Advertisement

இவன் ”அப்படியே லைன்ல இரு!” என்றவன், 
“ஜொய்ங்!” என்று அந்த பூங்காவில் இருந்த சறுக்கில் சறுக்கினான்.
”ஓய்! பார்க்லேயா இருக்க? நான் நினைச்சேன்.” என்று இவள் ஆர்வமாக கேட்க,
“ஆமா!” என்று தோள்பட்டையோடு செல்லை காதில் இறுக்கியவன், தன் இரு கையின் விரல்களாலும் விசில் அடித்தான். 
அதில் முன்னாளில் இவன் தங்கியிருந்த அறைக்கு எதிர் வீட்டில் இருந்த சிறுவன், ஊஞ்சலில் ஆடியதை அப்படியே விட்டுவிட்டு இவனிடம் வந்து ஐஸ்க்ரீம் கப்பை வாங்கிவிட்டு மீண்டும் ஊஞ்சலை நோக்கி ஓடினான்.  
”என்ன ஓய் நடக்குது அங்க?” என்று இவள் இன்னும் ஆர்வமாக,
“ஈவினிங் ஆச்சா! சாருக்கு உன் ஞாபகம் ரொம்ப வந்துச்சா, அதான் அவனையும் கூட்டிட்டு பார்க் வந்தேன். ஐஸ்க்ரீம் வாங்கித் தரலாமேனு கையில் வாங்குனா இவன் ஊஞ்சலை விட்டு வரலை. வாட்ச்மேன் வேற இல்லை. அதான் சறுக்கில் ஒரு கையில் ஐஸ்க்ரீம், இன்னொரு கையில் போன் சகிதம் சறுக்கலாம்னு ஏறி நின்னேன். நீ கால்பண்ணிட்ட!” என்றான்.
”பார்டா! அன்பு மாதிரி ஒருத்தன் பார்க்ல சுத்துறானா?” என்று இவள் சிரிக்க,
“நீ எப்படி இருக்க? அங்க எல்லாமும் பழகிட்டா?” என்றான்.
இவனின் மருத்துவ சிகிச்சைகளை பற்றி விசாரித்தவள் “ம்! அந்தக் கதையை ஏன் கேட்குற? காலேஜ் பழகிட்டேன். அங்கேயாவது பல மாவட்டத்து பொண்ணுங்க படிச்சாங்க. இங்க பல நாட்டு பொண்ணுங்க படிக்கிறாங்க. ரெண்டு வருஷத்துல நான் பல ஊர் பாசை பேசப் போறேன்!” என்று சிரித்தாள்.
“என்ன பஞ்சாயத்து?” என்று இவன் கேட்க,
“அந்த ஹாஸ்டல்ல ஒரு பொண்ணு, என் ரூம் பொண்ணை இடைஞ்சல் பண்ணினா. இவ அழுதாளா, அந்த பொண்ணு மேல ரொம்ப கோபம் வந்திச்சு, ”ஏன் இப்படி கஷ்டப்படுத்துற?னு பேசினேன். ரொம்ப திமிரா பேசினாளா, அதான் கிச்சன்ல இருந்த கத்தியை தூக்கிட்டு நின்னேன். அவளை விட, வார்டன் மிரண்டு அப்பாவை கூப்பிட்டுட்டாங்க!” என்றாள்.
“என்ன?” என்று இவன் பெரிதாய் கேட்க,
“ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற?” என்றாள்.
“இல்ல, நீ இந்த அளவுக்கு கோபப்பட்டிருந்தா உன் பக்கம் நியாயம் இருக்கும். ஆனா நம்மளை பார்த்து ஒருத்தவங்க கண்ணுல காட்டுற பயம், உலகத்தில் உள்ள எல்லா போதைகளையும் விட, மோசமான போதையை நமக்கு கொடுக்கும். அது நமக்கு தெரியாமலேயே நம்மளை இன்னும் நிறைய தப்பு பண்ண வைக்கும். உனக்கு தெரியாதது இல்லை. இனி கோபத்தை கண்ட்ரோல் பண்ணு!” என்றான்.
”சரி! ஏதோ அந்த டைம்ல அளவுக்கு அதிகமா ஏறிடுச்சு. இங்க வேற சூழ்நிலைகள். நாம முன்னாடி பார்த்த மாதிரி இல்லை இந்த வாழ்க்கை. கொஞ்சம், கொஞ்சமா பழகுறேன். அந்த ஹாஸ்டல்ல இருந்து வெளியேறுனப்பகூட அந்த பொண்ணுகிட்ட கைகொடுத்துட்டுதான் வந்தேன். அந்த பொண்ணு சாரி கேட்டா, எனக்குதான் அங்க இருக்க விருப்பம் இல்லை. இப்போ வீடு எடுத்து அதில் ஒரு ரூமை நான் எடுத்துருக்குறேன். வீடியோ கால் பண்ணு! காட்டுறேன்.” என்றாள்.
”சூப்பர்! இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு போயிடுவேன். அங்க போய் விடீயோ கால் பண்றேன்” என்றவன், அந்த சிறுவனை அழைத்து வந்து, அவன் வீட்டில் விட்டுவிட்டு அழகரின் வீட்டிற்கு வந்தான்.
உள்ளே வந்ததும் வீடீயோ காலில் இவன் அழைக்க, கதவை அடைத்துவிட்டு தன் அறையை சுற்றிக் காட்டினாள் அன்பு.
”என் ரூமை மினி சைசில் பார்த்த மாதிரி இருக்கு!” என்று இவன் சிரிக்க,
“ஓய்! என்ன அது?” என்றாள் இவனின் உருவத்தை பார்த்து.
“என்ன?” என்று கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துவிட்டு வந்தவன், “ஓ! ஹேர் ஸ்டைலா! அது மூணு மாசமா முடி வெட்டலை. சோ நிறைய வளர்ந்திட்டா, அதான் ஹேர் ஸ்டைல் புதுசா இருக்கு. வேணும்னா மொத்தமுடியையும் கட்டிடலாம். தாடியும் வைச்சதும் முகம் பெரிசா தெரியுதில்ல!” என்றான் புன்னகையுடன்.
“பஞ்சரான பாடியை வைச்சுகிட்டு, பாரின் ஹீரோ மாதிரி ஹேர் ஸ்டைலா? ம்! ஆனா பார்க்க செமையா இருக்கு. எங்க என் மச்சத்தை காணும்? ஓய்!” என்று இவள் கண்களால் தேட, 
“இனி தாடியை எடுத்திடுறேன்!” என்று சிரித்தான்.
“ம்! நீ, நான் முன்னாடி இருந்த மாதிரி ஜாலியா மாறிட்ட. நான் இங்க என்ன பேர் வாங்கி வைச்சிருக்கேன் தெரியுமா?” என்றாள் பெருமூச்சுடன்.
“என்னவாம்?” என்று இவன் சிரிக்க,
 ”நான் ரொம்ப உம்மனாம் மூஞ்சியாம்!”
“ம்!” என்று இவன் சிரிக்க,
“சிரிக்காம கேளு!” என்றவள், “ரொம்ப படிப்பாளியாம், டெய்லி ஒரு பத்து பக்கமாவது வேற ஏதாவது புக் படிக்காம தூங்க மாட்டேனாம், டெடரர் பீஸாம், யாரோடையும் நிறைய பேச மாட்டேனாம், திமிர் புடிச்சவளாம், அப்புறம் யாரையும் மதிக்க மாட்டேனாம், ஆனா என்ன கேட்டாலும் சொல்லி கொடுப்பேனாம். மொத்தத்தில் நீ ஆரம்பத்தில் இருந்தியே, அந்த மாதிரி பேரை இங்க நான் எடுத்து வைச்சிருக்கேன். இப்போ புரியுது ’அமைதியா ஒழுங்கா படிச்சாலே இத்தனை பெயர்களையும் நம்ம எடுத்திடுவோம்!’னு” என்றாள் பாவமாய் ஒரு முழிமுழித்து.
இவன் பெரிதாக சிரித்தவன், “யாரை நீ மதிக்கலையாம்?” என்று கேட்க,
“இங்க காரியம் ஆகணும்னு ப்ரொபசர்ஸ்கிட்ட, சீனியர்ஸ்கிட்ட எல்லாரும் நல்லா பேசுறாங்க. அப்புறம் பின்னாடி அவங்களை பத்தியே கேவலமா பேசுறாங்க. அது எப்படி அன்பு ஆகும்? எந்த எதிர்பார்ப்பும் இல்லாம கொடுத்தாதான அது உண்மையான அன்பு. நமக்கு அது செட் ஆகாது. அதுக்கு நான் அமைதியாவே இருந்துப்பேன்” என்றாள்.
இவன் சிரிக்க,
”நல்லா சிரி! என்னை இங்க கோர்த்துவிட்டுட்டு, அங்க ஜாலியா இருக்க!” என்று சொல்ல,
”வருங்கால பேராசிரியை அன்புவுக்கு இந்த நிலமையா?” என்று இவன் இன்னும் சிரிக்க,
“இங்க நான் தங்கியிருக்குற வீட்டில் உள்ள பொண்ணுங்களை பழகிட்டேன். எல்லாருமே வெளியூரிலிருந்து வந்து இங்க தங்கி படிக்கிற பொண்ணுங்க” என்றாள்.
இப்படி நிறைய விஷயங்களைப் பேசிவிட்டு, அன்றைய நாளை மிக மகிழ்ச்சியாக முடித்திருந்தனர்.
 இப்படியே ஒரு மாதம் கடந்திருக்க,
ஒரு காலையில் அன்பு சென்னையின் மிகப்பெரிய நூலகத்தின் முன் நின்றிருந்தாள். அது திறக்க இன்னும் சில நிமிடங்கள் இருக்க, முதல் ஆளாக வந்திருந்தவள் அருகில் உள்ள திண்டில் அமர்ந்து இவனுக்கு அழைத்தாள்.
இவன் பேச, 
பின்னர் அழகர் வாங்கி பேசியவன் “என்ன புள்ளமா நீ? பாட்டுகேளுனு இவனுக்கு எல்லா பாட்டுகளையும் அனுப்புனாலும் அனுப்புன, இங்க இவன் தொல்லை தாங்கலை!” என்றான்.
”என்ன?” என்று இவள் கேட்க,
”பாட்டை போட்டு வீட்டை அதிர விடுறான். ஏதோ எங்க தாத்தா நேர்மையா உழைச்சு நல்லா கட்டினதால இன்னும் இந்த வீடு தாங்குது. இங்க பாரு! எல்லாரும் சேர்ல உட்கார்ந்து மேஜை மேல தட்டை வைச்சு சாப்பிடுவாங்க. இவன் என்னடான்னா மேஜை மேல உட்கார்ந்து சேரில் காலை வைச்சு, மடியில் தட்டை தூக்கி வைச்சு சாப்பிடப் போறான். நல்லா குரங்கு குட்டி மாதிரி என் வீட்டை குப்பை ஆக்குறான். பட் அதை அவனே சுத்தப்படுத்திடுறதால, எதையும் நான் கண்டுக்குறது இல்லை. இம்பூட்டூண்டு இவன் வைக்கிற நல்ல குழம்புக்கு நாக்கு செத்துப்போய், நான் எவ்வளவை சமாளிக்க வேண்டியதா இருக்கு தெரியுமா?” என்றபடி வெளியில் வந்து பேசியவன்,
“ரொம்ப நன்றி!” என்றான் மனமார,
“எதுக்கு?” என்று இவள் புன்னகையுடன் கேட்க,
“முன்னாடிலாம் நானும் கலைகூட கல்யாணம் பண்ண எங்க வீட்டில் சம்மதிக்கலன்னு புலம்பா புலம்புவேன். இப்போ ’கல்யாணம் பண்ணி, புள்ளைகுட்டி பெக்கதான அவங்க சம்மதம்லாம் தேட வேண்டியது இருக்கு. லவ் பண்ண என்ன தடை?’னு நினைச்சி, அவங்க சம்மதிக்க வரைக்கும் ஜாலியா லவ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்று சிரித்தான்.
இவளும் சிரிக்க,
“நீ ஏதோ ”அன்பு செய்யுங்க!”ன்னு சொல்லுவியாமே! அது மாதிரி நானும் இப்போலாம் கலைகிட்ட ”லவ்வு செய்வோம் கலை!”னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்மா!” என்றான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, 
கீழே இருந்த டீ கடை, எதிரில் இருந்த தையல் கடை, அதன் அருகில் பூ விற்கும் பாட்டி என எல்லோரும் ”அழகரு! அண்ணா எங்க?” என்று கேட்க, 
அங்கிருந்த சிறுவன் மேலே பார்த்து, அழகரிடம் ”பாட்டு இன்னும் போடலையா அண்ணா? பிலீவர் சாங் போடச் சொல்லுங்க!, அடுத்து மசக்கலி, அடுத்து லஜ்ஜாவதியே சாங்!” என்று சத்தமாகச் சொன்னான்.
“இருங்க! நான் வேலைக்கு போனதும் போடுவான்” என்றவன்,
இவளிடம் ”இங்க பார்த்தியா! இத்தனை நாளும் நான் தனியா இருந்தப்ப ”வீட்டில் உள்ளவங்களை விரட்டிட்டு, இவன் மட்டும் தனியா இருக்கான்!”னு கொடூறன் ரேஞ்சுக்கு பார்ப்பாங்க. இப்போ இவன் வந்து என்ன மாயம் செஞ்சானோ, எல்லாரும் நம்மகிட்ட தேடி வந்து பேசுறாங்க. பூரா கூட்டமும் இவன் செலக்ட் பண்ணி போடுற பாட்டுகளுக்கு விசிறிங்க. ஆனா அவங்களுக்கு எங்க தெரியும், அது மொத்தமும் நீ அனுப்பி வைச்சதுன்னு. எங்க! போற போக்க பார்த்தா, அண்ணா மைக்கேல் ஜாக்சன் ஆகிருவான் போல!” என்றான் ஆனந்தமாய்.
“கேட்க சந்தோஷமா இருக்கு. நல்லா பார்த்துக்கோங்க!” என்று இவள் சொல்ல,
“சரிம்மா!” என்றவன், ”வேலைக்கு நேரமாச்சு. அவன்கிட்ட பேசு!” என்று செல்லை கொடுத்துவிட்டு கிளம்ப, 
இங்கு நூலகமும் திறக்க, அண்ணாவிடம் பேசிவிட்டு வைத்திருந்தாள்.
அழகர் கீழே செல்ல, 
“என்ன, பூலிவர் பாட்டைக் காணோம்?” என்று பூக்கடையில் இருந்த பாட்டி கேட்க,
“நான்தான் கிளம்பிட்டேனே! இப்போ போட்டுடுவான்.” என்றவன், 
“பல்லு போன வயசுல, பூலிவர் சாங்காம்ல பாட்டிக்கு!. இருங்கடா நானும் ஒருநாள் இல்ல ஒருநாள், கலையோட இந்த பாட்டையெல்லாம் கேட்குறேன்!” என்று முனங்கிக் கொண்டே வண்டியை எடுக்க, இவனின் வீடு இசையில் அதிர்ந்தது.
அங்கு அன்பு திறக்கப்பட்ட நூலகத்தில் முதல் ஆளாக நுழைந்திருந்தவள், வரிசையாக அடுக்கி நிறைந்திருந்த புத்தகங்களின் முன், தன் இரு கைகளையும் விரித்து நின்று மூச்சை ஆழமாக உள்ளிழுக்க, 
இங்கோ மேஜையின் மீது அமர்ந்தபடி, சேரின் இரு கைப்பிடிகளிலும் கால்களை வைத்து, ஒலிக்கும் பிலீவர் பாட்டின் இசைக்கேற்ப கால்களையும், உடலையும் அசைத்தபடியே உணவை உண்டு கொண்டிருந்தான் அண்ணா.
அந்த புத்தங்கங்களின் வாசனைகளில் அண்ணா நிறைந்திருக்க, அறையெங்கும் அதிர்ந்து கொண்டிருந்த மேற்கத்திய இசையின் வரிகளில் நிறைந்திருந்தாள் அன்பு.
“You made me a, You made me a believer! believer!”………….

Advertisement