வரும் போதே பார்த்து எடுத்திட்டு வர வேண்டியது தான… இப்படித் தன்னை அலைய வைக்க வேண்டுமா என்ற கடுப்பில் தான் சென்றான். ஆரியன் கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சந்திராவின் பார்வை சம்யுக்தாவை தான் கூறு போட்டுக் கொண்டிருந்தது. மாமியாரின் நெக்லஸ் அவருக்கு அடையாளம் தெரியாமல் போகுமா? சம்யுக்தாவை கூட்டி வந்து வைத்து, எல்லோரும் தனக்கு எதிராகச் சதி செய்வதாக நினைத்தார்.
ஸ்ரீநிதியும் பட்டு புடவை அணிந்து அதற்குப் பொருத்தமான அணிமணிகள் அணிந்து கொண்டு வந்திருந்தாள். அக்கா தங்கையின் உருவ ஒற்றுமையைப் பார்த்த அங்கிருந்த சிலர், “பாரேன் ரெண்டும் ஒன்னைப் போல இருக்குங்க.” என அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
சரளா பொங்கல் வைத்து முடித்திருக்க….ஆனால் இப்போது தானே சந்திரா வைக்க ஆரம்பித்து இருந்தார். அதனால் என்ன செய்வது என்பது போலப் பார்க்க… அவினாஷும் ஆரியனும் அதைக் கண்டுகொள்ளாமல், ஆளுக்கொரு சாமான்களை எடுத்துக் கொண்டு, வாங்க எனச் சரளாவையும், சம்யுக்தாவையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றனர்.
அங்கே சாமிக்கு பொங்கலை படைத்து, அர்ச்சனை முடித்து வெளியே வர அரை மணி நேரம் ஆகி இருக்க… சந்திராவின் அருகே, அவர்கள் உடன்பிறப்புகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது தான் வந்திருப்பார்கள் போல…
அவர்களைப் பார்த்ததும் இவர்கள் வேறு வந்துவிட்டார்களா என்று சரளாவுக்கு எரிச்சலாக இருந்தது. இதற்குதான் அதிகாலையே பொங்கல் வைத்துவிட்டு சென்று விடுவோம் என நினைத்திருந்தார்.
சம்யுக்தாவை பார்த்தால்… வேறு வினையே வேண்டாம் என்று நினைத்தவர், ஆரியனிடம் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு காருக்கு செல்ல சொல்லிவிட்டு, அவர்களிடம் நலம் விசாரிக்கச் சென்றார்.
கிட்டத்தட்ட பந்தல் காலியாகி இருந்தது. எல்லோரும் பொங்கல் வைத்து முடித்துக் கோவிலின் உள்ளே சென்றிருந்தனர். கோவிலுக்கு உள்ளே தான் கூட்டம் வெளியே இல்லை.
சந்திரா சொல்லி இருப்பார் போல… சம்யுக்தாவைத்தான் அண்ணனும் தம்பியும் முறைத்து பார்த்தனர். சம்யுக்தா அவர்களைக் கடக்கும் போது, “பாப்பா இங்க வா….” என்று சந்திராவின் அண்ணன் தனசேகர் அழைக்க…. அவள் அங்கேயே தேங்கி நின்றாள்.
“நீ பாட்டுக்கு எங்கனாலும் வந்திடுவியா? நாங்க எதுவும் செய்ய முடியாம இல்லை… வேண்டாம்னு இருக்கோம். எங்களை வீணா தூண்டி விடாத.” பார்வையால், பேச்சால் அவர்கள் சம்யுக்தாவை மிரட்ட முயல… சம்யுக்தா அவர்களுக்கு அந்த வெற்றியைக் கொடுக்கவில்லை.
அவளுக்கு உள்ளுக்குள் பயம் தான். ஆனால் வெளியே காட்டாமல் நிமிர்வாகவே இருந்தாள்.
ஆரியன் வரிந்து கட்டிக் கொண்டு வந்ததும், சந்திரா அப்படியே பேச்சை மாற்றினார்.
“எனக்கு உங்க மாமா அநியாயம் பண்ணலைன்னு சொல்றியா? நான் இப்போ நினைச்சாலும் அவரைப் புகார் கொடுத்து உள்ள தள்ள முடியும்.”
சந்திரா மிரட்டுவதற்காகத்தான் அப்படிச் சொன்னார். போலீஸ் என்றால் பயந்து விடுவார்கள் என்று.
“அத்தை, நீங்க அப்படிச் செய்ய நினைச்சா தாராளமா செய்யுங்க. அதை மாமா பார்த்துப்பார். ஆனா சம்யுக்தாவை மிரட்டுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. அதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை.”
“உங்க சண்டை மாமாவோட தான் இருக்கணும். மாமா தவறே செய்திருந்தாலும், அதுக்கு சம்யுக்தா பொறுப்புக் கிடையாது. நீங்க எதுனாலும் மாமாகிட்ட பேசுங்க.” என ஆரியன் அடித்துப் பேசி விட… அதற்கு மேல் யாராலும் பேச முடியவில்லை. சத்திராவின் பிறந்த வீட்டினர் தான் பின் வாங்கும்படி ஆகியது.
அதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்களும், அங்கே கூடி விட்டனர். ரெண்டாவது குழந்தை உண்டாகி அம்மா வீட்டுக்கு போன உன் அத்தை குழந்தை பிறந்து ஒரு வருஷம் வரை… அம்மா வீட்ல இருந்து வரவே இல்லை. இனிமே பொண்டாட்டியோட குடும்பம் நடத்திட முடியாதுன்னு நினைச்சு தான் உன் மாமா இன்னொரு கல்யாணம் செய்துகிட்டரோ என்னவோ… பிறகு ஒரு புருஷனும் எவ்வளவு பொறுமையா இருப்பான். அப்போ அதெல்லாம் பெரிய கதை என அங்கிருந்த யாரோ சொல்ல….
“இது எங்க வீட்டு விஷயம், நாங்க பேசிகிறோம்.” எனத் தனசேகர் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்த…
“எதுனாலும் மாமா வரட்டும் பேசிக்கலாம்.” எனச் சொல்லிவிட்டு ஆரியன் சம்யுக்தாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றான்.
சம்யுக்தா தான் வீட்டுக்கு வந்து ஒரே புலம்பல்.
“நான் இங்க வராமலே இருந்திருக்கலாம். அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க. அப்பாவுக்கு வேற என்னால பிரச்சனை. அப்பாவை எதாவது செஞ்சிடுவாங்களா?” என அவள் அவினாஷிடம் தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆரியன் முன்பே இப்படி எதாவது நடக்கும் என எதிர்பார்த்தவன் தான். ஆனால் இந்த அளவு நடக்கும் என அவனுமே எதிர்ப்பார்க்கவில்லை.
“அங்க தைரியமா தான இருந்த. இப்போ ஏன் புலம்புற? என்னைக்கா இருந்தாலும் இந்தப் பிரச்சனை வந்துதான் இருக்கும். விடு பார்த்துக்கலாம்.” என ஆரியன் அவளைச் சத்தம் போட…. பிறகே சம்யுக்தா புலம்பலை விட்டாள்.
சரளா கோவிலில் வைத்த பொங்கலோடு வீட்டில் செய்திருந்த இட்லியையும் கொண்டு வந்து வைத்து, எல்லோரையும் உணவு உண்ண அழைக்க…. சம்யுக்தாவுக்கு உணவே இறங்கவில்லை.
“உங்க அப்பாவை தனியா எல்லாம் நாங்க விட்டுட மாட்டோம். நாங்க எல்லாம் இருக்கோம் கவலைப்படாதே மருமகளே… நல்லா சாப்பிடு.” எனச் சடகோப்பனும் சொல்ல… பிறகே உண்ண ஆரம்பித்தாள்.
ஆரியனின் கைபேசி அழைக்க எடுத்து பார்த்தால்… ஸ்ரீநிதி.
எடுத்தவுடன் சொல்லு என்றவன், கைகழுவிவிட்டு வெளியில் சென்றான்.
“என்ன மாமா பொண்ணுக்குச் சப்போர்ட் எல்லாம் பலமா இருக்கு. நீங்க எப்படி அவளுக்குச் சப்போர்ட் பண்ணி பேசலாம்?”
“உங்க அப்பாவோட இன்னொரு கல்யாணத்தை நான் என்னைக்குமே நியாப்படுத்தலை சரியா… இதுல சம்யுக்தாவை கொண்டு வராதீங்கன்னு தான் சொல்றேன்.”
“எனக்கே அவளை ஆரம்பத்துல பார்க்கும் போது சட்டுன்னு ஏத்துக்க முடியலை. ஆனா இதுல அவ தப்பு என்ன இருக்கு சொல்லு.”
“உங்களுக்குப் பிடிக்கலைனா விலகிப் போங்க. ஆனா அவளைத் தரக் குறைவா பேசுறதை எல்லாம் அனுமதிக்க முடியாது.”
“அதனால மட்டும் தான… இல்லைனா உங்களுக்கும் உங்க மாமா புத்தி வந்திடுச்சோன்னு நினைச்சேன்.”
“அந்த நிலைமை எனக்கு வேண்டாம்னு தான் நேத்தே அதுக்கு ஒரு முடிவு கட்டிட்டேன். என்னை எனக்காக விரும்புற பெண்ணைக் கல்யாணம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனால எனக்கு அந்த நிலை வராது.”
“உன்னைக் கல்யாணம் பண்றவனுக்கு மாமா மாதிரி முடிவெடுக்கிற சூழ்நிலை வராம நீ பார்த்துக்கோ.”
ஸ்ரீநிதி அவனை வைத்து வாங்க வேண்டும் என்றுதான் அழைத்தாள்… ஆனால் அவன் தான் அவளை நாக்கை பிடிங்கிக் கொள்வது போலக் கேட்டான்.
நீ எனக்கு வேண்டாம் என்பதை அவளுக்குத் தெளிவாகப் புரிய வைத்தும் இருந்தான். நேற்று அவசரப்பட்டு அவனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டோம் என நினைத்தாள்.
அவனுக்குத் தன் மேல் பிடித்தம் இருந்திருந்தால்… அதை அவன் பெரிது படுத்தியிருக்க மாட்டான் என்றும் தோன்றியது.
அவனிடம் சொல்லிக் கொள்ளாமலே கைபேசியை வைத்து விட்டாள்.
வெளியே நின்று பேசிவிட்டு உள்ளே வந்தவனுக்குத் தலை வலிப்பது போல இருக்க… பின்னத்தலையைக் கைகளால் தாங்கியபடி சோபாவில் சாய்ந்து கொண்டான்.
அப்போது அங்கே வந்த சம்யுக்தா, “எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்.” என்றாள்.
“கோவில் திருவிழான்னு உனக்குச் சைவமா தான் சமைச்சுப் போட்டேன். இன்னைக்கு நாளைக்குத் தான் அசைவம் செய்யப் போறேன். இருந்து சாப்பிட்டு நாளைக்குப் போகலாம்.” எனச் சரளா சொல்ல… அவள் இதற்கு மேல் இங்கே இருந்து கொள்ள மாட்டாள் என்பது ஆரியனுக்குப் புரிய, “சாயங்காலம் போகலாம். இருக்கிறவரை சந்தோஷமா இரு.” என்றான்.
“என்னைப் பஸ்ல ஏத்தி விட்டாக் கூடப் போதும்.” எனச் சம்யுக்தா சொல்ல… ஆரியன் அவளை முறைக்க… அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.
ஆரியன் சென்று படுத்துக் கொண்டான். சம்யுக்தா உடைமாற்றிவிட்டு சரளாவுக்கு உதவினாள்.
மதியம் சரளா மட்டன் பிரயாணி சிக்கென் வறுவல் எல்லாம் செய்திருந்தார். மதியம் உண்ணும் போதே மூன்று மணி ஆகி இருக்க… ஐந்து மணிக்கு ஆரியனும் சம்யுக்தாவும் மட்டும் கிளம்பினர். அவினாஷ் விடுமுறை முடிந்தே வருவதாகச் சொல்லி விட்டான்.
காரில் இவர்கள் இருவர் மட்டுமே இருந்தாலும், அப்போதிருந்த சூழ்நிலையில் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை.
ஒன்னரை மணி நேர பிரயாணமும் அமைதியிலேயே கழிந்திருந்தது. சம்யுக்தா யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். தனக்குத் தாய் தந்தையே போதும், வேறு யாரும் வேண்டாம் என்று.
அவர்கள் வீட்டின் முன்னே இறங்கியவள், கேட்டை திறக்க…. அந்தச் சத்தத்தில் இந்துமதி வந்து எட்டிப் பார்க்க…
“அம்மா நான் வந்துட்டேன். இனிமே உங்களை விட்டு எங்கையும் போக மாட்டேன்.” எனச் சொல்லியபடி சென்று அவரைக் கட்டிக் கொண்டாள்.