Advertisement

                      15
     ‘நேத்து பழக ஆரம்பிச்ச பொண்ணு அவ ப்ரியாக்கா மேல இவ்ளோ நம்பிக்கையும், மதிப்பும் வச்சிருக்கா?! நான் எப்படி இந்த விதத்துல யோசிக்காம போனேன்?! ப்ரியாக்கா அவ நிச்சயதார்த்தம் வரைக்கும் கூட ரொம்ப சந்தோஷமா தானே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சா! நிச்சயதார்த்தம் நடந்த நாள்ல இருந்துதான் அவ அப்பப்போ ஏதோ யோசிச்சிக்கிட்டே இருந்ததும், தனியா போய் எப்போ பாரு அவ ரூம்ல உட்கார்ந்துக்கிறதுமா இருந்தா! ஒருவேளை நகுலன் அவகிட்ட பழகின விதம் அவளுக்குப் பிடிக்கலையோ?! அவர் ஏதும் தப்பானவரா அவளுக்குத் தோணுச்சோ?! அதுவும் நிச்சயம் முடிஞ்ச பிறகு, அவ ஹாஸ்பிட்டல்ல கீழ விழுந்து அடிபட்டாளே, அதுக்கு அப்புறம்தான் தான் அவகிட்ட நிறைய மாற்றம்! அங்க ஹாஸ்பிட்டல்ல அவ அட்மிட் ஆகி இருக்கும் போது அவளையே சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தானே அந்த ப்ரேம், அப்போதான் அவனை, அந்த ப்ரேமை காதலிக்க ஆரம்பிச்சாளோ?! ஆனா அவ்வளவு குறைஞ்ச நாட்கள்ல அவ எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்தா?’ என்ற கோணத்தில் யோசித்தானே தவிர, அப்போது கூட, நகைக்காகவும், சரத்தும், உறவினர்களும் பேசிய பேச்சிற்காகவும் அக்கா இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவு எடுத்திருப்பாள் என்று அவனுக்குத் தோன்றவில்லை!
     ப்ரியாவின் அறையைச் சுத்தம் செய்ய வந்த அவர்கள் வீட்டு வேலைக்காரப் பெண்மணி வள்ளி, அவன் ப்ரியாவின் கைப்பேசியை கையில் வைத்தபடி எதையோ யோசித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்ததும்,
     “என்ன மித்ரன் தம்பி? ப்ரியா அம்மா போனைக் கையில் வச்சிக்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க?! பாவம் அந்த புள்ளை, ஒரு மாத்துத் துணி, போனுன்னு எதையும் எடுத்துட்டுப் போகலை! நான்தான் ரூமைச் சுத்தம் பண்ண வரும்போது தினமும் சார்ஜ் போட்டு வைக்கிறேன்!” என்றபடியே வள்ளி அறையில் இருந்த தூசுகளை சுத்தம் செய்து கொண்டு இருக்க, 
     “ஓ!” என்றவனுக்கு சட்டென,
     ‘அவ போன் பாஸ்வேர்ட் தான் எனக்குத் தெரியுமே, பேசாம அவ போனை ஓபன் செய்து பார்க்கலாமா? அப்படிப் பார்த்தா அவ மனசுல என்னதான் இருந்ததுன்னு ஓரளவுக்கு தெரியும்ல்ல!’ என்ற யோசனை தோன்ற,
     ‘ச்சே ச்சே! அவ பக்கத்துல இல்லாத போது நாம அவ போனை ஓபன் செய்து பார்க்கிறது தப்பு!’ என்று தவிர்த்தான்.
     ஆனாலும் மைத்ரேயி பேசிய பின் மனதில் ஏதோ உறுத்தல் இருந்து கொண்டே இருந்ததால்,
     ‘ப்ச்! அவ பிரச்சனை என்னன்னு தெரிஞ்சுக்க தானே பார்க்கறோம் தப்பில்லை!’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு, பாஸ்வர்ட் போட்டு போன் லாக்கை விடுவிக்க, பல மிஸ்ட் கால்கள் வந்திருந்தன. அதில் பெரும்பாலும் மைத்ரேயியின் கைப்பேசியில் இருந்தே வந்திருக்க, அவனுக்கு ஏதோ போல் ஆனது.
     ‘ஓ! அடிக்கடி அவளுக்கு போன் பண்ணிப் பார்த்திருப்பா போல! அவ எடுக்கலைன்னதும்தான் எனக்கு கால் பண்ணி இருக்கா!’ என்று எண்ணியபடியே ப்ரியாவின் கால் ஹிஸ்டிரியை செக் செய்ய, அதில் ஒருமுறை கூட அவள் ப்ரேமின் நம்பருக்கு அழைத்திருக்கவில்லை! மாறாய் அவன்தான் பலமுறை அழைத்திருக்க, இவள் அதை தவிர்த்து இருப்பதும் தெரிந்தது.
     ‘என்ன இது?!’ என்று குழம்பிப் போனவன்,
     ‘ஆபத்துக்கு தப்பில்லை!’ என்று அவளது மேசெஜசையும் ஓபன் செய்து பார்க்க அதிலும் அவன் மட்டும்தான் அனுப்பி இருந்தான். அதிலும் அவன் அனுப்பி இருந்த குறுஞ்செய்திகளைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு அத்தனைக் கோபம் வந்தது!
     ‘அப்போ இவ அவனை லவ் எல்லாம் பண்ணலை! ச்சே! இந்த நகைக்காகவா இவ இப்படி ஒரு முட்டாள்தனம் பண்ணா?! எப்படி ப்ரெயின் வாஷ் பண்ணி இருக்கான் அவளை! இந்த முட்டாளும் அவனை நம்பி இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி இருக்காளே?!’ என்று கோபம் கொந்தளிக்க,
     “ச்சே!” என்று தனது தொடையிலேயே கோபத்தில் குத்திக் கொண்டவன், விறுவிறுவென எழுந்து எங்கோ கிளம்பினான்.
     ‘என்ன ஆச்சு இந்த மித்திரன் தம்பிக்கு?! ப்ச்! கல்யாணம் நின்னு போனதுல இருந்தே இப்படித்தான் ஏதோ போல நடந்துக்குது!’ என்று எண்ணியபடி வள்ளி தன் வேலையைத் தொடர, வீட்டில் இருந்த மற்றவர்களும் அவன் நீண்ட நாட்களுக்குப் பின் வெளியே செல்வதை அதிலும் இத்தனை வேகமாகவும் கோபமாகவும் அங்கிருந்து கிளம்புவதைப் பார்த்து,
     “டேய் மித்ரா எங்கடா கிளம்பற?!” என்று குரல் கொடுக்க, எதையும் காதில் வாங்காமல் காரை எடுத்துக் கொண்டுக் கிளம்பியவன், நேராய் தங்கள் மருத்துவமனைக்குச் சென்று ப்ரேமின் விவரங்களை எடுத்து அவனது வீட்டு முகவரியை குறித்துக் கொண்டு விரைந்தான்.
     ‘ச்சே அவ கல்யாணமாகிப் போன அடுத்த நாள் கூட எனக்கு போன் பண்ணாளே வேற யார் போன்லையோ இருந்து! அப்போ கூட அவகிட்ட எவ்வளவு கடுமையா பேசிட்டேன்!’ என்று தன்னையே திட்டிக் கொண்டு சென்றவன், ப்ரேமின் வீட்டைத் தேடி அதைக் கண்டடைந்ததும், தனது காரை சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டின் வெளியே இருந்த கிணற்றடியில் ப்ரியா துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், அவள் மீதிருந்த கோபம்  குறைந்து போக,
     “அக்கா?! என்னக்கா இது?!” என்றபடி அவளருகே செல்ல, அவன் குரல் கேட்டதில் துணிகளுக்கு ப்ரேஷ் போட்டுக் கொண்டிருந்த ப்ரியா அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்க்க, அவன் அவளைத் தேடி அங்கே வந்ததில் அவளுக்கு  அதிர்ச்சியோடு சேர்ந்து அத்தனை ஆனந்தம்!
     கையில் இருந்த சோப்பைக் கூடக் கழுவாமல், “மித்து!” என்று ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டவள்,
     “வ வந்துட்டியாடா! எங்க அக்காவைப் புரிஞ்சிக்கவே மாட்டியோன்னு பயந்துட்டேன் தெரியுமா!” என்று சிறுபிள்ளை போல் அவள் உடைந்து போய் அழ, அவன் கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது.
     “ஏன்க்கா இப்படி ஒரு முட்டாள்தனம் பண்ண?! போயும் போயும் நகைக்காகவா இப்படி ஒரு முடிவு எடுத்த?!” என்று அவன் வேதனையுடன் கேட்க,
     “அ அதெல்லாம் இப்போ எதுக்கு? விடு மித்து! வா உள்ள போலாம் வா!” என்று அவன் கைபிடித்து இழுக்க,
    “ஐயோ! சோப்புக் கையோடவே எழுந்து வந்து உன்மேலயும் பூசிட்டேனா?!” என்றவள், வேகமாய்ச் சென்று கைகளை கழுவி வந்து அவன் சட்டைமேல் பட்டிருந்த சோப்பு நுரைகளையும் துடைத்துவிட்டு,
     “வா” என்று அவனை கைபிடித்து அவர்கள் வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.
     ப்ரேம் அவனது அறையில் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, ப்ரேமின் தங்கை தீபா தோசை வார்த்து எடுத்து வந்து தாய்க்கும், தந்தைக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
     அவன் உள்ளே வந்ததும் யாரெனப் புரியாமல் அவர்கள் பார்க்க, “மித்ரன். என் தம்பி மாமா” என்று தன் மாமனாரிடம் அறிமுகப் படுத்தியவள்,
     “தீபா! தம்பிக்கும் டிபன் எடுத்து வைம்மா! நான் போய் உன் அண்ணனை அழைச்சிட்டு வரேன்” என்றவள், சங்கடத்துடன் நின்றிருந்தவனை,
     “உட்காரு மித்து!” என, அவளது மாமனாரும், மாமியாரும் உடன் சேர்ந்து,
     “உட்காருங்க தம்பி” என்று சொல்ல, வேறு வழியின்றி அமர்ந்தவன் அந்த சிறிய வீட்டைக் சுற்றிப் பார்க்க,
     ‘இவ்ளோ சின்ன வீட்ல எப்படி இத்தனை பேர் இருக்காங்க?!’ என்று நினைத்தவன்,
     ‘இந்த ப்ரேமுக்கு அக்காதானே இருக்காங்கன்னு நினைச்சேன்! அவ அக்கா பிரசவத்துக்குன்னு லோன் கூட வாங்கி இருந்தானே! தங்கச்சி வேற இருக்காங்க போல! அவன் அப்பாவும் வேலைக்கு போக முடியாம வீட்ல இருக்காருன்னு சொல்லி இருக்கானே! இத்தனை பேரையும் அவன் ஒருத்தன் சம்பளத்திலா பார்த்துக்கறான்?! ஓ! அதுக்காகத்தான் ப்ளான் பண்ணி நம்ம அக்காவைக் கல்யாணம் செய்துகிட்டானோ?!’ என்ற எண்ணம் தோன்ற, ப்ரேமின் மேல் அத்தனைக் கோபம் வந்தது.
     ‘எப்படி பூனை மாதிரி இருந்துகிட்டு, எவ்ளோ ப்ளான் பண்ணி அவ மனசை மாத்தி இருக்கான்!’ என்று அவன் எண்ணிய நேரம் ப்ரேம் வெளியே வர, மித்திரன் அவனை முறைத்த முறைப்பில் ப்ரேமுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
     “வ வாங்க சார்!” என்று ப்ரேம் அழைக்க,
     “இன்னும் என்ன டா சார்ன்னுகிட்டு?! மச்சான்னு உரிமையா கூப்பிடு!” என்று அவனது தந்தை சொல்ல,
     ‘கூப்பிட்டுடுவியாடா நீ!’ என்பது போல் மித்ரன் பார்த்த பார்வையில்,
     நி நீங்க எல்லோரும் சாப்பிடுங்க! எனக்கு டைம் ஆச்சு நான் வேலைக்குக் கிளம்புறேன்!” என்று ப்ரேம் கிளம்ப எத்தனிக்க,
     “அதுக்குள்ள கிளம்பிட்டா எப்படிங்க?! நான் உங்ககிட்டதானே பேசணும்னு வந்தேன்!” என்று எழுந்து கொண்ட மித்திரன்,
     “வாங்க வெளில போய் பேசலாம்!” என்று அவன் தோள் மீது கைபோட்டு அழைத்துச் செல்ல,
     ‘ஹப்பா! எப்படியோ! என் மித்து அவரைப் புரிஞ்சிகிட்டா போதும்!’ என்று ப்ரியா மலர்வுடன் சிரித்தாள்.
     ‘பாவி இப்படி இவன்கிட்ட தனியா கோர்த்துவிட்டு சிரிக்க வேற சிரிக்கிறாளே! அன்னிக்கு அத்தனை பேர் இருக்கும் போதே அவ்ளோ அடிப் பின்னிட்டான்! இப்போ தனியா வேற கூட்டிட்டுப் போறானே!’ என்று புலம்பிக் கொண்டே பலியாடு போல் பிரேம் அவன் பின்னே செல்ல,
     “இதோ வந்துடறோம் க்காஎன்று ப்ரேமைப் பார்த்துச் சிரித்தபடியே அழைத்துக் கொண்டு வெளியேறினான் மித்ரன்.
                                *****
     ‘இந்த ப்ரியக்கா ஏன் அப்படி செய்தாங்க! அவங்க நிச்சயமா யாரையும் லவ் பண்ணலை! அது எனக்கு நல்லாவே தெரியும்! அதுவுமில்லாம அவங்க நிச்சயதார்த்தம் அப்போவெல்லாம் ரொம்பவே சந்தோஷமா தானே இருந்தாங்க! அப்படி அவங்களுக்கு அந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னா எப்படி சந்தோஷமா இருந்திருப்பாங்க?!’ என்று யோசித்தவள்,
     ‘ஆனா அவங்க நிச்சயம் முடிஞ்சு அவங்களுக்கு அடிப்பட்டதே அதுக்கப்புறம் தான் அவங்களைப் பார்க்கவும் முடியலை, அவங்களோட சரியா பேசவும் முடியலை! அப்போதான் ஏதோ நடந்திருக்கு! ஆனா என்னன்னு புரியலையே!’ என்று ப்ரியாவைப் பற்றியே யோசனை சுழல வீட்டில் யாருடனும் பேசக் கூடத் தோன்றாமல் சிந்தித்தபடியே அமர்ந்திருந்தாள் மைத்ரேயி.
     “அடியே அப்படி எந்த கோட்டையைப் பிடிக்கப் போறேன்னு இந்த யோசனை?! போட்டு வச்சிருக்க சோறைக் கூடத் திங்காம?!” என்று சாந்தி கத்த, அதில் சிந்தனை கலைந்தவள்,
     “அடேங்கப்பா! ஏன்னா அதிசயம்மா?! நீ எப்போ கடையில இருந்து வந்து சோறெல்லாம் போட்டு வச்சிருக்க?!” என்றாள் அப்போதும் தன் குசும்பை விடாமல்.
     “என் கேட்கமாட்ட?! உன் தம்பி வீட்டுக்கு வரேன்னு சொன்னானே, அப்படியே உனக்கும் வந்து சோறு போட்டு வச்சிட்டு போலாம்னு நினைச்சேன் பாரு என்னச் சொல்லணும்!” என்று சாந்தி வந்த காரணத்தைக் கூறிவிட அவளுக்கு ஏற்கனவே ப்ரியாவைப் பற்றி மித்ரன் பேசியதில் இருந்த கோபமும் சேர்த்து தாயின் புறம் திரும்பியது!
     “நீயெல்லாம் ஒரு அம்மாவா?! என்னையும் நீதானே பெத்த?! உன் மருமவளும் அவனும் தனிக்குடித்தனம் போன பிறகும், உன் புள்ளை வாரான்னதும் மட்டும் அவனுக்கு சோறு பரிமாற கடையில இருந்து ஓடி வந்திட்ட நேரமா?! ஆனா, ஒரு நாளாச்சும், நான் ஒருத்தி இங்க நடக்க முடியாம, எடுத்துத் திங்க முடியாம தினந்தோறும் பசியில துடிச்சிக் கெடக்கும் போது வந்திருக்கியா நீ?! அது என்னம்மா அவன் வீட்டுக்குன்னு சல்லிக்காசு கொடுக்கலைன்னாலும் அவன் மேல மட்டும் உனக்கு அம்புட்டு பாசம் பொங்குது?!” என்று மையு கோபத்தில் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்ததைக் கொட்டிவிட,
     “ஆமாம்டி! ஆமாம்! என் புள்ளைன்னா எனக்கு ஒசத்திதான்! ஏன் உனக்கு மட்டும் செயலை! ஒன்னுத்துக்கும் உதவாம உட்கார்ந்துகிட்டு இருக்க உன்னையே வச்சுப் பார்த்துக்கும் போது, என் புள்ளைய நான் பார்க்குறதுல உனக்கேன்டி பொறாமை பொங்குது?!” என்று சாந்தி அவளது குறையைச் சுட்டிக் காட்ட, அவளுக்கு பேச நா எழவில்லை! வெளியாட்கள் யாராவது அப்படிச் சொன்னாலே கொடுமையாக இருக்கும்! அப்படி இருக்க பெற்ற தாயே பிள்ளையின் ஊனத்தைச் சுட்டிக் காட்டி அவளைக் குத்துவது அவளை வெகுவாய்க் காயப்படுத்தியது.
     மலுக்கென்று கண்களில் நீர் வர, ‘ச்சே இது வேற?!’ என்று கண்களைத் துடைத்துக் கொண்டவள், கட்டிலின் மேல இருந்த சாப்பாட்டுத் தட்டை எடுத்து கீழே வைத்துவிட்டு படுத்துக் கொள்ள,
     “ஏன்டி?! திமிர் ஏறிப் போச்சு உனக்கு பசிக்குதுன்னு சொல்லுவல்ல! அப்போ வச்சுக்கறேன்” என்றபடியே சாந்தி அவள் கீழ வைத்த உணவுத் தட்டை எடுத்துச் செல்ல,
     ‘ம்! நாம ஒரு கோபத்துல வேணாம்னு சொன்னா மறுக்கா சாப்பிடுன்னு சொல்லக் கூட என்னைப் பெத்தவளுக்கு மனசு வரலை!’ என்ற எண்ணம் தோன்ற, மீண்டும் அவள் கண்களில் கண்ணீர் துளிர்க்க,
      ‘ச்சே! இந்த அழுகை வேற சும்மா சும்மா வந்துக்கிட்டு!’ என்று மீண்டும் கண்ணீரைத் துடைத்து எறிந்தவள்,
     ‘இதெல்லாம் என்ன புதுசா நமக்கு?!’ என்று எண்ணித் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டவள்,
     “துடைக்க யாருமில்லா தருணங்களில் காயப்படுத்துபவர்கள் முன் வரும் கண்ணீர் கூட துரோகிதான்!” என்று வரிகளை தனது பேஸ்புக் ஸ்டேடசில் போட்டுவிட்டு முகநூலின் பக்கங்களில் மீண்டும் தன் நினைவுகளை தொலைக்கலானாள். ஆனாலும், சற்று நேரத்திற்கு முன் அவள் தட்டில் இருந்த வெறும் பருப்பு சோறும், இப்போது அவள் தம்பிக்கு தன் தாய் பரிமாறிக் கொண்டிருக்கும், முட்டைத் தொக்கும், அப்பளமும் அவள் மனதில் தினந்தோறும் அவள் தாய் காட்டும் வேற்றுமையின் காயத்தை கிளறாமலில்லை!
 

Advertisement