அன்புள்ள கண்ணாளனே

அத்தியாயம் 5

மகளைப் பார்த்தது மகிழ்ச்சி என்றாலும், அவளை விட வந்தது யார் என்று இந்துஜா பார்க்க…. ஆரியன் காரை விட்டு இறங்கி நின்றான். வேகமாக அவனிடம் சென்றவர், வாங்க என அழைக்க…. ஒரு நொடி தயங்கினாலும், ஆரியன் உள்ளே வந்தான்.

அவன் வீட்டுக்குள் வர மாட்டன் எனச் சம்யுக்தா நினைத்திருந்தாள். அவன் தனக்கு அதரவாக நின்றாலும், அவனின் மாமாவின் மறுமணத்தை அவன் ஆதரிக்கவில்லை. அவனுக்கு அதில் எதோ உடன்பாடு இல்லை என்பதைச் சம்யுக்தா புரிந்து கொண்டிருந்தாள்.

இந்துஜா அவனை வீட்டிற்குள் அழைத்து வர…. சம்யுக்தா அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது வீட்டில் சக்ரவர்த்தி இல்லை.

மாமா இல்லையா?” என ஆரியன் கேட்க….

அவங்க இப்போ மார்க்கெட்ல இருப்பாங்க. ஒன்பது மணிப் போலத்தான் வருவாங்க.” என்றார் இந்துஜா.

ஆரியன் கிளம்புவதாகச் சொல்ல… “இருங்க சாப்பிட்டு போகலாம்.” என்றார் இந்துஜா. நேரம் அப்போதே ஏழு மணியை நெருங்கி இருந்தது.

தங்கள் வீட்டுக்கு இரண்டு நாட்கள் மகளை அனுப்பி இருந்தார். தான் மறுத்து விட்டு சென்றால் நன்றாக இருக்காது என்று தோன்றியது. அதோடு மாமாவை பார்த்து பேசிவிட்டு செல்ல வேண்டியதும் இருந்ததால்… சரி என்றவன் கைப்பேசியுடன் வெளியே சென்றான்.

சின்ன வீடு தான். ஆனால் சுற்றிலும் இடம் விட்டு, முன்புறம் தோட்டம் வைத்து என வீடு பார்க்க நன்றாக இருந்தது.

ஆரியன் தனது மாமாவை கைபேசியில் அழைத்தான்.

சொல்லு ஆரியன்.”

மாமா நான் சம்யுக்தாவை இங்க விட வந்தேன்.,”

என்கிட்டே ரெண்டு நாள் இருக்கப் போறேன்னு சொன்னா… அவங்க அம்மாவை விட்டுட்டு இருக்க முடியலையோ….”

இருக்கலாம்.” என்றவன்,

நீங்க அர லேட் ஆகுமா?” என்று கேட்க…

நீ இரு நான் கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டு வைத்தார்.

அந்தத் தம்பி என்ன சாப்பிடுவாருன்னு தெரியலையே….” என இந்துஜா கேட்க…

எதுனாலும் சாப்பிடுவாங்கம்மா…. நான் அவங்க வீட்ல கூட அவங்க அது இது கேட்டுப் பார்த்தது இல்லை. அத்தையை இருக்கிறது வைங்க. வீணா வேலையை இழுத்து வச்சுக்காதீங்கன்னு தான் சொல்வாங்க.” இந்த அளவு ஆரியனைப் பற்றித் தெரிந்து வைத்திருந்த மகளை இந்துஜா ஆச்சர்யமாகப் பார்த்தார்.

இந்துஜா சப்பாத்திக்கு மாவு பிசைய… சம்யுக்தா ஆரியன் என்ன செய்கிறான் என்று பார்க்க வெளியே வந்தாள்.

உங்க வீட்டை சுத்தி காமிக்க மாட்டியா?” என ஆரியன் கேட்டடதற்கு,

இது என்ன திருமலைநாயக்கர் மஹாலா சுத்திக் காட்ட…. நின்ன இடத்தில் இருந்தே சுத்தி பார்த்தா உங்களுக்கே எல்லாம் தெரியும்.” எனச் சம்யுக்தா சொல்ல.. ஆரியன் சிரித்தான்.

மாடியில கூட ரூம் இருக்கு போலையே…”

அது என்னோட ரூம். ஆனா நான் அங்க தூங்க மாட்டேன். கீழ தான் தூங்குவேன். குளிச்சு டிரஸ் பண்ண மட்டும் போவேன்.”

ஓ… அதுதான் எங்க வீட்ல தனியா ரூம்ல போய்ப் படுக்க அவ்வளவு யோசிச்சியா…”

ம்ம்… ஆமாம்.”

மாமாவுக்குப் போன் பண்ணேன் வரேன்னு சொன்னார்.

அப்பாகிட்ட சொல்ல போறீங்களா?”

நான் சொல்லலைனாலும் வேற யார் மூலமாவது கண்டிப்பா தெரியும். அதோட அவருக்கும் அங்க என்ன நடந்ததுன்னு தெரியணும்.”

எல்லாம் என்னால தான்.”

மாமாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்னா… அப்பவே ஒழுங்கா சந்திரா அத்தைக்கு விவாகரத்து கொடுத்திட்டு பண்ணி இருக்கலாம். ஏன் அப்படிப் பண்ணாரு? எனக்குப் புரியவே இல்லை.” என்றவன், “உனக்கு எதாவது தெரியுமா?” என்றதற்கு,

எங்க அப்பா அம்மா எதுவும் தப்பா பண்ணி இருக்க மாட்டாங்க. அது மட்டும் எனக்குத் தெரியும்.” என்றாள் சம்யுக்தா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு…..

ஆரியனுக்கு அவளைப் பார்க்க சிரிப்புதான் வந்தது.

ஆமாமாம் முதல் பொண்டாட்டி இருக்கும் போது ரெண்டாவது கல்யாணம் பண்றது தப்பு இல்லைதான்.” என ஆரியனும் சொல்ல…. அவன் கேலியை உணர்ந்து சம்யுக்தா அவனை முறைக்க…

நமக்குப் பிரியமானவங்கிறதுனால அவங்க செய்யுற தப்பு இல்லைன்னு ஆகிடாது.”

தப்புதான் செஞ்சாங்கன்னு உங்களுக்கு உறுதியா தெரியுமா? தெரியாம பேசாதீங்க.”

சரி, நான் உங்க அப்பாவையே கேட்டுக்கிறேன்.” என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சக்ரவர்த்தி வந்துவிட….சம்யுக்தா தந்தைக்குக் கேட்டை திறந்து விட்டாள். காரை உள்ளே வந்து நிறுத்திவிட்டு இறங்கிய சக்ரவர்த்தி, ஆரியனைப் பார்த்து வா டா மாப்பிள்ளை என வரவேற்றவர், மகளிடம் என்ன அதுக்குள்ள அத்தை வீட்ல இருந்து வந்திட்ட?” என்றதற்கு, சம்யுக்தா பதில் சொல்லாமல் ஆரியனைப் பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

உங்ககிட்ட பேசணும் மாமா, அதுதான் உங்களுக்காகக் காத்திருந்தேன்.” என்றான். அப்போது வெளியே வந்த இந்துஜா, “வந்துடீங்களா… தம்பியை சாப்பிட கூட்டிட்டு வாங்க.” என்று சொல்ல…

சாப்பிட்டு பேசுவோம் மாப்பிள்ளை.” என்றார் சக்ரவர்த்தி.

இருவரும் உள்ளே செல்ல… இந்துஜா பரிமாறியபடி, “ஊர்ல திருவிழான்னு நாங்களும் இத்தனை நாள் விரதமா தான் இருந்தோம். இன்னைக்குத் தான் கறி எடுத்தேன்.” என்றவர், முதலில் இட்லியை பரிமாறியவர், அதற்குத் தொட்டுக்கொள்ள மட்டன் குழம்பு ஊற்றினார். அவன் மட்டன் உண்பானோ என்ற சந்தேகத்தில் தக்காளி தொக்கும் செய்திருந்தார், இட்லியை உண்டு முடித்ததும், அவர் சப்பாத்தியை பரிமாற…. ஆரியன் ரசித்து உண்டான். நம்ம ஆளு இதுல பாதிச் சமைச்சா கூடப் போதுமே என நினைத்துக் கொண்டான். உணவு அவ்வளவு சுவையாக இருந்தது.

நீங்க எது சமைச்சாலும் நல்லா இருக்குமோ அத்தை.” என அவன் சொல்ல… இந்துஜா புன்னகைக்க… ஆமாம் என்றார் சக்ரவர்த்தி.

சமையல்ன்னு இல்லை… ஒரு சின்ன வேலை செஞ்சாலும், அவ்வளவு நேர்த்தியா இருக்கும். ஏனோதானோன்னு எந்த வேலை செஞ்சும் நான் பார்த்தது இல்லை.” என்றார் மனைவியைப் பற்றிப் பெருமையாக.

அவன் பார்த்தவரை சந்திரா அத்தையை எந்த வேலையிலும் மெச்ச முடியாது. எதிலுமே அரைகுறை தான். ஆனால் தோற்றத்தில் இந்துஜா அத்தை ஒன்றும் சந்திரா அத்தை அளவுக்கு நிறமோ அழகோ அல்ல…

நாம் ஏன் இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோம் எனத் தன்னையே கடிந்து கொண்டான். இரு மனைவிகள் என்னும் போது, தானாகவே ஒப்பிட்டு பார்க்க தோன்றி விடுகிறது.

மனதை மாற்றும் பொருட்டு, அருகில் உட்கார்ந்து உண்டு கொண்டிருந்த சம்யுக்தாவிடம், “நீ உங்க அம்மா மாதிரி சமைப்பியா?” எனக் கேட்க….

அதைப் பத்தி உங்களுக்கு என்ன?” என்றாள்.

நான் கேட்காம யார் கேட்பா?” என நினைத்தவன், “சரி இதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்.” என்றான்.

உண்டு முடித்ததும், “நீயும் சாப்பிடு இந்து.” என்ற சக்ரவர்த்தி ஆரியனை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றார்.

மாடிப்படி ஏறியதும் சின்ன ஹாலும் அதற்கு அடுத்து ஒரு அறையும் இருக்க… ஹாலில் இருந்த கதவைத் திறந்தால்… வெட்ட வெளியாக இருந்தது. அங்கும் தொட்டி செடிகள் இருக்க… உட்கார்ந்துகொள்ள வசதியாகப் பிளாஸ்டிக் நாற்காலிகளும் இருந்தது. இருவரும் அதில் உட்கார்ந்து கொண்டனர்.

ஆரியன் இன்று காலை நடந்ததைச் சொல்ல… சக்ரவர்த்தியின் முகம் கோபத்தில் கனன்றது. சிறிது நேரம் அவர் பேசவே இல்லை. எதோ யோசனையிலேயே இருந்தார். 

இவங்களுக்கு இப்படி இங்கிதமே இருக்காதுன்னு தான், இந்துவையோ சம்யுக்தவையோ நான் எங்கையும் கூட்டிட்டு வர்றது இல்லை. சம்யுக்தா ரொம்ப ஆசைபட்டதுனால தான். அதுவும் உங்க வீடுங்கிறதுனாலதான். ஆனா இன்னும் அப்படியே தான் இருக்காங்க.”

ஒரு மனுஷனுக்கு எது முக்கியம் தெரியுமா? பணமோ பதவியோ, அந்தஸ்தோ இல்லை. நல்ல குடும்பம், புரிஞ்சிக்கிற துணை இதுதான் முக்கியம்.

கல்யாணத்துக்குப் பிறகு எனக்குச் சுய கெளரவமே இருக்கக் கூடாதுன்னு நினைச்சா உங்க அத்தை. அவ சொல்றது மட்டும் தான் கேட்கணும். அவ சொல்றபடி தான் நடக்கணும். அவங்க வீட்டு ஆளுங்களும் இவ பேச்சை கேட்டுட்டு ஆடுவாங்க.”

நினைச்சா அவ வீட்டுக்கு போவா… மாச கணக்குல இருப்பா… அப்புறம் நினைச்சா இங்க வருவா…. இங்க ஏன் வந்தான்னு நினைக்கக் வச்சிட்டு போவா….”

கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் கழித்துத் தான் முதல் குழந்தை வந்தது. குழந்தை பிறந்தா சரி ஆகிடும். பொறுப்பு வந்திடும்னு நினைச்சேன். ஆனா குழந்தை பிறந்த பிறகும் மாறலை. ஒரு மனுஷனை மனுஷனா கூட மதிக்கலைனா எப்படிப் பொறுத்திட்டு இருக்கிறது.”