மதிய உணவு முடித்ததுமே, கணவர் என்ன செய்கிறாரோ என்ற கவலையில் ஞானம் கிளம்ப…. “ஏன் பாட்டி அத்தை வீட்ல தான இருக்காங்க. நீங்க ஏன் அவசரமா போறீங்க, சம்யுக்தா வந்திருக்கா… சாயங்காலம் வரை இருந்திட்டு போகலாமே.” என்றான் ஆரியன்.
“உன் அத்தைக்காரி என்னைக்கு மாமியார் மாமனாரை கவனிச்சிருக்கா… அதெல்லாம் அவ எதுவும் செய்ய மாட்டா. நான் ஸ்ரீகாந்த்கிட்ட தான் பார்த்துக்கச் சொல்லிட்டு வந்தேன். அவன் சினேகிதங்க யாரும் வந்தா, அவன் பாட்டுக்கு மறந்திட்டு போயிடுவான்.”
“ஸ்ரீமதி இருப்பாளே…”
“அவளா நான் ஹாஸ்ட்டல்ல இருக்கேன்னு சொல்லி… வீட்டுக்கு வந்தா ஒரு வேலையும் பார்க்க மாட்டா…. ரூம்ல செல்லை வச்சிட்டு படுத்திருப்பா… அவளைச் சாப்பிட வைக்கிறதே பெரிய வேலை… இதுல அவ தாத்தாவை கவனிச்சிடுவாளா?”
“ஒழுங்கா சாப்பிட மாட்டாளா என்ன?”
“சாப்பிடுவா… அவளுக்குப் பிடிச்சதா இருந்தா உடனே வந்து சாப்பிடுவா… இல்லைனா பத்துதரம் கூப்பிட்டாலும் வர மாட்டா.”
பேரன் போட்டு வாங்குகிறான் என்று தெரியாமல் ஞானம் அவர் புலம்பலை புலம்பிவிட்டு அவினாஷுடன் பைக்கில் கிளம்பி சென்றார்.
இரவு சரியாக உறங்காததால் சடகோப்பன் அறைக்குள் சென்று படுத்து விட… ஹாலில் ஆரியனும் சம்யுக்தாவும் மட்டுமே இருந்தனர்.
அவன் அறையைக் காட்டிய ஆரியன், “வேணா உள்ள போய்த் தூங்கு.” என,
“இல்லை நான் நல்லா தூங்கி எழுந்துட்டேன். இனி நைட் தான்.” என்றாள்.
சத்தம் குறைவாக வைத்துக் கொண்டு அவள் டிவி பார்க்க… ஆரியனுக்கு இப்போது ஸ்ரீமதியிடம் பேசினால் என்ன என்று தோன்ற… ஹாலுக்கு முன்புறம் இருக்கும் வராண்டாவில் நடைபயின்றபடி அவளைக் கைப்பேசியில் அழைத்தான்.
அவள் எண் பிஸியாக இருக்க… ஆனால் இவன் அழைப்பது தெரிந்து உடனே அவனை ஸ்ரீமதி திரும்ப அழைத்தாள்.
“நீங்க ஏன் வேலைக்குப் போகலை? வேலைக்குப் போனா நல்ல சம்பளம் வரும். சொந்த பிஸ்னஸ்ல அவ்வளவு வருமா?” என அவள் கேட்க…
“எனக்கு உடனே வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணும்னு கட்டாயம் இல்லை. நான் சம்பாதிச்சு தான் அக்காவுக்கோ தங்கைக்கோ கல்யாணம் பண்ணி வைக்கணும் போலவும் யாரும் இல்லை. அதனால ரிஸ்க் எடுத்து பார்க்கலாமுன்னு தோனுச்சு.”
“ஆனா அதுக்காக நீங்க ஒன்னும் பெரிய பணக்காரரும் இல்லையே…” என ஸ்ரீமதி சொல்ல…
நாம் நினைத்தது போல மாமன் மகள் அப்பாவி இல்லையோ என்ற சந்தேகம் முதலில் ஆரியனுக்கு வந்தது. ஆனால் அவள் வெளிப்படையாகப் பேசுவது நல்லது என்றே தோன்றியது.
“ஆமாம் பெரிய பணக்காரங்க இல்லைதான். ஆனால் தேவைக்கு அதிகமாவே இருக்கு. அப்புறம் நான் விரும்பினதை செய்ய என் அப்பா எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கார்.”
“எனக்கு இன்னைக்கு நான் வாங்கிற சம்பளம் பெரிசா தெரியலை…. இப்போ வருமானம் கம்மியா இருந்தாலும், பின்னாடி எனக்கே எனக்குன்னு சொந்த நிறுவனம் இருக்கும். எனக்கு அதுதான் வேணும். நல்லா வேலைப் பார்த்தா அதுக்குத் தகுந்த பலனும் இருக்கும்.”
“சென்னை பெங்களூர் இங்க தான சாப்ட்வேர் கம்பெனீஸ் நிறைய இருக்கு. ஆனா நீங்க என் மதுரையில இருக்கீங்க?”
“முன்னாடி அப்படி இருந்திருக்கலாம். இப்போ உலகத்தில எந்த மூலையில இருந்தும் வேலை பார்க்க முடியும். சென்னை பெங்களூர்ல போலச் சிட்டியில காஸ்ட் ஆப் லிவிங் அதிகம். அதே மதுரையில ரொம்பக் கம்மி. இதே வேலையை இங்க மதுரையில இருந்தே முடிக்க முடியும் போது, எதுக்கு வேற இடத்துக்குப் போகணும். அதோட இங்க இருந்தா… அப்பா அம்மாவையும் அடிக்கடி போய்ப் பார்க்கலாம். அவங்களும் வந்து இருப்பாங்க.”
“என்ன இருந்தாலும் சென்னை பெங்களூர் சிட்டியில இருக்கிறது போல இருக்காது இல்ல… அதோட பின்னாடி பசங்க படிப்புக்கும், அங்க இருக்கிறது தான் வசதியா இருக்கும்.” என அவள் இழுக்க…
“சரி வீட்ல நான் என்ன சொல்லட்டும்?” அவளின் விருப்பத்தைத் தெரிந்து கொள்ளவே கேட்டான்.
“அம்மாகிட்ட தான் கேட்கணும். அவங்க சொல்றபடி தான்.” என்றாள் ஸ்ரீமதி.
“மாமாவை கேட்க வேண்டாமா?” என ஆரியன் கேட்டுப் பார்க்க…
“எங்க அம்மா சொன்னால் போதும்.” என்றாள் ஸ்ரீமதி.
“கல்யாணம் பண்ணி வைக்கப் போறது மாமா தான…”
“பெத்த கடமைக்கு அவர் அதாவது செய்யணும் இல்ல…” என்றதும்,
“அவர் இதுக்கு முன்னாடி எந்தக் கடமையைச் செய்யலை?” என ஆரியன் பதிலுக்கு நறுக்கென்று கேட்க…
அப்படி எதுவும் இருந்தால் தானே சொல்ல முடியும், “அம்மா கூப்பிடுறாங்க, நான் அப்புறம் பேசுறேன்.” என வைத்து விட்டாள்.
ஸ்ரீமதி அவள் அம்மாவிடம் ஆரியன் அழைத்தது பற்றிச் சொல்ல…
“நீ எதுவும் சொன்னியா?” எனச் சந்த்ரா அழுத்தி கேட்க…
“இல்லைமா… அம்மா சொல்றபடி தான்னு சொன்னேன்.”
“அப்படியே சொல்லு… இப்போ எதுவும் உறுதியா சொல்ல வேண்டாம். வேற எதுவும் நல்ல இடம் வரலைனா… அப்புறம் வேணா அங்க பார்க்கலாம். ஆனா என்னை மாதிரி ஏமாளியா இருக்காம, நீயாவது புத்திசாலித்தனமா இருக்கப் பாரு.”
“உங்க அப்பா தான் என்னை இந்த ஊர்லையே காலத்துக்கும் கிடக்க வச்சிடாறு. அப்பவே என் பேச்சை கேட்டிருந்தா… சென்னை பக்கம் போய் நல்லா இருந்திருக்கலாம்.”
அப்போது வந்த ஸ்ரீகாந்த், “அம்மா நான் வெளியப் போறேன். பணம் கொடுங்க.” என்றான். ஸ்ரீகாந்த் ஸ்ரீமதிக்கு இரண்டு வருடங்கள் மூத்தவன், பேருக்கு ஒரு டிகிரி படித்ததோடு சரி… தொழிலும் அக்கறை இல்லை. சும்மா நண்பர்களோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.
ஸ்ரீகாந்த் வெளியே கிளம்பும் போது, சக்ரவர்த்தி வீட்டுக்குள் நுழைந்தார். மகனைப் பார்த்தவர், எங்கே என்று கேட்க
சும்மா வெளிய போறேன் என்றான்.
“எனக்கு என் ரெண்டு பொண்ணுங்களைப் பத்தி கூடக் கவலை இல்லை. அவங்களை ஒரு நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி கொடுத்தா போதும், ஆனா உன்னைத் தான் நான் என்ன செய்யப் போறேன்னு தெரியலை…. உன் கவலை தான் எனக்குப் பெரிய கவலை.” என்றார்.
“எனக்கு என்ன பார்த்துக்கத் தெரியும்.” எனச் சொல்லிவிட்டு ஸ்ரீகாந்த் வெளியே சென்று விட… சக்ரவர்த்திக்கு மனதில் கவலை அதிகமாகியது.
கணவருக்கு உணவு பரிமாறியபடி சந்த்ரா, “நீங்க உங்க தங்கச்சி வீட்ல ஸ்ரீமதியை செய்யணும்னு நினைக்கிறீங்க. ஆனா ஸ்ரீமதிக்கு விருப்பம் இருக்கணும் இல்ல…” என்றதும்,
“அவனை விட நல்ல பையன் எல்லாம் எங்க போய்த் தேடுறது.” எனச் சக்ரவர்த்திக் கேட்க…
“நல்ல பையன் தான் இல்லைன்னு சொல்லலை… ஆனா ஸ்ரீமதிக்குச் சென்னை, பெங்களூர் இது மாதிரி சிட்டியில போய் இருக்கணும்னு ஆசை இருக்கு. இல்லைனா எதாவது வெளிநாட்டு வரன் கூடப் பார்க்கலாமே…” என்றதும்,
“அவளுக்கு ஆரியனை கல்யாணம் பண்ண கொடுத்து வைக்கலை… நான் அவ்வளவு தான் சொல்லுவேன். தெரிஞ்சவங்ககிட்ட நீ கேட்ட மாதிரி மாப்பிள்ளைக்குச் சொல்லி வைக்கிறேன்.”
“என் அண்ணன்கிட்ட கூடச் சொல்லலாம்.” எனச் சந்திரா சொல்ல…
“வேண்டாம், உன் அண்ணனை நம்பி எல்லாம் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க மாட்டேன். நானே நல்ல இடம் பார்க்கிறேன்.” என்றார்.
“நீங்க இப்போ எதுவும் உங்க தங்கச்சிகிட்ட சொல்ல வேண்டாம். நாம நினைச்ச மாதிரி வரன் அமையலைனா…” எனச் சந்திரா இழுக்க…
“இது தான் உன்னோட புத்தி. அது மாறவே மாறாது இல்ல… என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும், அதை நான் பார்த்துக்கிறேன்.” எனச் சொல்லிவிட்டு சக்ரவர்த்தி எழுந்து சென்றார்.
அப்போது சம்யுக்தா அவரை அழைத்தாள். அவர் பேசிக்கொண்டே வெளியே சென்றார்.
“அப்பா…”
“சொல்லு டா… அத்தை வீட்ல செம ஜாலியா இருக்கப் போல… … நீ அம்மாவுக்குக் கூட அடிக்கடி போன் பண்ணலைன்னு சொன்னாளே…”
“பாட்டி எனக்கு நெக்லஸ் கொடுத்தாங்க. அத்தை எனக்குப் பட்டு புடவை எல்லாம் எடுத்து வச்சிருக்காங்க. நான்தான் அவசரமா வந்ததுனால ஒன்னும் வாங்கிட்டு வரலை…” என்ற மகளின் கவலையைக் கேட்டு புன்னகைத்தவர்,
“சரி அப்பா வரும் போது வாங்கிட்டு வரேன்.” என, சம்யுக்தா சந்தோஷமாக வைத்தாள்.
சம்யுக்தா டிவி பார்த்தபடி ஹால் சோபாவில் படுத்திருந்தவள் அப்படியே உறங்க…. வெளியே இருந்து உள்ளே வந்த ஆரியன் அதைக் கவனித்து விட்டு, அவளைக் குரல் கொடுத்து எழுப்பியவன், “யாராவது திடிர்ன்னு வருவாங்க. உள்ளப் போய்ப் படு.” என்றான்.
ஐயோ இவனோட ஒரே தொல்லை… இப்போ ஹாலில் தூங்கினா என்ன என்று நினைத்த சம்யுக்தா எழுந்து அறைக்குள் செல்ல… அவள் பின்னே உள்ளே வந்தவன், அவனது மடிக்கணினியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான்.
ஆரியனுக்கு ஸ்ரீமதி பேசியதில் சில உண்மைகள் தெரிய வர… அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அவனது மடிக்கணினியை எடுத்து வைத்து விட்டு, ஹால் சோபாவில் படுத்தவன், அவனும் உறங்கிப் போனான்.
மாலை பூக்காரியின் குரல் கேட்டுதான் சரளா எழுந்து வந்தார். அவர் சம்யுக்தாவுக்கும் குரல் கொடுக்க… அவளும் எழுந்து தலைவாரி முகம் கழுவிக்கொண்டு வர… சரளா எல்லோருக்கும் டீ கொடுத்தார்.
கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதால் சம்யுக்தா வேறு சுடிதார் அணிந்து வர… அவினாஷ் இன்னும் வெளியே சென்றவன் வீடு திரும்பாததால்… ஆரியன் அவர்களை அழைத்துக் கொண்டு காரில் சென்றான்.