“உங்க அம்மாவுக்காக எல்லாம் நான் வாழ முடியாது. எனக்கு ஆரியன் அண்ணனை முன்னாடி இருந்தே தெரியும். நான் அவரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.” என்றான் தெளிவாக.
“நாம் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்ளும் கணவன் இல்லை.” என ஸ்ரீநிதிக்கும் புரிய…. “இல்லை சொன்னேன்.” என்றாள்.
“அவங்க ரெண்டு பேரும் என்னமா குடும்பம் நடத்துறாங்க தெரியுமா? ரெண்டு பேர் குடும்பத்தையும் விட்டுக் கொடுக்காம… நிஜமா பார்க்கவே சந்தோஷமா இருக்கு.” என்றான்.
“அப்புறம் உங்க அம்மா எங்க வீட்ல வீடு வாங்கிறதை பத்தி பேசினாங்களாம். வீடு எல்லாம் என்னோட சொந்த விஷயம். அதுல யார் தலையிடறதும் எனக்குப் பிடிக்காது. எனக்கு எப்போ வாங்கணுமோ அப்போ நான் வாங்கிப்பேன். நீ அவங்ககிட்ட சொல்லிடு.” என்றான்.
பணத்தைக் காட்டி எல்லாம் தன் வருங்காலக் கணவனை மசிய வைக்க முடியாது என ஸ்ரீநிதிக்கு புரிய….
“அவங்க எதோ மகள் சொந்த வீட்ல இருக்கணும்னு ஆசையில சொல்றாங்க. நாங்களே வாங்கிப்போம்னு நான் சொல்லிக்கிறேன்.” என்றாள். பிறகே பவித்ரன் சமாதானம் ஆனான்.
“இன்னும் ரெண்டு வருஷத்துல நாம சொந்த வீடு வாங்கிடலாம். நாமலே வாங்கினாத்தான் நமக்குப் பெருமை.” என்றான் சமாதானம் போல… அவன் அப்படிச் சொல்லியதும் ஸ்ரீநிதிக்கும் மனம் உருகி விடச் சரி என்றாள்.
ஆரியன் பவித்ரனிடம் என்ன சொல்ல நினைத்திருந்தானோ அதைச் சொல்லி விட்டான்.
அவன் வீட்டுக்கு வந்ததும், “என்னது என்னை அடிப்பீங்களா?” என சம்யுக்தா சேலையை வரிந்து கட்ட….
“அடிப்பேன்னு எங்க சொன்னேன். அடிச்சாலும் கேட்க மாட்டாங்கன்னு தானே சொன்னேன். நான் போய் உன்னை அடிப்பேனா.” என்றவன், மனைவியின் பளிங்கு போல இருந்த இடையைக் கிள்ளி வைக்க…. எதிர்பாராததால் சம்யுக்தா துள்ள… அவளைக் கைகளில் அள்ளியவன், “உன்னைக் முழுசா கொஞ்ச போறேன்.” என்றவன், அவன் சொன்னதைச் செய்யவும் செய்தான். முத்தமிட்டு முத்தமிட்டே மனைவியை உடல் சிவக்க வைத்தான்.
திருமணத்திற்குப் புடவை எடுக்கப் போகும் போதும், “உங்களுக்கு எவ்வளவுக்கு எடுக்கணுமோ நீங்க அவ்வளவுக்கு எடுத்தா போதும். நீங்க யார் பேச்சையும் கேட்க வேண்டாம்.” என பவித்ரன் பெற்றோரிடம் சொல்லியே அனுப்பினான். அவர்களும் மகன் சொன்னது போலவே ஸ்ரீநிதியை அழைத்துச் சென்று திருமணதிற்குப் புடவை எடுத்துக் கொண்டு வந்தனர். சந்திராவும் உடன் சென்றார் தான். ஆனால் அவர் சொன்னதை யாரும் காதில் வாங்கவில்லை.
நாள் சுருக்கமாக இருந்ததால் சக்ரவர்த்தி ஸ்ரீநிதியின் திருமணதிற்குக் கொஞ்சம் பத்திரிகை தான் அடித்தார். ஸ்ரீகாந்தின் திருமணதிற்கு விரிவாக அழைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்.
சந்திரா எதாவது குறை பாடிக் கொண்டே தான் இருந்தார். அவரை யாரும் எங்கேயும் மதிக்கவில்லை. நீ கத்திக் கொண்டே இரு என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.
ஆரியன் முன்னின்று கல்யாண வேலைகளில் எதுவும் ஈடுபடவில்லை. அவன் சொன்னது போல விலகியே நின்றான். ஆனால் அவன் மாமா மற்றும் பவித்ரனுக்காகத் திருமணத்தன்று மட்டும் சென்று தலையைக் காட்டி விட்டு வந்து விட வேண்டும் என்று நினைத்தான். சந்திராவும் திருமணத்திற்கு அழைக்க வந்தவர், சம்யுக்தாவை அழைக்கவில்லை.
ஸ்ரீநிதியின் திருமணத்தின் போது ஆரியனும் சம்யுக்தாவும் ஊரில் தான் இருந்தனர். சம்யுக்தாவுக்குத் திருமணதிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. ஆனால் சந்திராவை நினைத்து செல்ல பயமாகவும் இருந்தது.
ஸ்ரீகாந்த சம்யுக்தா வர வேண்டும் என்று விரும்பினான். அதை அவன் சொல்லவும் செய்ய… சந்திரா அவள் வந்திடுவாளா என்று எகிறிக்கொண்டு வர…
“அம்மா உங்களோட எல்லாம் போகட்டும்மா… அவளுக்கும் நாங்க தானே இருக்கோம். அதோட நம்ம அத்தை பையனையே கல்யாணம் பண்ணி இருக்கா… அவ வரலைனா நல்லா இருக்குமா.” என்றான்.
“ஆமாம் என் வீட்டுகாரர் சும்மாவே ஆரி அண்ணான்னு தான் இருக்கார். அவரும் சம்யுக்தா வரலைனா ஒத்துக்க மாட்டார்.” என ஸ்ரீநிதியும் மெல்ல சொல்லிப் பார்க்க…
“ஓ… நீங்க எல்லாம் கூட்டா… அவ வரட்டும் வந்தா பிறகு நான் யாருன்னு அவளுக்குத் தெரியும்.” என்றார்.
திருமணத்திற்கு முன்தினம் நிச்சயத்திற்கு ஆரியன் மட்டுமே அவன் பெற்றோருடன் சென்றான். சம்யுக்தா செல்லவில்லை. அவளே செல்லவில்லை தான் ஏன் செல்ல வேண்டும் என அவினாஷும் தோழிக்குத் துணையாக வீட்டில் இருந்து கொண்டான்.
நிச்சயம் முடிந்து மணமக்கள் இருவரும் சேர்ந்து வரவேற்புக்கு மேடையில் ஒன்றாக நின்றனர். பவித்ரன் ஸ்ரீநிதி ஜோடி பொருத்தம் பார்க்க நன்றாக இருந்தது.
பலமுறை பவித்ரன் ஆரியனை மேடைக்கு அழைத்தும், அவன் வரவில்லை. உறவினர்கள் எல்லாம் சென்ற பிறகு ஆரியன் அவன் பெற்றோருடன் மேடை ஏறினான்.
எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுக்க… “சம்யுக்தா எங்க?” என பவித்ரன் ஆரியனிடம் கேட்க…
“அவ வரலை.” என்றான்.
“என்ன அண்ணா சொல்றீங்க? அவங்க அக்கா கல்யாணம் வரலையா?”
ஆரியன் பதில் சொல்லாமல் இருக்க… பவித்ரன் ஸ்ரீநிதியை பார்த்தான்.
“நீ வர சொல்லி சொல்லலையா?” என அவளிடம் கேட்க…
“நான் அம்மாகிட்ட சொன்னேன் தான். ஆனா அவங்க ஒன்னும் சொல்லலை.” என்றாள்.
“அண்ணா நீங்க நாளைக்கு சம்யுக்தாவோட தான் கல்யாணத்துக்கு வரணும்.” என்றான்.
“வேண்டாம் பவித்ரன், நான் என்னைப் பேசினா கூடச் சும்மா இருந்திடுவேன். அவளை யாராவது பேசினா… சும்மா இருக்க மாட்டேன். வீண் பிரச்சனை வேண்டாம். கல்யாணம் முடிஞ்சு நீங்க உங்க வீட்ல இருக்கும் போது நான் அவளைக் கண்டிப்பா கூட்டிட்டு வரேன்.” என்றான்.
“அண்ணா நம்மை மீறி யாரு என்ன பேசிடுவா… நீங்க கூட்டிட்டு வாங்க பார்த்துக்கலாம்.” என பவித்ரன் சொல்ல… அதைக் கேட்டபடி சந்திரா அங்கே வர…
“எனக்கு யாரைப் பார்த்ததும் பயம் இல்லை பவித்ரன். நான் ஒதுங்கிப் போறேன் அவ்வளவு தான். என் பொண்டாட்டி கண்டவங்ககிட்ட எல்லாம் பேச்சு வாங்கணும்னு அவசியம் இல்லை.” என்றவன் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றான்.
நான் கண்டவளா இவனுக்கு… இவன் பொண்டாட்டியை என்கிட்டே இருந்து காப்பாத்துறானா… இருக்கட்டும் பார்த்துக்கிறேன் என சந்திரா வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்தார்.
“பெரியவங்க எப்படியோ இருக்கட்டும் சின்னவங்க சேர்ந்து இருக்கக் கூடாதா. சம்யுக்தாவும் இருந்தா நல்லா இருக்கும்.” மனம் கேளாமல் ஸ்ரீநிதியிடம் பவித்ரன் புலம்பினான்.
மறுநாள் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. இப்போதும் ஆரியன் மட்டுமே வந்து கலந்து கொண்டான்.
சக்ரவர்த்தி அந்தந்த வேளைக்குத் திருமண விருந்தை இளைய மகளுக்கு வீட்டுக்கே அனுப்பி வைத்தார்.
“கல்யாணத்துக்குப் போறதா முக்கியம். நமக்குச் சோறு தான் முக்கியம். அது வந்திடுச்சு இல்ல….” என அவினாஷ் சொல்லியபடி உணவை ஒரு கட்டு கட்ட…
அவள் சொன்னதைக் கேட்டபடி வந்த ஆரியன், “கிளம்பு, பெண்ணும் மாப்பிள்ளையும் இப்போ மாப்பிள்ளை வீட்டுக்கு வருவாங்க. பவித்ரன் வேற உன்னை ரொம்பக் கேட்டான். போயிட்டு வந்திடலாம்.” என்றான்.
சம்யுக்தா பட்டுப் புடவையில் கிளம்பி வர… இருவரும் பைக்கில் சென்றனர்.
உள்ளுரில் தான் மாப்பிள்ளை வீடு என்றாலும், ஸ்ரீநிதிக்கு முதல் முதலாகச் செல்வதால் தயக்கம் இருந்தது. ஆனால் அங்கே ஆரியனும் சம்யுக்தாவும் இருக்க… பவித்திரன் அவர்களைப் பார்த்ததும் சந்தோஷமாக வரவேற்க… இவளும் இறுக்கம் தளர்ந்து தங்கையைப் பார்த்து, “எப்போ வந்த?” என்றாள்.
“இப்போதான் வந்தோம்.” என சம்யுக்தா பதிலுக்குச் சொல்ல…
“மேடம் இங்கேயாவது வந்தீங்களே…” என்ற பவித்ரன், “ஆரி அண்ணா பொண்டாட்டியோட இருக்கும்போது தான் சிரிப்பீங்களா?” எனச் சகலையை வம்பிழுக்க…
“அப்படித்தான்னு வச்சுக்கோ… இருக்கிறவங்க கூட இருக்கணும் இல்ல…” என ஆரியன் உணர்ந்து தான் சொன்னான்.
செய்ய வேண்டிய சடங்கு சம்ப்ரதாயங்கள் செய்து முடித்து, தம்பதிகள் ஹாலில் வந்து உட்கார… ஆரியன் இருவருக்கும் விலை உயர்ந்த கைகடிகாரம் வாங்கி இருக்க… அதை மனைவியிடம் கொடுத்து இருவருக்கும் கொடுக்கச் செய்தான். ஏற்கனவே அவன் பெற்றோர் தனியாக மொய் செய்திருந்தாலும், அவர்கள் பங்கிற்கு வாங்கி இருந்தான். அப்போது புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
பவித்ரன் வீட்டினர் அவர்களை நன்றாக உபசரிக்க.. சம்யுக்தாவும் அவர்களுடன் கலகலப்பாகப் பேசினாள்.
ஆரியன் சம்யுக்தாவைப் பார்த்து கிளம்பலாமா? என்று கேட்க…
“அத்தான், சம்யுக்தா என்னோட இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டும்.” என்றாள் ஸ்ரீநிதி.
இப்போ மட்டும் இவளுக்கு இவ தங்கச்சி வேண்டுமா என நினைத்த ஆரியன், “நீ உன் வீட்டு ஆளுங்களோட பழகு. நாங்க இங்க இருந்தா நீங்க எங்களோட தான் பேசிட்டு இருப்பீங்க. நாங்க கிளம்புறோம்.” என்றவன் மனைவியோடு கிளம்பி விட்டான்.
பைக்கில் செல்லும் வழியில், “என்னங்க இப்போ வீட்டுக்கா போறோம்.” என சம்யுக்தா கேட்க…
“உனக்கு வேற எங்க போகணும்?” என ஆரியன் திருப்பிக் கேட்க…
“கஷ்ட்டப்பட்டுப் பட்டு புடவை எல்லாம் கட்டிட்டு வந்தேன். எங்காவது வெளிய போகலாமா?” என்றாள்.
“ஏன் உன் புடவையை இன்னும் நிறையப் பேர் பார்க்கணுமா?” என்றதும்,
“ஆமாம் எப்படிக் கண்டுபிடிச்சீங்க.” என்றாள்.
“பொம்பளைங்களைப் பத்தி தெரியாதா?”
“ரொம்பத் தான் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.” என்றவள்
“பார்த்த முதல் நாளே….
உன்னைப் பார்த்த முதல் நாளே…” எனப் பாட்டுப் பாட….
“அப்படியா சம்யு?” என ஆரியன் கேட்க…
“ஆமாம்னு சொல்லத்தான் ஆசை. ஆனா என்னைப் பார்த்த அன்னைக்கு வெட்டவா குத்தவான்னு தானே பார்த்தீங்க. அப்புறம் எப்படி?” என்றாள்.
ஆரியனுக்கு அவள் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பு வர… “அது தான் இப்போ மொத்தமா விழுந்துட்டேன் இல்ல.” என்றான்.
மனைவியிடம் வம்பிழுத்துக் கொண்டு வந்தாலும், அவள் விருப்பப்பட்டபடி மலை கோவிலுக்கு அழைத்து வந்திருந்தான்.
“நீங்க கொஞ்சம் நல்லவர் தான்.” என்றாள்.
“கொஞ்சம் தானா…” எனச் சிரித்தவன், வண்டியை நிறுத்திவிட்டு, மனைவியுடன் கோவிலுக்குச் சென்று, மலைமேல் இருந்த முருகரை சாமி தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியான மனநிலையில் கீழே இறங்கினர்.