அன்புள்ள கண்ணாளனே

அத்தியாயம் 4

திருவிழாவை முன்னிட்டு அன்று இரவு அம்மன் சாமி பூ பல்லாக்கில் நகர்வலம் வருவதால்…. இரவு ஒருமுறை குளித்துவிட்டு எல்லோரும் நல்ல ஆடைகள் அணிந்து கொண்டனர்.

சாமிக்கு ஒரு பெரிய தாம்பாளத்தில் மாலை, அர்ச்சனைக்கு இன்னொரு தட்டில் தேங்காய் பழம், சாமிக்குப் பட்டாடை என எல்லாம் எடுத்து வைத்து விட்டு, சாமி வர நள்ளிரவுக்கு மேல் ஆகும் என்பதால்… நேற்று போல் இன்றும் சீட்டு விளையாட உட்கார்ந்தனர். இன்று ஆரியனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

சாமி வரும் போது எழுப்புவதாகச் சொல்லி சரளாவை உறங்க சொல்லி இருந்தார்கள். அவரும் ஹாலில் படுத்து உறங்கி விட்டார்.

இவர்கள் நால்வரும் விளையாட, அவினாஷ் சீட்டை வேண்டுமென்றே பார்த்து விட்டு மாற்றி எடுக்க… அவனுக்கும் ஆரியனுக்கும் சண்டை தான். நேற்று போல் இல்லாமல் இன்று ஒரே கலாட்டாவாகச் சென்றது. அண்ணன் தம்பிக்கு இடையில் பஞ்சாயத்து செய்வதே சம்யுக்தா சடகோபனின் வேலையாக இருந்தது. அதனால் நேரம் போனதே தெரியவில்லை.

மேளம் சத்தம் அருகில் கேட்டதும், சரளாவை எழுப்பி விட… அவர் சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தார்.

சரளா சம்யுக்தாவிடமே அர்ச்சனை தட்டை கொடுத்து விட்டார். சாமிக்கு வாங்கிய பூ மாலை மிகவும் பெரிது என்பதால்… அதை ஆரியன் எடுத்து வந்தான்.

பெரிய வீதியின் வழியாக வரும் சாமி ஊர்வலம், சில குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நின்று செல்லும். அப்போது அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்பவர்கள் செய்து கொள்ளலாம். இவர்கள் வீதியில் இருந்து நிறையப் பேர் வந்ததால்… ஒரே கூட்டம். அதோடு சில இளவட்டங்கள் ஆடிக் கொண்டும் இருந்தனர். கோவிலில் என்றாலும் அங்கும் இடிக்க வரும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

ஆரியன் சம்யுக்தாவை அழைக்க… மேள சத்தத்தில் அவள் காதில் விழவில்லை. அவளின் தோளில் லேசாகத் தட்டியவன், “இந்தப் பக்கம் வா… அங்க நின்னா இடிச்சு தள்ளிடுவாங்க.” என அவளை அழைத்துத் தன் அருகில் பாதுகாப்பாக நிற்க வைத்துக் கொண்டான்.

அவர்கள் வீட்டு வாயிலில் நின்று அதைப் பார்த்த அவினாஷ், “உங்க பையன் மாமன் பொண்ணுங்க மேல காட்டுற அக்கறை இருக்கு பார்த்தீங்களா… முடியலை.” எனக் கேலி செய்ய….

அவன் யாருக்கா இருந்தாலும் அப்படித்தான் இருப்பான். அவன் குணமே அப்படி.” என்றார் சடகோப்பன் பெருமையாக.

சம்யுக்தாவுக்கு அவன் தோளில் தட்டியதே வெகு நேரம் குறுகுறுப்பாக இருந்தது. அவள் ஓரக் கண்ணில் ஆரியனைப் பார்க்க… அவன் அவளை யாரும் இடித்து விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் முறை வந்ததும் முதலில் ஆரியன் மாலையைக் கொடுக்க… அதைச் சாமிக்கு போட்டுவிட… அடுத்து சம்யுக்தா அர்ச்சனை தட்டை கொடுக்க… அர்ச்சகர் அர்ச்சனை செய்து கொடுத்தார். இருவரும் அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தனர்.

சாமி கிட்ட இருந்து பார்க்க ரொம்ப நல்லா இருந்தது அத்தை.” என்றாள் சம்யுக்தா. சரளா தட்டில் இருந்து சூடத்தைக் கண்களில் ஒத்தியபடி, “இனி வருஷா வருஷம் திருவிழாவுக்கு வந்திடு.” என்றார்.

சரளா எல்லோருக்கும் பால் கொண்டு வந்து கொடுக்க, குடித்து விட்டு உறங்க சென்றனர்.

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து கோவிலுக்குப் பொங்கல் வைக்கக் கிளம்பினர்.

சரளா விடியற்காலை நாலு மணிக்கு எழுந்து குளித்து விட்டு முன்தினமே பொங்கல் வைக்கத் தயாராக வைத்திருந்த சாமான்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பியவர், சம்யுக்தாவை எழுப்பி விட்டு, “நீ குளிச்சு ரெடி ஆகிட்டு கோவிலுக்கு வா.” எனச் சொல்லிவிட்டு சென்றார்.

அவினாஷ் இன்னும் உறங்கிக் கொண்டு இருந்ததால்… ஆரியன் அம்மாவுடன் சென்றான். கோவிலுக்கு முன்பு இருத்த பந்தலில், ஒரு பக்கம் வரிசையாகச் சிலர் பொங்கல் வைக்கக் காத்திருக்க… அவர்களோடு சரளாவும் சேர்ந்து கொண்டார். ஆரியன் அவர்கள் சாம்னான்களைக் காரில் இருந்து எடுத்து வந்து கொடுத்தான்.

சரளா பொங்கல் வைக்கும் இடத்தில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட.. ஆரியன் மண் அடுப்பை வைத்து. அதற்குள் விறகை வைத்து அடுப்பை தயார் செய்தான்.

அர்ச்சகர் வந்து தீர்த்தம் தெளிப்பார். பிறகு தான் எல்லோரும் பொங்கல் வைக்க வேண்டும். ஆனால் சீக்கிரம் வந்தால் தான் கோவில் முன்பு பொங்கல் வைக்க இடம் கிடைக்கும் இல்லையென்றால் சாலை ஓரமாகத் தான் வைக்க வேண்டும். அதற்காகவே சீக்கிரம் வருவது. அவரைப் பொங்கல் வைக்கச் சொல்லிவிட்டு ஆரியன் வீட்டுக்கு வந்து விட்டான்.

எழுப்ப எழுப்ப உறங்கிக் கொண்டிருந்த அவினாஷை, ஒரு வழியாக எழுப்பி, அவனைக் கிளம்பச் சொல்லிவிட்டு, ஆரியனும் வேறு உடை உடுத்தி கிளம்ப ஆரம்பித்தான்.

சம்யுக்தா சரளா எடுத்துக் கொடுத்திருந்த இள நீல நிறத்தில் ரோஸ் நிற பார்டர் வைத்த பட்டுப் புடவை அணிந்து, அதற்குப் பொருத்தமாக அவளது பாட்டி கொடுத்த தாமரை நெக்லசை அணிந்து கொண்டாள்.

காதில் பெரிய கல் ஜிமிக்கி போட்டுவிட்டுக் கண்ணாடியில் பார்க்க… புடவையில் வெகு அழகாக இருந்தாள்.

ஆரியன் வெளியே இருந்து குரல் கொடுக்க, அவளுக்கு வெளியே சென்று அவனைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது.

நமக்கு என் அவனிடம் இப்படித் தோன்றுகிறது என அவளுக்கே ஒரே குழப்பம். ஐயோ சும்மாவே முறைப்பான், இதுல உனக்கு இந்த நினைப்பெல்லாம் தேவையா என அவளையே திட்டிக் கொண்டவள், குறுகுறுத்த மனதை அடக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

ஆரியனுக்குச் சம்யுக்தா இன்னும் சின்னப் பெண் என்ற எண்ணம் தான். ஆனால் இன்று புடவையில் பார்த்ததும், அவனால் அவளிடம் இருந்து பார்வையைத் திருப்ப முடியவில்லை.

அதுவும் சம்யுக்தாவின் வெட்கம் அவனுக்கு அவளைப் புதிதாகப் பார்ப்பது போல இருந்தது. அவனின் பார்வை அவளையே தொடந்து கொண்டிருந்தது.

சம்யுக்தா அவனைப் பார்ப்பதை தவிர்த்து, வேறு வேலையாக இருப்பது போல் சுற்றிக் கொண்டு இருந்தாள். சரளா அவளுக்கு என்று வைத்து விட்டுச் சென்றிருந்த பூவை எடுத்து வைத்தவள், அவினாஷிடம் போவோமா என்று கேட்க….

காலையில தான் பொங்கல் வைக்கணுமா? சாயங்கலாம் பொங்கல் வச்சா ஆகாதா…” உறங்க முடியாத எரிச்சலில் அவன் கத்திக் கொண்டிருக்க…

சம்யுக்தா ஆரியனைப் பார்க்க, “அவன் வரலைனா இருக்கான். நீ வா.” என்றான். பிறகே அவினாஷ் எழுந்தான்.

நடக்கும் போது சம்யுக்தாவின் சேலை அவள் கொலுசில் மாட்டிக்கொள்ள… அவளால் நடக்க முடியவில்லை. அவள் அவினாஷை அழைக்க… அதற்குள் அவினாஷ் வெளியே சென்று விட்டான்.

சம்யுக்தாவின் முன்பு ஒரு காலில் மண்டியிட்டு உட்கார்ந்த ஆரியன், அவளின் கொலுசை ஆராய….

வேண்டாம் நானே எடுத்துக்கிறேன்.” என்றாள் சம்யுக்தா.

அவன் எடுக்கலாம் நான் எடுக்கக் கூடாதா?” என்றவன், அவளின் முகத்தைப் பார்க்க… சம்யுக்தாவின் முகத்தில் இருந்த வெட்கத்தைப் பார்த்ததும், அவனுக்குக் குதுகுலமாக இருக்க… “நான்தான் எடுப்பேன்.” என்றவன், குனிந்து அவள் கொலுசில் மாட்டி இருந்த சேலையை எடுத்துவிட்டு, மீண்டும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கக் கொக்கியை நன்றாக அழுத்தி விட்டான்.

அவனின் அருகாமையில் திணறிப்போன சம்யுக்தாவுக்கு எப்போதடா முடியும் என்பது போல ஆகிவிட்டது.

சடகோப்பன் மட்டும் வீட்டில் இருக்க… மற்ற மூவரும் கோவிலுக்குச் சென்றனர். காரில் சம்யுக்தா பின் இருக்கையில் இருக்க, ஆரியன் முன்புறம் இருந்த கண்ணாடியில் அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டான்.

அவினாஷ் எதோ ஆரியனிடம் கேட்க… அவன் கவனம் இங்கே இல்லை என்று புரிந்து, அவன் கவனித்துப் பார்க்க… ஆரியன் சம்யுக்தாவை பார்ப்பதை கவனித்து விட்டான்.

இவர்கள் சென்ற போது சரளா பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார். சம்யுக்தா சரளாவின் அருகே உட்கார்ந்து கொள்ள… சற்று தள்ளி இருந்த கல்லில் ஆரியனும், அவினாஷும் உட்கார்ந்து இருந்தனர்.

அவினாஷ் ஆரியனையும் சம்யுக்தாவையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பார்க்காத நேரம் இவன் பார்ப்பதும், இவன் பார்க்காத நேரம் அவள் பார்ப்பதும் என ஆரியனும் சம்யுக்தாவும் தனி உலகில் இருந்தனர்.

இங்கேயே ஏன் உட்கார்ந்திட்டு இருக்கீங்க. ஒரே புகையா இருக்கு. கோவிலுக்குள்ள போய் இருங்க.” எனச் சரளா சொல்ல…. மூவரும் கோவிலுக்குள் சென்றனர்.

பெரிய கோவில் அது. சம்யுக்தாவை நிற்க வைத்து அவினாஷ் தனது கைப்பேசியில் படங்கள் எடுக்க… ஆரியனும் அவனுடையதில் எடுத்தான். அவினாஷ் எடுக்கும் போது இயல்பாக நின்றவள், ஆரியன் எடுக்கும் போது, நேராக அவனைப் பார்க்க முடியாமல் திணறினாள். பிறகு மூவரும் சேர்ந்து எடுக்க… ஆரியன் சம்யுக்தாவின் அருகே இருப்பது போலப் பார்த்துகொள்ள… மூவரும் சேர்ந்து விதவிதமாக எடுத்தனர்.

நீங்க ரெண்டு பேரும் நில்லுங்க. நான் எடுக்கிறேன்.” என அவினாஷ் சொல்ல… சம்யுக்தா ஆரியனைப் பார்க்க… அவன் மறுக்காமல் இங்கே வா…” என வேறு இடத்தில் அவளோடு நின்று எடுத்துக் கொண்டான்.

அடுத்து அவினாஷ், “நானும் சம்யுவும்.” என… ஆரியன், “போதும் வா போகலாம்.” என அவனை இழுத்துக் கொண்டு வர… சம்யுக்தா அவர்களுக்கு முன்னே சென்று விட்டாள்.

டேய் அண்ணா அநியாயம் பண்ற டா… நீ எடுக்கும் போது மட்டும் நான் எதாவது சொன்னேனா…” என அவினாஷ் சொன்னதற்கு… ஆரியன் பெரிதாகப் புன்னகைக்க…

மாமாகிட்ட கேட்க வேண்டியது தான… பெரிய பொண்ணு வேண்டாம்… சின்னப் பெண்ணைக் கட்டி தாங்கன்னு.” என்றதும்,

கண்டிப்பா கேட்பேன். ஆனா இப்போ இல்லை. இப்போதான் முதல் வருஷம் படிக்கிறா…. அதோட நானும் பிஸ்னஸ்ல முன்னேறனும். அப்புறம் கேட்கிறேன்.” என்றான்.

சம்யு கிட்டவாவது சொல்லு.” என்றதற்கு,

வேண்டாம் அவ படிக்கட்டும். அப்புறம் சொல்லிக்கிறேன்.” என்றான்.

சந்த்ராவும் ஸ்ரீநிதியும் இவர்கள் பொங்கல் வைத்து முடிக்கும் நேரம் தான் வந்தனர். சம்யுக்தா சந்திராவை நேரில் பார்த்தது இல்லையே தவிர… நிழல் படமாகப் பார்த்து இருக்கிறாள்.

என்ன அண்ணி இப்போ தான் வரீங்களா?”

ஆமாம் நானே தான் எல்லாம் பார்த்து எடுத்திட்டு வரணும். உங்க அண்ணன் எப்பவும் போல ஊர் சுத்த கிளம்பியாச்சு.” எனச் சந்த்ரா சம்யுக்தாவை பார்த்துக் கொண்டு சொல்ல… அப்பாவைத் தான் சொல்கிறார் என்று புரிந்தாலும், முகம் மாறாமல் சம்யுக்தா கவனமாக இருந்தாள்.

என் வீட்டுக்காரரும் எங்க வர்றாரு. நீ போய்ச் சாமி கும்பிடுன்னு சொல்வாரு. பசங்க தான் கூட வந்தாங்க. ஸ்ரீகாந்த் வர வேண்டியது தான…” என்றார் சரளா.

எதிரே இருந்த வரிசையில் ஏற்கனவே ஒரு குடும்பம் பொங்கல் வைத்து முடித்து இருக்க… அந்த இடத்தில் அடுப்பு வைத்துச் சந்திரா பொங்கல் வைக்க ஆரம்பித்தார்.

என் அண்ணனையே குறை சொல்லாத, உன் பையன் என்ன செய்கிறான்? அவனோடு வர வேண்டியது தானே…” எனச் சரளா கேட்பது சந்திராவுக்குப் புரியாமல் இல்லை.”

புதுச் சொந்தம் வந்ததும் நீயும் நல்லாத் தான் பேச ஆரம்பிச்சுட்ட…” என்றார் சந்திராவும் இடக்காக.

சந்திரா பாதிச் சாமான்கள் கொண்டு வரவில்லை. சரளா தன்னிடம் இருப்பதைக் கொடுக்க… இல்லாததை அவினாஷ் சென்று கடையில் வாங்கி வந்தான்.