மறுநாள் காலை உணவு முடிந்ததும் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். ஆரியனுக்கும் அவினாஷுக்கும் வழக்கம் போலச் சண்டை வர…
“அவங்க உனக்காகத் தானே சொல்றாங்க.” என சம்யுக்தா கணவனுக்குப் பரிந்து கொண்டு வர…
“அவன் உன்னையும் தான் எப்பவும் திட்டுறான். ஆனா நீ அப்பவும் அவனுக்குத் தான் பேசுவ.” என அவினாஷ் தோழியை நேரம் பார்த்து கவுத்து விட… அதைக் கேட்டு சம்யுக்தா முகம் சிவக்க…
“இது என்ன டா கொடுமையா இருக்கு. அவ புருஷனுக்குத் தானே பேசுவா…” என சரளா சொல்ல…
“முதல்ல உனக்கு இன்னும் அவ அண்ணின்னு உன் மனசுல இல்லை. நீ அவளை அண்ணின்னு சொல்லு.” என்றான் ஆரியன்.
“அண்ணி கொஞ்சம் அந்நியமா இருக்கே….” என அவினாஷ் இழுக்க…எல்லோரும் அவனை முறைக்க… “சரி சரி அண்ணின்னு இனி கூப்பிடுறேன்.” என்றான்.
அப்போது ஸ்ரீகாந்தும் உடன் ஸ்ரீமதியும் வீட்டுக்கு வந்தனர். எதற்கு வந்திருக்கிறார்கள் என்பது போல எல்லோரும் பார்க்க… ஆரியன் தான் முதலில் சுதாரித்துக் கொண்டு அவர்களை வரவேற்றான்.
சம்யுக்தா சோபாவில் கணவனின் அருகே உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு, மனைவியிடம் “போய் எல்லோருக்கும் டீ கொண்டு வா.” என்றான்.
சம்யுக்தா டீ போட்டுக் கொண்டு வர… அப்போது தான் ஸ்ரீகாந்த, “கல்யாணத்துக்கு எந்த வரணும் சரியா அமையலை. அதுவரையில் வீட்டில சும்மா இருக்கிறதுக்கு ஸ்ரீநிதி எங்காவது வேலைக்குப் போனா அவளுக்கு நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்.”
“வெளிய வேலை பார்க்கிறதை விட உங்க கம்பனின்னா… தெரிஞ்ச இடமா இருக்கும்னு அம்மா நினைக்கிறாங்க.” என்றான்.
வேலைக்குப் போவது நல்லது தான். ஆனால் சந்திராவின் அபிப்பிராயம் என்பதில் எல்லோருமே சற்று கலவரமானார்கள்.
எல்லோருக்கும் டீ கொடுத்து விட்டு, கணவனின் பார்வையில் விழும் இடத்தில் சென்று சம்யுக்தா நின்று கொண்டாள். டீ குடித்தபடி ஆரியன் அவளைப் பார்க்க…
மகனே நீ வேலை கொடுத்திடுவ… கொடுத்து தான் பாரேன் என்பது போலத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடம் அலுவலகம் கூட்ட பெருக்க வேலை தருவதாக வேறு சொல்லி அவளை வெறுப்பேற்றி இருந்தானே… இப்போது ஸ்ரீநிதிக்கு என்ன சொல்கிறான் பார்க்கலாம் என எண்ணிக் கொண்டு நின்றிருந்தாள்.
மனைவியின் பார்வையில் இருந்த சவாலை பார்த்தவன், “சம்யு, நீ டீ குடிக்கலையா?” என்றபடி அவளிடம் சென்றவன், அவன் குடித்துக் கொண்டிருந்த டீயை அவளிடம் கொடுப்பது போல்….
“இந்தப் பார்வையிலேயே மிரட்டிர வேலை எல்லாம் வேண்டாம். அப்புறம் அதுக்காகவே வேலைக் கொடுத்திடுவேன்.” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், ஒன்றும் சொல்லாமல் டீயை வாங்கிக் கொண்டாள்.
ஆரியன் மீண்டும் வந்து சோபாவில் உட்கார்ந்தவன் தந்தையைப் பார்க்க… அவருக்கு விருப்பம் இல்லை என்பது நன்றாகவே தெரிந்தது. இல்லையென்றால் இந்நேரம் அவரே எதாவது சொல்லி இருப்பார்.
ஆரியன் எல்லாவற்றிற்கும் தந்தையைக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டான் தான். சடகோப்பனும் எல்லா விஷயத்திலும் தலையிட மாட்டார். ஆனால் அவர் என்றாவது வேண்டாம் என்று சொல்லிவிட்டால். ஆரியனும் ஏற்றுக் கொள்வான்.
“என்னோட கம்பனி பெரிய கம்பனி இல்லை. இப்போதான் வளர்ந்திட்டு வரோம். என்கிட்டே வேலை பார்க்கிறவங்க, வேற இடத்தில வேலை பார்த்து அனுபவம் உள்ளவங்க. எனக்குப் புதுசா யாருக்கும் சொல்லிக் கொடுத்து வேலை வாங்க எல்லாம் நேரமும் இருக்காது. நான் அவினாஷையே ரெண்டு வருஷம் வெளிய வேலை பார்த்திட்டு வான்னு தான் சொல்லி இருக்கேன்.”
“அதனால என் கம்பெனியில முடியாது. ஆனா நான் வேற இடத்தில வேலை இருக்கான்னு பார்த்து சொல்றேன்.” என்றவன்,
“ஸ்ரீநிதி உன்னோட பயோடேட்டா எனக்கு மெயில் அனுப்பி விடு… என்னைக் கேட்டா வெறும் பி.எஸ்.சி முடிச்சிட்டு வேலை தேடுறதை விட… மேல படிக்கலாம்னு தான். சொல்வேன். ஆனா அது உன் இஷ்ட்டம்.” என்றவன்,
“சம்யுக்தாவையுமே எம்.சி.ஏ இல்லைனா எம்.எஸ்.சி படிக்க வைக்கணும்.” என்றான்.
என்ன இன்னும் படிக்கனுமா என சம்யுக்தாவுக்கு இப்போதே கண்ணைக் கட்டியது.
அவள் யோசித்துச் சொல்வதாகச் சொன்னாள். ஸ்ரீகாந்த் கிளம்பலாமா என்று கேட்க… “நீ கடைக்குப் போ அண்ணா. நான் அத்தான்கிட்ட வேற என்ன பண்ணலாம்னு கேட்டுட்டு வீட்டுக்கு போறேன்.” என்றாள்.
“ஸ்ரீநிதி இங்க இருக்கட்டும். மதியம் நீயும் இங்க வந்து சாப்பிட்டு அப்படியே அவளையும் கூடிட்டு போ.” என சரளா சொல்ல… ஸ்ரீகாந்தும் சரி என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
சரளா மதிய சமையலை கவனிக்கச் செல்ல… உடன் சம்யுக்தாவும் சென்றாள்.
ஆரியனுக்குக் கைபேசியில் அழைப்பு வர… அவன் கைப்பேசியுடன் வெளியே சென்றான். அவன் பேசிவிட்டு திரும்ப… ஸ்ரீநிதி நின்று கொண்டிருந்தாள்.
“உங்களுக்கு என்னை வேலைக்கு எடுக்க அப்படி என்ன பயம் அத்தான்?” என அவள் ரொம்பத் தெரிந்தது போலக் கேட்க….
“எனக்கு என்ன பயம்?” என்ற ஆரியன், நீயே சொல் என்பது போலப் பார்த்துக் கொண்டு நின்றான்.
“ச்சி… ச்சி… இந்தப் பேச்சு உனக்கு அழகில்லை ஸ்ரீநிதி.” என்றான் ஆரியன் அருவருப்புடன்.
“முதல்ல ஒன்னு தெரிஞ்சிக்கோ… இந்துஜா அத்தையை அவங்க அழகுக்காக உங்க அப்பா கல்யாணம் பண்ணிக்கலை. அவங்க உங்க அம்மாவை விட அழகும் இல்லை. அப்படி இருந்தும் உங்க அப்பா ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டார் தெரியுமா? உங்க அம்மாவோட வாய் தான். உங்க அம்மா பேசி பேசியே அவரை அவங்ககிட்ட இருந்து விலக வச்சிட்டாங்க.”
“சம்யுக்தாவை தவிர நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருந்தா… இந்த அளவுக்குச் சந்தோஷமா இருந்திருப்பேனா தெரியாது. அதனால எனக்கு அந்த மாதிரி எல்லாம் கனவுல கூட தோணாது.”
“நீ பார்க்க மாமா மாதிரி இருக்கலாம். ஆனா அத்தை மாதிரி குணம் தான் உனக்கும். இப்படிப் போற இடத்தில பேசி வச்சேன்னு வை… எல்லோரும் எங்க மாமா மாதிரி இருக்க மாட்டாங்க. வாயை கிழிச்சு விட்டுடுவாங்க. இனி பேசும் முன்னாடி யோசிச்சு பேசு.”
“எங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம், நான் உன்கிட்ட மாட்டலை. உன்னைப் பார்க்க கூட எனக்குப் பிடிக்கலை. இனி என் முன்னாடி வந்திடவே வந்திடாத.” எனச் சொல்லிவிட்டு ஆரியன் காலில் செருப்பு அணிந்து கொண்டு அப்படியே வெளியே சென்று விட்டான். அவள் இருக்கும் வீட்டில் இருக்கக் கூட அவனுக்குப் பிடிக்கவில்லை.
ஸ்ரீநிதி வீட்டிற்குள் சென்றவள், “அத்தை நான் வீட்டுக்கு போறேன்.” என நிற்க… சரளா சாப்பிட்டு விட்டு செல் என்றால்… அவள் கேட்கவில்லை. அவினாஷை சென்று விட்டுவிட்டு வர சொன்னார். ஆனால் அவினாஷ் முடியாது என்று சொல்லி விட…
“இரு சீக்கிரம் சமையல் முடிச்சிடுறேன். சாப்பிட்டு அண்ணனோட போ.” என்றார். வேறு வழியில்லாமல் ஸ்ரீநிதி ஹாலில் உட்கார்ந்து இருந்தாள்.
ஆரியன் அப்படியே நடந்து, கடைகள் இருக்கும் பகுதிக்கு வர… சக்ரவர்த்தி அவர் கடையில் இருப்பதைப் பார்த்து அங்கே செல்ல… சக்ரவர்த்தியும் மருமகனை உள்ளே அழைத்து உட்கார வைத்து, டீ வரவழைத்துக் கொடுத்தார்.
“என்கிட்டயும் சொன்னாங்க. மாப்பிள்ளை எது சொன்னாலும் சரியா இருக்கும், நீங்க அவர் சொல்றதை கேட்டுக்கோங்கன்னு சொல்லிட்டேன். நான் எதாவது சொன்னா… உன் அத்தை அதுக்கு நூறு அர்த்தம் கண்டுபிடிப்பா.” என்றவர், “நீ என்ன சொன்ன மாப்பிள்ளை?” என, ஆரியன் அவன் நினைப்பதை சொன்னான்.
அப்போது தரகர் வந்தவர், ஒரு வரனைப் பற்றிச் சொன்னார். “பையன் சென்னையில வேலை பார்க்கிறான் சொத்து எல்லாம் எதுவும் பெரிசா இல்லை. ஊர்ல அவங்களுக்கு ஒரு வீடு இருக்கு. அப்பா அம்மா அங்கதான் இருக்காங்க. வருமானத்துக்கு ஒரு கடை இருக்கு அவ்வளவு தான். ஆனா பையன் நல்லா அழகா இருக்கான். மாசம் அம்பதாயிரம் சம்பாதிக்கிறான்.” என்றதும், அந்த வரனுக்கே சக்ரவர்த்திச் சரி என்றார்.
“கூடக் குறைய இருந்தாலும், நாம் பார்த்துச் செஞ்சுக்கலாம். நீ அந்த இடத்தையே முடி.” என்றார்.
சிறிது நேரத்தில் ஸ்ரீகாந்தும் அங்கே வர… ஆரியனும் அவனும் கடைக்கு வெளியே நின்று பேசினர்.
“ஸ்ரீநிதியை பி.எஸ்.சி சேர்த்து விட்டதுக்குப் பதில் இன்ஜினியரிங் சேர்த்து விட்டிருக்கணும் இல்ல அத்தான். இப்போ வேலை கிடைக்க ஈசியா இருந்திருக்கும்.” என்று அவன் சொல்ல…. சிறிது நேரம் ஆரியன் பேசவே இல்லை.
“உன் தங்கச்சி வேலைக்குப் போகணும்னு எண்ணத்தில எல்லாம் இல்லை, உங்க அம்மாவைப் போலவே அடுத்து என்ன பிரச்சனை செய்யலாம்னு அலையுறா?” என்றவன், ஸ்ரீநிதி அவனிடம் பேசியதை சொல்ல… தன் தங்கையா இப்படிப் பேசினாள் என ஸ்ரீகாந்த்க்கு நம்பவே முடியவில்லை.