அன்புள்ள கண்ணாளனே

அத்தியாயம் 17

பவித்ரன் சென்றதும், “அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் சிரிப்பு? பவித்ரன் என்ன நினைப்பான்? அவன் நீங்க அவனைக் கேலி பண்ணி சிரிக்கிறதா நினைக்க மாட்டானா….” என ஆரியன் சம்யுக்தாவையும் அவினாஷையும் ஒரு பிடி பிடிக்க…

நாங்க அவரைத் தான் கேலி செஞ்சு சிரிச்சோம்.” என அவினாஷ் ஒத்துக்கொள்ள….

அவரு மட்டும் பெண்ணா இருந்திருந்தா உங்களைத் தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருப்பார் போல… அந்த அளவுக்கு உங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கார்.” என சம்யுக்தா சொல்ல…

என்ன பேசுற நீ…” என்றவனுக்கும் சிரிப்பு தான்.

அவங்களுக்கு அவ்வளவு வசதி இல்லை. சின்னதுல ரொம்பக் கஷ்ட்டபட்டிருக்காங்க போல… அவன் வேலைக்குப் போனாத்தான் முன்னேற முடியும்னு நிலை. அவனுக்கு என்ன படிக்கிறதுன்னு தெரியலை… இன்ஜினியரிங்ல என்ன கோர்ஸ் எடுக்கிறதுன்னு கூடக் குழப்பம். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்ததும், அவனும் அதே எடுத்து படிச்சிருக்கான். உடனே வேலை கிடைச்சிட்டது போல… அவங்க குடும்பத்துல இது போல யாரும் அவனுக்கு முன்னோடி இல்லை. அதுதான் வேற ஒன்னும் இல்லை.”

கஷ்ட்டப்பட்டு மேல வந்திருக்கான். இனிமேயாவது நல்லா இருக்கணும். வேற கம்பெனியில இன்னும் கொஞ்சம் நல்ல சம்பளத்துல வேலை பார்த்து கொடுக்கணும்.” என்றான் ஆரியன்.

பவித்ரனின் குடும்பத்தினர் குணமானவர்கள். பிரச்சனை வந்தால் பணத்தால் தான் வரும். அதனால் ஆரியனே அவனுக்கு வேறு நிறுவனத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்ய நினைத்தான்.

இந்த வேலையை விட்டுவிட்டால் வேறு வேலை கிடைக்குமோ என்ற அச்சத்தில் பவித்ரன் கிடைத்த நிறுவனத்தில் சேர்ந்திருந்தான். ஆனால் அவன் திறமைக்கு இன்னும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

அன்று இரவு ஸ்ரீநிதியே பவித்ரனை கைபேசியில் அழைத்து விட…

ஹே… நீயே கூப்பிடுவேன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை.” என்றான்.

நீங்க இன்னைக்குச் சென்னைக்குப் போறேன்னு சொன்னீங்களே… கிளம்பிடீங்களா….”

ம்ம்… பஸ்ல தான் இருக்கேன்.”

அப்புறம்…” என்றாள். ஆரியனைப் பார்க்க சென்றாயே என்ன ஆனது என்பதை நேரடியாகக் கேட்காமல்… அவனே சொல்லாடும் என்று நினைத்தாள்.

நீ சாப்பிட்டியா?” என பவித்ரன் கேட்க…

சாப்பிட்டேன், நீங்க ஆரியன் அத்தானை பார்த்தீங்களா இல்லையா?” எனக் கேட்டே விட்டாள்.

ஹே… சொல்ல மறந்துட்டேன். முதல்ல இன்னைக்குப் பார்க்க முடியாதுன்னு தான் சொன்னார். அப்புறம் அவரே வர சொன்னார். போய்ப் பார்த்திட்டு வந்தேன்.”

அப்படி என்ன உங்களுக்கு அவரைப் பார்க்கணும்?” ஸ்ரீநிதி கடுப்பாகக் கேட்டு வைக்க…

எனக்கு அவர் எவ்வளவு முக்கியம் தெரியுமா?” என்றவன், அவனைப் பற்றி அவன் குடும்பத்தைப் பற்றிச் சொன்னான்.

எனக்கே தெரியும், நான் இப்போ வேலை பண்றது என்னோட தகுதிக்கு குறைவான இடம்னு… ஆனா வேற கம்பெனிக்கு போக யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா ஆரி அண்ணா உடனே சொல்லிட்டாங்க. நீ இன்னும் நல்ல கம்பனி பார்க்கலாம்னு. அவங்களும் வேற வேலைக்குச் சொல்றேன்னு சொல்லி இருக்காங்க. வேற கம்பனி போனா எப்படியும் ஒன்னாவது வரும்.”

ஒரு லட்சமா?” என ஸ்ரீநிதி வாயைப் பிளக்க… ஆமாம் பிடித்தமெல்லாம் போகக் கைக்கு என்பதாவது வரும். வேலை கிடைக்கட்டும் பார்க்கலாம்.” என்றவன்,

சம்யுக்தா காலேஜ் தானே படிக்கிறாங்க. ஆனா ரொம்பப் பொறுப்பு தெரியுமா அந்தப் பொண்ணு. ஆரியன் அண்ணா கல்யாணம் பண்ணி இருக்காங்கன்னா… காரணம் இல்லாமலா பண்ணி இருப்பாங்க.” என்று வேறு பவித்ரன் சொல்ல… ஸ்ரீநிதிக்குப் பொறாமையாகத்தான் இருந்தது.

தான் திருமணம் செய்யப் போகிறவன் தன்னை விட்டு தன் தங்கையைப் புகழ்வது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

சரளாவுமே இன்று வந்த இடத்தில் உறவினரிடம் மருமகளைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

என்ன அவளுக்குத்தான் எல்லாம் தெரியுமா நமக்குத் தெரியாதா என்ற எண்ணம் தோன்ற,…

நீங்க சாப்பிடீங்களா?” என பவித்ரனை பேச்சில் தன் பக்கம் திருப்பினாள். அதில் வெற்றியும் கண்டாள். அவனிடம் வெகு நேரம் பேசிவிட்டு வைத்தாள். ஸ்ரீநிதியும் நல்ல மாதிரி தான் என்ற எண்ணம் பவித்ரனுக்குத் தோன்றும் அளவுக்கு அவனிடம் அக்கறை காட்டி பேசி இருந்தாள்.

திருமணதிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லை. அதனால் வேலைகள் வரிசை கட்டி நிற்க… இந்த முறையாவது திருமணம் நல்லபடியாக நடத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீகாந்த் தந்தையுடன் சேர்ந்து கல்யாண வேலைகளைப் பார்த்துக் கொண்டான்.

கோர்ட்டில் வழக்கு முடிந்து தனசேகருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க… அவரைப் பெயிலில் எடுக்க வேறு அவர் குடும்பம் நிறையச் செலவு செய்திருக்க… “அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட்டு இப்போ பாருங்க நம்ம பணம் எல்லாம் போகுது.” என அவர் மனைவி திட்டியபடி கணவரை சிறைக்கு அனுப்பி வைத்தார்.

தான் ஏன் அப்படிச் செய்தோம் என தனசேகர் இப்போது வருந்தினார். ஆனால் இனி வருந்தி என்ன பயன்?

உள்ளுரில் தானே மாப்பிள்ளை வீடு. சந்திரா எதோ விசாரிப்பது போலச் சென்றவருக்கு, அந்தப் பழைய காலத்து வீட்டை பார்த்ததும் ஆற்றாமை தான். முன்பு போல இருந்திருந்தால் மகளுக்கு இங்கே செய்ய விட்டிருப்பாரா என்ன? அந்த ஆதாங்கம் மனதிற்குள் இருந்ததால்..முதலில் சற்று மிடுக்குடனே நடந்து கொண்டார்.

பவித்ரனுடைய அம்மா சீதா எப்படி என்றால்… பார்க்கத்தான் ஆள் சாது போல இருப்பார். ஆனால் மிகவும் மனவலிமை மிக்கவர். உழைச்சுச் சம்பாதிக்கிறோம் அதுல நல்லபடியா இருக்கோம். வசதி குறைவு என்பதால் நாங்கள் ஒன்றும் குறைவானவர்கள் அல்ல என்ற எண்ணம் கொண்டவர். அதனால் அவர் சந்திராவிடம் சாதரணமாகவே நடந்து கொண்டார்.

பணக்கார சம்பந்தி ராஜ உபசரணை நடக்கும் என்று எதிர்ப்பார்த்த சந்திராவுக்கு ஏமாற்றமே.

திருமணப் புடவை, தாலி எல்லாம் மாப்பிள்ளை வீட்டினர் தான் வாங்க வேண்டும். எதுவும் குறைவாக வாங்கி விடுவார்களோ என்ற எண்ணத்தில், இவ்வளவுக்காவது எடுக்கணும். அவ்வளவுக்காவது எடுக்கணும் என சந்திரா சொல்ல… ஆமாம் இல்லை என்று சீதா எதுவும் சொல்லவில்லை.

சென்னையில வீடு வாங்கிறதுன்னா கூட உங்க பையனை பார்க்க சொல்லுங்க. நான் ஸ்ரீநிதி அப்பாகிட்ட இருந்து பணம் வாங்கிக் கொடுக்கிறேன். நல்ல வீடா பார்க்க சொல்லுங்க.” என்றார்.

அப்போது மட்டும் ஸ்ரீநிதியின் தந்தை, “அதெல்லாம் பையனோட விருப்பம். அவன் ஆபீஸ் மாறனும்னு வேற சொல்லிட்டு இருந்தான். வீடு ஒரு இடத்தில வாங்கிட்டு ஆபீஸ் வேற இடத்தில இருந்தா சிரமம் தானே… அதெல்லாம் அவன் வாங்கும் போது அவன் பார்த்து வாங்கிப்பான்.” என அவர் முடித்துக் கொண்டார்.

சந்திரா ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றார்.

பவித்ரனின் பெற்றோர் அவனிடம் சொல்ல… அந்த வாரம் ஊருக்கு வந்தவன், ஆரியனுக்கு அழைத்து அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்க…. அவன் மதுரையில் என்றான்.

அண்ணா நான் சென்னைக்குப் போகப் பஸ் ஏற மதுரைக்குத் தான் வருவேன். அப்போ வந்து உங்களைப் பார்க்கட்டா… எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றான்.

அவன் அப்படிச் சொல்லியதும், என்ன வரப் போகிறதோ என ஆரியனுக்குப் பதட்டம் தான். ஆனால் காட்டிக் கொள்ளாமல் சரி பார்க்கலாம் என்றான்.

ஆரியன் அவனைத் தங்கள் வீட்டுக்கு தான் வர சொல்லி இருந்தான். ஞாயிறு அன்று மாலை பவித்ரன் ஆரியனின் வீட்டுக்கு வந்தான். வரும் போது நிறையப் பழங்கள் வாங்கி வந்திருந்தான். அதைச் சம்யுக்தாவிடம் தான் கொடுத்தான்.

என்ன இருந்தாலும் உன் மச்சினிச்சி மேலதான் உனக்கு அக்கறை.” என ஆரியன் கேலி செய்ய….

ஆமாம் என்னோட பொண்டாட்டியோட தங்கச்சி இல்லையா…” என்றான் பவித்ரனும் விளையாட்டு போலவே.

அவனுக்குக் குடிக்கக் கொண்டு வந்து கொடுத்து விட்டு சம்யுக்தா இரவு சமையலை கவனிக்கச் செல்ல…

எதோ பேசணும்னு சொன்னியே….” ஆரியன் கேட்க…

அவங்க அம்மா எல்லா விஷயத்திலேயும் தலையிடுறாங்க. இப்போ கூட வீடு வாங்க சொல்லி எங்க வீட்ல வந்து பேசி இருக்காங்க. பணமும் கொடுக்கிறதா சொல்லி இருக்காங்க.”

அவங்க எங்க வசதி தெரிஞ்சு தானே ஓகே சொன்னங்க. வீடெல்லாம் என்னோட தனிப்பட்ட விஷயம். அது நானே வாங்கினாத்தானே எனக்குச் சந்தோஷமா இருக்கும்.”

நீ சொல்றது சரிதான், எங்க அத்தை அப்படித்தான். நீ இதே ஊர்ல இருக்க உனக்குத் தெரியாதது ஒன்னும் இல்லை. உனக்கு விருப்பம் இல்லாம நீ எதுக்கும் இறங்கி வராதே… ஸ்ரீநிதி எப்படி அவ ஓகே வா அதைச் சொல்லு.” என்றதும்,

அவ நல்லத்தான் இருக்கா… ஆனா அவங்க அம்மா தலையீடு இல்லாம இருந்தா இன்னும் நல்லா இருப்பா.” என்றான்.

அதைத் தான் எப்படிச் சொல்வது என்றுதான் ஆரியன் யோசித்துக் கொண்டிருந்தான். இப்போது பவித்ரனே அதைப் புரிந்து கொண்டிருந்தான்.

அத்தையைப் பார்க்க எங்க மாமா இருக்கார். அவங்க பையன் இருக்கான். நீ அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டனும்னு அவசியம் இல்லை. முதல்ல இருந்தே நான் இப்படித்தான்னு நீ இருந்து காட்டு. உனக்குச் சரின்னு பட்டதைச் செய்.”

சரி அண்ணா.”

டேய் ஆடு மண்டையை அசைச்சா தான் வெட்டுவாங்க. எங்க அத்தைகிட்ட மண்டையை மட்டும் அசைச்சிடாதே… அப்புறம் உன்னை அந்த ஆண்டவன் கூடக் காப்பாத்த முடியாது.” என்றான் சிரித்தபடி.

நீங்க அப்படித்தான் இருக்கீங்களா.”

எப்பவும் இவருக்கும் பெரியம்மாவுக்கும் சண்டை தான். ரெண்டு பேரும் எதிரும் புதிருமா தான் இருப்பாங்க.” என்றாள் சம்யுக்தா.

உங்க அம்மாகிட்ட எப்படி இருப்பார்? அவங்க எப்படி?” என பவித்ரன் கேட்க….

என் மாமியார் ரொம்ப சாது டா… அவங்க எதுலையும் தலையிட மாட்டங்க. நான் இவளை ரெண்டு அடி அடிச்சாக் கூடக் கேட்க மாட்டாங்க. அவ்வளவு நல்லவங்க என் மாமியார்.” என ஆரியன் மனைவியைப் பார்த்துக் கொண்டு சொல்ல..

அந்த மாதிரி எங்க அம்மாவை ஏமாத்தி வச்சிருக்கார். மாப்பிள்ளை எது செஞ்சாலும் காரணம் இருக்கும்னு தான் என் அம்மா நினைப்பாங்க. ஆனா என் மாமனார் மாமியார் அப்படி இல்லை. அவங்க எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க.” என்றாள் சம்யுக்தா பெருமையாக.

அவர்கள் விளையாட்டு போலப் பேசினாலும், இருவருக்கும் மற்றவரின் குடும்பத்தின் மீது அன்பும் அக்கறையும் இருக்கிறது என்று புரிந்தது.

ஸ்ரீநிதியோட தாய் மாமா தானே வேணும்னே விபத்து ஏற்படுத்தினது. வீட்ல சொன்னாங்க. இப்போ எப்படி இருக்காங்க உங்க அம்மா?” என பவித்ரன் கேட்க…

நல்லா இருக்காங்க.” என சம்யுக்தாவும்,

என்ன நல்லா ஆனாலும் முன்னாடி மாதிரி இல்லை. பாவம் அவங்களுக்குக் கையில எதையும் அழுத்தி பிடிக்க முடியாது. அதே போல ரொம்ப நேரம் நிற்கவும் முடியாது. ஆனா எதையும் வெளிய சொல்லாம சமாளிச்சுக்கிறாங்க.” என்றான் ஆரியன் வருத்தமாக.

பவித்ரனுக்கே சில விஷயங்கள் புரிய வந்தது. மற்றவர்கள் சொல்வது போலத் தன் மாமியார் தான் வில்லியோ எனத் தோன்றியது.

எங்க அப்பா அம்மா யார் வம்பு தும்புக்கும் போக மாட்டாங்க. அவங்களுக்கு இந்தச் சண்டை போடுறது எல்லாம் பிடிக்காது.” என்றான்.

நாம வீட்ல இருக்க எல்லாரையும் அலசி ஆராய்ஞ்சு எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது பவித்ரன். நீ எப்படி இருக்கணும்னு நினைக்கிறியோ அப்படியே இரு. நீ யாருக்காகவும் மாறாத. அப்புறம் உன்கிட்ட வேலை நடக்காதுன்னு அவங்களே புரிஞ்சு நடந்துப்பாங்க.”

நான் எப்படியும் வேலை மாறத்தான் போறேன். வெளிநாட்டுக்கு மாறிடலாம்னு பார்க்கிறேன். அப்போ எனக்கு நிறையத் தொல்லைகள் இருக்காதுன்னு தோணுது. அதோட நானும் கொஞ்சம் நல்லா செட்டில் ஆகிடுவேன். அதனால அந்த மாதிரி எதாவது வேலை இருந்தா சொல்லுங்க அண்ணா.” என,

சரி…அப்படியும் பார்க்கலாம். முதல்ல கல்யாணம் முடியட்டும். அப்புறம் ஒரு ரெண்டு மூணு மாசத்துல கிளம்புற மாதிரி பார்த்துக்கலாம்.” என்றான் ஆரியன்.