“கல்யாணம் ஆனவன்கிட்ட உன் தங்கச்சி இப்படித்தான் பேசுவாளா? பெரிய ரதி இவ… இவ அழகுல நான் மயங்கி போறதுக்கு. அப்படியே ராதியா இருந்தாலும், யாரும் என் பொண்டாட்டி ஆகிட முடியாது.”
“உன் தங்கையை எங்காவது தள்ளிக் கட்டிக் கொடு… அதோட உங்க அம்மாவுக்கு ஒரு வழி பண்ணிட்டு, அப்புறம் நீ கல்யாணம் பண்ணிக்கோ… இல்லைனா உன் பொண்டாட்டியை உங்க அம்மா நிம்மதியாவே வாழ விட மாட்டாங்க.”
“உனக்கு நான் இப்படிப் பேசுறேன்னு கோபம் வரலாம். ஆனா எல்லாரையும் மிரட்டி எழுதி வாங்கின எனக்கு, உங்க அம்மாகிட்ட எழுதி வாங்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும். இத்தனை வயசுக்கு பிறகும் ஏன் அவங்களைக் கஷ்ட்ட்படுத்திட்டுன்னு நினைச்சேன். ஆனா கடைசி வரை அவங்க திருந்தவே மாட்டாங்க. அவங்களோட சேர்ந்து உன் தங்கச்சியும் உருப்படப் போறது இல்லை.”
ஸ்ரீகாந்தோடு வண்டியில் வீட்டுக்கு வர… சரளா அவனையும் சாப்பிட சொல்ல… “மாமா கடையில வேற டீ குடிச்சேன் வயித்துல இடமே இல்லை. நான் அப்புறம் சாப்பிடுறேன். நீங்க அவங்களுக்கு வைங்க.” என்றவன் அறைக்குள் சென்று விட்டான்.
அவர்களுடன் சடகோப்பனும் அவினாஷும் உணவு உண்ண உட்கார… சரளாவும் சம்யுக்தாவும் பரிமாறினர். “அயிரை மீன் குழம்பு, வஞ்சிர மீன் வறுவல், அதோடு முட்டை…” என இலையில் பரிமாற….
“நீ இதுல என்ன சமைச்ச?” என ஸ்ரீகாந்த் சம்யுக்தாவிடம் கேட்க…
“நான் ஒன்னும் பண்ணலை.” என்றாள் அவள்.
“ஆனா அவதான் கூடமாட எல்லா வேலையும் பார்த்தது. நான் இன்னும் அவளைத் தனியா சமைக்கக் விட்டது இல்லை. சின்னப் பொண்ணு தானே… அதோட மதுரையில இருக்கும் போது அவ தானே செய்யுறா…” என்றார் சரளா மருமகளை விட்டுக் கொடுக்காமல்.
“நீயும் சாப்பிடு.” என ஸ்ரீகாந்த சொல்ல….
“அவங்க வீட்டுக்காரரோட தான் அவங்க சாப்பிடுவாங்க.” என அவினாஷ் கேலி செய்ய… சம்யுக்தா புன்னகைத்தாள்.
“வேலைப் பார்த்தது உனக்கும் பசிக்கும், நீ தட்டில போட்டுட்டு போய் அவனோட உட்கார்ந்து சாப்பிடு. இங்க நான் பார்த்துக்கிறேன்.” என்றார் சரளா.
சம்யுக்தாவும் சமையல் அறைக்குச் சென்றவள், தட்டில் உணவு எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
ஆரியன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தான். மனைவியைப் பார்த்ததும் வா எனக் கைநீட்ட… தட்டை அங்கிருந்த மேஜையில் வைத்தவள், கதவை சாற்றிக் கொண்டு சென்று அவன் அருகில் உட்கார… அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டான்.
“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உங்களுக்குப் பசிக்கலையா?” என்று கேட்க…. அவன் பதில் சொல்லவில்லை.
“நீங்க ஸ்ரீநிதி அக்காவுக்கு வேலைக் கொடுக்கணும்னா கொடுங்க. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படிப் பண்ணேன்.” என்றாள். ஒருவேளை கணவன் அதற்குத் தான் ஒருமாதிரி இருக்கிறானோ என்று நினைத்து.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் இப்பவும் சொல்றேன், நீயும் நான் சொல்றபடி படிச்சு முடிச்சு வந்தா தான் உனக்கும் அங்க வேலை.” என்றான்.
“அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”
“ஒன்னும் இல்லை. நீ சாப்பிடு.” என்றான்.
சம்யுக்தா தட்டில் இருந்த சாதத்தைப் பிசைந்தவள், அதை முதலில் கணவனுக்குக் கொடுக்க… ஆரியன் மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.
அவனுக்குக் கொடுத்தபடி அவளும் உண்டாள்.
“சாப்பிட்டதும் கிளம்புவோமா?” ஆரியன் கேட்க…
“எனக்குப் புதன் கிழமை தான் காலேஜ். நாளைக்குக் காலையில போகலாமே…” என்றதும்,
ஸ்ரீகாந்த உணவு உண்டதும் ஸ்ரீநிதியுடன் கிளம்பி விட்டான். ஆரியனும் சம்யுக்தாவும் அப்போது அறையில் இருந்து வெளியே வந்தனர்.
“அண்ணா எனக்கு வேலை இல்லைன்னு சொல்லிட்ட… ஸ்ரீநிதிக்கும் வேலை இல்லைன்னு சொல்லிட்ட… சம்யுக்தாவுக்காவது வேலை கொடுப்பியா?” என அவினாஷ் கேட்க….
ஐயோ இப்போ மானம் போகப் போகுதே என நினைத்த சம்யுக்தா, “ஏன் டா உனக்குக் கேட்க வேற கேள்வியே இல்லையா?” என, ஆனால் ஆரியன் மனைவியை விட்டுக் கொடுக்காமல், “கம்பனியே அவளோடது தானே…” என்றான்.
“அப்படிப் போடு…” என்ற அவினாஷ், “பார்த்தியா சம்யு…” என, கணவன் இப்படிச் சொல்லுவான் என் அவளுமே எதிர்ப்பார்க்கவில்லை… உள்ளுக்குள் பெருமை தான். அதை அவள் முகமே காட்டிக் கொடுத்தது.
“நம்மை வெறுப்பேத்த உங்க அண்ணன் அப்படிச் சொல்றார். இவரோட கம்பனியை விட நல்ல கம்பனி எல்லாம் இருக்கு.” என ஸ்ரீமதி சொல்ல….
நீ என்ன வேணா நினைச்சுக்கோ என்பது போல… ஆரியன் அவளை மதித்துப் பதில் சொல்லவே இல்லை. அவன் அவள் இருக்கும் பக்கம் கூடப் பார்க்கவில்லை.
அவர்கள் இருவரும் கிளம்பியதும், ஆரியனை சரளா சாப்பிட அழைக்க…
“நான் எங்கப் போறேன். பாட்டிக்கு தான் எதாவது கொடுத்து விடுவேன். பாட்டியை இங்க வந்து இருக்கச் சொன்னா அவங்க கேட்க மாட்டேங்கிறாங்க.”
“மாமா இங்க வந்தா பாட்டிகிட்ட தான் சாப்பிடுறார். அவங்களுக்கும் மீன் குழம்பு வச்சதும் கொடுத்து விட்டேன்.”
“வெளிய வச்சு அவ உன்கிட்ட என்ன சொன்னா அண்ணா?” என அவினாஷ் கேட்டுப் பார்க்க…
“அவ எல்லாம் ஒரு ஆளுன்னு.” என்றவன், “வேலைக்கு எடுத்தா என்கிட்டே மயங்கிடுவேன்னு பயமான்னு கேட்கிறா.” என்றதும், சடகோப்பனும் சரளாவும் அதிர்ந்து தான் போனார்கள். திருமணமான ஆண்னை பார்த்து கேட்கும் கேளிவியா இது. அதுவும் அவள் தங்கையை மணந்தவனிடம்.
“இவ என்ன டா… அவங்க அம்மாவுக்கும் மேல இருப்பா போலையே…” என சரளா கவலைப்பட….
“நான் ஸ்ரீகாந்த தான் உருப்படாம போயிடுவான்னு நினைச்சேன். ஆனா அவன் பரவாயில்லை இந்தப் பொண்ணு இப்படி இருக்கே.” என்றார் சடகோப்பன்.
“ஸ்ரீநிதி இப்பவும் ஒரு வரன் வந்திருக்கு. உனக்கு நாங்க கல்யாணம் பண்ணி வைக்கலாம். ஆனா ஒழுங்கா அங்க வாழுறது உன் கையில தான் இருக்கு. அம்மா வீடு இருக்குன்னு தைரியத்துல, நீ திமிரா நடந்தேன்னு வை… நான் சத்தியமா உன்னைப் பார்க்க மாட்டேன். இப்பவே சொல்லிட்டேன்.”
“அம்மா பேச்சைக் கேட்டு வீணா போயிடாத. நான் அவ்வளவு தான் சொல்வேன்.” என ஆரியன் சொன்னதைத் தான் சொன்னது போலச் சொல்லிவிட்டு ஸ்ரீகாந்த சென்று விட்டான்.
சம்யுக்தாவுக்கு மறுவாரம் கல்லூரி திறந்து விட… அவள் கல்லூரி சென்று வந்தாள். ஆரியனும் வேலை நேரம் போக மிச்ச நேரம் மனைவியுடன் ரசித்து வாழ்ந்தான்.