வீடு நிம்மதி தரும் இடமாக இருந்தால் தான் மனம் அமைதியாக இருக்கும். மனம் அமைதியாக இருந்தாலே நம் கடமைகளைப் பொறுப்புகளைக் குறை இல்லாமல் செய்ய முடியும்.
சொந்த தொழில் வேறு செய்கிறோம், திருமணத்திற்குப் பிறகு வேலையில் கவனம் செலுத்த முடியுமா? என முன் பலமுறை ஆரியனுக்கு தோன்றியது உண்டு. ஆனால் திருமணதிற்குப் பிறகு தான் அவன் இன்னுமே நன்றாக வேலை பார்த்தான்.
வீட்டை அவ்வளவு நன்றாக நிர்வகித்தாள் சம்யுத்தா. அவனுக்கு வீட்டில் எந்த டென்ஷனும் கொடுக்க மாட்டாள். எதாவது இல்லையென்றால் கூட உடனே போய் வாங்கி வரவேண்டும் என்று இல்லை… வேறு இருப்பதைக் கொண்டு அனுசரித்து விடுவாள்.
வார நாட்களில் இரவு உணவு அவள் அம்மாவே செய்து கொடுத்து விட்டாலும், மற்ற நேரம் மற்றும் வார இறுதியில் சம்யுக்தா தான் சமைப்பாள். வீட்டு வேலைகளில் ஆரியனிடம் எதுவும் எதிர்ப்பார்த்து இருக்க மாட்டாள். அவளே செய்து விடுவாள்.
அவ்வபோது சிறி சிறு சண்டைகள் வராமலும் இல்லை. சம்யுக்தா உறங்கி விட்டாள் என்றால் ஆரியன் சில நேரம் விடியற்காலை மூன்று மணி வரை கூட வேலை பார்ப்பான்.
அதற்காகவே சம்யுக்தா அவன் படுக்க வரும் வரை உறங்க மாட்டாள். பன்னிரண்டு மணி வரை பார்ப்பாள், அதற்கு மேலும் வரவில்லை என்றால் அழைத்து விடுவாள்.
“நீ தூங்கேன் டி.” என்பான்.
“எதுக்கு நைட் முழுக்க முழிச்சிட்டு இருக்கவா… நீங்களும் வாங்க.” என்பாள் பதிலுக்கு.
வேலை முடிந்து விட்டால் எழுந்து விடுவான்… இல்லையென்றால் எழுந்தே வர மாட்டான். அப்போது தான் இருவருக்கும் முட்டிக்கொள்ளும்.
“தூங்கமா கூட வேலைப் பார்க்கணுமா?” என்பாள்.
வார நாட்களில் ப்ராஜெக்ட் விஷயமாக நிறுவனங்களிடம் பேசுவது, அவனிடம் வேலை செய்பவர்களுக்கு அதை விளக்குவது மற்றும் அவர்கள் வேலையைச் சரியாகச் செய்கிறார்களா என்று பார்ப்பதிலேயே அவனுக்கு நேரம் சென்று விடும்.
மாலை வீட்டுக்கு வந்த பிறகு மற்றும் வார இறுதியில் தான் அவன் வேலையைப் பார்க்க முடியும்.
சம்யுக்தாவுக்குக் கணவன் உறங்காமல் தான் மட்டும் உறங்குகிறோமே என்று இருக்கும். விழி நிறைய உறக்கம் இருந்தாலும், கணவனுக்காக உட்கார்ந்திருப்பாள். அப்போது ஆரியனுக்கு வேலையே ஓடாது.
“ஏன் டி உயிரை எடுக்கிற.” என்று கத்தினாலும், மனைவி தனக்காகத் தான் பார்க்கிறாள் என்று தெரியும். அதனால் கண்டிப்பாக முடித்தே ஆக வேண்டும் என்று நாட்களைத் தவிர… மற்ற நாட்களில் நேரத்திற்கு உறங்க வந்து விடுவான்.
சில நாட்கள் ஆரியனே சீக்கிரம் உறங்கலாம் என்பான். சம்யுக்தா அவன் அருகில் படுத்ததும், காத்திருந்தது போல அவளை அனைத்துக் கொள்வான்.
“தெரியுமே, இன்னைக்கு ஏன் வேலை பார்க்கலைன்னு… நீங்க ஒன்னு நினைச்சிட்டா நடந்திடணும்.” எனக் கணவனைப் பேசினாலும், அவன் விருப்பத்திற்கு இசைந்தே கொடுப்பாள். சில நேரம் மனைவியை உறங்க வைத்து விட்டு பிறகு எழுந்து சென்று கூட வேலைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
வார இறுதியில் அவன் நிறுவனத்திற்கு விடுமுறை தான். ஆனால் ஆரியன் சனிக்கிழமை அன்றும் வேலைப் பார்ப்பான். சம்யுக்தாவுமே ரொம்பவும் வெளியே ஊர் சுற்ற எல்லாம் விரும்ப மாட்டாள்.
கணவன் வீட்டில் இருந்து வேலை பார்க்கிறானா அதே போதும் என்றிருப்பாள். அவள் எதாவது வேறு வேலைகளைப் பார்த்து பொழுதை போக்கி விடுவாள்.
“இவன் என்ன இப்படி இருக்கான். உனக்குப் போர் அடிக்கலையா?” எனச் சரளாவே கேட்பார்.
“எத்தனை பேர் அலைஞ்சு திரிஞ்சு வேலை பார்க்கிறாங்க அத்தை. அதோடு பொண்டாட்டியை விட்டுட்டு வெளிநாடெல்லாம் போய் எவ்வளவு பேர் இருக்காங்க. இவங்க வீட்ல இருந்து தானே வேலைப் பார்க்கிறாங்க. இது எவ்வளவோ பரவாயில்லை. அவங்க வேலையை முடிக்கணும் தானே…” என்பாள்.
அவங்க அப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்க என மற்றவர்களை ஒப்பிட்டு பார்த்து, கிடைத்த வாழ்க்கையையும் அனுபவிக்கத் தெரியாத பலருக்கு மத்தியில்… இருப்பதை வைத்து நிறைவாக சம்யுக்தாவுக்கு வாழ தெரிந்தது.
மொத்தத்தில் அவளும் சந்தோஷமாக இருந்து, ஆரியனையும் சந்தோஷமாக வைத்திருந்தாள். அதுவே அவனுக்கு மனைவியை இன்னும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்திருந்தது.
சின்னப் பெண் நாம் தான் அனுசரித்துப் போக வேண்டும் என நினைத்திருந்தான். ஆனால் அவள் ரொம்பவும் சரியாக இருக்கிறாள் என்று தோன்றியது. நாம் இருக்கிறோமா என்று தெரியவில்லை.
“என்கிட்டே எதாவது குறை இருக்கா சம்யு.” என அவளிடமே கேட்க…
“நீங்க வேலை பார்க்கிறது எல்லாம் சரிதான். ஆனா ரொம்ப நேரம் உட்கார்ந்திட்டே இருக்கீங்க. பின்னாடி எதாவது உடம்புக்கு வந்திடப் போகுது.” என ஒருநாள் அவள் கவலைப்பட….
“முன்னாடி எல்லாம் தினமும் பிரண்ட்ஸ் கூடப் பாட்மிட்டன் விளையாடுவேன். இப்போ தான் போறது இல்லை. இனிமே சனி ஞாயிற்றுக் கிழமை கண்டிப்பா போறேன். மத்த நாள் நாம ரெண்டு பேரும் நடக்கலாம்.” என்றவன், மாலை சற்று சீக்கிரமே வீடு திரும்ப ஆரம்பித்தான். இரவு உணவுக்கு முன்பு மனைவியோடு அரை மணி நேரம் நடந்து விட்டு வருவான். அப்போது இருவரும் நிறையப் பேசுவார்கள். எதாவது கடையில் வாங்க வேண்டியது இருந்தாலும் வாங்கிக் கொண்டு வந்துவிடுவார்கள்.
ஆரியன் சேர்த்து விட்டிருந்த கணினி வகுப்பையும் சம்யுக்தா முடித்திருக்க… ஆனால் அப்போதும் அவள் முன்பு போல ஊருக்கு செல்ல வேண்டும் என்று சொல்வது இல்லை.
சரளா வார இறுதியில் மதுரைக்கு வந்திருந்தவர், “சம்யு நிறைய மாறிட்ட… ஊருக்கு கூட முன்னாடி போல வர்றது இல்லை.” எனக் கொஞ்சம் சடவாகத்தான், எல்லோரையும் வைத்துக் கொண்டு தான் சொன்னார்.
அவருக்கு மருமகளின் மீது வருத்தம் தான் என எல்லோருக்கும் புரிந்தது.
“ஆமாம் நீ முன்னாடி மாதிரி ஊருக்கு போகணும்னு சொல்றது இல்லையே…” என ஆரியனும் போட்டுக் கொடுக்க…
“எனக்கு இங்கவிட ஊர்ல இருக்கத் தான் விருப்பம். நீங்க ஊருக்கே போகலாம்னு சொன்னாலும் எனக்கு ஓகே தான். ஆனா நீங்க தான வாயை வச்சிட்டு சும்மா இருக்காம… அங்க சந்திரா பெரியம்மாவோட பார்க்கிற நேரம் எல்லாம் சண்டை போடுறீங்க. அதுதான் எனக்கு ஊருக்கு போகவே பயமா இருக்கு.” என்றாள்.
“ஆமாம் நான்தான் சண்டைக்கு அலையுறேன். எனக்கு அப்படி ஒரு வேண்டுதல்.”
“நம்மால அப்பாவுக்குக் கஷ்ட்டம் இருக்கக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி சொல்லி, நான் ஒதுங்கியே இருந்து பழகிட்டேன். நீங்க கல்யாணத்துக்குக் கேட்ட போது கூட… ஊருக்கு வந்தா அவங்க என்னைப் பார்க்க வேண்டியது வரும், வீணா அப்பாவுக்குப் பிரச்சனை வரும்னு தான் வேண்டாம்னு சொன்னேன். இப்போ அதுதான் நடக்குது. இப்போ அப்பாவோட சேர்த்து அவங்க உங்களையும் பேசுறாங்க.”
“நான் பதிலுக்குப் பேச ஆரம்பிச்சா… எங்க அப்பாவுக்குத் தானே பிரச்சனை ஆகும். அதுதான் ஒதுங்கி போயிடலாம்னு நினைச்சேன்.”
“அவங்களுக்காக நீ ஊருக்கு வராம இருப்பியா? அவங்களும் தான் வீடு தேடி வந்து பேசுறாங்களே… என்ன பண்றது?” என்றார் சரளா.
“எப்பம்மா பேசினாங்க?” என ஆரியன் கேட்க…
சில மாதங்களுக்கு முன்பு நடந்ததைச் சரளா சொல்ல…
“என்கிட்டே ஏன் சொல்லலை?” என்றான்.
“நீங்க அவங்களைக் கேட்பீங்க, அது இன்னும் பிரச்சனை ஆகும். அவங்க நல்ல மாதிரி மாறுவதா இருந்தாதான் எப்பவோ மாறி இருக்கலாமே…. அவங்க குணம் அதுதான். ஆனா நீங்க அதைப் புரிஞ்சிக்காம அவங்க மாறிடுவாங்கன்னு நினைச்சு அவங்களோட மல்லுக்கு நிற்கிறீங்க. அவங்க உங்களைக் கண்டபடி பேசுறாங்க.”
மனைவி சொல்வது ஆரியனுக்குப் புரியவே செய்தது. திருந்தும் ஜென்மம் அல்ல சந்திரா. அவரிடம் பேசுவதே வீண்.
“சம்யு, இனிமே சந்திரா அத்தையை நேர்ல பார்க்கிற மாதிரி இருந்தாலும் நான் விலகி போயிடுறேன். இனி நான் அவங்களோட எதுவும் வச்சுக்க மாட்டேன். நான் பேசவும் மாட்டேன். அதனால நீ வீணா சங்கடப்படாதே…” என ஆரியன் மனைவியிடம் உறுதி கொடுத்தான்.
இவன் மட்டும் விலகி கொள்ளலாம் என்று நினைத்தால் போதுமா…. அதை உணர்ந்தது போல அவினாஷ், “இனிமே அவங்க வீட்டுக்கு வந்தாலும் உள்ள கூப்பிட்டு பேசாதீங்கமா.” என்றான்.
“அது எப்படி டா வீட்டுக்கு வர்றவங்களை வாங்கன்னு சொல்லாம இருக்கிறது. என்ன இருந்தாலும் அவங்களும் என் அண்ணனோட பொண்டாட்டி தானே….” சரளா சொல்ல…
“இவரு பேசாம இருந்தாலே போதும், அவங்க அடங்கிடுவாங்க. நாங்க அடுத்த வாரமே ஊருக்கு வரோம் அத்தை.” என்றாள் சம்யுக்தா.
சொன்னது போல மறுவாரம் வெள்ளிக்கிழமை மாலையே கணவனும் மனைவியும் ஊருக்கு சென்றனர். மருமகள் வந்தது சரளாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இத்தனை நாள் நல்ல நாளாக இல்லாததால்… அந்த வார ஞாயிற்றுக்கிழமை தான் பவித்தரன் வீட்டினர் சாஸ்திரத்துக்கு ஸ்ரீநிதி வீட்டுக்குப் பெண் பார்க்க வந்தனர். சரளா மட்டும் சென்றிருந்தார்.
திருமணத் தேதி, திருமணத்தை எப்படி நடத்துவது மற்றும் நிச்சயத்தைத் திருமணதிற்கு முன்தினம் செய்வது என எல்லாம் பேசி முடிவுக்கு வந்த பின்னர், பவித்ரன் எல்லோரின் முன்புமே, “ஆரி அண்ணா வரலையா… நான் அவர் வருவாருன்னு எதிர்ப்பார்த்தேனே.” என சக்ரவர்த்தியிடம் கேட்க…
“நான் அவரைப் பார்க்கலாம்னு நினைச்சேன்.” என்றவன் சரளாவிடம், “அண்ணா வீட்ல இருக்காங்களா….” என்று கேட்க…
சட்டென்று சரளாவுக்குப் பொய் சொல்ல வரவில்லை. அவர் ஆமாம் என்று உண்மையைச் சொல்லிவிட்டார். ஆரியனின் கைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டான்.
பவித்ரன் ஸ்ரீநிதியிடம் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும் போதும் ஆரியனைப் பற்றி விசாரித்தான்.
“எங்க வீட்ல உங்க அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு யோசிக்கத்தான் செஞ்சாங்க. நான்தான் ஆரி அண்ணனே சம்பந்தம் பண்ணி இருக்கும் போது, நமக்கு என்னன்னு சொன்னேன்.” என்று வேறு சொன்னான்.
“சூப்பர் தெரியுமா அவரு. ஸ்கூல்ல என்னோட சீனியர். சொந்தமா கம்பனி நடத்துறது ஈஸியா என்ன? எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். இனி சொந்தக்காரங்களா வேற ஆகப் போறோம். நான் அவரோட பேசி பழகலாம்.” என்றான்.
இப்படிச் சுற்றி சுற்றி ஆரியனிடமே வந்து மாட்டுவோம் என ஸ்ரீநிதி நினைக்கவில்லை. ஆரியன் சொன்னால் இவன் எதுவும் செய்வான் என்று தோன்றியது. அதுவே பெரிய கலக்கத்தைக் கொடுத்தது.
இந்த முறையாவது திருமணம் நிற்காமல் நடக்குமா என்ற கவலை அவளுக்கு வந்தது. அதே பயம் சந்திராவுக்கும் இருந்ததால்… அவர் அடக்கியே வாசிக்க… இரண்டாவது முறையும் திருமணம் நின்றால் என்ன ஆகும்? அதனால் தான். மாப்பிள்ளை வீட்டினரும் நல்ல மனநிலையிலேயே கிளம்பி சென்றனர்.
அவர்கள் சென்றதும் அறைக்கு வந்த ஸ்ரீநிதி ஆரியனுக்குக் கைப்பேசியில் அழைத்தாள்.
ஆரியன் முதலில் எடுக்கவில்லை. அவள் மீண்டும் அழைக்கவும் யோசனையாகத்தான் எடுத்தான்.
“தெரியும், பார்த்திருக்கேன். ஆனா ரொம்பப் பழக்கம் இல்லை.” என்றான்.
“ஆனா அவங்க உங்களைப் பத்தி தான் அதிகம் பேசுறாங்க.” என்றாள்.
“ஓ…” என்றவன் மேலும் எதுவும் ஆர்வம் காட்டி விசாரிக்கவில்லை.
அவளே விவரம் சொன்னவள், “அவங்க உங்களைப் பார்க்க வருவாங்கன்னு நினைக்கிறேன். நீங்க எதுவும் அவங்ககிட்ட சொல்ல மாட்டீங்களே?” என்று கேட்க….
“உன் கல்யாணம் நடக்கும் ஸ்ரீநிதி கவலைப்படாதே… ஆனா நீ உன்னை மாத்திக்கணும். நீ உங்க அம்மா மாதிரியே இருந்தேன்னு வை…. நானே உன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிக் கொடுத்து பவித்ரனுக்கு வேற கல்யாணம் கூடப் பண்ணி வைப்பேன்.”
“என்னை அந்த நிலைமைக்குத் தள்ளிடாதே….” என்றவன் வைத்து விட்டான்.
சரளாவும் வந்து அங்கு நடந்ததைச் சொன்னார்.
“ஐயோ… இவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணும்னா பண்ணி தொலைய வேண்டியது தான… எதுக்கு என்னை உள்ள இழுக்கிறான்.”
“நானே பொண்ணு எடுத்திருக்கேன் அதனால எடுக்கிறானாம். நான் அந்தப் பெண்ணை விட்டு இந்தப் பெண்ணை ஏன் கட்டினேன்னு யோசிக்க மாட்டானா….”
“ஐயோ நான் விட்டாலும் என்னை அந்தக் குடும்பம் விடாது போலையே…” என ஆரியன் புலம்ப…
“ஏன் அத்தான் இப்படிப் புலம்புறீங்க?” எனச் சம்யு கேட்க…
“நீ கேட்க மாட்ட… ஒருத்தன் தானா வந்து தலையைக் கொடுக்கிறான். அதுவும் நான் இருக்கிறதை நம்பி. நான் என்ன செய்யணும் சொல்லு.” என்றான்.
“நீங்களா கல்யாணம் பேசினீங்க இல்லையில்ல… அப்புறம் நீங்க எப்படிப் பொறுப்பாவீங்க. அதோட எங்க அப்பாவை பத்தி யோசிச்சு பாருங்க. இந்தக் கல்யாணம் நடக்கலைனா அவர் என்ன ஆவார். ஸ்ரீநிதி அக்காவும் பெரியம்மா மாதிரி இருக்க மாட்டாங்க.”
“நான் சாப்பிட்டு கிளம்பிட்டு இருக்கேன் பவித்ரன். அடுத்த முறை பார்க்கலாமா.” என்றான். ஆரியனுக்கு அப்படிச் சொல்லவே கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் முகமே காட்டிக் கொடுத்து விடும். அதனால்தான் அப்படிச் சொன்னான்.
“சரி அண்ணா…” என்றவனின் குரலில் ஏமாற்றம் இருக்க…
“சரி நீங்க வாங்க, நான் இருக்கேன்.” என்றான்.
அடுத்து ஒரு மணி நேரத்தில் பவித்ரன் ஆரியன் வீட்டில் இருந்தான்.
தன் அக்காவை திருமணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளை என்பதால்… சம்யுக்தா தான் அவனை விழுந்து விழுந்து கவனித்தாள்.
பவித்ரன் ஆரியனை பற்றிப் பேச பேச…. “என்ன டி இவன், உன்னை விட உன் புருஷனை லவ் பண்ணி இருப்பான் போலையே…” என அவினாஷ் சொல்ல..
“ஆமாம் டா… நல்லவேளை இவன் பெண்ணா பிறக்கலை…” என்றவளுக்கும் சிரிப்பு வர… அவளும் அவினாஷும் அதை நினைத்து பார்த்து சிரிக்க…. எதற்கு இப்படிச் சிரிப்பு என ஆரியன் இருவரையும் முறைக்க…. அதைப் பார்த்து இருவருக்கும் மேலும் சிரிப்புப் பொங்கியது.
எதுக்கு இருவரும் சிரிக்கிறார்கள் என ஆரியனுக்குப் புரியவில்லை. பவித்ரனும் அவர்களைப் புரியாமல் பார்க்க…
“நான் குடிக்க டீ கொண்டு வரேன்.” என சம்யுக்தா உள்ளே ஓடி விட்டாள். அவள் பின்னே அவினாஷும் சென்று விட்டான்.
சம்யுக்தா டீ கொண்டு வந்து கொடுக்க… “அண்ணா நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணீங்களா? இல்லை வீட்ல சொன்னாங்களா?” என பவித்ரன் கேட்க…
“லவ் பண்ணித்தான் ஆனா நான் இல்லை. இவளுக்குத் தான் என் மேல ஒரே லவ்.” என்றான் ஆரியன் வேண்டுமென்றே.
“ஹே… பொய் சொல்றாங்க. இவங்கதான் முதல்ல சொன்னாங்க.” என சம்யுக்தா பதற….
“ரெண்டு பேரும் தான் லவ் பண்ணாங்க. ஆனா ரெண்டு பேரும் ஒத்துக்க மாட்டாங்க.” என்றான் அவினாஷ்.
“நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் லவ் பண்றோம்னு எல்லாம் சொல்லிக்கலை… பிடிச்சிருந்தது வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிகிட்டோம்.” என்றான் ஆரியன்.
பவித்ரனுக்குக் கேட்கவே சுவாரசியமாக இருந்தது. சரளா மருமகளைப் பற்றிப் பெருமையாகச் சொன்னார்.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பவித்ரன் விடைபெற்றுக் கிளம்ப…. நல்லவேளை அவன் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என ஆரியனுக்கு நிம்மதியாக இருந்தது.