கல்யாணம் முடிந்த பிறகு சந்திராவிடம் ஒரு அலட்சியம் வந்து விட்டிருந்தது. கல்யாணம் தான் முடிந்து விட்டதே இனி என்ன செய்ய முடியும் என நினைத்தார் போலச் சற்று மிதப்பாகவே பவித்ரனிடம் நடந்து கொண்டார்.
பவித்ரனின் பெட்றோரும் சகோதரனும் சென்னைக்கு ரயிலில் செல்ல… பவித்திரன், ஸ்ரீநிதி, சந்திரா மற்றும் ஸ்ரீகாந்த் காரில் சென்றனர்.
விடியற்காலையில் இவர்கள் முதலில் வந்து விட்டனர். பிறகே பவித்ரனின் பெற்றோர் வந்தனர்.
சின்ன அபார்ட்மெண்டில்… இரண்டாவது தளத்தில் இருந்த இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு. வீடு சற்று பழையது தான். அதோடு சின்னதாகவும் இருக்க… சந்திராவுக்கு வீட்டை பார்த்ததுமே முகம் மாறி விட்டது. அவருக்குச் சுத்தமாக வீட்டை பிடிக்கவே இல்லை.
“இது என்ன வீடு, புறா கூண்டு போல இருக்கு. நல்லா விசாலமா பெரிய வீடா பார்த்தா என்ன?” என்றார்.
“இதுக்கே வாடகை எவ்வளவு தெரியுமா? இன்னும் பெரிசா பார்த்தா வாங்கிற சம்பளம் எல்லாம் வாடகைக்குத் தான் கொடுக்கணும்.” என பவித்ரன் சொல்ல…
“இருக்கப் போறது ரெண்டு பேரு. அதுக்கு இந்த வீடு போதாதா? அதோட இப்போதைக்குக் கொஞ்ச நாளுக்குக் தான். அவன்தான் வேற வேலை தேடிட்டு இருக்கானே… சம்பளம் நிறைய வந்ததும், அதுக்கு ஏத்த மாதிரி மாறிக்கப் போறாங்க.” என்றார் சீதா.
சந்திராவுக்கும் மனம் சமாதானம் ஆகவில்லை. அவருக்குச் சற்று நாட்கள் காத்திருக்க எல்லாம் பொறுமை இல்லை.
“நாங்க தான் வீடு வாங்கித் தரோம்னு தானே சொன்னோம். அதுக்கும் பெரிய இது மாதிரி பேசினீங்க. இப்போ இவ்வளவு சின்ன வீட்ல என் பொண்ணு எப்படி இருப்பா? அவளுக்கு இப்படியெல்லாம் இருக்கணும்னு அவசியம் இல்லை.” என சந்திரா பேசி வைக்க…
“அப்போ உங்க பெண்ணைக் கூட்டிட்டு கிளம்புங்க. பெரிய வீடா மாறும் போது சொல்றேன். அப்போ வாங்க.” என்றான் பவித்ரன் அவரைப் போலவே அலட்சியமாக.
“என்ன டா நீயும் இப்படிப் பேசுற?” என அவன் தந்தை கடிந்துகொள்ள…
“பின்ன என்னப்பா? சொன்னா புரிஞ்சிக்காம பேசினா வேற என்ன பண்றது? இப்படியேவா இருந்திடப் போறோம். இந்த வீடு ஒன்னும் அப்படிக் கம்மி வாடகை இல்லை. பதினைஞ்சாயிரம் ஆயிரம்.” என்றான் பவித்ரன் ஆற்றாமையாக.
சந்திரா அவர் ஊரில் இருப்பது போலவே வாடகை இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தார்.
“அம்மா அவங்கதான் சொல்றாங்க இல்லமா… நாங்க அப்புறம் வேற வீடு மாறிக்கிறோம்.” என்றாள் ஸ்ரீநிதி. அவளுக்கு நன்றாகத் தெரியும், கணவன் இந்த விஷயத்தில் இறங்கி வர மாட்டானென்று.
“சரி எல்லாம் குளிச்சு கிளம்புங்க. நல்ல நேரத்தில் பால் காய்ச்சணும்.” என்ற சீதா தானும் கிளம்பச் சென்றார்.
இதையெல்லாம் கேட்டபடி அவினாஷ் உள்ளே செல்வதா வேண்டாமா என யோசனையில் வெளியேவே நிற்க… அவனைக் கவனித்த ஸ்ரீகாந்த், “வா டா உள்ள…” என, பவித்ரனும் அவனைக் கவனித்து விட்டு வரவேற்றான்.
ஸ்ரீகாந்த் தான் தனக்குச் சென்னையில் ஒரு இடமும் தெரியாது என அவினாஷை வர சொல்லி இருந்தான். ஆரியனும் போய் உதவும்படி சொல்லி இருக்க, வேறு வழியில்லாமல் தான் அவினாஷ் வந்திருந்தான்.
ஸ்ரீநிதி படுக்கை அறைக்குள் சென்றவள், பெட்டியை திறந்து உடைகள் எடுத்துக் கொண்டு அதே அறையில் இருந்த குளியல் அறைக்குச் சென்று குளித்து விட்டு வர… பவித்ரன் கட்டிலில் கையால் முகத்தை மறைத்துக் கொண்டு படுத்திருந்தான். ஸ்ரீநிதி கிளம்பியதும் கணவனைத் தொட்டு எழுப்ப… தேவதை போல நின்ற மனைவியை ரசிக்கும் மனநிலையில அவன் அப்போது இல்லை. அவளைக் கண்டுகொள்ளாமல் குளிக்கச் சென்றான்.
சீதா வெளியே இருந்த குளியல் அறையில் முதல் ஆளாகக் குளித்து விட்டு, பால் காய்ச்ச தேவையானது எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
சீதா எதற்குமே சந்திராவை எதிர்ப்பார்க்கவில்லை. ஊரில் இருந்து எடுத்து வைத்திருந்த சாமி படங்களை எடுத்து வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் பூ எல்லாம் வைத்தவர், ஏற்கனவே மகன் வாங்கி வைத்திருந்த புது அடுப்பில், புதுப் பாத்திரம் வைத்து, காலையில் வரும் போதே தெரு முனையில் வாங்கி இருந்த பாலை ஊற்றிக் காய்ச்சினார்.
சீதா ஏற்கனவே மகனிடம் சொல்லி இருக்க, திருமணதிற்கு வருவதற்கு முன்பே… பவித்ரனும் வீட்டுக்கு தேவையான சில சாமான்கள் மற்றும் கேஸ் அடுப்பை தயார் செய்து வைத்து விட்டே வந்திருந்தான்.
சாமி படத்தின் முன்பு உப்பு, மஞ்சள் வைத்து, அதோடு தேங்காய் பழங்கள் எல்லாம் படைத்து சாமி கும்பிட்டனர்.
பவித்ரன் காலை உணவை வீட்டிற்கே வரவழைக்க… எல்லோரும் உண்டனர். அவினாஷ் ஏற்கனவே இன்று காலை நடந்ததை ஆரியனுக்குச் சொல்லி இருக்க… ஆரியன் ஸ்ரீகாந்தை அழைத்தவன், “இன்னைக்கே எல்லாச் சாமான்களும் வாங்கிக் கொடுத்திட்டு, உங்க அம்மாவை கூட்டிட்டுச் சீக்கிரம் அங்கிருந்து கிளம்பிடு. உங்க அம்மா அங்க இருக்க இருக்கப் பிரச்சனை தான். பவித்ரனோட அம்மா கொஞ்ச நாள் கூட இருப்பாங்க. அவங்க போனதும் வந்து இருக்கலாம்னு சொல்லி கூட்டிடு வந்திடு.” என, ஸ்ரீகாந்தும் சரி அத்தான் என்றான்.
காலை உணவு உண்டதும், கடைக்குக் கிளம்பினர். பவித்ரன் உடன் வரவில்லை என்று சொல்லிவிட… ஸ்ரீநிதி கணவனைப் பார்க்க… “நீ போய் உனக்குப் பிடிச்சதா பார்த்து வாங்கிக்கோ.” என்றுவிட்டான்.
“கட்டில், பீரோ, பாத்திர பண்டங்கள் தான் பொண்ணு வீட்ல வாங்கித் தர்றது. தேவையானது மட்டும் வாங்கிட்டு வா…” என்றார் சீதா மருமகளிடம்.
ஸ்ரீநிதி திரும்ப ஒருமுறை கணவனை அழைக்க… “இல்லை… எனக்குக் கார்ல வந்தது டையர்டா இருக்கு.” என்று மறுத்து விட்டான்.
ஸ்ரீகாந்த, அவினாஷ், சந்திரா மற்றும் ஸ்ரீநிதி மட்டும் கடைக்குக் கிளம்பி சென்றனர்.
“நீங்க வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டீங்களாமா… பாருங்க உங்களால தான் அவர் கோவிச்சுகிட்டு வரலை.” என ஸ்ரீநிதி சொல்ல… சந்திராவுமே இதை எதிர்ப்பார்க்கவில்லை.
எல்லாமே ஒரே இடத்தில் வாங்கும்படி பெரிய கடைக்குதான் அவினாஷ் அவர்களை அழைத்துச் சென்றான்.
கட்டில், பீரோ, பாத்திரங்கள் தவிர, குளிர்சாதனப் பெட்டி மற்றும் துணி துவைக்கச் சலவை இயந்திரம் என இவை இரண்டையும் கூடுதலாக வாங்கிக் கொண்டு கிளம்பினர்.
காரில் திரும்பி செல்லும் வழியில் ஸ்ரீகாந்த், “அம்மா நாம இன்னைக்கே கிளம்பிடலாம். மாப்பிள்ளையோட அப்பா அம்மா கூட இருப்பாங்க. நாம அப்புறம் வரலாம்.” என, சந்திராவுக்கும் பவித்ரனின் பெற்றோர் இருக்கும் போது உடன் இருக்க விருப்பம் இல்லை. அதனால் சரி என்றார்.
இவர்கள் வீடு வந்து சேரும் போதே மூன்று மணி ஆகி இருக்க… சீதா எல்லோருக்கும் சேர்த்து சமையல் செய்து வைத்திருந்தார். இன்னும் அவர்களும் உண்ணாமல் தான் இருந்தனர்.
பவித்ரன் ஸ்ரீநிதியை பரிமாறச் சொன்னான். வாழை இலை போட்டு, இரண்டு வகைப் பொரியலோடு சாம்பார், ரசம், அப்பளம், பாயாசம் என இருந்த எல்லாவற்றையும் பரிமாறினாள். அவினாஷ் உண்டதும் உடனே சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்.
மற்றவர்கள் உண்டதும் பவித்ரன் மனைவியோடு சேர்ந்து கடைசியாக உண்டான்.
சிறிது நேரம் எல்லோரும் படுத்து ஓய்வெடுத்தனர். ஸ்ரீகாந்த கார் ஓட்ட வேண்டும் என்பதால்…. படுத்து நன்றாக உறங்கி விட்டான். மாலை ஏழு மணி போல அவன் அம்மாவை கிளம்பச் சொல்ல…
“வந்த அன்னைக்கேவா கிளம்புவாங்க, அதெல்லாம் நாளைக்குப் போயிக்கலாம்.” என சீதாவும்,
“நைட் நேரம் கார் ஓட்ட வேண்டாம் ஸ்ரீகாந்த். காலையில சீக்கிரம் வேணா கிளம்புங்க.” என பவித்ரனும் சொல்ல… ஸ்ரீமதியும் அவர்களை இருந்துவிட்டு செல்ல சொன்னாள். ஸ்ரீகாந்தும் சரி என்றான்.
சீதா எதாவது கோவிலுக்குச் சென்று விட்டு வரலாம் என்றார். பவித்திரன் எல்லோரையும் பக்கத்தில் இருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டு வந்தான்.
வரும் வழியில் இரவு உணவை முடித்துக் கொண்டு வந்தனர்.
இவர்கள் வீடு வந்து சேர்வதற்கும், இவர்கள் வாங்கிய சாமான்கள் வந்து இறங்குவதற்கும் சரியாக இருக்க… வேன்னில் வந்த ஆட்களே பொருட்களை அந்தந்த இடம் பார்த்து இறக்கி வைத்தனர்.
குளிர்சாதன பெட்டியை சமையல் அறையில் ஒரு ஓரத்தில் வைத்தவர்கள், சலவை இயந்திரத்தையும் வைக்க… சீதா முகம் மாறினாலும் ஒன்றும் சொல்லவில்லை. அதைக் கவனித்த சந்திரா, “எங்க பொண்ணுக்கு செய்யாம நாங்க யாருக்குச் செய்றது, யார் யாரோ எங்க சொத்தை அனுபவிக்கிறாங்க, என் பெண்ணும் மாப்பிள்ளையும் அனுபவிச்சா என்ன? அந்த எண்ணத்தில நான் பேசுறது உங்களுக்குத் தப்பா தெரியுது.” என்றார்.
இதற்கு என்ன சொல்வது? அவர் வீட்டு விவகாரத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும் என எல்லோரும் அமைதியாக இருந்தனர். அதற்கு மேல் பேசினால்… சந்திராவும் இன்னும் அதிகம் பேசுவார் என்றும் தெரியும்.
பவித்ரனும் ஸ்ரீநிதியும் ஒரு அறையில் இருக்க, இருந்த மற்றொரு அறையைச் சந்திராவுக்கும், ஸ்ரீகாந்துக்கும் கொடுத்து விட்டு, பவித்ரனின் பெற்றோர் மற்றும் தம்பி, ஹாலில் ஆளுக்கு ஒரு பக்கம் படுத்துக் கொண்டனர்.
அறைக்குள் வந்த பவித்ரன் அமைதியாகப் படுத்துகொள்ள… ஸ்ரீநிதி அவனிடம் கோபமா என்று கேட்க… வாயில் விரல் வைத்து பேசாதே என்பது போலக் காட்டியவன், “அப்பா அம்மா ஹால்ல தான் இருக்காங்க. இப்போ பேசினா வெளிய கேட்கும். நாளைக்குப் பேசிக்கலாம்.” என்றவன் உறங்கிப் போனான். ஸ்ரீநிதிக்கு தான் புது இடம் என்பதால் உறக்கம் அவ்வளவு எளிதாக வரவில்லை.
ஸ்ரீகாந்த காலை சீக்கிரம் எழுந்தவன், அவன் அம்மாவையும் எழுப்பிக் கிளம்பச் சொல்ல… சந்திராவும் எழுந்து தயாரானார். சீதா அவர்களுக்குக் காபி போட்டுக் கொடுக்க அதைக் குடித்து விட்டு உடனே கிளம்பி விட்டனர்.
சந்திரா செல்வதற்கு முன், “நீங்க எப்ப ஊருக்கு வர்றீங்க? இப்போ தானே கல்யாணம் ஆகி இருக்கு. சின்னஞ்சிறுசுங்க தனியா இருக்கணும்னு நினைப்பாங்க, அதனால கேட்டேன்.” என மறைமுகமாக நீங்களும் கிளம்ப வேண்டியது தானே என்றார்.
“உங்க பொண்ணுக்கு நீங்க நிறையச் சொல்லிக் கொடுக்கவே இல்லை. இப்படியே எப்படி விட்டுட்டு வர்றது. அவங்க வரையில் சமைக்கவாவது தெரியணும் இல்ல… உங்க பொண்ணு தனியா சமாளிப்பான்னு தெரிஞ்சா உடனே கிளம்பிடுவோம்.” என சீதாவும் பதிலுக்கு நன்றாகத் திருப்பிக் கொடுத்தார்.
இந்த அம்மா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் தேவலை என்று இருந்தது ஸ்ரீநிதிக்கு.
ஒரு வழியாகச் சந்திரா சென்று விட… வீடே அமைதியாக இருந்தது.
பவித்ரன் சென்று மீண்டும் படுத்து விட… ஸ்ரீநிதிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க…
“நீயும் போய் இன்னும் கொஞ்ச நேரம் படு. எட்டு மணி போல எழுந்து குளிச்சிட்டு வா… காலையில டிபன் செய்வோம்.” என சீதா அனுப்பி வைத்தார்.
கணவனின் அருகில் கட்டிலில் படுத்தவள், இரவு கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்க…
“இப்போ நான் கோபப்பட்டு என்ன ஆகப் போகுது. அதுதான் உனக்குத் தேவையானது எல்லாம் வாங்கிட்ட இல்ல… நானும் உனக்கு வாங்கிக் கொடுக்காம இருந்திருக்க மாட்டேன்.” என்றான்.
“இப்போ எல்லோருமே செய்யுறது தான். சம்யுக்தாவுக்குக் கூட அப்பா வாங்கித்தான் கொடுத்தார்.”
“ஆனா அவங்க உங்க அம்மா போல ஆரி அண்ணாவை குறைவா நினைச்சு வாங்கிக் கொடுத்திருக்க மாட்டாங்க. அப்படிக் கொடுத்திருந்தா ஆரி அண்ணா வாங்கி இருப்பாரா என்ன? அன்பா கொடுக்கிறதும் இதுவும் ஒண்ணா என்ன?’ என அவன் திருப்பிக் கேட்க.,…
“எங்க அம்மா பேசுறதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க. அவங்க அப்படித்தான்.” என்றாள்.
“சரி விடு.” என்றவன், மனைவியை அனைத்துக் கொண்டான்.
அன்று மாலை கடற்கரைக்கு பவித்ரன் அழைத்துச் சென்றான். இரவு பேருந்தில் பவித்ரனின் தந்தையும் தம்பியும் ஊருக்கு கிளம்பி விட்டனர். சீதா மட்டும் இருந்தார்.
மேலும் இரண்டு வாரங்கள் இருந்து மருமகளுக்கு வேலைகளைப் பழக்கிக் கொடுத்து விட்டு அவரும் சென்று விட்டார்.
திருமண வேலையில் பவித்ரன் வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு முயலவில்லை. அதனால் இப்போது அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான்.