Advertisement

நீங்க இவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்க. ஸ்ரீநிதி எல்லாம் உங்ககிட்ட இப்படிப் பேசுவாளா…”

அவ எப்பவுமே பேச மாட்டா…. அவங்க அம்மா என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சு… எப்பவுமே பசங்களை என்கிட்டே நெருங்க விடாம பண்ணிட்டா.”

சரி விடுங்க இங்க இருக்கும் போதாவது, எந்தையும் நினைக்காம மனசை அமைதியா வச்சுக்கோங்க.”

ம்ம்…. ஊர்ல கொஞ்சம் வேலை இருக்கு. இந்த வாரம் அங்க போறேன். சம்யுக்தாவை நல்லா பார்த்துக்கோ.”

சரி போயிட்டு வாங்க.”

இரண்டு வாரங்கள் சென்று வீட்டிற்குச் சென்ற ஸ்ரீநிதி, வீட்டினரிடம் அவினாஷ் சம்யுக்தாவுடன் நெருங்கி பழகுவதைப் போட்டுக் கொடுத்து விட… அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால்… அதோடு ஸ்ரீநிதியை பார்க்க சரளாவும் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் அவரின் அம்மா ஞானம் பேத்தி சொன்னதைச் சொல்லி மல்லுக்கு நின்றார்.

என்ன டி உன் பையன், அந்தச் சீமை சித்திராங்கி பொண்ணோட ரொம்ப நெருக்கமா இருக்கானேமே… மூத்தவனை உன் அண்ணனோட முதல் பொண்டாட்டி வீட்டுலையும், இளையவனை உன் அண்ணனோட ரெண்டாவது பொண்டாட்டி வீட்டுலையும் செய்யுறதா இருக்கியா?” என இடக்காகக் கேட்டு வைக்க….

ஆமாம் ரெண்டு வீட்டுல ரெண்டு மகனையும் செஞ்சிட்டு, நான் ரெண்டு வீட்டுக்கும் ஆகாதவளா இருக்கணும்னு பார்க்கிறீங்க போல…. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப ஆசை மா…” என்றதும்,

அவர் சொன்னதைக் கேட்டபடி வந்த சந்திரா, “அண்ணி அப்படி நடந்தாலும், நான் உங்களைக் குறை சொல்ல மாட்டேன். உங்க அண்ணனையே என்னால தடுக்க முடியலை… உங்க மகனை எல்லாம் நான் தடுக்க முடியுமா?” என்றார்.

அவனுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்குன்னு யாராவது சொன்னா தான் தெரியும். அவன் எங்கையும் அவளைக் கூட்டிட்டு வந்தோ, இல்ல முன்ன நிறுத்தியோ பார்த்திருக்கியா? உன் இடத்தை அவன் அவளுக்குக் கொடுக்கலை.” என்றார் ஞானம்.

ம்ம்… வெளியில் எல்லாம் கௌரமா தான் வச்சிருக்கார். ஆனா உங்க மகனுக்கு யாரை பிடிக்கும்னு கேட்டுப் பாருங்க தெரியும். கட்டினதுக்காக என்னோட இருக்கார் அவ்வளவு தான்.”

அவனா முதல்ல முறிச்சிட்டுப் போனான். நீதான் அவன் வேண்டாம்னு சொன்ன… அப்புறம் அவன் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் பண்ண போறானதும், நீ பின்வாங்கிட்ட…. அவன் அவளையும் விட்டுக் கொடுக்காம கல்யாணம் பண்ணிகிட்டான்.”

இப்ப இப்படிப் பேசுறவ… அப்போவே இல்ல இதெல்லாம் யோசிச்சிருக்கணும். நீ தான் இழுத்து வச்ச.” என்றார் ஞானம் மருமகளைப் பார்த்து சடவாக.

ஆமாம் உங்க பையன் எப்போ எப்போன்னு காத்திட்டு இருப்பாருன்னு எனக்கு என்ன தெரியும்? என்னைத் தலை முழுகிறதை தான் சொல்றேன்.”

தப்பு உன் மேலையும் இருக்கு, அவன் மேலையும் இருக்கு. ஆனா இந்துஜா மேல கண்டிப்பா கிடையாது. அவ உங்களைப் பிரிக்கலை…. இன்னும் சொல்லப்போனா அவளால தான் நீங்க பிரியலை.” என மாமியார் சொன்னதும் சந்ராவின் முகமே மாறி விட்டது.

அப்போ அவ எனக்கு இந்த வாழ்க்கை பிச்சை போட்டான்னு சொல்றீங்களா?” என அவர் கோபமாகக் கேட்க….

நான் அப்படி எதுவும் சொல்லலை. என் தலையை உருட்டாத டி ஆத்தா.” என்ற ஞானம் எழுந்து உள்ளே செல்ல… உள்ளே அறையில் படுத்திருந்த அவரது கணவர் குணசேகர், “நீ ஏன் அதெல்லாம் பேசுற?” என்றதும்,

பேசலைனா… நமக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நினைச்சுக்கிறாங்க இல்ல… அதுதான் சொன்னேன்.” என்றவர், உடம்பு முடியாத கணவரின் தேவையைக் கவனிக்க ஆரம்பித்தார்.

சந்த்ரா வெகு நேரம் சரளாவிடம் புலம்பி விட்டே அவரைச் செல்ல விட்டார்.

சரளா வீட்டிற்கு வந்தவர், இளைய மகனை விசாரிக்க… “அம்மா அவ என் ப்ரண்ட் மா…” என்றான்.

பொம்பளை பிள்ளையைத் தான் ப்ரண்ட் பிடிப்பியா? ஏன் அங்க ஆம்பிளை பசங்க யாரும் கிடைக்கலையா… அதுவும் அவளோட என்ன பழக்கம்?”

உங்களுக்குச் சம்யுக்தாவை பத்தி தெரியலை… செம ஜாலியான பொண்ணு. டென்ஷனே ஆக மாட்டா… செம கூல். உங்களுக்கு அவளைப் பார்த்தா பிடிக்கும். ரொம்ப நல்ல பொண்ணு மா… நீங்க அங்க வரும் போது, நான் அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்.”

தம்பி பேசுவதைக் கேட்டபடி அதுவரையில் அமைதியாக இருந்த ஆரியன், “நீ அந்தப் பொண்ணோட பேசுறதை காலேஜ்யோட வச்சுக்கோ… வீட்டுக்கு கூட்டிட்டு வர வேலை எல்லாம் வச்சுக்காத. ஸ்ரீகாந்தும், ஸ்ரீநிதியும் தப்பா நினைப்பாங்க? அவங்களுக்குத் தெரிஞ்சா கஷ்ட்டமா இருக்கும்.” என்றதும்,

நீ ஸ்ரீகாந்துக்காகச் சொல்றியா… இல்லை ஸ்ரீநிதிக்காகச் சொல்றியா?” என அவினாஷ் கேட்க…

ஸ்ரீநிதி என்னோட என்னைக்காவது பேசி இருக்காளா…. அவ எதுவும் சொல்லலை… நானா தான் சொல்றேன். எதுக்கு நம்மால அவங்களுக்குக் கஷ்ட்டம்.”

கஷ்ட்டமா இருக்கும்னா நீ சம்யுக்தாவோட பேசாத… ஆனா எனக்குச் சம்யு ரொம்ப முக்கியம். நான் அவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.”

அவினாஷை ஆரியன் முறைக்க…. மகன்கள் சண்டை போட்டுக் கொள்ளப் போகிறார்களோ என்ற அச்சத்தில் சரளா, “சரி டா ஆனா ஒரு அளவோட வச்சுக்கோ போதும்.” என்றார் இளைய மகனிடம்.

மறுநாள் காலை ஆரியனும் அவினஷும் அவர்கள் ஊரில் இருந்து கிளம்பி காரில் மதுரை வந்தனர். இரண்டுக்கும் இடையே அறுபது கிலோமீட்டர் தூரம் என்பதால்…. தினமும் வந்து போக முடியாது. அதனால் மதுரையில் வீடெடுத்து இருந்தனர். ஆரியன் தம்பியை நேராகக் கல்லூரியில் சென்று இறக்கி விட… அவினாஷுக்காகக் காத்திருந்த சம்யுக்தா ஆவலாக அவனிடம் வந்தாள்.

இன்னைக்குத் தான் ஊர்ல இருந்து வரியா டா…”

ஆமாம் டி.”

ரெண்டு நாள் செம ஜாலியா?”

ம்ம்… நீ என்ன பண்ண?”

நான் வீட்ல தான் டா இருந்தேன்.”

ஆரியன் என்று ஒருவன் நிற்பதையே மதிக்காமல் இருவரும் பேசிக் கொண்டிருக்க…

நான் கிளம்புறேன்.” என ஆரியன் குரல் கேட்டு இருவரும் அவன் பக்கம் திரும்பினர்.

உன்னை மறந்துட்டேன் டே அண்ணா.” என்ற அவினாஷ், இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்க….

ஹாய் அத்தான்.” எனச் சம்யுக்தா சொல்ல… ஆரியன் அவளை முறைக்கவே ஆரம்பித்தான்.

நீ என் தம்பியோட நில்லு, என்கிட்டே எல்லாம் பாச பயிர் வளர்க்க வேண்டாம்.” என ஆரியன் நேரடியாகவே சொல்லிவிட….

அண்ணா அவ விளையாட்டா பேசுறா…. நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற.” என அவினாஷ் கேட்க…

எடுத்ததும் அவள் உரிமையாக அத்தான் என்றதும் தான் அவனுக்கு அந்தக் கோபம். அவன் அத்தை மகன் அதனால் அத்தான் என்கிறாள் என நினைத்து விட்டான். அதை உணர்ந்தது போல….

நீங்க என் அக்காவை தான கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க. அதுதான் அப்படிக் கூப்பிட்டேன்.” எனச் சம்யுக்தா சொல்ல…

அதற்கும் “உன் அக்காவா….” என ஒரு மாதிரி கேட்டவன், அங்கே நில்லாமல் காரில் ஏறி சென்று விட்டான்.

அவினாஷுக்கு சம்யுக்தாவைப் பார்க்க ஒரு மாதிரி இருந்தது.

சாரி, அவன் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி தான். ஆனா நல்லவன். கொஞ்சம் நீதி நியாயம் எல்லாம் பேசுவான்.” என அவினாஷ் சொல்ல… அவனைப் பார்த்த சம்யுக்தா, “பார்த்தாலே தெரியுது. சரியான ரூல்ஸ் ராமானுஜம் போல….” என்றவள், சிரிக்கவும் தான் அவனுக்கு நிம்மதி ஆனது.

சம்யுக்தா எதுவும் தான் காயப்பட்டது போலக் காட்டிக் கொள்ளவில்லை. அவள் எப்போதும் போலவே இருந்தாள்.

அவினாஷ் அவளையே பார்க்க… சம்யுக்தாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

என்ன டா அப்படிப் பார்க்கிற?”

இல்லை நீ நார்மலா தான இருக்க.”

எல்லோரும் என்னைப் பார்த்ததும் சந்தோஷமா ஏத்துக்க மாட்டங்கன்னு எனக்குத் தெரியும். அதோட இதுல என்னோட தப்பு என்ன இருக்கு சொல்லு. அதனால நான் இதை எல்லாம் மண்டைக்கு ஏத்திக்க மாட்டேன். நீ வீணா கவலைப்படாத.” என்றாள்.

எவ்வளவு தெளிவு இந்தப் பெண்ணிடம் என அவினாஷுக்கு வியப்பாக இருந்தது. அன்று இரவு அண்ணன் வீட்டுக்கு வந்ததும், “உனக்கு என் பிரண்ட்ஸ் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா?” என்றான்.

ஏன் அவ எதாவது சொன்னாளா?”

இல்லையில்லை… அவ உன்னை எல்லாம் மதிக்கவே இல்லை. ஆனாலும் நீ அப்படிப் பேசினது தப்புதான்.” என்ற தம்பியை ஆரியன் முறைக்க…

என் ப்ரண்ட் அவ… இனிமே அவகிட்ட அப்படிப் பேசாத.” என்றான்.

அவளைப் பிடிக்கவில்லை என்றால் பேசாமல் ஒதுங்கி சென்றிருக்கலாமோ என இப்போது ஆரியனுக்கும் தோன்ற ஆரம்பித்தது.

சடகோப்பன் சரளா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், மூத்தவன் ஆரியன் எம். ஈ., முடித்து விட்டுச் சொந்தமாக மதுரையில் சின்ன அளவில் மென்பொருள் நிறுவனம் தொடக்கி இப்போது தான் தொழில் வளர்ந்து கொண்டிருப்பவன். அவர்களுக்கு ஏகபட்டுச் சொத்துக்கள் இருக்க…. அவன் சம்பாதித்துத் தான் ஆக வேண்டும் என்பது இல்லை. அதனால் அவனால் சொந்த முயற்சியில் இறங்க முடிந்தது.

இளையவன் அவினாஷ் இப்போதுதான் படித்துக் கொண்டிருந்தான். அவனும் படித்து முடித்ததும் அண்ணனுடன் தொழில் சேர்ந்து கொள்வான்.

இருவருக்கும் இடையே ஆறு வயது வித்தியாசம். மகன்கள் மதுரையில் வீடு எடுத்து தங்கி இருப்பதால்…. சில நாட்கள் மகன்களுடன் வந்து தங்கி, சரளா அவர்களுக்குப் பிடித்தது சமைத்து போட்டு விட்டு செல்வார். இந்தமுறை அப்படி வந்த போது, அவினாஷ் சம்யுக்தாவை அழைத்து வந்தான்.

அத்தை என்று பாசமாக அழைத்தவளை தள்ளி வைக்கச் சரளாவுக்கும் மனம் இல்லை. அதோடு தன் அண்ணனை உரித்து வைத்து பிறந்திருப்பவளை ஒதுக்கி நிறுத்தவும் முடியவில்லை. அவர் அம்மாவுக்கு அழைத்துக் கேட்க…

உன் வீட்டுக்கு தானே வந்திருக்கா… இங்க இல்லையே. இத்தனை நாள் உன் பெரிய அண்ணிக்காகப் பார்த்தாச்சு…. அவளும் உன் அண்ணனோட வாரிசு தானே…எவ்வளவு நாள் தள்ளியே வைக்க முடியும்.” என்றார்.

அம்மாவின் விருப்பம் தெரிந்ததும் சரளாவும் அதற்கு மேல் தயங்கவில்லை. அவளிடம் அவர் நன்றாகவே நடந்துகொள்ள… ஆனால் ஆரியனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று உணர்ந்த சம்யுக்தா, அவன் இருக்கும் பக்கம் கூடத் திரும்பவில்லை. அவனும் அப்படித்தான் இருந்து கொண்டான்.

மதிய உணவு சேர்ந்து தான் அருந்தினர். ஆனால் அவன் பேச்சே கொடுக்கவில்லை. மதிய உணவு முடிந்ததும், அவன் அறையில் இருக்க…. இன்னொரு அறையில் சரளா உறங்க…. அவனாஷும் சம்யுக்தாவும் ஹாலில் சத்தமாகப் பாட்டை வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டு இருந்தனர்.

ஹே ரக்கிட ரக்கிட ரக்கிட…

ஹே ரக்கிட ரக்கிட ரக்கிட

என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் என இருவரும் அவர்களே பாடி, வீடு அதிர அடிக் கொண்டும் இருந்தனர். பிறகு அப்படியே வேறு வேறு பாட்டுக்கு தாவி….பின்பு களைப்படைந்து எதோ இருவருமாக தயாரித்து எடுத்து வந்து பருகினர். 

சிறிது நேரம் சென்று இருவரும் ப்ளே ஸ்டேஷனில் மாலை வரை விளையாடினர்.

அறைக்குள் இருந்தாலும் அவர்கள் நடவடிக்கை அனைத்தும் ஆரியனுக்குத் தெரிந்தாலும், போன முறை வாய்விட்டது போல எதுவும் பேசி விட வேண்டாம் எனத் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.

சம்யுக்தா கிளம்பும் போது, அவர்கள் ஊர் திருவிழாவுக்கு அவினாஷ் அவளுக்கு அழைப்பு விடுத்தவன், அவன் அம்மாவையும் அழைக்கச் சொல்ல…. சரளாவும் வேறு வழியில்லாமல் அழைத்தார்.

நீ எங்க அப்பாவைப் பார்த்தேனா உனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க அப்பா உன்னைப் போல ரொம்ப ஜாலியா இருப்பாரு.” என அவினாஷ் சொல்ல… சம்யுக்தாவுக்கும் சென்று வந்தால் என்ன என்று தோன்றியது.

இந்துஜாவும் சம்யுக்தாவும் தங்களை இதுவரை வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை. அதனாலையே அவர்கள் இத்தனை நாள் பாதுக்காப்பாக இருந்தார்கள். இந்தத் திருவிழாவுக்குச் சம்யுக்தா செல்வது, அவளின் வாழ்க்கையின் பாதையையே மாற்றும் என்றும் அவளுக்குத் தெரியவில்லை.

Advertisement