ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ என்ற பாடலை முனங்கியபடி சம்யுக்தா மாடியில் இருந்து இறங்கி வந்தவள், நேராக உணவு மேஜைக்குச் செல்ல… அங்கே அவளின் அம்மா இந்துஜா காலை உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
இந்துஜா தேன் நிறம். காலையிலேயே குளித்து நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து, காட்டன் புடவையில் பாந்தமாக இருந்தார்.
“ஹாய் மா…”
“வா சாப்பிடு…. முதல் நாள் காலேஜுக்கு போற…. வாயில சினிமா பாட்டு தான் வருமா… படிப்பை பத்தி நினைச்சிட்டுப் போனா தானே நல்ல படிப்பு வரும்.”
“உங்களுக்கு இப்போ நான் பாடினதுனால கோபமா இல்லைனா… நான் பாடின பாட்டு மேல கோபமா…. அப்பாவுக்குத் தான் இந்தப் பாட்டு ரொம்பப் பொருத்தமா இருக்கும் இல்ல….” எனச் சம்யுக்தா சிரித்தபடி உணவை எடுத்து வையில் திணிக்க…
“ரொம்பக் கொழுப்பு உனக்கு. இந்த மாதிரி காலேஜ்லையும் போய்ப் பேசி வைக்காத. உனக்கு அந்தக் காலேஜ் பத்தி தெரியும் இல்ல… நம்ம ஆட்கள் நடத்துற காலேஜ். அதனால உங்க அப்பா குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் அங்க படிப்பாங்க.”
“இத்தனை நாள் நாம யார் வாயிலேயும் விழாம இருந்துட்டோம் சம்யுக்தா… இனியும் அப்படி இருந்திட்டு போயிடணும். நான் உங்க அப்பாகிட்ட உன்னை வேற காலேஜ் சேர்க்க சொன்னா… உங்க அப்பா கேட்கவே இல்லை. நம்ம ஆளுங்க காலேஜ். ரொம்பக் கண்டிப்பான காலேஜ். அதனால அதுலேயே படிக்கட்டும்னு சொல்லிட்டார்.”
“நீ நம்ம வீட்ல இருக்க மாதிரி விளையாட்டு தனமா இல்லாம… படிக்கிற வேலையை மட்டும் பார்த்திட்டு வா…”
“சரி மா எனக்குத் தெரியாதா…” எனச் சம்யுக்தா சொல்லிக் கொண்டிருக்கும் போதே… கீழே இருந்த அறையில் இருந்து வெளியே வந்த சக்ரவர்த்தி, தூய வெள்ளை நிற வேட்டி சட்டையில்… நெற்றியில் திருநீறோடு பார்க்க கம்பீரமாக இருந்தார்.
“ஹாய் பா…” என்ற மகளைப் பார்த்து புன்னகைத்தவர், “என் பொண்ணு இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சாச்சா…” என ஆச்சர்யப்பட…
“இன்னைக்குத் தான் மேடம் முதல் நாள் காலேஜ் போறாங்க அதுதான்.” என்றார் இந்துஜா.
“இன்னைக்கு அப்பாவே உன்னைக் காலேஜ்ல கொண்டு விடுறேன்.” என்றதும்,
“சரிப்பா…” என மகிழ்ச்சியாகச் சொன்னவள், வேகமாக உண்டு முடிக்க… சக்ரவர்த்தியும் காலை உணவை உண்டுவிட்டு மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
மதுரையில் இருக்கும் பிரபல கல்லூரிக்குள் கார் சென்று நிற்க… சம்யுக்தா பாய் பா என்று சொல்லிவிட்டுக் காரில் இருந்து இறங்க… சக்ரவர்த்தியும் உடன் காரில் இருந்து இறங்கினார்.
அன்றுதான் முதல் வருட மாணவர்களுக்குக் கல்லூரி திறப்பதால்… ஆணும் பெண்ணுமாக நிறையப் பேர் அங்கே நின்று அல்லது நடந்து கொண்டிருக்க… இவர்கள் காரில் இருந்து இறங்கியதும், சக்ரவர்த்தியை பார்த்த பேராசிரியர்கள் சிலர் அவரிடம் வந்து பேசினர்.
மதுரையில் பிரபலமான ஆட்களில் சக்ரவர்த்தியும் ஒருவர். பல தொழில்கள் அவருக்கு உண்டு என்பதால்… நிறையப் பேருக்கு அவரைத் தெரியும். .
“போயிட்டு வரவாப்பா…” என்ற மகளிடம், “ஒரு நிமிஷம் இரு டா.” என்றவர், கைபேசியில் யாரையோ அழைத்தார்.
“ஸ்ரீ குட்டி, அப்பா உங்க காலேஜ்ல தான் இருக்கேன். கொஞ்சம் வந்திட்டு போ.” என்றதும்,
சிறிது நேரத்தில் சம்யுக்தாவின் ஜாடையில் ஒரு பெண் சுடிதாரில் விரைந்து வர… அவளைப் பார்த்ததும் சக்ரவர்த்தி,
“காலையில சாப்பிட்டியா?” என
“சாப்பிட்டேன்ப்பா.” என்றாள்.
“நம்ம பாப்பாவையும் இங்க தான் சேர்த்திருக்கு. தங்கச்சி மேல ஒரு கண்ணு வச்சுக்கோ… சின்னப் பிள்ளை விவரம் போதாது.” என்றதும், சம்யுக்தாவை நிமிர்த்து பார்த்த ஸ்ரீநிதி, மருந்துக்குக் கூடப் புன்னகைக்கவில்லை. ஆனால் சம்யுக்தா அவளைப் பார்த்து, “ஹாய் அக்கா.” என்றாள் மலர்ந்த முகத்துடன்.
ஸ்ரீநிதிக்கு தந்தை என்றால் மிகவும் பயம், அதனால் அவர் சொன்னதற்கு எல்லாம் மறுக்க முடியாமல், தலையைத் தலையை ஆட்டி வைக்க… தந்தை கிளம்பியதும் சம்யுக்தாவின் பக்கம் கூடத் திரும்பாமல் ஸ்ரீநிதி அங்கருந்து செல்ல… ஒரு தோள் குலுக்களுடன் சம்யுக்கதாவும் அங்கருந்து சென்றாள்.
இருவரும் தங்கள் தந்தையை உரித்து வைத்துப் பிறந்திருக்க… அதனால் வேறு வேறு அம்மாக்கள் என்றாலும், அக்கா தங்கைகள் இருவரும் ஒரே ஜாடையில் இருந்தனர்.
சம்யுக்தா அவள் வகுப்பறையை நோக்கி நடந்து கொண்டிருக்க… அப்போது யாரோ வேகமாக ஓடி வந்து அவளுடன் சேர்ந்து நடக்க… அருகில் ஒரு வாலிபனைப் பார்த்ததும் தந்தை இன்னும் வெளி வாயிலுக்குக் கூடச் சென்றிருக்க மாட்டார், அதற்குள் யாருக்கு இவ்வளவு தைரியம் என்பது போலச் சம்யுக்தா பார்க்க…
“ஹாய்… சக்ரவர்த்தி மாமாவை பார்த்தேன். நீ இந்துஜா அத்தையோட பெண் சம்யுக்தா தான…. நான் அவினாஷ், உன் சரளா அத்தையோட பையன்.” எனத் தன்னை அவன் அறிமுகம் செய்துகொள்ள…
“ஹாய் அவினாஷ், சரளா அத்தை பத்தி அப்பா சொல்லி கேள்வி பட்டிருக்கேன். ஆனா பார்த்தது இல்லை. நீங்களும் இங்கதான் படிக்கிறீங்களா? என்ன கோர்ஸ்?”
“பி. ஈ., ஈசி மூணாவது வருஷம்.” என்றவன் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான்.
“ஸ்ரீநிதி அக்கா என்னோட பேசவே இல்லை. நீங்க என்னோட பேசுறீங்களே… பரவாயில்லையா…வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா.”
“யாரு அவங்க பேச்சை எல்லாம் கேட்கப் போறா? ஆமாம் நீ என்ன கோர்ஸ்.”
“நான் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ்.”
“ஓ… உன் அக்காவும் அதுதான், கடைசி வருஷம்.”
“எங்க அப்பா எங்களைச் சமமா நடத்துறேன்னு காட்டவே இப்படிப் பண்றாருன்னு நினைக்கிறேன். நான் பி. ஈ தான் படிக்கிறேன்னு சொன்னேன். ஆனா வேண்டாமன்னு சொல்லிட்டார்.”
“இருக்கலாம், ஆனா உனக்குக் கோபம் இல்லையா?”
“இல்லை… நான் ரொம்ப இது வேணும் அது வேணும்னு எல்லாம் நினைக்க மாட்டேன். எனக்கு எது கிடைச்சிருக்கோ அதைப் பெஸ்ட்டா மாத்திப்பேன். எனக்கு இதுவும் ஓகே தான்.”
“கையில் கிடைச்சது தொலைச்சா… இன்னும் பிடிச்சது கிடைக்கும்.” எனப் பாடி காட்டியவள், “நாங்க எல்லாம் தலைவர் வழி… வாழ்க்கையில என்ன கிடைச்சாலும், கிடைக்கலைனாலும் சந்தோஷமா இருப்போம்.” என்றாள்.
சம்யுக்தா பேசுவதைக் கேட்க அவினாஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ரொம்பவும் அலட்டிகொள்ளாமல், இயல்பாக அவள் பேசுவது அவனுக்கு மிகவும் பிடித்தது.”
“சரி நாம இனிமே பிரண்ட்ஸ் ஓகே வா… எதுனாலும் என்னைக் கேளு. நான் இங்கதான் மதுரையில வீடு எடுத்து இருக்கேன். கூட அண்ணா இருக்கான். ஸ்ரீநிதி இங்க தான் ஹாஸ்ட்டல்ல இருக்கா.”
“ஸ்ரீநிதி அக்கா ஏன் அப்போ உங்களோட இருக்காம ஹாஸ்ட்டல்ல இருக்காங்க.”
“எங்க அண்ணாவுக்குத் தான் ஸ்ரீநிதியை கல்யாணம் பண்ண போறதா, வீட்ல பெரிசுங்க பேசிட்டு இருக்காங்க. அப்புறம் எப்படி ரெண்டு போரையும் ஒரு வீட்ல இருக்க வைப்பாங்க.”
“ஒ அப்படியா… எனக்கு இதெல்லாம் தெரியாது.”
“உனக்கு எல்லாம் சொல்றேன். ஆனா இப்போ நான் போகணும். அப்புறம் பார்க்கலாம் ஓகே வா…”
“ஓகே பார்க்கலாம்.” என்ற சம்யுக்தா அவினாஷிடம் விடைபெற்று சென்றாள்.
அம்மாகிட்ட போய் இன்னைக்கு இங்க ஸ்ரீநிதி அக்கா அப்புறம் அவினாஷை பார்த்ததைச் சொல்லணும் என நினைத்துக் கொண்டு சென்றாள்.
அதே போல வீட்டில் சென்று சொல்லவும் செய்தாள். அக்காவுக்கு இஷ்ட்டம்னா அவளே உன்கிட்ட பேசுவா, நீ எதுவும் அவளைத் தொந்தரவு பண்ண வேண்டாம் என்ற இந்துஜா, மகள் அவினாஷை பற்றிச் சொன்னதைக் கணவரின் காதுக்கும் கொண்டு சென்றார்.
இந்துஜா தன்னிடம் எதையும் மறைக்க மாட்டார் என்பது சக்ரவர்த்திக்கு தெரியும். மனதில் இருப்பதைச் சொல்லிவிட்டு திட்டுக் கூட வாங்கிக் கொள்வாரே தவிர… எதையும் மறைக்க நினைக்க மாட்டார். மகள் அவினாஷோடு பழகுவதைப் பற்றிச் சொல்லி விட்டார்.
“அவனும் நம்ம பையன் தான். ஒன்னும் பிரச்சனை இல்லை. அதோட அவங்க அண்ணனை தான் ஸ்ரீநிதிக்கு பண்ணனும்னு அம்மா சொல்லிட்டு இருக்காங்க.” எனச் சக்ரவர்த்திச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, சம்யுக்தாவும் அங்கே வந்தவள், அதைக் கேட்டு விட்டு,
“ஆரியன் ரொம்ப நல்ல பையன். அதே போலச் சம்யுக்தாவுக்கும் ஒரு மாப்பிள்ளை அமைஞ்சிட்டா… என்னோட ரெண்டு பெண்கள் வாழ்க்கையைப் பத்தி கவலை இல்லாம எனக்கு நிம்மதியா இருக்கும்.” என்றதும்,
“அப்பா நான் உங்களை விட்டு போக எல்லாம் மாட்டேன் சரியா?” எனச் சம்யுக்தா சொல்ல…
“சரி டா குட்டி, வீட்டோட மாப்பிள்ளையா பார்த்திடலாம்.” என்றார் சக்ரவர்த்தி, சம்யுக்தா அங்கிருந்து சந்தோஷமாகச் சென்றாள்.