இப்போதும் சகோதரியின் மீது இருக்கும் அக்கரையில் பேசவில்லை. சக்ரவர்த்தி இப்போது நிறையச் சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்தார். சகோதரியின் மூலமாக அதை அடையவே… திட்டம் போட்டிருந்தனர்.
அவினாஷ் இப்போது கல்லூரியின் இறுதி செமஸ்டரில் இருக்க… அவனுக்குச் சென்னையில் ஒரு கம்பெனியில் ஆரியன் ப்ராஜக்ட் வாங்கிக் கொடுத்திருக்க… அவன் சென்னையில் இருந்தான். முதல் சில வருடங்கள் வெளியே வேறு நிறுவனங்களில் வேலைப் பார்த்து விட்டு, பிறகு தங்கள் நிறுவனத்திற்கு வரும்படி சொல்லி இருந்தான்.
சக்ரவர்த்தி ஆரியனை அவர்கள் வீட்டிற்கு ஒரு வார இறுதியில் அழைத்திருந்தார். சம்யுக்தாவையும் பார்க்கலாம் என்ற சந்தோஷத்தில் ஆரியன் கிளம்பி சென்றான்.
ஆரியன் பதினோரு மணி போல வந்து விட்டான். சக்ரவர்த்தி வீட்டில் தான் இருந்தார். சம்யுக்தா தலைக்குக் குளித்து விட்டுச் சுடிதாரில் புது மலர் போல இருக்க… ஆரியன் அவளைதான் அடிக்கடி பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
இவனிடம் மனதை விட்டுவிட்டு யார் அவதி படுவது என்ற எண்ணத்தில் சம்யுக்தா அவனைப் பார்ப்பதையும் தவிர்த்தாள். வந்தபோது வாங்க என்று கேட்டதோடு சரி.
சம்யுக்தாவுக்கு இன்னும் ஆரியனுக்குத் தன்னைப் பிடிக்கும். அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறான் என்பது தெரியாது.
சிறிது நேரத்தில் வக்கீல் வர…. பிறகுதான் ஆரியனுக்கு மாமா எதற்குத் தன்னை வர சொன்னார் என்பது புரிந்தது. மகன் மகள்கள் என யாருக்கு எந்தெந்த சொத்துக்கள் சேர வேண்டும் என்பதை இப்போதே உயில் போலச் சக்ரவர்த்தி எழுதி வைத்து விட்டார். தனக்குப் பின்னால் தன் மனைவிகள் இருவருக்கும் தனித்தனியாகச் சொத்துக்கள் சிலதும் எழுதி வைத்தார். அதை அவர்கள் அனுபவிக்கலாம் பிறகு அவர்கள் வாரிசுகளுக்குச் சேரும்படி செய்திருதார். அதற்குச் சாட்சி கையெழுத்து போடவே ஆரியனையும், அவர் நண்பரையும் வர சொல்லி இருந்தார்.
வக்கீலும் அவர் நண்பரும் கிளம்பி சென்றதும், இந்தப் பத்திரமெல்லாம் மதுரையில் இருக்கும் பேங்க் லாக்கரில் இருக்கும் என்ற விவரத்தை ஆரியனிடமும் இந்துஜாவிடமும் தெரிவித்தார்.
“ஏன் இதெல்லாம் இப்ப பண்றீங்க? இப்போ அதுக்கு என்ன அவசியம்?” என்ற மனைவியிடம்,
“சும்மா ஒரு பாதுகாப்புக்கு தான். அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரியாது. இப்பவே சிலது செய்து வச்சிடுறது நல்லதுன்னு தோணுச்சு.”
“எனக்கு எதுவும் வேண்டாம். இருக்க ஒரு வீடு போதும். உங்க பொண்ணுக்கு நல்ல இடத்தில கல்யாணம் மட்டும் பண்ணி வச்சிடுங்க. சொத்தெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.” என்றார் இந்துஜா.
“எனக்குத் தெரியும் என்ன பண்ணனும்னு, நீ பேசாம இரு.” என்றார் சக்ரவர்த்தி.
இதையெல்லாம் பார்த்துச் சம்யுக்தா கொஞ்சம் மிரண்டு போனாள். “அவங்களுக்கே எல்லாம் கொடுத்திடுங்கப்பா… எங்களுக்கு நீங்க போதும்.” என்றாள்.
“சரிம்மா நான் பார்த்துக்கிறேன்.” என்றார்.
“ஸ்ரீநிதிக்கு ஒரு நல்ல இடம் வந்திருக்கு, சம்யுக்தாவுக்கும் மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருக்கேன். நல்ல இடம் வந்தா… ரெண்டு பேருக்கும் அடுத்தடுத்துக் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்க்கிறேன்.” எனச் சக்ரவர்த்திச் சொல்ல… ஆரியன் தான் அதிர்ச்சியானான். சம்யுக்தா அமைதியாக இருந்தாள்.
படிக்க வேண்டும் என்று சொல்லி மறுப்பாள் என்று பார்த்தால்…. அவள் எதுவும் சொல்லவில்லை.
இந்துஜா இன்று பெரிய விருந்தே தயார் செய்திருந்தார். ஆரியனுக்குத் தான் உணவு செல்லவில்லை.
“அவனுங்க சரியான கிறுக்கனுங்க மாப்பிள்ளை. என்ன செய்வாங்கன்னு தெரியாது. திடிர்ன்னு எனக்கு எதாவது ஒன்னுன்னா…இந்துஜாவையும் சம்யுக்தாவையும் ஒன்னும் கொடுக்காம விரட்டத்தான் பார்ப்பாங்க.”
“உனக்கு எல்லாம் தெரியணும். அதுதான் உன்னை வர சொன்னேன்.” என்றார். எனக்குப் பின் என் மனைவியையும் மகளையும் பார்த்துகொள் என அவர் சொல்வது புரியாமல் இல்லை. ரொம்ப வருத்தமாக கூட இருந்தது. ஆனால் அவர் பயம் நியாமானது தான்.
“மாமா அவங்க எதுவும் செய்வாங்கன்னு நினைக்கிறீங்களா? அப்படி இருந்தா நாம ஏன் முந்திக்கக் கூடாது.” என ஆரியன் கேட்க….
“அதுக்குதான் என் பொண்ணுங்களுக்குக் கல்யாணம் பண்ண பார்க்கிறேன். முடிஞ்சதும், முதல் வேலை அதுதான். எனக்கு அதுக்குப் பிறகு என்ன இருக்கு. அவனுங்களை வெட்டிட்டு ஜெயிலுக்குக் கூடப் போவேன்.” என்றார்.
“ஒரு நாள் அவன்களை வர வச்சு, என்ன முடிவுன்னு பஞ்சாயத்துல பேசி முடிச்சிடுவோம். அதுக்குச் சரி வரலைனா பிறகு என்னன்னு பார்ப்போம்.”
“நீ சொல்றது சரிதான் மாப்பிள்ளை.”
“சம்யுக்தாவுக்கு இப்பவே கல்யாணம் பண்ணனுமா? படித்து முடிகட்டுமே மாமா…” என்றதற்கு, அவளையும் ஒரு நல்லவன் கையில பிடிச்சு கொடுத்திட்டா… எனக்கு நிம்மதியா இருக்கும். அதோட அவளுக்குப் பக்கத்தில தான் மாப்பிள்ளை பார்க்க போறேன். கல்யாணத்துக்கு அப்புறம் படிக்கட்டும்.” என்றார்.
“நீ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு.” என்றவர் கீழே செல்ல… ஆரியன் சம்யுக்தாவுக்குக் கைபேசியில் மாடிக்கு வா என்று தகவல் அனுப்ப…. அவளும் வந்தாள்.
“ம்ம்…. எனக்கு எங்க அப்பா நிம்மதியா இருக்கணும். அதுக்கு நான் எதுனாலும் செய்வேன். ஊர்ல அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு அப்புறம் அவர் சரியாவே இல்லை.”
“என்னால இன்னும் அவர் நிம்மதி கெட வேண்டாம். எனக்குக் கல்யாணம் பண்றது தான் அவருக்கு நிம்மதினா… நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றாள்.
“உங்க அப்பாவுக்காகச் சொல்றியா… இல்லைனா கல்யாணம் பண்ணிகிட்டா படிக்க வேண்டாம்னு சொல்றியா?” என அவன் கேட்க….
“அது உங்க புத்தி.” என்றாள் பட்டென்று.
“அப்படிக் கல்யாணம் பண்றதுன்னா என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ.” எனச் சொல்லியே இருந்தான்.
“என்ன திடிர்ன்னு இப்படிக் கேட்கிறீங்க?”
“இல்லை… உங்க அப்பா உன் பேர்ல நிறையச் சொத்து வச்சிருக்கார். இந்த வீடும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்க அம்மா வேற நல்லா சமைக்கிறாங்களா…. மாப்பிள்ளைனா இன்னும் கவனிப்பாங்களே… அதனால தான்.” என அவன் சொன்ன காரணங்களைக் கேட்டு சம்யுக்தா கொலை வெறியாக….
“வேண்டாம், நான் உங்களைக் கல்யாணம் பண்ணிகிட்டா… திரும்ப உங்க ஊருக்கு வர்ற மாதிரி இருக்கும். அங்க எல்லோரையும் பார்க்கிற மாதிரி இருக்கும். அவங்களுக்கு என்னைப் பார்த்தா கோபம் வரும். அதனால எங்க அப்பாவோட நிம்மதி போகும்.” என்றாள்.
“உங்க அப்பாவை பத்தி மட்டும் தான் யோசிப்பியா… என்னைப் பத்தி யோசிக்க மாட்டியா?”
“உங்களுக்கு என்ன? என்னை விட நல்ல பெண்ணே உங்களுக்குக் கிடைக்கும். பேசாம ஸ்ரீநிதி அக்காவை கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தமா இருக்கும். நீங்க அவங்களைத் தான கல்யாணம் பண்றதா இருந்தீங்க.”
“வீட்ல சொன்னாங்க யோசிச்சேன். ஆனா அது ஒத்து வராதுன்னு தோணுச்சு விட்டுட்டேன். இப்போ எதுக்கு அதைக் கொண்டு வர…. நான் சொன்னதுக்குப் பதில் சொல்லு.”
“வேண்டாம் திரும்ப என்னால புதுப் பிரச்சனை வேண்டாம் விட்டுடுங்க.”
“இப்போ என்னை உன் கையைப் பிடிச்சா இழுத்திட்டு இருக்கேன், விட்டுடுங்கலாம்.”
“திடிர்ன்னு ஏன் இப்படிக் கேட்கிறீங்க? உங்களுக்கு முன்னாடி எல்லாம் என்னைப் பிடிக்கவே பிடிக்காது.”
“நீ என்னை நம்ப வேண்டாம், உன் பிரண்டை நம்புவ தான…. நீ அவினாஷ்கிட்ட கேளு… நீ திருவிழாவுக்கு எங்க வீட்டுக்கு வந்த போதே…. உன்னை எனக்குப் பிடிக்கும்ன்னு அவனுக்குத் தெரியும். நான்தான் நீ படிச்சு முடிகட்டும்னு இருந்தேன்.”
“எனக்கு முடிவெடுக்கத் தெரியலை…. என்னை விட்டுடுங்க.” என்றவளை பார்த்து முறைத்தவன்,
சம்யுக்தா அவனைத் திரும்பி திரும்பி பார்த்தபடி கீழே சென்றாள்.
முதலில் தனது பெற்றோரிடம் பேசிவிட்டு பிறகு அவர்களை விட்டே தனது மாமாவிடம் பேசிக் கொள்ளலாம் என நினைத்தவன், அப்போதே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
ஆரியன் சொல்வதற்கு முன்பு, அவினாஷ் அவர்களின் பெற்றோரிடத்தில் ஆரியன் சம்யுக்தாவை விரும்புவதைப் பற்றிச் சொல்லி விட்டான்.
“எனக்கும் ஆசை இருந்தது டா… ஆனா உன் அண்ணன் ரொம்ப நியாயம், நீதின்னு பேசுவானே… சம்யுக்தாவைக் கல்யாணம் பண்ண என்ன சொல்வானோன்னு நினைச்சேன்.” என சரளா சொல்ல….
“எப்படியோ உன் அண்ணன் பொண்ணே உனக்கு மருமகளா வரப் போறா… ஆனா இந்தமுறை தான் எனக்குப் பிடிச்ச மருமகள்.” எனச் சடகோப்பனும் ஆதரவு தெரிவிக்க……
“உங்க பையன் கட்டினா மாமன் பெண்கள்ள தான் ஒன்னைக் கட்டணும்னு இருந்தான் போல….” என அவினாஷ் சொல்ல… பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் புன்னகைத்தனர்.
ஆரியன் அங்கிருந்து நேராகக் கிளம்பி இங்கே தான் வந்தான். அவன் விருப்பத்தைச் சொல்ல…. முதலில் பெற்றோருக்கு விருப்பம் இல்லாதது போலக் காட்டிக்கொள்ள…
“ஏன் அவளும் மாமா பொண்ணு தான். ஸ்ரீநிதி மட்டும் சரின்னு சொன்னீங்க. சம்யுக்தாவுக்கு மட்டும் என்ன குறையாம்? அவ இங்க வந்திருந்த போது எல்லாம் நல்லாத்தானே இருந்தீங்க. இப்ப மட்டும் என்ன?” என்றவன்,
“நீங்களும் ஒத்துக்க மாட்டேங்கிறீங்க. சம்யுக்தாவும் வேண்டாம்னு சொல்றா…. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது.” என ஆரியன் நொந்து போய்ப் பேச….
“என் அவளுக்கு என்ன?” என அவினாஷ் கேட்க….
அவள் சொன்ன காரணத்தைச் சொன்னவன், “ஆனா அவ மாமா சொன்னா ஒத்துக்குவா…” என்றான்.
“நம்ம வீட்லயும் ஓகே தான். சும்மா உன்னை டென்ஷன் பண்ணி பார்த்தோம்.” என்ற தம்பியை ஆரியன் அடிக்கத் துரத்தினான்.
“உங்களுக்கு எதுல விளையாடுறதுன்னு இல்லையா…”
“சரி உங்க மாமாகிட்ட நான் இன்னைக்கே பேசுறேன்.” என்ற சரளா, அதே போல நாள் கிழமை எல்லாம் பார்த்து விட்டு, அண்ணனுக்கு அழைத்துப் பெண் கேட்க…
“எனக்கும் ஆசை இருந்தது சரளா…. ஆனா நீங்க என்ன நினைப்பீங்களோன்னு தான் கேட்கலை. எனக்கு ஆரியனை விட மனசே இல்லை தெரியுமா? இப்போ தான் நிம்மதியா இருக்கு.” என்றார் சக்ரவர்த்தி.
சரளாவிடம் இருந்து கைபேசியை வாங்கிய ஆரியன், ”மாமா இப்போ யார்கிட்டையும் சொல்ல வேண்டாம். சம்யுக்தாவுக்குக் கூடத் தெரிய வேண்டாம். கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னாடி சொல்லிக்கலாம்.”
“முதல்ல ஸ்ரீநிதிக்கு நிச்சயம் மட்டும் செய்யுங்க. கல்யாணம் நாலு மாசம் கழிச்சு வச்சுக்கலாம். அதுக்குள்ள சம்யுக்தாவும் மூணாவது வருஷம் வந்திடுவா…” என ஆரியன் சொன்னது, சக்ரவர்த்திக்கும் சரி என்று தோன்ற…. அப்படியே செய்யலாம் என்றவர் வைத்துவிட….
“ஆமாம் கல்யாணம் நெருங்கிற வரை சந்திரா அண்ணிக்கு தெரியவே கூடாது. எப்படியாவது கலைச்சு விடத்தான் பார்ப்பாங்க.” என்ற சரளா, “ஆனா எதுக்கு டா சம்யுக்தா கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்ன?” என மூத்த மகனிடம் சந்தேகம் கேட்க….
“தேவையில்லாம இவன்கிட்ட வாயை கொடுத்திட்டாளே…. இனிமே இதுக்கு வேற வச்சு செய்வானே…” என அவினாஷ் நினைக்க… அது புரிந்தது போல…
“நீ உன் ப்ரண்ட்கிட்ட எதாவது சொன்ன… உன்னைக் கொன்னுடுவேன்.” என ஆரியன் மிரட்ட….
“லவ்வர்ஸ் நடுவுல எல்லாம் நான் வர மாட்டேன். உன் பாடு அவ பாடு.” என்றான் அவினாஷ்.
ஆரியனே கேட்டும் மறுக்கும்படி ஆகிவிட்டதே… அப்பாவிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்க வேண்டுமோ என முதலில் நினைத்த சம்யுக்தா, பிறகு அவளே, இல்லை நாம் சொன்னதுதான் சரி. திரும்ப நம்மால் பிரச்சனை வேண்டாம் எனவும் நினைத்தாள்.
இப்படி ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையே… சம்யுக்தா கிடந்தது அல்லாடிக் கொண்டிருந்தாள்.