அதுவரை உள்ளே அறையில் இருந்த சடகோப்பன், “ரொம்ப சரியா சொன்ன.” என்றார் வெளியே வந்து உட்கார்ந்தபடி.

இப்போ இவங்க பொண்ணு கல்யாணம் வேற நின்னு போச்சே… நம்ம வீட்டுக் கல்யாணத்தை நிம்மதியா நடத்த விடுவாங்களா… சிம்பில்லா பண்ணிடலாமா?”

போடி இவளே… இவங்களுக்காக என் பையன் கல்யாணத்தை நான் ஏன் குறைச்சு பண்ணனும். அதெல்லாம் நடக்கிறபடி நடக்கும், நீ உன் வேலையைப் பாரு.” என்றார்.

ஆரியன் இந்துஜாவை பார்க்க சென்றிருக்க, அவருமே அதையே சொல்லி, “ஸ்ரீநிதிக்கும் வேற மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் முடிஞ்சதும், சம்யுக்தாவுக்கு வைப்போமா? அக்கா இருக்கும் போது தங்கைக்கு எப்படிக் கல்யாணம் பண்றது?” என்றார் கவலையாக.

ஆரியன் வெளியே எட்டிப் பார்க்க… எல்லோரும் என்ன என்று கேட்க…

இல்லை அத்தைக்கு வெளியே சிலை வைக்க இடம் இருக்கான்னு பார்க்கிறேன். இல்லைனா முக்கு ரோட்டுல  கூட வைக்கலாம்.” என்றதும், சக்ரவர்த்தியும், சம்யுக்தாவும் சிரிக்க…. இந்துஜா எதற்கு என்று புரியாமல் பார்க்க…

லாரியை விட்டு அடிச்சு தூக்கியும் இப்படிப் பேசுறீங்க பார்த்தீங்களா… உங்களுக்குச் சிலை வைக்காம யாருக்கு வைக்கிறது?” என்றவன்,

அத்தை நாம யாருக்காக விட்டுக் கொடுக்கிறோங்கிறதும் முக்கியம். தகுதி இல்லாதவங்களுக்கு விட்டுக் கொடுத்தும் ஒன்னும் பிரோஜனம் இல்லை. உங்களை நல்லவங்கன்னு அவங்க சொல்லப் போறது இல்லை. ஸ்ரீநிதி கல்யாணம் நிற்க நாம யாரும் காரணம் இல்லை. அதனால அதைப் பத்தி எல்லாம் யோசிக்காதீங்க. மாமா வேற மாப்பிள்ளை பார்த்ததும் ஸ்ரீநிதிக்குக் கல்யாணம் வைப்போம்.” என்றான்.

சமையல் அறையில் இந்துஜா மகளிடம், “மாப்பிள்ளைக்கு நான் பேசினது கோபமா?” என்றதும்,

பின்ன என்னம்மா, உங்களை இந்த நிலையில கொண்டு வந்து விட்டிருக்காங்க, நீங்க இன்னும் அவங்களுக்காகப் பார்க்கிறீங்க.”

அவங்க பண்ணலையே அவங்க அண்ணன் தானே…”

அன்னைக்குக் கோர்ட்ல பார்த்தோம் தான… அவங்க அண்ணன் கோபத்துல பண்ணிட்டாராம். இப்பவும் அவங்க அண்ணன் பண்ணது தப்புன்னு, அவங்க நினைக்கவே இல்லை. நீங்க அவங்களுக்காகப் பார்க்கிறீங்க. அப்போ அவருக்குக் கோபம் வரும் தானே…” என்ற சம்யுக்தா, “சரி அவங்களுக்குப் பசிக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்று சென்றாள்.

சம்யுக்தா பரிமாறச் சக்ரவர்த்தியும் ஆரியனும் உண்டனர்.

சாப்பாடு ரொம்ப டேஸ்ட்டா இருக்கே… அத்தை நீங்க பண்ணதா?” என ஆரியன் தெரியாமல் கேட்டு விட…

ஆமாம் நல்லா இருந்தா இவங்க அத்தை பண்ணது. இல்லைனா நான் பண்ணது.” என சம்யுக்தா முறுக்கிக்கொள்ள…,

ஓ நீ பண்ணதா, அதுதான் கோபமா?” என்றவன், “நல்லா சமைக்கிற சம்யு… இதுக்கே கல்யாணம் இன்னும் ஒருமாசம் முன்னாடி வைக்கலாம்.” என்றான்.

சம்யுக்தா அவனைப் பார்த்து முறைத்து விட்டு மாடிக்கு சென்றுவிட்டாள்.

உண்டு முடித்ததும், “நான் சம்யுகிட்ட சொல்லிட்டு கிளம்புறேன்.” என ஆரியன் மாடிக்குச் சென்றான்.

அவள் வெளி மாடியில் நிற்க… அவளின் அருகே சென்று நின்றவன், “என்ன கோபம்?” என்றதும்,

கோபம் எல்லாம் ஒன்னும் இல்லை. ஆனா முன்னாடி நீங்க தானே படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ணலாம் சொன்னீங்க. இப்போ ஏன் கல்யாணம் தள்ளி வைக்க வேண்டாம்னு சொல்றீங்க.” என்றதும்,

உங்க அப்பா ஒரு கிறுக்கு குடும்பத்தோட சம்பந்தம் வச்சிருக்கார் பாரு… அந்தக் குடும்பம் இன்னும் என்னென்ன பண்ணும்னு தெரியாது. அதனால் நீ என்னோட இருந்தா நான் நிம்மதியா இருப்பேன்.”

இன்னொன்னு படிச்சிட்டு இருக்கும் போது கல்யாணம் பண்ணா எப்படி இருக்குமோன்னு யோசிச்சேன். ஆனா நீ அங்க எங்க வீட்ல இருந்த போது, எனக்கு ஒன்னும் வித்தியாசமா இல்லை. அப்போ இருந்தது போலவே இருக்கலாமே…” என்றதும்,

இவனுக்குத் திருமணதிற்கு முன்பு இருந்ததும், திருமணதிற்குப் பின்பு இருப்பதும் ஒரே மாதிரியா என நினைத்தவள், அவனைப் பார்க்க…

என்ன சம்யு?” என்றான்.

ஒன்றுமில்லை என்றவள், கல்யாணத்துக்கு அப்புறமும் படி படின்னு விரட்டாமாஇருந்தா சரி என்று நினைத்து வாயிக்குள் சிரிப்பை அடக்க…

ஹே நீ எதோ நினைச்சு சிரிக்கிற? என்னன்னு சொல்லு.” என ஆரியன் கேட்க…

ஒன்னும் இல்லையே…” என்றாள். ஆரியன் அவளை நம்பாமல் பார்க்க…

நிஜமா ஒன்னும் இல்லை… என்றவள் கீழே செல்ல திரும்ப, ஆரியன் அவள் கைபிடித்து இழுத்தான்.

ஒழுங்கா சொல்லிட்டு போ…”

இதையெல்லாம் போய்ச் சொல்ல முடியுமா என நினைத்தவள், அவன் நெஞ்சின் மீது கைவைத்து தள்ளிவிட்டு சென்று விட்டாள்.

இந்தப் பொண்ணு என்னவோ யோசிக்குது. என்னவா இருக்கும்.” என ஆரியன் யோசித்தபடி சென்றான்.

மறுநாள் கல்லூரியில் அவினாஷை பார்க்கும் போது, “எங்க அப்பா அம்மா நான் என்ன மார்க் வாங்கினாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நானும் கடைசிப் பத்து நாள் படிச்சு நல்ல மார்க் தான் வாங்குவேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் உங்க அண்ணனை நினைச்சாதான் பயமா இருக்கு.” என்றதற்கு,

பயப்படாத, கண்டிப்பா அதுதான் நடக்கும். என்னையே அந்த விரட்டு விரட்டுவான், உன்னை மட்டும் விடுவானா? உன்னைப் பொம்பளை பில் கேட்ஸ் ஆக்காம எங்க அண்ணன் விட மாட்டான்.”

போடா நீ வேற என்னைப் பயம் பொருத்தாத.” என, அவினாஷ் சிரித்தான்.

ஆரியன் சம்யுக்தா திருமண நாள் நெருங்கியே இருந்தது. ஸ்ரீநிதிக்கு வரன்கள் எதுவும் அமையாததால்… அவளுக்கு இன்னும் பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு இடையில் சக்ரவர்த்தியின் தந்தையின் உடல்நிலை வேறு கவலைக்கிடமாக இருக்க… அப்படி எதுவும் நடந்து திருமணம் தள்ளிப் போய் விடாதா எனச் சந்திரா ஆர்வமாகக் காத்திருந்தார்.

சக்ரவர்த்தி, இந்துஜா, சரளா, ஞானம் என எல்லோரும் கொஞ்சம் பயத்துடனே சுற்றிக் கொண்டு இருந்தனர். கல்யாணம் நல்லபடியாக நடக்கும் எனத் தைரியமாக இருந்தது, ஆரியன் அவினாஷ் மற்றும் சடகோப்பன் மட்டுமே.

திருமண நாளும் அழகாக விடிய… சம்யுக்தாவுக்கு அவள் ஆசைப்பட்டது போல, அவள் அம்மாவே அலங்காரம் செய்தார். முன்பே எல்லாம் தயாராக வாங்கி வைத்திருக்க… வாணி அவருக்கு உதவ, அவரே அழகாக ஜடை அலங்காரம், முகத்திற்கு ஒப்பனை எல்லாம் செய்து விட்டார். இப்போதும் அவரால் அதிக நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது.

மாப்பிள்ளை அழைப்பு அவர்கள் ஊர் கோவிலில் இருந்து துவங்க, அதன் பிறகு மற்ற சடங்குகள் எல்லாம் முடித்து, ஆரியன் சம்யுக்தா திருமணம் மண்டபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. சடகோப்பன் ஊரையே அழைத்து, அறுசுவை உணவோடு, மகனின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்து விட்டார்.

மணப்பெண் அலங்காரத்தில் சம்யுக்தா அழகாக இருக்க… ஆரியன், “நீ அழகா இருக்க டி, நான் உனக்குப் பொருத்தமா இருக்கேனா?” என அவளிடமே கேட்க…

நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க. என்னை விட நீங்கதான் நல்லா இருக்கீங்க.” என்றாள் சம்யுக்தா புன்னகையுடன். மனைவி சொன்னதும் ஆரியன் இன்னும் மகிழ்ந்து போனான்.

ஸ்ரீகாந்த் திருமண மண்டபத்தில் தந்தைக்கு உதவியாக இருந்தான். சந்திரா போகக் கூடாது என்று சொல்லியும் வந்திருந்தான். உணவு உண்ண செல்லும் போது ஸ்ரீகாந்தும் சம்யுக்தாவும் நேர் எதிரே சந்தித்துக்கொள்ள… சம்யுக்தா ஆரியணைப் பார்க்க…

ஒழுங்கா அவனை வாங்க அண்ணான்னு சொல்லு. பெரியவங்க எப்படியும் இருக்கட்டும், நீங்க பசங்களாவது ஒத்துமையா இருங்க.” என்றான்.

சம்யுக்தா, “வாங்க அண்ணா.” என்றதும், ஸ்ரீகாந்த அவளைப் பார்த்து புன்னகைக்க…

வா டா மாப்பிள்ளை சேர்ந்து சாப்பிடுவோம்.” என ஆரியன் அவனையும் அழைத்துச் சென்றான்.

ஸ்ரீகாந்த் வந்திருப்பது தெரிந்து, இந்துஜா அவராகவே அவனிடம் சென்று பேசினார்.

அவனை வரவேற்றவர், “அக்கா இருக்கும் போது தங்கைக்குக் கல்யாணம் பண்றது தப்பு தான். ஆனா நான் இப்படி ஆகும்னு நினைக்கலை. அம்மாவுக்குச் சங்கடமா இருக்கும். ஆனா இது வேணும்னு பண்ணது இல்லை.” என அவர் சொல்ல… அவர் அதைச் சொல்ல வேண்டும் என்பது அவசியமே இல்லை.

ஸ்ரீநிதிக்கு மாப்பிள்ளை பார்த்திட்டா, அடுத்த முஹுர்த்ததுல கல்யாணத்தை வச்சிடலாம்.” என்றான் ஸ்ரீகாந் தன்மையாகவே. இந்துஜாவும் சீக்கிரம் அப்படியே நடக்கட்டும் என்றார்.

ஆரியனும் சம்யுக்தாவும் தம்பதிகளாகக் கோவிலுக்குச் சென்று வந்தனர். அவினாஷ் கேலி கிண்டல் செய்தபடி அவர்களுடனே இருந்தான்.

இந்துஜா திருமணத்திற்கு முன்தினம் வந்தவர், திருமணம் முடிந்த இரவு கிளம்பி விட்டார்.

நீ அங்கதான் வரப் போற. நாம பக்கத்துல தான் இருக்கப் போறோம். நீ நான் கிளம்பும் போது அழாத… என்னால கிளம்ப முடியாது.” என்றார் மகளிடம். சம்யுக்தாவும் சரி என்றாள்.

மறுநாள் பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டினருக்கு விருந்து என்பதால்.. இவர்கள் எல்லோரும் அங்கே செல்வதாக இருந்தது.

சரளாவின் தந்தை வேறு உடல்நலமில்லாமல் இருந்ததால்… அன்று இரவு சடங்கு என்று எதுவும் இவர்களாக வைக்கவில்லை. திருமணத்திற்கு வந்த உறவு முறைகளும் வீட்டில் இருந்தனர்.

ஹாலில் எல்லோருமாகச் சீட்டு விளையாட… ஆரியனும் சம்யுக்தாவும் அவர்களோடு உட்கார்ந்து விளையாட… இதில் சடகோப்பன் வேறு மருமகள் சீட்டு விளையாடுவதில் கில்லாடி என்று பெருமையாகச் சொல்ல… சரளா தலையில் அடித்துக் கொண்டார்.

நள்ளிரவு வரை விளையாடினார்கள். பிறகு சம்யுக்தா அறைக்குப் படுக்கச் செல்ல… சற்று நேரத்தில் வந்த ஆரியன் கதவை சாற்றித் தாழிட….

இப்போ ஏன் கதவை மூடுறீங்க?” என்றாள் பதட்டமாக.

ஓ… உனக்கு அந்த அசை வேற இருக்கா? அந்தச் சீன் இப்போ இல்லை. நம்ம கல்யாணம் நடந்ததே வரலாற்றுச் சாதனை தான். எப்போ என்ன நடக்கும்னே தெரியாம இருந்தது. இதுல இவ வேற…” என்றவன், தரையில் தலையணையைப் போட்டுக் கொண்டு படுத்தவுடன் உறங்கிப் போனான்.

அடப்பாவி எப்படிப் பேசுறான் பாரு எனச் சம்யுக்தாவுக்கே சிரிப்பாக வந்தது.

மறுநாள் காலை எதற்கும் இருக்கட்டும் என்று, சக்ரவர்த்தியின் தந்தை இருந்த மருத்துவமனைக்குத் தம்பதிகளைச் சடகோப்பன் சென்று பார்த்து விட்டு வர சொன்னார்.

அவருக்கு எதாவது என்றால்… சம்யுக்தாவை வீட்டுக்குள் செல்ல சந்திரா அனுமதிக்க மாட்டார். அதோடு புதுமன தம்பதிகள் அவர் நலமாக இருக்கும் போதே சென்று பார்க்கட்டும் என அனுப்பி வைத்தார்.

அவர்களின் தாத்தா வெகு நேர சிரமத்திற்குப் பிறகு கண் திறந்து பார்க்க… ஞானம் பேரன் பேத்தியின் திருமணத்தைப் பற்றிச் சொல்ல… இருவரையும் ஆசீர்வதித்தார்.

நல்ல நேரத்தில் பெண் வீட்டு விருந்துக்கு அனைவரும் கிளம்பி சென்றனர். தந்தையின் உடல்நலம் சரி இல்லாததால் சக்ரவர்த்தி ஊரிலேயே இருந்துகொள்ள… இந்துஜாவும் இங்கே தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அவரை அங்கேயே இருக்கச் சொன்னார். 

“மாமா வரலைனா பரவாயில்லை… நீ வா…” என அவருக்குப் பதில் ஆரியன் ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்றான்.

சந்திராவால் எதையுமே தடுக்க முடியவில்லை.