அன்புள்ள கண்ணாளனே

அத்தியாயம் 2

சம்யுக்தா சென்றதும், “ஊர் திருவிழாவுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. எதுக்கு டா அதுக்குள்ள அவளைக் கூப்பிட சொன்ன.” எனச் சரளா இளைய மகனிடம் கேட்க…

நீங்க வந்திருக்கும் போதே நேர்ல சொல்லிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அவ நீங்க கூப்பிட்டதான் வருவா. அதோட நீங்க என்ன வாரம் வாரமா வர்றீங்க. அப்பாவை விட்டு கிளம்பவே மாட்டீங்க.” என்ற அவினாஷ் வெளியே சென்று விட்டு வருவதாகச் சொல்லி சென்று விட… சரளா மூத்த மகனை பார்த்தார்.

இவனை என்ன கணக்குல டா சேர்க்கிறது. அந்தப் பெண்ணைக் கூட்டிட்டு வந்து சின்னப் பிள்ளை மாதிரி விளையாடிட்டு இருக்கான். ஆனா அங்க ஊர்ல என்னென்னமோ பேசுறாங்க.”

அம்மா, நான் பார்த்த இந்த ஆறு மாசத்தில எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேரும் பிரண்ட்ஸா தான்மா பழகுறாங்க. பின்னாடி எப்படி மாறுமோ எனக்குத் தெரியாது.” என்றான் ஆரியன்.

உங்க பாட்டி வேற ஸ்ரீநிதியை உனக்குச் செய்யணும்னு சொல்லிட்டு இருக்காங்க.”

ஏன்மா உங்களுக்கு இஷ்ட்டம் இல்லையா?”

சந்திரா அண்ணி பக்கம் அவங்க வீட்டு ஆளுங்க சரியில்லை. அண்ணி ஸ்ரீநிதிக்கு அவங்க வீட்டுப் பக்கம் மாப்பிள்ளை பார்த்திட்டா… அந்தப் பயம் தான் உன் பாட்டிக்கு. அதனால பாட்டி உனக்குச் செய்யணும்னு சொல்றாங்க. நீ என்ன டா சொல்ற?”

எனக்கு மாமாவை பிடிக்கும். ஆனா எந்தக் காரணமா இருந்தாலும் அவர் பண்ண இன்னொரு கல்யாணத்தை என்னால ஏத்துக்க முடியாது. அது தப்பு தான். அந்த வகையில பாதிக்கப்பட்டது ஸ்ரீகாந்தும் ஸ்ரீநிதியும் தான். எனக்கு அவங்க மேல உண்மையாவே பரிதாபமும் அக்கறையும் உண்டு.”

உங்களுக்கும் அப்பாவுக்கும் விருப்பம்னா பண்ணிக்கிறேன்.” என்றான் ஆரியன்.

எனக்கும் சரியா தெரியலை டா…. ஏன்னா சந்த்ரா அண்ணி குணம் அப்படி. எனக்குமே அவங்ககிட்ட தலையைக் கொடுக்க விருப்பம் இல்லை. ஆனா உன் பாட்டி வேற வெளிய எல்லார்கிட்டயும் சொல்லிட்டாங்க. நாம வேண்டாம்னு சொன்னா அண்ணன் வேற தப்பா நினைச்சிடுவாறோன்னு பயமா இருக்கு.”

இருகட்டும்மா நான் ஸ்ரீநிதிகிட்ட ஒரு தடவை பேசி பார்க்கிறேன். எனக்கு அவளோட ஒத்து வருமான்னு முதல்ல எனக்குத் தெரியணும்.”

சரளாவை உள்ளுரிலேயே திருமணம் செய்து கொடுத்திருந்தாலும், அவரின் வீடு பிறந்த வீட்டில் இருந்து வெகு தூரம். ஆரியன் படிப்புப் படிப்பு என்று இருப்பானே தவிர… அவன் ஊருக்கு வந்தாலும் இவர்கள் வீட்டுக்கு எல்லாம் வர மாட்டான். எதாவது விசேஷம் என்றால் சந்தித்துக் கொள்வது தான்.

இப்போது ஒரு வருடமாகத்தான் ஆரியன் ஸ்ரீநிதி திருமணப் பேச்சை ஞானம் எடுத்திருந்தார். அண்ணனின் இரண்டு திருமணக் குளறுபடியில் சரளாவுக்கும் குற்ற உணர்வு உண்டு. தானே தன் அண்ணன் வீட்டில் பெண் எடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அவர் அம்மா சொன்னதற்குச் சரி என்றிருந்தார்.

சரளா ஊருக்குச் சென்றதும், மகள் வீட்டுக்கு வந்த ஞானம், “உன் பசங்களைப் பார்க்க போனியே என்ன சொல்றாங்க?” என்றதும்,

அம்மா நீங்க பாட்டுக்கு ஸ்ரீநிதிக்கு ஆரியனை கல்யாணம் பண்ண போற மாதிரி எல்லார்கிட்டயும் சொல்லிட்டீங்க. ஆனா ஆரியனுக்குப் பிடிக்க வேண்டாமா… அவன் ஸ்ரீநிதிகிட்ட பேசிட்டு தான் சொல்வேன்னு சொல்லிட்டான். நீங்க இனிமேயாவது தம்பட்டம் அடிக்காம இருங்க.”

நீங்க பண்ற வேலைக்கு எனக்கு அண்ணன் வீடே இல்லாம போகப் போகுது.”

உன் அண்ணி குடும்பம் மோசமான குடும்பம். தெரியாம அங்க உன் அண்ணனுக்குப் பெண் எடுத்திட்டு நான் என்ன பாடுபட்டேன். உங்க அண்ணி அவங்க வீட்டு ஆளுங்க பேச்சை கேட்டுட்டு என்ன ஆட்டம் ஆடினா. உங்க அண்ணனை வேண்டாம்னு தான சொல்லிட்டு இருந்தா…”

புருஷன் வந்து கால்ல விழுவான்னு நினைச்சா போல… ஆனா உங்க அண்ணன் இன்னொருத்தியை கல்யாணம் பண்ண போறன்னு தெரிந்ததும், அதுக்கும் என்ன ஆட்டம் போட்டா…. அதுவரை பஞ்சாயத்து கூட்டி எழுதி கொடுத்திட்டு, வீட்டை விட்டு போறேன்னு பூச்சாண்டி காட்டிட்டு இருந்தவ, அப்புறம் இங்கேயே உட்கார்ந்திட்டா… ஆனா உங்க அண்ணன் இந்துஜாவை கல்யாணமே கட்டிகிட்டான். அப்பவும் இவ போகலை. அப்புறம் உன் அண்ணன் என்ன நினைச்சானோ…. இவ என்ன பேசினாலும் காதுல வாங்காம இருக்கப் பழகிட்டான்.”

வேற என்ன நினைச்சிருப்பார். ரெண்டு பசங்க இருக்கு அதுக்காகப் பார்த்திருப்பார்.”

ஆனா அந்தக் குதி குதிச்ச உங்க அண்ணி எப்படி வீட்டை விட்டு போகாம இருந்தான்னு எனக்கு இன்னும் ஆச்சர்யம் தான்.”

உங்களுக்கே அவங்களைப் பத்தி தெரியுது. என்னை வேற ஏன்மா அவங்ககிட்ட கோர்த்து விடுறீங்க.”

என்ன இருந்தாலும் அவங்களும் உங்க அண்ணன் பசங்க தான. அவங்களுக்காகப் பார்க்கிறேன்.” என அம்மா சொன்னதும் சரளாவுக்கு நியமாகவே பட்டது.

சிலநேரம் அவரின் கணவர் சடகோப்பன் சொல்வது உண்மை என்பது போலவும் தோன்றியது. அவர் அடிக்கடி சொல்லுவார், “நீ உன் பிறந்த வீட்ல வச்சிருக்கப் பாசத்தினால்தான், தவறுன்னு தெரிஞ்சும் நீ அவங்க பக்கம் நிற்கிற.” என்பார்.

சம்யுக்தா சரளா வந்திருக்கும் போது வீட்டுக்கு வந்தது தான். அதன் பிறகு வரவில்லை. ஆனால் அவினாஷ் சம்யுக்தா இடையே மிகவும் ஒத்துப் போனது.

ஆரியனுக்கும் அவினாஷுக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால்… இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்குப் பாசம் இருந்தாலும், பெரியவனாக ஆரியன் எப்போதுமே இப்படி இரு அப்படி இரு எனத் தம்பிக்கு அறிவுரை தான் வழங்குவான். இருவரும் மனம் விட்டு பேசுவதோ அல்லது ஒன்றாக நேரம் செலவு செய்ததோ கிடையாது.

சம்யுக்தாவுக்கு உடன் பிறந்தோர் யாரும் இல்லாமல் தனியே வளர்ந்தவள், பெற்றோரின் திருமணத்தால் சொந்த பந்தத்தோடும் நெருங்கி பழகியதும் இல்லை. இதுவரை ஒற்றையாக இருந்துவிட்டு இப்போது சொந்தம் என அவினாஷ் வந்ததும் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

இருவருக்குமே பழகத் தடை எதுவும் இல்லாததால்… அதோடு ஒருவர் மீது மற்றவர் காட்டிய அன்பும், அக்கறையும் அவர்களை நெருங்கிய நண்பர்களாகவும் மாற்றி இருந்தது. இருவருக்குமே அப்போது நட்பை தவிர வேறு எண்ணமும் இல்லை.

சம்யுக்தா அவினாஷை அவள் வீட்டுக்கு அழைத்திருக்க… அவனும் வருவதாக ஒத்துக் கொண்டிருந்தான். இந்துஜாவுக்குத் தான் ஒரே படபடப்பாக இருந்தது. இதுவரை சக்ரவர்த்தியின் சொந்தபந்தம் என யாரும் வீட்டுக்கு வந்தது இல்லை. அவருக்கு இதெல்லாம் நல்லதுக்கா அல்லது வேறு எதுவும் பிரச்சனையை உருவாக்குமோ என்ற அச்சம் இருந்தது.

அவினாஷை பார்த்ததும் இந்துஜாவுக்கு இருந்த கவலை பயம் எல்லாம் குறைந்து போனது. அவன் ரொம்பவும் சாதாரணமாகப் பழகினான். சமைத்திருந்த உணவை ரசித்து உண்டவன், அதை வெளிப்படையாகப் பாராட்டவும் செய்தான்.

அவினாஷ் அவர்கள் வீட்டுக்கு வந்ததற்கு இன்னொரு காரணம் சம்யுக்தாவை திருவிழாவுக்கு அழைக்கவும் தான். சம்யுக்தா அம்மா அனுப்ப மாட்டார்கள் என்றாள். அதனால் நேரிலேயே வந்து அழைத்துச் செல்ல வந்திருந்தான்.

அவினாஷ் சொன்னதற்கு, “அவங்க அப்பா என்ன சொல்வாருன்னு தெரியலையே… நான் அவரைக் கேட்டுட்டு சொல்றேன்.” என இந்துஜா முடித்துக் கொண்டார். ஆனால் சம்யுக்தா கிளம்புதில் அடமாக இருந்தாள்.

சம்யுக்தா இதுவரை சொந்தபந்தம் என யார் வீட்டுக்கும் சென்றது இல்லை. வருடத்திற்கு ஒருமுறை பெற்றோரோடு செல்லும் சுற்றுலா தவிர, அவள் பெரிதாக வெளியே யார் வீட்டுக்கும் சென்று தங்கியது இல்லை. இப்போது அவளது சொந்தங்களைப் பற்றித் தெரிந்த பிறகு, அவளுக்கும் எல்லோரோடும் பழக வேண்டும் என்ற ஆசை வந்திருந்தது.

இந்துஜா கணவருக்கு அழைத்துச் சம்யுக்தா அங்கே ஊரில் திருவிழாவுக்கு அவினாஷோடு வருவதற்கு அடம்பிடிப்பதாகச் சொல்ல… சக்ரவர்த்தி முதலில் யோசித்தவர், “அவ வரட்டும் நான் இங்க தான இருக்கேன் பார்த்துக்கிறேன்.” என,

நான் உங்களை நம்பித் தான் அனுப்புறேன்.” என இந்துஜா சொல்ல…

இவ்வளவு நாள் விலகியே இருந்தாச்சு…. அவளுக்கும் இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணனும். இனியாவது எல்லாரோடவும் பழகட்டும். நமக்குக் கல்யாணம் ஆனது ராகியமா என்ன? எனக்கு ரெண்டு பொண்டாட்டின்னு ஊருக்கே தெரியும். நீ கவலைப்படாம அவளை அனுப்பி வை. அதுவும் அவ சரளா வீட்ல தான இருக்கப் போறா… அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை.” எனச் சக்ரவர்த்திச் சொல்லிவிட்டு தான் வைத்தார்.

சரி போய் வா எனத் தன் அம்மா சொன்னதும், சிட்டாகப் பறந்து ஊருக்குச் செல்வதற்கு எல்லாம் எடுத்து வைத்தவள், அவள் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியும் விட்டாள்.

அவினாஷ் அவன் வீட்டுக்கு அவளை அழைத்து வர… அங்கே ஆரியன் தயராக இருக்க… மூவரும் காரில் சென்றனர்.

சம்யுக்தா கிளம்பி வந்துவிட்டாள். ஆனால் புது இடத்திற்குச் செல்லும் போது, ஒரு தயக்கம் இருக்கும் தானே… அதோடு ஆரியன் வேறு இவள் எதற்கு வருகிறாள் என்பது போலவே வேண்டா வெறுப்பாகப் பார்க்க… அதையும் நினைத்து அவள் அமைதியாக வர… ஆரியன் அவளைக் கவனித்தாலும் கண்டுகொள்ளாமலும் இருந்தான்.

ஆரியனுக்குப் புரிந்து தான் இருந்தது. இவள் வருவது அங்கே சில பல சலசலப்புகளை ஏற்படுத்தும் என்று. எப்போதும் போலவே இருந்துவிட்டுப் போய்விடலாம் என்பது அவனது எண்ணம். அவன் தம்பியிடம் அதைச் சொல்லியும் இருக்க… அவினாஷ் கேட்டால் அல்லாவா…..அவன் சம்யுக்தாவை தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்வதில் உறுதியாக இருந்தான்.

அங்கே யார் எப்படி இருப்பார்களோ என்ற கவலையில் வீட்டிற்குள் கால் எடுத்து வைத்தவள், எடுத்ததும் அவினாஷின் தந்தை, “வா மருமகளே…” என்றதும், மனதில் அதுவரை இருந்த கலக்கம் மறைய… அவரைப் பார்த்து பளிச்சென்று புன்னகை சிந்தினாள்.

உங்க அண்ணனனுக்கு மட்டும் எப்படி இப்படி ரெண்டு பொண்ணுமே லட்டு மத்திரி இருக்கோ போ…” என மனைவியைப் பார்த்து சொன்னவர், “எங்க வீட்ல பொண்ணுங்களே இல்லை. ரெண்டு தடியங்களும் ஆளுக்கொரு பக்கம் இருப்பானுங்க இல்லைனா சண்டை தான் போடுவானுங்க. நீ வந்த பிறகாவது வீடு கலகலப்பா இருக்கான்னு பார்க்கலாம்.” என்றார்.

மாமாவின் வரவேற்பில் சம்யுக்தாவின் வாய் பூட்டு கழண்டு கொள்ள… அவளும் அவரோடு நன்றாகப் பேசினாள்.

அவர்கள் வரும் போதே உணவு நேரம் ஆகி இருந்தது.

அம்மா சாப்பாடு போட்டீங்கன்னா… நான் சாப்பிட்டு என்னோட ரூமுக்கு போயிடுவேன்.” என ஆரியன் சொல்ல…

இவன் அதிகப் பட்சமா இந்த வீட்ல பேசுற வார்த்தை சாப்பாடு போடுங்க தான். அப்புறம் அவன் ரூம்குள்ள தான் இருப்பான். இப்படி இருந்தா வீடு எப்படிக் கலகலப்பா இருக்கும் சொல்லு. இதுக்குதான் பொம்பளை பிள்ளை வேணும்னு சொல்றது.” எனச் சடகோப்பன் சம்யுக்தாவிடம் பஞ்சாயத்து வைக்க…

அப்படி உங்களுக்கு ரொம்பக் கவலையா இருந்தா… இப்பவும் ஒன்னும் லேட் இல்லை. முயற்சி பண்ணுங்க.” என ஆரியன் தந்தைக்குப் பதில் கொடுக்க…

என்ன இவங்க இப்படிப் பேசுறாங்க எனச் சம்யுக்தா வியந்து பார்க்க… அவளின் பார்வையில் ஆரியனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அவன் சிரித்து சம்யுக்தா இன்றுதான் பார்க்கிறாள்.

டேய்… வீட்டுக்குச் சீக்கிரம் மருமகளைக் கொண்டு வந்து வீட்டை கலகலப்பா ஆக்குன்னு சொன்னா… நீ எனக்கு வேற ஐடியாவா கொடுக்கிற.” என்றதும்,

ஆமாம் இவனுக்குப் பாட்டியும் அம்மாவும் ஒரு பெண்ணைப் பார்த்து வச்சிருக்காங்களே… அவ வந்தா வீடு இன்னும் ககலப்பா ஆகிடும்.” என அவினாஷ் கிண்டலாகச் சொல்ல…. ஆரியன் தம்பியை முறைத்தான்.

ஒரே காலேஜ்ல படிக்கிறோம்னு தான் பேரு, ஒருநாளும் என்னை அக்கறையா விசாரிச்சது இல்லை. ஆனா எதாவது தேவைனா மட்டும் போன் பண்ணிடுறது. நான் என்ன அவளுக்கு வேலைக்காரனா? இது வாங்கிட்டு வந்து கொடு, அது வாங்கிட்டு வந்து கொடுன்னு அதிகாரம் பண்ண வேண்டியது. அப்படியே அவங்க அம்மா புத்தி.” என அவினாஷ் மனதில் இருப்பதைக் கொட்டி விட… அங்கே ஒரு சங்கடமான சூழ்நிலை நிலவ….

அம்மா இப்போ சாப்பாடு எடுத்து வைக்கிறீங்களா இல்லையா?” என ஆரியன் கேட்க… சரளா எல்லோரையும் உணவு உண்ண அழைத்தார்.