கிட்னாப்பிங் 2 .A
“ஐயோ இன்னும் ட்ரெயின் வர காணோமே…அது சரி நம்ம நாட்டுல எது உருப்படியா நேரத்துக்கு வந்துருக்கு…வேகமா வா…வேகமா வா…”என்று அவள் மதுரை சந்திப்பில் நட்டநடு இரவில் இரயில்வே நேரம் 23.45க்கு நின்று கூப்பாடு போட்டு கொண்டிருக்க இரயில் வருவதற்கு பதிலாக 45 வயதில் கண்ணெல்லாம் சிவப்பேறி…குடலை புடுங்கும் மது நாற்றத்துடன் ஒருவன் தான் வந்து அவள் பக்கத்தில் நின்றிருந்தான்…
“கருப்பா…இது உனக்கே நல்லா இருக்கா…நான் யாரை வர சொன்னா…நீ யாரை அனுப்பிவிட்ருக்க…”என்று நினைத்துக்கொண்டு அந்த 45 வயது மதுபுட்டியிடம் இருந்து தள்ளி நின்றாள்….மீண்டும் அந்த ஆள் வந்து அவள் அருகில் நிற்கவும் மீண்டும் இவள் கொஞ்சம் தள்ளி நின்றாள்…மீண்டும் அவன் அருகில் வரவும் இவள் மூளை மின்னல் வேகத்தில் வேகமாக கணக்கு போட ஆரம்பித்தது…
“ஒரு வேளை…எங்க அப்பனுக்கு தெரிஞ்சவனா இருப்பானோ…ஆனால் இந்த கேடுகெட்ட மூஞ்சியை நான் பார்த்ததே இல்லையே…”என்று அந்த ஆளை மேலிருந்து கீழாக பார்த்துக்கொண்டே தன் பத்தொன்பது வருட வாழ்க்கையின் நினைவாற்றலை திருப்பி பார்த்தாள்…அந்த ஆள் எங்கேயுமே இல்லை…
இவ்வாறு அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே அவள் ஏறவேண்டிய இரயில் வந்துநின்றது….
பாவி அதை கவனிக்காமல் அந்த ஆளை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தாள்…ஐந்து நிமிட இடைவேளையில் மீண்டும் இரயில் கிளம்பவும்…பின்னிருந்து ஒரு குடும்பம் ஓடிவந்தது…..அதிலிருந்த ஒரு பெண் இவளை இடித்துவிட்டு ஓடவும் தான் சிந்தனையில் இருந்து வெளிவந்தவள் அவளும் அடித்து பிடித்து ஓடி சென்னை எக்ஸ்பிரஸ் தீபிகா படுகோன்க்கு போட்டியாக அங்கொரு காட்சியை அரங்கேற்றினாள்… என்ன டீபி ஓடி ஏறினார்… ஆனால் நம்ம தமிழ் ஓடியது நமக்கு உருண்டு போனது போல் தோன்றும்…
தமிழரசி இரயிலில் ஏறி அமரவும்…அங்கிட்டு இருந்து ஒரு ஐந்து ஆறு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த தடி தாண்டவராயன்கள் ஓடிவரவும் சரியாக இருந்தது…
“ச்சை…விட்டுட்டோம்…கருமம் அந்த ஆளு திட்டுவானே”என்று ஓடிவந்தவர்களில் ஒருவன் மூச்சு வாங்க கூறினான்…
தமிழரசி ஏறிய பெட்டியில்…இவளை தள்ளிவிட்டு அரக்க பறக்க ஓடிவந்த குடும்பம் அப்பெட்டியில் உள்ள அனைத்து இருக்கையும் அடைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்…
“அடி ஆத்தி…குடும்பம்னுட்டு ஒரு ஊரே உக்காந்து இருக்காங்கங்க…”என்று புலம்பிக்கொண்டே எங்கயாவது தொத்திக்கொள்ளவாவது இடம் இருக்குமா என்று பார்த்துக்கொண்டே வந்தவள் கடைசி இருக்கையில் ஒருவன் அமர்ந்திருந்தான்…
அப்பொழுதுதான் அரக்க பறக்க ஓடி வந்து இன்னொரு வாயில் வழியாக உள்ளே நுழைந்து தன்னை யாரும் பார்க்கிறார்களா இல்லையா…யாருக்கும் தன்னை அடையாளம் தெரிகிறதா என்று சுற்றி பார்த்து கொண்டே அமர்ந்திருந்தான் அவன் ஆளன்…
அந்த இடத்தை பார்த்தவுடன் பின்னணியில் கண்ணா லட்டு திண்ண ஆசையா என்று தமிழரசியின் குரலே ஏக போக ஆனந்தத்தில் ஒலிக்க ஓடி போய் அமர்ந்து கொண்டாள்….
தமிழரசி ஓடி வந்து அமர்ந்தவுடன் அவ்வளவு நேரம் தன் ஒட்டு தாடியிலும் சுற்றுப்புறத்திலும் கவனம் வைத்திருந்த ஆளன் தனக்கு எதிரே பலத்த சத்தத்துடன் அமர்ந்த தமிழரசியை நிமிர்ந்து பார்த்தான்…
தமிழரசியோ அவனை கண்டுகொள்ளாமல் டிக்கெட் மற்றும் இன்னும்பல பொருள்களை கைப்பையில் இருந்து எடுத்தவள் டிடிஆர் க்காக காத்திருக்க ஆரம்பித்தாள்…
இது என்ன லூசா என்பது மாதிரி ஒரு பார்வை பார்த்த ஆளன் மீண்டும் தன் ஒட்டு தாடியை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு மங்கி குல்லா ஒன்றை அணிந்துகொண்டான்…
தமிழரசிக்கு இது தான் முதல் இரயில் பயணம்…இந்த டிக்கெட் எல்லாம் வீட்டில் இருந்து வெளிவருபவர்களுக்கே என்று உதவி கரம் நீட்டும் நண்பர்கள் இருக்கிறார்கள் இல்லையா அவர்கள் எடுத்துக்கொடுத்தது….
ஒரு அரைமணி நேரம் பார்த்த விழி பார்த்தபடி பூத்து கிடக்க என்று இரயிலின் போக்குக்கு ஏற்ப ஆடிக்கொண்டே டி டி ஆர் வருவார் வருவார் என்று பார்த்த தமிழரசி அவர் வராததால் வேறு வேளையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்…
“இந்த ஆளு என்ன மங்கி குல்லா எல்லாம் போட்டுட்டு இருக்காப்ல…ஹி ஹி ஹி…”என்று மனதிற்குள் சிரித்தவள் தன் கைபேசியை எடுத்து காலையில் இருந்து ஐம்பது தடவைக்கும் மேல் அழைத்த எண்ணிற்கு மீண்டும் அழைத்தாள்…ஏதோ கன்னடத்தில் நாத்தனார் மாமியார் என்று இவளுக்கு புரியாத மொழியில் ஒரு பொம்பளை இனிய குரலில் பேச தமிழரசியும் முறைப்புடனே அலைபேசியை அணைத்தாள்…
மீண்டும் பலமாக போர் அடிக்கவும் தன் கைபேசியை எடுத்து கேமராவின் உதவியுடன் தன்னை சரி பார்த்தவள் கொஞ்சம் லிப்ஸ்டிக் மற்றும் eyelinear போட்டவள்…அந்த அர்த்த ராத்திரியில்
“வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன் …
இல்லையேல் மண்ணோடு
போய் தான் சேருவேன்…
உள்ளமே உனக்கு தான்…
உசுரே உனக்கு தான்…”என்று அசத்தலாக பாடல் ஒலிக்க அதற்கேற்றவாறு முகபாவங்கள் மற்றும் ஒரு கண்ணிலிருந்து அழுகை என்று சூப்பர் டூப்பர் டிக் டொக் செய்து கொண்டிருந்தாள் தமிழரசி….
ஆறடிக்கு கொஞ்சம் கம்மியாக ஐந்தரை அடிக்கு கொஞ்சம் அதிகமாக…மாநிறத்தில்…செல்ல தொப்பையுடன் மங்கி குல்லா…சிவப்பு நிற கம்பளி என்று அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஆளன் தமிழரசியை நிமிர்ந்து பார்த்தான்…
டிக் டொக் முடிந்ததும் தான் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் எதிரிருக்கை காரனை கவனித்த தமிழரசி கப் சிப் கமர்கட்டு ஆனாள்…
“இந்த நிகழ்ச்சியை மறக்காம ஞாபகம் வைச்சுக்குவோம்…எப்பயாச்சும் யூஸ் ஆகும்…இருந்தாலும் நம் தமிழ் பெண்கள் இந்த அர்த்த ராத்திரியிலும் இப்படி அலைய கூடாது…”என்று நினைத்தவன் கண்கள் சுழட்ட தூக்கம் வரவும் அப்டியே சாய்ந்து அமர்ந்து கண் மூடினான்…
“ச்சை…அசிங்கமா போச்சே…கண்ணை நோண்ட…இந்த ஆளு எதுக்கு இப்படி பாக்குறான்…”என்று முணுமுணுத்தவள் அமைதியாகி சிறிதுநேரம் கைபேசியை பார்த்தவள் தூக்கம் வர அவளும் சாய்ந்து கண்மூடினாள்…
இரயிலின் ஓட்டத்தில் விடிந்தது கூட தெரியாமல் தமிழரசி அசந்து உறங்கி கொண்டிருக்க கைபேசியின் ஒளியில் அடித்து பிடித்து எழுந்தாள்…
எழுந்தவள் வேகமாக தன் கைபேசியை எடுத்துப்பார்த்தாள்…அழைப்பு அவளுக்கு வரவில்லை…அதற்கு பிறகு தான் எதிரிருக்கையை பார்த்தாள்…ஆளனுக்கு தான் அழைப்பு வந்திருந்தது…அவனோ அழைப்பை எடுக்காமலும்…அணைக்காமலும் அதை பார்த்தவாறே இருந்தான்…
“முட்டா பையன்…எடுக்குறானா பாரு…ச்சை..”என்று கூறியவள் தன் கைப்பையையும் கையோடு எடுத்துக்கொண்டு ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி வந்தவள் மீண்டும் வந்து அமர்ந்தாள்…
இரயில் எந்த இடத்தில் நிற்கிறது என்று வேறு தமிழரசிக்கு தெரியவில்லை…தயங்கி தயங்கி எதிரிருக்கை ஆளனிடம் “சார்…சார்…இது எந்த இடம்…பெங்களூரு எப்ப போய் சேருவோம்…”என்று கேட்டாள்…
“அனேகல் ரோடு…இன்னும் கொஞ்ச நேரத்துல போயிருவோம்…”என்று ஏதோ யோசனையில் கூறினான்…
மீண்டும் தயங்கி தயங்கி இவன்ட கேப்போமா வேணாமா என்று மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடக்க “என்ன பண்ணிர போறான்…கேப்போம்…” என்று நினைத்துக்கொண்டு கையில் வைத்திருந்த அட்ரெஸ்ஸை காட்டி அவனிடம் விசாரித்தாள்….
அவளை முறைத்து பார்த்தவன் இரயில் நிலையத்தில் இருந்து எப்படி செல்ல வேண்டும் என்று கூறியவன் அவ்விடம் விட்டு நகர்ந்து சென்று விட்டான்…
***********************************************************************************************************
“இங்கே பாரு வாத்தியாரு…எங்ககிட்ட குடுத்துடேல…எல்லாமே சரியாய் இருக்கும் சொல்லிப்புட்டேன்….சும்மா நசநச ன்னுட்டு இருக்காதே…எங்க தல பேரை சொன்னாலே மொத்த மதுரையும் அடங்கும் தெரியுமா…தேவை இல்லாம பேசாம கிளம்பு அப்பு…”என்று கைபேசியில் பேசியவன் பெங்களூரு இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்…
அந்த பக்கம் என்ன சொன்னார்களோ கைபேசியை வைத்தவன்…”த்தா…நாதாரி….ரொம்ப பேசுறான் தல… இவன் கூட எல்லாம் என்ன பட்னர்ஷிப்பு தல…கேன்சல் பண்ணு தல “என்று கூறினான்…
கூறியவன் மண்டையில் ஓங்கி அடித்த அப்பளம் ரவி “நேத்து உன் கொழுந்தியா கல்யாணத்துக்கு பத்தாயிரம் வாங்கிட்டு போனிலே…அது அவன் குடுத்த காசு தான் நாதாரி….கோப்பன் மவனே…அமுக்கிகிட்டு போய் வேலையே பாரு…”என்று காரினுள் அமர்ந்தான்…
எக்ஸ்ப்ரெஸ்-2 B
பாட்டிமா சொல்லும்
பாடம் பாதியில் மறந்தே
போகும் வாழ்க்கையின்
பாடம் மட்டும் மறக்காதே….!
சதுரமாய் முட்டை
இல்லை…
சந்தோஷமே
வாழ்க்கை இல்லை…
துன்பத்திலும் ஞானம் உண்டு
மறக்காதே…!
தைரியமே நம்
சொத்து…
மத்ததெல்லாம் பம்மாத்து…
பயணம் போ…
பயணம்போ…
பள்ளம் மேடு ரெண்டும்
பார்த்து…
ஓஹோ ஓயே!!!
அந்த ஊரின் மொத்த ஜனத்தொகையும் அந்த ரயில் நிலையத்தில் இருப்பதைப் போலிருந்தது ஆளனுக்கு.
அந்த ரயில் நிலையமே நிரம்பி வழிந்தது அங்கிருந்த மக்கள் வெள்ளத்தால்.
ஆனால் அதே ரயில் நிலையத்தின் ஒர் ஓரத்தில் தன்னைச் சுற்றி அத்தனை ஆட்களிருந்தும் தனியாளாக நின்றுக் கொண்டிருந்தாள் அவள்…
இரவு பன்னிரெண்டாகியும் 11:45 வண்டி இன்னும் வந்திருக்கவில்லை…இரவு பயணம்…அவ்வளவாக கூட்டமிருக்காது என்றவன் எண்ணயிருக்க…அதற்கு நேர்மாறாக அந்த இடமே நிறைந்திருந்தது…மனிதர்கள் பல வகை அங்கே…அவனைச் சுற்றி வெவ்வேறு மொழிகளின் சத்தம்…
அனைத்து தரப்பு மக்களையும் காத்திருக்கச் செய்த பெருமை அந்த நாகர்கோவில் எக்ஸ்ப்ரெஸிற்கேச் சேரும்.
அனைவரின் பதட்டதையும் கருத்தினில் கொள்ளாமல் தனது சீரான வேகத்துடன் வந்து நின்றது அந்த ரயில்…!
அங்கிருந்தவர்களில் கால்வாசி மக்கள் அதை நிறைத்திருக்க…ரயில் கிளம்ப இன்னும் சில நொடிகளே இருக்க…அவனும் அவசர அவசரமாக ஒரு கம்பார்ட்மென்டில் ஏறிக் கொண்டான்.
ஏறியவன் பார்வை அந்த கம்பார்ட்மென்ட்டையே மொத்தமாக அலசியது…அங்கு அவனைத் தெரிந்தவர்கள் யாருமில்லை…அப்படியே இருந்தாலும் அவனிருக்கும் கோலத்தில் அவனை கண்டுக்கொள்ள இயலாது…தனது சராசரிக்கும் மேலான உயரத்தையும் அந்த மாநிறத்தையும் மாற்ற முடியாதெனினும்…முகத்தை சற்று மறைத்த ஒரு குல்லாவும்…பொருந்தாத ஒரு தாடியுமாக இருந்தவனை யாருக்கும் உடனே அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்தான்.
அந்த கம்பார்ட்மென்ட்டையே பார்வையால் அலசியபடி முன்னேறியவன் கண்ணில் பட்டதோ அந்த கடைசி இருக்கைதான்…!
ஏனெனில் அதில் ஒரு பெண் மட்டுமே…!
அதுவும் அதிக லக்கேஜ் இல்லாததே சொல்லியது அவள் தனியாகத் தான் பயணிக்கிறாள் என்று.
அதுதானே அவனுக்கும் வசதி…!
அவளுக்கு நேர் எதிரே இருந்த இருக்கையில் இவன் அமர்ந்துக் கொள்ள முதலில் அதிர்ந்து அவனை நோக்கிவள் பின் தலையைக் குனிந்துக் கொண்டாள்…ஏதோ எல்லாரும் அவளையே கவனித்துக் கொண்டிருப்பது போலொரு பிரமை அவளுக்கு…
அங்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்தவன் ஒரளவு நிம்மதி பெற அவனிருக்கையில் சாய்ந்தமர்ந்துக் கொண்டான்…
என்னத்தான் காதில் இயர் ஃபோனை மாட்டினாலும்…அதில் எந்த சத்தமும் இல்லை…காரணம் அவனுக்கு அவனைச் சுற்றி நடப்பது அனைத்தும் தெரிய வேண்டும் அதே சமயம் யாருக்கும் கடுகளவு சந்தேகம் கூட வந்துவிடக் கூடாதல்லவா…!
அதான் இப்படியொரு நாடகம்…!
ஆனால் அவன் கவனத்தை ஈர்த்தது என்னவோ அந்த எதிர் இருக்கையிலிருந்த பெண்தான்…இல்லை…அவளது பதற்றம் தான்…!
அவனது கணிப்பில் அவளது வயது பதினெட்டு அல்லது பத்தொன்பதாக இருக்கலாம்…ஆனால் அதுவல்ல இப்பொழுது ப்ரச்சனை.
அவளது பதற்றம்…!
எதையோ….யாரிடமிருந்தோ மறைப்பதுப் போல…!
அடிக்கடி யாரையோ அழைப்பதும்…பின் ஃபோனையே வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தாள்…!
அவள் ஏதோ பெரிய இக்கட்டில் இருக்கிறாள் என்று மட்டும் நன்றாக புரிந்தது அவனுக்கு…ஆனால் அவனுள்ளமோ…’ நமக்கே ஆயிரெத்தெட்டு ப்ரச்சனை இதுல எவ எப்படி போனா நமக்கென்ன…?’ என்று கேட்க அவனும் அப்பர் பெர்த்தில் ஏறி படுத்துக்கொண்டான்.
ஆனால் தூங்கவில்லை…!
நடிப்பு…நடிப்பு…நடிப்பு மட்டுமே…!
யாருக்குமே உண்மையாக இல்லாத ஒருவன் என்றால் அது அவனாகத் தான் இருக்க முடியும்.
தன்னைத் தானே நேசிப்பது வேறு…தன்னை மட்டுமே நேசிப்பது வேறல்லவா…!
அவன் இரண்டாவது ரகம்…!
அவனது வாழ்க்கையில் அவனுக்கு அவன் மட்டுமே பிரதானம் பணம்கூட அதற்கடுத்தபடிதான்.
அவனுக்குப் பிறகு தான் எல்லாமே…!
அப்படியொரு சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்…!
எல்லோரையும் உறக்கம் தன் இரு கைகளால் அனைத்திருக்க…ரயிலோ தன் வழக்கமான வேகத்துடன் அனைத்து பயணிகளையும் ஒரு பக்கம் தாலாட்டிக் கொண்டும் மறுபக்கம் அந்த நிசப்தமான இரவு நேரத்தில் தனது பாடலை பாடிக் கொண்டுமிருந்தது…!
படுத்திருந்தானே தவிர அவன் உறங்கிவிடவில்லை.
அவர்களது ஸீட் கடைசியில் இருந்ததால் கீழ் இருக்கையில் இருந்தவள் வேறு அங்கும் இங்கும் ஃபோனை வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்க அவனது கவனம் முழுக்க அவள் மேல்…!
யாரையோ அழைப்பதும்… அந்த பக்கம் எடுக்கவில்லை போலும்…பின் ஃபோனையே ஒருவித இயலாமையுடன் பார்ப்பதுமாக இருந்தாள்…!
இரவு முழுக்க இவளின் இந்த செய்கையையே கவனித்துக் கொண்டிருந்தவன் காலையில் கீழே இறங்கி அவன் இருக்கையில் அமர…
அவளோ தயங்கி தயங்கி அவனிடம் ஒரு துண்டு சீட்டை காட்டி
“என் பேரு தமிழரசி…நான் பெங்களூருக்கு புதுசு…இந்த இடம் எங்க இருக்குனு தெரிருமா…?” என அதிலோ சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த விவரமும் இல்லாதலால் அவளைப் பார்த்து
“இது க்ளியரா இல்லையே…” என அவள் முகமோ ஒருவித கவலையை பூசிக் கொள்ள…
“அங்க டாக்ஸி ட்ரைவர்ட்ட கேட்டா தெரியும்…” என இப்பொழுது அவளுக்கு ஒரளவு நிம்மதி…ஒரளவு தான்…!
அதற்குள் ஸ்டேஷனும் வர அனைவரும் இறங்கத் தயாராகினர்.
அதே ஸ்டேஷனில்…இன்னொரு மூலையில்….!
எதையோ ஃபோனில் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தான் ஒருவன்…
பக்கத்தில் இருந்தவன் அவன் காதில் எதையோ ரகசியமாக உரைக்க
“உண்மையாவா…?”
“ஆமாண்ணே…நான் பார்த்தேன்” என்க
அவன் ஆட்களைப் பார்த்து கண்ணசைத்தவனோ ஃபோனிலிருந்தவரிடம்
“முடிச்சிட்டு கூப்பிடறேன்…” என்று வைத்தான்.