமிட்டு நிதானமாகச் செயல்படுதவையும், சக்ரவர்த்தி மனதிற்குள் ஒப்பிட்டு பார்த்தார்.
சந்திரா அங்கே மகளின் திருமணதிற்கு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார். அதில் எத்தனை ஸ்ரீநிதிக்கு பிடிக்கும் என்றே தெரியவில்லை. அவள் அதில் எத்தனையைக் கட்டாமல் ஒதுக்கப் போகிறாளோ… ஸ்ரீநிதிக்கு பிடிக்வில்லை என்றால் அவள் உடுத்தவே மாட்டாள்.
மாலை கல்லூரியில் இருந்து வந்து பார்த்த சம்யுக்தாவும் புடவைகள் நன்றாக இருப்பதாகச் சொன்னாள்.
இரண்டு சேலைகளுக்கு மட்டும் முதலில் இந்துஜாவே ரவிக்கை தைக்க உட்கார்ந்தார்.